
ஜித்து வாரம் முழுவதும் சென்னையில் அம்மா வீட்டில் இருந்து வேலைக்கு போய் வருவதால், வார இறுதி நாட்களில் பாண்டி போய் இரண்டு நாட்கள் தங்கிவிட்டு திங்கள் காலை அங்கிருந்து சென்னைக்கு திரும்ப வருவாள். ஆரம்ப கால கட்டத்தில் அது யாருக்கும் பிரச்சினையாக இல்லை. ஒரு வருடம் கழித்து ஜித்து கர்ப்பமான பிறகு அவளுடைய பயணம் கணிசமாக குறைய ஆரம்பித்தது. அந்த சமயத்தில் ராஜு வாரம் தவறாமல் வந்து பார்த்துக் கொள்வான். ஆனால் மாமனாருக்கு இதில் உடன்பாடில்லை.
“ஏம்மா, நம்ம காரைக்கால் பை பாஸ் ரோடுல ஒரு இன்ஜினியரிங் காலேஜ் இருக்கில்ல. அதுல வேணா வேலைக்கு ட்ரை பண்ணேம்மா. வீட்லேர்ந்து கால் மணி நேரத்துல போயிடலாம்” என அடிக்கடி சொல்ல ஆரம்பித்தார்.
டீச்சிங் வேலையில் ஜித்துக்கு விருப்பமில்லை. ஜித்து ஒரு முழு நாளில் வேலை நேரத்தில் பேசும் வார்த்தைகளை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆனால் அந்த விரல்களுக்கு ஓய்வில்லாமல் தொடர்ந்து டைப் செய்து கொண்டிருப்பாள்.
எந்த ஒரு கவனகுறைவுமின்றி, நூறு சதவீத துல்லியத்தோடு தகவல்களை சேகரித்து பைல் செய்து அனுப்ப வேண்டும். பெரும்பாலும் வீட்டில் ஓரு தனி அறையில் அமர்ந்து வேலை செய்து பழகியவள்.
“இல்ல மாமா, எனக்கு காலேஜ் வேலைல விருப்பமில்லை” என ஒரு நாள் தெளிவாக கூறி விட்டாள்.
அவர் இந்த சுருக்கமான, நேரிடையான பதிலை எதிர்பார்க்கவில்லை. ஆனால் இதே நிலை தொடர்ந்தால் குழந்தை பிறந்த பிறகும் அவர்கள் இரு வேறு இடங்களில் பிரிந்தே வாழ வேண்டிய நிலை தொடரும்.
அவர் இந்த விஷயத்தை ராஜுவிடம் தெளிவாக விளக்கினார். காமாட்சிக்கு அது தான் சரி என பட்டது. நாளை பேரனோ பேத்தியோ பிறந்த பிறகு அவர்களை அங்கேயே தொடர்ந்து தங்க வைப்பது சரி இல்லை என யோசித்தார்.
டெலிவரி முடியட்டும். பிறகு பார்க்கலாம் என சொன்னான் ராஜு.
காமாட்சியும் குமரேசனும் இந்த விஷயத்தை சம்பந்தியிடம் தனியாக விவாதித்தார்கள்.
“இதே மாதிரி இருந்தா அவங்க எப்போ ஒரு எடத்துல குடுத்தனம் பண்றது? ராஜுவும் குழந்தையும் எவ்வளவு நாள் பிரிஞ்சி இருக்குறது? சின்ன குழந்தையை வாரா வாரம் தூக்கிட்டு அங்க வர முடியுமா? நீங்க கொஞ்சம் எடுத்து சொல்லுங்க” என சொல்லி வைத்தார்கள்.
கற்பகம் பிரசவம் முடியட்டும் என காத்திருக்கவில்லை. மெதுவாக ஜித்துவிடம் நிலைமையை விளக்க ஆரம்பித்தார்.

“மா, என்னை சென்னைல இருந்து வேலை செய் அப்படின்னு சொல்லி தானே ரெண்டு பேமிலியும் சொன்னீங்க. இப்போ பாண்டி போனு சொன்னா அங்க போய் நான் என்ன பண்றது?” என கோபமாக கேட்டாள்.
