Tamil mini novel – Origami – Worry Kammi – part 4/4

நேரமாக நேரமாக அவனுக்கு வியர்த்து ஊத்தியது. Origami லேசு பட்ட விஷயமில்லை. நுணுக்கமாக செய்ய வேண்டும். ஒரு மடிப்பு தவறினாலும் மொத்தமும் சொதப்பி விடும். குறிப்பிட்ட நேரத்துக்குள் அதை சரியாக செய்து அதன் காரணத்தையும் தெளிவாக நடுவர்களிடம் சொல்ல வேண்டும். சீவலுக்கு இது சவாலான காரியமாக இருக்கும். எப்படி சமாளிக்க போகிறதோ என மண்டை காய்ந்து போனான்.

வேலை மும்முரத்தில் இருந்த சரண்யாவுக்கு சிற்பியின் மனநிலை அந்நியமாக இருந்தது.

“ஏண்டா, அவளையே நெனச்சுக்கிட்டு இருக்க? சாப்பிட்டு இந்த பைய சைக்கிள்ள வச்சு எடுத்திட்டு போய் மாதுரி மேடம் வீட்ல குடுத்துட்டு வா” என்றாள்.   

பன்னிரண்டு மணி ஆனது. சிற்பி பூமாலைகளை கொடுத்து விட்டு நகர, “இந்தாப்பா, இந்த பூ சரடை அம்மா கிட்ட குடு” என்றார் மாதுரி மேடம். அதை வாங்கி கொண்டு வேகமாக பள்ளிக்கு சைக்கிளில் சென்றான்.

பள்ளி வளாகம் அமைதியாக இருந்தது. மெயின் பில்டிங்கில் மட்டும் ஆள் நடமாட்டம் தெரிந்தது.

சிற்பி சைக்கிளை நிறுத்தி பூட்டி விட்டு உள்ளே செல்ல, PT சாரிடம் மாட்டிக் கொண்டான்.

“டாய், ஏண்டா கலர் ட்ரெஸ்ல வந்திருக்க?” என தடுத்தி நிறுத்தினார்.

பச்சை பொய்யை பட்டென்று சொன்னான். “டீச்சர் பூ எடுத்திட்டு பன்னெண்டு மணிக்கு வர சொன்னாங்க சார்” என்றான்.

“ஓடு, ஓடு, சீக்கிரம் போ” என உள்ளே விட்டார் PT சார்.

மாதுரி மேடத்திற்கு மனதுக்குள் நன்றி சொல்லி காரிடார் ஜன்னலருகே போய் நின்றான்.

ஜட்ஜ் டேபிள் மீது பால் ரோஜா நிற தாமரை அழகாய் மலர்ந்திருந்தது.

“பேச்சு போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவி சித்திர வள்ளி, போர்த் பி” என மைக்கில் சொன்னார் எச் எம் டீச்சர்.

எல்லாரும் கை தட்ட சந்தோஷமும் வெட்கமுமாய் தலை குனிந்து சிரித்தபடியே மேடை ஏறியது சீவல்.

மெடல், ட்ரோபி, பரிசு பண கவர் மற்றும் புத்தகம் என கை நிறைய அள்ளிக்கொண்டு, வாய் நிறைய சிரித்தது.

சிற்பிக்கு மனம் சிறகடித்துப் பறந்தது. அப்படியே போய் சீவலை தூக்கிக் கொள்ள வேண்டும் என ஆசை ஓங்கியது.

அடுத்தடுத்த மாணவர்கள் பரிசு வாங்க, மீண்டும் சீவலின் பெயர் வந்தது. இந்த முறை ஆர்ட் போட்டிக்கு. Origami லோட்டஸுக்கும் முதல் பரிசு. மீண்டும் எழுந்து பின் பக்கம் ஸ்கர்ட்டை நீவி விட்ட படியே சீவல் மேடையை நோக்கி நடக்க எச் எம் டீச்சர் அதன் கன்னத்தில் செல்லமாய் தட்டி கொடுத்து அணைத்துக் கொண்டார்.

