Diwali Gift Hamper – part 2

பூரிகுமாரி : ஏங்க, செயல் வீரருக்கு ஸ்வீட் குடுத்த தலீவர் சீனியர் மேனுக்கு என்ன தந்தாரு?

கோல்கப்பா : தலீவருக்கு சில மன வருத்தம் இருந்தாலும், அவருக்கு சீனியர் மேல பாசம் ஜாஸ்தி! அவர் சாய்ஸ் எப்படினு சொல்லு?

பூரிகுமாரி : அடக்கடவுளே! இது என்ன புது ஐட்டமா இருக்கு!

கோல்கப்பா : இதென்னை பிரமாதம்? இதை விட ஸ்பெஷல் ஐட்டத்த சீனியர் நம்ம தலீவருக்கு குடுத்திருக்காரு! இங்க பாரு!

பூரிகுமாரி : மகனுக்கு பதவி வாங்குறதுல விடா கண்டனா இருக்காரு போல!

கோல்கப்பா : ஆமாமா. ஆனா தலீவருக்கு வேற ஐடியா இருக்கு!

பூரிகுமாரி : எனக்கு தெரியுங்க. இதானே?

கோல்கப்பா : சரியா சொல்லி இருக்க. பதவிய தலீவர் அவர் பேரனுக்கு தான் தர போறாராம்!

பூரிகுமாரி : வேறென்ன எதிர்பார்க்க முடியும்ங்க, இது தெரிஞ்ச கதை தானே! அதனால ஜனங்க மைண்டு வாய்ஸ் இதான்!

கோல்கப்பா : முடிச்சு விட்ட போ! வா, நம்ம நெக்ஸ்ட் பார்ட்க்கு போலாம். Bye!

Diwali Gift Hamper – part 1

பூரி குமாரி: ஏங்க, நம்ம வாசகர்களுக்கு தீபாவளிக்கு என்ன ஸ்பெஷலா சொல்ல போறீங்க”?

கோல்கப்பா : “தீபாவளிக்கு நம்ம மக்கள், தலைவர்களுக்கு என்ன ப்ராண்டு பெஸ்டிவல் கிப்ட் ஹாம்பர குடுத்துருக்காங்கன்னு பாக்கலாமா?

பூரி குமாரி: எனக்கு ஒரு டவுட்டுங்க? பண்டிகையை “விடுமுறை தினம்”னு சொல்றவங்களுக்கு மக்கள் எப்படிங்க குடுப்பாங்க?

கோல்கப்பா : ஹ்ஹீஹீ, அவங்க விடியல்னு சொன்ன நாம நம்புறோம்ல. நம்ம பரிசுன்னு சொன்னா அவங்களும் நம்பிட்டு போகட்டுமே! விடு குமாரி!!

பூரி குமாரி: சரி, நம்ம தலீவருக்கு என்ன ப்ராண்டுங்க?

கோல்கப்பா : இப்போ இருக்குற இளைய தலைமுறை இவரை அப்பான்னு கூப்புடுறாங்களாம்ல! அதனால இந்த ப்ராண்டு ஸ்வீட்ட தந்திருக்காங்க!

பூரி குமாரி: அருமை! அருமை! அப்போ இளையவருக்கு என்ன பார்சல் குடுத்திருக்காங்க?

கோல்கப்பா : அரும்பாடு பட்டு, அவஸ்தை பட்டு பதவிக்கு வந்த புண்ணியவான்ல! அதுனால கிப்டுலையாவது ஆனந்தம் இருக்கட்டும்னு இதை தந்திருக்காங்க!

பூரி குமாரி : நெஜம்தான். சரி நம்ம தலீவரோட சிஸ்டருக்கு மக்கள் என்ன குடுத்தாங்க?

கோல்கப்பா : நீயே சொல்லு, மக்கள் ஏன் சிஸ்டருக்கு இதை ஏன் செலக்ட் பண்ணாங்கன்னு?

பூரி குமாரி : ஹா, கண்டுபுடிச்சிட்டேன். இவங்க இப்போ அண்ணனோட பல்ஸ நல்லா புரிஞ்சிக்கிட்டு பாஸாகிட்டாங்க. டெல்லிக்கும் தூத்துக்குடிக்கும் பறந்துகிட்டே இருக்காங்க! கரெக்ட்டா?

கோல்கப்பா : கலக்கிட்ட போ!

பூரி குமாரி: கரெக்ட்டுதான். மக்களே பரிசு தரும்போது செயல் வீரர் ஏதாவது தலீவருக்கு குடுத்திருப்பாரே?

கோல்கப்பா : அவர் குடுக்காமலா இருப்பாரு? இதை தான் குடுத்திருக்காரு!

பூரி குமாரி : இதென்னங்க, “பாருக்குள்ள”ன்னு ஒரு ப்ராண்டா?

கோல்கப்பா : அவரு துறை அதானே? வேறென்ன குடுப்பாரு?

பூரி குமாரி : செமையா இருக்குங்க ! அவருக்கு தலீவர் என்ன ரிட்டர்ன் கிப்ட் தந்தாரு?

கோல்கப்பா : இங்கே பாரு , நல்லா பாரு!

பூரி குமாரி : வாவ்! வாவ்! நம்ம தலீவர் செலக்க்ஷன் கலக்கலா இருக்குங்க !

மக்களே, அடுத்த பார்ட்ல இன்னும் சில ப்ராண்ட்ஸ் வரும்! படிச்சி என்ஜாய் பண்ணுங்க! Bye!

சிறப்பு குறுநாவல் – தாதிபத்ரியின் தங்கபுத்திரி – Part 11/11

Tamil story about a young family

அந்த வாரம் அமைதியாக கழிந்தது. ராஜு பெரும்பாலும் சுரத்தே இல்லாமல் இருந்தான்.

அவன் செய்த தவறு அவனுக்கே உறுத்தலாக இருந்தது. சுதாவை நேருக்கு நேராய் பார்ப்பதையே தவிர்த்தான்.

ஒரு நாள் அவன் ஆபிசிலிருந்து வந்ததும் மணி சார் போன் வந்தது. அவரின் இருபதாவது கல்யாண நாளுக்கான அழைப்பு.

வரதாவும் மணி சாரும் ராஜுவிடம் பேசி விட்டு, சுதாவிடமும் பேசி அழைப்பு விடுத்தார்கள்.

தாதிபத்ரியில் இருக்கும் புக்கா ராமலிங்கேசுவர ஸ்வாமி கோவிலில் வரும் வெள்ளியன்று காலை ஒன்பது மணிக்கு சிறப்பு பூஜை என வரதா விவரம் சொன்னார்.

அவள் சுருக்கமாக நடந்த விஷயங்களை வரதாவிடம் சொன்னாள்.

“சுதா, இது இயல்பானது. குறிப்பாக அப்பாக்களுக்கு இருக்கும் ஒரு குணம். அவர்களால் அவ்வளவு எளிதாக தங்கள் குழந்தையின் நிலையை ஜீரணம் செய்ய முடியாது. அவர்களுக்கும் பாசம் இருக்கும். ஆனால் அதை மீறி ஒரு கையாலாகாத உணர்வு அவர்களுக்கு மேலோங்கி இருக்கும். அது அவர்களை சில சமயம் ஒதுங்கி போகும் முடிவை எடுக்க வைக்கும். அதனால் நீ இதை கவனமாக கையாண்டது சரிதான்” என சொன்னார் வரதா.

“நா அவர்கிட்ட சில சமயங்கள்ல கடுமையா பேச வேண்டியிருந்தது வரதா. இப்போ அமைதியா அவர் கெளம்பி போறத வேடிக்கை பார்த்துட்டு, அப்புறம் தனியா பவாவை கவனிக்குறேன்னு சுய பச்சாதாபத்துல இருக்குறது சரியில்லேன்னு தோணுச்சு. நீங்க, ஆண்ட்ரியா எல்லாரும் கஷ்டமான நேரத்துல எனக்கு துணையா இருந்தீங்க. மணி சார் அவர்கிட்டயும் பேசி இருக்கார். ரொம்ப தேங்க்ஸ் வரதா. நாங்க நிச்சயமாக பூஜைக்கு வருகிறோம்” என சொல்லி போனை வைத்தாள் சுதா.

