கோல்கப்பா : வாயில வடை சுடுறீங்கன்னு ரெண்டு தரப்பும் மாத்தி மாத்தி சொல்லறீங்களே, இதை பாக்குற ஜனங்க என்ன நினைப்பாங்கன்னு சபாநாயகர் வருத்தப்பட்டு கமெண்ட் பண்ற அளவுக்கு தான் நிலவரம் இருக்கு.
பூரி குமாரி :வடைன்னு பேசுறவங்களுக்கு பாயசத்தை போடுவோம் கோல். மக்களே, இடை தேர்தலை பெரிதும் நம்பி இருக்கும் ஆளும் கட்சியின் நடவடிக்கைகளை “மாங்குயிலே பூங்குயிலே” என்ற பாடலை தழுவி நகைச்சுவையாக எழுதி இருக்கிறோம். படித்தும் சிறிதும் மகிழுங்கள். நன்றி.
ஆளும் கட்சி :
காலி தொகுதி..மீதி தொகுதி.. சேதி ஒண்ணு கேளு! உன்ன ஓட்டு கேக்க தேடி வரும் நாளு எந்த நாளு?
காலி தொகுதி..மீதி தொகுதி.. சேதி ஒண்ணு கேளு! உன்ன ஓட்டு கேக்க தேடி வரும் நாளு எந்த நாளு?
குத்து குத்து.. ஓட்டாலே.. நான் எட்டி பிடிப்பேன்..டோட்டலே..
காலி தொகுதி..மீதி தொகுதி.. சேதி ஒண்ணு கேளு! உன்ன ஓட்டு கேக்க தேடி வரும் நாளு எந்த நாளு?
இந்திரா ஆபீஸ் முடித்து வீட்டுக்கு வந்து பார்த்தால் மானசியிடம் இருந்து மூன்று மிஸ்ட் கால்கள் வந்திருந்தது.
“என்னடி இத்தனை போன் போட்டிருக்க?” என கால் செய்து கேட்டாள் இந்திரா.
“இந்துக்கா, ஐடி ரிட்டர்ன்ஸ் பைல் பண்ண இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு. அதான் கால் பண்ணேன். நான் இன்னிக்கு பண்ண போறேன், உனக்கும் பண்ணிடவா?” என கேட்டாள் மானசி.
மானசி இந்திராவின் சித்தப்பா பெண். மூன்று மாதங்களுக்கு முன்தான் பெண் குழந்தை பிறந்திருக்கிறது அவளுக்கு.
“நீயே குழந்தய தனியா பாத்துக்குற, கொஞ்சம் டைம் கெடச்சா ரெஸ்ட் எடுடி. உன்ன தொல்ல பண்ண வேணாம்னுன்னு தான் தீப்தியை வர சொல்லி இருக்கேன். வெள்ளிக்கிழமை ஆபீஸ் முடிச்சிட்டு வந்து பண்ணி தரேன்னு சொல்லி இருக்கா” என சொன்னாள் இந்திரா.
தீப்தி மானசியின் சொந்த தங்கை. ஐடி கம்பெனியில் வேலை பார்க்கிறாள். இந்திராவின் வீட்டிலிருந்து அரை மணி நேரம் தான் அவள் சித்தப்பா வீடு.
“அந்த நாய் லாஸ்ட் டே வரைக்கும் இப்படித்தான் இழுக்கும். அவகிட்ட நீ நல்லா மாட்ட போற. உன் பேங்க் பேலன்ஸ், சேவிங்ஸ் எல்லாம் நோட் பணிக்குவா..நெக்ஸ்ட் பர்த்டேக்கு உன்கிட்ட என்ன டிமாண்ட் வைக்க போறான்னு பாரு” என வார்னிங் கொடுத்தாள் மானசி.
இந்திராவுக்கு சிரிப்பாக வந்தது. “அவளுக்கு போன் பண்ணி கேட்டேன்டி பைல் பண்ணி தர்றியான்னு..அதுக்கு அவ என்ன கேட்டா தெரியுமா?” என நிறுத்தினாள் இந்திரா.
“சொன்னேன்ல, உன்கிட்ட வசமா ஏதோ எதிர்பாப்பான்னு..என்ன கேட்டா?” என கொக்கரித்தாள் மானசி.
“பொடி தோசை” என சிரிப்பை அடக்கிக் கொண்டு சொன்னாள் இந்திரா.
“ஹாஹ்ஹா , எனக்கு புரிஞ்சிடிச்சு, அம்மா இப்போ அவளை டயட்ல போட்டிருக்காங்க. பட்டர், ghee எதையும் அவ கண்ல காமிக்குறது இல்ல” என தீப்தியின் craving கதையை சொன்னாள் மானசி.
கொஞ்ச நேரம் தீப்திக்கு வரன் பார்க்கும் கதையும், அதற்கு அவள் பிடி கொடுக்காததும் ஓடியது.
“அவ கிட்ட பேசேங்க்கா..அம்மா ரொம்ப படுறாங்க அவகிட்ட” என கவலையாய் சொன்னாள் மானசி.
“வரட்டும், நானே ஆரம்பிச்சா, இந்த சாக்க வெச்சு அவளை கூப்பிட்ட மாதிரி நினைப்பா.. அவளே பேச்சுவாக்குல இந்த டாபிக்க ஓபன் பண்ணுறாளான்னு பாக்குறேன்..நாம பேசுறதுக்கு முன்னாடி அவ மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சிக்குவோம்..அவளே சொல்லட்டும் எந்த விஷயத்தால அவ தயங்குறான்னு..இதான் அவளோட எண்ணமுன்னு தெரிஞ்சிகிட்ட, நமக்கு தெரிஞ்ச நல்லது கெட்டதை சொல்லலாம்” என எப்படி இந்த விஷயத்தை தீப்திக்கு எந்த ஸ்ட்ரெஸ்ஸும் கொடுக்காமல் பேசுவது என விவாதித்தார்கள்.
மானசி பேசி விட்டு போனை வைக்க, இந்துவுக்கு மனம் பல கேள்விகளை முன் வைத்தது. தீப்தி தெளிவான பெண். நல்ல குணம், அறிவு, பொறுமை என எல்லாம் இருக்கிறது.திருமணம் ஆயிரம் காலத்து பயிர், பண்ணிக்கோ என்றால் ஏற இறங்க பார்த்து விட்டு நடையை கட்டி விடுவாள். அதனால் அவளை பேசவிட்டு பிறகு தான் பேசுவோம் என முடிவெடுத்தாள்.
Part 2Part 2
“மா, நாளைக்கு ஆபீஸ் முடிஞ்சதும் நான் இந்து அக்கா வீட்டுக்கு போறேன். நீ அக்காக்கு ஏதாவது குடுத்தனுப்புறதா இருந்தா, நைட்டே பேக் பண்ணி வைச்சிடு” என ராஜத்திடம் சொல்லி கொண்டே வேலைக்கு கிளம்பினாள் தீப்தி. சிவகுரு வாக்கிங் முடித்து வந்து சோபாவில் உட்கார்ந்தார்.
“சரிடி” என சொல்லிவிட்டு, அவருக்கு டீ கொண்டு போய் கொடுத்தார் ராஜம்.
“ஏங்க, இன்னும் நாலு நாளைக்கு தான் சுகர் மாத்திரை இருக்கு. சனிக்கிழமை காலைல ப்ளட் டெஸ்ட் எடுத்துட்டா, சாயங்காலம் டாக்டரை பாத்துடலாம்” என சொன்னார் ராஜம்.
“எங்க அக்கா உன்ன விட ஆறு வயசு பெரியவங்க. அவங்களுக்கே இன்னும் சுகர் வரல. எனக்கும் வரல. நீ கொஞ்சம் வாய கட்டு, நல்லா நட. இப்போ பார்டர்ல தானே இருக்கு ” என டிவி பார்த்தபடியே சொன்னார் சிவகுரு.
தீப்திக்கு சுர்ரென்று ஆனது. “பெரியப்பா உங்கள விட நாலு வருஷம் பெரியவர். அவர் நல்லா தானே இருக்காரு. நீங்க ஏன் முட்டிவலின்னு கோடாரி தைலமும் கையுமா இருக்கீங்க?” என கேட்டாள்.
அவரிடம் பதிலில்லை. ராஜம் பேசாமல் கிச்சனுக்குள் போய் வேலையை தொடர ஆரம்பித்தார். “இந்த லட்சணத்தை அனுபவிக்க தான், ஊரு ஊரா எனக்கு பையன் பாக்குறீங்களா?” என கேட்டு விட்டு கிச்சனுக்குள் நுழைந்தாள்.
“ஏண்டி, உங்க அப்பா ஒரு வார்த்தை சொன்னா, பிலு பிலுன்னு உலுக்கி எடுக்குற? என்ன சொன்னாலும் சனி கிழமை என் கூட வரத்தான் போறாரு” என ஆதங்கமாய் சொல்லிக்கொண்டே அடுப்பில் தோசை கல்லை வைத்தார் ராஜம்.
“உனக்காக கேக்குற வரை கம்முனு இருப்ப..கூட என் விஷயத்தை சேத்து சொன்னா, அவருக்கு பலமா முட்டு குடுப்ப” என கொக்கியை போட்டாள் தீப்தி.
“நாங்க என்ன கல்யாண வாழ்க்கைக்கு நாங்க தான் பெஞ்ச் மார்க்குன்னு சொல்லிக்கிட்டா சுத்துறோம். எங்கள ஏண்டி உன் முடிவுக்கு அளவுகோலா வெக்குற?” என கேட்டார் ராஜம்.
“இங்க பாரு, அப்பப்போ ஹர்ட் ஆகுறதுக்கும், அப்புறம் சகஜமா இருக்குறதுக்கும்நீ பழகிக்கிட்ட மாதிரி என்னால இருக்க முடியாது” என டீ டம்ளர்களை கழுவிக்கொண்டே கொண்டே சொன்னாள் தீப்தி.
ராஜம் திருப்பி கொடுப்பதென்று முடிவு செய்தார்.
“ஒரு கைல கார் ஓட்டிகிட்டே, மறுகையால பொண்டாட்டி கால அமுக்கி விடுறதெல்லாம் ரீல்ஸா தான் வரும். நிஜ வாழ்க்கைல ஒருத்தர் கால ஒருத்தர் வாரி விடுற சம்பவமும் நடக்கத்தான் செய்யும். Linkedin, Naukriல வேலை தேடுற மாதி, இன்ஸ்டால வாழ்க்கையோட அர்த்தத்தை தேடாதே” என நறுக்கென்று சொன்னார்.
கல்லும் களமும் சூடு பிடித்தது. ராஜம் தோசை ஊற்ற ஆரம்பித்தார்.
தன் வாழ்க்கையின் முக்கியமான முடிவில் தான் எடுக்கும் நிலைப்பாட்டை, ரீல்ஸ் இன்ப்ளூயன்ஸாக குறைத்து மதிப்பிடுவது தீப்திக்கு எரிச்சலை தந்தது.”காலை வாரும் வாய்ப்பு இருக்குன்னு தெரிஞ்ச ஒரு விஷயத்துல எதுக்கு இறங்கணும்? அனுசரிச்சு, அனுசரிச்சு சலிச்சி போய் வாழுறதுக்கு, சுதந்திரமா வாழ்க்கைய தனியாவே அனுபவிச்சு வாழலாம்” என அடமாய் சொல்லிக்கொண்டே முதல் அடை தோசையை உள்ளே தள்ளினாள்.
“இந்த வெண்ணை மாதிரி பேசுற பேச்சுக்கு ஒண்ணும் கொறச்சல் இல்லை. எங்க வாழ்க்கையையோ, சுத்தி இருக்குறவங்க வாழ்க்கையையோ நீ என்ன தான் ஸ்கேன் பண்ணாலும், உன்னால முழுசா தெரிஞ்சிக்க முடியாது. அரை குறை அறிவோட முடிவெக்குறத விட பெரிய அபாயம் எதுவும் கிடையாது” என தீர்க்கமாய் சொன்னார் ராஜம்.
“கடவுள கட்டிக்கிட்டாலும் கடுப்பிலாத வாழ்க்கைக்கு உத்திரவாதம் கிடையாது” என ராஜம் தொடர்ந்தார். தீப்தியை வெண்ணை டேக் உருக்கி எடுத்ததில் கொஞ்சம் லேகில் இருந்தாள்.
“உங்க கிரிக்கெட் கடவுள் சச்சின் கூட, எல்லா ஓவர்லேயும், ஆறு பாலையும் வெளாச மாட்டார். நின்னு நிதானிச்சு பாத்து பக்குவமா தான் ஆடுவார். எதிராளி கிட்ட இன்ஸ்டன்ட்டா ப்ரூவ் பண்ணணும்ங்கிற அவசியம் என்ன? மேரேஜ் லைப்பும் அப்படிதான்” என தீப்திக்கு புரியும் பாஷையில் சொன்னார் ராஜம்.
“ஹ்ம்..” என ஆமோதித்தாள் தீப்தி. இதை கண்டிப்பாக மறுக்க முடியாது.
“உன் கேஸ ஸ்ட்ராங்காக்க, ஆயிரம் மைல் தள்ளி இருக்குற சச்சினை வம்படியா கொண்டாந்து குறுக்கால விட்டு எனக்கு கட்டைய போடுறல்ல?” என சிரித்துக் கொண்டே கேட்டாள் தீப்தி.
“உன் லேங்குவேஜ்ல சொன்னாதான் உனக்கு மண்டைல ஏறும்” என உரைத்தார் ராஜம்.
தீப்திக்கு உள்காயம் இன்னும் கொஞ்சம் இருந்தது,
“அப்பாவோட இந்த லேங்குவேஜ நீ அக்செப்ட் பண்ணிக்கிட்ட மாதிரி தான் எல்லாம்” என மீண்டும் ஆரம்பப் புள்ளியிலேயே போய் நின்றாள்.
லேப் டெஸ்டுக்கு கணவர் கடுப்பேற்றியதை விட, இந்த டாபிக்கை வைத்து இவள் கடுப்பேற்றுவது ராஜத்தின் பொறுமையை சோதித்தது.
