சிறுகதை – மலர்கள் கேட்டேன், வனமே தந்தனை..

A 50 year old couple enjoying city skyline

“என்ன கோகி, ஹேர் கலர் பண்ணியிருக்க? நம்ம 25th anniversary வருதுன்னா? ஷில்லாங் பேக்கேஜ் புக் பண்ணட்டுமா? சோமசேகர் கேட்டுக் கொண்டேயிருக்க, ஆபீஸ் பேகை டேபிள் மீது வைத்துவிட்டு நேராக பாத்ரூமிற்குள் நுழைந்தாள் கோகிலா.

சோமா வேலையை தொடர, கோகி வெளியே வர பத்து நிமிடம் ஆனது. நைட்டி மாற்றி, டீ போட்டு எடுத்து வந்து சோபாவில் உட்கார்ந்தாள்.

“என்ன புக் பண்ணட்டுமா, சொல்லு? மேகத்துக்கு நடுவுல, நீயும் நானும் மட்டும். சுற்றிலும் பனிமூட்டம். பக்கத்துல இருக்குற காடு, மலை எல்லாம் மங்கலா தெரிஞ்சாலும் பரவாயில்லை. நமக்கு நாம மட்டும் தெரிஞ்சா போதும்” என உற்சாகமாக தொடர்ந்தார் சோமா.

“Mondayலேர்ந்து ரெண்டு வாரம் கிளையண்ட் விசிட்” என டீ டம்ளரை பார்த்தபடியே சொன்னாள் கோகி.

சோமாவுக்கு இது புதிதில்லை.

ஸ்கிரீனிலிருந்து திரும்பி கோகியை பார்த்தார். புது hair cut. புது hair color.

“இந்த hair cutக்கு என்ன பேரு? மைண்ட்ல இருக்கு, ஆனா பேரு சரியா ஞாபகம் இல்லை” என்றார்.

“பேரெல்லாம் கேக்கலை. Hair density ரொம்ப கொறஞ்சிடுச்சி. அதான் ப்ரீத்தியை எனக்கு எது suit ஆகுமோ அதை பண்ண சொல்லிட்டேன்” என்றாள்.

கோகி கிச்சனுக்குள் சென்று கொண்டே பதில் சொல்லி முடிக்க, சோமா யோசனையில் ஆழ்ந்தார்.

கொஞ்ச நேரத்தில் மகன் சாய் பிரசாத்தும் வர, இரவு உணவு சாப்பிட்டு முடித்து, அவரவர் அடுத்த நாளுக்கான தயாரிப்புகளை செய்ய ஆரம்பித்தார்கள்.

கோகிக்கு எட்டரையில் இருந்து பத்து மணி வரை மீட்டிங் இருந்தது. ஹெட்போனை மாட்டிக்கொண்டு, நோட்ஸ் எழுதிக் கொண்டு பிசியாக இருந்தாள்.

“டேய், நான் ஒரு walk போயிட்டு வரேன். பிரேக்ல அம்மா வந்து கேட்டான்னா சொல்லிடு” என்றார் சோமா.

“ஹ்ம்ம், நீயும் தான் டெய்லி சொல்ற. நீ பன்னெண்டு மணி வரைக்கும் வரலேன்னா கூட, அவங்க இழுத்து
போர்த்திகிட்டு தூங்கிடுவாங்க” என கூலாக சொன்னான் சாய்.

சோமாவுக்கு இதுவும் புதிதில்லை. “நீ நேரத்துக்கு தூங்கு, ரொம்ப நேரம் போன் பாக்காத” என சொல்லிவிட்டு கிளம்பினார்.

வீட்டை விட்டு வெளியே வந்ததும், அவருக்கு ஆயாசமாக இருந்தது. இரண்டு கைகளையும் பின்பக்கம் கட்டிக் கொண்டு, நடைபாதையில் நடக்க ஆரம்பித்தார்.

முன்பெல்லாம் சிறிய விஷயங்களுக்கு கூட சிரித்தவள், இப்போது காரணமில்லாமல் எரிச்சலடைகிறாள். சில நேரங்களில் பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென அமைதியாகிவிடுகிறாள். இரவில் பல முறை விழித்துக்கொண்டும், AC ஓடிக் கொண்டிருந்தாலும், “ரொம்ப சூடா இருக்கு” என்று நிம்மதியாக தூங்காம முடியாமலும் தவிக்கிறாள்.

ஒரு நாள் அவளுக்கு பிடித்தமான பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது, திடீரென கண் கலங்கி விட்டாள். கேட்டால் “எதுவும் இல்லை” என்றாள். ஆனால் அவருக்கு அது “எதுவும் இல்லை” அல்ல என்று தெரியும்.

