
ஒரு கையில் ஜிம் பேகும், மறு கையில் தண்ணீர் பாட்டிலும் இருக்க, கை முட்டியால் டோர் பெல்லை அழுத்தினாள் ரோஸ்மேரி.
“அவுத்து விட்ட மாடு மாதிரி எங்க போயிட்டு வர?” என கதவை திறந்தபடியே கேட்டான் அருண்.
ஒரு கணம் சுற்றுமுற்றும் பார்த்தாள் அவள். யாரும் வெளியில் இல்லை. உள்ளே நுழைந்து ஷூவை கழட்டி ஸ்டாண்டில் வைத்து விட்டு ஹாலில் வந்து உட்கார்ந்தாள்.
ஒன்பது வயது பென்னி ஓரக்கண்ணால் பார்த்தபடியே வீட்டுப்பாடம் எழுதி கொண்டிருந்தது.
“சுஜியோட நாத்தனார பொண்ணு பாக்க சேலத்துலேர்ந்து மாப்பிள்ளை வீட்டுக்காரங்க சாயங்காலம் வராங்களாம். அவ மாமனார் மாமியார் ரெண்டு பேரும் வீட்டுக்கு வந்து நம்மள வர சொல்லி கூப்டுட்டு போனாங்க. இன்னைக்கு காந்தி ஜெயந்தி, பப்ளிக் ஹாலிடே, அதனால எல்லாரும் வீட்ல இருப்போம்னு சொல்லிட்டு போக வந்தாங்களாம். நீ என்னடான்னா ஊர் மேஞ்சிட்டு வர?” என கத்தினான் அருண்.
சுஜி அருணின் பெரியப்பா மகள். அருணை விட எட்டு வயது மூத்தவள். இருவரும் ஒரே ஏரியாவில் குடியிருப்பதால் இரு குடும்பங்களுக்கும் நெருக்கம் அதிகம்.
“காந்தி ஜெயந்தி அன்னைக்கு டாஸ்மாக்கு தான் மூடி இருக்கும். ஜிம்முக்கு போறதுக்கு என்ன பிரச்சினை?” என கால் விரல்களை நீவி விட்டபடியே கேட்டாள் ரோஸ்மேரி.
அருணுக்கு அஹிம்சை முறையில் அடி வயிற்றில் கத்தியை இறக்கினாள் அவள்.
“இன்னைக்கு வராங்கன்னு தெரிஞ்சு தானே காலைல பேட்மிட்டன் விளையாட போகாம வீட்ல இருந்தீங்க? நான் கிளம்பும் போதே சொல்லி இருந்தா வீட்லயே இருந்திருப்பேன்ல?” என தொடர்ந்தாள் ரோஸ்மேரி.
பென்னி எழுதுவதை நிறுத்தி விட்டு டேபிளில் தலையை குனிந்து கொண்டது.
“ஏன் மேடம் மேனேஜர் போஸ்ட் பந்தாவ எல்லாருகிட்டயும் காட்டுவீங்களா? ஸ்லாட் புக் பண்ணிட்டு வந்தா தான் உங்களை பாக்க முடியுமோ?” என இழுத்தான் அருண்.
“பென்னி, கெவின் வீட்டுக்கு போய் பழைய பேப்பர் கொஞ்சம் வாங்கிட்டு வா. மத்தியானம் ஆக்ட்டிவிட்டி பண்ணலாம்” என சொல்லி விட்டு குளிக்க போனாள்.
பாத்ரூமிற்குள் நுழைந்து தாளிட்டதும், ரோஸ்மேரி வேகமாக ஆடைகளை களைந்து ஹாங்கரில் போட்டாள்.
தலையிலிருந்து கால் வரை தன் மீது வீசப்பட்ட வார்த்தை அழுக்குகள் போக அப்படியே ஷவரில் நின்று கொண்டிருந்தாள்.
“அவுத்து விட்ட மாடு மாதிரி எங்க போயிட்டு வர?” என்ற வார்த்தைகள் அவளை கடும் கோபத்துக்கு ஆளாக்கி இருந்தன.
