Tamil novel – Jiteswari – Part 8/21

A senior couple a temple

அடுத்த நாள் காலையிலேயே புஷ்கரும் கல்யாணியும் கோவிலுக்கு போக ரெடியாகிவிட்டார்கள். நேசப்பாவும் சாப்பிட்டு முடித்து மாத்திரை போட்டுக்கொண்டு கிளம்பினார்.

“ரொம்ப நாளாச்சு கோவிலுக்கு போய். நானும் வரேங்க” என்றார் சங்குபுஷ்பம்.

“பசங்களா, மழை கொட்ட போகுது, கொடை எடுத்துக்குங்க, உங்க பாட்டியும் கோவிலுக்கு வராளாம்” என கிண்டலடித்தார் நேசப்பா.

ஜித்தும் லக்ஷ்மியும் வாக்கிங் முடித்துவிட்டு அப்போது தான் உள்ளே நுழைந்தார்கள்.

ஜித்துக்கு காமாட்சியின் போன் வந்தது.

“நல்லாருக்கேன் ஆன்ட்டி. நீங்க எப்படி இருக்கீங்க? சாப்டீங்களா?” என விசாரித்தாள்.

இரண்டு நிமிடம் பேசி முடித்தவுடன் நேசப்பா கொடுத்த காபியை வாங்கிக்கொண்டு போய் பால்கனியில் நின்றாள்.

எதிர் பிளாட்டு பால்கனியில் வெளிர் நீல புடவை  காய்ந்து கொண்டிருந்தது. ஒரு நிமிடம் சடாரென கற்பகத்தின் நினைவு வந்தது ஜித்துவுக்கு. லேசாக கண்ணீர் துளிர்க்க அந்த நினைவில் ஆழ்வது தன்னை மேலும் பலகீனப்படுத்தும் என திரும்பி ஹாலுக்குள் வந்தாள்.

சங்கு புஷ்பம் குளித்துவிட்டு வர “எங்கம்மா கெளம்புற காலங்காத்தால?” என கேட்டாள் லக்ஷ்மி.

“கோவிலுக்குடி. பசங்கள கூட்டிட்டு போறோம்” என்றார் சங்கு புஷ்பம்.

“ஜித்து நீயும் வரியா? எல்லாரும் சேந்து போகலாம்” என அழைத்தாள் லக்ஷ்மி.

போனை எடுத்து கேலண்டரை பார்த்தாள் ஜித்து. மதியம் ஒரு மணிக்கு தான் ஒரு மீட்டிங் இருந்தது.

“சரி போலாம். பத்து நிமிஷத்துல ரெடியாயிடறேன்” என்றபடி குளிக்க போனாள் ஜித்து.  பிளான் மாறிய பிறகு சங்கு புஷ்பம் கிச்சனுக்குள் நுழைந்து வேலை பார்க்க ஆரம்பித்தார்.

அரை மணி நேரத்தில் எல்லாரும் ரெடியாக டாக்ஸி பிடித்து கோவிலுக்கு

போய் இறங்கி உள்ளே நடக்க ஆரம்பித்தார்கள். வழியில் வயதானவர்கள் உட்கார்ந்திருந்தார்கள்.

நேசப்பா சில்லறை எடுத்து குழந்தைகளிடம் கொடுத்து அவர்களுக்கு கொடுக்க சொன்னார்.

ஜித்துவும் லக்ஷ்மியும் பர்ஸை துழாவினார்கள். சில்லறை காசோ, கரன்சியோ எதுவும் இல்லை. துடைத்து வைத்தார் போல இருந்தது பர்ஸ்.

“அம்மா சில்லறை இருந்தா குடு” என்றாள் லக்ஷ்மி.

“ஏண்டி உங்க டிஜிட்டல் இந்தியால தர்மத்துக்கு ஆப்ஷன் இல்லியா?” என நக்கலாய் கேட்டார் சங்கு புஷ்பம்.

“பத்து ரூபாய்க்கு சில்லறை காசு தர இவ்ளோ பேச்சு பேசுற” என்றபடியே சிரித்தாள் லக்ஷ்மி.

போனை லாக்கரில் வைத்து விட்டு வந்ததால் அர்ச்சனை டிக்கெட் மற்றும் நெய் விளக்கு வாங்க, ஐயருக்கு தட்டில் போட, உண்டியலில் போட என

இருவரும் காசுக்காக பவ்யமாக நின்றார்கள்.

சங்கு புஷ்பம் கெத்தாக கரன்சியை எடுத்து எண்ணி, பிறகு சில்லறை காசு எண்ணி கொடுப்பது என ஒரே சீனாக இருந்தது.

“மா, நேத்து மார்க்கெட் போய் கடைசி காசு வரை செலவு பண்ணிட்டோம். நீ ரொம்ப சீன் போடாதே” என சலித்துக் கொண்டாள் லக்ஷ்மி.

“கொஞ்சமான ஆட்டமா போடுறீங்க போன வச்சிக்கிட்டு. கண்ணு மண்ணு தெரியாம ஊதாரித்தனமா செலவு பண்றீங்க. இப்போ என் டைம்” என காட்டமாய் சொன்னார் சங்கு புஷ்பம்.

பேசியபடியே வெளி பிரகாரம் சுற்றி குளத்தருகே வந்தார்கள். நேசப்பா ஆபீஸ் ரூமுக்கு போய் கேட் திறப்பது பற்றி விசாரித்தார். ஆபீஸர் வாட்ச்மேனிடம் சாவி கொடுத்து அனுப்பினார்.

குளத்து கேட் திறந்ததும் குழந்தைகள் குக்ஷியானார்கள். எல்லோரும் உள்ளே நுழைந்து படிக்கட்டில் இறங்க ஆரம்பித்தார்கள்.

“கொஞ்சம் மேல வாங்க எல்லாரும்” என அழைத்தார் சங்குபுஷ்பம்.

நாலு படி இறங்கிய ஜித்து “என்னமா?” என்றாள்.

சங்குபுஷ்பம் பக்கவாட்டில் இருந்த மண்டபத்தில் ஏறி தூணில் சாய்ந்து உட்கார்ந்து காலை நீட்டிக்கொண்டார்.

“சுக்கு காபி பிளாஸ்க்ல கொண்டாந்துருக்கேன். குடிச்சுட்டு அப்புறம் போய் படிக்கட்டுல உக்காரலாம்” என பையை பிரித்தபடியே சொன்னார் சங்கு புஷ்பம்.

