
அந்த வாரம் அமைதியாக கழிந்தது. ராஜு பெரும்பாலும் சுரத்தே இல்லாமல் இருந்தான்.
அவன் செய்த தவறு அவனுக்கே உறுத்தலாக இருந்தது. சுதாவை நேருக்கு நேராய் பார்ப்பதையே தவிர்த்தான்.
ஒரு நாள் அவன் ஆபிசிலிருந்து வந்ததும் மணி சார் போன் வந்தது. அவரின் இருபதாவது கல்யாண நாளுக்கான அழைப்பு.
வரதாவும் மணி சாரும் ராஜுவிடம் பேசி விட்டு, சுதாவிடமும் பேசி அழைப்பு விடுத்தார்கள்.
தாதிபத்ரியில் இருக்கும் புக்கா ராமலிங்கேசுவர ஸ்வாமி கோவிலில் வரும் வெள்ளியன்று காலை ஒன்பது மணிக்கு சிறப்பு பூஜை என வரதா விவரம் சொன்னார்.
அவள் சுருக்கமாக நடந்த விஷயங்களை வரதாவிடம் சொன்னாள்.
“சுதா, இது இயல்பானது. குறிப்பாக அப்பாக்களுக்கு இருக்கும் ஒரு குணம். அவர்களால் அவ்வளவு எளிதாக தங்கள் குழந்தையின் நிலையை ஜீரணம் செய்ய முடியாது. அவர்களுக்கும் பாசம் இருக்கும். ஆனால் அதை மீறி ஒரு கையாலாகாத உணர்வு அவர்களுக்கு மேலோங்கி இருக்கும். அது அவர்களை சில சமயம் ஒதுங்கி போகும் முடிவை எடுக்க வைக்கும். அதனால் நீ இதை கவனமாக கையாண்டது சரிதான்” என சொன்னார் வரதா.
“நா அவர்கிட்ட சில சமயங்கள்ல கடுமையா பேச வேண்டியிருந்தது வரதா. இப்போ அமைதியா அவர் கெளம்பி போறத வேடிக்கை பார்த்துட்டு, அப்புறம் தனியா பவாவை கவனிக்குறேன்னு சுய பச்சாதாபத்துல இருக்குறது சரியில்லேன்னு தோணுச்சு. நீங்க, ஆண்ட்ரியா எல்லாரும் கஷ்டமான நேரத்துல எனக்கு துணையா இருந்தீங்க. மணி சார் அவர்கிட்டயும் பேசி இருக்கார். ரொம்ப தேங்க்ஸ் வரதா. நாங்க நிச்சயமாக பூஜைக்கு வருகிறோம்” என சொல்லி போனை வைத்தாள் சுதா.
ராமலிங்கேசுவர ஸ்வாமி சுதாவுக்கு மிகவும் பிடித்தமான கோவில். சுயம்பு வடிவாக சிவ பெருமான் பெண்ணா நதி கரையில் அருள் பாலிக்கும் திருத்தலம். விஜயநகர பேரரசர் காலத்து பழமையான கோவில்.
வெள்ளிகிழமையன்று காலை கோவிலுக்கு போய் பூஜையில் கலந்துகொண்டு பிறகு மண்டபத்தில் உட்கார்ந்தார்கள். பவா தூண்களை பிடித்துக் கொண்டு மெதுவாக நடந்து கொண்டிருந்தாள். விஷ்ணு சன்னதியின் முன்னால் இருந்த தூண்களை ஒரு பக்தர் தட்டி விட மெதுவான ஓசை கேட்டது. பவாவுக்கும் அது கேட்டிருக்க வேண்டும். சிரித்தபடியே கண்ணில் மின்னல் தெறிக்க திரும்பி பார்த்தது. அவர் மெதுவாய் ஒவ்வொரு தூணாய் தட்ட அதன் பார்வையில் சந்தோஷம் தெரிந்தது.