இதற்கு அழுகை தேவையில்லை என தனக்கு தானே சொல்லிக் கொண்டாள். முதல் நாளே இந்த காட்சிக்கான ஒத்திகை வேறொரு மனதில் நடந்திருக்கிறது. அது இன்று அரங்கேற்றப் பட்டிருக்கிறது.
சமீபமாய் கற்றுக் கொண்ட, மொத்த கெட்ட வார்த்தைகளையும் வரிசையாக சொல்லிப் பார்த்தாள். சற்றே திருப்தியாக இருந்தது.
குழாயை நிறுத்தி தலை துவட்டியபடியே இந்த நாளை எப்படி கடப்பது என யோசித்தாள். குளித்து விட்டு வெளியே வந்தவுடன் “அம்மா, சுஜி அத்தை போன் பண்ணி இருக்காங்க” என ஓடி வந்தான் பென்னி.
“ரோஸ், அஞ்சு மணிக்கு வந்துடும்மா. கனி ஹெவி மேக்கப் எல்லாம் வேணாம், பார்லர் போக மாட்டேன்னு சொல்லுது. நீ கொஞ்சம் சீக்கிரம் வந்து மைல்டா டச்சப் பண்ணி விட்டுடுமா. அப்புறம், ஒரு இருபத்தியஞ்சு டிபன் நைட்டுக்கு ஆர்டர் பண்ணி இருக்கோம். அதனால் நீ எதுவும் செய்யாத” என சரளமாக பேசிக் கொண்டே போனாள் சுஜி.
“சரிங்க அண்ணி, வந்துடறேன்” என சில வார்த்தைகள் பேசி விட்டு போனை வைத்தாள் ரோஸ்மேரி.
ட்ரையர் போட்டு தலையை காய வைத்து விட்டு, “பென்னி, பேப்பர், சிசர் எல்லாம் எடுத்துட்டு வா” என கூப்பிட்டாள்.
வெறும் கையேடு பென்னி வந்து மடியில் உட்கார்ந்து கொண்டான்.
“நீ சேடா இருக்கியா?” என்றான்.
“சேடா இல்ல..வார்மா இருக்கேன். தலைக்கு சூடா ட்ரையர் போட்டிருக்கேன் இல்ல?” என கண் சிமிட்டி சிரித்தாள்.
“இல்லை, டாடி பேசினது rudeமா” என்றான்.
“May be அவர் ஏதாவது டென்க்ஷனா இருந்திருப்பார். Its okடா ” என்றாள் அவள்.
பென்னி எழுந்து போவதாய் இல்லை. “டைமாகுது பாரு. சாயந்திரம் அத்தை வீட்டுக்கு போயிடுவோம். எல்லாத்தையும் எடுத்துட்டு வா” என சொல்லி அனுப்பினாள்.
சற்று நேரத்தில் மீண்டும் மீதும் சுஜியின் போன் வந்தது. “சாரி ரோஸ். அருண் அப்படி உன்கிட்ட பேசி இருக்கக் கூடாது. அம்மா போன் பண்ணி சொல்லி வருத்தப்பட்டாங்க. நான் நைட் அவன்கிட்ட பேசுறேன்” என சொல்லி விட்டு போனை வைத்தாள்.
எப்படி அத்தை வரை விஷயம் போனது என அவளுக்கு புரியவில்லை. கால் லாக் செக் செய்ததில் அத்தையின் போன் வந்தது தெரிய வந்தது அவளுக்கு.
“பென்னி, இங்க வா” என கூப்பிட்டாள்.
“பாட்டி போன் பண்ணாங்களா?” என கேட்டாள்.
“ஆமாம். நீ பாத்ரூம்ல இருந்த. அதான் நான் அட்டென்ட் பண்ணி பேசுனேன்” என்றான்.
“அவங்க என்ன கேட்டாங்க? நீ என்ன சொன்ன?” என கேட்டாள்.
