
அன்று வியாழக்கிழமை. காலையில் எழுந்து காபி குடித்துக்கொண்டே, பால்கனியில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் சங்குபுஷ்பம். நேசப்பா விடியற்காலையில் எழுந்து விடுவார். வெயிலுக்கு முன் கிச்சன் வேலைகளை முடிப்பது அவர்கள் வழக்கம். ஒன்பது மணிக்குள் சமைத்து முடித்து, பிறகு அன்றாட வேலைகளை கவனிப்பார்கள்.
உள்ளே மிக்சி சத்தம் கேட்டது. காலை டிபன் நேசப்பா ரெடி செய்துவிடுவார். கூடவே மதிய உணவுக்கான எல்லா காய்களையும் நறுக்கி வைத்து விடுவார். அரிசியும் பருப்பும் ஊற வைத்து, இஞ்சி பூண்டு உரித்து, கறிவேப்பிலையையும் தேவையான அளவு அலசி வைத்து விடுவார்.
சங்கு புஷ்பத்திற்கு காலையில் எழுவது சற்று சிரமமான காரியம். கால் நரம்பு வலியால் பல நாட்கள் இரவு சரியான தூக்கம் இருக்காது. விடியற்காலையில் சிறிது நேரம் அயர்ந்து தூங்கி விடுவார். எழுந்ததும் முழு மூச்சாக எந்த வேலையும் செய்ய முடியாது.
எட்டு மணிக்கு பிறகு தான் அவரால் சற்று நடக்க முடியும். எனவே நேசப்பா எல்லா ஏற்பாடுகளையும் தயார் செய்து விடுவார். சங்குபுஷ்பம் கிச்சன் உள்ளே போனால் அரை மணி நேரத்தில் மதிய உணவை செய்து முடித்து விடுவார்.
மணி ஏழேமுக்கால் ஆனது. போன் அடித்தது. ஜிதேஸ்வரியின் அழைப்பு.

“சங்குமா, எழுந்துட்டீங்களா? நா டிஸ்டர்ப் பண்ணிட்டேனா” என்றாள்.
“இல்ல ஜித்து, சொல்லு, எப்ப வர?” என்றார் சங்குபுஷ்பம்.
“நைட் ப்ளயிட் இங்க. காலைல நாலு மணிக்கு நம்ம ஏர்போர்ட்டுக்கு வந்துடுவேன். நா பாண்டி போகல. வீட்டுக்கு தான் வரலாம்னு இருக்கேன்” என தயங்கியபடி சொன்னாள் ஜிதேஸ்வரி.
“வா வா” என சொன்னார் சங்குபுஷ்பம்.
“அப்புறம் ஒர்க்ஷாப்பு எப்படி போச்சு?” என விசாரித்தார். ஐந்து நிமிடம் பேசி முடித்து பிறகு கிச்சன் சேரில் போய் உட்கார்ந்தார். நேசப்பா போனில் பாட்டு கேட்டபடியே வேலையில் மும்முரமாய் இருந்தார்.
“ஏங்க நாளைக்கு காலைல ஜித்து வீட்டுக்கு வரேன்னு சொன்னா. ரெண்டு மூணு நாள் இங்க இருந்துட்டு அப்புறம் பாண்டிக்கு போறாளாம்” என சொன்னார் சங்குபுஷ்பம்.
“காலைல எத்தனை மணிக்கு ஏர்போர்ட் வருது? நா போய் கூட்டிட்டு வரேன்” என்றார் நேசப்பா.
“நாலு மணிக்கு வண்டி லேண்ட் ஆகுமாம்.வெளில வர நாலரை ஆகும்னு சொன்னா. உங்களை அனுப்புறேன்னு சொன்னேன். வேணாம், நானே டாக்சி புடிச்சி வரேன்னு சொல்றா” என்றார் சங்குபுஷ்பம்.
“அது அப்படி தான் சொல்லும். அதுக்காக நாம போகாம இருக்க முடியுமா? நா போறேன்” என்றார் நேசப்பா.
“சரிங்க, நீங்க போயிட்டு வாங்க. குமார காலைல மூணு மணிக்கு வர சொல்லிடுங்க. விடியற்காலைல நீங்க ஓட்ட வேணாம்” என்றார் சங்குபுஷ்பம்.
டிபன் சாப்பிட்டு முடித்து மாத்திரை போட்டு ஆளுக்கொரு புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தார்கள்.