“நான் என்னத்த அக்செப்ட் பண்ணிக்கிட்டேன்கிறத நீ கண்ட? நானும் மனுஷி தான். எனக்கும் கோவம், வருத்தம் எல்லாம் இருக்கு ஆனா அதை ஆர்கியுமெண்ட்ல தான் காட்டணும்னு என்ன அவசியம் இருக்கு?” என கோபமாக கேட்டார்.
“வேற எப்புடி காமிக்குற?” என பொறுமையாக கேட்டாள் தீப்தி.
“சாயங்காலம் வா, ரீல்ஸ் எடுத்து வெச்சிருக்கேன். எல்லாத்தையும் உங்களுக்கு படங்காட்டணும்னு ஏன் எதிர்பாக்குறீங்க? அன்பா இருந்தா ஆசையோட கவனிச்சிக்குறதுக்கும், வெறுப்பேத்துனா கடமைக்கு குடும்பம் நடத்துறதுக்கும் எங்களுக்கு தெரியும்” என சுட சுட பதில் வந்தது.
“அவர் நேத்து நைட் பேசின பேச்சுக்கே, அவருக்கு மண்டகப்படி இன்னும் பெண்டிங்ல இருக்கு” என அடுத்த திரியை கொளுத்தினார் ராஜம்.
“அவர் ட்ரெஸ்ஸ அயர்ன் பண்ணி வெச்சிட்டு, லன்ச் பேகும் பேக் பண்ணிட்ட. இதுல என்ன வீர வசனம் பேசுற?” என விடாப் பிடியாய் கேட்டாள் தீப்தி.
“கடமைக்கு வேல பாக்குறதுக்கும், கரிசனத்துல அவரை பாத்துக்குறதும் வித்தியாசம் இருக்குடி” என சூட்சுமமாய் சொன்னார் ராஜம்.
“உருட்டி போட்டா போண்டா, தட்டி போட்டா வடை” என கீழ்க்கண்ணால் மாவு பாத்திரத்தை பார்த்தபடியே சொன்னாள் தீப்தி.
“உங்களா கூட இருந்தா காஷ்மீர்லேர்ந்து கன்னியாகுமாரி வரை நடந்தா கூட சுகர் குறையாது. இப்போ அவர் வண்டி சாவிய எடுத்துக்கிட்டு கீழ போயிட்டு திருப்பி வீட்டுக்கு வராரா இல்லியா பாரு” என sizzler ஆக புகைந்து puzzle போட்டார் ராஜம்.
சிவகுரு குளித்துவிட்டு வந்து, டிபன் சாப்பிட்டு விட்டு, ரெடியாகி ஆபீசுக்கு கிளம்பி போனார்.
மூன்று மாடி படி இறங்கி போக வேண்டும். மீண்டும் மூன்று மாடி ஏறி வர வேண்டும்.
ஹால் அமைதியாக இருக்க, தீப்திக்கு நிலை கொள்ளவில்லை. பால்கனியில் இருந்து எட்டி பார்க்கலாமா என தோன்றியது. அவர் டக்கென்று மேலே பார்த்தால் மாட்டிக் கொள்வோம் என பேசாமல் உட்கார்ந்து விட்டாள்.
ராகி கஞ்சியை கொஞ்சம் கொஞ்சமாக குடித்துக் கொண்டிருந்தார் ராஜம்.
மெயின் டோர் திறக்கும் சத்தம் கேட்டது. தீப்திக்கு தலை சுற்றியது. அம்மாவை பார்க்கவே திராணியில்லாமல் டிவி பார்ப்பது போல் உட்கார்ந்திருந்தாள்.
சிவகுரு நேராக உள்ளே போனார். ஐந்து நிமிடம் ஆனது. வேறு சட்டை மாற்றிக் கொண்டு, அவசர அவசரமாக கிளம்பி போனார்.
அம்மாவின் வராகி மோட் வேலை செய்து விட்டது. அவருக்கே இந்த கதி என்றால் தான் எம்மாத்திரம் என பயந்தாள் தீப்தி. ஆனாலும் ஆர்வம் மண்டையை குடைய சரண்டர் மோடுக்கு போனாள்.
“செம ஆளுமா நீ..எதுக்கு அவர் வந்து சட்டையை மாத்திட்டு போறாரு?” என கேட்டாள் பவ்யமாக கேட்டாள்.
“எல்லா ஸ்டோரியும் எல்லோருக்கும் தெரியணும்னு அவசியம் இல்லை” என மீண்டும் குட்டினார் ராஜம்.
“மையிலே குயிலேன்னு பேசணும்னு யாரும் எதிர்பாக்கலை. ஆனா மயிறாச்சேன்னு பேசினா, பேசினவங்க தான் எக்ஸ்ட்ரா மைல் நடக்கணும். யாரை எப்போ எங்க வெக்கணும்னு எங்களுக்கும் தெரியும்” என கம்பீரமாக சொன்னார் ராஜம்.
“மையிலே குயிலேன்னு பேசணும்னு யாரும் எதிர்பாக்கலை. ஆனா மயிறாச்சேன்னு பேசினா, பேசினவங்க தான் எக்ஸ்ட்ரா மைல் நடக்கணும். யாரை எப்போ எங்க வெக்கணும்னு எங்களுக்கும் தெரியும்” என கம்பீரமாக சொன்னார் ராஜம்.
இன்னைக்கு நைட்டே இந்து அக்கா வீட்டுக்கு போயிடலாமா என யோசனை வந்தது தீப்திக்கு.
“சரிம்மா, டென்சன் ஆவதே” என காலில் விழாத குறையாக சொல்லிவிட்டு தலை மறைவானாள்.
விஷயம் இதுதான். முதல் நாளும் சிவகுரு குதர்க்கமாக வாயை விட்டிருக்கிறார். ராஜம் இரவு படுக்க போகும் முன், அடுத்த நாளுக்கான ஆயத்த பணிகளை செய்து கொண்டிருக்கும் போது ஏதோ பேசி இருக்கிறார். அவர் பைல்களை எடுத்து அவர் ஆபீஸ் பேகில் வைத்து விட்டு திரும்பியவர், அவர் பால் பாயிண்ட் பேனா டேபிள் மீது அப்படியே இருப்பதை பார்த்தார். சாதாரணமாக இருந்தால் அதன் முனையை உள்ளே அழுத்தி விட்டு, பைக்குள் வைத்திருப்பார். அடுத்த நாள் காலை துரை சிங்கம் அப்படியே பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டு கிளம்ப, பார்க்கிங் போவதற்குள் பாக்கெட்டின் அருகே இங்க் கறையானது. சீனியர் கோஷ்டி கவனித்து சொல்ல, கோடாரி தைலம் இருக்கும் நம்பிக்கையில் மூன்று மாடி ஏறி வந்து சட்டை மாற்றிக் கொண்டு போகிறார். வகை தொகையில்லாமல் விமர்சனம் செய்தால் கரிசனம் காணாமல் போய் விடும் என உணர்ந்து கொண்டிருப்பார் சிவகுரு.
Part 3
அடுத்த நாள் இரவு ஏழு மணி. தீப்தி இந்து வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். அதற்கு முன்னரே ராஜத்தின் briefing வந்து சேர்ந்தது இந்துவுக்கு.
“மொதல்ல ghee தூக்கலா ஊத்தி மூணு பொடி தோசை போடு” என சொல்லிவிட்டு “என்ன மாமா, இன்னிக்கு சீக்கிரம் வந்துடீங்க?” என விக்ரமை கேட்ட படியே லேப்டாப்பை ஆன் செய்ய போனாள் தீப்தி.
“மாமாக்கு செய்த கோதுமை உப்புமா இருக்கு, ஒரு கரண்டி வெக்கவா?” என கேட்டாள் இந்து.
“வயசானப்புறம் அந்த வடக்கன்ஸ் சாப்பாடு தான். இப்போதைக்கு வேணாம்” என தீப்தி சொல்ல, விக்ரம் இந்துவை ஏற இறங்க பார்த்தார்.
சாப்பிடும் போதே இந்துவின் பைனான்ஸ் மேட்டரை ஒவ்வொன்றாக கேட்டு தெரிந்து கொண்டாள்.
“பேமிலி இன்சூரன்ஸ் எவ்ளோ கட்டுற?”
“ஸ்கூல் பீஸ் எவ்ளோ கட்டுற?”
“வீட்டு லோனுக்கு எவ்வளுவு குடுக்குற?”
இந்து ஒவ்வொன்றாக சொல்ல IT returns பைல் செய்து முடித்தாள் தீப்தி. “மாமாக்கும் பண்ணனுமா?” என கேட்டாள்.
“அவரே பைல் பண்ணிட்டாரு” என சுருக்கமாய் சொன்னாள் இந்து.
தீப்தி மேற்கொண்டு எதுவும் பேசாமல் ஷட்டவுன் செய்து விட்டு போய் பால்கனியில் நின்றாள்.
குடும்ப பாரத்தை சமமாக சுமந்து கொண்டிருகிறாள் அக்கா. தான் மட்டும் பைல் செய்து கொள்ள தெரிகிறது. அவளுக்கும் செய்து கொடுத்தால் என்ன என கோபம் தலைக்கேறியது.
எல்லா வேலையையும் முடித்து விட்டு இந்துவும் வந்து பால்கனி சேரில் உட்கார்ந்து கொண்டாள்.
“ஏன் தொரை உனக்கு பண்ண மாட்டாரா?” என கேட்டாள் தீப்தி.
“இருபது தோசை செய்வதற்கு முன் பேசியது இந்துவுக்கு சட்டென்று பிடிபடவில்லை.
“என்னடி சொல்ற?” என குழப்பமாக கேட்டாள்.
“அவருக்கு returns பைல் பண்ணும் போது, உனக்கும் சேர்த்து பண்ணா என்ன?” என கொதிப்பாக கேட்டாள்.
இந்துவுக்கு சிரிப்பு வந்தது. “அதுவா, கேட்டா பண்ணுவாரு. நான் தான் கேக்கலை” என சொன்னாள்.
“கேட்டாத் தான் பண்ணுவாரா? அவரு கேட்டு கேட்டு தான் நீ எல்லாத்தையும் அவருக்கு செய்யுறியா? என மீண்டும் குடைந்தாள்.
“உனக்கு ஈகோ. நான் ஏன் கேக்கணும்னு. வாய தொறந்து கேட்டு வேலைய முடிக்க வேண்டியது தானே” என விக்ரமை எரித்து விடுவது போல பார்த்துக் கொண்டே கேட்டாள் தீப்தி.
“ஈகோவெல்லாம் ஒண்ணுமில்லை. அவரும் கேக்கலை, நானும் சொல்லலை. அவ்ளோதான்” என்றாள் இந்து.
“ஆனா, நீ நேத்து வரை எதிர்பார்த்த இல்ல?” என கேட்டாள்.
“ஆமாடி, அதுக்கென்ன? எப்போவும், எல்லா வேலைலேயும் அவங்க கவனம் இருக்காதுடி. அதுக்காக வருத்தப் பட்டு என்ன பிரயோஜனம் சொல்லு?” என திரும்ப கேட்டாள் இந்து.
“எல்லா வேலைலயும் அவங்க கவனம் இருக்கும். இது உன் தனிப்பட்ட விஷயம். இது குடும்ப வேலை இல்லைனு அவர் நெனைச்சது தான் காரணம், கரெக்ட்டா?” என கேட்டாள்.
முதல் நாள் சித்தியிடம் இவள் பொங்கியது இந்துவுக்கு நினைவுக்கு வந்தது. ஒரு நாள். ஒரு செயல். ஒரு பேச்சு. அதை அளவுகோலாக கொண்டு ஒரு மனிதரை, குறிப்பாக வீட்டு ஆண்களை எடை போடுவதும், திருமண வாழ்க்கையை எள்ளலாக பேசுவதும் தீப்தியின் சமீப கால வாடிக்கையாக இருக்கிறது.
நீண்ட நாட்களாக கட்டமைக்கப்பட்ட ஒவ்வொருவரின் முழு குடும்ப அமைப்பிலும், அந்த தம்பதிகள் பல நிலைகளை ஒன்றாக தாண்டி வருகிறார்கள். விக்ரமின் செயல்பாடும் அந்த வகை தான். இந்து வேலை, குடும்பம், பண விவகாரம் என எல்லாவற்றையும் கையாள்வதால் returns பைல் பண்ணுவதை அவள் பார்த்துக் கொள்வாள், இல்லை மானசி செய்து விடுவாள் என நினைத்திருப்பார். அதை ஒரு குற்றமாக தீப்தி பார்ப்பது இந்துவுக்கு கவலையாக இருந்தது.
“நீ என்ன ஊர் ஒலகத்துல ருக்குறவங்களுக்கு perfect marriage நடத்துறது தான் ஒரே வேலைன்னு நெனச்சிக்கிட்டு இருக்கியா?” என உதாராக கேட்டாள் இந்து.
தீப்தி இந்த கேள்வியை சற்றும் எதிர் பார்க்கவில்லை. அவளுக்கு நடந்திருக்கும் அநியாயத்துக்கு நான் நீதி கேட்டால், என்னை காரா பூந்தி ரேஞ்சுக்கு ட்ரீட் செய்கிறாள் என நினைத்தாள்.
என்ன யோசித்தும் இந்த கேள்விக்கு என்ன கவுண்டர் கொடுப்பது என பிடிபடவில்லை தீப்திக்கு.
“இப்போ நீ பைல் பண்ணியே, அது இன்னிக்கான கணக்கு வழக்கா? என கேட்டாள் இந்து.
“இல்ல,லாஸ்ட் ஒரு வருஷத்துக்கு” என காற்றில் போவது போல பதில் சொன்னாள்.
“ஹா, அதே மாதிரி தான். மேரேஜ் லைப்ல நீ டெய்லி கணக்கு வழக்கு பாத்தீன்னா வேலைக்கு ஆகாது. இது காலத்தும் இருக்க போகும் பயணம். ஏற்றம் இரக்கம், குற்றம் குறை என எல்லாம் தான் இருக்கும். ஆனால் கடந்து வந்த பாதையை திரும்பி பார்த்தால், நாங்கள் எவ்வளுக்கெவ்வளவு ஒருவருக்காக மற்றொருவர் இருந்திருக்கிறோம் என எங்களுக்கு மட்டும் தான் முழுசாக தெரியும். அதனால, அம்மாவை பாத்து, என்னை பாத்து, மானசியோட வாழ்க்கையை பாத்து உன்னோட பயணமும் இதே மாதிரி தான் இருக்கும்னு நினைக்காதே” என தெளிவுபடுத்தினாள் இந்து.
