சிறுகதை – செங்காட்டு மண்ணும், நம் வீட்டுப் பொண்ணும்

A middle aged woman reflecting her life

“நான் வெயிட் பண்றேன், சாப்பிட்டு முடிச்சிட்டு இன்னொரு தோசை வேணும்னா சொல்லுங்க” என அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு உள்ளேயிருந்து சொன்னாள் அக்க்ஷயா.

“ஆமா, இன்னொன்னு போடு, அதான் லாஸ்ட்” என்றார் பாஸ்கர்.

அவர் சாப்பிட்டு முடிப்பதற்குள் கடைசியாக ஒரு தடவை கிச்சனை சுத்தம் செய்து விட்டு ஹாலில் வந்து உட்கார்ந்தாள்.

பாஸ்கர் கையை கழுவிக் கொண்டு வர “நம்ம இனியா ரெண்டு வாரத்துக்கு முன்னாடி பெரிய பொண்ணாயிடிச்சாம். கஜா அண்ணன் இன்னிக்கு போன் பண்ணி சொன்னாரு” என துக்கம் தொடையை அடைக்க சொன்னாள்.

கஜபதி அக்க்ஷயாவின் பெரியப்பா மகன். சேலத்துக்கு பக்கத்தில் சொந்த ஊரில் பார்மசி நடத்தி வருகிறார்.

“ஹ்ம்ம்…எனக்கும் லன்ச் டைம்ல கால் பண்ணி சொன்னாரு. வீட்ல கொஞ்சம் நிலவரம் சரியில்ல, அதனால வீட்டோட பங்க்ஷன் வச்சிட்டோம் அப்படிடீன்னார். நானும் அதுக்கென்ன பரவாயில்லை, நாங்க அரையாண்டு லீவுக்கு ஊருக்கு வரும் போது வீட்டுக்கு வரோம்னு சொன்னேன். நவம்பர்ல தான் இனியாக்கு போட்ட நகை சீட்டு முடியுது. சீட்டு அமௌண்டுல அரை பவுனுக்கு கொஞ்சம் குறைவாதான் வரும். போஸ்ட் ஆபீஸ்ல ஏதாவது வச்சிருக்கியா?” என கேட்டார் பாஸ்கர்.

அவளுக்கு காண்டு தலைக்கு ஏறியது. அவர் வீட்டுக்கு வந்து ரெண்டு மணி நேரமாகிறது. இதை பற்றி வாயையே திறக்கவில்லை. எவ்வளவு முக்கியமான நிகழ்வு. தானும் போயிருக்க வேண்டியது. இவர் என்னடாவென்றால் இவ்வளவு ஈசியாக கடந்து போகிறார் என முறைத்தாள்.

“என்ன பெரிய நிலவரம்? நாம என்ன ஏன் பங்க்ஷன மண்டபத்துல வெச்சி பண்ணலேன்னு கேக்க போறாமா? இல்ல நமக்கு தான் நடந்த விவகாரமெல்லாம் தெரியாதா? என அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு கேட்டாள்.

பாஸ்கரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

“கஜாண்ணன் தான் என்னை வீட்டுக்கு கூப்பிட்டுக்கும் போது போட்டோ எடுத்திச்சி. எங்கம்மா ரெண்டு ரோலுக்கு தான் காசு குடுத்தாங்க. அதோட கைக்காசு கொஞ்சம், அப்புறம் எங்க அக்காங்க கிட்ட கொஞ்சம் சில்லறைன்னு தேத்தி, மொத்தம் நாலு ரோலு வாங்கி வந்த மொத்த ஜனத்தையும் ஒருத்தர் விடாம படம் எடுத்திடிச்சு. ஒரு வாரம் கழிச்சி ஆல்பத்தோட வந்து நாலு ரோலுக்கு பிரிண்டிங் காசு கேட்டுது. எங்க அம்மா செம திட்டு திட்டுனாங்க. அதுக்கு அண்ணன் என்ன சொல்லுச்சு தெரியுமாங்க? சித்தி, வந்தவங்கள்ல இருக்குற ஒருத்தர் விடாம அட்டகாசமா எடுத்திருக்கேன். நாளைக்கே ஏதாவது கிழ கட்டைங்க பொட்டுன்னு போயிடுச்சின்னா, நம்ம வீட்டு கதவைதான் வந்து போட்டோவுக்காக தட்டுவாங்கன்னுச்சி. எங்கம்மாக்கு பகீர்னு ஆயிடுச்சி. நல்ல விஷயம் நடந்த வீட்டுல, இந்த நாய் கண்ட பேச்சு பேசுதேன்னு மொறத்தாலேயே வெச்சி வெளுத்துட்டாங்க” என சொல்லி தலையை கவிழ்ந்து கொண்டாள்.

“ம்ம்..” என மெலிதாய் பதில் வந்தது பாஸ்கரிடம் இருந்து.

பத்து நிமிடம் ஆனது அவள் தேறி வர. அப்போது தான் அவர் இது வரை தனக்கு ஆறுதல் சொல்லாதது அவளுக்கு உறுத்தியது. நான் இன்னும் இன்றைய நாளையே process செய்து கொண்டு இருக்கிறேன். இவர் இன்னும் நாலு மாதம் கழித்து முடிய போகும் நகை சீட்டை பற்றி யோசிக்கிறார். தன்னுடைய ஆற்றாமையை கொஞ்சம் கூட உள் வாங்கவில்லை என்ற ஆதங்கம் அவளை சுழற்றியடித்தது.