“சொன்னோம்டி. அதுக்காக அதே ஸ்டாண்ட்ல இருக்க முடியுமா? வாழ்க்கை எப்படி போகுதோ அதுக்கு ஏத்த மாதிரி கொஞ்சம் நாமளும் அட்ஜஸ்ட் பண்ணனும். அவங்களும் பாரு, ரெண்டு வருஷம் பொறுமையாதானே இருந்தாங்க. அப்புறம் குழந்தையும் பிரிஞ்சி இருக்கணும்னா வேதனையா தானே இருக்கும்” என சமாதானப்படுத்தினார் கற்பகம்.
“அங்க போய் என்னை பீச்ல குச்சி ஐஸ் விக்க சொல்றியா” என கூர்மையாய் கேட்டாள் ஜித்து.
“ஏண்டி சத்தாய்குற, அங்க என்ன பணத்துக்கா பஞ்சம். நீ கொண்டு வந்து தான் சோறு பொங்க போறாங்களா” என கோபமாய் கேட்டார் கற்பகம்.
“மாப்பிளைக்கு கவர்ன்மென்ட் வேலை. மாத்திக்கிட்டு வேற எடத்துக்கு வர முடியாது. உனக்கு என்ன? தனியார்ல தானே வேல பாக்குற. அங்க போய் உனக்கு என்ன வேலை கிடைக்குதோ செய்” என காட்டமாய் சொன்னார்.
“நானா கவர்ன்மென்ட் மாப்பிளை கேட்டேன்? தெளிவா இந்த இடம் வேணாம்னு சொன்னேன். அத இதை சொல்லி கன்வின்ஸ் பண்ணிட்டு இப்போ பாண்டிக்கு போனு சொல்றீங்க. அங்க எங்க பீல்டுக்கு கம்பெனிங்க எதுவும் இல்ல. என்ன பண்ண சொல்ற இப்போ” என குமுறினாள் ஜித்து.
“ஏண்டி நெற மாசமா இருக்குறப்போ பேசுற பேச்சா இது. இந்த நேரத்துல போய் வரன் பாத்த கதையை கொறை சொல்ற. நாங்க சமாதானமா சொல்லுறோம். இப்பவே நீ முடிவு பண்ணு டெலிவரிக்கு அப்புறம் அங்க எப்போ போக போறேன்னு. அவங்க எப்படியும் முறையா வந்து கூப்பிடுவாங்க. அப்போ ஏதாவது வில்லங்கம் பண்ணாதே. எங்களால அவங்களுக்கு பதில் சொல்ல முடியாது” என தீர்க்கமாய் சொன்னார் கற்பகம்.
அம்மாவின் பேச்சிலிருந்து, இது தான் அப்பாவின் நிலைப்பாடும் என தெரிந்து கொண்டாள் ஜித்து.
“சரி நா ராஜூகிட்ட பேசுறேன். எனக்கு அந்த ஊருல ஸ்கோப் கிடையாது. அவர் வேணா வேற வேலைக்கு ட்ரை பண்ற ஐடியா இருக்கானு கேக்குறேன். அவரும் என்ஜினீயர் தானே. ரெண்டு பேருக்கும் எந்த ஊருல வேலை கிடைக்குதோ அங்கே போறோம். அத்தை மாமா எங்களோட வந்து இருக்கட்டும்” என தன் யோசனையை சொன்னாள் ஜித்து.
“ஒரு புண்ணாக்கும் வேணாம். ஊர்ல எல்லாரும் கவர்ன்மென்டு வேலை கெடைக்கணும்னு வேண்டிக்குறாங்க. ஒரே எடத்துல நிரந்தரமா இருக்கலாம். நீ என்னடான்னா பொட்டிய தூக்கிட்டு ஊர் ஊரா சுத்துறேன்ற. அவங்க இதை எப்படி ஒத்துக்குவாங்க. ஊரு உலகத்துக்கு யாரு பதில் சொல்றது. குமரேசன் அண்ணன் ஒரு மாதிரியான மனுஷன். நாம தன்மையா இருந்தா தங்கமா தங்குவார். ஆனா எனக்கு தெரிஞ்சு அவரு புள்ளைய அவரு வேலைய விட சொல்ல மாட்டாரு. நீ சொல்றதையெல்லாம் யாரும் கேக்க மாட்டாங்க. ராஜூ என்ன நீ கண்டிப்பா வேலைக்கு போய் சம்பாதிச்சிப் போடணும்னு சொல்றாரா என்ன?” என மூச்சு முட்ட பேசினார் கற்பகம்.
