” மா, சீவல் எங்கம்மா? என்றபடியே வந்தான் சிற்பி குமார்.
“அவ எம்மேல கோவமா இருக்காடா” என விஷயத்தை சொன்னாள் சரண்யா.
“மா, கேட்டா கோச்சுக்காதே, அவ நல்லா ஆர்ட் பண்றாம்மா. இந்த ஒரு தடவை வாங்கி குடும்மா, ப்ளீஸ்” என்றான் சிற்பி.
“இன்னும் ஒரு மாசம் கழிச்சி திரும்ப வருவீங்க. தீபாவளிக்கு என்ன பண்ணலாமுன்னு, ஒரு செலவாவா இருக்கு இந்த வீட்ல” என சலித்துக் கொண்டாள் சரண்யா.
சிற்பிக்கு சங்கடமாக இருந்தது. இருந்தால் அம்மா கொடுத்து விடுவாள். இவ்வளவு கெஞ்சி கேட்கும் வரை விடமாட்டாள். ஆனால் சீவலை எப்படி சமாதான படுத்துவது என யோசித்தான்.
“போய் கூட்டிட்டு வா அவளை, சாப்பிட்ட பிறகு பூ கட்டணும் எல்லாரும்” என்றாள் சரண்யா.
வீட்டில் எங்கேயும் சீவல் இல்லை. அவள் எங்கு இருப்பாள் என சிற்பிக்கு தெரியும்.
பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் உள் பக்கமாய் ஒரு குட்டி திண்ணை இருக்கும். அங்கே போய் பார்த்தான்.
சீவல் அழுது அழுது முகம் பெரிதாகி உட்கார்ந்திருந்தது.
“இங்க வா” என அதை தூக்கி மடியில் உட்கார வைத்து கண்ணை துடைத்தான் சிற்பி.
“சீவல், அழாத” என சொல்லி சமாதானப் படுத்தினான்.
என்ன சொல்லி இவள் அழுகையை நிறுத்துவது என யோசித்தான்.
“உண்டிய ஒடச்சிடலாமா? என கேட்டான்.
” ம்ஹூம், வேணாம்” என சொல்லிவிட்டு மீண்டும் ஓ வென அழுதது.
“சரி வா வீட்டுக்கு போலாம். அம்மா கிட்ட சொல்லி இருக்கேன். பூ கட்டிட்டு நைட் திரும்ப கேக்கலாம். குடுத்துட்டா காலைல வாங்கிக்கலாம்” என்றான்.
“இல்ல அம்மா தர மாட்டாங்க” என சொன்னது.
“நா தாமரை பூ மேல சரஸ்வதி வீணையோட உக்காந்திருக்க மாதிரி நாலு நாளா பிராக்டிஸ் பண்ணி நல்லா வந்துடுச்சி. ஷர்மி வீடு “எச் எம்” டீச்சர் வீடு பக்கத்துல தான் இருக்கு. அவ தான் சொன்னா, போன வாரம் டீச்சர் நாலு கட்ட பைல ப்ரைஸ் பொருளுங்க வாங்கி வெச்சிருக்காங்கனு. நா கலந்துக்கிட்டா கண்டிப்பா நாளைக்கு ப்ரைஸ் வாங்கிடுவேன்” என சொல்லி மீண்டும் அழுதது.
“ஓ, அதுக்கு தான் சாமி ரூம்லயே இருந்தியா?” என சிரித்தான் சிற்பி.
பாக்கெட்டில் பார்த்தான். இரண்டு ரூபாய் இருந்தது. பால் வாங்கிய மிச்சம்.
“இரு வரேன்” என சொல்லி கடைக்கு போய் ரெண்டு மிட்டாய் வாங்கி வந்தான்.
“இந்தா, சாப்பிடு. நா அம்மா கிட்ட கேக்குறேன். நீ கேக்காதே. திட்டுனா நா வாங்கிக்குறேன்” என்றான்.
சீவல் அழுகையை தற்காலிகமாக நிறுத்தி மிட்டாயை சாப்பிட ஆரம்பித்தது.
இது தான் சமயம் என சிற்பி ஆரம்பித்தான்.
“நீ தான் origami நல்ல செய்வியே! பேசாம ஆர்ட் போட்டிக்கு அதை செய்யேன்” என மெதுவாய் சொன்னான்.
