
மூன்றாம் நாள். பவாவுக்கு ஜுரம் விட்ட பிறகு உணவு வயற்றில் தங்க ஆரம்பித்தது.
பசி இல்லாததாலும் மருந்து குடிப்பதாலும் தொடர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.
மதியத்திற்கு மேல் டாக்டர் வந்து பார்த்து விட்டு, மறுநாள் வீட்டுக்கு போகலாம் என சொல்லிவிட்டு போனார்.
ராஜு சாயந்திரமே வந்து விட்டான். எந்த உரையாடலும் இல்லாமல், அந்த அறை இரவு வரை நிசப்தமாக இருந்தது.
“நாளைக்கு ஈவ்னிங் நாலு மணிக்கு டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க. நா வந்து பில் செட்டில் பண்ணிட்டு கூட்டிட்டு போறேன்” என்றான் ராஜு.
“நேத்து வரை ஆன செலவுக்கு நான் பணம் கட்டிட்டேன்” என நிறுத்தினாள் சுதா.
“ஏன் சுதா இப்படி பண்ற?” என கேட்க வாயெடுத்து நிறுத்திக் கொண்டான்.
இரவு ராஜு கிளம்பிய பிறகு டியூட்டி பிரேக்கில் வரதா வந்தார். பின்னாடியே கனகம்மா உள்ளே வந்து பிளாஸ்கில் கொண்டு வந்த மசாலா பாலை ரெண்டு கப்பில் ஊற்றி கொடுத்து விட்டு கிளம்பினார்.
வரதாவும் சுதாவும் பால்கனியில் போய் நின்று கொண்டார்கள்.
“ராஜு சிட்னி போறாருன்னு அவரு சொன்னாரு சுதா” என ஆரம்பித்தார் வரதா.
நீண்ட ஒரு பெருமூச்சு மட்டும் பதிலாக வந்தது அவளிடமிருந்து.
“வரதா, நேத்து வரை இருந்த வாழ்க்கை வேற, இன்னைக்கு இருக்குற வாழ்க்கை வேற. இது மட்டும் தான் எனக்கு இப்போதைக்கு புரியுது. இனிமே வர போற நாட்களை நா இன்னும் யோசிக்க ஆரம்பிக்கலை!” என சொன்னாள் சுதா.
“ராஜுவோட அப்பா அம்மா என்ன சொல்றாங்க?” என்றார் வரதா.
“இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்காதே, கொஞ்ச நாள் போகட்டும், அப்படீன்னு சொல்றாங்க” என்றாள் சுதா.
“இக்கட்டுல இருக்குற எல்லா பெண்களும் இந்த வாக்கியத்தை அவங்க மூழ்க ஆரம்பிக்கும் போதே கேட்டிருப்பாங்க சுதா. அவங்க சொல்ற மாதிரி அது கொஞ்ச நாள் கிடையாது! ஆயுசு முழுக்க!
பாதிக்கப்பட்ட பெண்கள் என்றைக்குமே எந்த முடிவும் சுயமா எடுக்காம இருக்குறதுக்கு காரணம், குடும்பத்துல இருக்குறவங்க சொல்ற இந்த ஒரு லைன் தான்” என்றார் வரதா.
அடுத்த ஒரு மணி நேரம் நடந்த அவர்களின் உரையாடலை, கண் கொட்டாமல் கவனித்து கொண்டிருந்தது பாக்டரி புகைபோக்கி.
தனக்கு ஈடாக அங்கிருந்தும் கக்கப்படும் உணர்வுகளில், அவர்கள் சந்தித்த துரோகங்களும் அவமானங்களும் அதிகம் இருந்ததாக அது கருதியது.
உள்ளேயே வைத்திருந்து மூச்சு முட்டும் சூழ்நிலைக்கு ஆளாகாமல், மனது விட்டு அவர்கள் பேசுவது அதற்கு நல்ல விஷயமாக பட்டது.
சுதா இந்த ஊருக்கு வந்ததில் இருந்து இந்த பெண்ணா நதியை போல் தான் வாழ்ந்து கொண்டிருப்பதாக புகைபோக்கிக்கு தோன்றியது.
நதியின் பாதையில் அணை கட்டப்பட்டதால், அது வருஷத்துல பெரும்பாலான நாள் வறண்டு, தரை வெடித்து, பாளமான பூமியாகவே இருக்கும். மழை காலத்துல மட்டும் வெள்ளம் கரைபுரண்டு ஓடும். அதே மாதிரி தான் இவள் வாழ்க்கையும். ராஜுவோட அனுசரணை இல்லாமல்தான் பெரும்பாலான நாட்களை கழித்திருக்கிறாள். எப்போதாவது அவளுக்கு கிடைக்கும் கொஞ்சம் அன்புதான், இவளை இவ்வளவு நாள் இந்த உறவில் நீடிக்க வைத்திருக்கிறது” என நினைத்துக் கொண்டது பாக்டரி புகைபோக்கி.
அதே கருத்தை அது வரதாவுக்கும் கடத்தியது.
“சுதா, இந்த பெண்ணா நதி நந்தி மலைத்தொடரில் உருவாகிறது. உத்திர பினாகினினும் இதை கூப்பிடுவாங்க. அதே நந்தி மலைல தான் தக்ஷிண பினாகினி நதியும் தொடங்குது. ஒன்று வடகிழக்கு திசையிலும், மற்றொன்று தென்கிழக்கு திசையிலும் பயணிக்கும். ஆனால் அவை இரண்டும் ஒரே இடத்தில் பிறந்து, பிறகு வெவ்வேறு திசைகளில் பயணித்தாலும், கடைசியில் வங்காள விரிகுடாவில் தான் கலக்கும். ராஜுவின் இந்த முடிவை நான் அப்படித்தான் பார்க்கிறேன். உங்கள் வாழ்க்கை தற்போது வெவ்வேறு திசையில் பயணிக்கும் சூழ்நிலை வந்தாலும், கடைசியில் குடும்பம் என்ற புள்ளியில் தான் வந்து ஒன்று சேரும்” என நம்பிக்கை கொடுத்தார் வரதா.
“நீண்ட நாட்களாக வாழ்க்கை எனக்கு கரடு முரடாகத்தான் இருக்கிறது வரதா. வாழ்நாள் நெடுக தனியாக எல்லா சூழலிலும் சிக்கி, நானே என்னை மீட்டு கொண்ட பிறகு, கடைசி காலத்தில் ஒன்று சேர்ந்து என்ன பயன்?” என வேதனையாக கேட்டாள் சுதா.
“சுதா, எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த உன்னை, இறைவன் பெண்ணா நதி ஓடும் தாதிபத்ரிக்கு ஏதோ ஒரு காரணமாக தான் அழைத்திருக்கிறார். கடவுளும் காலமும் தான் உனக்கு துணை” என ஆறுதல் சொல்லி கிளம்பினார் வரதா.







