சிறுகதை – திருமதி.வெறும் பானுமதி

A 50 year old tamil woman sitting at living room

Part 1

இரவு பத்து மணி. அம்மாவின் ரூமில் இன்னும் ரீடிங் லைட் எரிந்து கொண்டு இருக்கிறது.

“பூரணி, அம்மா டிஸ்டர்ப்டா இருக்காங்கன்னு நெனைக்குறேன்” என கவலையாய் சொன்னான் பாலன்.

“கண்டிப்பாங்க, அவங்க மனசுல என்னென்ன ஓடும்னு நெனச்சாலே எனக்கு வருத்தமா இருக்குங்க. இல்லாதவர்ன்னு ஆனவர் அப்படியே இல்லாமலேயே இருந்திருக்கலாம். இப்போ திடீர்னு ரெண்டாந்தாரத்து பொண்ணுக்கு கல்யாணம், அதுக்கு பத்திரிகை வைக்க வராருன்னா அவங்க மனநிலை எப்படி இருக்கும்?” என ஆதங்கமாய் சொன்னாள் பூரணி.

பாலன் படுக்கையில் இருந்து எழுந்து ஜன்னலின் அருகே போய் நின்றான். அவன் எட்டு வயதாக இருக்கும் போது அப்பாவின் foundry தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து அடுத்த வருடத்திலேயே அவர் நடத்தி வந்த சிட் பண்டு தொழிலும் முடங்க, சுமார் எட்டு லட்ச ரூபாய் கடன் சேர்ந்தது.

அப்பாவுக்கு தொழிலில் பணம் போனதைவிட, ஊரில் கவுரவம் போனது பெரும் தலை குனிவாக இருந்தது. இருக்கும் நகை, வீடு இதையெல்லாம் விற்று பாதி கடனையாவது உடனே கொடுத்துவிடலாம் என அம்மா யோசனை சொன்னாள்.

தோற்ற மனிதனாக, திரும்ப பூஜ்ஜியத்திலிருந்து ஆரம்பிக்க அவர் விரும்பவில்லை.

“எல்லாத்தையும் வித்து பாதி பேருக்கு குடுத்தாலும், ஊர்க்காரங்க நான் மோசம் பண்ணிட்டேன்னு தானே சொல்வாங்க? அதனால, நான் வெளியூருக்கோ, வெளிநாட்டுக்கோ போய் வேலை செஞ்சு பணம் அனுப்பினேன்னா, நீ கொஞ்சம் கொஞ்சமா அடைச்சிடு. ஜனங்களும் மகாதேவன் குடும்பத்தை பிரிஞ்சி கஷ்டப்பட்டு, கடனை அடைச்சான்னு சொல்லுவாங்க” என விளக்கம் சொன்னார்.

தூரத்து சொந்தம் வழியாக குஜராத் ஜாம் நகரில் இருந்த பேக்டரியில் மெக்கானிக் வேலை அவருக்கு கிடைக்க, குடும்பத்தை இங்கேயே இருக்க சொல்லி விட்டு அவர் மட்டும் கிளம்பி போனார்.

தினமும் வீடு தேடி வரும் கடன்காரர்களுக்கு அம்மா தான் பதில் சொல்லி சமாளிப்பாள். ஒரு ஞாயிற்றுக்கிழமை கறி கடையில் அம்மா நின்று கொண்டிருந்த போது, அங்கே வந்த பெண்மணியின் பார்வையில் கூனி குறுகி போனதாக அழுதது இன்னும் ஞாபகம் இருக்கிறது. ஊரார் பணத்தை கொடுக்க வக்கில்லாமல் இருப்பவர்களுக்கு, கறி சோறு ஒரு கேடா என வசவு வாங்கியதை சொல்லி கதறியதும் அவன் நினைவை விட்டு அகலவில்லை.

சுமார் ஒரு வருட காலம், மாதம் ஒரு லெட்டரும் கொஞ்சம் பணமும் அனுப்பி கொண்டிருந்தார். இரண்டாம் வருடம் கடிதங்கள் குறைய, பணம் மட்டும் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. மூன்றாம் வருடம் ஒரே ஒரு கடிதம் மட்டும் வந்தது. வேலைக்கு வந்த இடத்தில ஒரு இக்கட்டான சூழ்நிலையால், தான் இன்னொரு திருமணம் செய்து கொண்டதாகவும், அந்த கடிதத்துக்கு அம்மா பதில் போட்டால், அந்த வருட லீவுக்கு அவர் மட்டும் வீட்டுக்கு வருவதாகவும் எழுதியிருந்தார்.

அம்மா அந்த கடிதத்திற்கு பதில் எழுதவில்லை.

முதல் வேலையாக நகை, வீடு, நிலம் என என்னென்ன இருந்ததோ எல்லாவற்றையும் விற்று, முக்கால்வாசி கடனை அடைத்து விட்டு, சிப்காட்டுக்கு பக்கத்தில் வாடகைக்கு வீடு எடுத்து குடியேறினாள். அதே ஏரியாவில் இருந்த foundry பேக்டரியில் மாதம் ரெண்டாயிரம் ரூபாய்க்கு mould helper வேலைக்கு சேர்ந்தாள். பாலனின் படிப்புக்கும், வீட்டு செலவுக்கும் அந்த பணம் சரியாய் போக, மீதி கடனை அடைக்க விழி பிதுங்கி நின்றாள்.

பேக்டரியில் மாலை ஆறு மணிக்கு வேலை முடிந்த பிறகு, பகுதி நேரமாக இரவு வரை கேட்டரிங் கம்பெனியில் தினக்கூலியாக வேலை செய்தாள். நான்கு வருடம் ஆனது பைசா சுத்தமாக கடனை கட்டி முடிக்க அம்மாவுக்கு.

பத்து வருட அனுபவத்திற்கு பிறகு சூபர்வைசர் பதவி வந்ததும் கொஞ்சம் வாழ்க்கை முன்னேறியது அவர்களுக்கு.

இப்போது பாலனுக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் பிறந்து விட்டது. அவன் தாலுக்கா ஆபீஸிலும், பூரணி ஆஸ்பிடல் லேபிலும் வேலை பார்க்க, குடும்பம் ஒரு வழியாக தலையெடுத்திருக்கிறது.

“நான் போய் அம்மாகிட்ட பேசிட்டு வரேன்” என பூரணியிடம் சொல்லிவிட்டு கிளம்பினான் பாலன்.

அம்மா டேபிள் மீது நோட்டை வைத்துக் கொண்டு ஸ்ரீ ராமஜெயம் எழுதிக்கொண்டிருந்தாள். பக்கத்தில் பழைய டைரிகள் சில இருந்தன.

“மா” என மெலிதாய் அழைத்தான் பாலன்.

“சொல்லுடா” என எழுதிவதை நிறுத்தி விட்டு கேட்டாள் பானுமதி.

“உனக்கு அவரை பாக்க வேணாம்னா இப்போ கூட சொல்லுமா, அவரை வர வேணாம்னு சொல்லிடலாம்” என தரையை பார்த்தபடியே சொன்னான்.

“ம்ம்..அவர்கிட்ட பேசுறதுல எனக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லை” என தீர்க்கமாய் சொன்னார் பானுமதி.

“உண்மையாத்தான் சொல்றியா? இல்ல, அவர வர வேணாம்னு சொன்னா, அவர் வருத்தப்படுவார்னு நெனைக்குறியா?” என கேட்டான்.

“ப்ச், இத பத்தி எனக்கு ரொம்ப யோசிக்க தோணல பாலா. வரட்டான்னு கேட்டாரு, வாங்கன்னு சொல்லிட்டோம். வரட்டும், பேசட்டும், கிளம்பட்டும்” என விட்டேத்தியாய் பதில் சொன்னாள்.

“இது உனக்கு எவ்வளுவு வலியா இருக்கும்னு அவருக்கு புரியாதும்மா. ஆனா எனக்கும் பூரணிக்கும் தெரியும். இதை நீ கோ த்ரூ பண்ணணுமாங்கிறது தான் என் கவலையே?” என விடாமல் கேட்டான் பாலன்.

“எவ்வளோ வலிகளை அனுபவிச்சுட்டேன், அவமானங்களை பாத்துட்டேன். அதுலேர்ந்தெல்லாம் மீண்டும் வந்துட்டேன். அதை அவர் பாக்கணுமில்லையா? அதனால அவர் வரட்டும்” என சொன்னார் பானுமதி.

பாலனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. அம்மாவின் ஒப்புதலில் இருந்த இந்த நல்ல விஷயத்தை தான் எப்படி பார்க்க தவறினோம் என யோசித்தான்.

“நீ இன்னும் என்னை காயம்பட்டவளாவே பாக்குற. எங்க நான் திரும்பவும் காய பட்டுடுவேனோன்னு பயப்படுற. பாலா, என் மனசுக்குள்ள இப்போ எதுவும் இல்லை. ஆனா அவர் மனசுல எவ்வளுவு இருக்கும்னு எனக்கு தெரியும். நம்மள பாக்க வரட்டான்னு அவர் கேக்கவே, அவருக்கு பல நாள் தேவைபட்டிருக்கும்” என மெதுவாய் சொன்னார் பானுமதி.

பாலனுக்கு அம்மா சொல்வது உண்மைதான் என தோன்றியது.

“நீ ஆயிரம் காரணம் சொன்னாலும், நாளைக்கு உன் மனநிலை எப்படி இருக்கும்னு உனக்கே தெரியாதும்மா. அதனால நீ இந்த ரிஸ்க்கை எடுக்க போறியான்னு யோசிச்சு சொல்லு” என நிதானமாய் கேட்டான் பாலன்.

ஒருவேளை அம்மாவுக்கும் அவரை ஒரு முறை பார்க்கலாம் என்று அடி மனசில் ஆசை இருக்கலாம். தான் ரொம்ப கேட்டு அவளை சங்கடப்படுத்துகிறோமோ என யோசித்தான்.

“பாலா, நாளைக்கு என்னங்குறது தெரிஞ்சுட்டா வாழ்க்கைல என்ன சுவாரஸ்யம் இருக்கு சொல்லு? கல்லு விழும்போது மட்டும் தான் குளம் தளும்புதாடா?” என அவன் கையை பற்றிக் கொண்டு கேட்டார் பானுமதி.

அந்த பதிலின் கணம் அவன் கட்டுப்பாட்டை உடைக்க, அப்படியே அம்மாவின் தோளில் சாய்ந்து அழுதான்.

இந்த சந்திப்பு அம்மாவை விட தனக்கு தான் அதிக மனஉளைச்சலை தருகிறது என அப்போது தான் அவனே தெரிந்து கொண்டான்.

பானுமதி அமைதியாக இருந்தார். சற்று நேரம் கழித்து, “சாயந்திரம் நாலு மணிக்கு மேல வரேன்னு சொல்லி இருக்காரு. லைட்டா டிபன் மட்டும் செய்து வெக்கலாம்னு இருக்கேன். சுகர் வந்திருக்குமோ என்னவோ? யாருக்கு தெரியும்” என சொல்லிவிட்டு மீண்டும் எழுத ஆரம்பித்தார்.