“நெனச்சேன் நீ பைய தூக்கிட்டு கிளம்பும் போதே. என்னென்ன சரக்க உள்ள வெச்சிருக்கியோன்னு. கோவிலுக்கு வந்தா ஜங்க்க்ஷன்ல இருக்குற காபி ஹவுஸ்ல போய் சுக்கு காபி குடிக்கணும்னு ஜித்துக்கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தேன். நீ என்னடான்னா வீட்லருந்தே போட்டு எடுத்துட்டு வந்துட்ட” என சிணுங்கினாள் லக்ஷ்மி.

“அம்மா கூட அப்டி தான். பிரிக்க முடியாதது நர்ஸும் பிளாஸ்க்கும் போல” என சொல்லி சிரித்தாள் ஜித்து.

“ஆமா, எங்க காலத்துல இருந்த ஹைடெக் சாமான்ல பிளாஸ்க்கும் ஒண்ணு. வார்டுல பிளாஸ்க் வெச்சிருக்கிற பேஷண்ட் கொஞ்சம் கெத்தாதான் இருப்பாங்க. வயசான இல்லாதவங்களுக்கு சொந்தமா பிளாஸ்க் இருக்கிறதே ஒரு பெரிய கனவு தான். பெரும்பாலானவங்களுக்கு வீட்லேர்ந்து யாரும் வர மாட்டாங்க. கவெர்மென்ட்டு மூணு வேளை சாப்பாடு குடுக்கும். கூட சூடா காபியோ பாலோ குடிச்சே, ஆஸ்பிடல்லேர்ந்து டிஸ்சார்ஜ் ஆகுற வரை ஓட்டிடுவாங்க” என விவரித்தார் சங்கு புஷ்பம்.

புஷ்கரும் கல்யாணியும் அந்த பிளாஸ்கை மரியாதையாக பார்த்தார்கள்.

“பேசாம காபி ஹவுசே போயிருக்கலாம்” என மீண்டும் ஆரம்பித்தாள் லக்ஷ்மி.

“உனக்கென்ன சரக் சரக்குன்னு கார்டு தேய்ப்ப. இல்ல போன எடுத்து காச சுட்டு தள்ளுவ. சுக்கி காபியோடு முடிக்கிற ஆளா நீ? எங்களுக்காவது பென்சன் வருது. உங்களுக்கு அதுவும் கிடையாது. நாப்பத்தஞ்சு வயசாச்சுன்னா பொம்பளைங்களுக்கு எப்படா ரிட்டயர்டு ஆவோம்னு இருக்கும். சுகர் எட்டிப்பாக்கும்.மெனோ பாஸ் வதைக்கும். ஒடம்புல தெம்பு இருந்து வேலைக்குப் போகும்போதே செலவை கண்ட்ரோல்ல வைங்க. இப்போ சேமிக்கலேன்னா பின்னாடி இதே ஜோர்ல செலவு பண்ணமுடியாது” என நிதர்சனத்தை சொன்னார் சங்கு புஷ்பம்.

“நல்லதா ஒரு காபி குடிக்கலாம்னு சொன்னா எனக்கு நரை வந்து கூன் விழுறவரை பயம் காட்டுறியேம்மா? டென்ஷனை கன்ட்ரோல்ல வை, புருஷனை கன்ட்ரோல்ல வை, வெய்ட்ட கன்ட்ரோல்ல வைனு எவ்ளோ ப்ரெஷரும்மா” என அலுத்துக்கொண்டாள்  லக்ஷ்மி. 

நேசப்பா குழந்தைகளுக்காக சர்க்கரைப் பொங்கல் வாங்கி வந்தார். சற்று நேரத்தில் அவர் பின்னாடியே கையில் தூக்கு வாளியுடன் ஒருவர் வந்தார்.

“மேடம் நல்லாருக்கீங்களா?” என்றார்.

“நல்லாருக்கேன் பரணி. தங்கமயிலும் பசங்களும் சௌக்கியமா?” என விசாரித்தார் சங்கு புஷ்பம்.

பரணி கோவில் பணியாளர். தங்கமயில் சில ஆண்டு காலம் அவர்கள் சொசைட்டி ஆபீசில் வேலை பார்த்தாள். மயிலின் இரண்டு டெலிவரியும் சங்கு புஷ்பம் வேலை பார்த்த ஆஸ்பத்திரியில் நடந்தது.

“நல்லா இருக்காங்க மேடம். சார தூரத்துல இருந்து பார்த்தேன். அதான் பிரசாதம் தரலாம்னு வந்தேன்” என தொன்னையில் புளியோதரை வைத்து கொடுத்துவிட்டு கிளம்பினார். நிதானமாக சாப்பிட்டு சுக்கு காபியும் குடித்து முடித்தார்கள்.

“மா, காபி அவுஸ் டேஸ்ட் அப்டியே இருக்கு” என புகழ்ந்தாள் லக்ஷ்மி.

“நீங்க வரீங்கன்னு சொன்னதும் அம்மா அந்த காபி அவுஸ்லேர்ந்து மிக்ஸ் வாங்கிட்டு வர சொல்லிட்டா” என சொன்னார் நேசப்பா.

“செம பிளான்மா” என சிரித்தாள் லக்ஷ்மி.

“இந்த கப்பு காப்பிய அம்பது ரூபா சொல்வான். இப்போ பாரு சிம்பிளா முடிஞ்சிது. நீ காபி குடிக்கலாம்னு உள்ள நொழஞ்சி ரெண்டாயிரத்துக்கு கார்டு தேய்ப்ப” என சொன்னார் சங்கு புஷ்பம்

லக்ஷ்மி வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருக்க ஜித்து தலையசைத்தும், புன்னகைத்தும் கேட்டு கொண்டிருந்தாள். நேசப்பாவுக்கு ஜித்து சாதாரணமாக இல்லை என புரிந்தது. யோசனையும் கவலையும் தீவிரமாக குளத்தையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தார்.

லஷ்மி காபி டம்ளர்களை வெளியே கொண்டுபோய் கழுவி எடுத்து வந்தாள்.

சங்கு புஷ்பம் அதையெல்லாம் பையில் வைத்துவிட்டு இரண்டு பொரி டப்பாக்களை வெளியே எடுத்தார். புஷ்கருக்கும் கல்யாணிக்கும் ஆளுக்கொன்று கொடுத்தார்.

டப்பாவை கையில் வாங்கிய புஷ்கர் சற்று நேரம் யோசித்தான்.

“தாத்தா நானும் பாட்டியும் அந்த கார் னர் போறோம். நீங்க பாப்பா கூட இங்கயே இருங்க” என்றான்.

“சரிப்பா” என்றார் நேசப்பா.

“மா, நாங்க ஹெவியா சாப்டுட்டோம். கொளத்தை ரெண்டு ரவுண்டு சுத்திட்டு வரோம்” என ஜித்துவோடு கிளம்பினாள் லக்ஷ்மி.