“என்ன ம்ம்..ன்னு சிம்பிளா முடிச்சிட்டீங்க? நான் ஒருத்தி நொந்து போய் உக்காந்திருக்கேன்? எங்க அம்மா, அப்பா, அக்கா எல்லாரும் உள்ளூர்லயே இருந்ததால போய் பங்க்ஷன் அட்டென்ட் பண்ணி இருக்காங்க. எங்கிட்டா சொன்னா, அண்ணன் கூப்பிடலேன்னு நான் வருத்தப்படுவேன்னு அமுக்காளிங்க வேல பாத்திருக்காங்க. மார்க்கெட்ல ஒரு கடை விடாம ஏறி இறங்கி சீர் வாங்கி இருப்பாங்க போன வாரம். என்கிட்டே சொல்லி இருந்தா நான் போகலேன்னாலும் என் பங்கு காசாவது குடுத்திருப்பேன்ல?” என சீறினாள்.

பாஸ்கருக்கு கொட்டாவி வந்தது. “வாஸ்தவம் தான். அவங்க நெலமைல இருந்து பாரு அக்க்ஷூ. அவங்க எப்படி சொல்லுவாங்க? எனக்கு ரொம்ப பேக் பெயினா இருக்கு. படுத்தா ஒடனே தூக்கம் வராது. நீ கொஞ்சம் சீக்கிரம் வாயேன். மூவ் போட்டுட்டேன்னா கொஞ்ச நேரத்துல அப்படியே தூங்கிடுவேன்” என சொல்லி விட்டு பாஸ்கர் எழுந்து உள்ளே போக, அவள் அப்படியே பழைய நினைவுகளில் ஆழ்ந்து போனாள்.

செங்காட்டு மண்ணும்,
நம் வீட்டுப் பொண்ணும்,
கை விட்டுப் போகக் கண்டா கண்ணீர் வருமே!

தங்கச்சி கண்ணில்
கண்ணீரை கண்டா,
தன் மானம் கூட அண்ணன் விட்டுத் தருமே!

பந்தத்த மீறிப் போக சக்தி இல்லையே,
பாசத்த பங்கு போடப் பட்டா இல்லையே,
வேருக்கு இளகிப் போச்சு வெட்டுப் பாறையே!

தென்கிழக்கு சீமையில,
செங்காத்து பூமியில,
ஏழைப்பட்ட சாதிக்கொரு ஈரமிருக்கு!

காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா,
சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு!

இவுக பொழப்புக்கு நீர்வார்க்கத்தான்,
ஈசானி மூலையில மேகம் இருக்கு!

என பாடல் அவளுக்குள் ஒலிக்க, அப்படியே கரைந்து போய் உட்கார்ந்திருந்தாள்.

அண்ணனுக்கு கொஞ்சம் பண நெருக்கடி, தொழிலும் நட்டத்தில் போகிறது. போதாததுக்கு பெரியவன் வேறு டிரேடிங்கில் பணத்தை விட்டு விட்டு நிலைமையை சிக்கலாகி விட்டான். ஆனால் காரணம் எதுவாயிருந்தாலும் இனியாக்குட்டி கூட தான் இல்லாததை அவளால் தாங்க இயலவில்லை. இவ்வளவு நடந்தும் அம்மாவும் அக்காவும் மூச்சு கூட விடாதது, அவர்கள் தன்னை எங்கே வைத்திருக்கிறார்கள் என்பதை அவளுக்கு உணர்த்துவதாக பட்டது.

இவருக்காக ஊரை விட்டு, சொந்த பந்தத்தை விட்டு, நல்லது கெட்டதில் கலந்து கொள்ளாமல் இங்கே இருந்தால், இந்த மனுஷன் ஆறுதலாய் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் விட்டேத்தியாய் இருப்பது அவளுக்கு வலியை கூட்டியது.

“அண்ணன் நீ இல்லாம பங்க்ஷன் செய்றதுல ரொம்ப வருத்தபட்டிருப்பார்டி”

“அவரு அன்னிக்கு முழுக்க உன்ன மிஸ் பண்ணி இருப்பார் தானே?”

“உனக்கே இப்படி இருக்குன்னா, அவரு எவ்ளோ பீல் பண்ணி இருப்பார் அக்க்ஷூ?” என ஏதாவது சொல்லி தன்னை தேற்றி இருக்கலாம்.

என்ன கவலையாக பொண்டாட்டி இருந்தாலும் சரி, துளி கூட சட்டை பண்ணாமல், தூங்கும் போது தன்னுடைய முதுகு வலிக்கு அவள் கால்களை தூக்கி போட்டுக் கொள்ள மட்டும் ஹிண்ட் கொடுக்க தெரிகிறது.

அக்க்ஷயாவுக்கு என்ன வாழ்க்கை இது என தோன்றியது. பெற்றதுதான் விட்டுக் கொடுத்தது என்றால், இங்கே கட்டியதும் அதே போல தான் இருக்கிறது.

“அக்க்ஷூ..வாயேன்..லேட்டாகுது” என பாஸ்கரின் அழைப்பு வந்தது.

“நாம என்ன மெஷினா? நாலு பேச்சு பேசிட்டு, டமால்னு படுத்து தூங்க? கொஞ்ச நேரம் ஹால்ல உக்காந்து இருக்குறதுல இவருக்கு என்ன பிரச்சினை? அவரு பேசினா நாமும் பேசி, அவரு சிரிச்சா நாமும் சிரிச்சி, அவரு தூங்கினா நாமும் தூங்கிடணும்! என்ன வாழ்க்கைடா இது” என வெறுத்துப் போனாள்.

அடுத்த நாள் காலை. “இன்னைக்கு லாஸ்ட் பீரியட் உனக்கு லைப்ரரி தானே? லாஸ்ட் வீக் நீ கொண்டாந்த புக்க வர்ஷா படிச்சி முடிச்சிடுச்சி. உன் பேக் உள்ள வெச்சிருக்கேன். ஞாபகமா ரிட்டர்ன் பண்ணிடு” என சொல்லி விட்டு கிளம்பினார் பாஸ்கர்.