“அம்மா கிட்ட அர்ஜெண்டா பேசணும், போன குடுடான்னு சொன்னாங்க. நான் அவுத்து விட்ட மாடு இப்போ குளிக்குதுன்னு சொன்னேன்” என குண்டை தூக்கிப் போட்டான்.
“பென்னி..” என அவனை தீர்க்கமாய் பார்த்தாள் ரோஸ்மேரி.
“எனக்கு குட் மேனர்ஸ், பேட் மேனர்ஸ் நீதான் சொல்லி தர்ற. அவருக்கு அவங்க மம்மி தான சொல்லி தரணும்?” என நீட்டி முழக்கி பேசியது.
“பென்னி, அப்பா பேசினது தப்பு தான். ஆனா அது நம்ம பேமிலி மேட்டர். இனிமே இந்த மாதிரி அதிகப்ரசங்கி வேலை எல்லாம் பாக்காத. புரியுதா?” என்றாள்.
அவன் முழித்தபடியே, “பாட்டியும் நம்ம பேமிலி தானே?” என்றான்.
நாலு சுவரை தாண்டியவர் அவர் என எப்படி சொல்லி விளங்க வைப்பது என அவளுக்கு தெரியவில்லை.
“இங்க பாரு, பாட்டி, தாத்தா, அப்புறம் அத்தை எல்லாம் நம்ம பேமிலி தான். ஆனா இந்த வீட்டுக்குள்ள நாம மூணு பேரு மட்டும் தான் இருக்கோம். அதனால இனிமே வீட்டுக்குள்ள நடக்குற பர்சனல் விஷயங்களை எல்லார் கிட்டேயும் பேசிகிட்டு இருக்காத? புரியுதா?” என அதட்டினாள்.
ராஜமாதா கனி மேக்கப் விஷயமாக பேச போன் போட்டு இருப்பார். பென்னி நடந்தை சொல்ல, உடனே சுஜிக்கு சொல்லி இருக்கிறார். “அவன் காலைலயே ஏதோ ஏடாகூடமா பேசி வெச்சிருக்கான். நீ போன் போட்டு அவளை சமாதானப்படுத்து” என ரிலே செய்திருக்கிறார். இதற்குள் எதார்த்தமாக சுஜி பேசி விட, மீண்டும் போன் செய்து சாரி சொல்லி இருக்கிறாள்.
வாரம் முழுக்க வேலை செய்து விட்டு சனி ஞாயிறு ரிலாக்ஸ் செய்யலாம் என்றால், ஏதாவது ஒரு ஏழரை வந்து நிற்கிறது என நினைத்துக் கொண்டாள்.
பென்னியை மடை மாற்றி craft செய்து முடிக்கும் போது ஒரு மணி ஆனது. மீண்டும் ராஜமாதாவின் போன்.
“சொல்லுங்க அத்தை” என்றாள்.
“இல்ல, அவனுக்கு போன் போட்டேன். ரிங் போகுது, ஆனா எடுக்கலை…” என இழுத்தார்.
“போன சார்ஜுல போட்டுட்டு வெளில போய் இருக்கார் அத்தை” என்றாள்.
“சாப்ட்டீங்களாம்மா, மணி ஒண்ணாகுதே? இன்னிக்கு என்ன சமையல்?” என கேட்டார்.
வானிலை எப்படி இருக்கிறது என தெரிந்து கொள்ளும் ஆர்வம். ஆதர்சனத்தின் லட்சணத்தை அறிந்து கொள்ளும் ஆவல்.
“ஹா, சாம்பார், மீன் வறுவல் அப்புறம் அவருக்கு முட்டை பொடிமாஸ் செஞ்சிருக்கேன். சாப்பிட்டு கொஞ்ச நேரம் படுக்க போறேன். அப்போதான் சாயங்காலம் ப்ரெஷ்ஷா இருக்கும்” என நார்மல்சி ரசத்தை சொட்ட விட்டாள் ரோஸ்மேரி.
ராஜமாதாவுக்கு படு திருப்தியாக இருந்தது. நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என புளகாகிதம் அடைந்தார்.
