
நா டக்குனு குளிச்சிட்டு வரேன். நீ ஆரிப் கிட்ட சொல்லி ஒரு பார்சல் ஒடனே அனுப்ப சொல்லு. இன்னைக்கு கொஞ்சம் ஃபன் பண்ணலாம்” என்றார் நேசமணி.
சிரித்தபடியே “நீங்களும் குளிச்சிட்டு வந்து கோபால் சார்கிட்ட கொஞ்சம் வாங்கி வைங்க. எப்படியும் அவர் பிரிட்ஜ்ல ஸ்டாக் பண்ணிருப்பார்” என்றார் சங்கு புஷ்பம்.
“அப்ப வர்றவர் இன்னைக்கு செத்தான்டா சேகர் கதைதான்” என்றார் சங்கு புஷ்பம்.
சற்று நேரத்தில் ஆரிப் டெலிவரி கொடுக்க, கோபால் சார் கலாய்த்து விட்டு ஒரு அழகான கோப்பையையும் பாட்டிலையும் தர, நேசமணி கிட்சனில் ரெடி செய்து வைத்தார். “அபர், நா சர்வ் பண்றேன். நீ வர வேணாம் என்றார்.
எல்லா ப்ளாக்கையும் சுற்றி கடைசியில் அரைமணி நேரம் கழித்து வந்து சேர்ந்தார் கட்சிக்காரர். டோர் பெல் அடித்தது. சங்கு புஷ்பம் போய் கதவை திறந்தார்.
“அம்மா, சார் இருக்காருங்களா” என்றார்.
“ஐயா தான் இருக்காரு” என்றார் சங்கு புஷ்பம்.
கட்சிக்காரர் குழப்பமாக பார்க்க “அம்மா இருந்தா ஐயாதான் இருப்பாரு. மேடம் இருந்தாதான் சார் இருப்பாரு” என்றார் சங்கு புஷ்பம்.
“சாரி மேடம், ஐயா இருக்காருங்களா” என்றார் அவர்.
லேசாய் புன்னகைத்தபடியே “உக்காருங்க சார்” என காரிடாரில் இருந்த சேரை காண்பித்தார் சங்கு புஷ்பம்.
அந்த ப்ளோரில் இருந்த நான்கு வீடும் சேர்ந்து ஆண் பெண் என யாராக இருந்தாலும் மணி கணக்கில் பேசுவதென்றால் இந்த இடம் என்று முடிவானது. பிள்ளைகள் படிக்க, பெண்கள் புழங்க என வீட்டு ஹால் பிரைவசி பிழைத்தது.
காலப்போக்கில் லேப் சாம்பிள், சாமான் ரிப்பேர் என யார் வந்தாலும் இந்த இடம் என்றானது.
காரிடாரில் பிளாஸ்டிக் சேரில் உட்கார்ந்தது ரத்தினத்துக்கு உறுத்தியது. எல்லா ப்ளாக்கும் சுற்றியதில் களைப்பாக இருந்தார். கசங்காத வேட்டி சட்டையில் ஐம்பது வயது நெருக்கத்தில் தெரிந்தார்.
“எவ்வளவு நேரம் சார் பாக்கணும்” என்றார் சங்கு புஷ்பம்.
இந்த கேள்வியை எதிர்பாராதவராக சற்று தடுமாறிப் போனார் அவர்.
“ஒரு அரை மணி நேரம், இல்ல ஒரு மணி நேரம்” என்றார் அவர்.
“அரை மணி நேரம்னா ஆயிரம் ரூபா, ஒரு மணி நேரம்னா ரெண்டாயிரம் ரூபா” என்றார் சங்கு புஷ்பம்.
“என்ன மேடம், புரியல” என்றார் ரத்தினம்.
“ஆமா சார். இதான் அவர் கன்சல்டேஷன் சார்ஜ். பே பண்ணிட்டு வெயிட் பண்ணுங்க. பைவ் மினிட்ஸ்ல வருவார்” என்றார் சங்கு புஷ்பம்.