ராமலிங்கேசுவர ஸ்வாமி சுதாவுக்கு மிகவும் பிடித்தமான கோவில். சுயம்பு வடிவாக சிவ பெருமான் பெண்ணா நதி கரையில் அருள் பாலிக்கும் திருத்தலம். விஜயநகர பேரரசர் காலத்து பழமையான கோவில்.

வெள்ளிகிழமையன்று காலை கோவிலுக்கு போய் பூஜையில் கலந்துகொண்டு பிறகு மண்டபத்தில் உட்கார்ந்தார்கள். பவா தூண்களை பிடித்துக் கொண்டு மெதுவாக நடந்து கொண்டிருந்தாள். விஷ்ணு சன்னதியின் முன்னால் இருந்த தூண்களை ஒரு பக்தர் தட்டி விட மெதுவான ஓசை கேட்டது. பவாவுக்கும் அது கேட்டிருக்க வேண்டும். சிரித்தபடியே கண்ணில் மின்னல் தெறிக்க திரும்பி பார்த்தது. அவர் மெதுவாய் ஒவ்வொரு தூணாய் தட்ட அதன் பார்வையில் சந்தோஷம் தெரிந்தது.

ராஜுவுக்கு கண்களில் நீர் பெருக்கெடுக்க ஓடி போய் பவாவை அள்ளிக் கொண்டான். சுதாவுக்கு கண்ணீர் கட்டு படுத்தமுடியவில்லை.

வரதா வந்து அந்த தூண்களின் சிறப்பம்சங்களை  விளக்கினார். இயரிங் எயிட் உதவியுடன் இருந்தாலும் அந்த மெல்லிய நுட்பமான ஓசையை அவளால் கேட்க இயன்றது சுதாவுக்கு பெரும் நம்பிக்கையை கொடுத்தது.

ஒரு மணி நேரம் பொறுமையாக கோவிலை சுற்றி பார்த்துவிட்டு மீண்டும் கல் மண்டபத்தில் போய் உட்கார்ந்தார்கள்.

“சுதா, எனக்கு மனசு தெளிஞ்சுடுச்சி, சாரி, நா உன்ன ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன்” என மெதுவாய் சொன்னான் ராஜு.

“நீ தெளிவா இருந்தா எனக்கு அது போதும் ராஜு ” என ஆறுதலாய் சொன்னாள் சுதா.

“இந்த கோவில் தான் சுதா எனக்கு புத்திய குடுத்திருக்கு. இந்த கோபுரத்தை பாத்தியா? பாதிலேயே நிக்குது. சர்வ வல்லமை படைச்ச சாமியே பூர்த்தியாகாத ஒரு கோவில்ல இருக்கார். வர்ற ஜனங்க அதுல இருக்க சிற்ப வேலைகளை தான் ரசிக்குறாங்களே தவிர, அது முழுமையடையலேன்னு  யாரும் அதை குறையா சொல்லல.

சாமிக்கு இல்லாத சக்தியான்னு யோசிச்சு பார்த்தேன். அவர் நினைச்சார்னா இந்த கோவிலை பூர்த்தி செய்து இருக்கலாம். ஆனா அது ஏன் அவர் செய்யலேன்னு யோசிச்சேன். எனக்கு பதில் பிடிபடலை.

ஆனா நம்ம வாழ்கையை பத்தி எனக்கு தெளிவு கிடைச்சிருக்கு. நம்ம பவாகிட்ட இருக்க குறைய நா ரொம்ப பெரிய விஷயமா மனசுல போட்டு குழப்பிக்கிட்டு உங்களை விட்டு பிரியுற முடிவுக்கே வந்துட்டேன். ஆனா நீ இந்த குடும்பத்துல இருக்க அழகை பாத்ததால என்னை சகிச்சுகிட்டு வாழுற. ரொம்ப சாரி சுதா, என்னை நெனச்சா எனக்கே வெக்கமா இருக்கு” என்றான் ராஜு.

சுதாவுக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. “சாரி ராஜு, நானும் உன் விஷயத்துல கடுமையா நடந்துக்கிட்டேன். இன்ஸ்டால போஸ்ட் பண்ணது கூட நீ சொல்லாம முடிவெடுத்ததால தான். மற்றபடி உன்ன விட்டு கொடுக்கணும்னு இல்ல. ஜெபாக்கு விஷயம் தெரிஞ்சுது ஆண்ட்ரியா மூலமாக. மணி சார் கிடையாது. ஆண்ட்ரியா உன்னோட சிச்சுவேஷன, நீ என்ன மைண்ட்செட்ல இருக்கேன்னு ஜெபாக்கு தெளிவா சொல்லி இருக்கா. அவர் அன்னிக்கு உன்கிட்ட பேசினது கூட நீ உணரணும்னு தானே தவிர, உன்னை காயப்படுத்த இல்லை” என்றாள் சுதா.

“நீ எனக்கு பெரிய உபகாரம் பண்ணி இருக்கே சுதா” என சொல்லி பவாவை இறுக அணைத்துக் கொண்டான்

மகிழ்ச்சியில் தாதிபத்ரியின் தங்க புத்ரியாக ஜொலித்தாள் சுதா!

சிறப்பு குறுநாவல் – தாதிபத்ரியின் தங்கபுத்திரி – Part 10/11

A mother thinking about her child's future

சுதாவுக்கு அன்று அதிகாலையிலேயே தூக்கம் கலைந்தது. நேரம் ஐந்து பதினைந்து.

பல் துலக்கி, குளித்து காபி போட்டு குடித்து முடித்தாள். பவாவுக்கு பால் பாட்டில் ரெடி செய்து குடிக்க கொடுத்தாள். 

பவா பால் குடித்து விட்டு தூக்கத்தை தொடர ராஜூவை எழுப்பினாள்.

“ராஜு, காபி போட்டு வச்சிருக்கேன். பவா பால் குடிச்சுட்டா. நா கோவிலுக்கு போயிட்டு வரேன்” என சொல்லிவிட்டு கிளம்பினாள்.

பத்து நிமிடத்தில் ரெடியாகி கோவிலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

கோவில் கூட்டமில்லாமல் காலியாக இருந்தது.

நின்று நிதானமாக சாமி கும்பிட்டு விட்டு வழியே வந்து கல் மண்டபத்தில் உட்கார்ந்தாள்.

இன்றைய பொழுது நல்ல படியாக இருக்க வேண்டும், கடவுளே எனக்கு தெளிவான புத்தியை கொடு என பிரார்த்தனை செய்தாள்.

அம்மாவிடம் பேச விடும் போல தோன்றியது. ஏழு மணி. இந்நேரம் எழுந்திருப்பார்கள், போன் போடலாம் என தோன்றியது.

போன் போட்டு தன் மனதில் உள்ளதை முழுவதுமாய் சொல்லி முடித்தாள்.

“சுதா, நீ எடுத்த முடிவு நல்லது தான். ஆனா, அதை உன் மனசு காயப்பட்டு இருக்கும் போதே செயல்

படுத்தணும்னு நினைக்காதே” என்றாள் அம்மா.

“அதான்மா என் பிரச்சினை. எனக்கு ராஜுவோட நெலமை நல்லா புரியுது. ஆனா அதே சமயம் அவன் செஞ்ச செயல் என்னை ரொம்ப ஹர்ட் பண்ணியிருக்கு. நா எப்படி இத டீல் பண்றதுன்னு எனக்கு தெரியலைம்மா” என சொன்னாள்.

அம்மா சற்று நேரம் அமைதியாக இருந்தாள்.