“பெரிய பிளானிங் குமாருன்னு நினைப்பு” என திட்டிக் கொண்டே அவளும் பள்ளிக்கு கிளம்பினாள்.

அன்றைய நாள் எப்போதும் போல் இருக்கவில்லை. யாரை பார்த்தாலும் எரிச்சலாக இருந்தது. வீட்டிலிருந்த வந்த போன் எதையும் எடுத்து பேசும் மனநிலையில் அவள் இல்லை. பாடம் நடத்தும் மூடும் இல்லை. லஞ்சுக்கு பிறகு ரெண்டு பீரியடையும் P.E.T சாருக்கு கொடுத்தது விட்டு ஸ்டாப் ரூமில் உட்கார்ந்து பேப்பர் திருத்தினாள்.

மீண்டும் மீண்டும் பழைய நினைவுகள் வர, சில பேப்பர்களும் கொஞ்சம் ஈரத்தை வாங்கி கொண்டன.

ஒரு மணி நேரத்திற்கு பிறகு “மிஸ்” என மூன்றாம் வகுப்பு கிளாஸ் லீடர் வந்து நின்றான்.

“என்னடா?” என்றாள்.

“லைப்ரரி பீரியட் மிஸ். நன்முல்லை மிஸ் உங்களையும் கூட்டிட்டு வர சொன்னாங்க” என்றான்.

“போ, வரேன்” என சொல்லிவிட்டு பேப்பர் கட்டை பையில் வைத்து விட்டு, ரிட்டர்ன் செய்ய வேண்டிய புக்கை எடுத்துக் கொண்டாள்.

பாஸ்கரின் மெசேஜ் டங்கென்று வந்தது. துளி கூட empathy இல்லாத வாழ்க்கையில் telepathy மட்டும் நன்றாக வேலை செய்கிறது என நினைத்துக் கொண்டாள்!

அவள் லைப்ரரி போய் சேரும்போது பிள்ளைகள் அனைவரும் வட்டமாக அமர்ந்திருந்தார்கள்.

“வாங்க மிஸ், இன்னைக்கு ஒரு activity பிளான் பண்ணி இருக்கேன். அது முடிஞ்சப்புறம் book issue பண்ணிடலாம்” என சொன்னார் நன்முல்லை.

ஒரு அட்டை பெட்டியில் காட்டு விலங்குகள் மற்றும் பறவைகளின் படம் ஒட்டிய மாஸ்க்குகள் இருந்தது. பிள்ளைகள் அவர்களுக்கு பிடித்த விலங்கின் மாஸ்க்கை மாட்டிக் கொண்டு, அது ஏன் அவர்களுக்கு பிடிக்கும்? ஒரு நாள் அவர்கள் அந்த விலங்காக வாழ்ந்தால் என்னவெல்லாம் செய்வார்கள் என சொல்ல வேண்டும்.

ஒவ்வொருவராக வந்து பெட்டியை துழாவி, அவர்களுக்கு பிடித்த மாஸ்க்கை அணிந்து கொண்டு போய் உட்கார்ந்தார்கள்.

முதலில் மீன் உட்கார்ந்திருந்தது. என்ன காரணம் என கேட்டால் “தண்ணில ஆட்டம் போட்டால் செமயா இருக்கும் மிஸ்” என்றது.

“நான் தான் அந்த காட்டுலயே செம ஸ்மார்ட், க்ளெவரான அனிமல்” என நரி சொன்னது.

“நான் மரத்துலேர்ந்து bungee jumping பண்ணுவேன்” என ஊசலாடியபடியே சொன்னது குரங்கு.

“என் பேச்ச தான் எல்லாரும் கேக்கணும்..நான் தான் காட்டுக்கே ராஜா” என கெத்தாக சொன்னது சிங்கம்.

குதிரை, மான், புலி, முயல் என அடுத்தடுத்து ஆளுக்கொரு காரணம் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

அக்க்ஷயாவும் குறுக்கே குறுக்கே கேள்வி கேட்டு அவர்கள் உற்சாகத்தை கூட்டினாள். எல்லோரும் சொல்லி முடிக்க, நிகழ்ச்சி முடியும் தருவாயில் நன்முல்லை பெட்டிக்குள் எட்டிப் பார்த்தார். ஒரே ஒரு மாஸ்க் மட்டும் யாரும் எடுக்காமல் விடுபட்டிருந்தது.

“என்ன பசங்களா? யாருக்கும் யானை புடிக்காதா? யானை மாஸ்க்கை யாருமே எடுக்கலை?” என கேட்டுக் கொண்டே மாஸ்க்கை உயர்த்தி பிடித்து காண்பித்தார்.

பிள்ளைகள் அவர்களுக்குள்ளாக பேசிக் கொண்டார்கள்.

பிறகு “மிஸ், அது கொஞ்சம் ஹெவியா இருக்கும்” என ஆரம்பித்தது ஒரு வாண்டு.

“அது குட் அனிமல் தான்..ஆனா cuteஆ இருக்காது” என்றது இன்னொன்று.

“ஆமாம் மிஸ், நாலு காலு, ஒரு வாலு, அப்புறம் ஒரு தும்பிக்கை வேற.. நான் எப்படி மிஸ் பொழுதுக்கும் அது மாதிரியே பேலன்ஸ் பண்ணி நடக்குறது” என ஆடி பாடியபடியே இன்னொரு குட்டி சொன்னது.

மொத்த க்ளாஸும் கொல்லென சிரிக்க “சரி, அப்படீன்னா அதோட தும்பிக்கையை எடுத்திடலாமா? என மாஸ்க்கை லேசாக மடக்கியபடியே கேட்டாள் அக்க்ஷயா.

“ஹ்ம்ம்..இப்போ இது பாக்க யானை மாதிரியே இல்லையே?” என முகத்தை சுளித்தான் ஒரு பையன்.