ஜித்துவின் அமைதி லக்ஷ்மிக்கும் கவலையை தந்தது. எதுவானாலும் அவளே சொல்லட்டும் என பொறுத்திருந்தாள். ஆனால் கோவிலுக்கு வந்த பிறகு நாமே ஆரம்பிப்போம் என்ன விஷயம் என கேட்போம் என முடிவெடுத்தாள்.  சற்று நேரம் நடந்த பிறகு மறு கரையில் உட்கார்ந்தார்கள்.

Friends at temple

“மைண்டுல என்னடி போட்டு உருட்டிக்கிட்டு இருக்க? நானும் வந்ததுலேர்ந்து பாக்குறேன். யோசனயாவே இருக்க” என உரிமையாக கேட்டாள் லக்ஷ்மி.

“மும்பை ஆபீஸ் போய் ஜாயின் பண்ணலாமுன்னு யோசிக்கிறேன்” என்றாள் ஜித்து.

“அவர் வரேன்னு சொல்லிட்டாரா? என குதூகலமானாள் லக்ஷ்மி.

“இல்ல” என்றாள் ஜித்து.

“அப்போ பசங்கள கூட்டிட்டு நீ மட்டும் போறியா? என நிதானமாக கேட்டாள் லக்ஷ்மி.

“இல்ல, இன்னும் முடிவு பண்ணல” என்றாள் ஜித்து குளத்தை பார்த்தபடியே.

நிஜமாகவே யாரோ தன்னை குளத்துக்குள் உருட்டுவது போல பகீரென ஆனது லக்ஷ்மிக்கு. அவள் காயம் மட்டும் ஆழமானது என புரிந்தது. கைக்குள்ளேயே வைத்து வளர்த்த குழந்தைகளை தீர்க்கமாய் அழைத்து செல்வேன் என சொல்லாமல் விட்டேத்தியாய் இருக்கிறாள்.

“எனக்கு திரும்ப பாண்டி போக விருப்பமில்லை. ஆன்ட்டிகிட்ட சொல்லிட்டேன். சங்குமாகிட்டயும் பேசிட்டேன். பத்து நாள் எதை பத்தியும் நினைக்காம வெய்ட் பண்ண சொன்னாங்க. எதுவாயிருந்தாலும் அடுத்த வாரம் பேசிக்கலாம்னு சொல்லிட்டாங்க” என்றாள்.

“நா மும்பை ஆபீஸ்ல பேசிட்டேன். நாலு மாசம் கழிச்சு ஜாயின் பண்ணுவேன்னு நெனைக்கிறேன். அண்ணன் அடுத்த வீக்கெண்ட் வரேன்னு சொல்லியிருக்கன். சங்குமாதான் அவன்கிட்ட பேசுனாங்க. அவன் இன்னும் என்கிட்டே பேசல. மெசேஜ் மட்டும் போட்டிருக்கான்” என இடியை இறக்கினாள் ஜித்து.

முடிவை வெளிப்படையாக சொன்னவள் இப்போது வரை அதன் காரணத்தை சொல்ல கூச்சப்படுகிறாள்.

கண்டிப்பாக ராஜுவோடு ஏதோ வருத்தம். இந்த எல்லைக்கு போயிருக்கறாள்.

நெதர்லாந்து போகும் முன் நல்லபடியாக இருந்த குடும்பம் இப்போது இந்த நிலையில் நிற்கிறது.

லக்ஷ்மி வேறு பக்கம் முகத்தை திருப்பி கண்ணை மூடிக் கொண்டாள்.

ஜித்துவை நேராய் பார்க்கும் துணிவு அவளுக்கு இல்லை. 

இந்த வயதில் இந்த பொண்ணுக்கு ஏன் இந்த நிலை கடவுளே என வருந்தினாள்.    

தன் அம்மாவை நினைத்தாள் லக்ஷ்மி. இவளை கண்டிப்பாக அவர்களால் மட்டுமே தேற்ற முடியும். இவள் இந்த மனநிலையில் எடுத்த ஒரு நல்ல முடிவு இங்கு வந்தது தான்.

ஆனால் சங்கு புஷ்பம் எந்த சலனமும் இல்லாமல் இவளிடம் பேசுவது லக்ஷ்மிக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவர்கள் அனுபவம் அப்படி என நினைத்துக் கொண்டாள்.        

Tamil novel – Jiteswari – Part 6/21

Children looking at locked temple tank

ஜித்து நெதர்லாந்தில் இருந்து திரும்ப வந்து சென்னையில் சங்கு புஷ்பம் வீட்டில் போய் தங்கினாள். லக்ஷ்மியும் குழந்தைகளும் வர வீடு கலகலப்பாக இருந்தது.

அன்று மாலை ஜித்துவும் லக்ஷ்மியும் மார்க்கெட்டுக்கு போக, நேசப்பா புஷ்கரையும் கல்யாணியையும் கோவிலுக்கு அழைத்துக் கொண்டு கிளம்பினார்.

சாமி கும்பிட்டு வெளியே சுற்றி குளமருகே வந்தார்கள். குளம் பூட்டி இருந்தது. கம்பி வழியாக உள்ளே எட்டி பார்த்தார்கள்.

“தாத்தா, நெறய பிஷ் இருக்குல்ல” என சொன்னான் புஷ்கர்.

“ஆனா உள்ள போக முடியாதே” என வருத்தப்பட்டது கல்யாணி.

குளம் நிறைய நீர் இருந்தது. ஒரு பக்கத்தில் இருந்து பார்த்தால் மரகத பச்சை நிறமாகவும், சற்று தள்ளி இருந்து பார்த்தால் நீல பச்சையாகவும் இருந்தது.

“தாத்தா, ஏன் இந்த தண்ணி க்ரீன் கலர்ல இருக்கு? என கேட்டது கல்யாணி.

“இந்த கொளத்துல பாசி அதிகமா இருக்குமா. அதான் க்ரீன் கலர்ல இருக்கு. அதனால தண்ணியும் க்ரீனா தெரியுது” என்றார் நேசப்பா.

“ஏன் பாசி அதிகமா இருக்கு?” என அடுத்த கேள்வி வந்தது.

“இந்த தண்ணி புளோ ஆகாதுமா. நிலத்தடி தண்ணியோட மழை தண்ணியும் சேர்ந்து இங்கயே தான் இருக்கும். பக்கத்துல எவ்ளோ பெரிய மரம் இருக்கு பாரு. அதுலேர்ந்து விழுற இலையெல்லாம் தண்ணில விழும். அது இந்த பாசி அல்கெக்கு எல்லாம் நல்ல உரமா மாறிடும். அப்போ இன்னும் அதிகமா வளரும்” என விவரித்தார் நேசப்பா.

