
டோர் பெல் அடித்தது. “சங்கு புஷ்பம் போய் பார்” என்றார் நேசமணி. வெரிகோஸ் கால் பட்டையை அட்ஜஸ்ட் செய்தபடியே எழுந்து போனார் சங்கு புஷ்பம்.
“ஆன்ட்டி நாங்க பக்கத்து பிளாட்டுக்கு புதுசா வந்திருக்கிறோம். ஹலோ சொல்லிட்டு போலாம்னு வந்தோம். என் பேரு அமராவதி. இவர் பேரு கார்த்தி” என்றாள் அந்தப் பெண்.
உள்ள வாங்கம்மா என்றார் சங்கு புஷ்பம்.
வடை போட்டு முடித்து கை துடைத்தபடியே வந்தார் நேசமணி. முப்பதுகளில் இருக்கும் இருவரும் சற்று யோசித்தபடியே உட்கார்ந்தார்கள்.
நாங்க ஜி 501 பிளாட்டுக்கு காலைல தான் வந்தோம். சொந்த ஊர் நெல்லூர் எங்களுக்கு. இங்க ரெண்டு வருஷம் ஹைவேஸ் ரோடு கான்ட்ராக்ட் இவருக்கு. நானும் ஐடி பார்க்ல ஒர்க் பண்றேன். அமராவதி பேசிக்கொண்டிருக்க கார்த்தி ஏதோ யோசனையாய் இருந்தார்.
“காபியா, டீயா? என்ன சாப்பிடுறீங்க?” என்றார் நேசமணி. “எதுவா இருந்தாலும் ஓகே சார்” என்றார்கள்.
“அபராஜிதா, இவங்களுக்கு உன் ஸ்பெஷல் பில்டர் காபி போட்டு கொடு என்றார் நேசமணி. சடாரென்று நிமிர்ந்து உட்கார்ந்து ஹாலை நோட்டமிட்டார் கார்த்தி. தீர்க்கமாய் நேசமணியை பார்த்தபடியே உள்ளே போனார் சங்கு புஷ்பம்.
இஸ்திரி, எலெக்ட்ரிசியன், பணிப்பெண் என எல்லா போன் நம்பர்களையும் பெற்றுக்கொண்டு காபி குடித்து முடித்து “மறக்காம சொசைட்டி குரூப்ல ஆட் பண்ணிடுங்க ஆன்ட்டி” என்று சொல்லி இருவரும் கிளம்பினார்கள்.
வழி அனுப்பி கதவை சாற்றி திரும்பும்போது டக்கென்று “யாரு ஆண்ட்டி அபராஜிதா?” என்றார் கார்த்தி.
“நான் தான்பா அது. என் பேரு சங்கு புஷ்பம். அங்கிள் நல்ல மூட்ல கூப்பிடறது அபராஜிதா” என லேசாக சிரித்தபடியே சொல்ல, அது அவளோட ஹிந்தி பேரு என சிரித்தார் நேசமணி.
ஒரு நிமிடம் தன் கணவரின் மேல் அமராவதியின் பார்வை தெறித்தது. கார்த்தி அதை தவற விட நேசப்பாவும், சங்கு புஷ்பமும் நமுட்டு சிரிப்போடு உள்ளே வந்தார்கள்.