
பொழுது போக இரவு எட்டு மணிக்கு அமராவதி வந்து பார்சலை பெற்றுக்கொண்டாள். அடுத்த இரண்டு வாரத்தில் ஐந்து பார்சல் வந்தது.
“அபர், நீ உள்ள போய் படு. நா இன்னைக்கு தூங்கல” என்றார் நேசப்பா.
இன்னைக்கு டெலிவரி தேதி. மெயின் கேட்டுக்கு போன் போட்டார்.
“செல்லம், இன்னைக்கு பார்சல் வரும். போன் பண்ணாத. உள்ள அனுப்பிடு” என்றார்.
“சார், நீங்க ஒருத்தர் தான் சார் என்ன இந்த வயசுலயும் செல்லம்னு கூப்பிடுறீங்க” என சிரித்தார் செல்ல குமார்.
அடுத்து “பக்தா, இன்னைக்கு பார்சல் வரும். போன் பண்ணாத. மேடம் தூங்குறாங்க.உள்ள அனுப்பிடு” என்றார் நேசப்பா.
சரி சார் என்றார் ஜி பிளாக் செக்யூரிட்டி பக்தவத்சலம்.
ஐந்து மணி ஆனது. சங்கு புஷ்பம் எழுந்து காபி போட்டு வைத்து முகம் கழுவ போனார். காய்ந்த துணி எடுக்க நேசப்பா போக பெல் அடித்தது.
“நா போறேன் இரு” என்றார் நேசப்பா.
“இன்னைக்கு என்ன வந்திருக்கு?” என்றார் சங்கு புஷ்பம். “சேப்டி ஸ்டிக்!” என்றார் நேசப்பா.
“கான்ட்ராக்டர் நல்ல மனுஷன், சாப்ட் ஆன ஆளா தெரியுறார். அந்த அம்மா ஏன் ஸ்டிக் வாங்குதுனு தெரியல?” என்றார் நேசப்பா.
“டிபென்சா இல்ல அபென்சா” என சிரித்தார் சங்கு புஷ்பம்.
எட்டு மணிக்கு அமராவதி வந்தாள். “என்னம்மா சேப்டி ஸ்டிக்” என்றார் சங்கு புஷ்பம்.
“டாக் சேப்டிகாக ஆன்ட்டி. வாக்கிங் போகும் போது தொல்லையா இருக்கு” என சலித்தாள்.
“நீ இண்டோர் தான போவ. ட்ரெட் மில்ல”
“ஆமா ஆன்ட்டி. நேத்து மோட்டார் பெல்ட் போய்டுச்சு. அதான் வெளில நடக்கலாம்னு” என்று சொல்லி கிளம்பினாள்”. சரிம்மா என்றார் சங்குபுஷ்பம்.
“மோட்டார் பெல்ட் நானூறு இல்ல ஐநூறு. இந்த ஸ்டிக் முன்னூறு” என சிரித்தார் நேசப்பா.
“ஆமா, யாரு இப்போ அவ்ளோ சீக்கிரம் ரிப்பேர் பண்ணி யூஸ் பண்றாங்க” என கேட்டார் சங்குபுஷ்பம்.
அடுத்த நாள் சன் ஸ்கிரீன் வந்தது. அடுத்த நாள் ஸ்லிங் பாக் வந்தது.
இவங்க அமரவாதியா இல்ல ஆர்டர்வாதியா என சிரித்தார் சங்குபுஷ்பம்.
“நாளைக்கு என்னவா இருக்கும்? ஷூ, சன் க்ளாஸ், பிட் பேண்ட்?” லிஸ்ட் போட்டார் நேசப்பா.
பாக்கலாம் என பேசிக்கொண்டே இரவு உணவு சாப்பிட்டார்கள் இருவரும்.
“அம்மா டெலிவரி” குரல் கேட்டது. “இரு நா போறேன்” என்றார் நேசப்பா.
வெரிகோஸ் பேண்டேஜை மாட்டியபடியே “என்ன நேஸ்?” என்றார் சங்கு புஷ்பம்.
“லூப்ரிக்கண்ட்” என சொல்லி திரும்பி கதவை பூட்டி னார் அவர்.
கொல்லென்று சத்தமாக கண்ணில் நீர் வர சிரித்தார் சங்கு புஷ்பம்.
இருவரும் சிரித்து, கண்ணீர் துடைத்து அமைதியாக சிறிது நேரம் ஆனது.
“அது ட்ரெட்மில் மோட்டார் லூப்ரிக்கண்ட், தொள்ளாயிரம்” என நேசப்பா பார்த்து சொல்ல, இருவரும் மீண்டும் சிரிக்க ஆரம்பித்தார்கள்.
இரவு எட்டு மணிக்கு அமராவதி வந்தாள். “நீ போய் குடு” என்றார் நேசப்பா.
மூச்சை இழுத்து விட்டு சிரமப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டு கொடுத்தார் சங்கு புஷ்பம்.
“ரிப்பேர் ஆன மஷினிக்கு இது எதுக்குமா?” என்றார்.
“இல்ல ஆன்ட்டி, டூ வீக்ஸ் முன்னாடி பிப்டி பெர்ஸன்ட் ஆபர் போட்டான். அதான் கார்த்தி ஆர்டர் பண்ணிட்டார். அதுக்கு அப்புறம் தான் ரிப்பேர் ஆச்சு” என்றாள்.
இரவு சாப்பிட்டுக்கொண்டே நேசப்பா சொன்னார் “முன்னூறு ரூபா பெல்ட். சீக்கிரம் மாத்தி இருந்தா நாலாயிரம் செலவு இல்ல” என்றார்.
“டாக் ஸ்டிக், சன் ஸ்கிரீன், பாக், ஏங்க தெருவுல இறங்கி நடக்க இவ்வளவு செலவா?” என்றார் சங்கு புஷ்பம்.
“வாக்கிங்க விட அந்த எக்ஸ்பிரியன்ஸ் முக்கியம்னு நெனைக்குற ஜெனெரேஷன் இது அபர்மா” என்றார் நேசப்பா.
“நோட் பண்ணுங்க நேஸ் இனிமே” என்றார் சங்கு புஷ்பம்.