“படு..படு. நல்லா ரெஸ்ட் எடு. வாரம் முழுக்க வேலைல டென்க்ஷனா இருந்திருப்ப” என ஸ்லோவாய் ரிவர்ஸ் கியரில் நகர்ந்தார்.
ரோஸ்மேரி லேசாக ஒரு தடவை தலையை உலுக்கிக் கொண்டாள். இந்நேரம் அவள் சாப்பிட்ட பிறகு தூங்க போகும் செய்தி மூன்று நான்கு பேருக்கு போய் சேர்ந்திருக்கும். அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கண்டிப்பாய் எந்த போனும் வராது.
பென்னியும் அவளும் சாப்பிட்டு முடித்த பிறகு, பென்னியை தூங்க வைத்து விட்டு ஹாலுக்கு வந்தாள்.
தொரை சாப்பாட்டுக்கு வரும் களை தெரியவில்லை. மீதம் இருந்த எல்லாவற்றையும் மூடி ப்ரிட்ஜில் வைத்து விட்டு Netflixல் கொரியன் படம் பார்த்தாள். இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை.
படம் முடிந்த பிறகு, எழுந்து பாத்ரூம் போய் விட்டு வந்தாள். கண்ணாடியில் அவள் முகத்தை பார்த்த போது, முகத்தை விட மனம் தான் களைப்பாக இருப்பதாக அவளுக்கு தோன்றியது.
சற்று நேரம் அங்கேயே நின்றவள், ஹாலுக்கு வந்து கெவினின் அம்மாவுக்கு போன் போட்டாள்.
“டெய்சி, நான் கொஞ்சம் lowஆ இருக்கேன். ஒரு பங்க்ஷனுக்கு போகணும். எனக்கு கொஞ்சம் வந்து மேக்கப் பண்ண முடியுமா?” என கேட்டாள்.
“லேவண்டர் ஆர் சாண்டல்? என்ன வேணும்” என கேட்டாள் டெய்சி.
“Anything is fine” என்றாள் ரோஸ்மேரி.
டெய்சி வருவதற்குள் டீ போட்டு வைத்தாள். பென்னியை எழுப்பி ஸ்னாக்ஸ் கொடுத்து விட்டு, அவனுக்கு ட்ரெஸ் அயர்ன் செய்து வைத்தாள்.
கால் மணி நேரத்தில் டெய்சி வர, காலையில் செய்த craftஐ பற்றி பேசிக்கொண்டே ரெண்டு பேரும் டீ குடித்தார்கள்.
அடுத்த அரை மணி நேரத்தில் face massage மற்றும் லைட்டாக மேக்கப் செய்து விட்டு டெய்சி கிளம்ப, பென்னியும் அவளும் ட்ரெஸ் செய்து கொண்டு கிளம்பினார்கள்.
“வெளில போனா, ஒரு போன் பண்ணி எப்போ வருவீங்கன்னு கேக்க மாட்டியா?” என்றபடி உள்ளே வந்தான் அருண்.
“பென்னி, நீ போய் பார்க்கிங்க்ல இரு, நான் bag எடுத்துக்கிட்டு ரெண்டு நிமிஷத்துல வரேன்” என சொல்லி முதல் வேலையாக பென்னியை pack செய்தாள்.
“போன வீட்ல வெச்சிட்டு போயிட்டீங்க. அப்புறம் என்ன கேள்வி இது?” என குழப்பமாக கேட்டாள் ரோஸ்மேரி.
“ஹா, போன் இருந்தா மட்டும் பத்து போன் லைனா போட போறியா? சுதன் wife அவன் போன் எடுக்கலேன்னா, ஒடனே எனக்கு போடுவாங்க. அண்ணா, சுதன் உங்க கூட இருக்காரா? மத்தியானம் சாப்பிட்டாரான்னு அவ்ளோ அக்கறையா கேப்பாங்க” என குதித்தான்.
