சிறுகதை – சும்மாடு

Part 1

காலை ஐந்து மணி. குணா பாய்லரில் தண்ணீர் நிரப்பி விட்டு, மற்றொரு அடுப்பில் பால் பாத்திரத்தை ஏற்றி வைத்து, அடுப்பை பற்ற வைத்தார். நாற்பத்தைந்து வயது அவருக்கு. இன்னும் திருமணமாகவில்லை. அவர் அம்மாவும் அவரும் மட்டும் வீட்டில்.

டவுனின் மைய பகுதியில் கோவிலுக்கு எதிரே டீக்கடை நடத்துகிறார் குணா. எட்டு மணிக்கு மேலாக குணாவின் அம்மா ஜனகம்மா டீ கடையிலேயே டிபன் விற்க ஆரம்பிப்பாள். இட்லி சாம்பார், பூரி கிழங்கு என வீட்டிலேயே தயார் செய்து, இங்கே கொண்டு வந்து விற்பனை செய்வாள்.

டீக்கடைக்கு எதிர் புறம் ஆறு மாதமாக சூர்யா கோவில் வாசலில் பூ கடை நடத்துகிறாள். பெரிதாய் சலனமில்லாமல் இருக்கும் முகம். நாற்பதை நெருங்கும் வாழ்க்கை. ஒடிசலான தேகம். ஒரு மர டேபிள், சின்ன பிளாஸ்டிக் ஸ்டூல், ஒரு பழைய பல வண்ண நிழற்குடை என மொத்த கடையும் நாலு சதுர அடிக்குள் சுருங்கிவிடும்.

சூர்யா தினமும் கோலப்பன் ரிக்க்ஷாவில் பூக்கூடையோடு வருவாள். அவளுக்கு சாக்கு பையை இறக்க உதவி செய்து விட்டு, டேபிளை இழுத்து போட்டு, குடையை மாட்டி, ஈர கோணியை விரித்து வைப்பார். அதற்குள் அவள் சிறிய பக்கெட்டில் தண்ணீர் பிடித்து வைத்து, ரெண்டு ஊதுபத்தியை ஏற்றி வைப்பாள். சூர்யா ஒரு நிமிடம் கண் மூடி அமர, கோபுரத்தை பார்த்து கன்னத்தில் போட்டு கொண்டு கோலப்பன் கிளம்பி விடுவார்.

இரவு கோலப்பன் எந்நேரம் வருவார் என தெரியாது. சூர்யா கடையை கட்டி விட்டு, அவர் வரும் வரை கல் மண்டபத்தின் உட்பக்கமாக போய் படுத்துக் கொள்வாள்.

“இந்த பொண்ணுக்கு கோலப்பன் வீட்டுக்காரரா?” என குணா ஒரு நாள் ஜனகம்மாவிடம் கேட்டார்.

“இல்ல, ஆனா சொந்தக்காரரும் இல்ல” என்றார் ஜனகம்மா.

அதற்கு பிறகு அவர்கள் அதிகமாய் சூர்யாவை பற்றி பேசவில்லை. ஆனால் நாளாக நாளாக, குணாவுக்கு அவள் மீது ஈர்ப்பு ஆரம்பமாகியது.

எப்போதாவது அவள் பார்வை டீக்கடை பக்கம் வந்தால், அவர் புன்னகைப்பார்.

“டெய்லி காலைல ஒரு முழம் மல்லிப்பூ கடைக்கு குடுத்துடுமா. மாசத்துக்கு மொத்தமா காசு குடுத்துடுறேன்” என ஒரு நாள் தைரியமாக போய் சொல்லிவிட்டார்.

இடது கையால் வலது கண்ணை அழுத்தமாக துடைத்து இல்லாத தூசை அவள் தட்ட, குணாவுக்கு அவள் முக பாவம் பிடிபடவில்லை.

நான்கு மாதத்துக்கு மேலாக, தினசரி பூ கொண்டு வந்து டேபிள் மீது வைத்து விட்டு போய் விடுகிறாள். கண்ணில் சலனமிருக்காது. முகத்தில் சிரிப்பிருக்காது. நடையில் இயல்பும் இருக்காது.