திரும்ப ஓவென அழ ஆரம்பித்தால் அவ்வளவுதான் என பயந்தான்.
சீவல் தலையை குனிந்து கால் முட்டியில் முகம் புதைத்து கொண்டது.
“சீவல், இங்க பாரு, உனக்கு ஓகேன்னா என்கிட்டே origami பேப்பர் இருக்கு. நா தரேன்” என எப்படியாவது அதை ஒத்துக்கொள்ள வைக்க பாடு பட்டான்.
“தேர்ட் ப்ரைஸே நூறு ரூபாயாம். கூட புக்ஸும் தருவங்களாம்.ஷர்மி சொன்னா” என சொல்லி ரெண்டு சொட்டு கண்ணீர் விட்டது.
நல்ல காலம் சீவல் திரும்ப டேமை தொறக்கல. ரெண்டு சொட்டு பரவாயில்லை என இன்னும் கொஞ்சம் முயற்சி செய்தான் சிற்பி.
“அதெல்லாம் நீ கலக்கிடுவ. origami உனக்கு செமயா வரும். நீ வேணா பாரு, “எச் எம்” டீச்சர் உன்ன கண்டிப்பா செலக்ட் பண்ணிடுவாங்க” என பலமாய் மார்க்கெட்டிங் செய்தான்.
எப்படியாவது சரஸ்வதி ட்ராயிங்கை மறக்கடிக்க வேண்டும் என origami மந்திரத்தை சீவல் மண்டையில் ஏற்றினான்.
“ஆனா எனக்கு origamiல என்ன பண்றதுனு புரியல. நா தான் ப்ராக்டிஸே பண்ணலயே. அது பண்ணா எனக்கு ப்ரைஸ் வராது” என சோகமாய் டிக்ளேர் செய்தது.
சிற்பி கண்ணுக்கு மெல்ல மெல்ல சீவல் மனதில் சரஸ்வதி இவனை முறைத்துக் கொண்டே மறைவது தெரிந்தது. ஆனால் தாமரை மட்டும் பிரகாசமாய் இவனை பார்த்து சிரித்தது.
“சீவல், நீ origamiல lotus பண்ணு. ஒர்க் அவுட் ஆகும்” என குஷியாய் சொன்னான்.
“அப்போ சரஸ்வதிக்கும் வீணைக்கும் என்ன பண்றது?” என குபீரென ஒரு கேள்வியை போட்டது.
“அய்யோ, இவ மண்டைல இன்னும் அந்த படம் மறையலியே” என அங்கலாய்த்து கொண்டான் சிற்பி.
“அதான், நவராத்ரி வர போகுதுல்ல! அப்போ போய் அசெம்ப்ளி போர்டுல வரைஞ்சுடு” என டக்கென்று சொன்னான்.
சரஸ்வதியையும் வீணையையும் பிராக்டிஸ் செய்தது வீணாக போவதில்லை என சீவல் சமாதானம் ஆவது போல தெரிந்தது சிற்பிக்கு.
“இப்போ வரஞ்சேன்னா ஜட்ஜுங்களும் டீச்சருங்களும் மட்டும் தான் பாப்பாங்க. அசெம்ப்ளி போர்டுல வரஞ்சேன்னா மொத்த ஸ்கூலும் பாக்கும். “போர்த் பி சித்திர வள்ளி” னு நீ பேரும் எழுதலாம்” என சொல்ல மிட்டாயோடு சீவலும் கரைய ஆரம்பித்தது.
“டீச்சர்ஸ் டேக்கு எதுக்கு லோட்டஸ் செய்யணும்? சில்ட்ரன்ஸ் டேக்கு ரோஸ் செஞ்சாக்கூட ப்ரைஸ் கிடைக்கும், ஆனா இதுக்கு எனக்கு கிடைக்காது” என எப்போது வேண்டுமானாலும் மீண்டும் டேம் திறக்கும் நிலை.
முடியலடா சாமி என ஆனது சிற்பிக்கு.
சீவல் மண்டையில் முறைத்துக் கொண்டே மறைந்தாலும், சரஸ்வதிக்கு சிற்பியின் அவஸ்தை வருத்தமாய் இருந்தது.