இரவு பத்து மணி. அம்மாவின் ரூமில் இன்னும் ரீடிங் லைட் எரிந்து கொண்டு இருக்கிறது.
“பூரணி, அம்மா டிஸ்டர்ப்டா இருக்காங்கன்னு நெனைக்குறேன்” என கவலையாய் சொன்னான் பாலன்.
“கண்டிப்பாங்க, அவங்க மனசுல என்னென்ன ஓடும்னு நெனச்சாலே எனக்கு வருத்தமா இருக்குங்க. இல்லாதவர்ன்னு ஆனவர் அப்படியே இல்லாமலேயே இருந்திருக்கலாம். இப்போ திடீர்னு ரெண்டாந்தாரத்து பொண்ணுக்கு கல்யாணம், அதுக்கு பத்திரிகை வைக்க வராருன்னா அவங்க மனநிலை எப்படி இருக்கும்?” என ஆதங்கமாய் சொன்னாள் பூரணி.
பாலன் படுக்கையில் இருந்து எழுந்து ஜன்னலின் அருகே போய் நின்றான். அவன் எட்டு வயதாக இருக்கும் போது அப்பாவின் foundry தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து அடுத்த வருடத்திலேயே அவர் நடத்தி வந்த சிட் பண்டு தொழிலும் முடங்க, சுமார் எட்டு லட்ச ரூபாய் கடன் சேர்ந்தது.
அப்பாவுக்கு தொழிலில் பணம் போனதைவிட, ஊரில் கவுரவம் போனது பெரும் தலை குனிவாக இருந்தது. இருக்கும் நகை, வீடு இதையெல்லாம் விற்று பாதி கடனையாவது உடனே கொடுத்துவிடலாம் என அம்மா யோசனை சொன்னாள்.
தோற்ற மனிதனாக, திரும்ப பூஜ்ஜியத்திலிருந்து ஆரம்பிக்க அவர் விரும்பவில்லை.
“எல்லாத்தையும் வித்து பாதி பேருக்கு குடுத்தாலும், ஊர்க்காரங்க நான் மோசம் பண்ணிட்டேன்னு தானே சொல்வாங்க? அதனால, நான் வெளியூருக்கோ, வெளிநாட்டுக்கோ போய் வேலை செஞ்சு பணம் அனுப்பினேன்னா, நீ கொஞ்சம் கொஞ்சமா அடைச்சிடு. ஜனங்களும் மகாதேவன் குடும்பத்தை பிரிஞ்சி கஷ்டப்பட்டு, கடனை அடைச்சான்னு சொல்லுவாங்க” என விளக்கம் சொன்னார்.
தூரத்து சொந்தம் வழியாக குஜராத் ஜாம் நகரில் இருந்த பேக்டரியில் மெக்கானிக் வேலை அவருக்கு கிடைக்க, குடும்பத்தை இங்கேயே இருக்க சொல்லி விட்டு அவர் மட்டும் கிளம்பி போனார்.
தினமும் வீடு தேடி வரும் கடன்காரர்களுக்கு அம்மா தான் பதில் சொல்லி சமாளிப்பாள். ஒரு ஞாயிற்றுக்கிழமை கறி கடையில் அம்மா நின்று கொண்டிருந்த போது, அங்கே வந்த பெண்மணியின் பார்வையில் கூனி குறுகி போனதாக அழுதது இன்னும் ஞாபகம் இருக்கிறது. ஊரார் பணத்தை கொடுக்க வக்கில்லாமல் இருப்பவர்களுக்கு, கறி சோறு ஒரு கேடா என வசவு வாங்கியதை சொல்லி கதறியதும் அவன் நினைவை விட்டு அகலவில்லை.
சுமார் ஒரு வருட காலம், மாதம் ஒரு லெட்டரும் கொஞ்சம் பணமும் அனுப்பி கொண்டிருந்தார். இரண்டாம் வருடம் கடிதங்கள் குறைய, பணம் மட்டும் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. மூன்றாம் வருடம் ஒரே ஒரு கடிதம் மட்டும் வந்தது. வேலைக்கு வந்த இடத்தில ஒரு இக்கட்டான சூழ்நிலையால், தான் இன்னொரு திருமணம் செய்து கொண்டதாகவும், அந்த கடிதத்துக்கு அம்மா பதில் போட்டால், அந்த வருட லீவுக்கு அவர் மட்டும் வீட்டுக்கு வருவதாகவும் எழுதியிருந்தார்.
அம்மா அந்த கடிதத்திற்கு பதில் எழுதவில்லை.
முதல் வேலையாக நகை, வீடு, நிலம் என என்னென்ன இருந்ததோ எல்லாவற்றையும் விற்று, முக்கால்வாசி கடனை அடைத்து விட்டு, சிப்காட்டுக்கு பக்கத்தில் வாடகைக்கு வீடு எடுத்து குடியேறினாள். அதே ஏரியாவில் இருந்த foundry பேக்டரியில் மாதம் ரெண்டாயிரம் ரூபாய்க்கு mould helper வேலைக்கு சேர்ந்தாள். பாலனின் படிப்புக்கும், வீட்டு செலவுக்கும் அந்த பணம் சரியாய் போக, மீதி கடனை அடைக்க விழி பிதுங்கி நின்றாள்.
பேக்டரியில் மாலை ஆறு மணிக்கு வேலை முடிந்த பிறகு, பகுதி நேரமாக இரவு வரை கேட்டரிங் கம்பெனியில் தினக்கூலியாக வேலை செய்தாள். நான்கு வருடம் ஆனது பைசா சுத்தமாக கடனை கட்டி முடிக்க அம்மாவுக்கு.
பத்து வருட அனுபவத்திற்கு பிறகு சூபர்வைசர் பதவி வந்ததும் கொஞ்சம் வாழ்க்கை முன்னேறியது அவர்களுக்கு.
இப்போது பாலனுக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் பிறந்து விட்டது. அவன் தாலுக்கா ஆபீஸிலும், பூரணி ஆஸ்பிடல் லேபிலும் வேலை பார்க்க, குடும்பம் ஒரு வழியாக தலையெடுத்திருக்கிறது.
“நான் போய் அம்மாகிட்ட பேசிட்டு வரேன்” என பூரணியிடம் சொல்லிவிட்டு கிளம்பினான் பாலன்.
அம்மா டேபிள் மீது நோட்டை வைத்துக் கொண்டு ஸ்ரீ ராமஜெயம் எழுதிக்கொண்டிருந்தாள். பக்கத்தில் பழைய டைரிகள் சில இருந்தன.
“மா” என மெலிதாய் அழைத்தான் பாலன்.
“சொல்லுடா” என எழுதிவதை நிறுத்தி விட்டு கேட்டாள் பானுமதி.
“உனக்கு அவரை பாக்க வேணாம்னா இப்போ கூட சொல்லுமா, அவரை வர வேணாம்னு சொல்லிடலாம்” என தரையை பார்த்தபடியே சொன்னான்.
“ம்ம்..அவர்கிட்ட பேசுறதுல எனக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லை” என தீர்க்கமாய் சொன்னார் பானுமதி.
“உண்மையாத்தான் சொல்றியா? இல்ல, அவர வர வேணாம்னு சொன்னா, அவர் வருத்தப்படுவார்னு நெனைக்குறியா?” என கேட்டான்.
“ப்ச், இத பத்தி எனக்கு ரொம்ப யோசிக்க தோணல பாலா. வரட்டான்னு கேட்டாரு, வாங்கன்னு சொல்லிட்டோம். வரட்டும், பேசட்டும், கிளம்பட்டும்” என விட்டேத்தியாய் பதில் சொன்னாள்.
“இது உனக்கு எவ்வளுவு வலியா இருக்கும்னு அவருக்கு புரியாதும்மா. ஆனா எனக்கும் பூரணிக்கும் தெரியும். இதை நீ கோ த்ரூ பண்ணணுமாங்கிறது தான் என் கவலையே?” என விடாமல் கேட்டான் பாலன்.
“எவ்வளோ வலிகளை அனுபவிச்சுட்டேன், அவமானங்களை பாத்துட்டேன். அதுலேர்ந்தெல்லாம் மீண்டும் வந்துட்டேன். அதை அவர் பாக்கணுமில்லையா? அதனால அவர் வரட்டும்” என சொன்னார் பானுமதி.
பாலனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. அம்மாவின் ஒப்புதலில் இருந்த இந்த நல்ல விஷயத்தை தான் எப்படி பார்க்க தவறினோம் என யோசித்தான்.
“நீ இன்னும் என்னை காயம்பட்டவளாவே பாக்குற. எங்க நான் திரும்பவும் காய பட்டுடுவேனோன்னு பயப்படுற. பாலா, என் மனசுக்குள்ள இப்போ எதுவும் இல்லை. ஆனா அவர் மனசுல எவ்வளுவு இருக்கும்னு எனக்கு தெரியும். நம்மள பாக்க வரட்டான்னு அவர் கேக்கவே, அவருக்கு பல நாள் தேவைபட்டிருக்கும்” என மெதுவாய் சொன்னார் பானுமதி.
பாலனுக்கு அம்மா சொல்வது உண்மைதான் என தோன்றியது.
“நீ ஆயிரம் காரணம் சொன்னாலும், நாளைக்கு உன் மனநிலை எப்படி இருக்கும்னு உனக்கே தெரியாதும்மா. அதனால நீ இந்த ரிஸ்க்கை எடுக்க போறியான்னு யோசிச்சு சொல்லு” என நிதானமாய் கேட்டான் பாலன்.
ஒருவேளை அம்மாவுக்கும் அவரை ஒரு முறை பார்க்கலாம் என்று அடி மனசில் ஆசை இருக்கலாம். தான் ரொம்ப கேட்டு அவளை சங்கடப்படுத்துகிறோமோ என யோசித்தான்.
“பாலா, நாளைக்கு என்னங்குறது தெரிஞ்சுட்டா வாழ்க்கைல என்ன சுவாரஸ்யம் இருக்கு சொல்லு? கல்லு விழும்போது மட்டும் தான் குளம் தளும்புதாடா?” என அவன் கையை பற்றிக் கொண்டு கேட்டார் பானுமதி.
அந்த பதிலின் கணம் அவன் கட்டுப்பாட்டை உடைக்க, அப்படியே அம்மாவின் தோளில் சாய்ந்து அழுதான்.
இந்த சந்திப்பு அம்மாவை விட தனக்கு தான் அதிக மனஉளைச்சலை தருகிறது என அப்போது தான் அவனே தெரிந்து கொண்டான்.
பானுமதி அமைதியாக இருந்தார். சற்று நேரம் கழித்து, “சாயந்திரம் நாலு மணிக்கு மேல வரேன்னு சொல்லி இருக்காரு. லைட்டா டிபன் மட்டும் செய்து வெக்கலாம்னு இருக்கேன். சுகர் வந்திருக்குமோ என்னவோ? யாருக்கு தெரியும்” என சொல்லிவிட்டு மீண்டும் எழுத ஆரம்பித்தார்.
என்ன டிபன் செய்வது என்பது வரை யோசித்து வைத்திருப்பவளிடம், தான் முட்டாள்தனமாக எவ்வளவு கேள்விகளை கேட்டிருக்கிறோம் என அவனுக்கு உறைத்தது. என்ன இருந்தாலும் இது அவர்களின் வாழ்க்கை, அவர்களின் உணர்வுகள்.
“சாரிம்மா” என சொன்னான் பாலன்.
“விடுடா..நீ ஏன் பதட்டமா இருக்கேன்னு எனக்கு தெரியும்டா” சொன்னார் பானுமதி.
பாலன் எழுந்து கதவருகே செல்ல, “பூரணியால நேரடியா என்கிட்ட இதை பேச முடியாது. அவளும் உன்னை மாதிரி தான் குழப்பத்துல இருப்பா. என்ன பத்தி கவலைப்பட வேணாம்னு அவகிட்ட சொல்லு” என ஞாபகமாய் சொல்லி அனுப்பினார்.
Part 2
அடுத்த நாள் காலை. குழந்தையை பள்ளிக்கு அனுப்பி விட்டு, பூரணியும் பாலனும் வேலைக்கு கிளம்ப, வீடு அமைதியாக இருந்தது. ஆனால் பானுமதியின் மனம் மட்டும் தத்தளித்துக் கொண்டிருந்தது. எதற்காக இப்போது வருகிறார்? எப்படி இருப்பார்? என்ன பேசுவார்? எவ்வளவு நேரம் இருப்பார்? தான் என்ன பேசுவது? எப்படி அழைப்பது? என்ன உடுத்துவது? என ஆயிரம் கேள்விகள் அவரை துளைத்து எடுத்தது.
அரைமணி நேரம் அப்படியே சோபாவில் உட்கார்ந்திருந்தார். அவர் இப்போது ஒரு விருந்தாளியாக மட்டுமே வருகிறார் என நூறு முறை தனக்கே சொல்லிக் கொண்டார். எக்காரணம் கொண்டும் அவர் முன்னால் கண் கலங்கக் கூடாது என முடிவெடுத்தார்.
கேசரி செய்து, பாயசம் வைக்கலாமா என மனதில் இருந்து ஒரு கேள்வி வந்தது. வேண்டாம், அவர் என்ன ராணுவத்தில் சேவை செய்துகொண்டு, எல்லையிலா வாழ்கிறார்? வேண்டியதில்லை என புத்தி சொல்லியது.
சற்று நேரத்தில் பானுமதிக்கு தன் நிலை தெளிவாய் புரிந்தது. பாலன் தவித்ததில் தவறில்லை என நினைத்தார்.
மனம் சஞ்சலமாய் இருக்க ஸ்ரீ ராமஜெயம் எழுத ஆரம்பித்தார். நாலு தடவை எழுதியதும், தான் என்ன நோக்கத்திற்காக எழுதுகிறோம் என புரிய, அப்படியே உட்கார்ந்து அழ ஆரம்பித்தார்.
இந்த அழுகை தவிர்க்க வேண்டியதில்லை..தொடரட்டும் என ஒன்று விடாமல் நிதானமாக கிளறி அசைபோட்டு பார்த்தார். இவ்வளுவு நாள் நினைக்கக் கூடாது என கட்டுப் படுத்திக் கொண்டிருந்த, அத்தனை கோணங்களையும் நுணுக்கமாக எண்ணிப் பார்த்தார்.