பிறகு “சுதா, இதுக்கு என்னால உனக்கு நேரடியான பதிலை சொல்ல முடியாது. ஆனா மகாகவி பாரதியாரோட ஒரு பாடல் உனக்கு தேவையான பதிலை குடுக்கும்னு நினைக்குறேன். மனமென்னும் பெண்ணே அப்படீன்னு ஒரு பாடல் இருக்கு. படிச்சி பாரு. அதுல நீ தேடிக்கிட்டிருக்குற கேள்விக்கு விடை இருக்கும்” என சொல்லி போனை வைத்தாள்.

சுதா அந்த பாடலை போனில் தேடி எடுத்து படித்தாள்.

A Bharathiyar poem about mind and soul.

முழு பாடலையும் திரும்ப திரும்ப படித்து உள் வாங்கிக் கொண்டாள்.

புத்தி வேறு, மனம் வேறு என்று சொல்வார்கள். புத்தியின் சொல்படி கேட்டு மனம் இயங்க வேண்டும்.

ஆனால், பல சமயம் புற சூழ்நிலையின் தூண்டல்களால் மனம் அலைபாயும். அத்தகைய சமயங்களில் புத்தியானது மனத்திற்கு ஒரு நல்ல ஆசானாக இருந்து அறிவுரை சொல்லவேண்டியது அவசியம்.

அடுத்த இரண்டு நாட்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அந்த பாடலை படித்து, அதன் அர்த்தத்தை முழுதாக புரிந்து கொள்ள முயற்சி செய்தாள். மூன்றாம் நாள் மனம் தெளிவாய் ஆனது.

சிறப்பு குறுநாவல் – தாதிபத்ரியின் தங்கபுத்திரி – Part 9/11

A child playing in the living room

நான்காம் நாள் காலை. இன்று பவா தெளிவாக இருந்தது. கனகம்மாவும் வரதாவும் வந்தவுடன் அவர்களிடம் தாவி ஓடியது. சுதா மதியம் பில் செட்டில் செய்து விட்டு, எல்லா பொருட்களையும் பேக் செய்ய ஆரம்பித்தாள்.

வீட்டிலிருந்து வந்த முதல் நாள் இந்த ஆஸ்பிடல் அவளுக்கு அந்நியமாய் இருந்தது. இன்று வீடு அந்நியமாய் இருக்கிறது. அன்பு, ஆதரவு, புரிதல், நட்பு என எல்லாம் எங்கே கிடைகிறதோ அங்கே மனம் நிம்மதியாய் இருப்பதை புரிந்து கொண்டாள்.

கனகம்மா சாப்பாடு கொண்டு வந்தார். “நீங்க சாப்டீங்களா?” என கேட்டாள் சுதா.

அவர் ஆம் என சொல்ல, “இன்னைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க. ரொம்ப தேங்க்ஸ், நீங்க இல்லேன்னா நா ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பேன்” என சொல்லி கொஞ்சம் காசு கொடுத்தாள்.

“இருக்கட்டும்மா, என் புள்ளைக்கு செய்ததா தான் நா நெனக்கிறேன். சாரு கொஞ்சம் டென்ஷன்காரரா இருக்காரு. இந்த புள்ளைய நீங்க நல்லா பாத்துக்குவீங்க. ஆனா உங்களையும் நீங்க கொஞ்சம் பாத்துக்குங்க.

வீட்ல ஏதாவது வேலையிருந்தா சொல்லுங்க, ஷிப்ட் முடிச்சிட்டு வந்து செய்யுறேன்” என சொல்லி விடை பெற்று சென்றார்.

சாப்பிட்டு முடிக்கும் போது டிஸ்சார்ஜ் சம்மரி ரெடி என போன் வந்தது. எல்லா பேப்பர்களையும் சரிபார்த்து, வரதாவுக்கு சொல்லிவிட்டு, பவாவை தூக்கிக் கொண்டு ஆட்டோவில் வீடு திரும்பினாள்.

வீட்டுக்கு வந்ததும் பவா அவள் பொம்மைகளை தேடி ஓடினாள். எல்லாவற்றையும் எடுத்து தரையில் போட்டு விளையாட ஆரம்பித்தது.

இன்று இரவு உணவுக்கு அவளுக்கு பிடித்த இடியாப்பம் செய்யலாம், கூடவே குருமாவும் கொஞ்சம் செய்தால் எல்லாருக்கும் சரியாக இருக்கும் என வேலையை ஆரம்பித்தாள். வாஷிங் மெஷின் போட்டு, மறு பக்கம் இட்லி மாவு அரைத்து, எல்லா வேலைகளையும் முடிக்க ஏழு மணி ஆனது.

டோர் பெல் அடித்தது. சுதா போய் கதவை திறந்தவுடன் “நான் தான் சாயந்திரம் வர்றேன்னு சொன்னேனே? அதுக்குள்ள எதுக்கு டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்கு வந்த சுதா?” என கோவமாக கேட்டான் ராஜு.

சுதா பதில் சொல்வதற்குள் ராஜுவுக்கு ஜெபாவின் போன் வந்தது.

ஜெபா எதற்கு அழைத்திருப்பார் என சுதாவுக்கு தெரியும்.

ஆஸ்பிடலில் ராஜு பவாவை தூக்கி தோளில் சாய்த்து தூங்க வைத்த  போட்டோவை  எடுத்து தன் இன்ஸ்டா அக்கவுண்டில் “அன்பு அப்பா” என கேப்ஷனை போட்டு ஆண்ட்ரியாவை டேக் செய்தது தான் சுதா செய்த வேலை.

மிச்சத்தை ஆண்ட்ரியா பார்த்துக் கொண்டாள்.

ஜெபாவுக்கு அடுத்த இரண்டு மணி நேரத்தில் விஷயம் தெரிய போன் போட்டு நேரடியாக பேசி விட்டார்.

ராஜு குமாரு சோபாவில் தலையை கவுந்த மொமெண்ட்டின் காரணம் இது தான்.

அவனை ஜெபா குருமா வைக்க, அந்த அவமானத்தில் வெந்து கொண்டிருக்கிறான்.

மணி சார் சொல்லி இருக்கலாம் ஜெபாவிடம் என நினைத்துக் கொண்டான் ராஜு.

தான் அநாவசியமாக சொன்ன ஒரு பொய்யாலும், தன்னுடைய முட்டாள்தனத்தாலும் சிட்னி கனவு இடியாப்ப சிக்கலாக மாறியிருப்பதை அவனால் ஏற்று கொள்ள முடியவில்லை.

பவாவுக்கு சாப்பாடு கொடுத்து விட்டு தூங்க வைத்துவிட்டு சுதா ஹாலுக்கு வந்தாள்.

ஜன்னலை முழுதாக திறந்து வைத்து விட்டு  டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தாள். வழக்கத்தை விட அன்று அவள் செய்த இடியாப்பம் குருமா அருமையாக இருந்தது.

மெதுவாக ரசித்து சாப்பிட்டவள் தட்டை கழுவி வைத்து விட்டு பார்மஸிக்கு போன் போட்டாள்.

“சைஸ் 312 பேட்டரி வேணும்?ஸ்டாக் இருக்குங்களா?” என கேட்டாள்.

“மேடம், நா புதுசா வேலைக்கு வந்திருக்கேன். சார் கடைல இல்ல, சாப்பிட போயிருக்கார். நீங்க என்ன ப்ராண்டுனு போட்டோ அனுப்புனீங்கனா, நா இருக்கானு பாக்குறேன்” என்றான் கடை பையன்.

“அது நார்மல் பேட்டரி கிடையாதுப்பா, கொழந்தைங்களோட இயரிங் எயிடுக்கு போடுற பேட்டரி. நா ரெகுலரா உங்க கடைல தான் வாங்குவேன். பேட்டரி போட்டோவும் அட்ரசும் அனுப்புறேன். ஸ்டாக் இருந்தா நாளைக்கு காலைல அனுப்புங்க” என சொல்லி போனை வைத்தாள்.

ராஜு இன்னும் சோபாவில் இருந்து அசையவில்லை. அவன் செய்த குற்றத்திற்கான தண்டனையை குறைவில்லாமல் அனுபத்து கொண்டிருக்கிறான்.