பெரும்பாலான நாட்கள் அவள் மிகவும் சோர்வாகத் தோன்றினாள்.சாதாரணமாக நினைவில் வைத்திருக்கும் சிறு விஷயங்களைக் கூட மறந்து விடுகிறாள்.

சோமாவுக்கு புரிந்தது இது வெறும் மனநிலை மாற்றம் அல்ல என்று. அவள் வாழ்க்கையின் ஒரு புதிய பருவத்தைக் கடந்து கொண்டிருக்கிறாள். உடல் அமைதியாக மாற்றம் அடைகிறது. அதனுடன் போராடிக் கொண்டே மனமும் உணர்வுகளும் புதிய சமநிலையைத் தேடிக்கொண்டு இருக்கின்றன.

சோமா அவளைச் சரி செய்ய முயலவில்லை. அதற்கு பதிலாக, அதிகம் பேசினார். குறைவாக வாதிட்டார். சில நாட்களில் அவளுக்கு தனிமை தேவைப்பட்டபோது, அமைதியாக அவளுக்கு வழி விட்டு ஒதுங்கிக் கொண்டார்.

யோசித்தபடியே நடந்து போனதில், அவருக்கு நேரம் போனதே தெரியவில்லை. வரும் வழியில் பார்மசியில் சில பொருட்களை வாங்கி கொண்டு வீடு திரும்பினார்.

சாய் தூங்கி விட்டான். கோகியும் ஹாலில் இல்லை. கை கால்களை கழுவிக் கொண்டு, பாட்டிலில் தண்ணீர் நிரப்பி எடுத்துக் கொண்டு, பெட்ரூமிற்குள் போனார்.

“கோகி” என மெதுவாக குரல் கொடுத்தார். அசைவில்லை. சரி தூங்கட்டும் என அவரும் படுத்துக் கொண்டார்.

வேலை, நட்பு, சொந்தம் என வாழ்க்கை நிரம்பியே இருந்தது. ஆனால் சில மாதங்களாக, இருவரும் ஒருவருக்கொருவர் அருகில் இருந்தும், ஏதோ ஒரு மெல்லிய வெறுமை மட்டும் நடுவில் படுத்திருந்தது. திரும்பத் திரும்ப வந்த யோசனைகளை ஒதுக்கிவிட்டு, எப்படியாவது கொஞ்ச நேரம் தூங்க முயன்றார் சோமா.

மறுநாள் காலை ஐந்து மணி. கோகி விழித்தவுடன் சைட் டேபிளின் மீது இருந்த Biotin supplement box பண்ணில் பட்டது. ஒரு நிமிடம் கோகிக்கு புன்முறுவல் வந்தது. Hair fall பிரச்சினைக்காக வாங்கி வந்திருக்கிறார். சோமாவின் தலையை கோதிக் கொண்டே விட்டத்தை பார்த்தபடி கொஞ்ச நேரம் படுத்திருந்தாள்.

ஒரு காலத்தில் அவர்களுக்கிடையே இப்படிப்பட்ட கிண்டல்கள் தினசரி விஷயமாக இருந்தன. “கோகி, பார்மஸில இருக்கேன், என் கப்போர்டுல protection இருக்கானு பாத்து சொல்லேன்” என சோமா வம்பிழுத்து எவ்வளோவோ நாட்களாகி விட்டது.

ஆனால் அந்த விருப்பம் எங்கேயா, எப்போதோ கோகிக்கு தொலைந்து போய்விட்டதாக உணர்ந்தாள். கடந்த காலங்களில் மிக இயல்பாக இருந்த ஒரு விஷயம், இப்போது சிந்தித்துப் பார்க்க வேண்டிய ஒன்றாக மாறிவிட்டது. சோமா அதை புரிந்து கொண்டு காத்திருக்கிறார். அதுதான் சில நேரங்களில் அவளை இன்னும் அதிகமாக நெகிழச் செய்தது.

வெளிச்சம் அறையிலும் பரவ ஆரம்பிக்க, எழுந்து போய் அன்றாட வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள். சாய் ஏழு மணிக்கே கிளம்ப, இவர்கள் இருவரும் ஒன்பது மணிக்கு வீட்டிலிருந்து காரில் கிளம்பினார்கள்.

கோகி டாக்சியில் பயணிப்பது போல, வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள். சோமா அமைதியாக
ஓட்டிக் கொண்டிருந்தார். சற்று நேரத்தில் காரினுள் நிலவிய அந்த மௌனம் அவரை என்னவோ செய்தது. போனை எடுத்து ஒரு பாடலை ஒலிக்க விட்டார்.

கனவா இல்லை காற்றா ..
கனவா நீ காற்றா ..
கையில் மிதக்கும் கனவா நீ?
கை கால் முளைத்த காற்றா நீ?
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே!
நுரையால் செய்த, சிலையா நீ?