தான் நினைத்திருந்தால் இந்த சந்திப்பை வேண்டாம் என சொல்லி இருக்கலாம்? ஏன் அவரை சந்திக்க ஒத்துக் கொண்டோம்? இன்னும் என் மனசில் மிச்சம் என்ன இருக்கிறது? என கூச்சமின்றி தன்னை தானே கேட்டு கொண்டார்.
பாசம்? காதல்? தகப்பன் ஸ்தானம்? பானுமதிக்கு இதில் எதுவும் இல்லை என்பது தெளிவாக புரிந்ததில் சற்றே நிம்மதியாக உணர்ந்தார்.
நீண்ட நேரம் அழுததில் கண்கள் வீங்கியிருக்கும் என குளிர்ந்த நீரில் முகம் கழுவி விட்டு வந்தார். ஐஸ் பேக்கை எடுத்து கண்களுக்கு வைத்துக் கொண்டு, சோபாவில் கால் நீட்டி உட்கார்ந்து கொண்டார்.
மனம் மீண்டு கேள்வி கேட்க ஆரம்பித்தது. அவர் கேட்டால் திரும்பவும் ஒன்று சேர விருப்பமா? என உடைத்துக் கேட்டது. அவரே அவருக்கு தவிர்த்துக் கொண்ட முக்கியமான கேள்வி இது.
இல்லை என உள்ளேயிருந்து பதில் வந்தது.
இது தான் கடைசி வாய்ப்பு. உறுதியான நிலைப்பாடா இது என மனம் மீண்டும் கேட்டது.
பானுமதி அது கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு எழுந்து போய் சமைக்க ஆரம்பித்தார்.
காலத்துக்கும் தேவையில்லை என ஆன உறவிற்கு, விருந்தோம்பல் எதற்கு என மீண்டும் ஒரு கேள்வி வந்தது.
பானுமதி கிச்சன் வேலையை அப்படியே விட்டு விட்டு மீண்டும் போய் சோபாவில் உட்கார்ந்து கொண்டார்.
தனக்கே தான் உண்மையை சொல்லாத வரை, இந்த போராட்டம் இருக்கும் என அவருக்கு தோன்றியது.
ஈகோ. தான் மீண்டு விட்டோம் என்ற கர்வம். நான் கௌரவமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என பறை சாற்றிக் கொள்ளும் ஆர்வம். அவர் துரோகத்தை உரமாக்கிக் கொண்டோம் என உணர்த்துவது. அவரின் கோழைத்தனத்தால் அவர் இழந்ததை காட்டுவது என சரமாரியாக பதில்கள் வந்து கொட்டியது.
சரி, தன் மனதில், உணர்வில் எதுவும் மிச்சமில்லை. வீட்டில் என்ன இருக்கிறது என யோசித்தார். பீரோவின் மேல் இருந்த பெட்டியை எடுத்து பார்த்தார். திருமண போட்டோ, அவர் பெயர் பலகை என சில சமாச்சாரங்கள் இருந்தது.
குக்கர் விசில் வந்தது. போட்டோவை அப்படியே வைத்து விட்டு போய், விட்ட இடத்தில இருந்து சமையலை தொடர்ந்தார்.
போன் அடித்தது. “ஆட்டோ ஏறிட்டேன். இன்னும் பத்து நிமிஷத்தில் வந்துடுவேன்” என மகாதேவன் சொன்னார்.
பானுமதிக்கு குழப்பமாக இருந்தது. சாயந்திரம் நாலு மணிக்கு வருவதாக சொன்னவர், மத்தியானமே வருகிறாரே என பரபரப்பானாள்.
அப்போது தான், தான் இன்னும் ரெடியாகவில்லை என உரைத்தது.
சமையலை அப்படியே நிறுத்தி விட்டு ரூமிற்குள் ஓடினார். சட்டென்று புடவை மாற்றி, தலை வாரி ரெடியானார். ஐஸ் பேக் வைத்தது நல்லது என சொல்லிக் கொண்டார்.
டோர் பெல் அடித்தது. பானுமதிக்கு கால்கள் பின்னியது.
தன் தயாரிப்புகள் எதுவும் சொதப்பக் கூடாது என வேண்டிக் கொண்டார்.
Part 3
வெள்ளை வேட்டியும், வெளிர் சந்தன நிற அரைக் கை சட்டையும் உடுத்தி, சற்றே மேடிட்ட தொப்பையோடு இருந்தார் மகாதேவன். கருப்பு பிரேம் போட்ட கண்ணாடியும், சற்றே முன்னேறிய மண்டையும் வயதை சொன்னது. எடை கூடாமல் அதே உடல் பருமனோடும், சற்றே தளர்ந்த தோள்களோடும், ஒரு கையில் கட்டை பையோடு நின்றார்.
பானுமதிக்கு வாய் உலர்ந்து போனது.
அனிச்சையாக கட்டை பையை வாங்க நீண்ட கையை கட்டுப்படுத்திக் கொண்டாள். அந்த கணத்தில், என்ன நிகழ்ந்தாலும் தான் அசைந்து கொடுக்க மாட்டோம் என உணர்ந்தும் கொண்டார்.
அவள் மனதில் தைரியம் பொங்கி வர, “வாங்க” என அவர் கண்களை பார்த்துக் கூப்பிட்டாள் .
மகாதேவன் பானுமதியை வைத்த கண்ணை வாங்காமல் பார்த்துக் கொண்டேயிருந்தார். வாழ்க்கை எவ்வளவு புரட்டி போட்ட போதும் தெளிவாகவும், இயல்பாகவும் இவள் எப்படி இருக்கிறாள் என அவருக்கு புரியவில்லை. தாறுமாறாக எடை கூடாமல், பதவிசாகவும் பளிச்சென்றும் இருப்பதாகவும் எண்ணினார்.
“உக்காருங்க” என சொல்லிவிட்டு கிச்சனுக்குள் நுழைந்தாள். இதயம் படபடவென அடித்துக் கொள்ள, தண்ணீர் கொண்டு போய் கொடுத்தாள். அதை வாங்கி பருகிவிட்டு தரையையே பார்த்துக் கொண்டு, சொம்பை திரும்ப கொடுத்தார்.
அதை கொண்டு போய் மீண்டும் கிச்சனில் வைத்தாள். தான் மீண்டும் மீண்டும் இங்கே வருவது ஏன் என அவளையே கேட்டு கொண்டாள். இயல்பு நிலை அவ்வளவு சீக்கிரம் வராது என தோன்றியது.
“டீ குடிக்குறீங்களா? இல்ல கொஞ்ச நேரத்துல சாப்பாடு சாப்பிடுறீங்களா? லன்ச் டைம் ஆயிடுச்சே?” என கிச்சனில் இருந்து எட்டிப் பார்த்து கேட்டாள்.
“கொஞ்ச நேரம் ஆகட்டும், நீ வந்து உக்காரு” என தயக்கமாக கூப்பிட்டார் மகாதேவன்.
அவள் எதிரேயிருந்த சோபாவில் வந்து உட்கார, என்ன பேசுவது என இருவரும் யோசித்தார்கள்.
நல்லா இருக்கியா என முதலில் யார் கேட்பது என ஒரு மௌன போராட்டம் அங்கே நடந்து கொண்டிருந்தது.
இருவருக்கும் அது அர்த்தமற்ற கேள்வி என தோன்றியதால் அது கேட்கப் படவில்லை.
பானுமதிக்கு அங்கே நிலவிய அமைதி பொறுமையை சோதித்தது. “பையன் சொந்தமா?” என கேட்டாள்.
இந்த கேள்வியை மகாதேவன் இவ்வளவு சீக்கிரம் எதிர்பார்க்கவில்லை.
இன்னும் குசலம் விசாரிக்கவில்லை, நலம் விசாரிக்கவில்லை. இவள் எல்லாவற்றையும் அநாவசியமாக கடந்து போய் இந்த கேள்வியில் நின்றது அவருக்கு இலகுவாக இருந்தது.
“ஆமா, சுஷ்மாவோட சித்தப்பா பையன். கனடால ரெண்டு தலை முறைக்கு முன்னாடியே செட்டில் ஆயிட்டாங்க” என பெருமையாக சொன்னார்.
அடுத்த அரை மணி நேரம் கனடா சம்பந்தக் கதையும், பாலனின் கல்யாண கதையும் சுவாரஸ்யமாக ஓடியது.
மகாதேவனின் இறுக்கம் காணாமல் போயிருந்தது. ஒரு காலை மடக்கியும், மறு காலை தொங்கப் போட்டும், சோபாவில் சாய்ந்து ரிலாக்ஸ்டாக உட்கார்ந்து பேசி கொண்டிருந்தார்.
பானுமதிக்கு சமையல் இன்னும் முடியவில்லை என ஞாபகம் வந்தது. ரெண்டு மூணு ஆல்பங்களை கொண்டு வந்து அவரிடம் கொடுத்துவிட்டு கிச்சனுக்குள் போனாள்.
ஸ்ஸ்..அப்பாடா என இருந்தது அவளுக்கு. எதுவும் உறுத்தலாக இல்லாமல் இப்படியே பொதுவாக பேசி அனுப்பி விட வேண்டும் என முடிவெடுத்தாள்.
கொஞ்ச நேரம் எந்த சத்தமும் இல்லாததால் ஹாலுக்கு வந்தாள். அவர் சுவரில் இருந்த போட்டோக்களை அருகில் போய் நின்று கொண்டு பார்த்துக் கொண்டிருந்தார்.
“நீயும் வா, சேர்ந்து ஆல்பம் பாக்கலாம்” என சொன்னார்.
அவளுக்கு நாம என்ன கைடு வேலையா பாக்குறோம் என தோன்றியது.
“நீங்க பாருங்க, நான் கொஞ்சம் வேலையை முடிச்சிட்டு வரேன்’ என மீண்டும் உள்ளே போனாள்.
பத்து நிமிடத்தில் எல்லா வேலையையும் முடித்து விட்டு எதிர் சோபாவில் போய் உட்கார்ந்தாள்.
“பாத்ரூம் எங்க இருக்கு?” என கேட்டார்.
“ஹால்ல அந்த பக்கம் இருக்கு. அது இந்தியன். உள்ளே ரூம்ல வெஸ்டர்ன் இருக்கு” என சொன்னாள்.
மகாதேவன் உள் ரூமிற்குள் போனார். மணி ரெண்டாக போகிறது. ஐந்து மணி ஆகும் எல்லோரும் வீடு வந்து சேர. அது வரை எப்படி நேரத்தை ஓட்டுவது என யோசித்தாள்.
பாத்ரூம் போய்விட்டு வெளியே வந்த மகாதேவனின் கண்ணில் அந்த பெட்டி பட்டது. எட்டி பார்த்தார். அவர்களின் திருமண போட்டோ, அவரின் பெயர் பலகை மற்றும் சில சாமான்கள். அவருக்கு சொல்ல முடியாத ஒரு ஆனந்தம் பொங்கி வந்தது. தன் வருகை அவளுக்கு ஒரு ஆர்வத்தை தூண்டியதாக புரிந்து கொண்டார்.
ஆல்பத்தை எடுத்துக் கொண்டு, எதிர் சோபாவில் போய் அவள் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார்.
பானுமதி இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. சற்றே பக்க வாட்டில் திரும்பி அமர்ந்து கொண்டு அமைதியாக இருந்தாள். எங்கெங்கு அவளின் படங்கள் இருந்ததோ, அங்கெல்லாம் நிறுத்தி நிதானமாக பார்த்துக் கொண்டிருந்தார் அவர். பூரணியின் பெற்றோர் யார் என கேட்டு தெரிந்து கொண்டார்.
“சாப்பிடுறீங்களா?டைம் ஆகுது” என எழுந்து கொண்டாள் அவள்.
“சரி” என அவரும் பின் தொடர்ந்தார்.
அவருக்கு பரிமாறிவிட்டு, அவளும் சாப்பிட மகாதேவனின் மனம் ரெக்கை கட்டி பறந்தது.
மேக்சிமம் ஒரு காபி மட்டும் கிடைக்கும் என நினைத்திருந்தார்.
இருவரும் சாப்பிட்டு எழுந்து போய் கையை கழுவி விட்டு வர, மகாதேவன் பானுமதியின் புடவை தலைப்பால் கையை துடைத்துக் கொண்டார்.
அவள் திகைத்துப் போய் பார்க்க, மெலிதாக சிரித்துவிட்டு ஹாலுக்கு போனார்.
அவளுக்கு அது சொல்ல முடியாத அசூயையாக இருந்தது.
எச்சில் தட்டு இன்னும் டேபிள் மேல் இருந்தது. முதல் வேலையாக அதை கொண்டு போய் கழுவி வைத்தாள்.
“டெய்லி ஸ்ரீ ராமஜெயம் எழுதுவியா?” என நோட்டை புரட்டியபடியே கேட்டார் மகாதேவன்.
“என்ன நல்ல நேரமான்னு பாக்கறியா?” என சூசகமாக கேட்டபடியே பக்கத்தில் வந்து உட்கார்ந்தார்.
இதற்கு மேல் பொறுமை தாங்காது என அவளுக்கு தோன்றியது.
பல வருடங்கள் கழித்து சந்திக்க வருபர் கூனி குறுகி அவமானத்தில் இருக்க வேண்டாம் என இதுவரை இயல்பாக பேசியது இந்த இடத்தில் வந்து நிற்கிறது.
“இப்போவும் தலைக்கு ஊத்திக்குறியா?” என வந்த அடுத்த கேள்வியில், பானுமதியின் தலையிலிருந்து பாதம் வரை அதிர்ந்து போயிற்று.
இப்போது இருக்கும் குறைந்த பட்ச உறவை கூட தலை முழுக வேண்டும் என அவள் முடிவெடுத்தாள்.
“இல்ல..சும்மாதான் கேட்டேன்..உடம்பை பாத்துக்க” என இழுத்தார்.
“மூணு டு நாலரை இன்னிக்கு எம கண்டம். அதுக்குள்ள பத்திரிகை குடுத்துடுங்க” என நகர்ந்து போய் ஆல்பங்களை அடுக்கியபடியே சொன்னாள் பானுமதி.
