சரண்யாவின் கணவர் மோகன் குடும்ப பொறுப்பு இல்லாமல் இருப்பவர். நான்கு ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறார்கள். சிற்பிகுமார் என்ற எட்டாம் வகுப்பு படிக்கும் மகனும், சித்திர வள்ளி என்ற நான்காம் வகுப்பு படிக்கும் மகளும் இருக்கிறார்கள். கடந்த ஒரு வருடமாக மோகன் அடிக்கடி வீட்டுக்கு வந்து பிள்ளைகளை பார்க்க ஆரம்பித்திருக்கிறார். ஆனாலும் சரண்யாவுக்கு அவர் மீது நம்பிக்கை என்பது முழுதாய் இல்லை. மீண்டும் சேரும் எண்ணம் அவருக்கு இருந்தாலும், கடந்த காலம் தந்த காயம் காரணமாக சரண்யா அவரை ஏற்க தயாராக இல்லை. தன்னால் குழந்தைகள் அவரை பிரிய வேண்டாம் என நினைத்ததால் அவர் வந்து போனால் அமைதியாக இருந்தாள்.
வேலை முடித்து வீடு நோக்கி நடக்க ஆரம்பிக்க போன் வந்தது.
சொசைட்டி செகரெட்டரி மாதுரி மேடம்.
“சரண்யா, நாளைக்கு நம்ம சொசைட்டில டீச்சர்ஸ் டே பங்க்ஷன் இருக்கு. நீ நல்லா பூ கட்டுவேன்னு சங்கு புஷ்பம் மேடம் சொன்னாங்க. ஹால் அலங்காரத்துக்கு, குத்து விளக்கு பூஜைக்கு நெறய பூ வாங்கி இருக்கோம். நீ கட்டி தர முடியுமா?” என சொல்லி ஒரு தொகையை சொன்னார்.
சரண்யாவுக்கு திருப்தியாக இருந்தது அவர் சொன்ன தொகை. நாளைக்கு பசங்களுக்கு லீவ். காலைல எழுந்து சமைக்க வேணாம். இன்று இரவும், நாளை காலையும் பசங்களுடன் சேர்ந்து கட்டினால் இவர்கள் கேட்கும் நேரத்திற்குள் கொடுத்து விடலாம் என தோன்றியது.
“சரிங்க” என்றாள் சரண்யா.
“நம்ம செக்யூரிட்டிய உங்க வீட்டுக்கு வண்டில கொண்டு வந்து தர சொல்றேன்” என சொல்லி போனை வைத்தார் மாதுரி.
மனதிற்குள் சங்கு புஷ்பத்திற்கு நன்றி சொன்னபடியே நடந்தாள் சரண்யா.
“மா, வந்திட்டியா, உனக்காக தான் வெய்ட் பண்ணிட்டு இருந்தேன்” என்றாள் சித்திர வள்ளி.
“இந்தா, நீ கேட்ட சிறுவர் மலர். நேசப்பா தாத்தா குடுத்தனுப்பினார்” என சொல்லி பத்து புத்தகங்களை கொடுத்தாள் சரண்யா.
“ஹை ஜாலி, மூணு நாள் லீவுக்கு போரடிக்காம இருக்கும்” என சந்தோஷமாக சொல்லி சிரித்தாள்.
சற்று நேரம் புத்தகங்களை புரட்டியவள் “மா, நாளைக்கு எங்க ஸ்கூல்ல டீச்சர்ஸ் டே பங்க்ஷன் இருக்கு. நா ட்ராயிங் அண்ட் ஆர்ட் போட்டிக்கு பேரு குடுத்து இருக்கேன். இருநூறு ரூபா குடுமா, சார்ட்டு பேப்பர், பெயிண்ட்டு, அப்புறம் கொஞ்சம் ஆர்ட் சப்ளைஸ் வாங்கணும்” என மெதுவாக கேட்டாள்.
“பணம் மரத்துல வெளயுதா?” என சொல்லி நிறுத்தினாள் சரண்யா.
“மா, ப்ளீஸ் மா, நா நல்லா ப்ராக்ட்டிஸ் பண்ணி இருக்கேன். கண்டிப்பா ப்ரைஸ் வாங்கிடுவேன் என கொஞ்சலாய் சொன்னாள் சித்திர வள்ளி. “பத்து ரூபா நீ சம்பாதிக்கும் போது உனக்கு அந்த கஷ்டம் தெரியும். சும்மா பெயிண்டுக்கு, சார்ட்டுக்குனு காசு கேக்காதே. தட்டுக்கு சோறு வருதா அதுக்கு சந்தோஷப்படு” என கடு கடுத்தாள் சரண்யா.
சித்திர வள்ளிக்கு கன்னத்தில் கண்ணீர் சித்திரம் வரைய ஆரம்பித்தது.

ஏற்கெனவே டிஷ் வாஷர் சோகத்தில் இருந்த சரண்யாவுக்கு எக்ஸ்டரா செலவு எரிச்சலை கிளப்பியது.
“நாளைக்கு நீ ஒண்ணும் ஸ்கூலுக்கு போக வேணாம். இன்னும் கொஞ்ச நேரத்துல செக்யூரிட்டி பூ கொண்டு வந்து தருவார். நீயும் அண்ணனும் எனக்கு ஹெல்ப் பண்ணுங்க” என சொல்லி விட்டு சமைக்க ஆரம்பித்தாள் சரண்யா.