Tamil novel – OTP – Part 6/20

Welcoming the guest and hosting him in the living hall, and having heartfelt exchange of life experience

மறு நாள் காலை டோர் பெல் அடித்தது. அதே தெருவில் மளிகை கடை வைத்திருக்கும் வள்ளியப்பன் வந்திருந்தார்.

“உள்ள வாங்க சார்” என வரவேற்றார் நேசமணி.

“வாங்க சார். எப்படி இருக்கீங்க” என்றபடியே உள்ளேயிருந்து வந்தார் சங்கு புஷ்பம்.

“நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க” என நலம் விசாரித்தார்.

அவரோடு நீண்டகால நட்பு இவர்களுக்கு. இன்றளவும் அவர் கடையில் தான் பொருட்களை வாங்குவார்கள்.

என்ன டிஸ்கவுண்ட் போட்டாலும் ஆன்லைனில் வாங்க மாட்டார்கள். ஒண்ணாம் தேதியானால் லிஸ்ட் போட்டு போனில் அனுப்பி விடுவார்கள். கடை பையன் கொண்டு வந்து கொடுத்து விடுவான்.

ஒரு ஸ்திரமான வாடிக்கையாளராக அவரின் தொழிலுக்கு ஆதரவு தந்து வருகிறார்கள். அதனால் இவர்கள் மீது சற்று அதிக மரியாதையும் பிரியமுமாய் இருப்பார் வள்ளியப்பன்.

“சாரி சார். காலங்காத்தால வந்துட்டேன்” என்றார்.

“இந்தாங்க பஞ்சாமிர்தம். பையன் கல்யாணத்துக்காக திருச்செந்தூர் முருகருக்கு வேண்டிக்கிட்டேன். போயிட்டு நேத்து நைட் தான் வந்தோம்” என்றபடியே ஒரு பாட்டிலை நீட்டினார்.

சங்கு புஷ்பம் நன்றி சொல்லி பய பக்தியாக பெற்றுக் கொண்டார்.

“நீ பேசிகிட்டு இரு அபர். நா போய் இவருக்கு என் ஸ்பெஷல் காபி போட்டு எடுத்துட்டு வரேன்” என உள்ளே போனார் நேசப்பா.

“சார் நெக்ஸ்ட் டைம் சின்னதா ஒரு கப்புல குடுங்க சார் போதும். ரெண்டு பேருக்கும் சுகர்” என்று சிரித்தார் சங்கு புஷ்பம்.

“நீங்க சாப்பிடுங்க மேடம். அப்புறம் வர்ற கெஸ்ட்டுக்கு எல்லாம் குடுங்க” என்றார் வள்ளியப்பன்.

“வீணாக்காமல் கெஸ்ட்டுக்கு தாராளமா தரலாம் சார். ஆனா நூறு குட்டி கப்பும் ஸ்பூனும் கழுவணும் இந்த பாட்டிலை முடிக்க” என நிஜத்தை சொன்னார் சங்கு புஷ்பம்.

“அது என்னவோ உண்மை தான்” என ஒப்புக் கொண்டார் வள்ளியப்பன்.

“சார், இன்னைக்கு லிஸ்ட் அனுப்பலாம்னு இருக்கோம். ப்ரீயா எள்ளு மிட்டாய், கடலை மிட்டாய் போடாதீங்க. ரெண்டு பார் டிஷ் வாஷ் சோப்பு போடுங்க” என ரெக்வஸ்ட்டை சொன்னார் சங்கு புஷ்பம்.

கொல்லென்று அடக்க முடியாமல் கண்ணில் நீர் வர சிரித்தார் வள்ளியப்பன்.

“இன்னைக்கு என் நாள் நல்லபடியா ஆரம்பமாகுது. இதை நெனச்சு சிரிச்சே இன்னைக்கு பொழுது போகும்” என்றார் வள்ளியப்பன்.

காபியோடு நேசமணி வந்து சிரிப்பில் கலந்து கொண்டார். அரை மணி நேரம் கா கலப்பாக போனது.

“சரிங்க சார். பார்க்கலாம்” என சொல்லி கிளம்பினார்.

ஆளுக்கு கொஞ்சம் எடுத்துக்கொண்டு பஞ்சாமிர்த பாட்டிலை சிஸ்டம் டேபிள் மேல் வைத்தார்கள்.