என்ன டிபன் செய்வது என்பது வரை யோசித்து வைத்திருப்பவளிடம், தான் முட்டாள்தனமாக எவ்வளவு கேள்விகளை கேட்டிருக்கிறோம் என அவனுக்கு உறைத்தது. என்ன இருந்தாலும் இது அவர்களின் வாழ்க்கை, அவர்களின் உணர்வுகள்.

“சாரிம்மா” என சொன்னான் பாலன்.

“விடுடா..நீ ஏன் பதட்டமா இருக்கேன்னு எனக்கு தெரியும்டா” சொன்னார் பானுமதி.

பாலன் எழுந்து கதவருகே செல்ல, “பூரணியால நேரடியா என்கிட்ட இதை பேச முடியாது. அவளும் உன்னை மாதிரி தான் குழப்பத்துல இருப்பா. என்ன பத்தி கவலைப்பட வேணாம்னு அவகிட்ட சொல்லு” என ஞாபகமாய் சொல்லி அனுப்பினார்.

Part 2

அடுத்த நாள் காலை. குழந்தையை பள்ளிக்கு அனுப்பி விட்டு, பூரணியும் பாலனும் வேலைக்கு கிளம்ப, வீடு அமைதியாக இருந்தது. ஆனால் பானுமதியின் மனம் மட்டும் தத்தளித்துக் கொண்டிருந்தது. எதற்காக இப்போது வருகிறார்? எப்படி இருப்பார்? என்ன பேசுவார்? எவ்வளவு நேரம் இருப்பார்? தான் என்ன பேசுவது? எப்படி அழைப்பது? என்ன உடுத்துவது? என ஆயிரம் கேள்விகள் அவரை துளைத்து எடுத்தது.

அரைமணி நேரம் அப்படியே சோபாவில் உட்கார்ந்திருந்தார். அவர் இப்போது ஒரு விருந்தாளியாக மட்டுமே வருகிறார் என நூறு முறை தனக்கே சொல்லிக் கொண்டார். எக்காரணம் கொண்டும் அவர் முன்னால் கண் கலங்கக் கூடாது என முடிவெடுத்தார்.

கேசரி செய்து, பாயசம் வைக்கலாமா என மனதில் இருந்து ஒரு கேள்வி வந்தது. வேண்டாம், அவர் என்ன ராணுவத்தில் சேவை செய்துகொண்டு, எல்லையிலா வாழ்கிறார்? வேண்டியதில்லை என புத்தி சொல்லியது.

சற்று நேரத்தில் பானுமதிக்கு தன் நிலை தெளிவாய் புரிந்தது. பாலன் தவித்ததில் தவறில்லை என நினைத்தார்.

மனம் சஞ்சலமாய் இருக்க ஸ்ரீ ராமஜெயம் எழுத ஆரம்பித்தார். நாலு தடவை எழுதியதும், தான் என்ன நோக்கத்திற்காக எழுதுகிறோம் என புரிய, அப்படியே உட்கார்ந்து அழ ஆரம்பித்தார்.

இந்த அழுகை தவிர்க்க வேண்டியதில்லை..தொடரட்டும் என ஒன்று விடாமல் நிதானமாக கிளறி அசைபோட்டு பார்த்தார். இவ்வளுவு நாள் நினைக்கக் கூடாது என கட்டுப் படுத்திக் கொண்டிருந்த, அத்தனை
கோணங்களையும் நுணுக்கமாக எண்ணிப் பார்த்தார்.

தான் நினைத்திருந்தால் இந்த சந்திப்பை வேண்டாம் என சொல்லி இருக்கலாம்? ஏன் அவரை சந்திக்க ஒத்துக் கொண்டோம்? இன்னும் என் மனசில் மிச்சம் என்ன இருக்கிறது? என கூச்சமின்றி தன்னை தானே கேட்டு கொண்டார்.

பாசம்? காதல்? தகப்பன் ஸ்தானம்? பானுமதிக்கு இதில் எதுவும் இல்லை என்பது தெளிவாக புரிந்ததில் சற்றே நிம்மதியாக உணர்ந்தார்.

நீண்ட நேரம் அழுததில் கண்கள் வீங்கியிருக்கும் என குளிர்ந்த நீரில் முகம் கழுவி விட்டு வந்தார். ஐஸ் பேக்கை எடுத்து கண்களுக்கு வைத்துக் கொண்டு, சோபாவில் கால் நீட்டி உட்கார்ந்து கொண்டார்.

மனம் மீண்டு கேள்வி கேட்க ஆரம்பித்தது. அவர் கேட்டால் திரும்பவும் ஒன்று சேர விருப்பமா? என உடைத்துக் கேட்டது. அவரே அவருக்கு தவிர்த்துக் கொண்ட முக்கியமான கேள்வி இது.

இல்லை என உள்ளேயிருந்து பதில் வந்தது.

இது தான் கடைசி வாய்ப்பு. உறுதியான நிலைப்பாடா இது என மனம் மீண்டும் கேட்டது.

பானுமதி அது கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு எழுந்து போய் சமைக்க ஆரம்பித்தார்.

காலத்துக்கும் தேவையில்லை என ஆன உறவிற்கு, விருந்தோம்பல் எதற்கு என மீண்டும் ஒரு கேள்வி வந்தது.

பானுமதி கிச்சன் வேலையை அப்படியே விட்டு விட்டு மீண்டும் போய் சோபாவில் உட்கார்ந்து கொண்டார்.

தனக்கே தான் உண்மையை சொல்லாத வரை, இந்த போராட்டம் இருக்கும் என அவருக்கு தோன்றியது.

ஈகோ. தான் மீண்டு விட்டோம் என்ற கர்வம். நான் கௌரவமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என பறை சாற்றிக் கொள்ளும் ஆர்வம். அவர் துரோகத்தை உரமாக்கிக் கொண்டோம் என உணர்த்துவது. அவரின் கோழைத்தனத்தால் அவர் இழந்ததை காட்டுவது என சரமாரியாக பதில்கள் வந்து கொட்டியது.

சரி, தன் மனதில், உணர்வில் எதுவும் மிச்சமில்லை. வீட்டில் என்ன இருக்கிறது என யோசித்தார். பீரோவின் மேல் இருந்த பெட்டியை எடுத்து பார்த்தார். திருமண போட்டோ, அவர் பெயர் பலகை என சில சமாச்சாரங்கள் இருந்தது.

குக்கர் விசில் வந்தது. போட்டோவை அப்படியே வைத்து விட்டு போய், விட்ட இடத்தில இருந்து சமையலை தொடர்ந்தார்.

போன் அடித்தது. “ஆட்டோ ஏறிட்டேன். இன்னும் பத்து நிமிஷத்தில் வந்துடுவேன்” என மகாதேவன் சொன்னார்.

பானுமதிக்கு குழப்பமாக இருந்தது. சாயந்திரம் நாலு மணிக்கு வருவதாக சொன்னவர், மத்தியானமே வருகிறாரே என பரபரப்பானாள்.

அப்போது தான், தான் இன்னும் ரெடியாகவில்லை என உரைத்தது.

சமையலை அப்படியே நிறுத்தி விட்டு ரூமிற்குள் ஓடினார். சட்டென்று புடவை மாற்றி, தலை வாரி ரெடியானார். ஐஸ் பேக் வைத்தது நல்லது என சொல்லிக் கொண்டார்.

டோர் பெல் அடித்தது. பானுமதிக்கு கால்கள் பின்னியது.

தன் தயாரிப்புகள் எதுவும் சொதப்பக் கூடாது என வேண்டிக் கொண்டார்.

Part 3

வெள்ளை வேட்டியும், வெளிர் சந்தன நிற அரைக் கை சட்டையும் உடுத்தி, சற்றே மேடிட்ட தொப்பையோடு இருந்தார் மகாதேவன். கருப்பு பிரேம் போட்ட கண்ணாடியும், சற்றே முன்னேறிய மண்டையும் வயதை சொன்னது. எடை கூடாமல் அதே உடல் பருமனோடும், சற்றே தளர்ந்த தோள்களோடும், ஒரு கையில் கட்டை பையோடு நின்றார்.

பானுமதிக்கு வாய் உலர்ந்து போனது.

அனிச்சையாக கட்டை பையை வாங்க நீண்ட கையை கட்டுப்படுத்திக் கொண்டாள். அந்த கணத்தில், என்ன நிகழ்ந்தாலும் தான் அசைந்து கொடுக்க மாட்டோம் என உணர்ந்தும் கொண்டார்.

அவள் மனதில் தைரியம் பொங்கி வர, “வாங்க” என அவர் கண்களை பார்த்துக் கூப்பிட்டாள் .

மகாதேவன் பானுமதியை வைத்த கண்ணை வாங்காமல் பார்த்துக் கொண்டேயிருந்தார். வாழ்க்கை எவ்வளவு புரட்டி போட்ட போதும் தெளிவாகவும், இயல்பாகவும் இவள் எப்படி இருக்கிறாள் என அவருக்கு புரியவில்லை. தாறுமாறாக எடை கூடாமல், பதவிசாகவும் பளிச்சென்றும் இருப்பதாகவும் எண்ணினார்.

“உக்காருங்க” என சொல்லிவிட்டு கிச்சனுக்குள் நுழைந்தாள். இதயம் படபடவென அடித்துக் கொள்ள, தண்ணீர் கொண்டு போய் கொடுத்தாள். அதை வாங்கி பருகிவிட்டு தரையையே பார்த்துக் கொண்டு, சொம்பை திரும்ப கொடுத்தார்.

அதை கொண்டு போய் மீண்டும் கிச்சனில் வைத்தாள். தான் மீண்டும் மீண்டும் இங்கே வருவது ஏன் என அவளையே கேட்டு கொண்டாள். இயல்பு நிலை அவ்வளவு சீக்கிரம் வராது என தோன்றியது.

“டீ குடிக்குறீங்களா? இல்ல கொஞ்ச நேரத்துல சாப்பாடு சாப்பிடுறீங்களா? லன்ச் டைம் ஆயிடுச்சே?” என கிச்சனில் இருந்து எட்டிப் பார்த்து கேட்டாள்.

“கொஞ்ச நேரம் ஆகட்டும், நீ வந்து உக்காரு” என தயக்கமாக கூப்பிட்டார் மகாதேவன்.

அவள் எதிரேயிருந்த சோபாவில் வந்து உட்கார, என்ன பேசுவது என இருவரும் யோசித்தார்கள்.

நல்லா இருக்கியா என முதலில் யார் கேட்பது என ஒரு மௌன போராட்டம் அங்கே நடந்து கொண்டிருந்தது.

இருவருக்கும் அது அர்த்தமற்ற கேள்வி என தோன்றியதால் அது கேட்கப் படவில்லை.