“ராஜு சொல்லித்தான் நீ என்ன எல் கே ஜி சேத்தியா? இல்ல நான் என்ஜினீயரிங் படிச்சேனா? என திருப்பிக் கேட்டாள் ஜித்து.
“இந்த வியாக்யானம் வௌக்குமாறெல்லாம் எங்க கிட்ட பேசாதே. உன் ஆபீஸோட வச்சிக்க. எங்களால இத அவங்ககிட்ட பேச முடியாது. நீயும் இந்த டாபிக்கை இதோடு விட்டுடு. அவங்க காதுக்கு போய் ஏதாவது ஏடாகூடமா பேசிட்டா நம்ம மரியாதையை நாமளே கெடுத்துக்கிட்ட மாதிரி ஆகும். ஒரு தடவை மரியாதை போச்சுன்னா அப்புறம் காலத்துக்கும் அனுபவிக்கனும்” என முட்டுக்கட்டையை ஸ்ட்ராங்காக போட்டார் கற்பகம்.
“அட்லீஸ்ட் நா ராஜு கிட்ட ஒரு தடவ இதை பத்தி பேசுறேன். அப்புறம் மாமா கிட்ட சொல்லிக்கலாம்” என இழுத்தாள் ஜித்து.
“டெலிவரி நேரம் இப்போ. ரெண்டு குடும்பமும் ரொம்ப சந்தோஷமா இருக்கோம். இந்த நேரத்துல தேவையில்லாத பேச்செல்லாம் பேசி குழந்தை பொறக்குறப்போ அவங்க மூஞ்ச திருப்பிட்டு போற மாதிரி எதுவும் பண்ணிடாதே. கொஞ்ச நாளைக்கு வேலைய விட்டுட்டு குழந்தைய பாத்துக்க. அப்புறம் அங்க உனக்கு ஏத்த மாதிரி என்ன வேலை கிடைக்குதோ அதுல போய் சேந்துடு. எண்ணை கம்பெனிலயே வாழ்க்கை முழுக்க வேலை செய்யணும்னு ஒரு கட்டாயமும் இல்லை” என விடாப்பிடியாய் பேசினார் கற்பகம்.
“மா, ராஜு இது வரை என்னை ரிசைன் பண்ண சொல்லி எப்பவும் சொன்னதில்லை” என அதிர்ச்சியாய் சொன்னாள் ஜித்து.
“அப்போ நீ மட்டும் இது வரை டெய்லி சொல்லிட்டிருந்தியா கவர்ன்மென்டு வேலைய விடுங்கன்னு? நீ இப்போ போய் அவரை வேலைய விட சொன்னா அவரு என்ன நெனப்பாரு” என மூர்க்கமாய் கத்தினார் கற்பகம்.
“மா, நா வேலைய விட சொல்லல. வேற வேல பாத்துக்கலாம்னு சொல்றேன். க்ளியரா புரிஞ்சிக்கிட்டு பேசு. என்ன மட்டும் ரைட் ராயலா வேலைய விட சொல்ற. திருப்பி நா கேட்டா ஒலகமே புரண்ட மாதிரி கத்துற?” என நிதானமாய் கேட்டாள் ஜித்து.
இது முட்டு சந்தில் நிறுத்தும் கேள்வி கற்பகத்திற்கு. ஒரு நிமிடம் வாயடைத்து நின்றார் அவர்.
“மா, இங்க பாரு. எனக்கு எட்டு வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு. கஷ்டப்பட்டு வேல செஞ்சுதான் நா இந்த பொசிஷன்ல இப்போ இருக்கேன். சென்னைக்கு வந்ததே எனக்கு டவுன் தான். இப்போ என்னடான்னா அசால்ட்டா வேலைய ரிசைன் பண்ண சொல்லுற? கல்யாணம் ஆனா குழந்தை பிறக்கும், குடும்பம் பெரிசாகும், வேற வேற ஊர்ல இருந்தா சரிப்படாது, சென்னைக்கு வரலேன்னு சொன்னேனே அப்போ என்ன சொன்ன என்கிட்டே? அதெல்லாம் நாங்க பாத்துக்கறோம். உன் வேலைக்கு ஒரு பிரச்சினையும் இல்லேன்னு சொல்லிட்டு இப்போ மாத்தி பேசுர” என சீறினாள் ஜித்து.