அடுத்து வரும் கெஸ்ட்டுக்கு மறக்காமல் கொடுக்க. அப்போது அவர்களுக்குத் தெரியாது அந்த கெஸ்டிடம் இருந்து கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று.

Tamil novel – OTP – Part 5/20

A warm conversation between wo ladies

இரண்டு மாதம் ஆனது. மொத்தம் இருபத்து மூன்று டெலிவரி அன்றோடு சேர்த்து.

நெறய ஓசிடி கேள்வி பட்டிருக்கிறோம். இந்த ஆன்லைன் ஆர்டரிங் ஓசிடி இவர்களை பாடாய் படுத்தியது.

இது த்ரீஓ சிடி. அது அவர்களின் பர்ஸுக்கும் நல்லதில்லை, அவர்களின் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் நல்லதில்லை என நினைத்துக்கொண்டார்கள்.

இரவு எட்டு மணிக்கு வந்தாள் அமராவதி.

“உள்ள வாம்மா” என்றார் நேசப்பா.

“அபர், நீ பேசிக்கிட்டு இரு. நான் கிட்சனுக்கு போறேன்” என கிளம்பினார் நேசப்பா.

“உக்காரு அமராவதி, காபி சாப்பிடுறியா இல்ல க்ரீன் டீ வேணுமா?” என்றார் சங்கு புஷ்பம்.

“க்ரீன் டீ ஆன்ட்டி” என்றாள். 

டேபிள் பேனை போட்டுவிட்டு சேரை பக்கத்தில் இழுத்து போட்டுக்கொண்டு டைரியை எடுத்தார் சங்கு புஷ்பம்.

“இன்னியோட இருபத்து மூன்று டெலிவரி வாங்கி இருக்கோம். அதுல பதினாலு மதியம் ரெண்டுலேர்ந்து நாலுக்குள்ள.

நாங்க டேப்லெட் போட்டு தூங்குற நேரம். அப்புறம் ஒவ்வொரு டெலிவரிக்கும் மூணு போன் கால் அட்டென்ட் பண்ணணும்.

ஸோ, கலெக்க்ஷன் சார்ஜ் இருபத்தி அஞ்சு ரூபா ஒரு டெலிவரிக்கு. மொத்தம் ஐநூத்தி எழுபத்தி அஞ்சு ரூபா ஆச்சு. என் நம்பர்க்கு அனுப்பிடுமா” என்றார் சங்கு புஷ்பம்.

“சாரி ஆன்ட்டி. டிஸ்டர்ப் பண்ணிட்டேன்” என்றாள் அமராவதி.

எமெர்ஜென்சிக்கு வாங்கி வெக்கலாம். ஆனா மைன்ட்லெஸ் ஷாப்பிங்க்கு ஹெல்ப் பண்ண முடியதுமா என நினைத்துக் கொண்டார் சங்கு புஷ்பம்.

பிறகு கிச்சன் பக்கம் திரும்பி “நேஸ், அமருக்கு ஒரு க்ரீன் டீ குடுங்க” என்றார் அபராஜிதா.

Tamil novel – OTP – Part 4/20

Jovial dinner time conversation between a senior couple

பொழுது போக இரவு எட்டு மணிக்கு அமராவதி வந்து பார்சலை பெற்றுக்கொண்டாள். அடுத்த இரண்டு வாரத்தில் ஐந்து பார்சல் வந்தது.

“அபர், நீ உள்ள போய் படு. நா இன்னைக்கு தூங்கல” என்றார் நேசப்பா.

இன்னைக்கு டெலிவரி தேதி. மெயின் கேட்டுக்கு போன் போட்டார்.

“செல்லம், இன்னைக்கு பார்சல் வரும். போன் பண்ணாத. உள்ள அனுப்பிடு” என்றார்.

“சார், நீங்க ஒருத்தர் தான் சார் என்ன இந்த வயசுலயும் செல்லம்னு கூப்பிடுறீங்க” என சிரித்தார் செல்ல குமார்.

அடுத்து “பக்தா, இன்னைக்கு பார்சல் வரும். போன் பண்ணாத. மேடம் தூங்குறாங்க.உள்ள அனுப்பிடு” என்றார் நேசப்பா.