சின்ன பையன், எவ்வளவு தான் சமாளிப்பான் என போனால் போகட்டும் என அவன் மண்டையில் ஒரு ஐடியாவை பிளாஷ் செய்தார்.
சிற்பிக்கு சீவல் இவ்வளவு நேரம் பேச்சு வார்த்தையில் இருந்ததே பெரும் விஷயமாக இருந்தது.
எப்படியாவது இந்த லோட்டஸ் பேச்சு வார்த்தை சுமுகமாக முடிய வேண்டும். அதற்கு சீவல் ஒத்துக்க கொள்வது போல ஒரு பாயிண்ட் கிடைத்தால் போதும் என நினைத்தான்.
ஒரு நிமிடம் கண் மூடி யோசிக்க “English Dale” சப்ளிமெண்டரி புக்கில் இருந்த “The Lotus” என்ற poem சின்ராஸின் நினைவுக்கு வந்தது.
“ஏ சீவல், என்ன நீ லோட்டஸ இப்படி சொல்லிட்ட. லோட்டஸ் தான் “Queen of Flowers” தெரியுமா? அது மாதிரி டீச்சர் வேலை தான் இருக்கறதுலயே உயர்ந்த வேலை!” என சீவலை கோழி அமுக்குவது போல அமுக்கினான்.
இந்த பொண்ணு “Queen” னு எந்த டாபிக் கிடைச்சாலும் மங்கி விடும் என அவனுக்கு தெரியும்.
“லோட்டஸ் தான் “Queen of Flowers ஆ?” என சந்தேகமாய் கேட்டது சீவல்.
“ஆமாடி, நா வேணா வீட்டுக்கு போனப்புறம் என் புக்க காமிக்குறேன், நீயே பாத்துக்க” என தூபமிட்டான்.
சீவல் குட்டி திண்ணையில் நன்றாய் சாய்ந்து உட்கார்ந்து கொண்டது. Queen என்ற வார்த்தையின் மமதை அதன் கண்ணில் தெரிந்தது. “லோட்டஸ் தான் “Queen of Flowers. அத மாதிரி டீச்சர்ஸ் நீங்களும் பெஸ்ட்னு சொன்னா ஜட்ஜு ஒத்துக்குவாங்களா” என சீவல் கேட்டது.
“லோட்டஸ் நேஷனல் ப்ளவருடி” என அவசரமாய் ஒரு முட்டு குடுத்தான் சிற்பி.
சீவல் அதை கன்சிடர் செய்யும் நேரத்தில் அடுத்த முயற்சிக்கு தயாரானான்.
“குட்டிமா, ஏன் லோட்டஸ் இந்த கலர்ல இருக்கு தெரியுமா? ப்ளோரான்ற கடவுள் ரோஸையும் லில்லியையும் சேத்து லோட்டஸ செஞ்சாரு. ரோஸ் passionate and energeticனு சொல்வாங்க. அதே போல லில்லி வெள்ளையா இருக்குல்ல, அத purity, calm and fairnessக்கு சொல்வாங்க. இப்போ சொல்லு, நம்ம டீச்சர்ஸும் ரோஸ் மாதிரி passionate டா நம்ம கிட்ட இருக்கிற திறமையை மெருகேத்துறாங்களா, அதே போல லில்லி மாதிரி pure மைண்டோட யாரையும் ஏற்ற தாழ்வு பாக்காம நடத்துறாங்கல்ல. இந்த மாதிரி ரெண்டு பூக்களோட உயர்ந்த குணமும் அவங்க கிட்ட இருக்குறதால அவங்களோட வேலையும் உயர்வானது தான்” என தெளிவாக சொல்லி புரிய வைத்தான்.
சீவல் கண் கொட்டாமல் கேட்டு அவன் சொல்வதை உள் வாங்கி கொண்டது. Origami டீல் சுபமாய் முடிந்தது.
சீவலும் சிற்பியும் ஒரு மணி நேரம் கழித்து வீடு திரும்பினார்கள்.
ஹாலில் சாமந்தி, ரோஸ் மற்றும் மல்லி பூக்கள் இவர்களுக்காக காத்திருந்தன.
சரண்யா ஏற்கெனவே பூ கட்ட ஆரம்பித்து விட்டாள். “எங்க போனீங்க ரெண்டு பேரும்? போய் சாப்பிட்டு வந்து கொஞ்ச நேரம் இதை கட்டி குடுங்க” என்றாள்.
