“ஏங்க, போஸ்ட் ஆபீசுக்கு போகணும்னு சொன்னீங்க, இன்னும் கெளம்பலியா?” என மாத்திரை போட்டபடியே கேட்டார் சங்கு புஷ்பம்.
“அஞ்சு நிமிஷம், முருங்கை கீரை சூப் ரெடி பண்ணிடறேன். சரண்யா வந்ததும் துணைக்கு விட்டுட்டு கிளம்புறேன்” என உள்ளேயிருந்து பதில் சொன்னார் நேசப்பா.
சரண்யா அவர்கள் வீட்டு பணிப்பெண். பத்து மணிக்கு வந்து வீட்டை சுத்தம் செய்து விட்டு, அந்த அந்த நாளுக்குக்கேற்ப என்ன தேவைகள் இவர்களுக்கு இருக்கிறதோ அவற்றை செய்து கொடுப்பாள்.
“சரண்யா இன்னைக்கு கொஞ்சம் லேட்டா வருவேன்னு சொன்னா. நீங்க சூப் ரெடி பண்ணிடீங்கன்னா வெயிலுக்கு முன்னாடி கெளம்பி போயிட்டு வாங்க” என சொன்னார் சங்கு புஷ்பம்.
சற்று நேரத்தில் நேசப்பா கிளம்ப, சங்கு புஷ்பம் புத்தகம் படிக்க ஆரம்பித்தார்.
அரை மணி நேரம் கழித்து “என்னமா சார் குடைய மறந்துட்டு போய்ட்டாரா? என்றபடியே சரண்யா வந்தாள்.
“அதுக்கு தான் நீ இருக்கணும்கிறது. கரெக்டா நினைவு படுத்தி இருப்ப” என்றார் சங்கு புஷ்பம்.
“நீங்க படுங்க, சார் வர வரை நா இருந்துட்டு போறேன்” என வேலையை ஆரம்பித்தாள் சரண்யா.
ஒரு மணி நேரம் ஆனது. நேசப்பா வெளி வேலைகளை முடித்து விட்டு வீடு திரும்பினார்.
மூன்று கப்புகளில் சூப் எடுத்து வைத்து சங்கு புஷ்பத்தை எழுப்பினார்.
“எங்க சரண்யாவ காணோம்?” என்றார் நேசப்பா.
“இங்க தான் இருப்பா, இருங்க போய் பாக்குறேன்” என மெதுவாய் எழுந்து கடைசி பால்கனி பக்கம் போனார்.
அங்கே சரண்யா ஏதோ யோசனையாக அமைதியாக நின்று கொண்டிருந்தாள்.
“என்ன இங்க நின்னு யோசிக்கிற?” என கேட்டார் சங்கு புஷ்பம்.
சரண்யா முகம் வாட்டமாக இருந்தது.
“தெய்வநாயகி மேடம் டிஷ் வாஷர் வாங்கி இருக்காங்க, துணி காய போட வரும் போது பாத்தேன். அடுத்த மாசத்துல இருந்து எனக்கு அவங்க வீட்ல வேலை இருக்காதுனு நெனைக்கிறேன்” என கவலையோடு சொன்னாள்.
சங்கு புஷ்பம் எட்டி பார்க்க, அவர்கள் வீட்டு பால்கனியில் புதுசாய் அமர்ந்திருந்தது டிஷ் வாஷர்.

“கரண்டு பில்லுக்கும், பசங்க டியூஷனுக்கும் அவங்க குடுக்குற சம்பளத்தை தான் நம்பி இருக்கேன். இப்போ என்ன பண்ண போறேன்னு தெரியல. தெய்வநாயகி மேடம் எது வாங்கினாலும் அவங்க கூட வாக்கிங் போற சுகந்தி அக்கா வாங்கிடும். அவங்களும் வாங்கிட்டா வேற வேலை கிடைக்கும் வரை சிரமம் தான்” என பெரு மூச்சோடு சொன்னாள்.
“உள்ள வா” என அழைத்து ஹாலில் வந்து நேசப்பாவோடு சேர்ந்து உட்கார்ந்தார்கள்.
“கொஞ்சம் கால் வலி இருந்ததால நா ஒரு வாரமா சாயங்காலம் அவங்கள பாக்கல. இன்னைக்கு பாத்து பேசுறேன். அவங்க இது வரை உங்கிட்ட எதுவும் சொல்லல இல்ல? நீயா ஏன் கவலை படுற? அப்படி அவங்க நீ வேலைக்கு வேணான்னு நெனச்சா, உன்கிட்ட முன்னாடியே சொல்லியிருப்பாங்க. எதையும் யோசிச்சு மனச போட்டு குழப்பிக்காதே” என ஆறுதல் சொன்னார் சங்கு புஷ்பம்.