சரி சார் என்றார் ஜி பிளாக் செக்யூரிட்டி பக்தவத்சலம்.

ஐந்து மணி ஆனது. சங்கு புஷ்பம் எழுந்து காபி போட்டு வைத்து முகம் கழுவ போனார். காய்ந்த துணி எடுக்க நேசப்பா போக பெல் அடித்தது.

“நா போறேன் இரு” என்றார் நேசப்பா.

“இன்னைக்கு என்ன வந்திருக்கு?” என்றார் சங்கு புஷ்பம். “சேப்டி ஸ்டிக்!” என்றார் நேசப்பா.

“கான்ட்ராக்டர் நல்ல மனுஷன், சாப்ட் ஆன ஆளா தெரியுறார். அந்த அம்மா ஏன் ஸ்டிக் வாங்குதுனு தெரியல?” என்றார் நேசப்பா.

“டிபென்சா இல்ல அபென்சா” என சிரித்தார் சங்கு புஷ்பம்.

எட்டு மணிக்கு அமராவதி வந்தாள். “என்னம்மா சேப்டி ஸ்டிக்” என்றார் சங்கு புஷ்பம்.

“டாக் சேப்டிகாக ஆன்ட்டி. வாக்கிங் போகும் போது தொல்லையா இருக்கு” என சலித்தாள்.

“நீ இண்டோர் தான போவ. ட்ரெட் மில்ல”

“ஆமா ஆன்ட்டி. நேத்து மோட்டார் பெல்ட் போய்டுச்சு. அதான் வெளில நடக்கலாம்னு” என்று சொல்லி கிளம்பினாள்”. சரிம்மா என்றார் சங்குபுஷ்பம்.

“மோட்டார் பெல்ட் நானூறு இல்ல ஐநூறு. இந்த ஸ்டிக் முன்னூறு” என சிரித்தார் நேசப்பா.

“ஆமா, யாரு இப்போ அவ்ளோ சீக்கிரம் ரிப்பேர் பண்ணி யூஸ் பண்றாங்க” என கேட்டார் சங்குபுஷ்பம்.

அடுத்த நாள் சன் ஸ்கிரீன் வந்தது. அடுத்த நாள் ஸ்லிங் பாக் வந்தது.

இவங்க அமரவாதியா இல்ல ஆர்டர்வாதியா என சிரித்தார் சங்குபுஷ்பம்.

“நாளைக்கு என்னவா இருக்கும்? ஷூ, சன் க்ளாஸ், பிட் பேண்ட்?” லிஸ்ட் போட்டார் நேசப்பா.

பாக்கலாம் என பேசிக்கொண்டே இரவு உணவு சாப்பிட்டார்கள் இருவரும்.

“அம்மா டெலிவரி” குரல் கேட்டது. “இரு நா போறேன்” என்றார் நேசப்பா.

வெரிகோஸ் பேண்டேஜை மாட்டியபடியே “என்ன நேஸ்?” என்றார் சங்கு புஷ்பம்.

“லூப்ரிக்கண்ட்” என சொல்லி திரும்பி கதவை பூட்டி னார் அவர்.

கொல்லென்று சத்தமாக கண்ணில் நீர் வர சிரித்தார் சங்கு புஷ்பம்.

இருவரும் சிரித்து, கண்ணீர் துடைத்து அமைதியாக சிறிது நேரம் ஆனது.

“அது ட்ரெட்மில் மோட்டார் லூப்ரிக்கண்ட், தொள்ளாயிரம்” என நேசப்பா பார்த்து சொல்ல, இருவரும் மீண்டும் சிரிக்க ஆரம்பித்தார்கள்.

இரவு எட்டு மணிக்கு அமராவதி வந்தாள். “நீ போய் குடு” என்றார் நேசப்பா.

மூச்சை இழுத்து விட்டு சிரமப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டு கொடுத்தார் சங்கு புஷ்பம்.

“ரிப்பேர் ஆன மஷினிக்கு இது எதுக்குமா?” என்றார்.