காலையிலே இந்த காட்சிக்கான ஒத்திகை அவன் மனதில் நடந்திருக்கிறது. அது இப்போது அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
இந்த instant அண்ணன் தங்கச்சி விஷயத்தில் ரோஸுக்கு உடன்பாடில்லை. இது தேவையில்லாத ஆணி என தோன்றியது. மைண்டுக்குள் ஹீட்டர் switch நிறுத்தினோமா என யோசித்தாள். நிறுத்தியிருந்தால் நல்லது என நினைத்துக் கொண்டாள்.
“சுதன் பொண்டாட்டி, மதன் பொண்டாட்டி கதையெல்லாம், இந்த மன்மதன் பொண்டாட்டிக்கு தேவையில்லை. ஏற்கனவே பென்னி அத்தை கிட்ட கொளுத்தி போட்டிருக்கான். இதுல லேட்டா போனீங்கன்னா, இன்னிக்கு செத்தீங்க. நாங்க கெளம்புறோம். சீக்கிரம் வந்து சேருங்க” என சொல்லி விட்டு கிளம்பினாள் ரோஸ்.
மத்தியானம் நேரத்தோடு வந்து, காதல் தூவி செய்யப்பட்ட முட்டை பொடிமாஸ் சாப்பிட்டு தூங்கி எழுந்திருந்தால், இல்லை கூட உட்கார்ந்து அந்த கொரியன் படத்தை பார்த்திருந்தால் கூட, இந்நேரம் “அவுத்து விட்ட மாடு” கூலாகி இருக்கும்.
சும்மா நசநசவென்று பேசிக் கொண்டிருப்பது அவளுக்கு காண்டாக இருந்தது.
அருண் போய் குழாயை திறக்க, சில்லென்று தண்ணீர் கொட்டியது. டவலை சுற்றிக் கொண்டு, ஹீட்டர் ஆன் செய்துவிட்டு போய் சேரில் உட்கார்ந்து கொண்டான். பசி வேறு வயிற்றை கிள்ளியது.
பிரிட்ஜை திறந்து பார்த்தால் முட்டை பொடிமாஸ் அம்சமாக உட்கார்ந்திருந்தது.
பத்து நிமிடத்தில் அவசர அவசரமாக குளித்து ரெடியாகி வந்து, எல்லவற்றையும் சூடு செய்து சாப்பிட்டு முடித்தான். மம்மிஜியின் போன் வந்தது.
“சொல்லுங்க மம்மி” என்றான்.
“சம்மந்தி வீட்டுக்கு பங்ஷனுக்கு நேரத்தோட வரணும்ங்கிற அறிவு கிடையாதா உனக்கு? உன் பொண்டாட்டியும் புள்ளையும் வந்துட்டாங்க. மச்சான் ரொம்ப பிஸியான்னு சுஜி வீட்டுக்காரர் நக்கலா கேக்குறார்? ” என காய்ச்சி எடுத்தார் ராஜமாதா.
“அவ ஏன் சீக்கிரம் போகணும்?” என குதர்க்கமாய் கேட்டான் அருண்.
“நான் தான் அவளை சீக்கிரம் வர சொன்னேன். என்ன மயிருக்கு போன வீட்டுல வெச்சிட்டு வெளியில சுத்துற? காலைலேர்ந்து உனக்கு ட்ரை பண்றேன். இப்போ வந்து சவகாசமா கேக்குற?” என பொரிந்து தள்ளினார்.
மாமாவை கூல் படுத்த ஹெவி பர்பார்மென்ஸ் வேறு கொடுக்க வேண்டும். மினுக்காக சுற்ற முடியாது. தன்னை தானே திட்டிக் கொண்டே கிளம்பினான் அருண்.
அருணுக்காக சுஜி வீட்டு வாசலிலேயே காத்திருந்தார் மம்மிஜி.
“வளர்ந்த புள்ளைய வெச்சிக்கிட்டு பேசுற பேச்சாடா இதெல்லாம்? என அபத்தமாக ஆரம்பித்தார்.
“என்ன பெருசா சொல்லிட்டேன்? எந்த வீட்டுலயும் பேசாததா?” என பம்மலாக சொன்னான் அருண்.