“அப்போ இது டர்ட்டி வாட்டரா? என்றான் புஷ்கர்.

“இல்லப்பா. இது நல்ல தண்ணி தான். கோவில்காரங்க இன்னும் கொஞ்சம் பராமரிப்பு செஞ்சா க்ளீனாய்டும்” என்றார் நேசப்பா.

“என்ன செஞ்சா க்ளீனாகும்? என கேட்டது கல்யாணி.

“ரெகுலரா பராமரிக்கணும்மா. பாசி ஆல்கேவெல்லாம் ரிமூவ் பண்ணனும். அந்த மரத்துக்கு கீழ கொளத்து பக்கம் கொஞ்சம் நெட்டு போடலாம். இலை குச்சியெல்லாம் தண்ணில விழாது. ரெகுலரா பிரெஷ் தண்ணிய பம்பு வச்சி கொளத்துக்கு அனுப்பனும்” என தனக்கு தெரிந்ததை சொன்னார் நேசப்பா.

“இதெல்லாம் சாமி பாக்காதா தாத்தா? இது அவர் வீடு தானே? என தெளிவாய் கேட்டது கல்யாணி.

துணுக்குற்று போனார் நேசப்பா.

“ஏண்டி, சாமி என்ன பண்ண முடியும்? கோவில் ஆளுங்க தான் மெயின்டெயின் பண்ணணும்” என பதில் சொன்னான் புஷ்கர்.

“அவங்க வேலைய ஒழுங்கா செய்யலேன்னா கண்ணை குத்தலாம்ல சாமி” என குண்டைப் போட்டது கல்யாணி.

“ஏன் தாத்தா, சாமி அவங்க கண்ணை குத்தாதா?” என தொடர்ந்தான் புஷ்கர்.

 நேசப்பா சற்று யோசித்தார்.

“கண்ணை குத்தி என்ன பிரயோஜனம்? அப்புறம் சாமி காப்பாத்துன்னு அவருகிட்ட தான் போய் நிப்பாங்க. அதனால அப்பப்ப கொஞ்சம் நல்ல புத்தி குடுப்பாரு. அப்புறம் ஒழுங்கா வேலை செய்வாங்க” என சொன்னார்.

“எப்போ இவங்களுக்கு நல்ல புத்தி குடுப்பாரு இந்த கொளுத்த க்ளீன் பண்ண?” என விடாமல் கேட்டது கல்யாணி.

“அது சாமிக்கு தான் தெரியும்” என முடித்தார் நேசப்பா.

அந்தி சாயும் வேளை. இளம் சூடான மெல்லிய கதிர்கள் நீரின் மேல் பட்டு அன்றைய நாளுக்கான இறுதியில் விடை பெற்றுக்கொண்டன.

ஏற்கெனவே பெரிதாக சலனமில்லாமல் இருக்கும் குளம், அடுத்து வரும் இரவுக்கு மெளனமாக தயாரானது. சூரிய கதிர்கள் இரக்கமே இல்லாமல் குளத்தின் மேலிருந்த அழகான பச்சை கம்பளத்தை வாரி சுருட்டிக் கொண்டு கிளம்பியது.

வண்ணத்தை இழந்த வருத்தமில்லாமல் குட்டி அணில் போட்ட சிறு கொட்டையில் தளும்பி தளும்பி சந்தோஷப்பட்டது குளம். சற்று நேரத்தில் மெதுவாக எட்டிப் பார்த்த நிலா கருமையான குளத்தின் மேல் தன் ஒளியை பாய்ச்சியது. அடர் நீலமாக மாறிய குளம் அங்காங்கே வெள்ளி பிரகாசத்தை தெளித்தது.

“தாத்தா எனக்கு பிஷ் பாக்கணும். எப்போ கேட்டு ஓப்பன் பண்ணுவாங்க?” என ஆசையாய் கேட்டான் புஷ்கர்.

“ஆமா தாத்தா. எனக்கும் உள்ள போய் பாக்கணும்னு ஆசையா இருக்கு” என சொன்னது கல்யாணி.

நேசப்பா சுற்றி பார்த்தார். போர்டு எதுவும் இல்லை.

“வாங்க, ஆபீஸ் ரூம்ல போய் கேக்கலாம்” என அழைத்துக்கொண்டு புறப்பட்டார்.

“சார், கொளம் எப்போ சார் தொறப்பீங்க?” என கேட்டார் நேசப்பா.

பைலில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தவர் நிமிர்ந்து பார்த்தார்.

children asking question to temple officer

“சார், காலைல ஆறு டு ஏழு தொறப்போம். அய்யர் வந்து வேலைய முடிச்சிட்டாருன்னா பூட்டிடுவோம். பப்ளிக் உள்ள போக முடியாது” என்றார் ஆபீசர்.

“அப்போ பிஷ்ஷு வெளில வருமா எங்கள பாக்க?” என மெதுவாய் கேட்டது கல்யாணி.

சடாரென்று நிமிர்ந்து உட்கார்ந்து மேலும் கீழும் பார்த்தார் ஆபீசர்.

டேபிளை விட சற்று அதிக உயரம் தான் இருந்தது கல்யாணி.

எழுதி கொண்டிருந்த பேனாவை மூடி வைத்தார். பக்கத்தில் இருந்த சேரை காட்டி அவர்களை உட்கார சொன்னார்.

“இல்லமா, கோவிலுக்கு ஜனங்க நெறய வராங்க இல்ல. அவங்க கொண்டு வர பொருளால நெறய குப்பை கொளத்துல சேருது. அப்புறம் கவனிக்குறைவா இருந்தாங்கன்னா தவறி விழுந்துடுவாங்க. அதனால தான் பூட்டி வச்சிட்டோம்” என விளக்கினார் ஆபீசர்.

“ஆனா தண்ணி ஏன் டர்டியா இருக்கு? பூட்டியே இருந்தா அது கிளீனா தான இருக்கணும்” என கேட்டான் புஷ்கர்.

பங்கமான கேள்வி. அவமானமாக இருந்தது ஆபீஸருக்கு.

“சாமி இன்னும் புத்தி குடுக்கலண்ணா கிளீன் பண்றதுக்கு” என சுருக்கமாய் சொன்னது கல்யாணி.

இப்போது பெருத்த அவமானமாக இருந்தது ஆபீஸருக்கு. சங்கடமாய் நெளிந்தார்.

“நாளைக்கு காலைல வா பாப்பா. சாவி வாங்கி வெச்சுருக்கேன்” என்றார் ஆபீசர்.