“அதுவும் சரிதான்” என எழுந்து போய் கட்டை பையிலிருந்து ஒரு பத்திரிகையை எடுத்து வந்தார்.
பாக்கெட்டில் இருந்து பேனாவை எடுத்து “திருமதி பானுமதி” என பெயரை எழுதியவர் ஒரு நொடி அப்படியே உறைந்து நின்றார்.
அவர் கண்கள் பானுமதி என்ற பெயருக்கு பின்னால் நிலை கொண்டு நிற்க, பேனா முனை காத்துக் கொண்டு இருந்தது.
“பானுமதி ராமசந்திரன்” என சொன்னாள் அவள்.
மகாதேவனின் முகம் வெளிறி போனது. “நீ..நீ..உனக்கு?” என அவருக்கு வாய் திக்கியது.
“சும்மா சொன்னேன், வெறும் திருமதி பானுமதி தான்” என கூர்மையாக சொன்னாள்.
அவர் திகைத்துப் போய், என்ன செய்கிறோம் என தெரியாமல், அந்த பத்திரிகையை டக்கென்று டேபிள் மீது வைத்தார்.
“பானுமதி ராமசந்திரன்” என சொற்றொடரில் இருந்து அவர் இன்னும் வெளியே வரவில்லை.
பானுமதி மகாதேவன் என எழுத அவருக்கு உரிமையில்லை என அவர் உணர்ந்த நொடி அது. வெறும் பானுமதி என எழுதி இயல்பாக கொடுத்திருக்கலாம்.
ஆனால் இன்றைய பானுமதியின் பெயருக்கு பிறகு, வேறொரு நபரின் பெயர் இருக்குமா என அவர் சந்தேகித்ததின் விளைவு தான் அந்த ஒரு நொடி நிதானிப்பு.
ஆழ் மனதில் அவருக்கிருந்த நீண்ட நாள் குற்ற உணர்வும், இன்று அவரை ஈர்த்த பானுமதியின் வயதுக்கேற்ற வசீகரமும், அவரை அறியாமல் அவருக்குள் இருந்த அழுக்குப் பக்கங்களை காட்டிக் கொடுத்தது.
“நான் எப்போதும் பானுமதி மகாதேவனாவே இருப்பேன்னு நீங்க நெனைச்சதால தானே பத்திரிகை குடுக்க வந்தீங்க. இந்நேரம் நானும் எனக்குன்னு ஒரு வாழ்க்கையை அமைச்சிக்கிட்டு இருந்திருந்தா, இந்த பத்திரிகையை வாங்குற தகுதி இல்லாதவளா இருந்திருப்பேன்ல?” என அமைதியாக கேட்டாள் அவள்.
மகாதேவன் குனிந்த தலையை நிமிரவே இல்லை.
“நீங்க விட்டுட்டு போன மாதிரியே நான் அப்படியே இருக்கணும்னு எதிர்பாக்குறதும், நீங்க வந்த ஒடனே, நீங்க விட்டுட்டு போறதுக்கு முன்னாடி இருந்த மாதிரியே நான் இருக்கணும்னு எதிர்பாக்குறதும் உங்களுக்கு உறுத்தலியா?” என கேட்டாள்.
கட்டை பையை எடுத்து அவள் நீட்ட, அவர் அதை தயக்கமாக வாங்கி கொண்டார்.
“இதை மறந்துட்டேன்” என டேபிளை நோக்கி போய், அந்த பத்திரிகையும் கொண்டு வந்து பையில் வைத்தாள்.
மகாதேவன் கிளம்பியதும், கதவை அறைந்து சாத்தி விட்டு சோபாவில் வந்து உட்கார்ந்தாள்.
டேபிளின் மீதி இருந்த ஸ்ரீ ராமஜெயம் நோட்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தது.
அவர் சாப்பிட்டு முடிப்பதற்குள் கடைசியாக ஒரு தடவை கிச்சனை சுத்தம் செய்து விட்டு ஹாலில் வந்து உட்கார்ந்தாள்.
பாஸ்கர் கையை கழுவிக் கொண்டு வர “நம்ம இனியா ரெண்டு வாரத்துக்கு முன்னாடி பெரிய பொண்ணாயிடிச்சாம். கஜா அண்ணன் இன்னிக்கு போன் பண்ணி சொன்னாரு” என துக்கம் தொடையை அடைக்க சொன்னாள்.
கஜபதி அக்க்ஷயாவின் பெரியப்பா மகன். சேலத்துக்கு பக்கத்தில் சொந்த ஊரில் பார்மசி நடத்தி வருகிறார்.
“ஹ்ம்ம்…எனக்கும் லன்ச் டைம்ல கால் பண்ணி சொன்னாரு. வீட்ல கொஞ்சம் நிலவரம் சரியில்ல, அதனால வீட்டோட பங்க்ஷன் வச்சிட்டோம் அப்படிடீன்னார். நானும் அதுக்கென்ன பரவாயில்லை, நாங்க அரையாண்டு லீவுக்கு ஊருக்கு வரும் போது வீட்டுக்கு வரோம்னு சொன்னேன். நவம்பர்ல தான் இனியாக்கு போட்ட நகை சீட்டு முடியுது. சீட்டு அமௌண்டுல அரை பவுனுக்கு கொஞ்சம் குறைவாதான் வரும். போஸ்ட் ஆபீஸ்ல ஏதாவது வச்சிருக்கியா?” என கேட்டார் பாஸ்கர்.
அவளுக்கு காண்டு தலைக்கு ஏறியது. அவர் வீட்டுக்கு வந்து ரெண்டு மணி நேரமாகிறது. இதை பற்றி வாயையே திறக்கவில்லை. எவ்வளவு முக்கியமான நிகழ்வு. தானும் போயிருக்க வேண்டியது. இவர் என்னடாவென்றால் இவ்வளவு ஈசியாக கடந்து போகிறார் என முறைத்தாள்.
“என்ன பெரிய நிலவரம்? நாம என்ன ஏன் பங்க்ஷன மண்டபத்துல வெச்சி பண்ணலேன்னு கேக்க போறாமா? இல்ல நமக்கு தான் நடந்த விவகாரமெல்லாம் தெரியாதா? என அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு கேட்டாள்.
பாஸ்கரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.
“கஜாண்ணன் தான் என்னை வீட்டுக்கு கூப்பிட்டுக்கும் போது போட்டோ எடுத்திச்சி. எங்கம்மா ரெண்டு ரோலுக்கு தான் காசு குடுத்தாங்க. அதோட கைக்காசு கொஞ்சம், அப்புறம் எங்க அக்காங்க கிட்ட கொஞ்சம் சில்லறைன்னு தேத்தி, மொத்தம் நாலு ரோலு வாங்கி வந்த மொத்த ஜனத்தையும் ஒருத்தர் விடாம படம் எடுத்திடிச்சு. ஒரு வாரம் கழிச்சி ஆல்பத்தோட வந்து நாலு ரோலுக்கு பிரிண்டிங் காசு கேட்டுது. எங்க அம்மா செம திட்டு திட்டுனாங்க. அதுக்கு அண்ணன் என்ன சொல்லுச்சு தெரியுமாங்க? சித்தி, வந்தவங்கள்ல இருக்குற ஒருத்தர் விடாம அட்டகாசமா எடுத்திருக்கேன். நாளைக்கே ஏதாவது கிழ கட்டைங்க பொட்டுன்னு போயிடுச்சின்னா, நம்ம வீட்டு கதவைதான் வந்து போட்டோவுக்காக தட்டுவாங்கன்னுச்சி. எங்கம்மாக்கு பகீர்னு ஆயிடுச்சி. நல்ல விஷயம் நடந்த வீட்டுல, இந்த நாய் கண்ட பேச்சு பேசுதேன்னு மொறத்தாலேயே வெச்சி வெளுத்துட்டாங்க” என சொல்லி தலையை கவிழ்ந்து கொண்டாள்.
“ம்ம்..” என மெலிதாய் பதில் வந்தது பாஸ்கரிடம் இருந்து.
பத்து நிமிடம் ஆனது அவள் தேறி வர. அப்போது தான் அவர் இது வரை தனக்கு ஆறுதல் சொல்லாதது அவளுக்கு உறுத்தியது. நான் இன்னும் இன்றைய நாளையே process செய்து கொண்டு இருக்கிறேன். இவர் இன்னும் நாலு மாதம் கழித்து முடிய போகும் நகை சீட்டை பற்றி யோசிக்கிறார். தன்னுடைய ஆற்றாமையை கொஞ்சம் கூட உள் வாங்கவில்லை என்ற ஆதங்கம் அவளை சுழற்றியடித்தது.
“என்ன ம்ம்..ன்னு சிம்பிளா முடிச்சிட்டீங்க? நான் ஒருத்தி நொந்து போய் உக்காந்திருக்கேன்? எங்க அம்மா, அப்பா, அக்கா எல்லாரும் உள்ளூர்லயே இருந்ததால போய் பங்க்ஷன் அட்டென்ட் பண்ணி இருக்காங்க. எங்கிட்டா சொன்னா, அண்ணன் கூப்பிடலேன்னு நான் வருத்தப்படுவேன்னு அமுக்காளிங்க வேல பாத்திருக்காங்க. மார்க்கெட்ல ஒரு கடை விடாம ஏறி இறங்கி சீர் வாங்கி இருப்பாங்க போன வாரம். என்கிட்டே சொல்லி இருந்தா நான் போகலேன்னாலும் என் பங்கு காசாவது குடுத்திருப்பேன்ல?” என சீறினாள்.
பாஸ்கருக்கு கொட்டாவி வந்தது. “வாஸ்தவம் தான். அவங்க நெலமைல இருந்து பாரு அக்க்ஷூ. அவங்க எப்படி சொல்லுவாங்க? எனக்கு ரொம்ப பேக் பெயினா இருக்கு. படுத்தா ஒடனே தூக்கம் வராது. நீ கொஞ்சம் சீக்கிரம் வாயேன். மூவ் போட்டுட்டேன்னா கொஞ்ச நேரத்துல அப்படியே தூங்கிடுவேன்” என சொல்லி விட்டு பாஸ்கர் எழுந்து உள்ளே போக, அவள் அப்படியே பழைய நினைவுகளில் ஆழ்ந்து போனாள்.
செங்காட்டு மண்ணும், நம் வீட்டுப் பொண்ணும், கை விட்டுப் போகக் கண்டா கண்ணீர் வருமே!
தங்கச்சி கண்ணில் கண்ணீரை கண்டா, தன் மானம் கூட அண்ணன் விட்டுத் தருமே!
பந்தத்த மீறிப் போக சக்தி இல்லையே, பாசத்த பங்கு போடப் பட்டா இல்லையே, வேருக்கு இளகிப் போச்சு வெட்டுப் பாறையே!
தென்கிழக்கு சீமையில, செங்காத்து பூமியில, ஏழைப்பட்ட சாதிக்கொரு ஈரமிருக்கு!
காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா, சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு!
என பாடல் அவளுக்குள் ஒலிக்க, அப்படியே கரைந்து போய் உட்கார்ந்திருந்தாள்.
அண்ணனுக்கு கொஞ்சம் பண நெருக்கடி, தொழிலும் நட்டத்தில் போகிறது. போதாததுக்கு பெரியவன் வேறு டிரேடிங்கில் பணத்தை விட்டு விட்டு நிலைமையை சிக்கலாகி விட்டான். ஆனால் காரணம் எதுவாயிருந்தாலும் இனியாக்குட்டி கூட தான் இல்லாததை அவளால் தாங்க இயலவில்லை. இவ்வளவு நடந்தும் அம்மாவும் அக்காவும் மூச்சு கூட விடாதது, அவர்கள் தன்னை எங்கே வைத்திருக்கிறார்கள் என்பதை அவளுக்கு உணர்த்துவதாக பட்டது.
இவருக்காக ஊரை விட்டு, சொந்த பந்தத்தை விட்டு, நல்லது கெட்டதில் கலந்து கொள்ளாமல் இங்கே இருந்தால், இந்த மனுஷன் ஆறுதலாய் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் விட்டேத்தியாய் இருப்பது அவளுக்கு வலியை கூட்டியது.
“அண்ணன் நீ இல்லாம பங்க்ஷன் செய்றதுல ரொம்ப வருத்தபட்டிருப்பார்டி”
“அவரு அன்னிக்கு முழுக்க உன்ன மிஸ் பண்ணி இருப்பார் தானே?”
“உனக்கே இப்படி இருக்குன்னா, அவரு எவ்ளோ பீல் பண்ணி இருப்பார் அக்க்ஷூ?” என ஏதாவது சொல்லி தன்னை தேற்றி இருக்கலாம்.
என்ன கவலையாக பொண்டாட்டி இருந்தாலும் சரி, துளி கூட சட்டை பண்ணாமல், தூங்கும் போது தன்னுடைய முதுகு வலிக்கு அவள் கால்களை தூக்கி போட்டுக் கொள்ள மட்டும் ஹிண்ட் கொடுக்க தெரிகிறது.
அக்க்ஷயாவுக்கு என்ன வாழ்க்கை இது என தோன்றியது. பெற்றதுதான் விட்டுக் கொடுத்தது என்றால், இங்கே கட்டியதும் அதே போல தான் இருக்கிறது.
“அக்க்ஷூ..வாயேன்..லேட்டாகுது” என பாஸ்கரின் அழைப்பு வந்தது.
“நாம என்ன மெஷினா? நாலு பேச்சு பேசிட்டு, டமால்னு படுத்து தூங்க? கொஞ்ச நேரம் ஹால்ல உக்காந்து இருக்குறதுல இவருக்கு என்ன பிரச்சினை? அவரு பேசினா நாமும் பேசி, அவரு சிரிச்சா நாமும் சிரிச்சி, அவரு தூங்கினா நாமும் தூங்கிடணும்! என்ன வாழ்க்கைடா இது” என வெறுத்துப் போனாள்.
அடுத்த நாள் காலை. “இன்னைக்கு லாஸ்ட் பீரியட் உனக்கு லைப்ரரி தானே? லாஸ்ட் வீக் நீ கொண்டாந்த புக்க வர்ஷா படிச்சி முடிச்சிடுச்சி. உன் பேக் உள்ள வெச்சிருக்கேன். ஞாபகமா ரிட்டர்ன் பண்ணிடு” என சொல்லி விட்டு கிளம்பினார் பாஸ்கர்.