கடை பையனுக்கு பேட்டரி போட்டோ அனுப்ப, வெறும் 312 என டைப் செய்து கூகிளில் தேடினாள். முதல் பக்கத்திலேயே சுருக்கென ஒரு விஷயம் கிடைத்தது சுதாவுக்கு.

Indian Penal Code 312 – Causing miscarriage.

முதல் வேலையாக பேட்டரி போட்டோவை அனுப்பிவிட்டு, மீண்டும் IPC 312ஐ படித்து பார்த்தாள்.

சட்டவிரோத கருக்கலைப்பு தடுப்பு சட்டம் அது.

அவள் மனம் ஒரு நிமிடம்  நிதானிக்க சொன்னது.

மீண்டும் மீண்டும் படித்து பார்த்தாள்.

இந்த பூமிக்கு வராத ஒரு ஜீவனின் வாழும் உரிமையை நிலை நாட்டும் சட்டம் அது.

மருத்துவ ரீதியாக அந்த கருவுக்கோ அல்லது தாயின் உயிருக்கோ, ஏதோ ஒரு ஆபத்தான சூழ்நிலை என்றால் மட்டுமே சட்டம் கருகலைப்பை அனுமதிக்கும்.

சுதாவுக்கு இந்த விஷயத்தை உள் வாங்க சற்று நேரம் எடுத்தது.

அரை மணி நேரம் டைனிங் டேபிளில் உட்கார்ந்து யோசித்ததில் அவளுக்கு சில புரிதல்கள் ஏற்பட்டது.

பவா செவி திறன் குறைபாட்டோடு பிறந்தது அவள் குற்றமில்லை. பெற்றோர்களாக தங்கள் குற்றமும் இல்லை.

இயற்கையாகவே அந்த குழந்தைக்கு அது நிகழ்ந்திருக்கிறது.

அவளை நல்லபடியாக வளர்த்து ஆளாக்கி, சிறப்பான முறையில் ஒரு வாழ்க்கையை அமைத்து தரும் பெரும் பொறுப்பு தங்கள் இருவருக்குமே சரிசமமாக இருக்கிறது. ஆனால் ராஜுவுக்கு நிஜத்தை எதிர் கொள்ளும் தைரியமும், மன உறுதியும் இல்லாததே இவ்வளவு குழப்பங்களுக்கும் காரணம் என அவளுக்கு தோன்றியது.

பொறுமை, திடமான மனம், உணர்வு முதிர்ச்சி என எதுவுமே இல்லாமல் ராஜு இருப்பது தான் இங்கு பிரச்சினை.

பவா மீது அவனுக்கு பாசம் இருந்தாலும், ஒரு இயல்பான வாழ்க்கை தனக்கு அமையாமல் போனது அவனுக்கு மிகுந்த மன உளைச்சலை தந்திருக்கிறது.

சுதாவின் மன போராட்டத்திற்கு அவ்வப்போது ஆறுதல் செல்பவன், அவன் மனதை பக்குவபடுத்தாமல் விலகி ஓடும் முடிவை எடுத்திருக்கிறான்.

எல்லா பொறுப்பையும் சுதாவிடம் விட்டு விட்டு, வெளிநாட்டில் வேலைக்கு போய் சேர்ந்து விட்டால், தன் தினசரி வேதனையிலிருந்து மீளலாம் என அவன் மனம் ஆழமாக நம்புவது சுதாவுக்கு நியாயமாக படவில்லை.

இந்த பூமிக்கு வராத ஒரு ஜீவனுக்கு நல்ல சட்ட பாதுகாப்பு இருக்கிறது.

ஆனால் பவாவுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது என்ற கேள்வி அவளுக்குள் எழுந்தது.

அதனால் இருவரும் ஒற்றுமையாக இருந்து, பவாவுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்து தருவதே, ஒரு பெற்றோராக தங்களின் முதல் கடமையாக இருக்க வேண்டும் என கருதினாள்.

இந்த இடத்தில் சுதா சற்று தீர்க்கமாக சில முடிவுகளை எடுத்தாள்.

இங்கு குறைபாட்டோடு இருப்பது பவா இல்லை, ராஜு தான். இவ்வளுவு வயதான பிறகும், சூழ்நிலையை எதிர் கொள்ள இயலாமல் ஓடி ஒளியும் மனப்பான்மையோடு இருப்பது அவன் தவறு. அதை அனுமதிப்பது அதை விட தான் செய்யும் பெரும் தவறு என உணர்ந்தாள்.

ராஜுவுக்கு புரிய வைக்க ஆயிரம் வழி இருக்கிறது.

இருவரும் நல்ல மன நல ஆலோசகரை சந்திக்கலாம். மன வள வாழ்க்கை முறைகளை கையாண்டு அவ்வப்போது ஏற்படும் மன உளைச்சல்களிலிருந்து மீண்டு வரலாம்.

ஆனால் எந்த முயற்சியும் செய்யாமல், அவரவர் வழியில் அவரவர் போவது பவாவுக்கு தாங்கள் நிகழ்த்தும் துரோகம் என முடிவுக்கு வந்தாள்.

கடந்த சில நாட்களாக நடந்த நிகழ்வுகள் அவள் மனதை ரணமாக்கியிருக்கிறது.

தன் காயத்தையும் ஆற விட்டு, எதிராளியையும் அரவணைத்து போக வேண்டிய மனநிலை அவளுக்கு சவாலாக இருந்தது. 

எப்படி இந்த பிரச்சனையை கையாள வேண்டும் என்ற தெளிவு இல்லெயென்றாலும், எப்படி இதை கையாளக்கூடாது என்ற தெளிவோடு தூங்க போனாள்.

சிறப்பு குறுநாவல் – தாதிபத்ரியின் தங்கபுத்திரி – Part 8/11

A deep conversation between friends

மூன்றாம் நாள். பவாவுக்கு ஜுரம் விட்ட பிறகு உணவு வயற்றில் தங்க ஆரம்பித்தது.

பசி இல்லாததாலும் மருந்து குடிப்பதாலும் தொடர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.

மதியத்திற்கு மேல் டாக்டர் வந்து பார்த்து விட்டு, மறுநாள் வீட்டுக்கு போகலாம் என சொல்லிவிட்டு போனார்.

ராஜு சாயந்திரமே வந்து விட்டான். எந்த உரையாடலும் இல்லாமல், அந்த அறை இரவு வரை நிசப்தமாக இருந்தது.

“நாளைக்கு ஈவ்னிங் நாலு மணிக்கு டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க. நா வந்து பில் செட்டில் பண்ணிட்டு கூட்டிட்டு போறேன்” என்றான் ராஜு.

“நேத்து வரை ஆன செலவுக்கு நான் பணம் கட்டிட்டேன்” என நிறுத்தினாள் சுதா.

“ஏன் சுதா இப்படி பண்ற?” என கேட்க வாயெடுத்து நிறுத்திக் கொண்டான்.

இரவு ராஜு கிளம்பிய பிறகு டியூட்டி பிரேக்கில் வரதா வந்தார். பின்னாடியே கனகம்மா உள்ளே வந்து பிளாஸ்கில் கொண்டு வந்த மசாலா பாலை ரெண்டு கப்பில் ஊற்றி கொடுத்து விட்டு கிளம்பினார்.

வரதாவும் சுதாவும் பால்கனியில் போய் நின்று கொண்டார்கள்.

“ராஜு சிட்னி போறாருன்னு அவரு சொன்னாரு சுதா” என ஆரம்பித்தார் வரதா.

நீண்ட ஒரு பெருமூச்சு மட்டும் பதிலாக வந்தது அவளிடமிருந்து.

“வரதா, நேத்து வரை இருந்த வாழ்க்கை வேற, இன்னைக்கு இருக்குற வாழ்க்கை வேற. இது மட்டும் தான் எனக்கு இப்போதைக்கு புரியுது. இனிமே வர போற நாட்களை நா இன்னும் யோசிக்க ஆரம்பிக்கலை!” என சொன்னாள் சுதா.

“ராஜுவோட அப்பா அம்மா என்ன சொல்றாங்க?” என்றார் வரதா.

“இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்காதே, கொஞ்ச நாள் போகட்டும், அப்படீன்னு சொல்றாங்க” என்றாள் சுதா.

“இக்கட்டுல இருக்குற எல்லா பெண்களும் இந்த வாக்கியத்தை அவங்க மூழ்க ஆரம்பிக்கும் போதே கேட்டிருப்பாங்க சுதா. அவங்க சொல்ற மாதிரி அது கொஞ்ச நாள் கிடையாது! ஆயுசு முழுக்க!

பாதிக்கப்பட்ட பெண்கள் என்றைக்குமே எந்த முடிவும் சுயமா எடுக்காம இருக்குறதுக்கு காரணம், குடும்பத்துல இருக்குறவங்க சொல்ற இந்த ஒரு லைன் தான்” என்றார் வரதா.

அடுத்த ஒரு மணி நேரம் நடந்த அவர்களின் உரையாடலை, கண் கொட்டாமல் கவனித்து கொண்டிருந்தது பாக்டரி புகைபோக்கி.

தனக்கு ஈடாக அங்கிருந்தும் கக்கப்படும் உணர்வுகளில், அவர்கள் சந்தித்த துரோகங்களும் அவமானங்களும் அதிகம் இருந்ததாக அது கருதியது.

உள்ளேயே வைத்திருந்து மூச்சு முட்டும் சூழ்நிலைக்கு ஆளாகாமல், மனது விட்டு அவர்கள் பேசுவது அதற்கு நல்ல விஷயமாக பட்டது.

சுதா இந்த ஊருக்கு வந்ததில் இருந்து இந்த பெண்ணா நதியை போல் தான் வாழ்ந்து கொண்டிருப்பதாக புகைபோக்கிக்கு தோன்றியது.

நதியின் பாதையில் அணை கட்டப்பட்டதால், அது வருஷத்துல பெரும்பாலான நாள் வறண்டு, தரை வெடித்து, பாளமான பூமியாகவே இருக்கும். மழை காலத்துல மட்டும் வெள்ளம் கரைபுரண்டு ஓடும். அதே மாதிரி தான் இவள் வாழ்க்கையும். ராஜுவோட அனுசரணை இல்லாமல்தான் பெரும்பாலான நாட்களை கழித்திருக்கிறாள். எப்போதாவது அவளுக்கு கிடைக்கும் கொஞ்சம் அன்புதான், இவளை இவ்வளவு நாள் இந்த உறவில் நீடிக்க வைத்திருக்கிறது” என நினைத்துக் கொண்டது பாக்டரி புகைபோக்கி.

அதே கருத்தை அது வரதாவுக்கும் கடத்தியது.

“சுதா, இந்த பெண்ணா நதி நந்தி மலைத்தொடரில் உருவாகிறது. உத்திர பினாகினினும் இதை கூப்பிடுவாங்க. அதே நந்தி மலைல தான் தக்ஷிண பினாகினி நதியும் தொடங்குது. ஒன்று வடகிழக்கு திசையிலும், மற்றொன்று தென்கிழக்கு திசையிலும் பயணிக்கும். ஆனால் அவை இரண்டும் ஒரே இடத்தில் பிறந்து, பிறகு வெவ்வேறு திசைகளில் பயணித்தாலும், கடைசியில் வங்காள விரிகுடாவில் தான் கலக்கும். ராஜுவின் இந்த முடிவை நான் அப்படித்தான் பார்க்கிறேன். உங்கள் வாழ்க்கை தற்போது வெவ்வேறு திசையில் பயணிக்கும் சூழ்நிலை வந்தாலும், கடைசியில் குடும்பம் என்ற புள்ளியில் தான் வந்து ஒன்று சேரும்” என நம்பிக்கை கொடுத்தார் வரதா.

“நீண்ட நாட்களாக வாழ்க்கை எனக்கு கரடு முரடாகத்தான் இருக்கிறது வரதா. வாழ்நாள் நெடுக தனியாக எல்லா சூழலிலும் சிக்கி, நானே என்னை மீட்டு கொண்ட பிறகு, கடைசி காலத்தில் ஒன்று சேர்ந்து என்ன பயன்?” என வேதனையாக கேட்டாள் சுதா.

“சுதா, எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த உன்னை, இறைவன் பெண்ணா நதி ஓடும் தாதிபத்ரிக்கு ஏதோ ஒரு காரணமாக தான் அழைத்திருக்கிறார். கடவுளும் காலமும் தான் உனக்கு துணை” என ஆறுதல் சொல்லி கிளம்பினார் வரதா.

சிறப்பு குறுநாவல் – தாதிபத்ரியின் தங்கபுத்திரி – Part 7/11

A woman on the river bank

காரிடார் ஓரத்தில் நின்று கனகம்மா வரதாவிடம் பேசிக் கொண்டிருந்தார்.

சுதா படிக்கட்டில் இறங்கி வெளியே வந்து, ஆஸ்பிடலை ஒட்டிய நடை பாதையில் நடக்க ஆரம்பித்தாள். அது பெண்ணா நதியின் கரையோரம் இரண்டு மைல் தூரம் போகும்.

ஏன் ஜெபா வருவதை ராஜு சொல்லவில்லை? என்ற கேள்வி அவள் மண்டையை குடைந்தது.

ஆண்ட்ரியாவுக்கு போன் போட்டு விஷயத்தை சுருக்கமாக சொன்னாள்.

“நீ நெனைக்குறத தான் நானும் நினைக்குறேன்! விசாரிச்சுட்டு வரேன்” என சொல்லி போனை வைத்தாள்.

ஆண்ட்ரியா சுதாவின் காலேஜ்மேட். ரெண்டு பேரும் ஹாஸ்டலில் ஒரே ரூமில் தங்கி படித்தவர்கள். அவளுக்கு ப்ரெண்ட்ஸ் நெட்ஒர்க் அதிகம். அதே பீல்டில் நல்ல வேலையில் இருப்பதால், எல்லா இடங்களிலும் ஆள் வைத்திருப்பாள். கால் மணி நேரம் கழித்து மீண்டும் போன் செய்தாள்.

“ராஜு பங்கமா பொய் சொல்லியிருக்கான் சுதா. நா ஜெபா வீட்டு லேண்ட் லைனுக்கு கூப்பிட்டேன். ரெபேக்கா கிட்ட ஜெபா மொபைல் ஏன் ரீச் ஆகலேன்னு கேட்டேன். அதுக்கு அவ ஜெபா இந்தியா போயிருக்கார், தாதிபத்ரி பேக்டரிக்குனு சொன்னா” என்றாள்.

“அப்புறம்” என்றாள் சுதா.

“நா கேஷுவலா சொல்லிட்டேன். அங்க தான் எங்க ராஜு பாய் பேமிலியோட இருக்கான்னு. அவகிட்ட ஜெபா பேசி இருப்பார் போல. நா சொன்னதும், ஆமாம் ஆண்ட்ரியா, அவர் ராஜூவை ஆபீஸ்ல மீட் பண்ணிட்டார். அவர் பேமிலி ஊருக்கு போய் இருக்காங்க, அதனால பாக்க முடியலேன்னு சொன்னார்” என்றாள்.

எல்லாவற்றையும் உள்வாங்க சுதாவுக்கு ரெண்டு நிமிஷம் ஆனது.

“ஹே கேர்ள், இப்போதான் நீ ஸ்ட்ராங்கா இருக்கணும், இவ்ளோ கேனத்தனமா நடந்துக்குறான்” என பொரிந்து தள்ளினாள்.

“சரி ஆண்ட்ரியா, நா இப்போதைக்கு இதை பெருசா யோசிக்க வேணாம்னு நினைக்குறேன். பவா சரியாகி வீட்டுக்கு போற வரை என்னால அஞ்சு நிமிஷம் கூட ஒரு விஷயத்தை முழுசா யோசிக்க முடியல. வீட்டுக்கு போய் செட்டில் ஆன பிறகு திரும்ப பேசுறேன்” என போனை வைத்தாள்.

