Golgappa’s love poem


பஞ்சு பொதி போன்ற தேகம்
எப்படி பார்த்தாலும்
கொஞ்சி அழைக்கும்
நேர்த்தியான வளைவுகள்

உன்னை கடக்கும் போது
சுண்டி இழுக்கும் சுகந்தம்

உன் சிற்றிடையில்
சற்றே எட்டி பார்க்கும்
மெல்லிய சிகப்பு நிறம்

கதகதப்பான உன்னை
ஒரு மழை நாளில்
நினைத்துக் கொண்டேன்

இந்நேரம் என் ஒரு கையில்
தேநீர் கோப்பையும்
மறு கையில்
நீயும் இருந்தால்

இந்த நீண்ட
மாலை பொழுது
மறையாமல்
அப்படியே
உறைந்து போகும்

சிறு வயதிலிருந்து
இன்று வரை
உன் மீதிருக்கும்
இனிமையான
தீரா காதல்
என்னை
வெண்ணெயாக்குகிறது

பேக்கரி ஷெல்பில்
பௌர்ணமி நிலவாய்
என் இனிய
பன் பட்டர் ஜாம்!

பூரி குமாரி : எனக்கு கவிதை சொல்ல சொன்னா, அந்த பன் பட்டர்காரிக்கு சொல்றீங்க?

Tamil novel – OTP – Part 11/20

புஷ்பா அண்ணிக்கு நேரடி அரசியல் அனுபவம் கிடையாது. மக்கள் தொடர்பும் கிடையாது.

கட்சிக்காரர்களின் நல்லது கெட்டது நிகழ்வுகளில் அண்ணன் மட்டும் தான் வருவார்.

அண்ணிக்கு இப்போது திடீர் ஆசை கவுன்சிலராகி விட வேண்டும் என்று.

ஒரே பெண் அவர்களுக்கு. கல்யாண சம்பந்தம் பேசும்போது அண்ணனும் அண்ணியும் ஆளுக்கொரு பதவியில் இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.

தன் சமூகத்தில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை உயர் அந்தஸ்த்தில் உள்ள எல்லா வரன்களையும் குறித்து வரிசைப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

அண்ணி கவுன்சிலராவது, அடுத்து அண்ணன் எம்எல்ஏ ஆவது, பவரும் பசையும் இரு கரை புரண்டு ஓடுவது, பிறகு மாநில தலைமையும் அவரின் கிச்சனும் சேர்ந்து மகளுக்கு அட்சதை போட்டு திருமணம் நடத்துவது, அதை போட்டோ எடுத்து ஹாலில் மாட்டுவது என அவர்களுக்கு சின்ன சின்ன ஆசைகள் இருந்தது.

அந்த சின்ன ஆசைகளில் ஒரு ஆசையை நிறைவேற்றியே தீர்வது என கங்கணம் கட்டிக்க கொண்டு அண்ணிக்காக தேர்தல் வேலைகளை ஆரம்பித்தார் ரத்தினம்.

எல்லா நிலையிலும் பிரதான கட்சிகள் ரெண்டு மட்டும் தான் மாநிலம் முழுவதும்.

அண்ணியார் அதில் ஒரு கட்சி வேட்பாளர். அவருக்கு எதிராக முக்கியமான போட்டியாளர் தற்போதய ஆளுங்கட்சியை சேர்ந்த சித்தா டாக்டர் நேசமணி. மற்ற வேட்பாளர்கள் பற்றி அக்கறையில்லை.

இப்பகுதியில் இரு பிரதான கட்சிகளும் சம பலத்தில் இருக்கிறது. படித்தவர்கள், பாமரர்கள் என சரி அளவில் இருப்பவர்கள்.

அண்ணியார் நம்பி இருப்பது பாமரர் ஓட்டு வங்கி. அண்ணன் எப்படியும் கடைசி நேரத்தில் பசையை இறக்கி தன்னை ஜெயிக்க வைத்து விடுவார் என நினைக்கிறார் அண்ணி.

சித்தா டாக்டரும் மக்களுக்கு நல்ல அறிமுகம். கை சுத்தமானவர். குறை சொல்ல பெரிதாக எதுவும் இல்லை.