மாதத்தில் சில நாட்கள் அவள் கடை போடுவதில்லை. முப்பது நாளுக்கு பணம் கொடுத்தாலும், மூன்று நான்கு நாட்களை கணக்காக கழித்த பிறகே வாங்கி கொள்வாள்.

“டீ குடியேம்மா” என அவ்வப்போது வற்புறுத்துவாள் ஜனகம்மா.

“பழக்கமில்லை” என ஒற்றை சொல்லோடு நிறுத்திக் கொள்வாள் சூர்யா.

குணாவுக்கு இது மூச்சு முட்டுவது போல இருந்தது. இன்னும் முப்பது ஆண்டுகள் ஆனாலும் அவள் புதிராகவே இருப்பாள் என தோன்றியது.

அன்று வெயிலும் அதிகம். கோவிலில் பக்தர்கள் கூட்டமும் அதிகம். சூர்யா காலையிலிருந்து சற்றே பதட்டமாக இருப்பதாக குணாவுக்கு தோன்றியது.

அரை மணி நேரம் இருக்கும். குணா பூக்கடையை பார்க்க அங்கே அவள் இல்லை.

அவர் குழப்பமாக சுற்றி முற்றி பார்க்க, ரெண்டு கடை தள்ளியிருந்த பார்மசியில் அவள் நின்று கொண்டிருப்பதை கவனித்தார்.

சில நிமிடங்களில் ஒரு ப்ரவுன் கவரோடு, பொது கழிப்பிடம் நோக்கி சென்றாள்.

பிறகு தளர்ந்த நடையோடு வெளியே வந்தவள், பூக்கடை அருகே இருந்த சந்திரம்மாவிடம் ஏதோ சொல்ல, அவர் சரியென்பது போல தலையாட்டினார். அவர் டேபிளோடு, சூர்யாவின் டேபிளையும் இழுத்துப் போட்டு ஒரே கடையாக்கினார்.

சூர்யா புடவை தலைப்பை சரி செய்வது போல, பின் முதுகை நீவிக் கொண்டு, கல் மண்டபம் நோக்கி நடந்து போனாள். குணாவுக்கு அந்த நிமிடம் அப்படியே அவளை உள்ளங்கையில் வைத்து தாங்க வேண்டும் போல இருந்தது.

தானாவது ஒரு கூரையின் கீழ் சவுகரியமாக வேலை செய்கிறோம். ஆனால் இந்த பெண் வெயிலிலும் மழையிலும் உழைத்துக் கொண்டிருக்கிறாள். இடுப்பு ஒடிய முழு நாளும் அமர்ந்து கொண்டே நூற்றுக் கணக்கான முழ பூச்சரங்களை தானியங்கி எந்திரம் போல தொடுத்துக் கொண்டிருக்கிறாள்.

குணா தன்னால் அவளுக்கு என்ன உதவி செய்ய முடியும் என யோசித்தார். பிறகு பார்மஸிக்கு போய் நல்லதாக ஒரு வெந்நீர் பையை வாங்கி வந்தார்.

பாய்லரில் இருந்து சூடாக தண்ணீரை எடுத்து அந்த பையில் ஊற்றி வைத்தார். பிறகு டீ பிளாஸ்க் மற்றும் கொஞ்சம் பலகாரங்களை எடுத்துக் கொண்டு கல் மண்டபத்துக்கு கிளம்பினார்.

Part 2

“இந்தா, டீ குடி” என பையை நீட்டினார் குணா.

அந்த நேரத்தில் அவரை அங்கு அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

“இது என்ன?” என வெந்நீர் பையை குழப்பமாக பார்த்தபடியே கேட்டாள்.

“முதுகு வலி பின்னி எடுக்கும்னு தெரியும். ராத்திரி கோலப்பன் வர்ற வரை எப்படிச் சமாளிப்ப? அதான் ஒத்தடம் வச்சிக்குவன்னு எடுத்திட்டு வந்தேன்” என அமைதியாக சொன்னார்.

