
கோல்கப்பா: ஏம்மா, நம்ம வீட்டுக்கு வெளில ஏதோ சத்தம் கேக்குதே? போய் பாத்துட்டு வாம்மா.
(சில நிமிடங்களுக்கு பிறகு பதட்டத்தோடு ஓடி வருகிறார் பூரி குமாரி)
பூரி குமாரி: ஏங்க, உங்கள தேடி நெறய ஆளுங்க வந்திருக்காங்க, வாங்க வெளில வந்து பாருங்க.
கோல்கப்பா: என்ன தேடியா?
பூரி குமாரி: உங்களத்தாங்க! “கோல்கப்பா….கோல்கப்பான்னு” ஒரே கூச்சலா இருக்கு.
கோல்கப்பா: சரி வா, போய் பாக்கலாம்.
(இருவரும் வீட்டுக்கு வெளியில் வந்து ஆட்களை சந்திக்கிறார்கள். முன் வரிசையில் இருந்த ஒருவர் கோல்கப்பாவிடம் வந்து பேசுகிறார்)
முதல் மனிதர்: சார், நீங்க கொள்கைப்பா தானே? உங்களை தான் நாங்க தேடிகிட்டு இருக்கோம்.
(கோல்கப்பா புரியாமல் முழிக்கிறார்)
கோல்கப்பா: என்ன ஏம்பா தேடுறீங்க?
முதல் நபர் : சார், எங்க கட்சிக்கு கொள்கை பிடிப்புள்ள ஆளுங்க வேணும். இந்த ஏரியால விசாரிச்சா உங்கள பத்தி சொன்னாங்க. நீங்க கொள்கைப்பாவாமே? நீங்க எங்க கட்சிக்கு வந்துட்டீங்கனா, எங்களை யாரும் கொள்கை இல்லாதவங்கன்னு சொல்ல முடியாது!!!
கோல்கப்பா: யோவ், நா கொள்கைப்பா இல்ல? கோல்கப்பா!!!
முதல் நபர் : சார், உங்க பேர ஸ்டைலா சொல்லி பாருங்க! நீங்க கொள்கைப்பான்னு நீங்களே நம்பிடுவீங்க!
இரண்டாம் நபர் : சார், நீங்க எங்க கட்சிக்கு வந்துட்டீங்கனா, எங்க கிட்டயும் கொள்கை இருக்குக்குனு நாங்களும் ஸ்டைலா சொல்லிக்குவோம்.
கோல்கப்பா: ஸ்ஸ்ஸ்ஸ்…ஸ்ஸுப்பா…யோவ் தமிழ ஒழுங்கா படிங்கைய்யா, நா கொள்கைப்பா இல்ல! கோல்கப்பா, கோல்கப்பா, கோல்கப்பா!!!
முதல் நபர் (சத்தமாக கத்துகிறார்) : தலைவர் கொள்கைப்பா வாழ்க! தலைவர் கொள்கைப்பா வாழ்க!
(கூடி இருக்கும் மக்களும் கோஷம் எழுப்புகிறார்கள். பூரி குமாரி அதிர்ச்சியில் இருந்து மீளாமல் நேசப்பா காதருகே போய் பேசுகிறார்)
பூரி குமாரி: ஏங்க, நம்மளே தள்ளு வண்டி கோஷ்டி! நம்மள தூக்கி வாலண்டரியா அவுங்க வண்டில ஏத்த பாக்குறாங்க?
கோல்கப்பா: இரு, எப்படியாவது பேசி இவுங்ககிட்டேயிருந்து தப்பிக்கலாம்.
முதல் நபர் : இப்பவே என்னோட வாங்க. நான் தான் எங்க கட்சி தலைவரோட மனசாட்சி! உங்கள பத்தி அவர்கிட்ட சொல்லி நல்ல போஸ்டிங் வாங்கி தரேன்!
பூரி குமாரி: கோல், இவன் சொல்றத நம்பாதீங்க! இவன் சரியான பிறழ்சாட்சி பார்ட்டி!
கோல்கப்பா: ஓஒ, அது எப்படி உனக்கு தெரியும்?
(பூரி குமாரி கடுப்பாகி முறைக்கிறார்)
இரண்டாம் நபர் : சார், நீங்க முப்பது வருஷ பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரர்னு கேள்விப்பட்டோம். நீங்க கண்டிப்பா எங்க கட்சில வந்து சேரணும் சார்!
கோல்கப்பா: யோவ், நா முப்பது வருஷ பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரன் இல்ல! பொதுமக்கள் வாய்க்கு சொந்தக்காரன்!! என்ன விட்டுருங்கய்யா.
(கூட்டத்தில் இருந்து ஒருவர் முன்னே வந்து ஆவேசமாக பேசுகிறார்)
மூன்றாம் நபர் : உண்மைத் தலைவன் ஒரு நாள் வீதிக்கு வந்தே தீருவார்! நீங்கள் மக்கள் பணிக்கு கண்டிப்பாக வர வேண்டும்.
(கோல்கப்பா சோர்வாகி விடுகிறார்)
கோல்கப்பா: யோவ்வ், வாயில நல்லா வருது எனக்கு! நான் இத்தனை வருஷமா வீதி ஓரமா தான்யா இருக்கேன். இப்போதான் உங்க கண்ணுக்கு தெரியுறேனா?
இரண்டாம் நபர் : நீங்க நல்லா வியூகம் அமைப்பீங்கன்னு பேசிக்குறாங்க, வாங்க சார் நம்ம கட்சிக்கு!
பூரி குமாரி : ஏங்க, சாயங்காலம் ஆறு மணிக்கு மேல இவருக்கே View கம்மிங்க!! இவரு எங்கங்க உங்களுக்கு வியூகம் அமைக்குறது?
மூன்றாம் நபர் : கொள்கைப்பா, rugged ஆனா ஆளுன்னு ஜனங்க சொல்றாங்க?
கோல்கப்பா: யோவ், நா ரகடா பூரிய்யா! என்ன உட்டுருங்கய்யா…
முதல் நபர் : எங்க கட்சில ரெண்டாம் கட்ட தலைவர்கள் இல்லன்னு குறை சொல்றாங்க. நீங்க தான் களப்பணி புலின்னு கேள்விப்பட்டோம். உங்கள கட்சில சேக்காம விடமாட்டோம்…வாங்க சார்.
பூரி குமாரி : ஏங்க, இவரு களப்பணி புலியெல்லாம் இல்லேங்க. இவரு புளித்தண்ணி கலக்குறவர்!!ஹீஹீஹ்ஹீ….