“வாய ஒடச்சிடுவேன், ஜிம்முக்கு போயிட்டு வந்தவளை எதுக்கு வம்பிழுத்த? சுஜி நேத்தே உன்கிட்ட சொல்லி அனுப்பிச்சாளா, இல்லியா? இன்னைக்கு காலைல அவங்க அத்தை மாமா வீட்டுக்கு வருவாங்கன்னு? நீ சொல்லியிருந்தா அவ வீட்லயே இருந்திருப்பா, இல்லியா?” என கொக்கியை போட்டார்.
அருண் பேசாமலிருக்க, “பசங்க எல்லாருக்கும் நல்ல இடம் அமையணும்னு அவங்கவங்க வேண்டிக்கிட்டு இருக்காங்க. அப்படியே அமைஞ்சாலும், அதுக்கப்புறம் நல்ல வேலை, புள்ளை குட்டின்னு இருக்கணும்னு நாங்க சாகுற வரை அல்லாடிக்கிட்டு இருக்கோம். நல்லா போகுற வாழ்க்கைல, வம்படியா பேசி விளையாடிகிட்டு இருக்குற நீ. பாத்து நடந்துக்க, எந்த பொண்ணும் கண்ட கண்ட பேச்ச சகிச்சிக்கிட்டு குப்பை கொட்டுறது இல்ல இந்த காலத்துல” என பரேடு விட்டார் மம்மிஜி.
வாசலிலேயே tarbulanceஇல் சிக்கி சின்னாபின்னமாகி உள்ளே வந்தான் அருண். சுஜி கேவலமாக பார்த்து விட்டு உள்ளே போக, அவன் லேட்டாக வந்த கோபத்தில் மாமாவும் முகம் கொடுத்துப் பேசவில்லை.
அடுத்த இரண்டு மணி நேரம் அருண் பம்பரமாக சுழன்று சுழன்று வேலை செய்தான். தம்பியென்று ஒருத்தன் இருந்தால், அது சுஜிக்கு அருண் இருப்பது போல இருக்க வேண்டும் என மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் கிளம்பும் போது சர்டிபிகேட் கொடுத்தார்கள்.
“மம்மி, ஜோயல் எங்க? நான் வந்ததிலிருந்து அவனை பாக்கலை” என கேட்டான் அருண். ஜோயல் சுஜியின் மூத்த மகன். பத்தாம் வகுப்பு படிக்கிறான்.
“அவன் இன்னிக்கு basketball டீம் செலக்சனுக்கு போய் இருக்கான்” என பெருமையாக சொன்னார் மம்மிஜி.
பெண் பார்க்கும் படலம் நல்ல படியாய் முடிந்து எல்லோரும் கிளம்ப, பென்னி போய் ரோஸ்மேரியின் மடியில் உட்கார்ந்து கொண்டான்.
“மா, நான் ஒண்ணு பாத்தேன், உன்கிட்ட சொல்லணும்” என அவள் காதருகே வந்து சொன்னான்.
ரெண்டு பெரும் எழுந்து போய் போர்டிகோவில் இருந்த ஊஞ்சலில் உட்கார்ந்தார்கள்.
“சொல்லுடா?” என கேட்டாள் ரோஸ்.
“நம்ம கனி சித்திய பாக்க இப்போ ஒரு அங்கிள் வந்தாரே, அவரு ரொம்ப poorஆ, மா? என கேட்டான்.
“ஏண்டா?” என வியப்பாக கேட்டாள்.
“சொல்லேன், உண்மையா அவரு நல்ல கம்பெனில தான் வேலை செய்யுறாரா?” என தொடர்ந்தான்.
“டேய், அவருக்கு சொந்தமா பிளாட், கார், பைக் எல்லாம் இருக்கு. நல்ல வசதியாதான் இருக்காரு. இப்போ என்ன உனக்கு?” என அலுத்துக் கொண்டாள் ரோஸ்.
பென்னி அமைதியாக உட்கார்ந்திருந்தான். “சரி சொல்லு, அவரு ஏன் poorஆ அப்படீன்னு என்கிட்டே கேட்ட?” என விடாமல் கேட்டாள்.