இத்தனை மாதத்தில் மூன்று லைன் இன்றுதான் முழுதாக அவளிடம் பேசி இருக்கிறார். அதுவும் இது போன்ற ஒரு அசௌகரியமான சூழ்நிலையில்.

சூர்யாவுக்கு மண்டை தெறித்தது. தன் நிலையை அப்பட்டமாக ஒருவர் படம் பிடிக்கும் அளவுக்கு தான் நடந்து கொண்டோமா என தன்னையே திட்டிக் கொண்டாள்.

“இதெல்லாம் வேணாம், எடுத்திட்டு போங்க” என தீர்க்கமாக சொன்னாள்.

பிறகு “வெச்ச கண்ணு வாங்காம ஒருத்தர் பொழுதன்னிக்கும் பாத்துகிட்டே இருந்தா எனக்கு ஒடம்பு கூசாதா? அதை விட இந்த வலி ஒண்ணும் பெருசு இல்ல. போக்கிடம் இல்லாமத் தான், பொழப்புக்காக இந்த கோவில் வாசல்ல வந்து ஒக்காந்திருக்கேன்” என சூர்யாவிடம் இருந்து சுடு சொற்கள் வந்து விழ, குணா அதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.

தன்னால் அவளுக்கு என்ன உதவி செய்ய முடியும் என யோசித்தவர், அவள் அதை எப்படி எடுத்துக் கொள்வாள் என சிந்திக்க தவறி விட்டார்.

தலையை குனிந்தபடியே சற்று நேரம் உட்கார்ந்திருந்தவர், “மன்னிச்சுடும்மா, ஏதோ என் மனசுல ஒரு பிடிப்பு உன் மேல. காலைலேர்ந்து நீ சுணக்கமாவே இருந்ததால மனசு கேக்கல. டக்குன்னு கைல கெடச்சத எடுத்திட்டு வந்துட்டேன். இனிமே உன்ன நான் தொல்லை பண்ண மாட்டேன்” என சொல்லிவிட்டு தளர்வாய் கிளம்பினார்.

கல் மண்டபத்தில் இருந்து அவர் மறையும் வரை சூர்யா அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

எப்பேர்ப்பட்ட அன்பு இது! என்ன ஒரு அனுசரணை! பிறந்ததில் இருந்து இன்று வரை கனிவு என்பது இப்படித்தான் இருக்கும் என தெரியாமலேயே இவ்வளவு ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறோமா என அவளுக்கு தோன்றியது.

அன்பென்றாலும், தன் அந்தரங்கத்தை ஒருவர் தொடர்ந்து நோட்டமிடுவதை அவளால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

கல் மண்டபத்தில் இருந்து குணா வெளிறிய முகத்தோடு வருவதை கடைக்கு வந்து கொண்டிருந்த ஜனகம்மா கவனித்தார்.

எதிரே பூக்கடையில் சூர்யா இல்லை. சந்திரம்மாவிடம் போய் விசாரித்தாள்.

“அது ஒக்காந்துடுச்சி. அதான் என்கிட்ட எல்லா பூவையும் குடுத்துட்டு போய் மண்டபத்துல படுத்திருக்குது” என சொல்லிவிட்டு வியாபாரத்தை தொடர்ந்தார்.

ஜனகம்மா மண்டப வாசலில் போய் நின்றாள். கடைசி தூண் அருகே, வெந்நீர் பையை அணைத்தவாறே சூர்யா விசும்பிக் கொண்டிருந்தாள். பக்கத்தில் அவர்கள் கடையின் பிளாஸ்க்கும் பையும் இருந்தது.

ஒரு அடி உள்ளே எடுத்து வைத்த ஜனகம்மா, பேசாமல் திரும்ப கடையை நோக்கி நடந்தாள்.

Part 3

அடுத்த இரண்டு நாட்கள் சூர்யா கடை போடவில்லை. மூன்றாம் நாள் காலை கோலப்பன் வண்டி வந்தது.