“ஆமாம் மிஸ், அழகாவே இல்ல. தும்பிக்கை இருக்கட்டும் மிஸ்” என்றான் இன்னொருவன்.

“சரி, தும்பிக்கை இருக்கட்டும். ஆனா அது அழகுக்காக இருக்குன்னு நெனைக்குறீங்களா? இது இல்லேன்னா இந்த யானை என்ன பண்ணும்?” என தொடர்ந்தாள் அக்க்ஷயா.

“மிஸ், அதனால மர கட்டைய தூக்கவே முடியாது”

“அதனால மர கிளையை ஒடச்சி சாப்பிட முடியாது, மிஸ்”

“அது எப்புடி மிஸ் தண்ணி அடிச்சி விளையாடும்?” என அடுத்தடுத்து பதில்கள் வந்தது.

“இப்போ புரியுதா பசங்களா? ஒருத்தர் கிட்ட நாம குறையா பாக்குற விஷயம் தான், பல விஷயங்கள்ல நன்மையா இருக்குன்னு” என கேட்டாள் அக்க்ஷயா.

எல்லோரும் ஒரு சேர மண்டையை ஆட்டினார்கள்.

“யானைங்க ரொம்ப புத்திசாலிங்க பசங்களா. ரொம்ப தூரத்துல இருக்குற யானைங்கள்கூட கண்ணுக்குத் தெரியாம தகவல் சொல்லிக்குவாங்க. சத்தம் மூலமாவும், நில அதிர்வை உணர்ந்தும்கூட பேசிக்குவாங்க” என தொடர்ந்தார் நன்முல்லை.

“மிஸ்.. அப்போ இது ஒரு மாதிரி டெலிபதியா?” என ஒரு குட்டி விஞ்ஞானி கேட்டது.

“ம்ம். அதை டெலிபதின்னு பொதுவா சொல்ல முடியாது. அவங்களோட கூர்மையா கவனிக்கிற திறன், அப்புறம் ஒருத்தரை ஒருத்தர் நன்றாகப் புரிஞ்சுக்கிற குணம் அப்படீன்னு இதெல்லாம் சேர்ந்ததால நமக்குத் டெலிபதி மாதிரி தெரியுது” என விளக்கினார் நன்முல்லை.

அக்க்ஷயாவுக்கு ஒரு முறை மனதிற்குள் மின்னல் வெட்டியது.

“ஒரு விலங்கினை அதன் ஒரு குணத்தாலோ அல்லது அதன் ஒரு உருவ அமைப்பினாலோ நாம் பார்க்கும் கோணமே இவ்வளவு வித்தியாசப்படும்போது, ஒரு மனிதனை மட்டும் அவனின் ஒரு குணத்தையோ அல்லது செயலையோ மட்டும் எப்படி அளவுகோலாக எடுத்துக் கொண்டு எடை போட முடியும்? என தன்னை தானே கேட்டுக் கொண்டாள்.

“ஒரு நிமிஷம் மிஸ்” என நன்முல்லையிடம் சொல்லி விட்டு லைப்ரரியின் வெளியே இருந்த பெஞ்சில் வந்து உட்கார்ந்தாள்.

பாஸ்கரும் இப்படித்தான். எல்லோர் மீதும் அன்பும், பல நல்ல குணங்களும் கொண்டவர். ஆனால் அவர் மனம் விட்டு பேசாததும், நெருக்கடியான காலகட்டங்களில் ஆறுதல் சொல்லாததும் அவரின் மீது ஒரு வெறுப்புணர்வை தனக்கு அளிப்பதாக அவளுக்கு தோன்றியது.

ஆறுதலாக பேச தெரியாதது பாஸ்கரின் குறைதான். ஆனால் அந்த ஒரு குறையை வைத்து ,அவர் காட்டும் மொத்த அன்பையும் புறந்தள்ளி விட முடியாது என உணர்ந்தாள்.

நினைவுகள் எங்கெங்கோ போக, போன் அடித்தது.

“நான் வெளில வெய்ட் பண்றேன் அக்க்ஷூ..மாட வீதி கேட்டுக்கு எதிர்ல இருக்கேன். உங்க லைப்ரரி பில்டிங்க்லேர்ந்து அதான் பக்கம். காலைல டல்லா இருந்தல்ல, அதான் வெளில போகலாம்னு பர்மிஷன் சொல்லிட்டு வந்துட்டேன்” என்றார் பாஸ்கர்.

அவள் மெலிதாக சிரித்துக் கொண்டே உள்ளே போனாள். “மிஸ், நா இந்த யானை மாஸ்க்கை எடுத்திட்டு போகவா?” என கேட்டு, அதை எடுத்து பையில் வைத்துக் கொண்டு கிளம்பினாள்.

தமிழ் சிறுகதை – காகித கப்பல்

A mother and child playing in rain with paper boat at temple

“காவ்யா, எழுந்திரு, ஸ்கூலுக்கு ரெடியாகணும்” என எழுப்பினாள் யமுனா.

“மா, சூப்பரா ஒரு கனவுமா, என்ன எழுப்பிட்டியே” என்றபடி படுக்கையிலிருந்து எழுந்தாள் காவ்யா.

ஆறு வயது. ஒன்றாம் வகுப்பு முடிக்கப்போகிறாள்.

அப்படியே அவளை அள்ளி அணைத்து மீண்டும் படுக்கையில் சரித்து தானும் பக்கத்தில் படுத்தாள் யமுனா.

“வாவ், சொல்லு என்ன கனவு?” என கேட்டாள்.

“மா, நானும் ஒரு பிங்க் ஏஞ்சலும் கார்டன்ல கை கோர்த்து நடந்து போறோம்.

வைட் பட்டர்பிளை நம்ம பால்கனிக்கு வருமே அதுவும் வந்துது  எங்களோட.