“இல்ல ஆன்ட்டி, டூ வீக்ஸ் முன்னாடி பிப்டி பெர்ஸன்ட் ஆபர் போட்டான். அதான் கார்த்தி ஆர்டர் பண்ணிட்டார். அதுக்கு அப்புறம் தான் ரிப்பேர் ஆச்சு” என்றாள்.

இரவு சாப்பிட்டுக்கொண்டே நேசப்பா சொன்னார் “முன்னூறு ரூபா பெல்ட். சீக்கிரம் மாத்தி இருந்தா நாலாயிரம் செலவு இல்ல” என்றார்.

“டாக் ஸ்டிக், சன் ஸ்கிரீன், பாக், ஏங்க தெருவுல இறங்கி நடக்க இவ்வளவு செலவா?” என்றார் சங்கு புஷ்பம்.

“வாக்கிங்க விட அந்த எக்ஸ்பிரியன்ஸ் முக்கியம்னு நெனைக்குற ஜெனெரேஷன் இது அபர்மா” என்றார் நேசப்பா.

“நோட் பண்ணுங்க நேஸ் இனிமே” என்றார் சங்கு புஷ்பம்.

Tami novel – OTP – Part 3/20

An aged lady sitting next to the phone

அமராவதி குடி வந்து ஒரு வாரம் ஆனது. வாசலில் உருளியில் பூ வைத்து கொண்டிருந்தார் புஷ்பம்.

வேலைக்கு கிளம்ப வெளியே வந்த அமராவதி புஷ்பத்திடம் ஏதோ சொல்ல வந்தபோது “அடடா, ஒரு புஷ்பமே பூ வைக்கிறதே” என்றபடி வாக்கிங் முடித்து வந்தார் நேசப்பா.

மூவரும் சேர்ந்து சிரிக்க, பிறகு என்ன விஷயம் என்றார் புஷ்பம்.

“ஆன்ட்டி இன்னைக்கு ஒரு டெலிவெரி எனக்கு வரும். கொஞ்சம் வாங்கி வைக்க முடியுமா” என்றாள் அமராவதி.

சரிம்மா என புஷ்பம் சொல்ல நன்றி சொல்லி கிளம்பினாள்.

நேசப்பா பேங்க் வேலை முடித்து வர ஒரு மணிஆனது. கதவை திறந்த கையோடு போய் பெட் ரூமில் ஏசி போட்டு வைத்தார் சங்கு புஷ்பம். மதியம் சாப்பிட்டு முடித்து ஆளுக்கு நாலு மாத்திரை போட்டு இரண்டு மணிக்கு படுத்தார்கள்.

நேசப்பாவிற்கு சிறு வெளிச்சம் இருந்தாலும் தூக்கம் வராது. அடர் நிற திரை போட்டு கதவு அடைத்து படுத்து விடுவார். ஹாலின் கிழக்கு பக்கம் லோ லையிங் சோபா சங்கு புஷ்பத்தின் இடம்.

மூன்று மணிக்கு லேண்ட் லைன் அடித்தது. மெயின் கேட் செக்யூரிட்டி செல்லகுமார்.

“அம்மா, பார்சல் வந்திருக்கு அமராவதி மேடம் வீட்டுக்கு. உங்க வீட்ல குடுக்க சொன்னாங்க. அனுப்பவா?” என்றார்.

சரி என சொல்லி வந்து உட்கார்ந்தார் சங்கு புஷ்பம்.

மெயின் கேட்டில் இருந்து ஜி பிளாக் வர ஐந்து நிமிடம் ஆகும். இதான் சௌத் விங்கில் லாஸ்ட் பிளாக். அரை மணி நேரம் ஆனது.

“என்ன செல்லகுமார், டெலிவரி எதுவும் வரலையே” என கேட்டார் சங்குபுஷ்பம்.

“அம்மா, அவர் மத்த ப்ளாக்ல குடுத்துட்டு வருவார்னு நெனைக்கிறேன்” என்றார் செல்ல குமார்.

சரி கொஞ்சம் படுக்கலாம் என போனார் சங்கு புஷ்பம். லேண்ட் லைன் அடித்தது. பாய்ந்து எடுத்தார் அவர். நேசப்பாவுக்கு கேட்டால் அவரும் எழுந்து விடுவார் என்று.