இது போதாதா!  சீவல் காலம் முழுக்க அதன் புகழை அதுவே பாடிக் கொள்ள! எங்க டீச்சர்ஸ் எனக்கு கிளாப் பண்ணாங்க, எங்க எச் எம் டீச்சர் என்ன ஹக்கு பண்ணாங்க என வாழ்நாள் சாதனை அவளுக்கு அது.

நிறைவாக நிகழ்ச்சி முடியும் தருவாயில் நன்றி உரை சொன்ன எச் எம் டீச்சர் சொன்ன விஷயம் சிற்பிக்கு காதில் தேனாய் பாய்ந்தது. பள்ளியின் முன்னாள் மாணவர் ஒருவர், ஐந்து குழந்தைகளின் கல்வி செலவை ஏற்பதாக சொல்ல, தேர்வு குழு கூடி பேசி முடிவு செய்த பெயர்களில் ஒன்று சித்திர வள்ளி – போர்த் பி!

சீவலின் தோழிகள் அதை தோள் மீது தூக்கி பிடித்து சிரிக்க, சிற்பிக்கு கண்ணீர் பெருக்கெடுத்தது.

அவளின் வகுப்பு ஆசிரியரும் வந்து போட்டோ எடுக்க அந்த இடம் களை கட்டியது.

நிகழ்ச்சி முடிந்து ஒவ்வொருவராய் வெளியேறும் வரை சைக்கிள் கேரியரில் உட்கார்ந்து காத்துக் கொண்டிருந்தான் சிற்பி.

வெளியே வந்த சீவல் அவனை கண்டதும் “சிப்பின்னா” என முத்து தங்கமாய் வந்து கட்டிக் கொண்டது.

முதல் வேலையாய் ஒரு சாக்லெட்டை பையிலிருந்து எடுத்து அவனுக்கு ஊட்டி விட்டது.

சதீஷும் ராஜுவும் வந்து சேர அவர்கள் சீவலை தோளில் தூக்கி சுற்றி கொண்டாடி தீர்த்தார்கள்.

வீட்டுக்கு போகும் வழியில் சீவலிடம் கேட்டான் “ஏண்டி, பேச்சு போட்டி பத்தி எதுவும் சொல்லல? என்ன பேசுன”?

“அண்ணா, பேச்சு போட்டிக்கு பேரு குடுத்த பொண்ணு இன்னைக்கு வரல, அதனால தமிழம்மா என்ன பேசரியான்னு கேட்டாங்க. நா நீ சொல்லி குடுத்த ப்ளோரா கதையை சொன்னேன். சூப்பரா இருக்கு, இதையே சொல்லிடு, ஆர்ட்டுக்கும், பேச்சு போட்டிக்கும் வேற வேற ஜட்ஜு தான் வருவாங்கனு சொல்லி லாஸ்ட் மினிட்ல என்ன பேச சொல்லி ஸ்டேஜுக்கு அனுப்பிட்டாங்க” என்றாள் குஷியாக.

“உனக்கு சரி லக்கு இன்னைக்கு” என சொன்னான் சிற்பி. 

வீட்டுக்கு வந்து அவர்கள் சொன்ன எல்லாவற்றையும் கேட்ட பிறகு சரண்யாவுக்கு பூரிப்பு அதிகமானது.

சீவலுக்கு பிடித்த பச்சை கலர் கேசரியை உடனே செய்து முடித்தாள்.

இடையே வந்த இரண்டு மூன்று போன்கள் பேசி முடிக்கும் போது “மா, உனக்கு நெறய ஒர்க் வருது, கரெக்டா? என ஆசையாய் சிரித்தான் சிற்பி.

பிறகு “மா, இன்னைக்கு உனக்கும் லக்கி டே” என்றான்.

 “சீவல், எனக்கு ஒரு லோட்டஸ் செய்து தரியா?” என ஆசையாக கேட்டாள் சரண்யா.

“உனக்கு எதுக்குமா?” என்றான் சிற்பி.

“சங்கு புஷ்பம் ஆன்ட்டிக்கு குடுக்க! வாழ வழி காட்டுறவங்களும் ஆசான் தானே!” என சிரித்தாள் சரண்யா.

“Origami உன் worryய கம்மி பண்ணிடுச்சுமா!” என கேசரியை வழித்து சாப்பிட்டபடியே சொன்னது சீவல்.

Leave a comment