“தேங்க்ஸ் அங்கிள்” என சொல்லி புறப்பட்டார்கள் இருவரும்.

Tamil novel – Jiteswari – Part 5/21

A couple at temple

சனிக்கழமை மாலை ஜித்துவும் ராஜுவும் கோவிலுக்கு கிளம்பினார்கள். அது அந்த ஏரியாவில் மிகப் பெரிய கோவில். உள்பிரகாரம் ஒரு சுற்று சுற்றினாலே ஒரு கிலோமீட்டர் இருக்கும். சாமி பார்த்தபிறகு மூன்று சுற்று சுற்றிவிட்டு குளத்தின் அருகே வந்தார்கள். சற்று நேரம் படித்துறையில் உட்கார்ந்தால் நன்றாக இருக்கும் என தோன்றியது ஜித்துவுக்கு.

குளம் பூட்டி இருந்தது. “என்ன ராஜு குளம் பூட்டி இருக்கு?” என்றாள் ஜித்து.

“இரு போய் ஆபீஸ்ல கேக்குறேன்” என்றபடி போனான் ராஜு.

“காலைல ஒரு மணி நேரம் மட்டும் தான் திறந்து இருக்குமாம்” என்றான் திரும்ப வந்து.

“சரி வா, அந்த பெஞ்சுல உக்காரலாம்” என அழைத்தான்.

காற்று நன்றாக வீசியது. பிளாஸ்கில் இருந்த வெந்நீரை கொஞ்சம் குடித்தாள் ஜித்து. 

“டெலிவெரிக்கு அப்புறம் எங்க இருக்குறது ராஜு? உனக்கு என்ன பிளான்?” என நேராய் விஷயத்தை ஆரம்பித்தாள் ஜித்து.

“உனக்கு ஆபீஸ் இங்கதானே. இங்கயே இரு. டெலிவரி ஆனதும் பாண்டிக்கு வந்துடு. மெட்டர்னிட்டி லீவு வரை அங்க இரு. ரீஜாயின் பண்ணும்போது இங்க வந்துடு. துணைக்கு வேணும்னா அம்மாவை வர சொல்றேன்.

ஆன்ட்டியால தனியா சமாளிக்க முடியாது. எங்க அம்மாவும் தனியா பாத்துக்க கஷ்டப்படுவாங்க. எல்லாரும் ஒண்ணா இருந்தா மாற்றி மாற்றி பாத்துக்கலாம்” என்றான் ராஜு.

பாதி பிரச்சினை தீர்ந்தார் போல இருந்தது ஜித்துவுக்கு. “அத்தை வருவாங்களா? மாமா என்ன சொல்லுவாரு” என கேட்டாள்.

“அப்பா கொஞ்சம் யோசிப்பாரு. பார்மாலிட்டி பாப்பாரு. அம்மாவுக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லை. ஜித்துவ நா பாத்துக்கறேன்னு சொல்லிட்டே இருக்காங்க. குட்டிய விட்டு அவங்களால இருக்க முடியாதாம்.

நீயும் அப்பாவும் பாண்டில இருங்க. நா ஜித்து கூட போய் இருக்கேனு சொல்றாங்க” என சிரித்தான் ராஜு.

இரண்டு நாள் பாடாய்படுத்திய மன உளைச்சல் நீங்கியது போல இருந்தது ஜித்துவுக்கு. கடவுளுக்கு நன்றி சொல்லி கண் மூடி அமர்ந்திருந்தாள்.

இரண்டு நிமிடம் கழித்து “தேங்க்ஸ் ராஜு” என்றாள்.

“எனக்கு என்ன காரெடுத்தா மூணு மணி நேரத்துல வந்துடுவேன். உங்க எல்லாரையும் வீக் டேஸ்ல மிஸ் பண்ணுவேன். உனக்கும் அப்படித்தானே. என்ன பண்றது? எனக்கு ட்ரான்ஸ்பர் ஆக முடியாது. உனக்கும் அங்க வர வாய்ப்பு இல்ல. தெரிஞ்சு தான கல்யாணம் பண்ணோம்” என்றான்.

ஆக கணவன் மனைவி இருவரும் அவர்கள் நிலையை தெளிவாக உணர்ந்து இருந்தார்கள். பரஸ்பரம் தங்கள் வேலையை காப்பாற்றிக்கொண்டும் அதே சமயம் மற்றவர் வேலை பாதிக்காத வண்ணம் எப்படி வாழ்வது என்று யோசித்து இருக்கிறார்கள். இந்த ஏற்பாட்டில் சில சங்கடங்கள் இல்லாமல் இல்லை. ஆனால் அத்தனையையும் எதிர் நோக்கித்தான் இந்த பந்தத்தில் இணைந்திருக்கிறோம் என்ற புரிதல் இருந்தது.

கணவன் மனைவி உறவிலும், குழந்தை வளர்ப்பிலும் இந்த முடிவு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெளிவாக தெரிந்து வைத்திருந்தார்கள். கூடிய மட்டும் என்ன செய்து அந்த தாக்கத்தை குறைப்பது என பேச ஆரம்பித்தார்கள்.

“அம்மா உங்க வீட்ல இருக்குறது அசௌகர்யமா இருக்கும்னு எங்க வீட்ல பீல் பண்ணா பக்கத்துலயே தனியா ஒரு வீடு எடுத்துக்கலாம். அப்பாவுக்கு இன்னும் ஒரு வருஷம் தான் சர்வீஸ் இருக்கு. ரிட்டயர்டு ஆகிட்டா அங்க வந்து உங்களோட இருக்கட்டும். என்ன நா பாத்துக்குவேன்” என தெளிவாய் சொன்னான் ராஜு.

ராஜுவின் போக்கு இலகுவானது. பெரிதாய் எதற்கும் அலட்டிக் கொள்ள மாட்டான். பரபரப்பே இல்லாமல் எப்போதும் ஒரு நிதானத்தோடு நடந்து கொள்பவன். ஜித்துவுக்கு ராஜுவின் அணுகுமுறை ஆதரவாக இருந்தது.

கற்பகம் வீசிய கடும் சொற்களின் காயம் சற்று ஆறியது போல இருந்தது.

ஆனாலும் இவர்களை அசைத்துப்பார்க்கும் பல பேச்சுகளையும் நிகழ்வுகளையும் எதிர் கொள்ள கடவுளிடம் வேண்டிக் கொண்டாள்.

வீட்டுக்கு வந்ததும் “பேசிட்டியா? என்ன சொன்னார்” என கேட்டார் கற்பகம்.

“நீ பதறுற மாதிரி ஒரு சிச்சுவேஷனும் இல்ல. கொஞ்ச நாள் பேசாம இரு. ராஜு பாத்துப்பான்” என சொல்லி முடித்தாள்.