பானுமதிக்கு அங்கே நிலவிய அமைதி பொறுமையை சோதித்தது. “பையன் சொந்தமா?” என கேட்டாள்.

இந்த கேள்வியை மகாதேவன் இவ்வளவு சீக்கிரம் எதிர்பார்க்கவில்லை.

இன்னும் குசலம் விசாரிக்கவில்லை, நலம் விசாரிக்கவில்லை. இவள் எல்லாவற்றையும் அநாவசியமாக கடந்து போய் இந்த கேள்வியில் நின்றது அவருக்கு இலகுவாக இருந்தது.

“ஆமா, சுஷ்மாவோட சித்தப்பா பையன். கனடால ரெண்டு தலை முறைக்கு முன்னாடியே செட்டில் ஆயிட்டாங்க” என பெருமையாக சொன்னார்.

அடுத்த அரை மணி நேரம் கனடா சம்பந்தக் கதையும், பாலனின் கல்யாண கதையும் சுவாரஸ்யமாக ஓடியது.

மகாதேவனின் இறுக்கம் காணாமல் போயிருந்தது. ஒரு காலை மடக்கியும், மறு காலை தொங்கப் போட்டும், சோபாவில் சாய்ந்து ரிலாக்ஸ்டாக உட்கார்ந்து பேசி கொண்டிருந்தார்.

பானுமதிக்கு சமையல் இன்னும் முடியவில்லை என ஞாபகம் வந்தது. ரெண்டு மூணு ஆல்பங்களை கொண்டு வந்து அவரிடம் கொடுத்துவிட்டு கிச்சனுக்குள் போனாள்.

ஸ்ஸ்..அப்பாடா என இருந்தது அவளுக்கு. எதுவும் உறுத்தலாக இல்லாமல் இப்படியே பொதுவாக பேசி அனுப்பி விட வேண்டும் என முடிவெடுத்தாள்.

கொஞ்ச நேரம் எந்த சத்தமும் இல்லாததால் ஹாலுக்கு வந்தாள். அவர் சுவரில் இருந்த போட்டோக்களை அருகில் போய் நின்று கொண்டு பார்த்துக் கொண்டிருந்தார்.

“நீயும் வா, சேர்ந்து ஆல்பம் பாக்கலாம்” என சொன்னார்.

அவளுக்கு நாம என்ன கைடு வேலையா பாக்குறோம் என தோன்றியது.

“நீங்க பாருங்க, நான் கொஞ்சம் வேலையை முடிச்சிட்டு வரேன்’ என மீண்டும் உள்ளே போனாள்.

பத்து நிமிடத்தில் எல்லா வேலையையும் முடித்து விட்டு எதிர் சோபாவில் போய் உட்கார்ந்தாள்.

“பாத்ரூம் எங்க இருக்கு?” என கேட்டார்.

“ஹால்ல அந்த பக்கம் இருக்கு. அது இந்தியன். உள்ளே ரூம்ல வெஸ்டர்ன் இருக்கு” என சொன்னாள்.

மகாதேவன் உள் ரூமிற்குள் போனார். மணி ரெண்டாக போகிறது. ஐந்து மணி ஆகும் எல்லோரும் வீடு வந்து சேர. அது வரை எப்படி நேரத்தை ஓட்டுவது என யோசித்தாள்.

பாத்ரூம் போய்விட்டு வெளியே வந்த மகாதேவனின் கண்ணில் அந்த பெட்டி பட்டது. எட்டி பார்த்தார். அவர்களின் திருமண போட்டோ, அவரின் பெயர் பலகை மற்றும் சில சாமான்கள். அவருக்கு சொல்ல முடியாத ஒரு ஆனந்தம் பொங்கி வந்தது. தன் வருகை அவளுக்கு ஒரு ஆர்வத்தை தூண்டியதாக புரிந்து கொண்டார்.

ஆல்பத்தை எடுத்துக் கொண்டு, எதிர் சோபாவில் போய் அவள் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார்.

பானுமதி இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. சற்றே பக்க வாட்டில் திரும்பி அமர்ந்து கொண்டு அமைதியாக இருந்தாள். எங்கெங்கு அவளின் படங்கள் இருந்ததோ, அங்கெல்லாம் நிறுத்தி நிதானமாக பார்த்துக் கொண்டிருந்தார் அவர். பூரணியின் பெற்றோர் யார் என கேட்டு தெரிந்து கொண்டார்.

“சாப்பிடுறீங்களா?டைம் ஆகுது” என எழுந்து கொண்டாள் அவள்.

“சரி” என அவரும் பின் தொடர்ந்தார்.

அவருக்கு பரிமாறிவிட்டு, அவளும் சாப்பிட மகாதேவனின் மனம் ரெக்கை கட்டி பறந்தது.

மேக்சிமம் ஒரு காபி மட்டும் கிடைக்கும் என நினைத்திருந்தார்.

இருவரும் சாப்பிட்டு எழுந்து போய் கையை கழுவி விட்டு வர, மகாதேவன் பானுமதியின் புடவை தலைப்பால் கையை துடைத்துக் கொண்டார்.

அவள் திகைத்துப் போய் பார்க்க, மெலிதாக சிரித்துவிட்டு ஹாலுக்கு போனார்.

அவளுக்கு அது சொல்ல முடியாத அசூயையாக இருந்தது.

எச்சில் தட்டு இன்னும் டேபிள் மேல் இருந்தது. முதல் வேலையாக அதை கொண்டு போய் கழுவி வைத்தாள்.

“டெய்லி ஸ்ரீ ராமஜெயம் எழுதுவியா?” என நோட்டை புரட்டியபடியே கேட்டார் மகாதேவன்.

பதிலேதும் சொல்லாமல் கடிகாரத்தை பார்த்தாள் பானுமதி.

“என்ன நல்ல நேரமான்னு பாக்கறியா?” என சூசகமாக கேட்டபடியே பக்கத்தில் வந்து உட்கார்ந்தார்.

இதற்கு மேல் பொறுமை தாங்காது என அவளுக்கு தோன்றியது.

பல வருடங்கள் கழித்து சந்திக்க வருபர் கூனி குறுகி அவமானத்தில் இருக்க வேண்டாம் என இதுவரை இயல்பாக பேசியது இந்த இடத்தில் வந்து நிற்கிறது.

“இப்போவும் தலைக்கு ஊத்திக்குறியா?” என வந்த அடுத்த கேள்வியில், பானுமதியின் தலையிலிருந்து பாதம் வரை அதிர்ந்து போயிற்று.

இப்போது இருக்கும் குறைந்த பட்ச உறவை கூட தலை முழுக வேண்டும் என அவள் முடிவெடுத்தாள்.

“இல்ல..சும்மாதான் கேட்டேன்..உடம்பை பாத்துக்க” என இழுத்தார்.

“மூணு டு நாலரை இன்னிக்கு எம கண்டம். அதுக்குள்ள பத்திரிகை குடுத்துடுங்க” என நகர்ந்து போய் ஆல்பங்களை அடுக்கியபடியே சொன்னாள் பானுமதி.

“அதுவும் சரிதான்” என எழுந்து போய் கட்டை பையிலிருந்து ஒரு பத்திரிகையை எடுத்து வந்தார்.

பாக்கெட்டில் இருந்து பேனாவை எடுத்து “திருமதி பானுமதி” என பெயரை எழுதியவர் ஒரு நொடி அப்படியே
உறைந்து நின்றார்.

அவர் கண்கள் பானுமதி என்ற பெயருக்கு பின்னால் நிலை கொண்டு நிற்க, பேனா முனை காத்துக் கொண்டு இருந்தது.

“பானுமதி ராமசந்திரன்” என சொன்னாள் அவள்.

மகாதேவனின் முகம் வெளிறி போனது. “நீ..நீ..உனக்கு?” என அவருக்கு வாய் திக்கியது.

“சும்மா சொன்னேன், வெறும் திருமதி பானுமதி தான்” என கூர்மையாக சொன்னாள்.

அவர் திகைத்துப் போய், என்ன செய்கிறோம் என தெரியாமல், அந்த பத்திரிகையை டக்கென்று டேபிள் மீது வைத்தார்.

“பானுமதி ராமசந்திரன்” என சொற்றொடரில் இருந்து அவர் இன்னும் வெளியே வரவில்லை.

பானுமதி மகாதேவன் என எழுத அவருக்கு உரிமையில்லை என அவர் உணர்ந்த நொடி அது. வெறும் பானுமதி என எழுதி இயல்பாக கொடுத்திருக்கலாம்.

ஆனால் இன்றைய பானுமதியின் பெயருக்கு பிறகு, வேறொரு நபரின் பெயர் இருக்குமா என அவர் சந்தேகித்ததின் விளைவு தான் அந்த ஒரு நொடி நிதானிப்பு.

ஆழ் மனதில் அவருக்கிருந்த நீண்ட நாள் குற்ற உணர்வும், இன்று அவரை ஈர்த்த பானுமதியின் வயதுக்கேற்ற வசீகரமும், அவரை அறியாமல் அவருக்குள் இருந்த அழுக்குப் பக்கங்களை காட்டிக் கொடுத்தது.

“நான் எப்போதும் பானுமதி மகாதேவனாவே இருப்பேன்னு நீங்க நெனைச்சதால தானே பத்திரிகை குடுக்க வந்தீங்க. இந்நேரம் நானும் எனக்குன்னு ஒரு வாழ்க்கையை அமைச்சிக்கிட்டு இருந்திருந்தா, இந்த பத்திரிகையை வாங்குற தகுதி இல்லாதவளா இருந்திருப்பேன்ல?” என அமைதியாக கேட்டாள் அவள்.

மகாதேவன் குனிந்த தலையை நிமிரவே இல்லை.

“நீங்க விட்டுட்டு போன மாதிரியே நான் அப்படியே இருக்கணும்னு எதிர்பாக்குறதும், நீங்க வந்த ஒடனே, நீங்க விட்டுட்டு போறதுக்கு முன்னாடி இருந்த மாதிரியே நான் இருக்கணும்னு எதிர்பாக்குறதும் உங்களுக்கு உறுத்தலியா?” என கேட்டாள்.

கட்டை பையை எடுத்து அவள் நீட்ட, அவர் அதை தயக்கமாக வாங்கி கொண்டார்.

“இதை மறந்துட்டேன்” என டேபிளை நோக்கி போய், அந்த பத்திரிகையும் கொண்டு வந்து பையில் வைத்தாள்.

மகாதேவன் கிளம்பியதும், கதவை அறைந்து சாத்தி விட்டு சோபாவில் வந்து உட்கார்ந்தாள்.

டேபிளின் மீதி இருந்த ஸ்ரீ ராமஜெயம் நோட்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தது.

சிறுகதை – வாக்கிங் வகையறா

A group of friend going for morning walk

“ஆன்ட்டி, freeயா இருக்கீங்களா?” என போனில் கேட்டாள் சிந்தாமணி.