“பெரிய பிளானிங் குமாருன்னு நினைப்பு” என திட்டிக் கொண்டே அவளும் பள்ளிக்கு கிளம்பினாள்.
அன்றைய நாள் எப்போதும் போல் இருக்கவில்லை. யாரை பார்த்தாலும் எரிச்சலாக இருந்தது. வீட்டிலிருந்த வந்த போன் எதையும் எடுத்து பேசும் மனநிலையில் அவள் இல்லை. பாடம் நடத்தும் மூடும் இல்லை. லஞ்சுக்கு பிறகு ரெண்டு பீரியடையும் P.E.T சாருக்கு கொடுத்தது விட்டு ஸ்டாப் ரூமில் உட்கார்ந்து பேப்பர் திருத்தினாள்.
மீண்டும் மீண்டும் பழைய நினைவுகள் வர, சில பேப்பர்களும் கொஞ்சம் ஈரத்தை வாங்கி கொண்டன.
ஒரு மணி நேரத்திற்கு பிறகு “மிஸ்” என மூன்றாம் வகுப்பு கிளாஸ் லீடர் வந்து நின்றான்.
“என்னடா?” என்றாள்.
“லைப்ரரி பீரியட் மிஸ். நன்முல்லை மிஸ் உங்களையும் கூட்டிட்டு வர சொன்னாங்க” என்றான்.
“போ, வரேன்” என சொல்லிவிட்டு பேப்பர் கட்டை பையில் வைத்து விட்டு, ரிட்டர்ன் செய்ய வேண்டிய புக்கை எடுத்துக் கொண்டாள்.
பாஸ்கரின் மெசேஜ் டங்கென்று வந்தது. துளி கூட empathy இல்லாத வாழ்க்கையில் telepathy மட்டும் நன்றாக வேலை செய்கிறது என நினைத்துக் கொண்டாள்!
அவள் லைப்ரரி போய் சேரும்போது பிள்ளைகள் அனைவரும் வட்டமாக அமர்ந்திருந்தார்கள்.
“வாங்க மிஸ், இன்னைக்கு ஒரு activity பிளான் பண்ணி இருக்கேன். அது முடிஞ்சப்புறம் book issue பண்ணிடலாம்” என சொன்னார் நன்முல்லை.
ஒரு அட்டை பெட்டியில் காட்டு விலங்குகள் மற்றும் பறவைகளின் படம் ஒட்டிய மாஸ்க்குகள் இருந்தது. பிள்ளைகள் அவர்களுக்கு பிடித்த விலங்கின் மாஸ்க்கை மாட்டிக் கொண்டு, அது ஏன் அவர்களுக்கு பிடிக்கும்? ஒரு நாள் அவர்கள் அந்த விலங்காக வாழ்ந்தால் என்னவெல்லாம் செய்வார்கள் என சொல்ல வேண்டும்.
ஒவ்வொருவராக வந்து பெட்டியை துழாவி, அவர்களுக்கு பிடித்த மாஸ்க்கை அணிந்து கொண்டு போய் உட்கார்ந்தார்கள்.
முதலில் மீன் உட்கார்ந்திருந்தது. என்ன காரணம் என கேட்டால் “தண்ணில ஆட்டம் போட்டால் செமயா இருக்கும் மிஸ்” என்றது.
“நான் தான் அந்த காட்டுலயே செம ஸ்மார்ட், க்ளெவரான அனிமல்” என நரி சொன்னது.
“நான் மரத்துலேர்ந்து bungee jumping பண்ணுவேன்” என ஊசலாடியபடியே சொன்னது குரங்கு.
“என் பேச்ச தான் எல்லாரும் கேக்கணும்..நான் தான் காட்டுக்கே ராஜா” என கெத்தாக சொன்னது சிங்கம்.
குதிரை, மான், புலி, முயல் என அடுத்தடுத்து ஆளுக்கொரு காரணம் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
அக்க்ஷயாவும் குறுக்கே குறுக்கே கேள்வி கேட்டு அவர்கள் உற்சாகத்தை கூட்டினாள். எல்லோரும் சொல்லி முடிக்க, நிகழ்ச்சி முடியும் தருவாயில் நன்முல்லை பெட்டிக்குள் எட்டிப் பார்த்தார். ஒரே ஒரு மாஸ்க் மட்டும் யாரும் எடுக்காமல் விடுபட்டிருந்தது.
“என்ன பசங்களா? யாருக்கும் யானை புடிக்காதா? யானை மாஸ்க்கை யாருமே எடுக்கலை?” என கேட்டுக் கொண்டே மாஸ்க்கை உயர்த்தி பிடித்து காண்பித்தார்.
பிள்ளைகள் அவர்களுக்குள்ளாக பேசிக் கொண்டார்கள்.
பிறகு “மிஸ், அது கொஞ்சம் ஹெவியா இருக்கும்” என ஆரம்பித்தது ஒரு வாண்டு.
“ஆமாம் மிஸ், நாலு காலு, ஒரு வாலு, அப்புறம் ஒரு தும்பிக்கை வேற.. நான் எப்படி மிஸ் பொழுதுக்கும் அது மாதிரியே பேலன்ஸ் பண்ணி நடக்குறது” என ஆடி பாடியபடியே இன்னொரு குட்டி சொன்னது.
மொத்த க்ளாஸும் கொல்லென சிரிக்க “சரி, அப்படீன்னா அதோட தும்பிக்கையை எடுத்திடலாமா? என மாஸ்க்கை லேசாக மடக்கியபடியே கேட்டாள் அக்க்ஷயா.
“ஹ்ம்ம்..இப்போ இது பாக்க யானை மாதிரியே இல்லையே?” என முகத்தை சுளித்தான் ஒரு பையன்.
“சரி, தும்பிக்கை இருக்கட்டும். ஆனா அது அழகுக்காக இருக்குன்னு நெனைக்குறீங்களா? இது இல்லேன்னா இந்த யானை என்ன பண்ணும்?” என தொடர்ந்தாள் அக்க்ஷயா.
“மிஸ், அதனால மர கட்டைய தூக்கவே முடியாது”
“அதனால மர கிளையை ஒடச்சி சாப்பிட முடியாது, மிஸ்”
“அது எப்புடி மிஸ் தண்ணி அடிச்சி விளையாடும்?” என அடுத்தடுத்து பதில்கள் வந்தது.
“இப்போ புரியுதா பசங்களா? ஒருத்தர் கிட்ட நாம குறையா பாக்குற விஷயம் தான், பல விஷயங்கள்ல நன்மையா இருக்குன்னு” என கேட்டாள் அக்க்ஷயா.
எல்லோரும் ஒரு சேர மண்டையை ஆட்டினார்கள்.
“யானைங்க ரொம்ப புத்திசாலிங்க பசங்களா. ரொம்ப தூரத்துல இருக்குற யானைங்கள்கூட கண்ணுக்குத் தெரியாம தகவல் சொல்லிக்குவாங்க. சத்தம் மூலமாவும், நில அதிர்வை உணர்ந்தும்கூட பேசிக்குவாங்க” என தொடர்ந்தார் நன்முல்லை.
“மிஸ்.. அப்போ இது ஒரு மாதிரி டெலிபதியா?” என ஒரு குட்டி விஞ்ஞானி கேட்டது.
“ம்ம். அதை டெலிபதின்னு பொதுவா சொல்ல முடியாது. அவங்களோட கூர்மையா கவனிக்கிற திறன், அப்புறம் ஒருத்தரை ஒருத்தர் நன்றாகப் புரிஞ்சுக்கிற குணம் அப்படீன்னு இதெல்லாம் சேர்ந்ததால நமக்குத் டெலிபதி மாதிரி தெரியுது” என விளக்கினார் நன்முல்லை.
அக்க்ஷயாவுக்கு ஒரு முறை மனதிற்குள் மின்னல் வெட்டியது.
“ஒரு விலங்கினை அதன் ஒரு குணத்தாலோ அல்லது அதன் ஒரு உருவ அமைப்பினாலோ நாம் பார்க்கும் கோணமே இவ்வளவு வித்தியாசப்படும்போது, ஒரு மனிதனை மட்டும் அவனின் ஒரு குணத்தையோ அல்லது செயலையோ மட்டும் எப்படி அளவுகோலாக எடுத்துக் கொண்டு எடை போட முடியும்? என தன்னை தானே கேட்டுக் கொண்டாள்.
“ஒரு நிமிஷம் மிஸ்” என நன்முல்லையிடம் சொல்லி விட்டு லைப்ரரியின் வெளியே இருந்த பெஞ்சில் வந்து உட்கார்ந்தாள்.
பாஸ்கரும் இப்படித்தான். எல்லோர் மீதும் அன்பும், பல நல்ல குணங்களும் கொண்டவர். ஆனால் அவர் மனம் விட்டு பேசாததும், நெருக்கடியான காலகட்டங்களில் ஆறுதல் சொல்லாததும் அவரின் மீது ஒரு வெறுப்புணர்வை தனக்கு அளிப்பதாக அவளுக்கு தோன்றியது.
ஆறுதலாக பேச தெரியாதது பாஸ்கரின் குறைதான். ஆனால் அந்த ஒரு குறையை வைத்து ,அவர் காட்டும் மொத்த அன்பையும் புறந்தள்ளி விட முடியாது என உணர்ந்தாள்.
அவள் மெலிதாக சிரித்துக் கொண்டே உள்ளே போனாள். “மிஸ், நா இந்த யானை மாஸ்க்கை எடுத்திட்டு போகவா?” என கேட்டு, அதை எடுத்து பையில் வைத்துக் கொண்டு கிளம்பினாள்.
ஒரு கையில் ஜிம் பேகும், மறு கையில் தண்ணீர் பாட்டிலும் இருக்க, கை முட்டியால் டோர் பெல்லை அழுத்தினாள் ரோஸ்மேரி.
“அவுத்து விட்ட மாடு மாதிரி எங்க போயிட்டு வர?” என கதவை திறந்தபடியே கேட்டான் அருண்.
ஒரு கணம் சுற்றுமுற்றும் பார்த்தாள் அவள். யாரும் வெளியில் இல்லை. உள்ளே நுழைந்து ஷூவை கழட்டி ஸ்டாண்டில் வைத்து விட்டு ஹாலில் வந்து உட்கார்ந்தாள்.
ஒன்பது வயது பென்னி ஓரக்கண்ணால் பார்த்தபடியே வீட்டுப்பாடம் எழுதி கொண்டிருந்தது.
“சுஜியோட நாத்தனார பொண்ணு பாக்க சேலத்துலேர்ந்து மாப்பிள்ளை வீட்டுக்காரங்க சாயங்காலம் வராங்களாம். அவ மாமனார் மாமியார் ரெண்டு பேரும் வீட்டுக்கு வந்து நம்மள வர சொல்லி கூப்டுட்டு போனாங்க. இன்னைக்கு காந்தி ஜெயந்தி, பப்ளிக் ஹாலிடே, அதனால எல்லாரும் வீட்ல இருப்போம்னு சொல்லிட்டு போக வந்தாங்களாம். நீ என்னடான்னா ஊர் மேஞ்சிட்டு வர?” என கத்தினான் அருண்.
சுஜி அருணின் பெரியப்பா மகள். அருணை விட எட்டு வயது மூத்தவள். இருவரும் ஒரே ஏரியாவில் குடியிருப்பதால் இரு குடும்பங்களுக்கும் நெருக்கம் அதிகம்.
“காந்தி ஜெயந்தி அன்னைக்கு டாஸ்மாக்கு தான் மூடி இருக்கும். ஜிம்முக்கு போறதுக்கு என்ன பிரச்சினை?” என கால் விரல்களை நீவி விட்டபடியே கேட்டாள் ரோஸ்மேரி.
அருணுக்கு அஹிம்சை முறையில் அடி வயிற்றில் கத்தியை இறக்கினாள் அவள்.
“இன்னைக்கு வராங்கன்னு தெரிஞ்சு தானே காலைல பேட்மிட்டன் விளையாட போகாம வீட்ல இருந்தீங்க? நான் கிளம்பும் போதே சொல்லி இருந்தா வீட்லயே இருந்திருப்பேன்ல?” என தொடர்ந்தாள் ரோஸ்மேரி.
பென்னி எழுதுவதை நிறுத்தி விட்டு டேபிளில் தலையை குனிந்து கொண்டது.
“ஏன் மேடம் மேனேஜர் போஸ்ட் பந்தாவ எல்லாருகிட்டயும் காட்டுவீங்களா? ஸ்லாட் புக் பண்ணிட்டு வந்தா தான் உங்களை பாக்க முடியுமோ?” என இழுத்தான் அருண்.
“பென்னி, கெவின் வீட்டுக்கு போய் பழைய பேப்பர் கொஞ்சம் வாங்கிட்டு வா. மத்தியானம் ஆக்ட்டிவிட்டி பண்ணலாம்” என சொல்லி விட்டு குளிக்க போனாள்.
பாத்ரூமிற்குள் நுழைந்து தாளிட்டதும், ரோஸ்மேரி வேகமாக ஆடைகளை களைந்து ஹாங்கரில் போட்டாள்.
தலையிலிருந்து கால் வரை தன் மீது வீசப்பட்ட வார்த்தை அழுக்குகள் போக அப்படியே ஷவரில் நின்று கொண்டிருந்தாள்.
“அவுத்து விட்ட மாடு மாதிரி எங்க போயிட்டு வர?” என்ற வார்த்தைகள் அவளை கடும் கோபத்துக்கு ஆளாக்கி இருந்தன.
இதற்கு அழுகை தேவையில்லை என தனக்கு தானே சொல்லிக் கொண்டாள். முதல் நாளே இந்த காட்சிக்கான ஒத்திகை வேறொரு மனதில் நடந்திருக்கிறது. அது இன்று அரங்கேற்றப் பட்டிருக்கிறது.
சமீபமாய் கற்றுக் கொண்ட, மொத்த கெட்ட வார்த்தைகளையும் வரிசையாக சொல்லிப் பார்த்தாள். சற்றே திருப்தியாக இருந்தது.
குழாயை நிறுத்தி தலை துவட்டியபடியே இந்த நாளை எப்படி கடப்பது என யோசித்தாள். குளித்து விட்டு வெளியே வந்தவுடன் “அம்மா, சுஜி அத்தை போன் பண்ணி இருக்காங்க” என ஓடி வந்தான் பென்னி.