பாடல் தொடர, பல நாட்களாக அடக்கி வைத்திருந்த ஏதோ ஒன்று உள்ளுக்குள் அசைந்தது கோகிக்கு.

காதல், தாய்மை இரண்டு மட்டும்,
பாரம் என்பதை அறியாது!
உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால்,
பசியோ, வலியோ தெரியாது!

உன்னை மட்டும் சுமந்து நடந்தால்,
உயரம் தூரம் தெரியாது!
உன் மேல் மற்றொரு பூ விழுந்தால்,
என்னால் தாங்க முடியாது!

இந்த வரிகளை கடக்கும் போது, கோகியின் கை தானாக நீண்டு சோமாவின் தோளில் படர்ந்தது.

சற்று நேரத்தில் ஆபீஸ் வர, “bye சோமா” என சொல்லி காரை விட்டு இறங்க எத்தனித்தாள்.

“ரெண்டு நிமிஷம் இருந்துட்டு போயேன்” என ரோட்டை பார்த்தபடியே சொன்னார்.

கோகி மெதுவாக அவரின் இடது கரத்தை இறுக்கமாக பற்றிக்கொள்ள, சோமா சீட்டில் சரிந்து கண் மூடினார்.

சில நிமிடங்கள் கழித்து “கிளம்பு, ஈவினிங் வரேன் பிக்கப்புக்கு, bye” என்றார்.

மூன்று வாரங்கள் ஆனது. கோகி கிளையண்ட் விசிட் முடிந்து கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருந்தாள். ஷில்லாங் ட்ரிப் பற்றி எந்த பேச்சு வார்த்தையும் இல்லை. Anniversaryக்கு இன்னும் இரண்டு நாட்கள் தான் இருக்கிறது. இப்போது ட்ராவல் ஏற்பாட்டை செய்ய முடியுமா என யோசித்தாள்.

அப்போது ப்ரீத்தியின் கால் வந்தது. “மேம், சார் உங்களுக்கு Spa package புக் பண்ணி இருக்காரு. நேத்து உங்களுக்கு ட்ரை பண்ணேன். உங்க நம்பர் பிசியா இருந்தது. ஸ்லாட் கன்பார்ம் பண்ணிடீங்கன்னா, நான் Martinaவ உங்களுக்கு assign பண்ணிடுறேன்” என்றாள்.

“மதியம் ரெண்டு மணிக்கு வரேன்” என சொல்லி போனை வைத்தாள். சோமா ஏதோ செய்து கொண்டே இருக்கிறார். நாம் அவருக்காக என்ன செய்கிறோம் என்ற கேள்வி எழுந்தது கோகிக்கு.

என்ன செய்வது, எங்கிருந்து ஆரம்பிப்பது என புரியாமல் சோபாவில் சாய்ந்து கண் மூடி யோசித்தாள்.

சோமாவின் போன் வந்தது. “என்ன மண்டைய ஒடச்சிகிட்டு உக்காந்திருக்கியா இன்னும், ரெடியாகி கிளம்பு” என்றார். “சரி சோமா” என்றாள் அவள்.

Spa செஷன் முடிந்ததும் உடலில் தான் நீண்ட நாட்களாகச் சுமந்து வந்த ஒரு கண்ணுக்குத் தெரியாத பாரம் மெதுவாக இறங்கிவிட்டது போல உணர்ந்தாள் கோகி. தோள்களில் இருந்த இறுக்கம் தளர்ந்து கழுத்து, முதுகு, கை கால்கள் என உடலின் ஒவ்வொரு பகுதியும் மீண்டும் சுவாசிக்கத் தொடங்கியது போல் இருந்தது. பல நாட்களாக அவளையும் அறியாமல் உடலைச் சுருக்கிப் பிடித்திருந்த பதற்றம், மெதுவாகக் கரைந்து எங்கோ விலகிச் சென்றிருந்தது.

அன்று இரவு சோமா வாக்கிங் கிளம்பும் போது, கோகியும் சேர்ந்து கிளம்பினாள். “பைக் எடுத்துட்டு வரவா? ஒரு ரவுண்டு போலாமா?” என்றார் சோமா.

அவள் தலையசைக்க, நகரத்து சாலைகளை தவிர்த்து ஹைவேசில் ஒரு நெடிய பயணமாக அது இருந்தது.

“நான் கொஞ்ச தூரம் ஓட்டவா?” என்றாள். சாலையோரம் வண்டியை நிறுத்தி சாவியை கொடுத்தார்.