கற்பகத்துக்கு ஆர்வம் தாளவில்லை.

“என்ன தான் முடிவு பண்ணீங்க” என திரும்ப கேட்டார்.

“மா, அமைதியா இரு. முடிவு பண்ற நேரம் வரும் போது பாத்துக்கலாம். எல்லாத்தையும் ஒரே நாள்ல எங்களால சரி பண்ண முடியாது. எல்லாரையும் திருப்திபடுத்தவும் முடியாது. ஆனா ஒண்ணு மட்டும் சொல்றேன். என்னால உங்களுக்கு எந்த பிரச்சினையும் வராது. மாமாகிட்ட நீங்க பதில் சொல்ற நெலமைய நா விடமாட்டேன். நானோ இல்ல ராஜுவோ அவர்கிட்ட பேசுறோம்” என நாசூக்காய் சொல்லி முடித்தாள்.

இரண்டு வாரம் கழித்து ஆண் குழந்தை பிறந்தது. மொத்த குடும்பமும் கூடி கொண்டாடி தீர்த்தார்கள். ஒரு மாதம் ஆனது அவர்களின் கவனம் ஜித்துவின் பக்கம் வர.

ஜித்துவும் குழந்தையும் இரண்டாவது வாரமே பாண்டிச்சேரி வந்து விட்டார்கள். தினம்தோறும் யாராவது ராஜு வீட்டு உறவினர்கள் வந்து பார்த்து விட்டு போனார்கள். போகும் பொது ஏதாவது ஒரு கேள்வியை கேட்டு விட்டு போவார்கள்.

“லீவ் முடிஞ்சி அங்க போய்டுவியா?”

“இங்க வேல கிடைக்காதா”?

“எவ்ளோ நாள் இப்டியே பிரிஞ்சி இருப்பீங்க? குழந்தை ஏங்கி போயிடுவான்”

“காசு பணம்னு இருந்தா நாளைக்கு திரும்பி பாத்தா ஒண்ணும் இருக்காது”

“படிச்சவங்க நீங்க. உங்களுக்கு தெரியும் என்ன பண்ணனும்னு. ஆனா வயசான தாத்தா பாட்டி, நீ குழந்தைய தூக்கிட்டு போயிட்டா ஏங்கிடுவாங்க”

ஆளாளுக்கு ஒரு பாயிண்டை போட்டுவிட்டு போனார்கள். 

ஓவ்வொருவர் வரும்போதும் குமரேசன் பைபாஸ் ரோடு காலேஜ் ஆப்ஷனை எடுத்து வைப்பார்.

“அட ஆமால்ல. அது உங்க வீட்டுக்கு ரொம்ப பக்கமாச்சே. ஏம்மா ஜிதேஸ்வரி நீ ஏன் இங்கயே காலேஜுல வேல பாக்க கூடாது?” என விஷயம் தெரியாமல் ஒரு பிட்டை போடுவார்கள். ஜித்துவுக்கு ஆறு மாதம் கழித்து சென்னை போவோம் என்ற நம்பிக்கை கொஞ்ச நாளில் போனது.

ராஜூவுக்கும் ஜித்துவுக்கும் இது பெரும் தலைவலியாக இருந்தது.

பேசாமல் ஜித்து அங்கேயே இருந்திருக்கலாம். நாம சொல்லவேதான் இங்க வந்தா. இப்ப வர்றவங்க போறவங்க எல்லாரும் அவளுக்கு அட்வைஸ் பண்ணிட்டு போறாங்க” என வருந்தினான் ராஜு.

“நீ ஒண்ணும் கவலைப்படாதே. நா அம்மாகிட்ட பேசிட்டேன். அவங்களும் உன் கூட வர ரெடியா இருக்காங்க. அப்பாவை நா சமாளிச்சுக்குறேன். கெஸ்டுங்களுக்கு என்ன தெரியும் நம்மள பத்தி. பேசிட்டு போகட்டும் விடு” என சமாதானப்படுத்தினான் ராஜு.

ஐந்து மாதங்கள் ஆனது. இன்னும் ஒரு மாதம் தான் இருந்தது வேலைக்கு போக.

“அப்பா, அடுத்த மாசம் ஜித்து ஆபீஸ் போகணும். சென்னைல தனியா வீடு பாக்க ஆரம்பிக்கணும். அம்மா கூட போய் இருக்கட்டும்” என ஆரம்பித்தான் ராஜு.

“பைபாஸ் ரோடு” என இழுத்தார் குமரேசன்.

“அப்பா ப்ளீஸ்ப்பா, இது என் டெஸிஷன்” என சுருக்கமாய் முடித்தான் ராஜு.

காமாட்சியும் ராஜுவும் சென்னைக்கு போவதில் உறுதியாக இருந்தார்கள். வேண்டாவெறுப்பாக வீட்டில் வலம் வந்தார் குமரேசன்.

அடுத்த இரண்டு வாரத்தில் வீடு பார்த்து ஒரு நல்ல நாளில் பால் காய்ச்சினார்கள். எவ்வளவு கூப்பிட்டும் குமரேசன் போகவில்லை.

House warming function

ஜித்துவின் பெற்றோருக்கு தர்மசங்கடமாக இருந்தது.

ஆனால் ராஜுவும் காமாட்சியும் எதற்கும் அலட்டிக் கொள்ளவில்லை.

ஜித்துவை மும்பையிலிருந்து வரவழைக்க அம்மாவும் பிள்ளையும் பட்டபாடு அவர்களுக்கு தான் தெரியும்.

ரொம்பவும் அவளை பாடுபடுத்தினா, திரும்ப மும்பைக்கே போறேன்னு சொல்லிட்டாள்னா என்ன பண்றது என்ற பயம் இருவருக்கும் இருந்தது. அந்த பயத்திற்கு வேறு ஒரு காரணமும் இருந்தது.

ராஜூவை விட இப்போதே அறுபது சதவிகிதம் அதிக சம்பளம் ஜித்துவிற்கு. மும்பை போனால் கண்டிப்பாக மூன்று வருடங்களில் வெளிநாட்டு பணிக்காக அவர்களே அனுப்ப அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே சென்னையில் அவளை தொடர அனுமதிப்பது தான் தங்களின் எதிர்காலத்துக்கு நல்லது என கருதினான் ராஜு.

அதை காமாட்சிக்கும் புரிய வைத்த பிறகு அம்மாவும் பிள்ளையும் ஜித்துவை முடிந்த வரை குமரேசன் எதுவும் சொல்லாமல் பார்த்துக் கொண்டனர்.