நாங்க பேசிட்டே கார்டன சுத்தி நடந்தோம்.ஏஞ்சல் என்கிட்டே என்ன வேணும்னு கேட்டாங்க? என் பிரெண்ட் அனுஷாவோட டாக் அவுஸ் ஒடஞ்சி போச்சி, அத பிக்ஸ் பண்ணி தர சொல்லி கேட்டோம்” என்றாள்.

“ஓ, அனுஷாவும் வந்தாளா ட்ரீம்ல?” என கேட்டேன்.

“ஆமாம்மா, அனுஷா அப்புறம் அவளோட பப்பி” என்றாள்.

“ஏஞ்சல் என்ன சொன்னாங்க?” என ஆர்வமாய் கேட்டேன்.

“அவங்க ஓகே சொல்லிட்டு பப்பியோட வீட்டை சரி பண்ணிட்டாங்க” என்றாள்.

“ஏண்டி வைட் பட்டர்பிளை, அனுஷா,பப்பி எல்லாரும் ஏஞ்சல மீட் பண்ணிருக்காங்க. ஆனா என்ன மட்டும் உன் கனவுல கூப்பிடலை?” என செல்லமாய் கோபித்து கொண்டேன்.

“மா அதுக்குள்ள நீ என்ன எழுப்பிட்ட. சரி, நா திரும்ப தூங்குறேன், என் கனவுல வா” என நைஸாய் படுத்துக்கொண்டாள்.

“ஹா, இந்த கதையெல்லாம் வேணாம், எழுந்து வா, குளிக்கலாம்” என்றேன் சிரித்துக்கொண்டே.

“நேத்து நைட்டும் அப்பா வீட்டுக்கு வரலியாம்மா” என சுற்றி முற்றி பார்த்துக் கொண்டே கேட்டாள்.

விடிந்ததும் பேசி சிரித்தாலும் அவள் ஏங்குவது வலியை தந்தது. அவளிடம் எப்படி சொல்லி புரிய வைப்பது அவருக்கு ஒரு ஏஞ்சல் இருப்பதை.

“இல்லடா, வா வந்து ப்ரஷ் பண்ணு” என தூக்கி கொண்டு போய் பாத்ரூமில் நிற்க வைத்தேன்.

“நா குட் நைட் மெசேஜ் அனுப்பினேன்மா, அவர் ரிப்ளை கூட பண்ணல” என அலுத்துக் கொண்டாள்.

“அப்பா பிஸியா இருக்காரும்மா” என சொல்லி, வேறு ஏதோ கதைகளை பேசி அவளை சமாதானப்படுத்தினேன்.

“நீ  பேக் ரெடி பண்ணு, நா உனக்கு தோசை ஊத்துறேன்” என சொல்லி கிச்சனுக்குள் போனேன்.

அம்மாவின் போன் வந்தது. “அவர் வந்தாராடி?” என்றாள்.

“நா இன்னைக்கு சாயந்திரம் லாயர பாக்க போலாம்னு இருக்கேன்” என்றேன்.

“ஏண்டி, உனக்கு பொறுமையே கிடையாதா? ஒரு பொண்ணு இருக்கா, மனசுல வச்சி நடந்துக்க” என அழுத்தமாக சொன்னாள்.

“எனக்கு ஒரு பொண்ணு இருக்கான்னு அமைதியா இருக்கணுமா? இல்ல நம்ம வீட்டுல ஒரு பொண்ணு கல்யாணத்துக்கு இருக்கானு வெயிட் பண்ணணுமா?” என கோபம் தெறிக்க கேட்டேன்.

“இன்னும் மூணு வருஷத்துல எல்லாம் சரிஆகிடும்னு நம்ம ஜோசியர் சொல்றார். அதுவரை கொஞ்சம் பொறுமையா இரும்மா” என்றாள்.

“இந்த லட்சணத்தை தான் அவர் சொன்னாரு நல்ல ஜாதகம்னு என் தலைல கட்டி வச்ச? காவ்யா சொல்ற விதத்துல சொன்னா புரிஞ்சிப்பா. நானும் அவளும் எங்க வாழ்க்கையை பாத்துக்குறோம். தயவு செஞ்சு அட்வைஸ் பண்ணாதே” என்றேன்.

வட்டமாய் ஒரு தோசை சுட்டு முடிப்பதற்குள் வாழ்க்கையை ஒரு சுற்று மனதிற்குள் ஓட்டி பார்த்து விட்டேன்.

அம்மா போனை வைக்க, நானும் காவ்யாவும் பள்ளிக்கு கிளம்பினோம்.

“மா, இரு வரேன்’ என அவள் ரூமிற்குள் ஓடினாள்.

திரும்ப வந்து “இந்தா” என சொல்லி ஒரு பேப்பரை நீட்டினாள்.

தினசரி காலண்டரில் தேதி கிழித்த பேப்பர்.

“என்ன” என கேட்டேன்.

“பிரிச்சு படி” என்றாள்.

“யூ ஆர் மை ஏஞ்சல்” என எழுதியிருந்தாள்.

“ஸ்வீட்ட்டு, தேங்க்ஸ். என்ன இந்த பேப்பர்ல எழுதி இருக்க?” என்றேன்.

“எங்க டீச்சர் சொன்னாங்கமா, இந்த மாதிரி வேஸ்ட் பேப்பர்ல ஏதாவது கிராப்ட் பண்ணுங்கன்னு. ஆனா டெய்லி கிராப்ட் பண்ண முடியாதுல. அதான் எழுதிட்டேன்” என்றாள் சிரித்தபடி.

“சூப்பர்” என சொல்லி பார்க்கிங் நோக்கி நடந்தோம்.

“மா, அனுஷாவோட பப்பிக்கு ஹவுஸ் சரியாகுமா” என திடீரென கேட்டாள்.