“ம்ம், இன்னும் அரை மணி நேரம் கழிச்சு தான் இட்லிக்கு மாவு அரைக்க போறேன், இப்போ சும்மா தான் இருக்கேன்” என்றார் சங்கு புஷ்பம்.

சிந்து ஆறாவது மாடியில் இருக்கிறாள். அவள் கணவர் கார் பேக்டரியில் வேலை பார்க்கிறார்.

“யார் போன்ல?” என கேட்டார் நேசப்பா.

“சிந்துங்க” என்றார் சங்கு புஷ்பம்.

“என்ன இன்னைக்கு திடீர்னு காலைல உன்கூட மீட்டிங்? எப்பவும் சாயங்காலம் கீழ போகும் போது தானே பேசுவீங்க?” என்றார் நேசப்பா.

“இன்னைக்கு வியாழக்கிழமை. அவங்க எதிர் வீட்டுல இருக்குற காமாட்சி சாய் பாபா கோவிலுக்கு காலைலயே போயிட்டு, பக்கத்துல அவங்க அண்ணி வீட்டுக்கும் போயிட்டு சாயங்காலம் தான் வருவாங்க” என சொல்லி கண் சிமிட்டினார் சங்கு புஷ்பம்.

“சரி, நா போய் மொளகா தூள் அரைச்சிட்டு வந்துடுறேன், நீ பையை ரெடி பண்ணி வை” என சொல்லிவிட்டு குளிக்க போனார் நேசப்பா.

கால் மணி நேரம் கழித்து டோர் பெல் அடித்து விட்டு, தானே கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தாள் சிந்து.

“BP மெஷின் குடுங்க ஆன்ட்டி” என சொன்னபடியே துப்பட்டாவை மடித்து டேபிளின் மீது வைத்து விட்டு சோபாவில் போய் உட்கார்ந்தாள்.

“இவ்ளோ அழகா மடிச்சு வெக்குறதுக்கு, நீ அத வீட்லயே வெச்சிட்டு வந்திருக்கலாம்!” என சொல்லி சிரித்தார் சங்கு புஷ்பம்.

சிந்து காண்டாக, “அதை விட ஸ்பெஷல் ஐட்டம் வெளில இருக்கு பாரு, புள்ள புது ஷூ போட்டுட்டு நம்ம வீட்டுக்கு வந்திருக்கு” என குறும்பாக சொல்லி விட்டு, செருப்பை மாட்டிக்கொண்டு மிஷினுக்கு கிளம்பினார் நேசப்பா.

சிந்துவுக்கு ஆரம்பமே கண்ணை கட்டியது. இதுவே காமாட்சியாக இருந்தால் இந்நேரம் எதுக்கு BP ஏறி இருக்குன்னு மொத்த கதையையும் கேட்டு முடிச்சிருப்பாங்க என நினைத்தாள்.

“இந்தா மிஷின், எவ்ளோ இருக்குன்னு பாத்து வை. நான் போய் கிரைண்டர்ல உளுந்து போட்டுட்டு வரேன்” என சொல்லிவிட்டு கிச்சனுக்குள் போனார்.

இந்த வீட்ல தன்னை ஒரு பேஷண்ட் மாதிரியே ட்ரீட் பண்ண மாட்டேங்குறாங்க என நொந்து கொண்டாள் சிந்து.

“எவ்ளோ இருக்கு” என உள்ளேயிருந்து குரல் வர, “122-83” என்று சொல்லி விட்டு, ரெண்டு கை பருப்பை போட்டுட்டு வர இவ்ளோ நேரமா என அலுத்துக் கொண்டாள் சிந்து.

“நார்மல் தான். நேத்து நைட் சரியா தூங்கலியா?” என மீண்டும் குரல் வந்தது.

Case பைலின் பேஸ் பாயிண்டையே இந்தம்மா புஸ்ஸுன்னு ஆக்கிருச்சு என்பது போல இருந்தது அவளுக்கு. போனை சற்று நேரம் பார்த்தவள், எழுந்து போய் டேபிள் மீதிருந்த வாழை பழத்தை எடுத்துக் கொண்டாள்.

“BP நார்மலாகுறதுக்கு Potassium-rich food சாப்பிடணும்ன்னு google சொல்லுது. நான் ஒரு வாழை பழம் எடுத்துக்குறேன்” என சொல்லிவிட்டு சாப்பிட ஆரம்பித்தாள் சிந்து.

உள்ளேயிருந்து “சொய்” என ஒரு சத்தமும், மிக்ஸி ஓடும் சத்தமும் வந்தது. பின்னாலேயே ரச வாசனையும் வந்தது.

வீட்ல ரசாபாசமான சண்டை ஆகி நா ஒருத்தி இங்க வந்து உக்காந்திருக்கேன், இந்தம்மா சவகாசமா ரசம் வெச்சிக்கிட்டு இருக்கு என் நொந்து போனாள் சிந்து.

காமாட்சியா இருந்தா இந்நேரம், வாஸ்து, ரெய்கி, மனவளத்துல நாலு டிப்ஸ்ன்னு இந்நேரம் சிந்துவுக்கு ஒரு closure கொடுத்திருப்பார்கள்.

சற்று நேரத்தில் கையை துடைத்தபடியே வந்த சங்கு புஷ்பம் ” Your Fault Londonன்னு ஒரு British romantic படம் Amazon Primeல உட்டுருக்கான்னு நேஸ் சொன்னாரு. அதான் எல்லா வேலையையும் முடிச்சிட்டு, மத்தியானம் லன்ச்சுக்கு அப்புறம் பாக்கலாம்னு plan” என கெத்தாக சொன்னபடியே வந்து உட்கார, சிந்துவுக்கு அவமானமாக இருந்தது.

பெருசுங்க ரொம்ப ரவுசு பண்ணுதுங்க என நினைத்தாள். பேசாம வேற ஏதாவது கதையை பேசிட்டு கிளம்பலாம் என முடிவுக்கு வந்தாள்.

“நீ என்ன லஞ்சுக்கு பண்ணி இருக்க?” என புஷ்பம் கேட்க, “ஒன்னும் பண்ணல, அவருக்கும் எனக்கும் காலைல கொஞ்சம் சண்டை. பசங்களுக்கு மட்டும் பாக்ஸ் ரெடி பண்ணி அனுப்பிட்டேன். அவரு கேன்டீன்ல சாப்பிட்டுக்குவாரு” என சோகமாக சொன்னாள் சிந்து.

“கொஞ்சுறதுக்கு எதுக்கு சண்டை” என மொக்கை ஜோக் சொல்லி சிரித்து, “பன்னெண்டு மணிக்கு ஆரம்பிச்சா கூட சிம்பிளா முடிச்சிடலாம்” என்றார் சங்கு புஷ்பம்.

காமாட்சியாக இருந்தால் லஞ்ச்சும் குடுத்து, சாயங்காலம் வர்ற பசங்களுக்கும் ஸ்நாக்ஸும் செய்து குடுத்து, எல்லா டீட்டைலையும் உருவியிருப்பார். பழைய சண்டையில் நடந்த, சிந்து கூட மறந்தே போன விஷயங்களை reference ஆக சொல்லி அவர் கட்சிகாரரை மெருகேற்றி அனுப்பி இருப்பார்.

சிந்துவுக்கு பொறுமையே போனது. ஒரு பாதிக்கப்பட்ட பெண்ணின் மனநிலையை மதிக்காமல் தன்னை லெப்ட் ஹாண்டில் டீல் பண்ணுவதாக மனதிற்குள் புலம்பினாள். தனக்கு எப்பேர்ப்பட்ட அநீதி இழைக்கபட்டிருக்கிறது என சொல்லி புஷ்பம் வாயாலேயே அவரை உச்சு கொட்ட வைக்க வேண்டும் என முடிவெடுத்தாள்.

“எதுக்குதான் இந்த பொண் ஜென்மம் எடுத்தேன்னு இருக்கு? என லீடு குடுத்தாள் சிந்து.

போச்சுடா..”ஆயிரம் பேரை கூட எதிர்த்து நில், ஆனால் ஒருபோதும் ஒருவரை கூட எதிர்பார்த்து நிற்காதே” என அம்மணி இன்னிக்கு ராத்திரி ஸ்டேட்டஸ் வைக்க போகுது என நினைத்தார் புஷ்பம். Rapid fire மாதிரி ஒரு ரவுண்டு கேட்கலாம் என முடிவெடுத்தார்.

“Shop Manager”க்கு என்ன கொறச்சல்? என்றார் புஷ்பம்.

“இந்த மாசம் அவரோட அக்கா பொண்ணுக்கு கல்யாணம். ஆரி பிளவுஸ் தைக்க காசு கேட்டா, எகிறிட்டு போறார்” என மூக்கை சிந்தினாள்.

“ரெண்டு நாளைக்கு முன்னாடி தானே Hubby Loveன்னு கேப்ஷன் போட்டு, புது ஷூ போட்டோவ ஸ்டேட்டஸ் போட்டிருந்த? அதுக்குள்ள என்ன?” என பாய்ண்ட்டை போட்டார் புஷ்பம்.

சிந்து ஒரு நிமிடம் திகைத்துப் போனாள். இந்த அம்மா என்ன சம்மந்தா சம்மந்தம் இல்லாம பேசுது? அது வாக்கிங் ஷூ. இப்போ சண்டை கல்யாண பார்ட்டிக்கு ட்ரஸ் வாங்குறதுக்கு. இவங்களுக்கு பஞ்சாயத்து புரியறதுக்குள்ளயே தாவு தீந்துடும் என ஆனது அவளுக்கு.

“ஆமா, PCOD பிரச்சினை இருக்கு. டாக்டர் டெய்லி 40 நிமிஷம் நடக்க சொன்னாங்க, அதனால வாங்கி குடுத்தாரு” என மெல்ல சொன்னாள்.

“தங்கமாத்தான் இருக்காரு மனுஷன், நீ ஏற்கனெவே ஆரி பிளவுஸ் வெச்சிருக்க மாதிரி எனக்கு ஞாபகம்.” என குண்டை போட்டார் புஷ்பம்.

சிந்துவுக்கு இந்த அம்மா என்ன நம்ம வீட்டுல bug வெச்சிருக்கா என சந்தேகம் வந்தது.

“அதெல்லாம் டார்க்கு பச்சை, மெரூன் அப்புறம் ஒரு கோல்ட் கலர். மூணு ஜாக்கெட் தெச்சா காம்போ ஆபர்னு பன்னிரெண்டாயிரம் குடுத்து நம்ம வசந்தி அக்கா கிட்ட வாங்குனேன். ஆனா இப்போ அவர் கஸின்ஸ் எல்லாம் சேந்து இந்த கல்யாணத்துக்கு pestal கலர் theme முடிவு பண்ணி இருக்காங்க. அதனால சங்கீத், நலங்கு அப்புறம் முஹுர்த்தம்ன்னு மூணு pestal கலர் பிளவுஸ் வாங்கணும்” என்றாள்.