ஜி பிளாக் செக்யூரிட்டி பக்தவத்சலம். “அம்மா, பார்சல் வந்திருக்கு அமராவதி மேடம் வீட்டுக்கு. உங்க வீட்ல குடுக்க சொன்னாங்க. அனுப்பவா?” என்றார்.

சரி என சொல்லி கதவை திறந்து வைத்து உட்கார்ந்தார் சங்குபுஷ்பம். இரண்டு நிமிடம் கழித்து டெலிவரி வந்தது. பார்சலை வாங்கி வைத்து கதவை பூட்டி வந்து படுத்தார் சங்குபுஷ்பம்.

காலிங் பெல் அடித்தது. புஷ்பத்திற்கு மண்டை சுர்ரென்று ஆனது.

“அம்மா கையெழுத்து வாங்க மறந்துட்டேன்” என நின்றார் அவர். சரியென்று போட்டு கொடுத்து அனுப்பி மணி பார்த்தால் மூணு ஐம்பது.

யாரு புஷ்பம் என வந்தார் நேசப்பா. ஐந்து வரை தூங்குபவர் முன்கூட்டியே எழுந்து விட்டார். டெலிவரிங்க அமராவதிக்கு என்றார் சங்கு புஷ்பம்.

அதன் நீ அமராம சுத்திகிட்டு இருக்கியா என நக்கலடித்தார்.

Tamil novel – OTP – Part 2/20

A senior couple shares lovely bonding, caring for each other

சங்கு புஷ்பம் முப்பது ஆண்டுகள் நர்சாக இருந்து ஓய்வு பெற்றவர். நேசப்பா தபால் துறையில் முப்பத்திமூன்று ஆண்டுகள் பணி நிறைவு செய்தவர். நாற்பது ஆண்டுகால திருமண வாழ்வில் பெரும்பாலான நாட்கள் வேலை நிமித்தம் வேறு வேறு ஊர்களில் பணியாற்றி ஓய்வுக்கு பிறகு ஒன்றாக வாழ்பவர்கள்.

இரண்டு மகனும் ஒரு மகளும் இருந்தாலும் தனி வீட்டில் தங்கள் போக்கில், தங்கள் வயதுக்கேற்ற வாழ்க்கை முறையை சுதந்திரமாக ரசிக்கிறவர்கள்.

An aged pair goes for a morning walk on the beach, spending quality time together

பண்டிகை நாட்களிலும் வார இறுதிகளிலும் வரும் நேசப்பாவை சில மணி துளிகள் இருவரும் மனம் விட்டு பேச இயலாத பெரும் நெருக்கடியான கால கட்டம். கூட்டு குடும்பமும், புஷ்பத்தின் ஷிப்ட் நேரங்களும் அவர்களின் சந்திப்பு பொழுதுகளை சுருக்கியே வைத்திருந்தது.

நேசப்பாவின் கடிதங்களை கூட திருமணமான புதிதில் தனியாக பெற இயலாத சூழல். நேசப்பா அவருடைய பிரியங்களை கொட்டி மருத்துவமனை முகவரிக்கு தனியாக அனுப்பும் கடிதங்கள் தான் அவர்களை பல ஆண்டுகள் பிணைத்திருந்தது.

ஆக ஓய்வுக்கு பிறகு அவர்களின் கூட்டை அவர்கள் எப்போதோ தீர்மானித்தார்கள். ஒரு கூரையின் கீழ் ஒரு முழு பொழுது வாழாதவர்கள், பணி நிறைவு வரை தனி தனியாக ஓடியவர்கள், எல்லை கோடு கடந்து கீழே விழும்போது தங்களை தாங்களே தாங்கிக்கொள்ள முடிவெடுத்தார்கள்.

கணக்கில்லா நாட்களையும் முடிவில்லா பொழுதுகளையும் பெரும் பாரம் சுமக்க இழந்தவர்கள், மீதமிருக்கும் கணங்களை தங்களுக்காக மட்டும் பொத்தி வைக்கிறார்கள். பெற்றதையும் சுற்றத்தையும் மரத்தும் மறந்தும் தள்ளி நிற்கிறார்கள்.