காமாட்சி குழந்தையை பார்த்துக் கொள்ள, வீட்டு வேலை செய்ய தனியாக ஒரு பெண்மணியை அமர்த்திக்கொண்டாள் ஜித்து. புஷ்கர் பிறந்து ஒரு வருடம் ஆனது. குமரேசன் தவிர மற்ற மூவரும் இந்த ஏற்பாட்டில் சுமுகமாக இருந்தார்கள்.

சொல்லப் போனால் காமாட்சிக்கு சென்னையில் இருப்பது பாண்டியை விட வசதியாக இருந்தது. வீட்டு வேலையை பணிப்பெண்ணும் கடை மற்றும் வெளிவேலைகளை ஜித்துவும் பார்த்துக் கொள்ள காமாட்சிக்கு ஓய்வும் நன்றாக கிடைத்தது.

அடுத்த வருடம் பணி ஓய்வு பெற்ற பிறகு சென்னைக்கு போய் தங்குவதில் குமரேசனுக்கு உடன்பாடில்லை. என்ன சொல்லி தவிர்க்கலாம் என யோசித்தார். ஓய்வு பெற்ற பிறகு ஹார்டுவேர் கடை துவங்கலாம் என முடிவெடுத்தார்.

வீட்டின் முன் பகுதியில் இருந்த ரூமை சற்று விரிவுபடுத்தி தெரு பக்கம் இருந்த காலி இடத்தோடு சேர்த்து ஒரு கடையாக மாற்றினார். ஆறு மாத காலத்தில் கட்டிட வேலை முடிந்து ஹார்டுவேர் கடை பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்ய ஆரம்பித்தார்.

வீம்புக்கு குமரேசன் செய்யும் வேலைகள் காமாட்சிக்கு வருத்தத்தை கொடுத்தது. ஒரே மகள் ஆந்திராவில் வசிக்க மகனுடைய குடும்பத்தோடு தங்காமல் வீண் பிடிவாதமாக அங்கேயே இருப்பது எரிச்சலாய் இருந்தது.

காமாட்சி அந்த காலத்திலேயே ஆசிரியர் பணிக்கு தேர்ச்சி பெற்றிருந்தார். திருமணமான சில ஆண்டுகளில் அரசாங்க வேலையும் கிடைக்கும் சூழல் இருந்தது.  குமரேசன் தனியார் பாக்டரிலயில் வேலை செய்து கொண்டிருந்தார்.

மனைவிக்கு அரசாங்க வேலை கிடைத்தால் தன்னை விட அதிக வருமானமும் சமூகத்தில் நல்ல அங்கீகாரமும் கிடைக்கும். காலம் முழுக்க  தான் ஒரு படி கீழ் நிலையில் ஏன் இருக்க வேண்டும் என நினைத்தார்.

குமரேசனும் அவரின் தாயாரும் காமாட்சி வேலைக்கு போக வேண்டியதில்லை என தீர்க்கமாக சொல்லி விட்டார்கள். சில ஆண்டுகள் அந்த ஏக்கம் காமாட்சிக்கு இருந்தது. காலப்போக்கில் அவருடைய கல்வி தகுதியை மறந்தே போனார். ஆனால் இப்போது ஜித்துவின் உறுதியை பார்க்கும் போது தானும் இவள் போல இருக்க தவறியதை எண்ணி வருந்தினார்.

ஜித்துவையும் கற்பகத்தையும் பார்க்கும் போது தான் பொருளாதார சுதந்திரமும், உரிமையும் இல்லாமல் வாழ்ந்தது முற்றிலும் தன் தவறு என ஒவ்வொரு நாளும் உணர்ந்தார். பேச வேண்டிய நேரத்தில் தன் சுய முன்னேற்றத்திற்காக பேசாமல் விட்டது தன் பிழை என ஆணித்தரமாய் நம்பினார்.

குமரேசனின் இந்த குணத்தால் ஜித்துவும் பாதிக்கப்படுவதை அவர் விரும்பவில்லை. ஆதி காலத்திலிருந்து அவரின் தாழ்வு மனப்பான்மையால் தான் பட்டது போதும். இவளாவது அவள் காலில் நிற்கட்டும் என கணவரின் கடை வைக்கும் எண்ணத்திற்கு பின் உள்ள சூட்சுமம் புரிந்து எதுவும் சொல்லாமல் அமைதியாய் இருந்தார்.

அடுத்து வந்த ஆண்டுகளில் இரண்டாவதாய் பெண் குழந்தை பிறந்தது. காமாட்சி முழுமையாக பேரக் குழந்தைகளோடு இருந்ததால் பாண்டிக்கு திரும்ப போகும் எண்ணம் துளியும் இல்லாமல் இருந்தார்.

ஜித்துவின் வருமானம் அதிகமாக வந்த காரணத்தால் ஹவுசிங் லோன் போட்டு பெரிய வீடாய் கட்டினார்கள். ஏற்கெனவே இருந்த காரை மாற்றி, மொத்த குடும்பமும் போய் வர ஏதுவாக இருபது லட்சத்துக்கு ஒரு காரையும் வாங்கினார்கள்.

ராஜுவும் ஜித்துவும் கலந்து பேசி பண விவகாரங்களை சுமுகமாக கையாண்டு நல்ல வளர்ச்சி பாதையில் குடும்பத்தை நடத்தினார்கள்.

Tamil novel – Jiteswari – Part 3/21

A woman engineer

ஜிதேஸ்வரி மெக்கானிகல் என்ஜினீயர். திருமணத்திற்கு முன்பு மும்பையில் ஐந்து வருடம் பணியில் இருந்தாள்.  கணவர் ராஜு எலெக்ட்ரிக்கல் என்ஜினீயர். பாண்டியில் ஈபி ஆபீசில் நிரந்தர வேலையில் இருக்கிறார். ராஜுவின் வரன் வந்தபோது ஜிதேஸ்வரி தனது வருங்கால வேலை வாய்ப்புகளை பற்றி யோசித்தாள்.

ஜிதேஸ்வரி ஒரு சர்வதேச எரிவாயு நிறுவனத்தின் மும்பை கிளையில் நல்ல சம்பளத்தில் வேலை செய்து கொண்டிருந்தாள். தமிழகத்தில் அது போன்ற நிறுவனங்கள் மிக குறைவு. பாண்டியிலோ ஒன்று கூட கிடையாது.

ஜித்து அவள் பெற்றோரிடம் இந்த வரனை தவிர்க்குமாறு சொல்லி விட்டாள்.