உன் வீடு என நினைப்பதும், சொல்வதும் இதுவே கடைசி முறையாக இருக்கட்டும் என புத்தி சொல்லியது.

சட்டென்று வந்த புத்தியின் குரல் சுதாவை புரட்டி போட்டது.

நடை பாதை ஒரம் ஒரு மரக்கட்டை இருக்க அதன் மேல் போய் உட்கார்ந்தாள்.

ராஜு எப்போதோ என்னை இந்த மரக்கட்டை போல நடத்த ஆரம்பித்திருக்கிறான். இவ்வளவு தூரம் முடிவெடுக்கும் போதும் சாதாரணமாக நடந்து கொள்ள எப்படி அவனால் முடிந்தது?

குடும்பம் ஒரு ஆலமரம் என பெரியவர்கள் சொன்னதும், ராஜு சர்வ சாதாரணமாக அதை வெட்டி வீழ்த்தி இயல்பாக இருப்பதும் சுதாவுக்கு ஆயாசமாக இருந்தது.

அன்று பெண்ணா நதிக்கரையில் அவள் கழித்த அந்த ஒரு மணி நேரம் அவளுக்கு வாழ்நாள் பாடங்களை புரிய வைத்தது.

பக்கத்தில் இருந்த சிறு சிறு கற்களைஅவள் நதி நீரில் போட்டு முடிக்க, அந்த இடம் காலியானது. கைக்கெட்டிய தூரம் வரை எந்த கல்லும் இல்லை.

ஆறு ஏன் எப்போதும் கற்களை மட்டுமே வாங்கி கொள்ள வேண்டும்? ஒரு மாறுதலுக்காக, பர்ஸிலிருந்த ராஜுவின் ATM கார்டு, ஹெல்த் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு அட்டைகளை போட்டு விட்டு ஆஸ்பிடலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

சுதா ரூமுக்கு வந்ததும் “எங்க போயிட்டு வர?” என இழுத்தான் ராஜு.

“ஊர்ல இருந்து இப்பதான் வரேன்!  என்று சுதா சொல்ல, தலை குனிந்தவாரே வீட்டுக்கு கிளம்பினான் ராஜு.

சிறப்பு குறுநாவல் – தாதிபத்ரியின் தங்கபுத்திரி – Part 6/11

A woman worried about her life

சாயந்திரம் கனகம்மா டீயும் பிஸ்கட்டும் கொண்டு வந்தார்.

“பாப்பாவ நா வச்சிக்குறேம்மா, பக்கத்துல பிள்ளையார் கோவில் இருக்கு. இன்னைக்கு விசேஷ பூஜை

பண்றாங்க. டீ குடிச்சிட்டு, நீ போய் சாமி கும்பிட்டுட்டு வாம்மா” என சொன்னார்.

சுதா உடை மாற்றிகொண்டு வரதாவிடம் போய் சொல்லி விட்டு கிளம்பினாள். கோவிலுக்கு போய் சாமி பார்த்து விட்டு மூன்று சுற்று சுற்றி விட்டு பிரகாரத்தில் போய் உட்கார்ந்தாள்.

பையிலிருந்து போனை எடுத்து பார்த்தால் ராஜுவின் மிஸ்ட் கால் இருந்தது. திரும்ப அழைத்தால் பதில் இல்லை.

சரி பிறகு போன் செய்வான் என கிளம்பி ரூமிற்க்கு சென்றாள்.

கனகம்மா பவாவை தூங்க வைத்திருந்தார். சுதா வந்ததும் அவர் கிளம்பி செல்ல, பவாவின் துணிகளை துவைக்க அவள் பாத்ரூமிற்குள் சென்றாள்.

பத்து நிமிடத்தில் துவைத்து முடித்து ரூம் பால்கனியில் காய போட போனாள்.

பின்னாலிருந்து “இங்க என்ன பண்ற குழந்தையை விட்டுட்டு, என்ன ஆகியிருக்கு பாரு?” என ராஜுவின் கத்தல் கேட்டது.

அதிர்ந்து அலறி சுதா உள்ளே போய் நின்றாள்.

ஆனால் அடுத்த நொடி அவள் கண்டகாட்சியில் நிலை தடுமாறி போனாள். குழந்தையின் காது பக்கம் லைன் போட்ட இடம் ஆப்பிள் சைசில் வீங்கி இருந்தது. முகமே பார்க்க படு பயங்கரமாக இருந்தது.

சுதாவிடம் பவாவை கொடுத்துவிட்டு வரதாவை கூப்பிட ஓடினான் ராஜு.

இவன் எப்போது வந்தான்? பவாவுக்கு திடீரென என்ன ஆயிற்று? என எதுவும் புரியாமல் திகைத்து நின்றாள் சுதா.

சற்று நேரத்தில் ஐஸ் பாக்கோடு வரதா வந்து தெளிவு படுத்தினார்.

லைனை நிறுத்தி விட்டு, ஒத்தடம் வைத்தார். “ஐவி போட்ட நீடில் விலகி இருக்கு, ரெண்டு மணி நேரத்தில் நார்மலாகி விடும்” என  சமாதானம் சொன்னார்.

“இவளை ஒழுங்கா பாக்குறத தவிர உனக்கு என்ன வேலை?” என எகிற ஆரம்பித்தான்.

“சார், இது சகஜம் தான் சார். கொஞ்ச நேரத்துல சரியாகிடும்” என்றார் வரதா.

சுதா ஏதோ சொல்ல வர, அதை கொஞ்சமும் கேட்காமல் அடுத்த ஐந்து நிமிடம் திட்டி தீர்த்தான்.

சத்தம் கேட்டு கனகம்மா ஓடி வந்தார். நிலைமையை புரிந்து கொண்டவர் “ஏம்பா, அந்த பொண்ணு இங்க வந்ததிலிருந்து ஒரு வேளை சோறு ஒழுங்கா சாப்பிடலை. கை மாத்த கூட ஆளில்லாம அல்லாடிகிட்டு இருக்கு, நீ என்ன சத்தம் போடுற? அதான் நர்ஸம்மா சொல்றாங்கள்ல இது சகஜம்னு. அப்படி அக்கறை இருக்க ஆள் இங்கயே இருந்து பாக்க வேண்டியதுதானே?” என பொரிந்து தள்ளினார்.

ராஜு அப்படியே அடங்கி போனான். சுதாவுக்கு அவமானமும் துக்கமும் போட்டி போட்டுக் கொண்டு ஏறியது.

டேபிள் மேல் இருந்த ஸ்வீட் பாக்ஸ் கண்ணில் பட்டது.

இது ஏன் இப்போது? என கேள்வி எழுந்தது. என்ன காரணமாய் இருந்தாலும் எதையும் கேட்க சுதாவுக்கு விருப்பமில்லை.

வீக்கம் சற்று குறைய வரதாவும் கனகம்மாவும் அங்கேயிருந்து கிளம்பினார்கள்.

“சாரி” என்றான் ராஜூ.

பவாவின் மீதிருந்து அவள் கண்ணை எடுக்கவில்லை.

ஸ்வீட் பாக்ஸை நீட்டியபடியே “எனக்கு சிட்னில வேலை கிடைச்சிருக்கு” என்றான்.

“எனக்கு சிட்னில வேலை கிடைச்சிருக்கு, நாம அங்க போய் செட்டிலாக போறோம்னு சொல்ல உன்ன எது தடுக்குது?” என சுருக்கென கேட்டாள் சுதா.

பவாவின் மண்டை வீக்கத்திற்கு ஆடித் தீர்த்தவனின் மண்டை கணம் அந்த நேரம் அம்பலப்பட்டது.

விஷயத்தை சொல்லிய பிறகு, அதை லாவகமாக மடை மாற்ற, ராஜு சேர்த்து வைத்திருந்த மொத்த அலங்கார வார்த்தைகளுக்கும், சுதாவின் முதல் கேள்வியே மலர் வளையம் வைத்து விட்டது.