“ரோஸ், அஞ்சு மணிக்கு வந்துடும்மா. கனி ஹெவி மேக்கப் எல்லாம் வேணாம், பார்லர் போக மாட்டேன்னு சொல்லுது. நீ கொஞ்சம் சீக்கிரம் வந்து மைல்டா டச்சப் பண்ணி விட்டுடுமா. அப்புறம், ஒரு இருபத்தியஞ்சு டிபன் நைட்டுக்கு ஆர்டர் பண்ணி இருக்கோம். அதனால் நீ எதுவும் செய்யாத” என சரளமாக பேசிக் கொண்டே போனாள் சுஜி.
“சரிங்க அண்ணி, வந்துடறேன்” என சில வார்த்தைகள் பேசி விட்டு போனை வைத்தாள் ரோஸ்மேரி.
ட்ரையர் போட்டு தலையை காய வைத்து விட்டு, “பென்னி, பேப்பர், சிசர் எல்லாம் எடுத்துட்டு வா” என கூப்பிட்டாள்.
வெறும் கையேடு பென்னி வந்து மடியில் உட்கார்ந்து கொண்டான்.
“நீ சேடா இருக்கியா?” என்றான்.
“சேடா இல்ல..வார்மா இருக்கேன். தலைக்கு சூடா ட்ரையர் போட்டிருக்கேன் இல்ல?” என கண் சிமிட்டி சிரித்தாள்.
“இல்லை, டாடி பேசினது rudeமா” என்றான்.
“May be அவர் ஏதாவது டென்க்ஷனா இருந்திருப்பார். Its okடா ” என்றாள் அவள்.
பென்னி எழுந்து போவதாய் இல்லை. “டைமாகுது பாரு. சாயந்திரம் அத்தை வீட்டுக்கு போயிடுவோம். எல்லாத்தையும் எடுத்துட்டு வா” என சொல்லி அனுப்பினாள்.
சற்று நேரத்தில் மீண்டும் மீதும் சுஜியின் போன் வந்தது. “சாரி ரோஸ். அருண் அப்படி உன்கிட்ட பேசி இருக்கக் கூடாது. அம்மா போன் பண்ணி சொல்லி வருத்தப்பட்டாங்க. நான் நைட் அவன்கிட்ட பேசுறேன்” என சொல்லி விட்டு போனை வைத்தாள்.
எப்படி அத்தை வரை விஷயம் போனது என அவளுக்கு புரியவில்லை. கால் லாக் செக் செய்ததில் அத்தையின் போன் வந்தது தெரிய வந்தது அவளுக்கு.
“பென்னி, இங்க வா” என கூப்பிட்டாள்.
“பாட்டி போன் பண்ணாங்களா?” என கேட்டாள்.
“ஆமாம். நீ பாத்ரூம்ல இருந்த. அதான் நான் அட்டென்ட் பண்ணி பேசுனேன்” என்றான்.
“அவங்க என்ன கேட்டாங்க? நீ என்ன சொன்ன?” என கேட்டாள்.
“அம்மா கிட்ட அர்ஜெண்டா பேசணும், போன குடுடான்னு சொன்னாங்க. நான் அவுத்து விட்ட மாடு இப்போ குளிக்குதுன்னு சொன்னேன்” என குண்டை தூக்கிப் போட்டான்.
“பென்னி..” என அவனை தீர்க்கமாய் பார்த்தாள் ரோஸ்மேரி.
“எனக்கு குட் மேனர்ஸ், பேட் மேனர்ஸ் நீதான் சொல்லி தர்ற. அவருக்கு அவங்க மம்மி தான சொல்லி தரணும்?” என நீட்டி முழக்கி பேசியது.
“பென்னி, அப்பா பேசினது தப்பு தான். ஆனா அது நம்ம பேமிலி மேட்டர். இனிமே இந்த மாதிரி அதிகப்ரசங்கி வேலை எல்லாம் பாக்காத. புரியுதா?” என்றாள்.
அவன் முழித்தபடியே, “பாட்டியும் நம்ம பேமிலி தானே?” என்றான்.
நாலு சுவரை தாண்டியவர் அவர் என எப்படி சொல்லி விளங்க வைப்பது என அவளுக்கு தெரியவில்லை.
“இங்க பாரு, பாட்டி, தாத்தா, அப்புறம் அத்தை எல்லாம் நம்ம பேமிலி தான். ஆனா இந்த வீட்டுக்குள்ள நாம மூணு பேரு மட்டும் தான் இருக்கோம். அதனால இனிமே வீட்டுக்குள்ள நடக்குற பர்சனல் விஷயங்களை எல்லார் கிட்டேயும் பேசிகிட்டு இருக்காத? புரியுதா?” என அதட்டினாள்.
ராஜமாதா கனி மேக்கப் விஷயமாக பேச போன் போட்டு இருப்பார். பென்னி நடந்தை சொல்ல, உடனே சுஜிக்கு சொல்லி இருக்கிறார். “அவன் காலைலயே ஏதோ ஏடாகூடமா பேசி வெச்சிருக்கான். நீ போன் போட்டு அவளை சமாதானப்படுத்து” என ரிலே செய்திருக்கிறார். இதற்குள் எதார்த்தமாக சுஜி பேசி விட, மீண்டும் போன் செய்து சாரி சொல்லி இருக்கிறாள்.
வாரம் முழுக்க வேலை செய்து விட்டு சனி ஞாயிறு ரிலாக்ஸ் செய்யலாம் என்றால், ஏதாவது ஒரு ஏழரை வந்து நிற்கிறது என நினைத்துக் கொண்டாள்.
பென்னியை மடை மாற்றி craft செய்து முடிக்கும் போது ஒரு மணி ஆனது. மீண்டும் ராஜமாதாவின் போன்.
“சொல்லுங்க அத்தை” என்றாள்.
“இல்ல, அவனுக்கு போன் போட்டேன். ரிங் போகுது, ஆனா எடுக்கலை…” என இழுத்தார்.
“போன சார்ஜுல போட்டுட்டு வெளில போய் இருக்கார் அத்தை” என்றாள்.
“சாப்ட்டீங்களாம்மா, மணி ஒண்ணாகுதே? இன்னிக்கு என்ன சமையல்?” என கேட்டார்.
வானிலை எப்படி இருக்கிறது என தெரிந்து கொள்ளும் ஆர்வம். ஆதர்சனத்தின் லட்சணத்தை அறிந்து கொள்ளும் ஆவல்.
“ஹா, சாம்பார், மீன் வறுவல் அப்புறம் அவருக்கு முட்டை பொடிமாஸ் செஞ்சிருக்கேன். சாப்பிட்டு கொஞ்ச நேரம் படுக்க போறேன். அப்போதான் சாயங்காலம் ப்ரெஷ்ஷா இருக்கும்” என நார்மல்சி ரசத்தை சொட்ட விட்டாள் ரோஸ்மேரி.
ராஜமாதாவுக்கு படு திருப்தியாக இருந்தது. நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என புளகாகிதம் அடைந்தார்.
“படு..படு. நல்லா ரெஸ்ட் எடு. வாரம் முழுக்க வேலைல டென்க்ஷனா இருந்திருப்ப” என ஸ்லோவாய் ரிவர்ஸ் கியரில் நகர்ந்தார்.
ரோஸ்மேரி லேசாக ஒரு தடவை தலையை உலுக்கிக் கொண்டாள். இந்நேரம் அவள் சாப்பிட்ட பிறகு தூங்க போகும் செய்தி மூன்று நான்கு பேருக்கு போய் சேர்ந்திருக்கும். அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கண்டிப்பாய் எந்த போனும் வராது.
பென்னியும் அவளும் சாப்பிட்டு முடித்த பிறகு, பென்னியை தூங்க வைத்து விட்டு ஹாலுக்கு வந்தாள்.
தொரை சாப்பாட்டுக்கு வரும் களை தெரியவில்லை. மீதம் இருந்த எல்லாவற்றையும் மூடி ப்ரிட்ஜில் வைத்து விட்டு Netflixல் கொரியன் படம் பார்த்தாள். இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை.
படம் முடிந்த பிறகு, எழுந்து பாத்ரூம் போய் விட்டு வந்தாள். கண்ணாடியில் அவள் முகத்தை பார்த்த போது, முகத்தை விட மனம் தான் களைப்பாக இருப்பதாக அவளுக்கு தோன்றியது.
சற்று நேரம் அங்கேயே நின்றவள், ஹாலுக்கு வந்து கெவினின் அம்மாவுக்கு போன் போட்டாள்.
“டெய்சி, நான் கொஞ்சம் lowஆ இருக்கேன். ஒரு பங்க்ஷனுக்கு போகணும். எனக்கு கொஞ்சம் வந்து மேக்கப் பண்ண முடியுமா?” என கேட்டாள்.
“லேவண்டர் ஆர் சாண்டல்? என்ன வேணும்” என கேட்டாள் டெய்சி.
“Anything is fine” என்றாள் ரோஸ்மேரி.
டெய்சி வருவதற்குள் டீ போட்டு வைத்தாள். பென்னியை எழுப்பி ஸ்னாக்ஸ் கொடுத்து விட்டு, அவனுக்கு ட்ரெஸ் அயர்ன் செய்து வைத்தாள்.
கால் மணி நேரத்தில் டெய்சி வர, காலையில் செய்த craftஐ பற்றி பேசிக்கொண்டே ரெண்டு பேரும் டீ குடித்தார்கள்.
அடுத்த அரை மணி நேரத்தில் face massage மற்றும் லைட்டாக மேக்கப் செய்து விட்டு டெய்சி கிளம்ப, பென்னியும் அவளும் ட்ரெஸ் செய்து கொண்டு கிளம்பினார்கள்.
“வெளில போனா, ஒரு போன் பண்ணி எப்போ வருவீங்கன்னு கேக்க மாட்டியா?” என்றபடி உள்ளே வந்தான் அருண்.
“பென்னி, நீ போய் பார்க்கிங்க்ல இரு, நான் bag எடுத்துக்கிட்டு ரெண்டு நிமிஷத்துல வரேன்” என சொல்லி முதல் வேலையாக பென்னியை pack செய்தாள்.
“போன வீட்ல வெச்சிட்டு போயிட்டீங்க. அப்புறம் என்ன கேள்வி இது?” என குழப்பமாக கேட்டாள் ரோஸ்மேரி.
“ஹா, போன் இருந்தா மட்டும் பத்து போன் லைனா போட போறியா? சுதன் wife அவன் போன் எடுக்கலேன்னா, ஒடனே எனக்கு போடுவாங்க. அண்ணா, சுதன் உங்க கூட இருக்காரா? மத்தியானம் சாப்பிட்டாரான்னு அவ்ளோ அக்கறையா கேப்பாங்க” என குதித்தான்.
காலையிலே இந்த காட்சிக்கான ஒத்திகை அவன் மனதில் நடந்திருக்கிறது. அது இப்போது அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
இந்த instant அண்ணன் தங்கச்சி விஷயத்தில் ரோஸுக்கு உடன்பாடில்லை. இது தேவையில்லாத ஆணி என தோன்றியது. மைண்டுக்குள் ஹீட்டர் switch நிறுத்தினோமா என யோசித்தாள். நிறுத்தியிருந்தால் நல்லது என நினைத்துக் கொண்டாள்.
“சுதன் பொண்டாட்டி, மதன் பொண்டாட்டி கதையெல்லாம், இந்த மன்மதன் பொண்டாட்டிக்கு தேவையில்லை. ஏற்கனவே பென்னி அத்தை கிட்ட கொளுத்தி போட்டிருக்கான். இதுல லேட்டா போனீங்கன்னா, இன்னிக்கு செத்தீங்க. நாங்க கெளம்புறோம். சீக்கிரம் வந்து சேருங்க” என சொல்லி விட்டு கிளம்பினாள் ரோஸ்.
மத்தியானம் நேரத்தோடு வந்து, காதல் தூவி செய்யப்பட்ட முட்டை பொடிமாஸ் சாப்பிட்டு தூங்கி எழுந்திருந்தால், இல்லை கூட உட்கார்ந்து அந்த கொரியன் படத்தை பார்த்திருந்தால் கூட, இந்நேரம் “அவுத்து விட்ட மாடு” கூலாகி இருக்கும்.
சும்மா நசநசவென்று பேசிக் கொண்டிருப்பது அவளுக்கு காண்டாக இருந்தது.
அருண் போய் குழாயை திறக்க, சில்லென்று தண்ணீர் கொட்டியது. டவலை சுற்றிக் கொண்டு, ஹீட்டர் ஆன் செய்துவிட்டு போய் சேரில் உட்கார்ந்து கொண்டான். பசி வேறு வயிற்றை கிள்ளியது.
பிரிட்ஜை திறந்து பார்த்தால் முட்டை பொடிமாஸ் அம்சமாக உட்கார்ந்திருந்தது.
பத்து நிமிடத்தில் அவசர அவசரமாக குளித்து ரெடியாகி வந்து, எல்லவற்றையும் சூடு செய்து சாப்பிட்டு முடித்தான். மம்மிஜியின் போன் வந்தது.
“சொல்லுங்க மம்மி” என்றான்.
“சம்மந்தி வீட்டுக்கு பங்ஷனுக்கு நேரத்தோட வரணும்ங்கிற அறிவு கிடையாதா உனக்கு? உன் பொண்டாட்டியும் புள்ளையும் வந்துட்டாங்க. மச்சான் ரொம்ப பிஸியான்னு சுஜி வீட்டுக்காரர் நக்கலா கேக்குறார்? ” என காய்ச்சி எடுத்தார் ராஜமாதா.
“அவ ஏன் சீக்கிரம் போகணும்?” என குதர்க்கமாய் கேட்டான் அருண்.
“நான் தான் அவளை சீக்கிரம் வர சொன்னேன். என்ன மயிருக்கு போன வீட்டுல வெச்சிட்டு வெளியில சுத்துற? காலைலேர்ந்து உனக்கு ட்ரை பண்றேன். இப்போ வந்து சவகாசமா கேக்குற?” என பொரிந்து தள்ளினார்.
மாமாவை கூல் படுத்த ஹெவி பர்பார்மென்ஸ் வேறு கொடுக்க வேண்டும். மினுக்காக சுற்ற முடியாது. தன்னை தானே திட்டிக் கொண்டே கிளம்பினான் அருண்.