“ஹிஹிஹி, அதுக்கு உங்க ஊட்டுகார் , இந்த காசுக்கு பத்து ITC, பத்து Tata Motors ஷேர் வாங்கி போட்டாலாவது ப்ரயோஜனம்ன்னு சொன்னாரா?” என சிரிப்பை அடக்கியபடியே கேட்டார் புஷ்பம்.

இதை கேட்டதும் பேயை கல்யாணம் கட்டி, பிசாசுக்கு வாக்கப்பட்டது போலிருந்தது சிந்துவுக்கு. இவங்கல்லாம் ஆனந்த் சார் கோஷ்டி என நினைத்துக் கொண்டாள்.

“இப்போ என்ன? இது ஒரு life time event. இப்படி சிக்கனம் புடிச்சி வாழ்ந்து, திடீர்னு டக்குனு செத்துட்டா, என்ன ஆவுறது?” என வீராப்பாய் கேட்டாள்.

“எல்லாம் நல்லபடியா இருப்போம். வீணா ஏன் கவலை படுற? சாரு உன் health மேல இருக்குற அக்கறையினால் தான ஷூவெல்லாம் வாங்கி தரார். பிஸாத்து ஆரி பிளவுசுக்கு போய், பொட்டுனு போய்ட்டா அப்டீன்னு பேசுற?” என எடுத்துரைத்தார் புஷ்பம்.

கூடவே “என் கதை மட்டும் ஏனோ என்னை பற்றி சிந்திக்காத மனிதர்களால் நிறைந்துள்ளது” என அவளின் ரெண்டாவது ஸ்டேட்டஸுக்கு ஐடியா குடுத்தது போலிருந்தது.

“உஸ்ஸ், வசந்தி அக்காக்கு நான் Prime customer. மூணு பிளவுசு இப்போ பத்தாயிரத்துக்கு தச்சு தர்றதா எனக்கு ஆபர் கொடுத்திருக்காங்க. இவர் என்னடான்னா இப்போதான் ரொம்ப பிகு பண்ணுறார். நான் அவங்ககிட்ட டிசைனெல்லாம் செலக்ட் பண்ணி சொல்லிட்டேன்” என சொன்னாள்.

ஹ்ம்ம், பிரச்சினை முற்றிய நிலையில் இருக்கிறது. இப்போது சொல்வதற்கு ஒன்றும் இல்லை என தோன்றியது புஷ்பத்திற்கு. சரி எதிரி கதையை விட்டு விட்டு தோழியை பற்றி பேசலாம் என முடிவெடுத்தார்.

“வசந்தின்னா, அந்த Gym master பொண்டாட்டியா?” என கேட்டார்.

“ஆமா ஆன்ட்டி, காலைல என்கூட வாக்கிங் வருவாங்க. அவங்க ரொம்ப பிஸியான ஆளு. லாஸ்ட் டைம் அவங்க இன்ஸ்டால, என் போட்டோஸ் போட்டாங்க, செம லைக்ஸ் வந்தது. இப்பவும் pestal கலர் பிளவுஸ் collection launchக்கு என்ன மாடலிங் பண்ண கேட்டு இருக்காங்க” என உற்சாகத்தில் சொல்லி கொண்டே போனாள்.

பூனை குட்டி வெளில வந்துடுத்து moment அது.

“சரி, கலந்து பேசி சுமுகமா முடிவு பண்ணு” என பொதுவாய் சொல்லி “இந்த வாரத்துக்கு மாவு அரைச்சு வைச்சிட்டியா?” என்றார் புஷ்பம்.

“நான் Divine Foodsல subscription வாங்கி இருக்கேன் ஆன்ட்டி. ஒரு வாரத்துக்கு தேவையான மில்லட் மாவெல்லாம் அரைச்சி சில்வர் டப்பால தந்துடுவாங்க. நம்ம சொசைட்டில இருக்க தீபா தான் நடத்துறாங்க. Quality செமயா இருக்கு” என தொடர்ந்தாள்.

“அவங்களும் உன் கூட காலைல வாக்கிங் வராங்களா?” என கேட்டார் புஷ்பம்.

“ஆமா, இப்போ அவங்க எனக்கு close friend ஆகிட்டாங்க” என புல்லரித்து போய் சொன்னாள்.

“இரு மாவு வழிச்சி வெச்சுட்டு வரேன்” என சொல்லிவிட்டு உள்ளே போனார். சங்கு புஷ்பத்திற்கு நேசப்பாவின் மனைவி great என தோன்றியது. பத்து நிமிடம் ஆனது வேலை முடிய.

“நீ வேணா நைட் சாப்பிட்டப்புறம் வாக்கிங் போயேன். PCODக்கும் ஹெல்ப்பா இருக்கும். நீயும், சாரும் நைட் ரெகுலரா ரெண்டு மூணு ரவுண்டு போயிட்டு வந்தீங்கன்னா, எல்லா பிரச்சினையும் freeஆ மனசு விட்டு நிதானமா பேசலாம். காலைல அவர் அரக்க பரக்க கிளம்பும் போது எதை காது குடுத்து கேப்பார்?” என பொறுமையாய் சொன்னார் புஷ்பம்.

சிந்துவுக்கு நல்ல ஐடியா என தோன்றினாலும், சக கோஷ்டியை பிரிந்து வேறு நேரத்தில் வாக்கிங் செல்வதை மனது ஏற்றுக் கொள்ளவில்லை.

“கஷ்டம் ஆன்ட்டி. எல்லாரும் friends ஆகிட்டாங்க” என சிணுங்கினாள் சிந்து.

“நீ அவங்கள பார்க்குல இல்ல பார்க்கிங்லன்னு எங்கயாவது மீட் பண்ண தான் போற. சாரு கூட moon light வாக்கிங் போய் “உன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணும் இல்ல ஒண்ணும் இல்ல” சாங்குக்கு vibe பண்ணு” என சொல்லி ஒரு பிட்டை போட சிந்துவுக்கு உச்சி குளிர்ந்து போனது.

“சரிங்க ஆன்ட்டி, நான் கிளம்புறேன்” என சொன்னாள் சிந்து.

சற்று நேரத்தில் நேசப்பா வர, மதிய உணவு முடித்து சோபாவில் போய் உட்கார்ந்தார்கள்.

“அந்த புள்ளைக்கு என்ன பிரச்சினையாம்?” என கேட்டார்.

“சொல்றேன், மொதல்ல அந்த டப்பால ஒரு pestal color மாத்திரை அட்டை இருக்கும், அதை எடுத்து குடுங்க” என சொல்லி கையை நீட்டினார் புஷ்பம்.

“எப்போதுலேர்ந்துடி சுகர் மாத்திரைக்கு பேரு ஸ்டைலாச்சு?” என முழித்தார் நேசப்பா.

சிறுகதை – மலர்கள் கேட்டேன், வனமே தந்தனை..

A 50 year old couple enjoying city skyline

“என்ன கோகி, ஹேர் கலர் பண்ணியிருக்க? நம்ம 25th anniversary வருதுன்னா? ஷில்லாங் பேக்கேஜ் புக் பண்ணட்டுமா? சோமசேகர் கேட்டுக் கொண்டேயிருக்க, ஆபீஸ் பேகை டேபிள் மீது வைத்துவிட்டு நேராக பாத்ரூமிற்குள் நுழைந்தாள் கோகிலா.

சோமா வேலையை தொடர, கோகி வெளியே வர பத்து நிமிடம் ஆனது. நைட்டி மாற்றி, டீ போட்டு எடுத்து வந்து சோபாவில் உட்கார்ந்தாள்.

“என்ன புக் பண்ணட்டுமா, சொல்லு? மேகத்துக்கு நடுவுல, நீயும் நானும் மட்டும். சுற்றிலும் பனிமூட்டம். பக்கத்துல இருக்குற காடு, மலை எல்லாம் மங்கலா தெரிஞ்சாலும் பரவாயில்லை. நமக்கு நாம மட்டும் தெரிஞ்சா போதும்” என உற்சாகமாக தொடர்ந்தார் சோமா.

“Mondayலேர்ந்து ரெண்டு வாரம் கிளையண்ட் விசிட்” என டீ டம்ளரை பார்த்தபடியே சொன்னாள் கோகி.

சோமாவுக்கு இது புதிதில்லை.

ஸ்கிரீனிலிருந்து திரும்பி கோகியை பார்த்தார். புது hair cut. புது hair color.

“இந்த hair cutக்கு என்ன பேரு? மைண்ட்ல இருக்கு, ஆனா பேரு சரியா ஞாபகம் இல்லை” என்றார்.

“பேரெல்லாம் கேக்கலை. Hair density ரொம்ப கொறஞ்சிடுச்சி. அதான் ப்ரீத்தியை எனக்கு எது suit ஆகுமோ அதை பண்ண சொல்லிட்டேன்” என்றாள்.

கோகி கிச்சனுக்குள் சென்று கொண்டே பதில் சொல்லி முடிக்க, சோமா யோசனையில் ஆழ்ந்தார்.

கொஞ்ச நேரத்தில் மகன் சாய் பிரசாத்தும் வர, இரவு உணவு சாப்பிட்டு முடித்து, அவரவர் அடுத்த நாளுக்கான தயாரிப்புகளை செய்ய ஆரம்பித்தார்கள்.

கோகிக்கு எட்டரையில் இருந்து பத்து மணி வரை மீட்டிங் இருந்தது. ஹெட்போனை மாட்டிக்கொண்டு, நோட்ஸ் எழுதிக் கொண்டு பிசியாக இருந்தாள்.

“டேய், நான் ஒரு walk போயிட்டு வரேன். பிரேக்ல அம்மா வந்து கேட்டான்னா சொல்லிடு” என்றார் சோமா.

“ஹ்ம்ம், நீயும் தான் டெய்லி சொல்ற. நீ பன்னெண்டு மணி வரைக்கும் வரலேன்னா கூட, அவங்க இழுத்து
போர்த்திகிட்டு தூங்கிடுவாங்க” என கூலாக சொன்னான் சாய்.

சோமாவுக்கு இதுவும் புதிதில்லை. “நீ நேரத்துக்கு தூங்கு, ரொம்ப நேரம் போன் பாக்காத” என சொல்லிவிட்டு கிளம்பினார்.

வீட்டை விட்டு வெளியே வந்ததும், அவருக்கு ஆயாசமாக இருந்தது. இரண்டு கைகளையும் பின்பக்கம் கட்டிக் கொண்டு, நடைபாதையில் நடக்க ஆரம்பித்தார்.

சமீப காலமாக கோகி மிகவும் சோர்வாக இருக்கிறாள். முன்பெல்லாம் சிறிய விஷயங்களுக்கு கூட சிரித்தவள், இப்போது காரணமில்லாமல் எரிச்சலடைகிறாள். சில நேரங்களில் பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென அமைதியாகிவிடுகிறாள்.

