
கோல்கப்பா : என்ன குமாரி, தேர்தல் முடிந்து புது ஆட்சி அமைந்து இருக்கிறது! இதை எப்படி பார்க்கிறாய்?
பூரிகுமாரி : விசுவாவசு ஆண்டு முடிந்து, அடுத்ததாக பராபவ ஆண்டு கோலாகலமாக தொடங்கியிருக்கிறது கோல்..
கோல்கப்பா : ஹ்ம்ம்..புது வருஷம் ஆரம்பிச்சி ஒரு மாசத்துக்கு மேல ஆகுது..இப்போ என்னடி விசுவாசம் முடிஞ்சி போச்சின்னு சொல்ற?
பூரிகுமாரி : ஹிஹிஹி..அது விசுவாவசு கோல்..நியூஸ் அதிகமா பாத்ததால உங்களுக்கு ஊர் உலகத்துல யாரும் விசுவாசத்தோட இல்லென்ற மாதிரியே நெனைக்குறீங்க..
கோல்கப்பா : என்னமா போ..பராபவ வருஷ சித்திரையில் வந்த தேர்தல் முடிவுகள், பலரோட நித்திரையை கெடுத்திருக்குன்னு தான் சொல்லணும்.
பூரிகுமாரி : ஆமா கோல், கூடவே பல பேரோட முகத்திரையையும் சேத்து கிழிச்சிருக்கு!
கோல்கப்பா : “வைபவத்தில் வாழ்ந்தோர், பராபவத்தில் வீழ்ந்தார்ன்னு” விதி இருக்கும் போல.
பூரிகுமாரி : எவ்வளவு நிகழ்வுகள், எவ்வளவு மாற்றங்கள் இந்த மே மாதத்தில் மட்டும், கோல் ?
கோல்கப்பா : சரித்திரத்தில் முக்கியமான மே மாதம் இது. இந்த கோடை காலம், அரசியலுக்கு புதியவரை கோட்டைக்கு அனுப்பியும், பழம் தின்று கொட்டை போட்டவர்களை வேட்டையாடியும் பதம் பார்த்திருக்கிறது.
பூரிகுமாரி : உண்மை தான் கோல். குதிரை பேர அரசியல் என எதிர் கட்சிகளின் குற்றச்சாட்டையும் , குதிரை வேக அரசு இது என ஆளுங்கட்சியின் தற்புகழ்ச்சியையும் என்னவென்று சொல்வது கோல்?
(காக்க காக்க திரைப்படத்தில் வரும் “ஒன்றா ரெண்டா ஆசைகள்” பாடலை முணு முணுக்கிறார் கோல்)
கோல்கப்பா : ஒன்றா ரெண்டா குதிரைகள்,
எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா?
அன்பே பதவி கேட்கலாம், கட்சி
தாண்டினால் பதவியும் நிலைக்குமா?
(பூரி குமாரி பாடலை தொடர்கிறாள் )
பூரிகுமாரி : பேரத்துக்கு call வந்தாலே,
என் மனசில் மழையடிக்கும்!
மிகப்பிடித்த துறை ஒன்றை,உதடுகளும்
முணுமுணுக்கும்!
கோல்கப்பா : ஹிஹிஹி..கள்ளி, அப்படியே tuneஅ புடிச்சிட்ட.
பூரிகுமாரி : ஆட்சியை காக்க ஒரு தரப்பும், தங்கள் அரசியல் எதிரியை சாய்க்க மறுதரப்பும் மும்முரமாக இருக்கிறார்கள் கோல்.
கோல்கப்பா : இருக்காதா பின்னே..டப்பு என்ஜினும், டபுள் என்ஜினும் ஜிங்கிள்ஸ் மிங்கிள்ஸ் ஆகுற அளவுக்கு போய் இருக்காங்கன்னா பாத்துக்க!
பூரிகுமாரி : ஹிஹிஹி..வெளில குதிரை பேரம்ன்னு ஆளு தரப்பை விமர்சனம் பண்ணிகிட்டே, மறைமுகமா ரெண்டு பெரிய குதிரை லாயமும், ஆதாயம் தேட பாத்திருக்காங்க!
(கோல்கப்பா பாடலை தொடர்கிறார்)
கோல்கப்பா : பீதியிலே போராடும்,
சூரியனை நான் கண்டேன்!
போர்வைகளின் பின்னாலே,
யார் இருப்பாரென நான் கண்டேன்!
பூரிகுமாரி : வாவ், கோல்! அட்டகாசம் போங்க…செம ரொமான்டிக் சாங்க, எப்படி புடிச்சீங்க கோல்?
(கோல்கப்பா முத்தமிழ் அறிஞர் குரலில் சொல்கிறார்)
கோல்கப்பா : அரசியலிலே Alliance என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது. Romance என்று சொன்னால் தான் உதடுகள் ஒட்டும்!
பூரிகுமாரி : ஹிஹிஹி, அல்டிமேட் பன்ச் கோல்.நம்மளோட இந்த குதிரைங்க போஸ்டருக்கு இதுக்கு மேல லீடு குடுக்க முடியாது! நம்ம வாசகர்களுக்கு ஒவ்வொரு குதிரையை பத்தியும் சொல்லுவோம் கோல்.