ராஜுவுக்கு கண்களில் நீர் பெருக்கெடுக்க ஓடி போய் பவாவை அள்ளிக் கொண்டான். சுதாவுக்கு கண்ணீர் கட்டு படுத்தமுடியவில்லை.
வரதா வந்து அந்த தூண்களின் சிறப்பம்சங்களை விளக்கினார். இயரிங் எயிட் உதவியுடன் இருந்தாலும் அந்த மெல்லிய நுட்பமான ஓசையை அவளால் கேட்க இயன்றது சுதாவுக்கு பெரும் நம்பிக்கையை கொடுத்தது.
ஒரு மணி நேரம் பொறுமையாக கோவிலை சுற்றி பார்த்துவிட்டு மீண்டும் கல் மண்டபத்தில் போய் உட்கார்ந்தார்கள்.
“சுதா, எனக்கு மனசு தெளிஞ்சுடுச்சி, சாரி, நா உன்ன ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன்” என மெதுவாய் சொன்னான் ராஜு.
“நீ தெளிவா இருந்தா எனக்கு அது போதும் ராஜு ” என ஆறுதலாய் சொன்னாள் சுதா.
“இந்த கோவில் தான் சுதா எனக்கு புத்திய குடுத்திருக்கு. இந்த கோபுரத்தை பாத்தியா? பாதிலேயே நிக்குது. சர்வ வல்லமை படைச்ச சாமியே பூர்த்தியாகாத ஒரு கோவில்ல இருக்கார். வர்ற ஜனங்க அதுல இருக்க சிற்ப வேலைகளை தான் ரசிக்குறாங்களே தவிர, அது முழுமையடையலேன்னு யாரும் அதை குறையா சொல்லல.
சாமிக்கு இல்லாத சக்தியான்னு யோசிச்சு பார்த்தேன். அவர் நினைச்சார்னா இந்த கோவிலை பூர்த்தி செய்து இருக்கலாம். ஆனா அது ஏன் அவர் செய்யலேன்னு யோசிச்சேன். எனக்கு பதில் பிடிபடலை.
ஆனா நம்ம வாழ்கையை பத்தி எனக்கு தெளிவு கிடைச்சிருக்கு. நம்ம பவாகிட்ட இருக்க குறைய நா ரொம்ப பெரிய விஷயமா மனசுல போட்டு குழப்பிக்கிட்டு உங்களை விட்டு பிரியுற முடிவுக்கே வந்துட்டேன். ஆனா நீ இந்த குடும்பத்துல இருக்க அழகை பாத்ததால என்னை சகிச்சுகிட்டு வாழுற. ரொம்ப சாரி சுதா, என்னை நெனச்சா எனக்கே வெக்கமா இருக்கு” என்றான் ராஜு.
சுதாவுக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. “சாரி ராஜு, நானும் உன் விஷயத்துல கடுமையா நடந்துக்கிட்டேன். இன்ஸ்டால போஸ்ட் பண்ணது கூட நீ சொல்லாம முடிவெடுத்ததால தான். மற்றபடி உன்ன விட்டு கொடுக்கணும்னு இல்ல. ஜெபாக்கு விஷயம் தெரிஞ்சுது ஆண்ட்ரியா மூலமாக. மணி சார் கிடையாது. ஆண்ட்ரியா உன்னோட சிச்சுவேஷன, நீ என்ன மைண்ட்செட்ல இருக்கேன்னு ஜெபாக்கு தெளிவா சொல்லி இருக்கா. அவர் அன்னிக்கு உன்கிட்ட பேசினது கூட நீ உணரணும்னு தானே தவிர, உன்னை காயப்படுத்த இல்லை” என்றாள் சுதா.
“நீ எனக்கு பெரிய உபகாரம் பண்ணி இருக்கே சுதா” என சொல்லி பவாவை இறுக அணைத்துக் கொண்டான்
மகிழ்ச்சியில் தாதிபத்ரியின் தங்க புத்ரியாக ஜொலித்தாள் சுதா!