“அம்மா, இங்க பாரு, நீங்க எல்லாரும் வாசல்கிட்ட போய் அவங்க கார்ல ஏறும் போது பேசிக்கிட்டு இருந்தீங்களா? அப்போ அவரு உள்ள போய் சித்திகிட்ட தனியா bye சொல்லிட்டு வந்தார்” என டீடைலை சொன்னான்.
“சரிடா, அதுக்கென்ன?” என்றாள்.
“அவர் bye சொல்லிட்டு கதவுகிட்ட வந்து சேர்ல உக்காந்து ஷூ மாட்டும் போது நான் அவரை பாத்துகிட்டு தான் இருந்தேன். அவர் ரெண்டு சாக்ஸுலயும் ஓட்டை இருந்துது” என அப்பாவியாய் சொன்னான் பென்னி.
ரோஸுக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. கண்ணில் நீர் வர சிரித்து முடித்தாள்.
“அவரு poorஆ ம்மா? நம்ம சித்திய நல்லா பாத்துக்குவாரா?” என கேட்டான்.
இது தான் கார்ப்பொரேட் வாழ்க்கையின் பகுமானம் என எப்படி சொல்லி அவனுக்கு புரிய வைப்பது என தோன்றியது ரோஸுக்கு.
“இல்லடா பென்னி, அவர்கிட்ட பணம் தேவையான அளவுக்கு இருக்கு. ஆனா தனக்கு என்ன செஞ்சிக்கணும்னு அவருக்கு தெரியல” என சொன்னாள்.
“அது அவர் பர்சனல் ஐட்டம்டா. யாரும் பாக்க போறதில்லைன்னு நெனச்சு அவர் use பண்ணிக்கிட்டு இருக்காரு. இல்ல கெளம்புற அவசரத்துல, எது கெடச்சுதோ அதை போட்டுக்கிட்டு அலட்சியமா வந்திருப்பாரு” என அவனை சமாதானப்படுத்தினாள்.
“யாரும் பாக்க போறதில்லைன்னா, இது மாதிரி கண்டதை போட்டுக்கிட்டு வரலாமாம்மா?” என ஆதங்கமாய் கேட்டான்.
“தப்பு தாண்டா. இங்க பாரு, யாரை பத்தியும் உடனே முடிவு பண்ண கூடாது. நான் சுஜி அத்தை கிட்ட சொல்லி நல்லா விசாரிக்க சொல்றேன்” என அவனை ஒரு மார்க்கமாய் செட்டிங் செய்தாள்.
இரவு சாப்பாடு முடிந்து எல்லோரும் கிளம்ப தயாரானார்கள். ரோஸ் சுஜியிடம் தனிப்பட்ட முறையில் பென்னியின் அப்சர்வேஷனை சொல்லி மீண்டும் ஒரு முறை தீர விசாரிக்க சொன்னாள்.
சுஜிக்கும் இது ஒரு red flag ஆக இருந்தது. “பணம் காசு இருக்கிறது இருக்கட்டும், பையன் எப்படின்னு இன்னும் கொஞ்சம் க்ளோஸ் சர்க்கிள்ள தீவிரமா விசாரிக்கணும்” என தீர்க்கமாய் சொன்னாள்.
சற்று நேரத்தில் வீட்டு வாசலில் ஆட்டோ சத்தம் கேட்டது. ஜோயல் செலக்சன் முடிந்து ஒரு கையில் பேகும், மறு கையில் வாட்டர் பாட்டிலும் இருக்க, கை முட்டியால் டோர் பெல் அடித்தான்.
“அவுத்து விட்ட மாடு மாதிரி எங்க போயிட்டு வர?” என கதவை திறந்தபடியே கேட்டான் பென்னி.
ஹாலில் இருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போக, “டேய், என்னடா பேச்சு இது?” என அதட்டினான் அருண்.
“அம்மா வெளில போயிட்டு லேட்டா வந்தா, நீங்க இப்படி தானே சொல்வீங்க?” என அருணிடம் கேட்டான் பென்னி.















