
அவர் கணவர் ஒரு வாரம் கழித்து குணமாகி வெளியே வந்தார். பத்து நாட்கள் தொடர் சிகிச்சையில் இருந்தும் எந்த முன்னேற்றமும் இல்லை கற்பகத்திற்கு.
“சங்கு சிஸ்டர், ஜித்த பார்த்துக்குங்க” என செய்தி அனுப்பினார் இரவு. மறு காலை காலமானார். ஒரிசாவில் இருந்து மகனும் பாண்டியில் இருந்து மகளும் வர இயலாத சூழல்.
சாவின் விளிம்பு வரை சென்று மீண்ட நிலையில் பித்து பிடித்தார் போல இருந்தார் அவர் கணவர். செய்தி வர சங்கு புஷ்பமும் நேசப்பாவும் ஒடிந்து போனார்கள். நடக்க கூடாது என்று வேண்டிய ஒன்று நடந்து விட்டது.
கதறும் பிள்ளைகளை தாங்கவோ, கடந்து போனவருக்கு மரியாதை செய்யவோ இயலாத சூழல். இரண்டு மணி நேரம் அமைதியாக போனது.
சங்கு புஷ்பம் ஆனந்துக்கு போன் போட்டார்.
ஆனந்த் ஒரு மணி நேரத்தில் இரண்டு செட் கவச உடைகளை வீட்டுக்கு அனுப்பி வைத்தார். பிள்ளைகள் யாருக்கும் சொல்லாமல் இருவரும் கிளம்பி மருத்துவமனைக்கு போய் சேர்ந்தார்கள்.
அங்கே மரத்தடியில் சுருண்டு படுத்துக் கொண்டிருந்தார் கற்பகத்தின் கணவர்.
நேசப்பா போனதும் பாய்ந்து கட்டிக் கொண்டு கதறினார்.
சங்கு புஷ்பம் அவரை தாங்கலாய் பிடிக்க அப்படியே சரிந்து கீழே விழுந்தார்.
அரை மணி நேரம் ஆனது அவர் சற்று நிதானமாக.
ஜித்து போன் வந்தது அப்பாவிற்கு. அவர் போனை எடுத்து சங்கு புஷ்பத்திடம் நீட்ட உடைந்து போனார் சங்கு புஷ்பம்.
நேசப்பா கைத்தாங்கலாக அவரை அழைத்து சென்று காரில் அமர வைத்தார்.
அந்த நிமிடம் அந்த போனின் ஓசை சங்கு புஷ்பத்தின் மனதை பிசைந்தது. முதலில் அதை சைலண்டில் போட்டார். அவர்களுக்கு விஷயம் தெரியும். அப்பாவிடம் பேச விரும்புகிறாள்.
கால் ஹிஸ்டரியை பார்த்தார். வெறும் இரண்டு நிமிடம் மட்டும் பேசியிருக்கிறார்கள் காலையில். மகனிடமும் சில நிமிடங்கள்.
முழு கவச உடையில் சங்கு புஷ்பம் உள்ளே போனார். சக சிஸ்டர்கள் எல்லாரும் ஆழ்ந்த வருத்தத்திலும் பணிச் சுமையிலும் இருந்தார்கள்.
சற்று நேரம் எட்ட இருந்து கற்பகத்தை பார்த்தார்.
“சங்கு சிஸ்டர், ஜித்த பார்த்துக்குங்க” என அவரின் கடைசி செய்தி மனதில் நிழலாடியது.
ஜித்துக்கு போன் போட்டார். “அம்மாவ பாக்குறியாடா கண்ணா” என மெதுவாய் கேட்டார்.
அந்த பக்கம் கேட்ட ஓலக்குரல் சங்கு புஷ்பத்தின் திடத்தை அசைத்துப் பார்த்தது. மகளும் மகனும் பார்த்து கதற அந்த சிறிய போனை பிடிக்கக்கூட வலுவில்லாமல் நின்றார் சங்கு புஷ்பம்.
பிறகு அங்கு வந்த ஆனந்த், வலுக்கட்டாயமாய் சங்கு புஷ்பத்தை வெளியே அழைத்து வந்தார்.
அங்கே இருந்த சிறிய கட்டை சுவரின் மீது அமர்ந்தார் சங்கு புஷ்பம். சற்று நேரத்தில் வண்டி வர இறுதி சடங்கிற்கு கிளம்பினார்கள்.
எட்ட நின்றவாறு நேசப்பாவும் சங்குபுஷ்பமும் அவரவர் போனில் ஜித்துக்கும் அவர் அண்ணனுக்கும் காண்பித்தார்கள். சிம்பிளாக சில சாங்கியங்களை அவர் கணவர் செய்ய ஐந்து நிமிடங்களில் உள்ளே போனார் கற்பகம்.
ஆறாத்துயருடன் மகளும் மகனும் விடையளிக்க வீடு வந்து சேர்ந்தார்கள் இருவரும்.
அடுத்த இரண்டு நாட்கள் அவர்கள் இருவரின் போனும் அமைதியாக இருந்தது. யாருடனும் பேசும் மன நிலையில் அவர்கள் இல்லை.
அவர்கள் இருவருமே ஓரிரண்டு வார்த்தைகளை தவிர வேறு எதுவும் பேசவில்லை. இரண்டு வாரங்கள் கழித்து சற்று கட்டுப்பாடுகள் தளர்ந்ததும் அழைத்து செல்ல மகன் வர கற்பகத்தின் கணவர் ஒரிசா கிளம்பினார்.
ஜித்து வந்து அவர்களை வழியனுப்பி பிறகு இவர்களை சந்தித்து பேசி விட்டு பாண்டிக்கு கிளம்பி போனாள்.