இந்த நிலையில் அண்ணியாரின் வெற்றிக்கு தன் பங்கை எப்படி ஆற்றுவது என யோசித்தார் ரத்தினம்.

அவர் சும்மா இருந்தாலும் அவரின் பல்லாண்டு கால அனுபவம் அவர் மூளையை தூங்க விடவில்லை. இரண்டு மூன்று நாட்கள் எல்லா வித்தைகளையும் யோசித்து பார்த்து அலசி ஆராய்ந்து கடைசியில் ஒரு வியூகத்தை அமைத்தார்.

நம்பிக்கையோடு போய் அண்ணனைப் பார்த்தார்.

“என்ன ரத்தினம், ஆளையே காணோம். அண்ணி உன்ன என்ன காணாமேன்னு கேட்டுக்கிட்டிருந்தா” என பாசத்தை தூவினார் அண்ணன்.

“அட நா எங்கண்ணே போகப்போறேன். நம்ம அண்ணி விஷயமாத்தான் கொஞ்சம் வேல பாத்துட்ருந்தேன்” என் பிட்டை போட்டார் ரத்தினம்.

“அருமைப்பா, என்ன விஷயம் சொல்லு” என் கூர்ந்து கேட்க ஆரம்பித்தார் அண்ணன்.

ரத்தினம் முழுதாய் சொல்லி முடிக்க “நல்ல கிரவுண்ட் ஒர்க் பண்ணியிருக்க ரத்தினம். இதான் ஒரிஜினல் கட்சிக்காரனுக்கும் ஐடி விங்காரனுக்கும் வித்தியாசம். போன்ல போட்டோ போஸ்ட்டு போட்டே மேல வந்துடறானுங்க” என மாசெவை குதறினார்.

“கட்சிக்காரன் ஐடி விங்ல இருக்கலாம். ஆனா ஐடி விங்ல இருக்குற எல்லாரும் கட்சிக்காரங்க ஆக மாட்டாங்க” என நிதர்சனத்தை சொன்னார் அண்ணன்.

பிறகு சற்று யோசித்தவர் “ஒண்ணும் பிரச்சினை இருக்காதில்ல ரத்தினம். பாத்து ஹாண்டில் பண்ணு” என்றார்.

அப்பாடா என்றிருந்தது ரத்தினத்திற்கு. எடுத்த எடுப்பில் நிராகரிக்கவில்லை.

பார்த்து செய் என்கிறார். அண்ணனிடம் க்ரீன் சிக்னல் வாங்கியது உற்சாகத்தை கூட்டியது ரத்தினத்திற்கு.

“நன்றிண்ணே. எல்லா வேலையும் பக்காவா கச்சிதமா நடக்கும்ணே. ஆனா கேண்டிடேட்டு செலவு கொஞ்சம் ஆகும்ணே” என இழுத்தார் ரத்தினம்.

கூட இருக்குற ஆளுங்களிலேயே இவன் ஒருத்தன் தான் தானா வந்து ஒரு மேட்டர சொல்றான். வேலக்காரனா இருக்கான். மத்தவன்லாம் மண்டைய கழுவி வச்சிருக்கானுங்க. கார்ல பின்னாடி சீட் தேய்க்க தான் லாயக்கு புடிச்சவுனுங்க என் மனதிற்குள் அவர் டீமை திட்டி தீர்த்தார்.

அதெல்லாம் பாத்துக்கலாம் ரத்தினம். தோரயமா எவ்ளோ ஆகும்” என கேட்டார்.

கரன்சி மேட்டர் வரை இந்த பிளான் இன்றே வரும் என ரத்தினம் நினைக்கவில்லை.

இப்போதான் சூதானமா இருக்கணும் என மூச்சை இழுத்து விட்டார் ரத்தினம்.

“ஒரு அஞ்சு எல் ஆகும்ணே கேண்டிடேட் படிய. அப்புறம் நீங்க பாத்து எனக்கு என்ன தந்தாலும் ஒக்கேண்ணே” என தைரியமாய் சொல்லி முடித்தார் ரத்தினம்.

அடுத்த இரண்டு நிமிடங்கள் முள் மேல் நிற்பது போல் இருந்தார் ரத்தினம். அவர் அரசியல் வாழ்க்கையில் அவர் கையாளப்போகும் மிக உச்சபட்சமான ஒரு தொகை.