After retirement, the couple spends more time together, walking in the park, having casual conversation

பணிக்காலத்தில் நோயை வென்ற வாழக்கையையும், தூரத்து உறவுகளின் தகவலையே மருந்தாக மூன்று தசாப்தங்களாக சக மனிதர்களுக்கு பரிசளித்தவர்கள். நேசமும்,பாசமும், மனிதமும் ரத்த உறவில் மட்டும் காணாமல் எண்ணில்லா தருணங்களை சமூகத்தில் சுவைத்தவர்கள்.

இன்று நாற்பது ஏக்கரில் எண்ணூறு குடும்பங்கள் வசிக்கும் குடியிருப்பில் ஐந்து ஆண்டுகளாக குடியிருக்கிறார்கள். அனுசரணையும் ஆறுதலும் இடம், பொருள், மனிதர் உணர்ந்து அளிக்க தெரிந்தவர்கள். சுரண்டுபவரும் ஏய்ப்பவரும் யாராக இருந்தாலும் துறக்க துணிந்தவர்கள்.

A group of retired friends spending quality time

Tamil novel – OTP- Part 1/20

An elderly woman warmly welcomes her young new neighbor couple

டோர் பெல் அடித்தது. “சங்கு புஷ்பம் போய் பார்” என்றார் நேசமணி. வெரிகோஸ் கால் பட்டையை அட்ஜஸ்ட் செய்தபடியே எழுந்து போனார் சங்கு புஷ்பம்.

“ஆன்ட்டி நாங்க பக்கத்து பிளாட்டுக்கு புதுசா வந்திருக்கிறோம். ஹலோ சொல்லிட்டு போலாம்னு வந்தோம். என் பேரு அமராவதி. இவர் பேரு கார்த்தி” என்றாள் அந்தப் பெண்.

உள்ள வாங்கம்மா என்றார் சங்கு புஷ்பம்.

வடை போட்டு முடித்து கை துடைத்தபடியே வந்தார் நேசமணி. முப்பதுகளில் இருக்கும் இருவரும் சற்று யோசித்தபடியே உட்கார்ந்தார்கள்.

நாங்க ஜி 501 பிளாட்டுக்கு காலைல தான் வந்தோம். சொந்த ஊர் நெல்லூர் எங்களுக்கு. இங்க ரெண்டு வருஷம் ஹைவேஸ் ரோடு கான்ட்ராக்ட் இவருக்கு. நானும் ஐடி பார்க்ல ஒர்க் பண்றேன். அமராவதி பேசிக்கொண்டிருக்க கார்த்தி ஏதோ யோசனையாய் இருந்தார்.

“காபியா, டீயா? என்ன சாப்பிடுறீங்க?” என்றார் நேசமணி. “எதுவா இருந்தாலும் ஓகே சார்” என்றார்கள்.

“அபராஜிதா, இவங்களுக்கு உன் ஸ்பெஷல் பில்டர் காபி போட்டு கொடு என்றார் நேசமணி. சடாரென்று நிமிர்ந்து உட்கார்ந்து ஹாலை நோட்டமிட்டார் கார்த்தி. தீர்க்கமாய் நேசமணியை பார்த்தபடியே உள்ளே போனார் சங்கு புஷ்பம்.

இஸ்திரி, எலெக்ட்ரிசியன், பணிப்பெண் என எல்லா போன் நம்பர்களையும் பெற்றுக்கொண்டு காபி குடித்து முடித்து “மறக்காம சொசைட்டி குரூப்ல ஆட் பண்ணிடுங்க ஆன்ட்டி” என்று சொல்லி இருவரும் கிளம்பினார்கள்.

வழி அனுப்பி கதவை சாற்றி திரும்பும்போது டக்கென்று “யாரு ஆண்ட்டி அபராஜிதா?” என்றார் கார்த்தி.

“நான் தான்பா அது. என் பேரு சங்கு புஷ்பம். அங்கிள் நல்ல மூட்ல கூப்பிடறது அபராஜிதா” என லேசாக சிரித்தபடியே சொல்ல, அது அவளோட ஹிந்தி பேரு என சிரித்தார் நேசமணி.

ஒரு நிமிடம் தன் கணவரின் மேல் அமராவதியின் பார்வை தெறித்தது. கார்த்தி அதை தவற விட நேசப்பாவும், சங்கு புஷ்பமும் நமுட்டு சிரிப்போடு உள்ளே வந்தார்கள்.