குணா டீக்கடை வாசலுக்கு வந்து நின்றார். வார பத்திரிகைகள் தொங்க விடப்பட்ட கயிறை சற்றே இறக்கிக் கட்டினார்.

மீண்டும் பாய்லர் முன் வந்து நின்றார். அவர் நின்ற இடத்தில் இருந்து பூக்கடை தெரியவில்லை.

சற்றே வலித்தாலும், தன்னையே அறியாமல் தான் இன்னொருவரின் தனிப்பட்ட தருணங்களை கவனித்தது முறையல்ல என்பதால் அவருக்கு வேறு வழி தெரியவில்லை.

பத்து நிமிஷம் கழித்து பூவோடு கோலப்பன் முதல் முறையாக டீக்கடைக்கு வந்தார்.

சூர்யா பூ கொண்டு வராதது குணாவுக்கு கலக்கத்தை தந்தது. அதிக ப்ரசங்கித்தனமாக நடந்து கொண்டதற்காக தன்னையே கடிந்து கொண்டார்.

அவர் அன்றே மன்னிப்பு கேட்ட பிறகும், அவள் மனதளவில் காயப்பட்டிருக்கிறாள் என சொல்லாமல் சொல்லுவதாக எடுத்துக் கொண்டார்.

“டீ குடிக்குறீங்களா?” என கோலப்பனிடம் தயக்கமாக கேட்டார்.

“பழக்கமில்லை” என சொல்லிவிட்டு, பூவை மேஜை மீது வைத்துவிட்டு விருட்டென கிளம்பினார் அவர்.

குணாவுக்கு பின் மண்டையில் யாரோ சடாரென்று வெட்டுவது போல இருந்தது. கண்கள் இருட்டிப் போனது.

சூர்யா சொன்ன அதே சிக்கனமான பதிலை கோலப்பனும் சொல்கிறாரென்றால், அவர்கள் உறவு எந்த அளவுக்கு ஆழமாக இருக்கும் என்ற நினைப்பே அவரை நிலை தடுமாற செய்தது.

“அவரு அந்த பொண்ணுக்கு வீட்டுக்காரரும் இல்ல, சொந்தக்காரரும் இல்ல” என ஜனகம்மா சொல்லியது திரும்ப திரும்ப அவர் காதில் ஒலித்தது. எது உண்மை, எது பொய் என்ற குழப்பத்தில் அப்படியே சரிந்து பாய்லரின் முன் இருந்த ஸ்டூலில் உட்கார்ந்தார்.

சற்று நேரத்தில் “என்ன, மல்லிப்பூ கூட ஒரு ரோஜாவும் இருக்கு இன்னிக்கு?” என ஜனகம்மாவின் குரல் கேட்டது.

பாய்ந்து போய் குணா எட்டி பார்க்க, வழக்கமாக இருக்கும் மல்லிகை சரத்தோடு, ஒரு சிவப்பு ரோஜாவும் இருந்தது.

அதை கண் கொட்டாமல் பார்த்தபடியே அனிச்சையாக கடைக்கு வெளியே வந்து நின்றார்.

சூர்யா அவரை கண்டு மலர்ச்சியாக புன்னகைக்க, நிமிர்ந்து கோபுரத்தை பார்த்தார். அதுவும் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தது.

Part 4

இப்போதெல்லாம் தினசரி பூக்கடைக்கு டீ கொண்டு போய் கொடுப்பது குணாவுக்கு வழக்கமாகி விட்டது.

மார்க்கெட்டில் சிவப்பு ரோஜா பிரிண்ட் செய்யப்பட்ட கண்ணாடி கிளாஸை தேடி வாங்கி, சூர்யாவுக்கு மட்டும் அதில் டீ கொடுக்க ஆரம்பித்தார்.

அரை ஸ்பூன் சர்க்கரை, குறைவான டிக்காஷன், மிதமான சூடு என தயார் செய்து, தானே கொண்டு போய் காலை மாலை என இரு வேளையும் சப்ளை செய்தார்.

சில வாரங்கள் ஆனது. கோலப்பனின் நடமாட்டம் பகல் பொழுதிலும் ஆரம்பித்தது.

