சில மாதங்கள் ஆனது. ஒரு நாள் பள்ளியிலிருந்து திரும்பிய சிவா கேட்டான் “என்னம்மா? இன்னைக்கு பச்சை கலர் கேசரி செஞ்சுருக்க, என்ன ஸ்பெஷல்?”
“அம்மா பாஸாயிட்டாங்கன்னா! அதான் ஜாலி மூடுல இருக்காங்க” என சொன்னது சின்ன வாண்டு தேவசேனா.
“ஆமாடா, மத்தியானம் தான் ரிசல்ட் வந்தது. அம்மா டிகிரி வாங்கிட்டேன்!!” என உற்சாகமாக சொன்னாள் தாரா. தபால் வழியில் யோகா இளங்கலை முடித்து இன்று பட்டம் வாங்கியிருக்கிறாள்.
சிவா ஆறாம் வகுப்பு மாணவன். தேவசேனா ஒன்றாம் வகுப்பு. தாராவின் கணவர் மேகநாதன் ஆட்டோ ஓட்டுநர். பகுதி நேரமாக சுவர் பெயிண்டிங் வேலையும் செய்வார்.
“மல்லிகை மலர் பறிக்க, மான் போல துள்ளி வா!
அல்லி மலர் பறிக்க, அன்னநடை போட்டு வா!
டிகிரி நீயும் வாங்க, டைகராக படித்து வா!! என சிவா குஷியாக பாட ஆரம்பித்தான்.
“அப்போ, அம்மா டைகரா?” என தேவசேனா புலி போல காலை மடக்கி நடந்து வந்து பயமுறுத்த, மூவரும் சேர்ந்து கொல்லென சிரித்தார்கள். சற்று நேரத்தில் மேகநாதனும் வர வீடு களை கட்டியது.
நால்வரும் கிளம்பி கோவிலுக்கு போய் சாமி தரிசனம் செய்துவிட்டு கல் மண்டபத்தில் போய் உட்கார்ந்தார்கள்.
பால்காரர் குணவேந்தன் அந்த பக்கம் வந்தார்.
“என்ன மேகா, தாரா பாஸாயிடுச்சுனு எங்க வீட்டம்மா சொல்லுச்சு! நீ எப்போ படிக்க போற?” என்றார்.
மேகநாதன் தலையை திருப்பி கொள்ள, தாராவுக்கு சங்கடமாக இருந்தது.
“குணா மாமா, அத்தை குடிக்குறது இல்லை, நீங்க எப்போ குடியை விட போறீங்க?” என ஒரே போடாக கேட்டான் சிவா.
“அப்பா, அவர் வீட்டு செவத்துல போய் குடி குடியை கெடுக்கும்னு எழுதிட்டு வாப்பா” என்றது சேனா.
குணவேந்தன் குடிவேந்தனாக இருப்பதை குழந்தைகள் சொல்ல, மெதுவாக நகர்ந்தார் அவர்.
“அம்மா, நாங்க போய் யானையை பாத்துட்டு வரோம்” என சொல்லி குழந்தைகள் எழுந்து சென்றார்கள்.
“இன்னைக்கு நா டிகிரி பாஸ் பண்ணிட்டேன்னு கலாவதி டீச்சர் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. வெண்மணி அக்கா கிட்ட காசு குடுத்து கடைத்தெருவுக்கு அனுப்பி கேக் வாங்கிட்டு வர சொல்லி எல்லா டீச்சர்ஸுக்கும் என்னை குடுக்க சொன்னாங்க. நானே வாங்கியிருக்கணும், எனக்கு தோணலைங்க” என்றாள் தாரா.
“கரெக்ட்டு தான், இன்னொரு நாள் நீ எல்லாருக்கும் நம்ம சார்பா ஸ்வீட் குடுத்துடு” என்றார் மேகா.
“ஷூ கம்பெனிக்காரங்க சில டாக்குமெண்ட் கேட்டாங்கன்னு டீச்சர் சொன்னாங்க. நாளைக்கு முடிவு பண்ணி சொல்றேன்னு சொல்லி இருக்கேன். ஏதோ ஒரு பயம் மனசுல இருக்கு, ஆனா என்னன்னு சொல்ல தெரியல” என்றாள் தாரா.
“உன்னால முடியும் தாரா, இந்த வேலையில சேரும்போது எவ்வளவு யோசிச்ச? எப்படி இவ்ளோ சின்ன பசங்கள பாத்துகிறதுன்னு? ஆனா இந்த பத்து வருஷத்துல நீ எவ்ளோ இம்ப்ரூவ் ஆகி இருக்கே! இன்னைக்கு அந்த பயம் இருந்த இடம் தெரியாம போயிடுச்சி. அது போல தான் இப்பவும். ஒரு விஷயத்தை புதுசா ஆரம்பிக்கும் போது யாருமே அதுல எக்ஸ்பர்ட் கிடையாது. அதனால முடியும்னு நெனச்சி துணிஞ்சு இறங்கு” என ஊக்கம் கொடுத்தார் மேகா.