சீவல் உள்ளே போக, “மா,ரொம்ப கஷ்டப்பட்டு அவளை சமாதானம் பண்ணி கூட்டிட்டு வந்திருக்கேன். சாப்பிட்டு நா அவளுக்கு origami ப்ராக்டிஸ் பண்ண ஹெல்ப் பண்ணனும். ப்ளீஸ், கொஞ்ச நேரம் வெய்ட் பண்ணும்மா. நா எப்படியாவது உனக்கு டைமுக்குள்ள கட்டி முடிக்க ஹெல்ப் பண்றேன்’ என கெஞ்சினான்.
“Origami பேப்பர் இருக்கா? இல்ல வாங்கணுமா? என்றாள் சரண்யா.
“அதெல்லாம் வீட்ல இருக்குமா, அதனால தான் அவளுக்கு அந்த ஐடியாவ சொன்னேன்” என்றான் சிற்பி.
“சரி, போய் செய்ங்க” என்றாள் சரண்யா.
உள்ளே போன சீவல் சப்ளிமெண்டரி புக்கை எடுத்து அந்த பக்கத்தை படித்து பார்த்து அவன் சொன்னது உண்மை தான் என உறுதி படுத்திக்கொண்டது.
அடுத்த ஒரு மணி நேரம் போனதே தெரியவில்லை இருவருக்கும்.
தரை முழுதும் செய்திதாளில் இயற்கை எய்திய origamiக்கள் இறைந்து கிடந்தன.
இரவு படுக்க போகும் போது சீவலுக்கு லோட்டஸ் origami நன்றாய் செய்ய வந்தது.
சரண்யா அலாரம் வைத்து படுக்க, “மா, ரெண்டே நிமிஷத்துல வரேன்” என சொல்லி வெளியே ஓடினான்.
சீவல் அவன் கொடுத்த பால் ரோஜா நிற origami பேப்பர்களை கட்டிக் கொண்டு தூங்க ஆரம்பித்தது.
அடுத்த நாள் காலை ஐந்து மணிக்கு சிற்பி வீட்டு கதவு தட்டபட்டது. அவன் நண்பர்கள் சதீஷும், ராஜுவும்.
சரண்யா டீ போட்டு கொடுக்க மும்முரமாய் பூ கட்டும் வேலையை ஆரம்பித்தார்கள்.
ஒவ்வொரு பூவாய் எடுத்து மாலை கோர்க்கும் போதும், அந்த நாள் சீவலுக்கு நல்லபடியாய் இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டான் சிற்பி. சீவல் தெம்பாய் எழுந்து வந்தது.
“தேங்க்ஸ் ணா” என அவர்களிடம் சிரித்துக் கொண்டே சொன்னது.
டீ குடித்து விட்டு மீண்டும் சில முறை லோட்டஸ் செய்து பார்த்து, நல்லபடியாய் வந்ததில் திருப்தியாக இருந்தது.
“அண்ணா, எனக்கு திரும்ப அந்த லோட்டஸ் கதையை சொல்லேன்” என கேட்டு சொல்லி பார்த்துக் கொண்டது.
அவர்களோடு சேர்ந்து கொஞ்ச நேரம் பேசி சிரித்துவிட்டு பின் பள்ளிக்கு கிளம்பியது.
“ஆல் தி பெஸ்ட்” என்றான் சிற்பி.
“மத்தியானம் ப்ரைஸ் தருவாங்கனு ஷர்மி சொன்னா. நீ அப்போ வரியா?” என கேட்டது சீவல்.
அவ்வளுவு நம்பிக்கை மேடத்திற்கு. அசெம்பளி போர்டுல பேரு, Queen என அதற்க்கு பிடித்த கீ வேர்டுகளை சொன்னதில் மிதப்பமாக சுற்றிக் கொண்டிருக்கிறது. இன்னைக்கு மட்டும் ப்ரைஸ் கிடைக்கவில்லையென்றால் அவ்வளவுதான். நினைக்கும் போதே சிற்பிக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.
“ஹா ஹா கண்டிப்பா வரேன்” என சொல்லி அனுப்பி வைத்தான்.