சோமாவுக்கு புரிந்தது இது வெறும் மனநிலை மாற்றம் அல்ல என்று. அவள் வாழ்க்கையின் ஒரு புதிய பருவத்தைக் கடந்து கொண்டிருக்கிறாள். உடல் அமைதியாக மாற்றம் அடைகிறது. அதனுடன் போராடிக் கொண்டே மனமும் உணர்வுகளும் புதிய சமநிலையைத் தேடிக்கொண்டு இருக்கின்றன.

சோமா அவளைச் சரி செய்ய முயலவில்லை. அதற்கு பதிலாக, அதிகம் பேசினார். குறைவாக வாதிட்டார். சில நாட்களில் அவளுக்கு தனிமை தேவைப்பட்டபோது, அமைதியாக அவளுக்கு வழி விட்டு ஒதுங்கிக் கொண்டார்.

யோசித்தபடியே நடந்து போனதில், அவருக்கு நேரம் போனதே தெரியவில்லை. வரும் வழியில் பார்மசியில் சில பொருட்களை வாங்கி கொண்டு வீடு திரும்பினார்.

சாய் தூங்கி விட்டான். கோகியும் ஹாலில் இல்லை. கை கால்களை கழுவிக் கொண்டு, பாட்டிலில் தண்ணீர் நிரப்பி எடுத்துக் கொண்டு, பெட்ரூமிற்குள் போனார்.

“கோகி” என மெதுவாக குரல் கொடுத்தார். அசைவில்லை. சரி தூங்கட்டும் என அவரும் படுத்துக் கொண்டார்.

வேலை, நட்பு, சொந்தம் என வாழ்க்கை நிரம்பியே இருந்தது. ஆனால் சில மாதங்களாக, இருவரும் ஒருவருக்கொருவர் அருகில் இருந்தும், ஏதோ ஒரு மெல்லிய வெறுமை மட்டும் நடுவில் படுத்திருக்கிறது. திரும்பத் திரும்ப வந்த யோசனைகளை ஒதுக்கிவிட்டு, எப்படியாவது கொஞ்ச நேரம் தூங்க முயன்றார் சோமா.

மறுநாள் காலை ஐந்து மணி. கோகி விழித்தவுடன் சைட் டேபிளின் மீது இருந்த Biotin supplement box கண்ணில் பட்டது. ஒரு நிமிடம் கோகிக்கு புன்முறுவல் வந்தது. Hair fall பிரச்சினைக்காக வாங்கி வந்திருக்கிறார். சோமாவின் தலையை கோதிக் கொண்டே விட்டத்தை பார்த்தபடி கொஞ்ச நேரம் படுத்திருந்தாள்.

ஒரு காலத்தில் அவர்களுக்கிடையே இப்படிப்பட்ட கிண்டல்கள் தினசரி விஷயமாக இருந்தன. “கோகி, பார்மஸில இருக்கேன், என் கப்போர்டுல protection இருக்கானு பாத்து சொல்லேன்” என சோமா வம்பிழுத்து எவ்வளோவோ நாட்களாகி விட்டது.

ஆனால் அந்த விருப்பம் எங்கேயா, எப்போதோ கோகிக்கு தொலைந்து போய்விட்டதாக உணர்ந்தாள். கடந்த காலங்களில் மிக இயல்பாக இருந்த ஒரு விஷயம், இப்போது சிந்தித்துப் பார்க்க வேண்டிய ஒன்றாக மாறிவிட்டது. சோமா அதை புரிந்து கொண்டு காத்திருக்கிறார். அதுதான் சில நேரங்களில் அவளை இன்னும் அதிகமாக நெகிழச் செய்தது.

வெளிச்சம் அறையிலும் பரவ ஆரம்பிக்க, எழுந்து போய் அன்றாட வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள். சாய் ஏழு மணிக்கே கிளம்ப, இவர்கள் இருவரும் ஒன்பது மணிக்கு வீட்டிலிருந்து காரில் கிளம்பினார்கள்.

கோகி டாக்சியில் பயணிப்பது போல, வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள். சோமா அமைதியாக
ஓட்டிக் கொண்டிருந்தார். சற்று நேரத்தில் காரினுள் நிலவிய அந்த மௌனம் அவரை என்னவோ செய்தது. போனை எடுத்து ஒரு பாடலை ஒலிக்க விட்டார்.

கனவா இல்லை காற்றா ..
கனவா நீ காற்றா ..
கையில் மிதக்கும் கனவா நீ?
கை கால் முளைத்த காற்றா நீ?
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே!
நுரையால் செய்த, சிலையா நீ?

பாடல் தொடர, பல நாட்களாக அடக்கி வைத்திருந்த ஏதோ ஒன்று உள்ளுக்குள் அசைந்தது கோகிக்கு.

காதல், தாய்மை இரண்டு மட்டும்,
பாரம் என்பதை அறியாது!
உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால்,
பசியோ, வலியோ தெரியாது!

உன்னை மட்டும் சுமந்து நடந்தால்,
உயரம் தூரம் தெரியாது!
உன் மேல் மற்றொரு பூ விழுந்தால்,
என்னால் தாங்க முடியாது!

இந்த வரிகளை கடக்கும் போது, கோகியின் கை தானாக நீண்டு சோமாவின் தோளில் படர்ந்தது.

சற்று நேரத்தில் ஆபீஸ் வர, “bye சோமா” என சொல்லி காரை விட்டு இறங்க எத்தனித்தாள்.

“ரெண்டு நிமிஷம் இருந்துட்டு போயேன்” என ரோட்டை பார்த்தபடியே சொன்னார்.

கோகி மெதுவாக அவரின் இடது கரத்தை இறுக்கமாக பற்றிக்கொள்ள, சோமா சீட்டில் சரிந்து கண் மூடினார்.

சில நிமிடங்கள் கழித்து “கிளம்பு, ஈவினிங் வரேன் பிக்கப்புக்கு, bye” என்றார்.

மூன்று வாரங்கள் ஆனது. கோகி கிளையண்ட் விசிட் முடிந்து கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருந்தாள். ஷில்லாங் ட்ரிப் பற்றி எந்த பேச்சு வார்த்தையும் இல்லை. Anniversaryக்கு இன்னும் இரண்டு நாட்கள் தான் இருக்கிறது. இப்போது ட்ராவல் ஏற்பாட்டை செய்ய முடியுமா என யோசித்தாள்.

அப்போது ப்ரீத்தியின் கால் வந்தது. “மேம், சார் உங்களுக்கு Spa package புக் பண்ணி இருக்காரு. நேத்து உங்களுக்கு ட்ரை பண்ணேன். உங்க நம்பர் பிசியா இருந்தது. ஸ்லாட் கன்பார்ம் பண்ணிடீங்கன்னா, நான் Martinaவ உங்களுக்கு assign பண்ணிடுறேன்” என்றாள்.

“மதியம் ரெண்டு மணிக்கு வரேன்” என சொல்லி போனை வைத்தாள். சோமா ஏதோ செய்து கொண்டே இருக்கிறார். நாம் அவருக்காக என்ன செய்கிறோம் என்ற கேள்வி எழுந்தது கோகிக்கு.

என்ன செய்வது, எங்கிருந்து ஆரம்பிப்பது என புரியாமல் சோபாவில் சாய்ந்து கண் மூடி யோசித்தாள்.

சோமாவின் போன் வந்தது. “என்ன மண்டைய ஒடச்சிகிட்டு உக்காந்திருக்கியா இன்னும், ரெடியாகி கிளம்பு” என்றார். “சரி சோமா” என்றாள் அவள்.

Spa செஷன் முடிந்ததும் உடலில் தான் நீண்ட நாட்களாகச் சுமந்து வந்த ஒரு கண்ணுக்குத் தெரியாத பாரம் மெதுவாக இறங்கிவிட்டது போல உணர்ந்தாள் கோகி. தோள்களில் இருந்த இறுக்கம் தளர்ந்து கழுத்து, முதுகு, கை கால்கள் என உடலின் ஒவ்வொரு பகுதியும் மீண்டும் சுவாசிக்கத் தொடங்கியது போல் இருந்தது.

அன்று இரவு சோமா வாக்கிங் கிளம்பும் போது, கோகியும் சேர்ந்து கிளம்பினாள். “பைக் எடுத்துட்டு வரவா? ஒரு ரவுண்டு போலாமா?” என்றார் சோமா.

அவள் தலையசைக்க, நகரத்து சாலைகளை தவிர்த்து ஹைவேசில் ஒரு நெடிய பயணமாக அது இருந்தது.

“நான் கொஞ்ச தூரம் ஓட்டவா?” என்றாள். சாலையோரம் வண்டியை நிறுத்தி சாவியை கொடுத்தார்.

கோகியின் இரு தோள்களை பற்றி சற்று தூரம் வந்தவர், லேசாக அவள் மீது தலை சாய்த்து கொண்டார். இது அவரின் குறைந்த பட்ச தேவை என உணர்ந்து, சர்வீஸ் ரோட்டுக்கு மாறி ஒரு கையால் வண்டியை ஒட்டிக்கொண்டே, மறு கையால் அவர் கால்களை மென்மையாய் பிடித்து விட்டாள்.

கிட்டதட்ட இரண்டு மணி நேரம் பயணம் முடித்து வீடு வந்து சேர்ந்த போது, சோமா பல நாள் வெறுமை நீங்கியது போல உணர்ந்தார்.

அடுத்த நாள் காலை. கோகி நான்கு மணிக்கே விழுத்துக் கொண்டாள். அவள் இரண்டு முறை புரண்டு படுக்க, சோமா “ஓய், சில்வர் கேர்ள், happy anniversary!” என சொல்லி இழுத்து அணைத்துக் கொண்டார். “Happy anniversary மை சில்வர் ஜூபிலி ஹீரோ! என கோகியும் கிசுகிசுப்பாய் சொல்ல, அன்றைய plan என்ன என்று கொஞ்சம் நேரம் பேசிக் கொண்டார்கள்.

ஆறு மணிக்கே கோவிலை சென்றடைந்து, சந்நிதி முன் நின்றபோது, அவர்கள் மனக்கண்களில் பல நினைவுகள் ஓடின. முதல் சம்பளம், முதல் வீடு, குழந்தை பிறப்பு, வலி மிகுந்த நாட்கள் மற்றும் சிறு சிறு வெற்றிக்காக வந்து நன்றி சொன்ன தருணங்கள் என ஒவ்வொரு நிகழ்வும் அவர்களுக்குள் ஒரு திரைப்படம் போல விரிந்தது.

அன்று சாயந்திரம் ஆறேழு நண்பர்கள் வீட்டுக்கு வர, ஒன்பது மணி வரை நேரம் போனதே தெரியவில்லை. ஒவ்வொருவராய் கிளம்ப, கடைசி நபரை வழி அனுப்பி விட்டு “மெயின் டோர் பூட்டிடவா கோகி” என கேட்டார் சோமா.

மூடிய உள்ளங்கையை கோகி நீட்ட, அவர் மெல்ல அவள் விரல்களை பிரித்தால் அதில் ஒரு சாவி இருந்தது. “போலாமா?” என அவள் கேட்க, ஆச்சர்யத்தில் மூழ்கினார் சோமா.