கோகியின் இரு தோள்களை பற்றி சற்று தூரம் வந்தவர், லேசாக அவள் மீது தலை சாய்த்து கொண்டார். இது அவரின் குறைந்த பட்ச தேவை என உணர்ந்து, சர்வீஸ் ரோட்டுக்கு மாறி ஒரு கையால் வண்டியை ஒட்டிக்கொண்டே, மறு கையால் அவர் கால்களை மென்மையாய் பிடித்து விட்டாள்.

கிட்டதட்ட இரண்டு மணி நேரம் பயணம் முடித்து வீடு வந்து சேர்ந்த போது, சோமா பல நாள் வெறுமை நீங்கியது போல உணர்ந்தார்.

அடுத்த நாள் காலை. கோகி நான்கு மணிக்கே விழுத்துக் கொண்டாள். அவள் இரண்டு முறை புரண்டு படுக்க, சோமா “ஓய், சில்வர் கேர்ள், happy anniversary!” என சொல்லி இழுத்து அணைத்துக் கொண்டார். “Happy anniversary மை சில்வர் ஜூபிலி ஹீரோ! என கோகியும் கிசுகிசுப்பாய் சொல்ல, அன்றைய plan என்ன என்று கொஞ்சம் நேரம் பேசிக் கொண்டார்கள்.

ஆறு மணிக்கே கோவிலை சென்றடைந்து, சந்நிதி முன் நின்றபோது, அவர்கள் மனக்கண்களில் பல நினைவுகள் ஓடின. முதல் சம்பளம், முதல் வீடு, குழந்தை பிறப்பு, வலி மிகுந்த நாட்கள் மற்றும் சிறு சிறு வெற்றிக்காக வந்து நன்றி சொன்ன தருணங்கள் என ஒவ்வொரு நிகழ்வும் அவர்களுக்குள் ஒரு திரைப்படம் போல விரிந்தது.

இறைவனிடம் அவர்கள் பெரிய ஆசைகளை வேண்டவில்லை. ஒரே பிரார்த்தனை:

“இத்தனை ஆண்டுகள் எங்களைப் கை பிடித்து நடத்தினதுபோல, இனியும் எங்கள் கைகளை விடாமல் வழி நடத்த வேண்டும். நாங்கள் ஒருவருக்கொருவர் தாங்கிய தோள்களாக இருந்ததுபோல், எங்கள் மனங்கள் என்றும் இலகுவாகவும் நன்றியுடனும் இருக்க அருள் செய்ய வேண்டும்”.

அன்று சாயந்திரம் ஆறேழு நண்பர்கள் வீட்டுக்கு வர, ஒன்பது மணி வரை நேரம் போனதே தெரியவில்லை. ஒவ்வொருவராய் கிளம்ப, கடைசி நபரை வழி அனுப்பி விட்டு “மெயின் டோர் பூட்டிடவா கோகி” என கேட்டார் சோமா.

மூடிய உள்ளங்கையை கோகி நீட்ட, அவர் மெல்ல அவள் விரல்களை பிரித்தால் அதில் ஒரு சாவி இருந்தது. “போலாமா?” என அவள் கேட்க, ஆச்சர்யத்தில் மூழ்கினார் சோமா.

லிப்டில் முதல் முறையாக பதினாறாவது மாடிக்கு போனார்கள். கோகி மொட்டை மாடி பூட்டை திறக்க, “வாங்க” என சொல்லி வாட்டர் டேங்க் படி மீது ஏறி மேலே போய் நின்றாள். பின்னாலேயே சோமாவும் ஏறி வர, முழு நகரமும் தங்க புள்ளிகளாக ஜொலித்துக் கொண்டிருந்தது.

“என்னடி இங்க கூட்டிட்டு வந்திருக்க?” என அவர் கேட்க, “மேகத்துக்கு நடுவுல, நீங்களும் நானும் மட்டும். சுற்றிலும் பனிமூட்டம். பக்கத்துல இருக்குற ஊரு,காடு, மலை எல்லாம் மங்கலா தெரிஞ்சாலும் பரவாயில்லை. நமக்கு நாம மட்டும் தெரிஞ்சா போதும்” என சொல்லி இறுக கட்டிக் கொண்டாள்.

அவர்கள் எவ்வளவு நேரம் அப்படியே நின்றார்கள் என்று இருவருக்கும் தெரியவில்லை. அவன் சட்டையைப் பிடித்திருந்த அவள் விரல்கள் மட்டும் இறுகிக் கொண்டே போக, அவள் முதுகில் இளம் சூடான கண்ணீர் துளிகள் ஒன்றன்பின் ஒன்றாக விழ, “லவ் யூ சோமா” என்றாள்.

அன்று இரவு அவர்கள் ஷில்லாங்கில் இல்லை. ஆனால் ஷில்லாங் தரும் அமைதியும் நெருக்கமும் அவர்களுக்குள் இருந்தது.