“சரிங்க, யோசிக்கிறேன்” என தாரா சொல்ல “வா கெளம்பலாம்” என்றார் மேகா.
அவர் ஆட்டோவை ஓட்ட, மற்ற மூவரும் பின் சீட்டில் உட்கார்ந்தார்கள்.
கோவிலை ஒட்டிய மெயின் ரோட்டில் கல்யாண ஊர்வலம் மெதுவாக போய் கொண்டிருந்தது.
ஆட்டோ டிராபிக்கில் நிற்க, “அம்மா, போன் குடு, எனக்கு போரடிக்குது” என கேட்டது சேனா.
“ஏன், உன்னால கொஞ்ச நேரம் சும்மா இருக்க முடியாதா?” என திட்டினான் சிவா.
சேனா கோபித்துக் கொண்டு மூஞ்சை திருப்பிக் கொண்டது.
தாரா என்ன செய்வது என யோசிக்கும் போது சேனா கையில் இருந்த வாட்டர் பாட்டில் ஒரு ஐடியாவை கொடுத்தது.
“சேனா, இந்த பாட்டிலை குடு, ஒரு கேம் சொல்லி தரேன்” என வாங்கி அதை அவர்கள் இருவரின் தொடைகளுக்கே நடுவே நிற்க வைத்தாள்.

“இதை கார் கியரா நெனச்சுக்கோ. அப்பா வேண்டிய நிறுத்தினா, நியூட்ரல்ல வை. மெதுவா ஸ்டார்ட் பண்ணா இடது பக்கம் போய், மேல் பக்கம் சாய்ச்சு வை. இன்னும் கொஞ்சம் ஸ்பீட் எடுத்தா செகண்ட் கியருக்கு அப்படியே பின்னாடி வா. ஒரே சீரா வண்டி ஓடுச்சுன்னா, கொஞ்சம் வலது பக்கம் வந்து முன்னாடி போ” என விளக்கினாள்.
சேனாவும் சிவாவும் பயங்கர குஷியாகிவிட்டார்கள். அந்த டிராபிக் ஜாம் அவர்கள் பல முறை கியர் மாற்றி விளையாடுவதற்கு ஏதுவாக இருந்தது.
“அப்பா, என்கிட்ட சொல்லாமா ஏம்பா ஸ்பீடு எடுத்த? நான் இன்னும் பர்ஸ்ட் கியர்லயே இருக்கேன்” என அவரை செல்லமாக திட்டியபடியே அவசரமாக பாட்டிலை நகர்த்தினார்கள்.
மேகநாதனும் அவர்கள் விளையாட ஏதுவாக போக்கு காட்டி ஓட்டினார். அரை மணி நேரம் ஆனது வீடு வந்து சேர்வதற்க்கு.
“செம சேனா, அருமையா கார் ஓட்டி எங்களை எல்லாம் பத்திரமா வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டே!” என பாராட்டினான் சிவா.
“அந்த பார்மசி சந்துல நான் சரியா கியர் போடலண்ணா. நெக்ஸ்ட் டைம் கரெக்ட் பண்ணிக்கிறேன்” என தைரியமாக சொன்னது.
“பாத்தியா தாரா, இந்த சின்ன பொண்ணுக்கு இருக்குற நம்பிக்கையை? விளையாட்டா ஆரம்பிச்ச விஷயம், இப்போ அவளை ஒரு தேர்ந்த ட்ரைவரா உணர வெச்சிருக்கு. அவ கண்ணுல பயமோ, புது விஷயத்தை பழகுறோம் என்ற என்னமோ துளியும் இல்லை. தெரியலேன்னா வெளிப்படையா அத சொல்லி கத்துக்குறா. தெரியலேன்னு கூச்சப்படல” என மெதுவாக சொன்னார் மேகநாதன்.
தாராவுக்கு பொட்டில் அடித்தாற் போல தெளிவு ஏற்பட்டது.
“தேங்க்ஸுங்க, எனக்கு இப்போ புரிஞ்சிடிச்சு, நா ஹேண்டில் பண்ணிக்குறேன்” என சிரித்தாள் தாரா.
ஆறு மாதம் ஆனது. ஷூ கம்பெனி ப்ராஜெக்ட்டுக்காக, பயிற்சி வகுப்புகளை நேர்த்தியாக நடத்தி கொண்டிருந்தாள் தாரா.
மேகநாதன் இரண்டாவது வண்டி வாங்கி வீட்டின் முன் நிறுத்தினார்.

“ஹை, நம்ம வீட்டுக்கு குட்டி யானை வந்துடுச்சி!” என சிவா சந்தோஷமாக சொல்ல, “நா இதுக்கு பேரு வெச்சுட்டேன்!” என சொன்னது சேனா.
“என்ன பேருடி?” என ஆர்வமாக கேட்டான் சிவா.
“ரங்கு” என சொல்லி சிரித்தது சேனா.