ஒரு நாள் காலி டம்ளர்களை திரும்ப கொடுக்க கோலப்பன் கடைக்கு வந்தார்.

ரோஜாப்பூ கிளாஸை மட்டும் தவறுதலாக அல்லாமல், வேண்டுமென்றே தரையில் விட்டு, அவருடையதை ட்ரேயில் வைத்து விட்டு நகர்ந்தார்.

குணா உடைந்த கிளாஸையே வெறித்துப் பார்க்க, ஜனகம்மா வந்து அமைதியாக அந்த இடத்தை சுத்தம் செய்து விட்டு போனாள்.

ஒரு நிச்சயமற்ற காதலனின் அகப் போராட்டம் எப்படி இருக்கும் என குணா முழுதாய் உணர்ந்த தருணம் அது.

அவள் தன்னை எந்த அளவுக்கு காதலிக்கிறாள் என தெரியாமல் மனம் அலைபாய்வது. இன்னும் தனக்குச் சொந்தமாகாத காதலை இழந்துவிடுவோமோ என்ற அச்சம். அவளுக்கு மற்றொருவன் நெருக்கமாக இருப்பதைப் பார்க்கும்போது ஏற்படும் உறுத்தல். அதனால் அவர்களின் ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் அர்த்தம் தேடுவது என அவரின் மனம் எப்போதும் தறிகெட்டு ஓடிக் கொண்டிருந்தது.

ஜனகம்மாவுக்கு குணாவின் உள்ளக் குமுறல் கவலையை தந்தது. அழுக்கே இல்லாதவனின் மனம் இந்தளவு புழுங்குவதை அவளால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

“நாளைக்கு காலைல பெரிய மார்க்கெட்டுக்கு சரக்கு வாங்க போகணும்டா. ஆயிரம் ரூபா குடு” என கேட்டாள் ஜனகம்மா.

குணா பணத்தை கொடுக்க, “நம்ம ஆசீர்வாதம் கிட்ட போன் பண்ணி சொல்லிடு. நாளைக்கு மார்க்கெட்டுல லோடு இறக்கிட்டு வரும்போது, அவன் வண்டிலயே என்னை கூட்டிக்கிட்டு வர சொல்லிடு. நான் காந்தி சிலைக்கு பக்கத்துலதான் நின்னுகிட்டு இருப்பேன்” என சொல்லிவிட்டு கிளம்பினாள்.

பார்ட் 5

அடுத்த நாள் காலை. மார்க்கெட்டின் பின்பக்கம் இருந்த ஆட்டோ ஸ்டாண்டில் லோடு மூட்டைகளோடு பெண்கள் கூட்டமாய் இருந்தனர். சிலர் பிளாட்பாரத்தில் அமர்ந்து காபி குடித்துக் கொண்டும், சிலர் கீரை கட்டுகளை பிரித்து, மீண்டும் சிறு சிறு கட்டுகளாக மாற்றிக் கொண்டும் கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தார்கள்.

ஜனகம்மாவும் சூர்யாவும் அவரவர் வண்டிக்காக காத்திருந்தார்கள்.

“என்ன ஜான்சி அக்கா, ஊர்லேர்ந்து எப்போ வந்தீங்க? உங்க வீட்டுக்காரர் இப்போ சுமூகமாயிட்டாரா?” என ஒரு பெண் கேட்டது.

ஜான்சி தலையில் இருந்த சும்மாட்டை சரி செய்தபடியே, குனிந்து கூடையை தூக்கி தலையில் வைத்துக் கொண்டாள்.

“நம்மள மாதிரி ஒழைக்குற பொம்பளைங்களுக்கு, ஆம்பளைங்க சகவாசம்ங்கிறது இந்த சும்மாடு மாதிரி தான். மூர்க்கமா கல்லு மாதிரி இருக்கிறவன, தலைல தூக்கி வெச்சுக்குறதுல என்ன பிரயோஜனம் சொல்லு? மனுசன்னா, கனிவான மனசு இருக்கணும். பொம்பளைக்கு அவ சொமக்குற பாரம் தெரியாம பாத்துக்கணும்” என சொல்லிவிட்டு பஸ் ஏறி சென்று விட்டாள்.