“சரி, நல்ல படியா செய் ரத்தினம்” என ஆசீர்வதித்தார் அண்ணன். அடுத்த நொடி அனிச்சையாக அண்ணண் காலில் லேண்ட் ஆனார் அன்புத் தம்பி இரத்தின முத்து சேகர். 

Tamil parody song – DMK vs TVK

TVK Thiruchy meeting effect on DMK Udayanidhi Stalin

ஜூனியர் தலீவர்:
திருச்சி குலுங்கையிலே
ஊரே திரள்கையிலே
அந்த அரும்பு மலர்கையிலே
நான் பவரை நெனக்கலியே
கில்லி அருவா வெட்டிருச்சே!

உடன் பிறப்பு:
விஜயி வெட்டருவா
உன் ஆசை பட்டுருமா
உன் கோஷம் எடுபடுமா?

நான் எலக்க்ஷன் நெனக்கலியே
நெஞ்சுறுகி போயிருச்சே
நெஞ்சுறுகி போயிருச்சே!

ஜூனியர் தலீவர்:
பரிசா குடுக்கலியே
என் உழைப்பு குறையலியே
நாம் தாழ்வும் பழகலியே
உன் முகத்தை பார்க்கையிலே
என் துன்பம் ஏறிடுச்சே!

உடன் பிறப்பு:
ராசா தேறிடணும்
நாம் மோசம் புரிஞ்சிக்கணும்
புது பாதை பார்த்துக்கணும்!

நல்ல திசையில் நடக்கையிலே
எதிர் காலம் பொறந்திடுமே
எதிர் காலம் பொறந்திடுமே!

ஜூனியர் தலீவர்:
வாழ்க்கை பூடகமா
என் பொழப்பு பொய் கணக்கா
தினந்தேறும் பெரும் களவா
என் விதிய எழுதையிலே
அந்த சாமியும் உறங்கியதே!

உடன் பிறப்பு:
ஐயா கலங்காதே
சூரியன் உடையாதே
ஊர் வஞ்சம் நெலைக்காதே!

நீ உள நாள் மட்டும் தான்
இந்த உசிரும் போகாதே
இந்த உசிரும் போகாதே!

Tamil novel – OTP – part 10/20

ரத்தினத்திற்கு தெரிந்த ஒரே தொழில் கட்சிப்பணி. தெரிந்த ஒரே கட்சி அவர் கட்சி மட்டுமே. கட்சியில் என்ன பணி என்றால் அவர் இருக்கும் நிலையில் பணம் தவிர மற்ற எல்லாமும் என சொல்லலாம்.

கிளை மட்டத்தில் இருந்து ஆரம்பித்து இருபது ஆண்டுகளாக களத்தில் பணியாற்றி ஒன்றியத்தின் அருகே இப்போது தான் கரை சேர்ந்திருக்கார்.

மாவட்ட அளவில் நல்ல அறிமுகம் இருந்தாலும் இன்னும் ஒரு படி முன்னேற்றத்திற்க்காக காத்திருக்கிறார்.

நிரந்தர தொழில் என்று எதுவும் கிடையாது. வருமானம் மழையாக இல்லெயென்றாலும் சமயங்களில் தூறலாகவோ இல்லை சாரலாகவோ இருக்கும்.

கருமேகம் சூழ்வது போல் எங்கு பிரச்சினையோ, வில்லங்கமோ இருக்கிறதோ, அங்கே வீசும் காற்றின் திசைக்கேற்ப சாய்பவர்.

விசுவாசத்தையும் உழைப்பையும் மட்டுமே கொட்டி கட்சியில் முன்னேற முடியும் என்று இன்று வரை நம்புபவர்.

தன் அனுபவத்தாலும் திறனாலும் தன்னால் நூதனமான முறையில் செயலாற்ற முடியும் என ஆழமான எண்ணம் உடையவர்.

கட்சி சகாக்களை ஒருங்கிணைத்தாலும் சிறு ஒளி கீற்று கூட மற்றவர் மீது விழாமல் பார்த்துக்கொள்வார்.