ராஜுவின் குடும்பம் கற்பகத்தின் உறவு வழியில் தூரத்து சொந்தம். விசாரித்ததில் நல்ல குடும்பம் என செய்தி வந்தது. ஜிதேஸ்வரியின் தந்தை இந்த வரனை முடிப்பதில் குறியாய் இருந்தார். நல்ல பையன், நல்ல வேலை மட்டுமல்லாமல் அடிக்கடி போய் பார்க்க ஏதுவாக பாண்டியிலேயே சம்பந்தம் கிடைத்ததில் அவருக்கு பரம சந்தோஷம்.

இது ஊருக்கும் வீட்டாருக்கும் தெரிந்த கதை. ஆனால் அவருக்கு உள்ளூர ஒரு பயம் இருந்தது. ஜிதேஸ்வரி செய்வது ஒரு நுட்பமான வேலை. நல்ல பதவி இந்த வயதிலேயே. அவர் பணி ஓய்வு பெறும்போது வாங்கிய சம்பளத்தை விட இப்போது அவர் மகள் வாங்குவது அதிகம். இன்னும் ஓரிரண்டு ஆண்டுகளில் நிச்சயமாக இன்னும் நல்ல ஊதியம் கிடைக்கும். மேலும் பல நாடுகளில் பணி புரிய வாய்ப்பும் கிடைக்கும். இங்கு தான் அவரின் கவலை நிலைகொண்டது. இந்த ஆண்டு வரன் அமையாவிடில் அடுத்து வரும் ஆண்டுகளில் மகளின் தகுதிக்கேற்ப வரன் தேடுவது மிக சவாலான விஷயமாக இருக்கும். அவர்கள் சார்ந்த சமூகத்தில் அந்த அளவு நிலையில் இருப்பவர்கள் மிகவும் அரிதாக இருந்தது. அப்படி இருப்பவர்கள் அனைவரும் வெளிநாட்டு வரன்களாக இருந்தார்கள்.

அவருக்கு மகளை வெளிநாட்டுக்கு அனுப்ப இஷ்டமில்லை. அதனால் எப்படியாவது இந்த வரன் அமைய வேண்டும் என்று நினைத்தார்.

ராஜுவின் வரனை முடிப்பதில் அவளின் பெற்றோர்கள் மும்முரமாக இருந்தார்கள். ஜிதேஸ்வரிக்கும் ராஜூவை பிடித்திருந்தது. ஆனால் சிக்கல் ராஜுவின் அரசாங்க வேலையும் ஊரும் தான். 

மும்பையில் வேலை பார்க்க விருப்பமா என கேட்டாள் ஜிதேஸ்வரி. ராஜூவை விட அவர் தந்தை இந்த விஷயத்தில் உறுதியாக இருந்தார். மகன் எப்போதும் பாண்டியில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதே அவர் எண்ணம்.

இரண்டு தரப்பும் அவர்கள் முடிவில் உறுதியாக இருந்தார்கள். சில மாத பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஜிதேஸ்வரியின் மீது அழுத்தம் அதிகமானது. ஜிதேஸ்வரி அவள் வேலை செய்யும் கம்பெனியில் சென்னைக்கு மாற்றலுக்கு விசாரித்தாள்.

இடமாற்றல் சாத்தியம் என சொன்னார்கள். ஆனால் அடுத்த பணி உயர்வின் போது மும்பையில் இருக்க வேண்டும். இப்போது இருக்கும் நிலையிலேயே இன்னும் சில ஆண்டுகள் சென்னையில் தொடரலாம் என ஒரு சிக்கலான சூழல். இந்த மாற்றம் முழுமையான பலனளிக்காது என தோன்றியது அவளுக்கு. அப்போதும் ராஜு சென்னைக்கு மாற்றலாகி வரப்போவது இல்லை. வார இறுதி நாட்களில் யாராவது ஒருவர் போய் மற்றொருவரை சந்திக்கும் நிலை.

ராஜுவின் தந்தைக்கு இந்த தாமதம் எரிச்சலூட்டியது. ஒரு வேளை ராஜு மனம் மாறி மும்பை போவதாக முடிவெடுத்தால், அதற்கு பிறகு அவர்கள் சொந்த ஊருக்கு வருவது அரிதானதாக இருக்கும். அதனால் பேசாமல் இந்த பெண்ணை விட்டுவிட்டு வேறு வரன் பார்க்கலாம் என முடிவெடுத்தார். இரவு உணவின் போது ராஜுவிடம் இது பற்றி பேசினார்.

“இல்லப்பா, ஜிதேஸ்வரி முடிவெடுக்கட்டும். நாம வெயிட் பண்ணலாம்” என சுருக்குமாய் முடித்தான்.

இந்த பதிலில் ராஜுவின் விருப்பம் வெளிப்படையாக தெரிந்தது. அதனால் இதற்கு மேலும் காத்திருப்பது ஆபத்து என உணர்ந்தார். அடுத்த நாள் ஜிதேஸ்வரியின் தந்தையிடம் நேரில் போய் அவர் கவலையை பகிர்ந்து கொண்டார்.

இரு வீட்டு பெரியோர்களும் தங்கள் பிள்ளைகள் வேறு ஊரில் வசிப்பதை விரும்பவில்லை. ராஜுவின் அப்பா இவ்வளவு தூரம் தானாக முன்வந்து பேசியது பெண் வீட்டாருக்கு பிடித்திருந்தது. ராஜு உறுதியாக இருப்பது இன்னும் சந்தோஷமாக இருந்தது.

மீண்டும் பெண்ணிடம் பேசி விட்டு இந்த வாரத்திற்குள் முடுவு சொல்வதாக சொல்லி அனுப்பி வைத்தார்கள். அந்த வார இறுதியில் மும்பை போய் மகள் வீட்டில் இறங்கினார்கள்.

இந்த விஷயத்திற்காக அவர்கள் இவ்வளவு தொலைவு வந்தது நிலைமையின் வீரியத்தை அவளுக்கு உணர்த்தியது. சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் முழுதாக இந்த வரனை பற்றி விவாதித்தார்கள். சென்னை இட மாற்றலின் விளைவுகளை விவரித்தாள் ஜிதேஸ்வரி. அவள் ஆபீசில் விசாரித்ததே அவர்களுக்கு பெரும் நம்பிக்கையாக இருந்தது. மேலும் ஒரு வாரம் தங்கி இருந்து இன்னும் தீவிரமாக அவளை கரைக்க ஆரம்பித்தார்கள். பத்து நாள் கடந்த பிறகு சென்னை மாற்றலுக்கு ஜிதேஸ்வரி விண்ணப்பித்தாள். அடுத்த ஒரு மாதத்தில் சென்னை வந்து சேர, திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. பிறகு இருபதே நாட்களில் திருமணமும் நல்ல படியாக நடந்தது.

A traditional Tamil marriage ceremony