“அவங்க அம்மா கொஞ்சம் பிஸியா இருக்காங்கம்மா, இன்னும் ஒரு வாரத்துல சரி பண்றேன்னு சொல்லி இருக்காங்க. இன்னைக்கு வாக்கிங் வந்தா கேக்குறேன்” என சொல்லி வண்டியை கிளப்பினோம்.

“மா, ஒரு கேம். அனுஷாவோட பர்த்டே டென்த் ஆகஸ்ட். இப்போ நா ஸ்கூல் போறதுக்குள்ள அந்த நம்பரை பாத்துட்டேன்னா, அவ பப்பியோட அவுஸ் சரியாகிடும்” என வெளியே பார்த்துக் கொண்டே சொன்னாள்.

காரில் போகும் போது போன் பார்க்காமல் இருக்க ஒரு நாள் விளையாட்டாய் ஆரம்பித்தது, இன்று வரை தொடர்கிறது. தினம் ஒரு எண். தினம் ஒரு கேள்விக்கான பதில்.

அம்மாவின் போன் மீண்டும் வந்தது.

“சாரிடி, காலைல உன்ன டென்ஷானாக்கிட்டேன். சாயந்திரம் நானும் அப்பாவும் வீட்டுக்கு வரோம்” என்றாள்.

“சரிம்மா” என சொல்லி போனை வைத்தேன்.

“ஹேய், அது பப்பியோட அவுஸ் தானே, அப்போ பப்பியோட பர்த்டே தானே பாக்கணும்? ” என அவளை சீண்டினேன்.

திரு திருவென முழித்தது காவ்யா.

சற்று யோசித்து, “ஹா, எனக்கு பீவர் வந்தா நீயும் விபூதி வச்சிக்குறேல்ல! எனக்கு சரியாகிடுது. அது மாதிரி தான்” என ஒரு பாயிண்டை போட்டது.

“நீ தான் ஸ்மார்ட் ஆச்சே” என சொன்னதும் கை தட்டி  சிரித்தது.

ஸ்கூல் வந்து சேர “மா, இன்னும் நம்பரை பாக்கலியே” என சோர்வாய் சொன்னாள்.

“இன்னைக்குள்ள கண்டிப்பா பாப்போம்” என சொல்லி கிளம்பினேன்.

அன்று மாலை அம்மாவும் அப்பாவும் வந்து விட்டார்கள். மழை வரும் போல இருந்தது.

“லாயர் என்ன சொல்றார்?” என பொதுவாக கேட்டார்.

“சீக்கிரம் முடிக்கலாம்னு” சொல்லி இருக்கார் என்றபடி உள்ளே போனேன்.

“டிரஸ் மாத்திக்க, எல்லாரும் கோவிலுக்கு போலாம்” என்றபடியே டீ கொடுத்தாள் அம்மா.

“ஏன் ஜோசியரை அங்க வர சொல்லி இருக்கியா?” என கேட்டேன்.

பதிலேதும் சொல்லாமல் திரும்ப போய் விட்டாள்.

மூச்சு முட்டுவது போல இருந்தது யமுனாவிற்க்கு. வாழவும் வழியில்லாமல், அதிலிருந்து வெளியேறவும் வழியில்லாமல் திணறலாய் இருந்தது.

பேசாமல் கல்யாணம் பண்ணாமல் வீட்டிலேயே இருந்திருக்கலாம். இல்லை இவர்கள் பாரமாய் உணர்ந்தால் படிப்புக்கு ஏற்ற வேலையில் எங்காவது வேறு ஊரிலாவது வாழ்ந்திருக்கலாம்.”மா, நா ரெடி ஆகிட்டேன்” என காவ்யா வர, தான் இன்னும் தயாராகாமல் இருப்பது உரைத்தது.

“பத்து நிமிஷம், ரெடி ஆகிட்டு வரேன்’ என சொல்லி அனுப்பினேன்.

கோவிலுக்கு போய் சாமி பார்த்துவிட்டு கல் திண்ணையில் போய் உட்கார்ந்தோம். நல்ல மழை.

நினைத்த மாதிரியே ஜோசியரும் யாருடனோ பேசிக்கொண்டிருந்தவர், எங்களை பார்த்ததும் டவலை போர்த்திக் கொண்டு எங்களை நோக்கி வந்தார்.

சற்று நேரம் பொதுவாக பேசியவர், பிறகு என்னிடம் “யமுனா, அம்மா என்கிட்டே பேசுனாங்க. அவருக்கு ரெண்டாம்  வீடு இப்போ கெட்டு போய் இருக்கு, கொஞ்ச நாள்ல சரி ஆகிடும்மா”, என தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

“அம்மா இவரு வீடு எல்லாம் பிக்ஸ் பண்ணுவாரா? அங்கிள், என் பிரெண்டோட வீடு ரிப்பேரா இருக்கு, சரி பண்ணி தரீங்களா?” என குறுக்கே வந்து கேட்டது காவ்யா.

அவர் முழிக்க எனக்கு சிரிப்பாய் வந்தது.

நாயின் வீடு கூட சரியாகும். ஆனால் நாய் புத்தி உள்ளவர்கள் என்றும் திருந்த போவதில்லை என நினைத்துக் கொண்டேன்.

காவ்யா மாதிரி க்ளையண்ட்டை எதிர்பாக்காதவர் உடனே கிளம்பி போய் விட்டார்.

மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது.

கால் வலி ஆரம்பிக்க, “வா காவ்யா அந்த ஓரம் போய் உட்காரலாம்” என அழைத்தேன்.

“மா, ரொம்ப போரடிக்குது” என சிணுங்கினாள்.