“நா மாசத்துல இருபது நாள் ட்ராவல் பண்ணுவேன் சுதா, நீங்க ரெண்டு பெரும் தெரியாத ஊர்ல எப்படி தனியா இருப்பீங்க? நீங்க தாம்பரத்துல இருங்க, நா வந்து வந்து பாத்துட்டு போறேன்” என பல நாட்கள் மனப்பாடம் செய்ததை ஒப்பித்தான்.

“சிட்னி என்ன தாம்பரத்துக்கு பக்கத்துல இருக்க கூடுவாஞ்சேரியா? நீ வந்து வந்து பாத்துட்டு போக? இத தான் ப்ளாண்ட்ல உட்காந்து ப்ளான்ட் பண்ணிட்டிருந்தியா?” என கேட்டாள் சுதா.

ராஜு போய் ஜன்னலருகே நின்று கொண்டான். அவனை ஜன்னலருகே பார்த்த நதி முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு நகர்ந்து சென்றது.

“ஏன் ஜெபா வந்ததை சொல்லலை?” என கேட்டாள் சுதா.

“அது வந்து, அது உனக்கு எப்படி தெரியும்?” என அதிர்ந்து போய் கேட்டான்.

“அவரு இந்த டீம்ல இருக்குறதையே ஏன் என்கிட்ட சொல்லலை?” என அழுத்தமாக கேட்டாள்.

“சுதா, அத விடு, நா ரொம்ப நாளா ட்ரை பண்ண ஜாப் எனக்கு கிடைச்சிருக்கு” என ஆரம்பித்தான்.

“இது ஜெபா ரெபரென்ஸ்ல உனக்கு கிடைச்சிருக்கு, கரெக்டா?. நீ இந்தியாலேர்ந்து கிளம்ப முடிவு பண்ணிட்டேன்னு எனக்கு தெரியும். ஆனா ஜெபா இங்க வர போறதை சொல்லாததும், கைல ஆபர் லெட்டர் வர வரை நீ அத பத்தி பேசாததும், நீ வாழுற டிராமா லைஃப்ல ஒரு ஓட்டைனு உனக்கு தெரியலையா ராஜு? என கேட்டாள் சுதா.

ராஜுவிடம் மௌனம் மட்டுமே பதிலாக இருந்து.

சுதா பவாவின் விரல்களை பிடிக்க, எங்கிருந்து வந்தது என தெரியாமால் அழுகை பொத்துக் கொண்டு வந்தது.

இரவு சாப்பாட்டை கொண்டு வந்த கனகம்மா, சூழ்நிலை சரியில்லை என புரிந்து கொண்டு உடனே கிளம்பி விட்டார்.

சற்று நிறத்தில் பவா தூங்கி விட, அவளை படுக்கையில் கிடத்தி விட்டு, செருப்பை மாட்டி கொண்டு ரூமை விட்டு கிளம்பினாள் சுதா.

“எங்க போற சுதா?” என்றான் ராஜு மெதுவாக.

“நா கேட்ட கேள்விக்கெல்லாம் பதிலை யோசிச்சு வை. வந்து சொல்றேன் எங்க போனேன்னு!” என்றபடி கிளம்பினாள் சுதா.

சிறப்பு குறுநாவல் – தாதிபத்ரியின் தங்கபுத்திரி – Part 5/11

A candid moment

ஏழு மணிக்கு கனகம்மா லட்டு பாக்ஸோடு வந்தார். பேத்தி பிறந்ததாக சொல்லி சந்தோஷப்பட்டார்.

போன் வர பேசிவிட்டு கண்ணீரை துடைத்துக் கொண்டே பவாவை வாங்கி மடியில் வைத்துக் கொண்டார்.

“பேத்தி என் ஜாடையா இருக்குனு சொல்றா!” என சொல்லி புன்னகைத்தார்.

அப்போதுதான் அவர் பட்டன் போனை சுதா கவனித்தாள்.

“நா போன் போடவா? குழந்தையை பாக்குறீங்களா?” என ஆர்வமாய் கேட்டாள் சுதா.

இல்லம்மா, இருக்கட்டும். வரதம்மா சிஸ்டர் பத்து மணிக்கு வந்துடுவாங்க. அவங்களுக்கும் என் பொண்ணு மேல ரொம்ப பிரியம். அவங்க போட்டு தருவாங்க” என சொல்லி கொண்டிருக்கும்போதே “நம்பர் குடுங்க, அது வரை ஏன் காத்திருக்கணும்?” என டயல் செய்தாள் சுதா.

மாப்பிள்ளை குழந்தையை காட்ட ஆசையாய் கொஞ்சியவர், சுதாவிடம் வந்து காட்டினார்.

நிஜம் தான். கனகம்மா ஜாடை தெரிந்தது. “அம்மா” என பக்கத்திலிருந்து குரல் வர, “மாப்பிள்ளை, அவளை காட்டுங்க” என கேட்டார் கனகம்மா.

கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்தபடியே காதின் பின்னாலிருந்த மெஷினை அட்ஜஸ்ட் செய்து கனகம்மாவை பார்த்து அவர் மகள் சிரிக்க, சுதாவுக்கு காட்டிவிட்டு பத்து நிமிடம் பேசிவிட்டு போனை வைத்தார் கனகம்மா.

“ரொம்ப தேங்க்ஸ் மா” என்றார்.

அன்றைய தினம் கனகம்மாவை அவ்வளவாக பார்க்க முடியவில்லை. ஆஸ்பிடல் நண்பர்கள் அவரை சூழ்ந்து கொள்ள அவரை கையிலேயே பிடிக்க முடியவில்லை.

அன்றைய தினம் பவா பெரும்பாலான நேரம் தூங்கிக் கொண்டிருந்தது.

சாயந்திரம் வரதா வந்தார். “இன்னைக்கு நைட் ஷிப்ட் சுதா. பத்து மணிக்கு வரேன்” என்றார்.

சுதா போனை எடுத்து பார்க்க ஒரு நொடி ஆடிப் போனாள்.

Linkedinல் சிமெண்டு கம்பெனியின் கான்பரன்ஸ் போட்டோ வந்திருந்தது. அந்த குரூப் போட்டோவில் இருந்தது ஜெபராஜ். ராஜுவின் காலேஜ் சீனியர்.

பல மாதங்களாக இந்த கான்பரன்ஸ் பற்றி அவளிடம் சொல்லிக் கொண்டிருக்கிறான். இவர் வருவதை பற்றி ராஜு ஒரு வார்த்தை சொல்லவில்லை. பிறகு தான் உறைத்தது இவரோடு அவன் பல நாட்களாக தொடர்பில் இருந்ததையே சொல்லவில்லை என்று.

ஜெபராஜ் சுதாவுக்கும் நன்கு தெரிந்தவர். இந்த வாரம் தான் பவாவுக்கு உடம்பு சரியில்லை. அதனால் அவரை  சந்திக்க முடியாது. ஆனால் அவரை பற்றிய பேச்சையே ராஜு இவ்வளவு நாள் எடுக்காதது அவளுக்கு உறுத்தலாகஇருந்தது. தான் நினைக்கும் காரணம் உண்மையாக இருக்க கூடாது என வேண்டிக் கொண்டாள்.

சிறப்பு குறுநாவல் – தாதிபத்ரியின் தங்கபுத்திரி – Part 4/11

A mother at hospital with child

பவாவை இருக்க பற்றிக் கொண்டாள் சுதா. எல்லாரும் கிளம்ப, பெட்டில் படுக்க வைத்து விட்டு பக்கத்தில் உட்கார்ந்தாள். பவா ஏறி மடியில் படுத்துக் கொண்டது.     

ஒரு மணி நேரம் கழித்து கனகம்மா வந்தார். சாப்பாடு ட்ரே அப்படியே இருந்தது.

“ஏம்மா இன்னும் சாப்பிடலியா, நீ கொழந்தயை என்கிட்ட குடுத்திட்டு சாப்பிடு” என்றார்.

“இல்லீங்க, சாப்பாடு வேணாம். எடுத்திட்டு போயிடுங்க” என்றாள் சுதா.