ஜனகம்மா சூர்யாவை நேருக்கு நேர் பார்க்க, அவள் விரல்கள் மடியில் இருந்த சும்மாட்டை வருடிக் கொண்டிருந்தன. “கனிவான மனசு” என சொன்ன ஜான்சியின் வார்த்தைகள் அவளை அசைத்து பார்த்து விட்டது.

“நானும் வெயில் மழைன்னு கோவில் வாசல்ல பூ வித்துக்கிட்டு இருந்தவ தான். எட்டூருக்கு தெரியுற கோபுரத்துக்கு கீழ நின்னாலும், அதோட நிழல் மட்டும் தான் நமக்கு. சட்டுனு உள்ளே நுழைய முடியாது. அதே மாதிரி தான் நூறு ஆம்பளைங்க கூட வேலை செஞ்சாலும், எல்லார்கிட்டயும் நிழல் தேட முடியாது. நம்ம மனசுக்குள்ள நொழையணும்னா, நம்ம கஷ்டத்த புரிஞ்சிக்குறவனா இருக்கணும்” என சக பெண்களிடம் சொன்னாள் ஜனகம்மா.

கோலப்பன் பற்றி ஜனகம்மா அரசல் புரசலாக விசாரித்தது சூர்யாவுக்கு தெரியும். அவரின் இந்த அனுபவ பேச்சு முற்றிலும் தனக்கானது மட்டுமே.

கோலப்பன் வண்டி வந்து நின்றது. சிலர் ஏறிக் கொள்ள, சூர்யா மட்டும் மார்க்கெட்டை வேடிக்கை பார்த்தபடியே நின்றிருந்தாள்.

“வேற வண்டிக்கு மாறிட்ட போல?” என குதர்க்கமாக கேட்டார் கோலப்பன்.

“சவாரியா மட்டும் இருக்குறவளுக்கு எது சாஸ்வதம்?” என கூர்மையாக கேட்டாள் சூர்யா.

கோலப்பன் விருட்டென்று வண்டியை கிளப்ப, ஜனகம்மா கரண்ட் கம்பத்தில் சாய்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் தயங்கினாலும் “வா, வந்து வண்டியில ஏறு” என்ற வார்த்தை கோலப்பன் வாயிலிருந்து வராது என அவளுக்கு தெரியும். வந்தால் வரட்டும், இல்லெனியென்றால் எக்கேடோ போகட்டும் என்பது தான் அவர்
மனப்பான்மை.

கொஞ்சினால் மிஞ்சுவதும், மிஞ்சினால் கொஞ்சுவதுமாய் இல்லாமல், எப்போதும் மிஞ்சுவதாகவே கோலப்பன் இருப்பது அவளுக்கு வெகு காலமாகவே உறுத்தலாக இருந்தது.

சற்று நேரத்தில் ஆசீர்வாதத்தின் வண்டி வந்து நின்றது. ஜனகம்மா காய்கறி மூட்டையை எடுத்துக் கொண்டு ஏற , பின்னாலேயே சூர்யாவும் ஏறினாள்.

ஜனகம்மா எதிர்பார்த்தது இதைத்தான். அவள் குதூகலமாய் புன்னகைக்க, ஆசீர்வாதம் சைடு கண்ணாடி வழியாக அவளை பார்த்து தலையாட்டினார்.

சந்தோஷம் தளும்பி ஆட்டோ கிளம்ப “சூர்யாக்கா, இந்தா” என ஒரு பையன் மூச்சிரைக்க ஓடி வந்து ஒரு பெட்டியை கொடுத்தான்.

“தேங்க்ஸ்டா” என சொல்லி அந்த பெட்டியை இறுக்கப் பற்றிக் கொண்டாள் சூர்யா.

அவள் ஏதேதோ யோசனையில் மூழ்க, கோவிலை வந்தடைந்ததே தெரியவில்லை.