லிப்டில் முதல் முறையாக பதினாறாவது மாடிக்கு போனார்கள். கோகி மொட்டை மாடி பூட்டை திறக்க, “வாங்க” என சொல்லி வாட்டர் டேங்க் படி மீது ஏறி மேலே போய் நின்றாள். பின்னாலேயே சோமாவும் ஏறி வர, முழு நகரமும் தங்க புள்ளிகளாக ஜொலித்துக் கொண்டிருந்தது.

“என்னடி இங்க கூட்டிட்டு வந்திருக்க?” என அவர் கேட்க, “மேகத்துக்கு நடுவுல, நீங்களும் நானும் மட்டும். சுற்றிலும் பனிமூட்டம். பக்கத்துல இருக்குற ஊரு,காடு, மலை எல்லாம் மங்கலா தெரிஞ்சாலும் பரவாயில்லை. நமக்கு நாம மட்டும் தெரிஞ்சா போதும்” என சொல்லி இறுக கட்டிக் கொண்டாள்.

அவர்கள் எவ்வளவு நேரம் அப்படியே நின்றார்கள் என்று இருவருக்கும் தெரியவில்லை. அவன் சட்டையைப் பிடித்திருந்த அவள் விரல்கள் மட்டும் இறுகிக் கொண்டே போக, அவள் முதுகில் இளம் சூடான கண்ணீர் துளிகள் ஒன்றன்பின் ஒன்றாக விழ, “லவ் யூ சோமா” என்றாள்.

அன்று இரவு அவர்கள் ஷில்லாங்கில் இல்லை. ஆனால் ஷில்லாங் தரும் அமைதியும் நெருக்கமும் அவர்களுக்குள் இருந்தது.

சிறுகதை – கோலங்கள்

An image of a house decorated with floor rangoli

“ராஜு அண்ணா, நம்ம வேதநாயகி மேடம் வீட்டு வாசல்ல பால் பாக்கெட் எடுக்காம அப்படியே இருக்கு. அவங்க ஊர்ல இல்லியா?” என செக்யூரிட்டியிடம் கேட்டாள் ஹவுஸ் கீப்பிங் பணிப்பெண் மாதவி.

“எதுவும் சொல்லலியேம்மா? பெல் அடிச்சி பாத்தியா?” என்றார் ராஜு.

“அடிச்சேன்னா..யாரும் தொறக்கல. இன்னும் கொஞ்சம் நேரம் அப்படியே இருந்தா மூணு பாக்கெட் பாலும் கெட்டு போயிடும்” என்றாள் மாதவி.

ராஜு அவர்களுக்கு போன் செய்தார். அவர்கள் எடுக்காததால், “நீ என்ன பண்றன்னா, அந்த ப்ளோர்ல இருக்க யார்கிட்டயாவது பால குடுத்து பிரிட்ஜ்ல வெச்சிக்க சொல்லு. அவங்களுக்கு நா மெசேஜ் போட்டுடறேன், வந்தா வாங்கிக்கட்டும்” என்றார்.

“சரிண்ணே” என சொல்லி, அதே ப்ளோரில் இருந்த கோமதி வீட்டுக்கு போனாள்.

“அக்கா, வேதநாயகி மேடம் வீட்டுல இல்ல, இந்த பால பிரிட்ஜ்ல வெச்சிக்குங்க, வந்தா வாங்கிக்கட்டும்” என்றாள் மாதவி.

“நான் மத்தியானத்துக்கு மேல ஊருக்கு போறேன் மாதவி. நாலு நாள் ஆகும் வர்றதுக்கு. நீ வேணா சங்கரிகிட்ட குடுத்துடேன்” என சொன்னாள் கோமதி.

சங்கரி வீட்டு டோர் பெல்லை அடித்துவிட்டு சற்று நேரம் நின்று கொண்டிருந்தாள் மாதவி. கொஞ்ச நேரத்தில் அவள் கணவர் வந்து கதவை திறந்தார். மாதவி சொன்னதை முழுதாய் கேட்டார்.

“அவ நேத்து நைட் ஷிப்ட் பாத்துட்டு, இப்போ தான் வீட்டுக்கு வந்து தூங்குறா. நானும் அரை மணி நேரத்தில் கெளம்பிடுவேன். மத்தியானம் அவங்க வந்து பெல் அடிச்சா அவளுக்கு டிஸ்டர்பா இருக்கும். நீங்க வேணா சஞ்சய் அம்மாகிட்ட குடுத்து போயிடுங்க” என்றார்.

சஞ்சய் வீட்டு பெல்லை அடித்துவிட்டு மூன்றாம் மாடியில் இருந்து சாலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் மாதவி.

கதவை திறந்து “என்ன மாதவி”? என கேட்டாள் சஞ்சய் அம்மா ஷீலா.

“ஷீலாக்கா, இந்த மூணு பாக்கெட் பால் வேதநாயகி மேடம் வீட்டுக்கு வந்திருக்கு. அவங்க ஊர்ல இல்ல. நீங்க பிரிட்ஜ்ல வெச்சிக்குறீங்களா?” என்றாள் மாதவி.

“நான் நேத்து தான் இட்லி மாவு அரைச்சு பிரிட்ஜ்ல வெச்சிருக்கேன். இதை வைக்கிறதுக்கு இடம் இருக்காது. நீ வேணா சங்கரி வீட்டுல குடுத்துடேன்” என சொல்லி அனுப்பி வைத்தாள் ஷீலா.

மாதவிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அப்படியே வைத்து விட்டு போனால் கெட்டு போய்விடும். திரும்பவும் ராஜுவின் கேபினை நோக்கி நடந்தாள்.

“பேசாம நீயே வீட்டுக்கு எடுத்திட்டு போய்டு” என்றார் ராஜு.

‘அண்ணே,எங்க வீட்ல ப்ரிட்ஜ் இல்ல, இத்தனை பாக்கெட்டை நான் என்ன பண்றது?” என்றாள் மாதவி.

“சரி நீ ஒண்ணு எடுத்திட்டு போ. கொஞ்ச நேரம் கழிச்சி புவனாவும், ராணியும் வீட்டுக்கு போவாங்க. அவங்க கிட்ட ஆளுக்கொண்ணு குடுத்துடுறேன்” என சொன்னார் ராஜு.

“சரிண்ணே, நாளைக்கு நாங்க மூணு பேரும் ஆளுக்கொரு புது பாக்கெட் பதிலுக்கு வாங்கி குடுத்திடுறோம்” என சொல்லிவிட்டு கிளம்பினாள் மாதவி.

அன்று இரவு எட்டு மணி. ராஜுவுக்கு போன் போட்டு “அண்ணே, அவங்க வந்துட்டாங்களா?” என கேட்டாள்.

“இல்லம்மா, அவங்க திருப்பதிக்கு போயிருக்காங்களாம். நாளைக்கு காலைல பத்து மணி ஆகிடும் வீட்டுக்கு வர்றதுக்குன்னு சொன்னாங்க” என்றார் ராஜு.

“சரிண்ணே” என சொல்லி போனை வைத்தாள்.

மறுநாள் காலை எட்டு மணி. அன்றைய நாளுக்கான மூன்று பாக்கெட் பால் வேதநாயகி மேடம் வீட்டு வாசலில் இருந்தது. தரை மெழுகி சுத்தம் செய்ய வந்த மாதவிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. பத்து மணி வரை விட்டால் தாங்குமா என யோசித்தாள். மூன்று பாக்கெட்டையும் எடுத்துக் கொண்டு மீண்டும் ராஜுவின் அறைக்கு சென்றாள்.

அவர் டேபிள் மீது ஏற்கனெவே இவர்கள் பதிலுக்கு குடுத்த மூன்று பாக்கெட் இருந்தது.

“என்னண்ணே பண்றது?” என்றாள் மாதவி.

“இரு, பால்காரருக்கு போன் பண்றேன்” என்று அவரிடம் பேசினார்.

“அவரு வேற ஏரியாக்கு போயிட்டாராம், ரிட்டர்ன் வாங்க வர முடியாதுன்னு சொல்றார்” என்றார் ராஜு. பிறகு “பக்கத்து கோயில்ல இப்போ அய்யர் வர்ற நேரம். நீ போய் அவர்கிட்ட குடுத்துடு” என்றார்.

மாதவி தயங்கியவாறே “அண்ணே, அப்புறம் பதிலுக்கு யாருண்ணே ஆறு பாக்கெட் வாங்கி தர்றது?” என கேட்டாள்.

“மேடம் தங்கமானவங்க, அதெல்லாம் ஒண்ணும் கேக்க மாட்டாங்க” என்றார் ராஜு.

மாதவி மொத்த பாக்கெட்டையும் ஒரு துணி பையில் போட்டு அய்யரிடம் கொடுத்து விட்டு வீட்டுக்கு போனாள்.

அன்று இரவு அவளுக்கு சங்கடமாக இருத்தது. “ஏங்க ஒரு இருநூத்தி அம்பது ரூபா நாளைக்கு காலைல வேணும்” என கணவரிடம் விஷயத்தை சொல்லி கேட்டாள்.

“சரிடி தரேன், ஆனா ஆறு பாக்கெட் வெச்சி அவங்க என்ன பண்ணுவாங்க?” என கேட்டார் அவர்.

“தெரியலீங்க, ஆனா நான் தானே எடுத்திட்டு வந்தேன்” என்றாள் மாதவி.

மறுநாள் காலை. அண்ணாச்சி கடைக்கு போய் விஷயத்தை சொல்லி ஆறு பாக்கெட் பால் வாங்கி கொண்டாள். ஒரு வேளை அவர்கள் மூன்றுக்கு மேல் வேண்டாம் என்றால் உடனே மீதியை திரும்ப தருவதாக ஏற்பாடு.

“இன்னைக்கு இந்நேரம் பால் வந்திருக்குமேம்மா?” என யோசனையாக சொன்னார் அண்ணாச்சி. அதுவும் சரிதான் என தோன்றியது மாதவிக்கு.

“பரவால்ல, எடுத்திட்டு போ, என்ன சொல்றாங்கன்னு பாக்கலாம்” என சொல்லி அனுப்பினார் அண்ணாச்சி.

மாதவி போய் வேதநாயகி மேடம் வீட்டு டோர் பெல்லை அடித்தாள்.

கதவு திறந்தவுடன், “இந்தாங்க மேடம், ரெண்டு நாள் பாலு. இங்கயே இருந்தா கெட்டு போயிடும்னு எடுத்திட்டு போயிட்டோம். அதான் பதிலுக்கு வாங்கிட்டு வந்திருக்கேன்” என்றாள்.

“லிப்ட்ல, கீழ கிரவுண்ட் ப்ளோர் நோட்டீஸ் போர்டுல பால்காரர் நம்பர் ஒட்டி வெச்சிருக்கோம்ல. சொல்லி இருந்தா அவரே எடுத்திட்டு போயிருப்பார். இன்னைக்கு பால் ஏற்கனவே வந்துடிச்சி. இவ்வளவு எனக்கு தேவைப்படாது. நீயே எடுத்திட்டு போயிடு” என சலித்துக் கொண்டார் வேதா.