கோல்கப்பா : மொதல்ல Merry go round குதிரைங்க. கடந்த அறுபது வருஷமா நம்ம மாநில அரசியல் இரு துருவங்களுக்கு நடுவே சுழன்றுகொண்டே இருக்கும் closed loop ஆகத்தான் இருந்தது. அஞ்சு வருஷத்துக்கு ஒரு முறை ஒரு கட்சி மேல ஏறும், இன்னொன்னு கீழ இறங்கும். அதனால ஆட்சி சக்கரமும் இவங்களை மட்டுமே மையமா வெச்சி சுற்றிக் கொண்டே இருந்தது.
பூரிகுமாரி : கரெக்ட். இந்த ரெண்டு கட்சிக்கு மட்டும் தான் பந்தயம்ன்னு ஒரு நிலை இருந்தது. வெற்றிக்கோப்பையை நோக்கி வெறித்தனமாக விரையும் குதிரைகள் இவர்கள். புழுதியை பறக்கவிட்டு புயலாய் களப்பணியாற்றி, இறுதி வரை போராடி, கடைசி பாய்ச்சலில் கிரீடம் சூடிய வரலாறும் இவர்களுக்கு உண்டு. பந்தயத்தில் ஜாக்கி பெயர் வாங்கலாம், ஆனால் குதிரையை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றது என்னவோ அமைதியாக உழைத்த களப்பணியாளர்கள் தான்! இந்த குதிரைக்கு சக்தி தந்தது கிராமம் தோறும் ஓடிய தொண்டர்களின் கால்கள் தான்!
கோல்கப்பா : அருமையாய் சென்னாய் குமாரி. இப்படி பல்லாண்டுகளாக மாறி மாறி ஆட்சி நடத்தியவர்கள், இன்று ஆரம்பித்து மூன்றே வருடம் ஆன கட்சி ஆட்சிக்கு வந்ததும் அதனை “பொய்க்கால் குதிரை” என விமர்சிக்கிறார்கள்.
பூரிகுமாரி : ஆமாம் கோல், நானும் அந்த விமர்சனத்தை பார்த்தேன். முதலில் இந்த கலை வடிவத்தை எதிர்மறை அடையாளமாக பார்ப்பதையே நாம் கடுமையாக கண்டிக்க வேண்டும் கோல்.
கோல்கப்பா : சரியாய் சென்னாய் குமாரி. மரக்கால்களில் நிற்பது எளிதல்ல. தடுமாறாமல் தாளத்தோடு நகர்வது அதைவிட கடினம்! குதிரை வேடம் அணிந்து அதற்கு உயிர் கொடுக்கும் அசைவுகளோடு ஆட அர்ப்பணிப்பும் வேண்டும். விழுந்துவிடும் அபாயம் இருந்தும், சிரித்தபடியே ஆடி மக்களை மகிழ்விப்பதே இந்தக் கலையின் தனிச்சிறப்பு!
பூரிகுமாரி : இப்பேற்பட்ட சிறப்பு மிக்க கலையை, போகிற போக்கில் தவறான உதாரணமாக சொன்னால் எப்படி கோல்?
கோல்கப்பா : இன்னொன்றும் சொல்கிறேன் கேள்.
காய்சின அவுணர் கடுந்தொழில் பொறாஅள்
மாயவள் ஆடிய மரக்கால் ஆடல்
சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்ட இந்த வரிகள் மரக்கால் கூத்து பற்றியது. இதுவே பிற்காலத்தில் பொய்க்கால் குதிரை ஆட்டமாக வடிவம் பெற்றது என்ற கருத்தும் உண்டு குமாரி.
பூரிகுமாரி : தானே நிரந்தரம் என கருதியவர்கள், இன்று அந்தரத்தில் தொங்குவதால் என்ன பேசுகிறோம் என தெரியாமல் இந்த மாதிரி பேசுவது தான் கவலையாக இருக்கிறது கோல்.
கோல்கப்பா : ஹ்ம்ம்..இப்போது நடக்கும் அரசியல் சதுரங்கம் மிகுந்த ஆபத்தாக இருக்கிறது குமாரி?
பூரிகுமாரி : ஏன் அப்படி சொல்கிறீர்கள், கோல்?
கோல்கப்பா : சில குதிரைகள் கருப்பாகவும் இல்லாமல், வெள்ளையாகவும் இல்லாமல் ஆட்டத்தில் இருக்கின்றன! யார்னு சொல்லு பாக்கலாம்?
பூரிகுமாரி : ஹ்ம்ம்..ஆட்சிக்கு ஆதரவு தரும் சில கூட்டணி கட்சிகள், சரியா கோல்?
கோல்கப்பா : மிக சரியாய் சொன்னாய் குமாரி. ஒரு பக்கம் இருந்து பார்த்தால் கருப்பு, இன்னொரு பக்கம் இருந்து பார்த்தால் வெள்ளை! அதனால் ஆளும் தரப்பும், எதிர்த்தரப்பும் இவர்களை தங்களுடைய குதிரை என்றே நம்புகின்றனர்.
பூரிகுமாரி : ஆளும் கட்சிக்கு கூட்டாளி போலவும், எதிர்க்கட்சிக்கு பழையபடியே நண்பன் போலவும் இருக்கிறார்கள். இன்றைய தேதியில் இவர்களின் விசுவாசம் யாருக்கு என்பதே புரியாத புதிராக இருக்கிறது கோல்! மக்களே, தேர்தல் முடிந்து மூன்று வார காலத்தில் நடந்த நிகழ்வுகளை பற்றிய எங்களின் பார்வை இது. பிடித்திருந்தால், இந்த பதிவை உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள். நன்றி!