ஆசீர்வாதம் அவர்களை இறக்கி விட, “சாப்புட்டு போப்பா” என கூப்பிட்டாள் ஜனகம்மா.

“வண்டிய ஓரங்கட்டிட்டு வரேன்மா” என சொல்லிவிட்டு நகர்ந்தார் அவர்.

சூர்யா அவள் கடையை நேர்த்தி செய்ய ஆரம்பித்தாள். ஆனால் தான் எடுத்த முடிவு சரியா? இது நிலைக்குமா? என்ற ஆயிரம் எண்ணங்கள் அவளை கூறு போட்டு எடுத்தது.

தலை நிமிர்ந்து கோபுரத்தை பார்த்தாள். இறைவா நீயே ஒரு விடை சொல் என வேண்டிக் கொண்டாள்.

ஆசீர்வாதம் வண்டியை ஓரங்கட்டி விட்டு கடைக்குள் வர “தம்பி, அந்த கோலப்பனுக்கு இந்த பொண்ணு எப்படி பழக்கம்?” என பொத்தாம் பொதுவாய் கேட்டார் ஜனகம்மா.

” பழக்கமொன்னும் பெருசா இல்லம்மா. அந்தப் பொண்ணைப் பொறுத்தவரைக்கும், அவர் வெறும் சவாரிதான்” என்று சொல்லிவிட்டு, சாப்பிட ஆரம்பித்தார் ஆசீர்வாதம்.

அந்த பதிலை கேட்டதும் குணாவின் கண்களில் மின்னல் தெறித்து, அவர் விண்ணில் பறப்பதை ஜனகம்மா ஜாடையாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

இதற்கு மேல் இன்று கடையில் இருக்க வேண்டாம் என்றெண்ணி, “டேய், மேலுக்கு கொஞ்சம் வலியா இருக்கு, நா வீட்டுக்கு போறேன்” என சொல்லிவிட்டு கிளம்பினாள்.

ஜனகம்மாவும், ஆசீர்வாதமும் ஒவ்வொருவராய் புறப்பட, சூர்யாவுக்கு டீக்கடைக்கு போகலாம் என தோன்றியது.

என்ன முயற்சி செய்தும் அவளால் ஸ்டூலில் இருந்து எழ இயலவில்லை. கூச்சமும் தயக்கமும் அவளை பசை போட்டு ஒட்டி இருந்தது.

“அக்கா, ரெண்டு ரெட் ரோஸ் குடுக்கா” என்ற குரல் கேட்டு சடாரென்று நிமிர்ந்தாள்.

ஆறு வயது சிறுமி பள்ளி சீருடையில் நின்று கொண்டிருந்தது. “குணவதி, சீக்கிரம் வாங்கிட்டு வா” என காரில் இருந்த ஒரு பெண்மணி குரல் கொடுக்க, பூக்களை வாங்கி கொண்டு அந்த பெண் சிட்டாய் ஓடியது.

சூர்யாவுக்கு அவள் எதிர்பார்த்த ஒரு சமிக்ஞை கிடைக்க “சந்திராக்கா, கடைய கொஞ்ச நேரம் பாத்துக்குங்க” என சொல்லிவிட்டு டீக்கடைக்கு போனாள் சூர்யா.

“இந்தாங்க” என ஒரு பெட்டியை குணாவிடம் கொடுத்தாள்.

அதை அவர் பிரித்து பார்க்க, சிவப்பு ரோஜா போட்ட ஒரு ஜோடி கண்ணாடி கிளாஸ் இருந்தது.

அவர் ஆச்சர்யமாய் அவள் கண்களை பார்த்து சிரிக்க, “நேத்து அவரு அந்த கிளாசை ஒடச்சதும் நல்லது தான். அதனால தான் ஜோடியா வாங்கணும்னு எனக்கு தோணுச்சி” என சொல்லி மெலிதாய் சிரித்துவிட்டு கிளம்பினாள்.

அவளை பின் தொடர்ந்து கடைக்கு வெளியே வந்த குணா, வார இதழ்கள் தொங்கிய கயிற்றை சற்றே மேலே ஏற்றி கட்டினார்.

முற்றும்