“சரிங்கம்மா, அப்போ நா காசா குடுத்துடவா?” என தயங்கியபடியே கேட்டாள் மாதவி.

“எவ்வளவோ தண்ட செலவாகுது! அது மாதிரின்னு நெனச்சுக்குறேன். காசெல்லாம் வேணாம்” என சொல்லி கதவை சாத்தினார்.

மாதவிக்கு சுறுக்கென்று இருந்தது. தளர்வாய் நடந்து அண்ணாச்சி கடைக்கு போய், பால் பாக்கெட்டுகளை ரிட்டர்ன் செய்து பணம் வாங்கி கொண்டு கிளம்பினாள். வீட்டுக்கு போய் கணவரிடம் விஷயத்தை சொல்ல, அவர் சில யோசனைகளை சொன்னார்.

மறுநாள் காலை வழக்கம் போல ஒவ்வொரு ப்ளோராக தரையை சுத்தம் செய்து விட்டு, மூன்றாம் மாடிக்கு வந்தாள். ஏதோ அவளுக்கு வித்தியாசமாக பட்டது. சற்று நின்று நிதானித்து கவனித்தாள். நான்கு வீட்டு வாசலிலும் ரங்கோலி கோல ஸ்டிக்கர்கள் ஒட்டியிருந்தது.

“என்ன மாதவி, சீக்கிரமே வந்துட்ட?” என்றபடி நைட் ஷிப்ட் முடித்து வந்த சங்கரி கேட்டாள்.

“ஆமாக்கா..கொஞ்சம் வெளில போகணும். அதான் சீக்கிரமே வந்துட்டேன். ஸ்டிக்கர் அழகா இருக்குது. அதான் பாத்துக்கிட்டே கொஞ்ச நேரம் நின்னுட்டேன்” என்றாள் மாதவி.

“அதுவா, நம்ம வேதநாயகி மேடம் திருப்பதிலேர்ந்து வாங்கிட்டு வந்தாங்க. நாலு வீட்டுக்கும் யூனிபார்மா இருந்தா நல்லா இருக்கும்னு ஆளுக்கொண்ணு குடுத்தாங்க நேத்து, மேடம் தங்கம்!” என்றாள் சங்கரி.

“ஆமாக்கா” என சொல்லி விட்டு கிளம்பினாள் மாதவி. வீட்டுக்கு போகும் வழியில் கோயிலுக்கு போய் இருநூத்தி அம்பது ரூபாய் அய்யரிடம் கொடுத்து ஏதாவது பிரசாதம் செய்து பக்தர்களுக்கு கொடுக்க சொன்னாள்.

“யாரு பேருக்குமா அர்ச்சனை செய்து பிரசாதம் குடுக்கணும்?” என கேட்டார் அய்யர்.

“தங்கம், சாமி” என சொல்லி விட்டு கிளம்பினாள் மாதவி.

Tamil novel – Jiteswari – Part 3/21

A woman engineer

ஜிதேஸ்வரி மெக்கானிகல் என்ஜினீயர். திருமணத்திற்கு முன்பு மும்பையில் ஐந்து வருடம் பணியில் இருந்தாள்.  கணவர் ராஜு எலெக்ட்ரிக்கல் என்ஜினீயர். பாண்டியில் ஈபி ஆபீசில் நிரந்தர வேலையில் இருக்கிறார். ராஜுவின் வரன் வந்தபோது ஜிதேஸ்வரி தனது வருங்கால வேலை வாய்ப்புகளை பற்றி யோசித்தாள்.

ஜிதேஸ்வரி ஒரு சர்வதேச எரிவாயு நிறுவனத்தின் மும்பை கிளையில் நல்ல சம்பளத்தில் வேலை செய்து கொண்டிருந்தாள். தமிழகத்தில் அது போன்ற நிறுவனங்கள் மிக குறைவு. பாண்டியிலோ ஒன்று கூட கிடையாது.

ஜித்து அவள் பெற்றோரிடம் இந்த வரனை தவிர்க்குமாறு சொல்லி விட்டாள்.

ராஜுவின் குடும்பம் கற்பகத்தின் உறவு வழியில் தூரத்து சொந்தம். விசாரித்ததில் நல்ல குடும்பம் என செய்தி வந்தது. ஜிதேஸ்வரியின் தந்தை இந்த வரனை முடிப்பதில் குறியாய் இருந்தார். நல்ல பையன், நல்ல வேலை மட்டுமல்லாமல் அடிக்கடி போய் பார்க்க ஏதுவாக பாண்டியிலேயே சம்பந்தம் கிடைத்ததில் அவருக்கு பரம சந்தோஷம்.

இது ஊருக்கும் வீட்டாருக்கும் தெரிந்த கதை. ஆனால் அவருக்கு உள்ளூர ஒரு பயம் இருந்தது. ஜிதேஸ்வரி செய்வது ஒரு நுட்பமான வேலை. நல்ல பதவி இந்த வயதிலேயே. அவர் பணி ஓய்வு பெறும்போது வாங்கிய சம்பளத்தை விட இப்போது அவர் மகள் வாங்குவது அதிகம். இன்னும் ஓரிரண்டு ஆண்டுகளில் நிச்சயமாக இன்னும் நல்ல ஊதியம் கிடைக்கும். மேலும் பல நாடுகளில் பணி புரிய வாய்ப்பும் கிடைக்கும். இங்கு தான் அவரின் கவலை நிலைகொண்டது. இந்த ஆண்டு வரன் அமையாவிடில் அடுத்து வரும் ஆண்டுகளில் மகளின் தகுதிக்கேற்ப வரன் தேடுவது மிக சவாலான விஷயமாக இருக்கும். அவர்கள் சார்ந்த சமூகத்தில் அந்த அளவு நிலையில் இருப்பவர்கள் மிகவும் அரிதாக இருந்தது. அப்படி இருப்பவர்கள் அனைவரும் வெளிநாட்டு வரன்களாக இருந்தார்கள்.

அவருக்கு மகளை வெளிநாட்டுக்கு அனுப்ப இஷ்டமில்லை. அதனால் எப்படியாவது இந்த வரன் அமைய வேண்டும் என்று நினைத்தார்.

ராஜுவின் வரனை முடிப்பதில் அவளின் பெற்றோர்கள் மும்முரமாக இருந்தார்கள். ஜிதேஸ்வரிக்கும் ராஜூவை பிடித்திருந்தது. ஆனால் சிக்கல் ராஜுவின் அரசாங்க வேலையும் ஊரும் தான். 

மும்பையில் வேலை பார்க்க விருப்பமா என கேட்டாள் ஜிதேஸ்வரி. ராஜூவை விட அவர் தந்தை இந்த விஷயத்தில் உறுதியாக இருந்தார். மகன் எப்போதும் பாண்டியில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதே அவர் எண்ணம்.

இரண்டு தரப்பும் அவர்கள் முடிவில் உறுதியாக இருந்தார்கள். சில மாத பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஜிதேஸ்வரியின் மீது அழுத்தம் அதிகமானது. ஜிதேஸ்வரி அவள் வேலை செய்யும் கம்பெனியில் சென்னைக்கு மாற்றலுக்கு விசாரித்தாள்.

இடமாற்றல் சாத்தியம் என சொன்னார்கள். ஆனால் அடுத்த பணி உயர்வின் போது மும்பையில் இருக்க வேண்டும். இப்போது இருக்கும் நிலையிலேயே இன்னும் சில ஆண்டுகள் சென்னையில் தொடரலாம் என ஒரு சிக்கலான சூழல். இந்த மாற்றம் முழுமையான பலனளிக்காது என தோன்றியது அவளுக்கு. அப்போதும் ராஜு சென்னைக்கு மாற்றலாகி வரப்போவது இல்லை. வார இறுதி நாட்களில் யாராவது ஒருவர் போய் மற்றொருவரை சந்திக்கும் நிலை.

ராஜுவின் தந்தைக்கு இந்த தாமதம் எரிச்சலூட்டியது. ஒரு வேளை ராஜு மனம் மாறி மும்பை போவதாக முடிவெடுத்தால், அதற்கு பிறகு அவர்கள் சொந்த ஊருக்கு வருவது அரிதானதாக இருக்கும். அதனால் பேசாமல் இந்த பெண்ணை விட்டுவிட்டு வேறு வரன் பார்க்கலாம் என முடிவெடுத்தார். இரவு உணவின் போது ராஜுவிடம் இது பற்றி பேசினார்.

“இல்லப்பா, ஜிதேஸ்வரி முடிவெடுக்கட்டும். நாம வெயிட் பண்ணலாம்” என சுருக்குமாய் முடித்தான்.

இந்த பதிலில் ராஜுவின் விருப்பம் வெளிப்படையாக தெரிந்தது. அதனால் இதற்கு மேலும் காத்திருப்பது ஆபத்து என உணர்ந்தார். அடுத்த நாள் ஜிதேஸ்வரியின் தந்தையிடம் நேரில் போய் அவர் கவலையை பகிர்ந்து கொண்டார்.

இரு வீட்டு பெரியோர்களும் தங்கள் பிள்ளைகள் வேறு ஊரில் வசிப்பதை விரும்பவில்லை. ராஜுவின் அப்பா இவ்வளவு தூரம் தானாக முன்வந்து பேசியது பெண் வீட்டாருக்கு பிடித்திருந்தது. ராஜு உறுதியாக இருப்பது இன்னும் சந்தோஷமாக இருந்தது.

மீண்டும் பெண்ணிடம் பேசி விட்டு இந்த வாரத்திற்குள் முடுவு சொல்வதாக சொல்லி அனுப்பி வைத்தார்கள். அந்த வார இறுதியில் மும்பை போய் மகள் வீட்டில் இறங்கினார்கள்.

இந்த விஷயத்திற்காக அவர்கள் இவ்வளவு தொலைவு வந்தது நிலைமையின் வீரியத்தை அவளுக்கு உணர்த்தியது. சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் முழுதாக இந்த வரனை பற்றி விவாதித்தார்கள். சென்னை இட மாற்றலின் விளைவுகளை விவரித்தாள் ஜிதேஸ்வரி. அவள் ஆபீசில் விசாரித்ததே அவர்களுக்கு பெரும் நம்பிக்கையாக இருந்தது. மேலும் ஒரு வாரம் தங்கி இருந்து இன்னும் தீவிரமாக அவளை கரைக்க ஆரம்பித்தார்கள். பத்து நாள் கடந்த பிறகு சென்னை மாற்றலுக்கு ஜிதேஸ்வரி விண்ணப்பித்தாள். அடுத்த ஒரு மாதத்தில் சென்னை வந்து சேர, திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. பிறகு இருபதே நாட்களில் திருமணமும் நல்ல படியாக நடந்தது.

A traditional Tamil marriage ceremony