“மேடம், நா சும்மா அவர்கிட்ட ஒரு விஷயம் பேசிட்டு போலாம்னு வந்தேன். கன்சல்டேஷன் இல்ல” என்றார் அவர்.
“சார் மட்டுமில்ல நானும் யார்கிட்டயும் சும்மா பேசுறதில்ல” என்றார் சங்கு புஷ்பம்.
“இல்ல மேடம். சார்கிட்ட நா மொதல்ல பேசுறேன். அப்புறம் அவர் கேட்டார்னா நா தர்றேன் மேடம்” என்றார்.
“நீங்க பே பண்ணா தான் அவர் உங்கள பார்ப்பார்” என மீண்டும் உறுதியாய் சொன்னார் சங்கு புஷ்பம்.
“நா அவரை பாக்க முக்கால் மணி நேரம் வெயிட் பண்ணியிருக்கேன். நீங்க என்னடான்னா என்கிட்டே காசு கேக்குறீங்க” என உதாராய் சொன்னார் ரத்தினம்.
“என்ன சார் நீங்க நெஜமாவே புரியாம தான பேசுறீங்களா? நெக்ஸ்ட் டைம் வரும்போது அப்பாயின்மெண்ட் வாங்கிட்டு வாங்க. நேரா வந்து பாக்கலாம்” என காட்டமாய் சொன்னார் சங்கு புஷ்பம்.
ஆரம்பத்தில் இருந்தே காக்க வைத்தது ரத்தினத்திற்கு சோதனையாய் இருந்தது. எப்படியோ வந்த வேலை முடிந்தால் போதும் என தோன்றியது.
பக்குவமாக பேசி காரியத்தை முடிக்க என்ன செய்வது என்று யோசித்தார்.
இந்த அம்மா புரியாம கேக்குது. இப்போ குடுத்துடுவோம். அப்புறம் சார பாத்து பேசி சரி பண்ணிக்கலாம் என முடிவு செய்தார்.
“சரிங்க மேடம், தரேன்” என பாக்கெட்டை துழாவினார். கொஞ்சம் குறைவாய் இருந்தது.
“போன்ல அனுப்பிடவா மேடம்” என்றார்.
“கேஷ் மட்டும்தான் வாங்குவோம்” என சுருக்கமாய் முடித்தார் சங்கு புஷ்பம்.
ஆயாசமாய் பெருமூச்சு விட்ட ரத்தினம் சற்று நகர்ந்து ஒரு ஓரமாய் போய் நின்றார்.
சுற்றி ஒரு பார்வையை ஓட விட்டு மெதுவாய் வேட்டியை உயர்த்தி டிரௌசர் பாக்கெட்டில் இருந்து ஒரு கட்டு கரன்சியை வெளியே எடுத்தார்.
கீழே பார்க்கில் விளையாடும் குழந்தைகளை ரசித்தபடியே இவரையும் நோட்டமிட்ட சங்கு புஷ்பத்திற்கு சிரிப்பு கட்டுப்படுத்த முடியவில்லை.
சாலை பக்கம் திரும்பி ஒரு நிமிஷம் நின்றவர் நிதானித்தபடி காத்திருந்தார்.
யாராவது தன்னை பார்க்கிறார்களா என சுற்றி பார்த்த ரத்தினம் நேராக போய் நின்றது சிசிடிவி கேமரா முன்பு பாப்பரப்பா என்று.
அந்த பக்கம் மானிட்டர் ரூமில் இருக்கும் கோமதியை நினைத்து புன்னகைத்துக் கொண்டார் சங்கு புஷ்பம்.
பத்து புது இருநூறு ருபாய் தாள்களாக ரெண்டாயிரம் எடுத்து கொடுத்தார்.
தேங்க்ஸ் சொல்லி சங்கு புஷ்பம் வாங்கி கொண்டு உள்ளே செல்ல மண்டை காய்ந்து போனார் கட்சிக்காரர்.
இரண்டு நிமிடம் கழித்து “உள்ள வாங்க சார்” என கூப்பிட்டார் சங்கு புஷ்பம்.