அருணுக்காக சுஜி வீட்டு வாசலிலேயே காத்திருந்தார் மம்மிஜி.
“வளர்ந்த புள்ளைய வெச்சிக்கிட்டு பேசுற பேச்சாடா இதெல்லாம்? என அபத்தமாக ஆரம்பித்தார்.
“என்ன பெருசா சொல்லிட்டேன்? எந்த வீட்டுலயும் பேசாததா?” என பம்மலாக சொன்னான் அருண்.
“வாய ஒடச்சிடுவேன், ஜிம்முக்கு போயிட்டு வந்தவளை எதுக்கு வம்பிழுத்த? சுஜி நேத்தே உன்கிட்ட சொல்லி அனுப்பிச்சாளா, இல்லியா? இன்னைக்கு காலைல அவங்க அத்தை மாமா வீட்டுக்கு வருவாங்கன்னு? நீ சொல்லியிருந்தா அவ வீட்லயே இருந்திருப்பா, இல்லியா?” என கொக்கியை போட்டார்.
அருண் பேசாமலிருக்க, “பசங்க எல்லாருக்கும் நல்ல இடம் அமையணும்னு அவங்கவங்க வேண்டிக்கிட்டு இருக்காங்க. அப்படியே அமைஞ்சாலும், அதுக்கப்புறம் நல்ல வேலை, புள்ளை குட்டின்னு இருக்கணும்னு நாங்க சாகுற வரை அல்லாடிக்கிட்டு இருக்கோம். நல்லா போகுற வாழ்க்கைல, வம்படியா பேசி விளையாடிகிட்டு இருக்குற நீ. பாத்து நடந்துக்க, எந்த பொண்ணும் கண்ட கண்ட பேச்ச சகிச்சிக்கிட்டு குப்பை கொட்டுறது இல்ல இந்த காலத்துல” என பரேடு விட்டார் மம்மிஜி.
வாசலிலேயே tarbulanceஇல் சிக்கி சின்னாபின்னமாகி உள்ளே வந்தான் அருண். சுஜி கேவலமாக பார்த்து விட்டு உள்ளே போக, அவன் லேட்டாக வந்த கோபத்தில் மாமாவும் முகம் கொடுத்துப் பேசவில்லை.
அடுத்த இரண்டு மணி நேரம் அருண் பம்பரமாக சுழன்று சுழன்று வேலை செய்தான். தம்பியென்று ஒருத்தன் இருந்தால், அது சுஜிக்கு அருண் இருப்பது போல இருக்க வேண்டும் என மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் கிளம்பும் போது சர்டிபிகேட் கொடுத்தார்கள்.
“மம்மி, ஜோயல் எங்க? நான் வந்ததிலிருந்து அவனை பாக்கலை” என கேட்டான் அருண். ஜோயல் சுஜியின் மூத்த மகன். பத்தாம் வகுப்பு படிக்கிறான்.
“அவன் இன்னிக்கு basketball டீம் செலக்சனுக்கு போய் இருக்கான்” என பெருமையாக சொன்னார் மம்மிஜி.
பெண் பார்க்கும் படலம் நல்ல படியாய் முடிந்து எல்லோரும் கிளம்ப, பென்னி போய் ரோஸ்மேரியின் மடியில் உட்கார்ந்து கொண்டான்.
“மா, நான் ஒண்ணு பாத்தேன், உன்கிட்ட சொல்லணும்” என அவள் காதருகே வந்து சொன்னான்.
ரெண்டு பெரும் எழுந்து போய் போர்டிகோவில் இருந்த ஊஞ்சலில் உட்கார்ந்தார்கள்.
“சொல்லுடா?” என கேட்டாள் ரோஸ்.
“நம்ம கனி சித்திய பாக்க இப்போ ஒரு அங்கிள் வந்தாரே, அவரு ரொம்ப poorஆ, மா? என கேட்டான்.
“ஏண்டா?” என வியப்பாக கேட்டாள்.
“சொல்லேன், உண்மையா அவரு நல்ல கம்பெனில தான் வேலை செய்யுறாரா?” என தொடர்ந்தான்.
“டேய், அவருக்கு சொந்தமா பிளாட், கார், பைக் எல்லாம் இருக்கு. நல்ல வசதியாதான் இருக்காரு. இப்போ என்ன உனக்கு?” என அலுத்துக் கொண்டாள் ரோஸ்.
பென்னி அமைதியாக உட்கார்ந்திருந்தான். “சரி சொல்லு, அவரு ஏன் poorஆ அப்படீன்னு என்கிட்டே கேட்ட?” என விடாமல் கேட்டாள்.
“அம்மா, இங்க பாரு, நீங்க எல்லாரும் வாசல்கிட்ட போய் அவங்க கார்ல ஏறும் போது பேசிக்கிட்டு இருந்தீங்களா? அப்போ அவரு உள்ள போய் சித்திகிட்ட தனியா bye சொல்லிட்டு வந்தார்” என டீடைலை சொன்னான்.
“சரிடா, அதுக்கென்ன?” என்றாள்.
“அவர் bye சொல்லிட்டு கதவுகிட்ட வந்து சேர்ல உக்காந்து ஷூ மாட்டும் போது நான் அவரை பாத்துகிட்டு தான் இருந்தேன். அவர் ரெண்டு சாக்ஸுலயும் ஓட்டை இருந்துது” என அப்பாவியாய் சொன்னான் பென்னி.
ரோஸுக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. கண்ணில் நீர் வர சிரித்து முடித்தாள்.
“அவரு poorஆ ம்மா? நம்ம சித்திய நல்லா பாத்துக்குவாரா?” என கேட்டான்.
இது தான் கார்ப்பொரேட் வாழ்க்கையின் பகுமானம் என எப்படி சொல்லி அவனுக்கு புரிய வைப்பது என தோன்றியது ரோஸுக்கு.
“இல்லடா பென்னி, அவர்கிட்ட பணம் தேவையான அளவுக்கு இருக்கு. ஆனா தனக்கு என்ன செஞ்சிக்கணும்னு அவருக்கு தெரியல” என சொன்னாள்.
“அது அவர் பர்சனல் ஐட்டம்டா. யாரும் பாக்க போறதில்லைன்னு நெனச்சு அவர் use பண்ணிக்கிட்டு இருக்காரு. இல்ல கெளம்புற அவசரத்துல, எது கெடச்சுதோ அதை போட்டுக்கிட்டு அலட்சியமா வந்திருப்பாரு” என அவனை சமாதானப்படுத்தினாள்.
“யாரும் பாக்க போறதில்லைன்னா, இது மாதிரி கண்டதை போட்டுக்கிட்டு வரலாமாம்மா?” என ஆதங்கமாய் கேட்டான்.
“தப்பு தாண்டா. இங்க பாரு, யாரை பத்தியும் உடனே முடிவு பண்ண கூடாது. நான் சுஜி அத்தை கிட்ட சொல்லி நல்லா விசாரிக்க சொல்றேன்” என அவனை ஒரு மார்க்கமாய் செட்டிங் செய்தாள்.
இரவு சாப்பாடு முடிந்து எல்லோரும் கிளம்ப தயாரானார்கள். ரோஸ் சுஜியிடம் தனிப்பட்ட முறையில் பென்னியின் அப்சர்வேஷனை சொல்லி மீண்டும் ஒரு முறை தீர விசாரிக்க சொன்னாள்.
சுஜிக்கும் இது ஒரு red flag ஆக இருந்தது. “பணம் காசு இருக்கிறது இருக்கட்டும், பையன் எப்படின்னு இன்னும் கொஞ்சம் க்ளோஸ் சர்க்கிள்ள தீவிரமா விசாரிக்கணும்” என தீர்க்கமாய் சொன்னாள்.
சற்று நேரத்தில் வீட்டு வாசலில் ஆட்டோ சத்தம் கேட்டது. ஜோயல் செலக்சன் முடிந்து ஒரு கையில் பேகும், மறு கையில் வாட்டர் பாட்டிலும் இருக்க, கை முட்டியால் டோர் பெல் அடித்தான்.
“அவுத்து விட்ட மாடு மாதிரி எங்க போயிட்டு வர?” என கதவை திறந்தபடியே கேட்டான் பென்னி.
ஹாலில் இருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போக, “டேய், என்னடா பேச்சு இது?” என அதட்டினான் அருண்.
“அம்மா வெளில போயிட்டு லேட்டா வந்தா, நீங்க இப்படி தானே சொல்வீங்க?” என அருணிடம் கேட்டான் பென்னி.
கோல்கப்பா : என்ன குமாரி, ஆட்சி மாறுனா காட்சி மாறும்ன்னு பாத்தா இந்த மாதிரி நடக்குது?
பூரி குமாரி : காட்சி மாறலீங்க! சாரை சாரையா கட்சி மாறுறதுதான் நடக்குது!
கோல்கப்பா : ஹம்ம்..இது not good-ka!
பூரி குமாரி : ஆமாம் bro, இது very wrong bro!
கோல்கப்பா : தொடவும் மாட்டோம், தொட்டவுங்களையும் விட மாட்டோம்னு கொஞ்ச நாளைக்கு முன்னால ஒரு வீர வசனம் ஒலிச்சுதே, நீ கேட்டியா அதை?
பூரி குமாரி : ஒலிச்சு என்ன பிரயோஜனம் கோல். பலிச்சிருந்தா பாராட்டலாம். பல்லிளிச்சா என்ன சொல்றது?
கோல்கப்பா : புதுசா வந்தவருன்னு பாக்காம, மக்கள் boss பொறுப்பை குடுத்து, கோட்டைக்கு அனுப்பி இருக்காங்க, ஆனா பொது சுகாதாரத்துல விளையாடுனவருக்கு green pass குடுத்து கட்சிக்குள்ள சேத்தத எந்த வகையில நியாயப்படுத்த போறாங்கன்னு தெரியல?
பூரி குமாரி : எனக்கென்னமோ, மக்கள் சக்தி மட்டும் தான் தூய சக்தின்னு சொல்லிக்குற அருகதை இருக்குற ஒரே சக்தியா படுது! அந்த தூய சக்தி, ஆட்சியாளர்கள் பின்னால பெருந்திரளா போனதாலதான், இந்த வெற்றி அவங்களுக்கு கை கூடி இருக்கு. ஆனா, ஆட்சியை தக்க வெச்சுக்க, ஒரு சில இடங்கள் மட்டுமே குறையுற நெலமையுல, இப்படி குற்ற பின்னணி உள்ளவர்களை கட்சியில் சேர்ப்பது எனக்கு ஒரு குறளை நினைவுபடுத்துகிறது கோல்.
இதன் பொருள் என்னன்னா, “ஒருவனுக்கு நல்ல இனத்தைக் காட்டிலும் பெரிய துணையும் இல்லை; தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தருவதும் இல்லை”.
கோல்கப்பா : அருமை குமாரி. பல விஷயங்களில் மாற்றம் என்பதை முன்னெடும் இந்த அரசுக்கு, குற்ற பின்புலம் இருப்பவர்களை அரவணைத்து செல்லும் இந்த போக்கு, ஒரு மிக பெரிய சறுக்கல் தான் குமாரி.
பூரி குமாரி : ஆமாம் கோல். இதை தான் வள்ளுவர் “இறைமாட்சி” அதிகாரத்தில், ஒரு அரசன் எப்படிப்பட்ட குணங்களைக் கொண்டிருக்க வேண்டும், எவ்வாறு நீதி, அறிவு, துணிவு, குடிமக்கள் நலம் ஆகியவற்றைப் பேண வேண்டும் என்பதைக் கூறுகிறார்.
அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா மானம் உடைய தரசு
இந்த குறளுக்கு, “அரசநெறியிலிருந்தும் வழுவாமலும், நெறியல்லாதவைகளை நாட்டை விட்டு நீக்கியும், மறமாட்சியில் தாழ்ச்சியின்மை என்னும் மானமும் உடையவனே அரசன்” என புலியூர் கேசிகன் அவர்களின் உரை கூறுகிறது.
கோல்கப்பா : “தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் ” என வாழ்த்துரை சொல்லி இவர்களை சேர்க்கும் அளவிற்க்கா இவர்களின் உழைப்பு இருந்திருக்கிறது? மாசற்ற சக்தியாக புதியவர்கள் வந்திருக்கிறார்கள் என நம்பி வாக்களித்த மக்களுக்கு இவர்கள் கொடுக்கும் கூலி இது தானா குமாரி?
பூரி குமாரி : பொருத்தமாக சொன்னீர்கள் கோல். எதிரியும் எதிரியும் சேர்ந்து ‘புடலங்கா” கூட்டணி அமைக்கிறார்கள் என ஒரு மாண்புமிகு சொல்லி இருக்கிறாரே, கவனித்தீர்களா கோல்?
கோல்கப்பா : அவங்க புடலங்கா கூட்டணி அமைச்சா,அதை மக்கள் பாத்துக்குவாங்க! இவங்க தடபுடலா குட்காமேன கட்சில சேத்ததுக்கு தான் பதில் சொல்லணும் குமாரி.
பூரி குமாரி : “தேர்தல் அரசியல் தெரிந்த ஆட்கள் தேவை” என்பதால் தான் சேர்த்தோம் என சொல்கிறார்களே கோல்?
கோல்கப்பா : தேர்தல் அரசியல் தெரிந்த ஆட்களுக்கு, டாட்டா சொல்லி அனுப்பியதும் இதே மக்கள் தான் என்பதை எவ்வளவு சவுகரியமாக மறந்து விட்டார்கள் பார்த்தியாடி?
பூரி குமாரி : முலாம் பூசிய வார்த்தைகளை, காலம் எப்போதும் குறித்து வைத்துக் கொள்ளும் கோல்.
கோல்கப்பா : “ஒரு பேரே வரலாறு” என்ற தலைவரின் கனவை மெய்ப்பித்த மக்களுக்கு, கட்சியில் சேர வருபவர்களின் வரலாறையும், அவர் கொஞ்சம் ஆராய்ந்து சேர்த்துக் கொள்வது தான் தக்க கைமாறாக இருக்க முடியும் குமாரி.
பூரி குமாரி : முத்தாய்ப்பாக ஒரு கருத்தை தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள் கோல். மக்களே, இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். Bye.