லக்ஷ்மியின் போன் வந்தது. “மா, நா நாளைக்கு நைட்டு வீட்டுக்கு வரேன். ஜித்து பேசுனா காலைல. பசங்கள கூட்டிட்டு என்ன அங்க வர சொல்லிட்டா. நா சாயந்திரம் காலேஜ் முடிச்சிட்டு அப்டியே பசங்கள கூட்டிட்டு ஒரு ஆறு மணிக்கு கெளம்பிடுவேன்” என்றாள்.
“சரி, காமாட்சி ஆன்ட்டி கிட்ட சொல்லி பசங்க பேக ரெடி பண்ண சொல்லிட்டியா?” என்றார் சங்கு புஷ்பம். காமாட்சி ஜிதேஸ்வரியின் மாமியார். நல்ல குணமான பெண்மணி.
“அவங்க கிட்டயும், பசங்க கிட்டயும் காலைல ஸ்கூலுக்கு போறதுக்கு முன்னாடியே ஜித்து போன் பண்ணி சொல்லிட்டாளாம்” என்றாள் லக்ஷ்மி.
வரும் வாரம் திங்கள், செவ்வாய் இரண்டு நாட்களும் பொது விடுமுறை. அரிதாக நான்கு நாட்கள் தொடர்ந்து கிடைக்கிறது.
லக்ஷ்மி சங்குபுஷ்பத்தின் இளைய மகள். பாண்டியில் கல்லூரியில் ப்ரொபஸராக இருப்பவள். ஜித்தும் லக்ஷ்மியும் தோழிகள். சற்று ஏறக்குறைய ஒரே வயதுடையவர்கள்.
ஜிதேஸ்வரி சங்குபுஷ்பம் பெறாத மகள். அவருடன் நர்ஸாக பணிபுரிந்த கற்பகம் சிஸ்டரின் மகள். இருவரும் பணிக்காலம் முழுவதும் ஓரே இடத்தில் வேலை பார்த்தவர்கள்.
ஜிதேஸ்வரி பிறந்ததும் அவரை முதலில் கையில் ஏந்தியவர் சங்குபுஷ்பம். ஜிதேஸ்வரி மட்டுமில்லை. அவர்கள் குடும்பத்திலும், நட்பு வட்டாரத்திலும் பெரும்பாலான குழந்தைகளை முதலில் அணைத்துக் கொண்டவர்
சங்குபுஷ்பம். யார் தெரிந்தவர்கள் பிரசவத்திற்காக சேர்ந்தாலும், அவர் ஷிப்ட் முடிந்த பின்பும் காத்திருந்து, தாயையும் சேயையும் நல்லபடியாக பார்த்த பிறகு தான் வீட்டுக்குப் போவார்.
கற்பகம் சில வருடம் முன்பு நோய் தொற்றால் பாதிக்கப்பட்டார். அவரின் இறுதி நாட்களில் நேரில் போய் பார்க்க முடியாத சூழல்.
கற்பகத்திற்கு அவரின் உடல் நிலை புரிந்து விட்டது. அவர் கணவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஒரே மகன் ஒரிசாவில் இரும்பு கம்பெனியில் வேலை செய்கிறான்.
ஜிதேஸ்வரி திருமணமாகி பாண்டியில் குடும்பத்துடன் வசித்து வருகிறாள்.
கற்பகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் சங்கு புஷ்பத்திற்கு போன் பேசினார். நேசப்பாவும், அவரும் அந்த தம்பதிகளுக்கு ஆறுதலாக இருந்தார்கள்.
நேசப்பா சற்று தைரியசாலி, ஆனால் மென்மையான மனம் கொண்டவர்.
சங்கு புஷ்பம் எவ்வளோ சொல்லியும் கேட்காமல் சர்வ ஜாக்கிரதையாக பயணித்து அவர்களுக்கு தேவையான உணவையும் புத்தகங்களையும் கோவில் ப்ரசாதங்களையும் மருத்துவமனை வாசலில் கொண்டு சேர்த்து விடுவார்.
சங்குபுஷ்பம் வார்டு பாய் ஆனந்திடம் சொல்லி வைத்து விடுவார்.
“ஏன் மேடம் சார் வெளில வரார்? இங்க நெலமை ரொம்ப மோசமா இருக்கு. அவங்களுக்கு என்ன தரணும்னு சொல்லுங்க. நா ஏற்பாடு பண்ணுறேன்” என்றார் ஆனந்த்.


