(கொல்லென்று சிரித்தபடியே பூரி குமாரி சொல்ல, கோல்கப்பா அவமானத்தில் முறைக்கிறார்)
பூரி குமாரி : நல்லா கேட்டுக்குங்க, கொஞ்சம் ஸ்வீட் பாணி, கொஞ்சம் ஹாட் பாணின்னு இவரே ஒரு ரெண்டுங்கெட்டான் ஆளு! இவரை போய் ரெண்டாம் கட்ட தலைவர் ரேஞ்சுக்கு சொல்றீங்க!
கோல்கப்பா: எவ்வளவு நாள் வஞ்சம்டி உனக்கு, என்ன இப்படி கழுவி ஊத்துற?
பூரி குமாரி : இவங்க கிட்டேருந்து நீங்க தப்பிக்கணும்னா இப்படி தாங்க சொல்லணும். இல்லேன்னா அப்புறம் ஊரே உங்கள கழுவி ஊத்தும். இப்போ எப்படி மடை மாத்துறேன்னு பாருங்க!
(பூரி குமாரி தொண்டையை செருமியபடியே கூட்டத்தை நோக்கி பேசுகிறார்)
பூரி குமாரி : இவரை கட்சில சேத்தீங்கன்னா, உங்க கட்சில பேரளவுலதான் கொள்கை இருக்குன்னு சொல்லுவாங்க.!! கொள்கைப்பான்னு ஒருத்தர் கட்சில இருக்குறதால வர போற இந்த கெட்ட பேர் உங்களுக்கு தேவையா? நல்லா யோசிங்க!!
கோல்கப்பா (ரகசியமாக): அடிப்பாவி, மண்டைய கழுவுறதுல நீ இவ்ளோ எக்ஸ்பர்ட்டா!!
முதல் நபர் (யோசிக்கிறார்): ஆமாம், அப்போ நாங்க கொள்கைக்கு என்ன பண்றது?
பூரி குமாரி : கொள்கைய தூக்கி கெடப்புல போடுங்க. நீங்க தான் உங்க பாக்கெட்ல மக்கள் சேவைன்னு ஒரு மேட்டர வச்சுருக்கீங்களே, அத பத்தி யோசிங்க!!
இரண்டாம் நபர் : இப்போவே நவம்பர் வந்துடுச்சி. அடுத்த ஏப்ரலுக்குள்ள சேவைய எங்க போய் நாங்க கண்டுபுடிக்குறது?
(கோல்கப்பா மண்டையில் பல்பு எரிகிறது)

கோல்கப்பா: இவ தான் சேவ்பூரி. உங்களுக்கு தோதான ஆளு. “மக்கள் சேவையே மகேசன் சேவைன்னு” உருட்ட உங்களுக்கும் வசதியா இருக்கும்.
கோல்கப்பா: இதுல டாப்பா ஒரு விஷயம் இருக்கு! உங்க கிட்ட தத்தி இருக்கு, எங்க கிட்ட தஹி சேவ்பூரி இருக்குன்னும் நீங்க பீத்திக்கலாம்!!!
(“தங்கத் தலைவி, தானைத் தலைவி சேவ்பூரி வாழ்க” என கூட்டம் ஆர்ப்பரிக்கிறது)
முதல் நபர் :ஹாஹாஹா, சார் அட்டகாசமான மேட்டர் சார் இது. நீங்க Quote தலன்னு ப்ரூவ் பண்ணிட்டீங்க சார்!!!
கோல்கப்பா: உங்க கிட்ட மூணு அட்டகாசமான தலைங்க இருக்காங்க! என்ன ஆள விடுங்கடா சாமி!!

கோல்கப்பா: மக்களே, இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி மகிழுங்கள்!! Bye!!