“அங்க தூண்ல ஒரு பை கட்டி இருக்கு பாரு, அதுல இருந்து ஒரு பேப்பர் எடுத்துட்டு வா, நா உனக்கு போட் செய்து தரேன்” என அம்மா சொல்ல “சரி பாட்டி” என ஓடியது காவ்யா.

அனுஷா அம்மாவிடம் இருந்து போன் வர பேசியதில் சில நிமிடங்கள்  கழிந்தது.

“அம்மா இங்க பாரு சர்ப்ரைஸ்” என வந்தாள் காவ்யா.

“உன் பர்த்டே டேட் பாரு” என தினசரி காலண்டர் பேப்பரை காட்டி சிரித்தாள்.

“உனக்கு இன்னிக்கு லக்கி டேமா” என சொல்லிவிட்டு என்னிடம் பேப்பரை நீட்டியது.

விபூதி பிரசாதம் மடிக்க தினசரி காலண்டர் பேப்பர் ஒரு பையில் வைக்கப்பட்டிருந்தது. அதில் கப்பல் செய்ய ஒரு பேப்பரை எடுக்க அது என் பிறந்த நாளாய் அமைந்தது.

அம்மா கப்பல் செய்து கொடுக்க, காவ்யா மழை நீரில் அதை விட்டது.

பெரும் மழை காற்றோடு வெளுத்து வாங்கி கொண்டிருந்தது.

கப்பல் ஆடி ஆடி பயணிக்க சற்று தூரம் காவ்யாவும் அதனுடன் நகர்ந்து சென்றாள்.

சற்று நேரம் கழித்து அதை நீரில் இருந்து எடுத்து மீண்டும் பிரித்து அந்த மண்டப தரையில் வைத்து விட்டாள்.

“ஆமா, ஏன் அந்த கப்பலை பிரிச்சுட்டே?” என  கேட்டேன்.

“அது ரொம்ப சேடா இருந்துது மா” என்றாள் காவ்யா.

“கப்பலா?” என்றேன்.

“பேப்பர் மா!” என்றாள்.

“கரெக்ட், பேப்பர் தான், ஏன் சேடா இருந்துது? அது உன் கிட்ட என்ன சொல்லுச்சு?” என கேட்டேன்.

“நானும் ஒரு வீட்ல காலண்டர்ல சேபா இருந்தேன். என்ன ஏன் கப்பல் பண்ணி காத்து மழைல விட்டீங்க? என்ன ஏன் கஷ்டப்படுத்துறீங்கன்னு பீல் பண்ணுதும்மா” என சொன்னாள் காவ்யா.

கண்ணை கட்டியது எனக்கு.

நிஜம் தான். வேணாம்னா தூக்கி ஒரு ஓரமா வெச்சிருக்கலாம்.கொஞ்சம் புண்ணியம் கிடைக்கும்னு அதை கொண்டு வந்து இந்த பைல போட்டுட்டாங்க. சரி ஏதோ விபூதி பொட்டலம் மடிக்கவாவது மட்டும் உபயோகபடுத்தியிருக்கலாம். அத கப்பல் செஞ்சு வேடிக்கை பாக்குறோம்.

வெறும் காலி கப்பல், ஒரு பாரமும் சுமக்காமல் ஜாலியாக ஆடி ஆடி போய் கொண்டிருக்கிறது என நாம் நினைக்கிறோம். ஆனால் காற்று மழையில் பழக்கமில்லாத வகையில், திசையறியாமல் பயணிப்பதை விட வேறு எது பெரும் பாரமாய் இருக்க முடியும்” என மனதிற்குள் நினைத்து கொண்டேன்.

“உங்க வீட்டுல தாண்டி பேப்பர் பேசும், சைக்கிள் பேசும், நாய் குட்டி பேசும்” என முறைத்தாள் அம்மா.

“எல்லாம் பேசும்மா, நாம தான் கவனிக்கிறது இல்ல. அது சரி, பெத்த பொண்ணு, நா வாய தொறந்து என் கஷ்டத்த சொன்னாலே உன்னால புரிஞ்சிக்க முடியல” என்றேன்.

“இந்த கப்பல் மாதிரி தான்மா  நானும். வாழ்க்கை என்ன எங்க கூட்டிட்டு போகுது, எதிர்காலம் எப்படினு தெரியாம தத்தளிக்குறேன். உங்களுக்கு கடமை முடியனும்னு கல்யாணத்த பண்ணிடுறீங்க. அப்புறம் சமூகத்துக்காக அமைதியா காலத்தை ஓட்ட சொல்றீங்க” என்றேன்.

சற்று நேரத்தில் மழை சற்று குறைய வீட்டுக்கு கிளம்ப எழுந்தோம்.

“அடுத்த முறை லாயர பாக்க போனீன்னா சொல்லு ,நானும் கூட வரேன்” என்றாள் அம்மா.

மழையும் விட மனசும் தெளிவாக இருந்தது.

“அம்மா அங்க பாரு, நா தேடுன நம்பர்” என காண்பித்தாள் காவ்யா.

போற்றி மாலையின் எண்ணிக்கை பளிச்சென கல்வெட்டில் இருந்தது.

“மா, இன்னைக்கு உனக்கும் லக்கி டே, பப்பிக்கும் லக்கி டே!” என சிரித்தாள் காவ்யா.

தமிழ் சிறுகதை – அஞ்சு வார தீபம்

Diya made by lemon skin, ghee and cotton wick to pray Goddess Durga

“வண்ணமதிக்கு எப்போடா வரன் பாக்க ஆரம்பிக்க போற”? என கேட்டாள் பாட்டி.

“கடைசி பரீட்சை முடியட்டும்மா. நம்ம சாம்பமூர்த்தி தங்கமான புள்ளைன்னு ஒரு ஆபீசர் வரன் பத்தி சொல்லி இருக்கார். ஆவணி மாசம் பேசி முடிக்கலாம்” என்றார் அப்பா.