சூப் குடித்து முடிக்கும் வரை அமைதியாக இருந்தார்கள்.
“டிஷ் வாஷர் இந்த மாதிரி கப்பு, பிளேட்டு, கிளாஸ் கழுவ தான் பெஸ்ட். அது பிரியாணி அண்டா கழுவாது. அஞ்சு லிட்டர் குக்கரை போட முடியாது. பூஜை சாமான் தேய்க்காது. அதனால நீ பெருசா ஒண்ணும் கவலை படாதே” என நிதர்சனத்தை சொன்னார் நேசப்பா.
“சங்கு, நீ ஏன் நம்ம சரண்யாக்கு ஒரு போஸ்ட் ரெடி பண்ண கூடாது? ஒன்லி பார் பூஜா ரூம் கிளீனிங்ன்னு? பூஜை பாத்திரம் மட்டும் சுத்தம் செய்து, பூ கட்டி, கோலம் போட்டு விசேஷ நாளுக்கு ரெடி பண்ணி தருவானு?” என்ன ஆர்வமோடு சொன்னார்.
சங்கு புஷ்பத்திற்கு இது வேலைக்கு ஆகும் என தோன்றியது.
“மார்கெடிங்க்ல மொதல் பாடமே, இல்லாத தேவையை இருப்பதாக மக்களை நினைக்க வைப்பது தான்.
அடுத்த ஐந்து நிமிடம் இந்த விஷயத்தை விவாதித்ததில் இது செட் ஆகும் என அவர்களுக்கு உறுதியாக தெரிந்தது.
சரண்யாவுக்கு பாதி புரிந்தது, மீதி புரியவில்லை.
“இங்க பாரு, உனக்கு இந்த டிஷ் வாஷர் மெஷின் தான் எக்ஸ்டரா வருமானத்துக்கு வழி பண்ணி இருக்கு. நீ பூஜை பாத்திரம் மட்டும் விஷேச நாளுக்கு முன்னாள் வந்து ரெடி பண்ணி தருவேன்னு ஒரு போஸ்ட போட்டு லிப்ட்ல ஒட்டுனா போதும். இது வரை ரெகுலரா பூஜை பண்ணாதவங்க கூட பக்திமானா மாறிடுவாங்க. வாரத்துல ஏழு நாளும் ஏதாவது ஒரு சாமிக்கு ஸ்பெஷல் டே தான்” என விவரித்தார் சங்கு புஷ்பம்.
நேசப்பா தொடர்ந்தார். “இது தெரிஞ்சு தான் குயிக் காமெர்ஸ் டெலிவரிகாரன் ஒரு கொத்து மாவிலையை இருபது ரூபாக்கு விக்கிறான். கீழ இறங்கி போய் நம்ம செக்யூரி கிட்ட கேட்டா இங்கேயிருக்குற மரத்துல பறிச்சு தருவார். சௌகர்யம் உள்ளங்கைல இருகிறதால நம்ம ஜனங்க இவனுங்க எறக்குற எல்லா Appம் ஒண்ணு மிச்சமில்லாம யூஸ் பண்றாங்க’ என்றார்.
அடுத்த அரை மணி நேரத்தில் ஒரு டைரியில் இந்த விஷயத்தை எப்படி கொண்டு போய் சேர்ப்பது என லிஸ்ட் போட்டார்கள்.
“ஒரு போஸ்டர் பத்தாது. மூணு போடு சங்கு. ஒண்ண எல்லா பிளாக் லிப்ட்லயும் ஒட்டலாம். ரெண்டாவதை ஜிம் ஏரியால ஒட்டலாம். மூணாவத சரண்யா டீபியா வெக்கட்டும்” என்றார் நேசப்பா.
“லிப்ட், டிபி சரி, எதுக்கு ஜிம் ரூம்ல?” என்றார் சங்கு புஷ்பம்.
“யோசி, உனக்கே தெரியும்” என சொல்லி சிரித்தார் நேசப்பா.
விஷயம் புரிய “சரியான ஆளு நீங்க!” என பாராட்டினார் சங்கு புஷ்பம்.
“நீ கவலப்படாம கெளம்பு சரண்யா. உனக்கு எத்தனை போன் வருதுன்னு பாரு” என சொல்லி சியர் செய்து அனுப்பினார்கள்.