இப்போது அவர் அரசியல் வாழ்க்கையில் ஒரு முக்கியமான கட்டம். கார்பொரேஷன் தேர்தல் காலம்.

ரத்தினத்தின் ஏரியாவில் அவர் கட்சி வேட்பாளராக நிற்பது எக்ஸ் எம்எல்ஏ மனைவி திருமதி புஷ்பா.

எக்ஸ் எம்எல்ஏ சமீபத்தில் ரத்தினத்திற்கு ஆருயிர் அண்ணனாக கிடைத்தவர்.

நீண்ட காலம் தூரத்தில் இருந்து ரத்தினத்தின் செயல் பாடுகளை பார்த்தவர் அண்ணன்.

சில மாதங்கள் முன்பு அவர் வலது கரம் அகால மரணமடைய புது வலது கரமாய் ஆனார் ரத்தினம்.

இன்னும் இரண்டு ஆண்டுகளில் சட்ட சபை தேர்தல். அண்ணனுக்கு அருமையான வாய்ப்பு இருக்கிறது.

இப்போது மனைவி கவுன்சிலராகி, பிறகு அவரும் எம்எல்ஏ ஆகி விடுவார் என திட்டம்.

கார்பொரேஷன் அளவிலும் மாநில அளவிலும் தனக்கு இன்னும் சற்று பவர் கூடும் என நாடி நரம்பெல்லாம் நம்பிக்கை கொப்பளிக்க இருப்பவர் ரத்தினம்.

அரசாங்க கேபினட்டை விட கிச்சன் கேபினட்டின் செல்வாக்கு அதிகம் என கண்கூடாக பார்த்தவர் ரத்தினம். சில இடங்களில் ரெண்டு மூணு கிச்சன் கூட இருக்கும்.

அதற்கு வாழும் உதாரணம் அவர் அண்ணன். மாநில கிச்சன் கேபினட்டின் செல்லபிள்ளை.

ஸ்டேட்டு கிச்சனோ லோக்கல் கிச்சனோ, க்ளவுடு கிச்சனோ, எந்த கிச்சன் செல்வாக்கு கிடைத்தாலும் மிக்சர் சாப்பிட்டே அடுத்த நிலைக்கு போலாம் என்பது எழுதப்படாத விதி.

அண்ணியை வெற்றிக்கொடி நாட்ட வைத்துவிட்டால் பொலீரோ காரின் பின் சீட் தனக்கு மட்டும் தான் என தீர்க்கமாக நம்பினார் ரத்தினம்.

ஒரு பக்கம் எம்எல்ஏக்கு அருகாமை, இன்னொரு புறம் பொலீரோவில் ட்ரிப் அடித்து எப்படியாவது மேயருக்கு அறிமுகமாவது.

அடுத்த ஐந்தாண்டு திட்டத்தை அரசாங்கம் போட்டதோ இல்லையோ ரத்தினம் தன் வளர்ச்சிக்கான திட்டத்தை தெளிவாக போட்டார்.

பிற்காலத்தில் இருவரில் காற்று யார் பக்கம் வீசுகிறதோ அங்கே சாமரம் வீசுவது என முடிவெடுத்தார்.

ஒரு திரைப்படத்தில் சொப்னா அண்ணிக்கு கேன்சர் என போலியாக அவருக்காக உருகி உருகி பிராத்திப்பார் அண்ணனின் நண்பர். அது போல போலியாக அண்ணிக்காகவும் அண்ணனுக்காகவும் உருகுவதாகவும் உயிரையே கொடுக்க தயாராக இருப்பதாகவும் ஒரு கூட்டம் இப்போது சமூகத்தில் ஊடுருவி இருக்கிறது.

அந்த கூட்டம் உண்மையானது இல்லை என்பதும் எல்லா அண்ணன் அண்ணிகளுக்கும் தெள்ளத் தெளிவாக தெரியும். ஆனால் இரு தரப்பும் மக்கள் மன்றத்தில் அதை ஒரு கலாச்சாரமாக கடை பிடித்து வருகிறார்கள்.

அது உட்கட்சி ஜன நாயகத்துக்கும், தேர்தல் ஜன நாயகத்துக்கும் வந்திருக்கும் கேன்சர் என மக்களுக்கு மட்டும் தெரியும்.