“ஆஸ்பத்திரின்னு வந்துட்டா மனசு சரி இருக்காதும்மா. அதுக்காக சாப்பிடாம இருக்கலாமா? சாரு வர ராத்திரியாகும்னு சிஸ்டர் சொன்னாங்க. பொழுதுக்கும் குழந்தய தூக்கி வச்சிருக்கீங்க, கொஞ்சமாவது சாப்பிட்டு தூங்குமா. நான் உக்காந்திருக்கேன்” என்றார்.

சுதா எழுந்து போய் முகம் கழுவிக்கொண்டு வந்தாள்.

“என் பெரிய பொண்ணுகூட நம்ம பாப்பா மாதிரிதான். நானும் இதே நெலமைல இருந்திருக்கேன். என் வீட்டுக்காரர் குவாரில கல் ஒடைக்க போயிட்டா, அங்கேயே ரெண்டு வாரம் இருப்பாரு. மாசத்துக்கு ஒரு நாள், இல்லேன்னா ரெண்டு நாள் வந்து போவாரு. தனியாத்தான் மூணு பசங்கள வளத்தேன். இப்ப என் பெரிய பொண்ணுக்கு கல்யாணமாகி அமலாபுரத்துல இருக்கா. இந்த வாரத்துல டெலிவரிக்கு டேட்டு குடுத்திருக்காங்க” என தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

“நீங்க டெலிவரிக்கு போகலியா?” என கேட்டாள் சுதா.

“இங்க அவங்க அப்பா முடியாம இருக்காரு. அதனால வர வேணாம்னு சொல்லிட்டா. டெலிவரி ஆனா ஒரு மாசம் கழிச்சு இங்கயே வந்துருவா” என்றார். 

டிரேவை எடுத்து மடியில் வைத்து சாப்பிட உட்கார, இன்டர்காம் அடித்தது.

“டாக்டர் வர சொல்றாரு, லேபு ரிசல்ட் வந்துருக்கு” என்றார்கள்.

சுதாவுக்கு கண்ணை இருட்டி கொண்டு வந்தது. என்னவாய் இருக்கும் என கிளம்பினாள்.

“ரெண்டு நிமிஷம் சாப்பிட்டு முடிச்சிட்டு போம்மா” என கனகம்மா சொல்லி கொண்டிருக்கும் போதே அவள் பாதி வழி போயிருந்தாள்.

“நீங்க மூணு நாலு நாள் இருக்க வேண்டி இருக்கும்” என்றார் டாக்டர். மனம் மரத்துப் போவதின் ஆரம்ப நிலையில் இருந்தாள் சுதா.

அடுத்த அரை நாளில் பவாவுக்கும் சுதாவுக்கும் ஆஸ்பிடல் பழகி விட்டது. ஊசி, மருந்து, அழுகை, வாந்தி, டயப்பர், ஜுரம் என லைன் கட்டி நடந்தது.

“டயபர் வெய்ட் நோட் பண்ணுங்க மேடம். நர்ஸ் ஸ்டேஷன் பக்கத்துல மெஷின் இருக்கு” என சொல்லி விட்டு போனார் வார்டு பாய்.

அன்றைய நாளில் நான்கு முறை டயபர் எடுத்துக் கொண்டு போய் வெய்ட் பார்த்து சொல்லி விட்டு வந்தாள்.

இரவு எட்டு மணி. இன்னும் ஜுரம் குறைந்த பாடில்லை. போனை எடுத்து பார்த்தாள். ஒரு மெசேஜ் கூட இல்லை.

பேசாமல் போய் ஜன்னலருகே நின்றாள். அங்கே இருக்கும் ஏதோ ஒரு பில்டிங்கில் இப்போது இரவு விருந்து நடந்து கொண்டிருக்கும்.  பேக்டரி சிம்னி தொடர்ந்து புகையை கக்கி கொண்டே இருந்தது.

இரவு பதினோரு மணிக்கு ராஜு வந்தான்.

“ஏதாவது சாப்பிட்டாளா? தண்ணி நல்லா குடுத்தியா நேத்து? இல்லேன்னா இந்தளவுக்கு ஆகாது” என சொன்னான்.

“தூக்கத்துல இருந்தினா பேசாம வீட்டுக்கு போய்டு” என காண்டாக சொன்னாள் சுதா.

“ஆமா, நாளைக்கும் காலைல சீக்கிரம் போகணும். நா ரெண்டு மணி வரைக்கும் இருக்கேன். நீ தூங்கு. அப்புறம் நா வீட்டுக்கு போறேன்” என்றபடி போய் சேரில் உட்கார்ந்தான்.

மருந்து வேலை செய்ய ஆரம்பித்து பவா தூங்க, சுதாவும் ரெஸ்ட் எடுக்கும் நேரத்தில் இங்கு இருந்து லேப்டாப்பில் சில வேலைகளை முடித்து கொண்டான்.

மூன்று மணி நேரம் கழித்து ராஜு சுதாவை எழுப்பி வீட்டுக்கு போவதாக சொல்லி கிளம்பினான்.

“இன்னைக்கு நைட் லேட்டாகும். பாதி நைட்ல வந்து உன்ன டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு நினைக்குறேன்” என மெதுவாய் இழுத்தான்.

சுதாவுக்கு கோபம் தலைக்கேறி பதிலேதும் சொல்ல விரும்பவில்லை. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இவன் இங்கிருந்து கிளம்பினால் நல்லது என மட்டும் தோன்றியது.

ஆபீஸ் முடித்து வீட்டுக்கு போய் கொஞ்ச நேரம் வேலை செய்து விட்டு தூங்குவதற்கு பதில், இங்கே வந்து வேலை செய்து விட்டு இப்போது வீட்டில் போய் தூங்க போகிறான்.

விடியும் வரை இருந்தால் காலையில் பவா இவனோடு விளையாடலாம். அந்த நேரத்தில் சுதா குளித்து சாப்பிட்டு ரெடியானால் பிறகு ஏழு மணி போல ராஜுவும் வீட்டுக்கு போய் ரெடியாகி ஆபீசுக்கு போகலாம்.

இன்னொரு ஆள் படுக்க படுக்கையும் இருக்கிறது. ஒர்க்ஷாப் சாக்கை எந்த இடத்தில் உபயோகிப்பது  என விவஸ்தையில்லாமல் இருக்கிறான்.

முழு இரண்டு நாட்கள் பவா இவனை பார்க்கப்போவதில்லை என்பது தான் சுதாவுக்கு வருத்தமாக இருந்தது.

இங்கு இருப்பவர்கள் துணையுடன் சுதா நாட்களை கழித்தாலும் குழந்தை ஏங்குவது ராஜுவுக்கு ஒரு விஷயமாகவே படாதது அவளுக்கு உறுத்தலாக இருந்தது.

அந்த சிம்னியை போலவே சக மனுஷியின் வருத்தமும் வேதனையும் புரியாமல், ராஜு போன்றவர்கள் கசப்பையே உமிழ்கிறார்கள்.

தங்கள் கடமையை தட்டி கழித்து, அந்த பாரத்தை மற்றவர்கள் மீது ஏற்றி அடுத்தவர்களுக்கு எதிர் மறை உணர்வுகளை தூண்டுகிறார்கள்.

இறுக்கமான இந்த கண்ணாமூச்சி வாழ்க்கை பெண்களுக்கு மூச்சை முட்டுவது போல இருப்பது யாருக்கும் புரியாது. 

துளியும் இணக்கமில்லாதவர்கள் ஒன்றாய் இருக்கும் போது, அந்த பெண்ணின் வானத்தில் மட்டும் தான் நிரந்தர கருமை இருக்கிறது.

ராஜு கிளம்பி சென்றதை ஒரு பொருட்டாக நினைத்து அந்த நாளை சோர்வாக ஆரம்பிக்க அவளுக்கு விருப்பமில்லை. மெலிதாக ஒரு பாடலை ஒலிக்கவிட்டு பவாவின் பக்கத்தில் போய் படுத்துக் கொண்டாள்.