“இது என்ன உங்க கம்பெனில போடுற மாதிரி கான்ட்ராக்டா? குடும்பம்டி, சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி நாம தான் விட்டு கொடுக்கணும்” என பணிவாய் சொன்னார் கற்பகம்.
“நாம இல்ல, நா விட்டு குடுக்கணும்னு சொல்ற இப்போ. இது எனக்கு மட்டும் தான் குடும்பமா? அவங்களுக்கு இல்லியா?” என திருப்பிக் கேட்டாள் ஜித்து.
இது லேசில் முடிகிற காரியமாக தெரியவில்லை கற்பகத்திற்கு. இவள் முரண்டு பிடிவாதம் நியாயமாகதான் பட்டது. ஆனால் சம்மந்தி வீட்டில் அதை சொல்லும் தைரியம் ஜித்துவின் பெற்றோருக்கு இல்லை.
இந்த விஷயம் தங்களுக்குள்ளேயே முடிந்து டெலிவரி ஆன பிறகு சுமுகமாக ஜித்து பாண்டி கிளம்பி போய் செட்டிலாக வேண்டும் என்பதுதான் அவர்கள் எண்ணம்.
ஜித்துவுக்கு அம்மாவின் பேச்சு எரிச்சலாக இருந்தது. “நல்லா படி, அப்போ தான் நல்ல வேலைக்கு போய் சுயமா வாழ முடியும். பொம்பளைங்க கைல எப்பவும் வருமானம் இருக்கணும். இல்லேன்னா ஒரு நாய் மதிக்காது. நானே இந்த நர்ஸ் வேலைல இல்லேன்னா உங்க அப்பா இன்னும் கொஞ்சம் ஆட்டம் போடுவாரு. சொளையா ஒண்ணாந்தேதி காசு வந்து விழவே தான் வால சுருட்டிக்கிட்டு இருக்காரு” இது நினைவு தெரிந்த நாளிலிருந்து ஜித்துவுக்கு அவள் அம்மாவிடமிருந்து கிடைத்த அறிவுரை.
அது வேற வாய். இது நார வாய் என்ற நிலையானது இப்போது.
அந்த வார இறுதியில் ராஜு வீட்டுக்கு வந்தான். கற்பகத்துக்கு உதறல் ஆரம்பித்தது. இவள் வாய் சும்மாயிருக்காது. எப்படியும் கேட்டு விடுவாள். தனியாக போய் ஜித்துவிடம் எச்சரித்தார்.
“மா, இது என் லைப். நா பாத்துக்கறேன். உனக்கு எதுவும் டேமேஜ் ஆகாது. நீ இனிமே இதுல தலையிடாதே. உங்க பேச்ச எல்லாம் நம்பி இருந்தேன் பாரு. என்னை சொல்லணும். இது வேலை மட்டும் சம்மந்தப்பட்டது கிடையாது. எங்க பைனான்ஸ் விஷயங்களையும் நாங்க டிஸ்கஸ் பண்ணனும். ராஜுவுக்கு என்ன மைண்ட்ல இருக்குனு நா தெரிஞ்சுக்கணும். என் நிலைமையும் அவருக்கு தெரியணும். இது மூடி வெக்குற விவகாரம் கிடையாது. உங்க சம்மந்தி பாசத்துக்கு ஒரு பங்கமும் வராம நாங்களே முடிவெடுக்குறோம்” என சொல்லி முடித்தாள் ஜித்து.
இந்த கால பிள்ளைகள் பிரச்சினையை எதிர் கொள்ள தயங்குவதும் இல்லை, பிரச்சினையே இல்லாமல் ஒதுங்கி போக வேண்டும் என்றும் நினைப்பதில்லை.
கார்ப்பொரேட் ரத்தம் என நினைத்துக் கொண்டார் கற்பகம்.