“வேலைக்கு போய் செட்டில் ஆகிட்டு கல்யாணம் பண்ணிக்குறேன் பாட்டி” என்றேன் நான்.

“நீ செட்டில் ஆகுற வரைக்கும் சிங்கிளா இருக்கவன், அங்கிள் வயசுல இருப்பான். அறுபது வயசு வரை வேலை செய்யலாம், ஆனா கல்யாணம் காலா காலத்துல பண்ணனும். புள்ளைங்கள பெத்து மட்டும் எங்க கிட்ட குடுத்துடு, நாங்க இத்தனை பேரு எதுக்கு இருக்கோம்? எங்க செல்லங்களை நாங்க பாத்துக்குறோம், நீ வேலைக்கு போ, யாரு தடுக்க போறா? என அக்காவுக்கு சொன்ன அதே ப்ளூ பிரிண்டை முகம் சிவக்க எனக்கும் சொன்னாள்.

பிறகு “அம்மனுக்கு அஞ்சு வாரம் தீபம் ஏத்தி வேண்டிக்க, நல்லது நடக்கும்!” என முடித்தாள்.

முதல் வாரம். கோவிலின் வெளி பிரகாரத்தில் இருந்த துர்கை சன்னதி முன் போய் நின்றேன்.

“என்ன வேண்டுதல்?” என்றார் அம்மன்.

“நல்லது நடக்க!” என்றேன்.

“பெற்றவர் கடமையை முடிக்கவா? உன் கனவுகள் சிறக்கவா? யாருக்கு நல்லது நடக்க?” என்றார்.

“நீங்க பாத்து எது நடத்தி குடுத்தாலும் சரி” என்றேன்.

“உங்கப்பாகிட்ட பேசுற மாதிரி பழம் மாதிரி என்கிட்ட பேசாதே. உனக்கு என்ன வேணும்னு தெளிவா சொல்லு” கிண்டலாய் சொன்னார் அம்மன்.

“யோசிச்சு சொல்றேன், இந்த கனிய குறுக்கில நறுக்கவா? இல்ல நெடுக்குல நறுக்கவா? எப்படி பிழிந்து தீபம் ஏற்றட்டும்? என சந்தேகம் கேட்டேன்.

“எப்படியாவது நறுக்கு. ஆனா இந்த குடும்பத்தை நல்லா தெரியும், இந்த வரன் கட்டி தங்கம்னு எவனாவது சொன்னா அவனை நறுக்கி தொரத்திடு! ஊர்ல இருக்க எல்லா வரனையும் சாம்பமூர்த்தி கட்டி தங்கம்னு தான் சொல்லுவான், உங்க ஆளுங்கள விட்டு நல்லா விசாரிக்க சொல்லு. அங்காளி பங்காளின்னு உங்க அம்மா வடிச்சு கொட்டுனாங்கல்ல, அந்த தீவட்டி தடியனுங்கள தீர விசாரிக்க சொல்லு. முடிஞ்சா நீயே பேசி பாரு.

சாம்பமூர்த்தி பேச்ச நம்புனவங்களுக்கு சம்பவம் காரண்ட்டி, சொல்லிட்டேன். உமன் எம்பவர்மெண்டு பத்தியெல்லாம் பேசி பரிசு வாங்கி இருக்க, நல்லா விசாரிச்சு, ஒடச்சி பேசி முடிவெடு.அப்புறம் வாரா வாரம் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ல லெமன வாங்கிட்டு வந்து என்கிட்ட சொல்யூஷன் கேட்காதே! என்றார் அம்மன்.

இரண்டாம் வாரம்.”திரி போட்டு எண்ணெய் ஊற்றவா? எண்ணெய் ஊற்றிவிட்டு திரி போடவா? என்றேன்.

“எப்படி வேண்டுமானாலும் போடு. ஆனால் வாழ்க்கை உன்னை புரட்டி போட்டாலும், உருட்டி போட்டாலும், மனச மட்டும் விட்டுடாதே. தாய் தகப்பன் தாங்காட்டாலும் சின்ன புள்ளைல இருந்து என்ன சுத்தி சுத்தி வந்த உன்னை நா விட்டு விடுவேனா?” என்றார்.

மூன்றாவது வாரம். “மூச்சு விடாமல் உன் போற்றி மாலையை சொல்லட்டுமா?” என்றேன்.

“எதுக்கு? ரிலாக்ஸ்டாவே சொல்லு. ஆனா எந்த உறவாவது மூச்சு முட்டுற மாதிரி இருந்தா ஊர் போற்றுதலுக்காக வாய் மூடி இருக்காதே” என்றார்.

நான்காம் வாரம். சாமிக்கு மட்டும் படையல், திருவிழா எல்லாம். உனக்கில்லயா? என்றேன்.

வாரா வாரம் உனக்கு ஏன் புத்தி சொல்றேன்னு இப்போ புரியுதா? என்றார்.

அஞ்சாம் வாரம். “காலம் முழுக்க எனக்கு வழி துணையா வரீங்களா? என்றேன்.

“காலமெல்லாம் வர முடியாது. வேணும்னா நீ ஹால் டிக்கெட் எடுத்துட்டு போகும்போதெல்லாம் எக்ஸாம் ஹால் வரைக்கும் துணையா வரேன். எப்படியாவது நல்லா படிச்சி, பாஸாகி, பொழச்சிக்க” என்கிறார்.

சில மாதங்கள் கழித்து அம்மன் முன் ஒரு கவரை வைத்து கும்பிட்டேன்.

“என்ன கல்யாண பத்திரிகையா? என கேட்டார் அம்மன்.

“இல்லை, என் அப்பாயின்மென்ட் ஆர்டர்”என்றேன். “நா பாஸாகிட்டேன்” என என்னை பார்த்து முதல் முறை சிரித்தார் அம்மன்.