
சென்னையிலிருந்து துபாய். பிறகு துபாயிலிருந்து சுமார் ஏழு மணி நேரம் பயணித்து இரண்டு வார பயணமாக ஜித்து ஆம்ஸ்டர்டாம் வந்து சேர்ந்தாள்.
ஏர்போர்ட்டில் இருந்து டாக்ஸி பிடித்து கம்பெனி கெஸ்ட் ஹவுஸ் வந்து சேர்ந்தாள். ஒர்க்ஷாப்புக்கு வரும் மொத்த டீமும் சேர்ந்து கெஸ்ட் ஹவுசில் தங்க ஏற்பாடாகி இருந்தது. ரிசப்ஷனில் சாவி வாங்கி கொண்டு மேப் அட்டையை கவுண்டரில் இருந்து எடுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.
இருபது ஏக்கரில் அழகான கேம்பஸ். கண்ணாடி கதவு தானாய் திறக்க வெளியே பேட்டரி கார் இருந்தது. லக்கேஜ் ஏற்றி பின் சீட்டில் அமர அடுத்த சில நிமிடங்களில் அவளுக்கு ஒதுக்கப்பட்ட அறை இருந்த பிளாக்கிற்கு முன் போய் நின்றது.
ரூம் பாய் லக்கேஜ் எடுத்து வைக்க “ஹலோ” என்றபடி வந்தார் கார்சன்.
கார்சன் ஜெர்மனியை சேர்ந்தவர். எழுபது வயதானவர். இந்த ப்ராஜெக்ட்டில் சீனியர் கன்சல்டன்ட்டாக இருப்பவர்.
இறைவனடி சேராமல் இருந்தால் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு இந்த டீமில் இருப்பார். ஜித்து பாண்டியிலும், கார்சன் பெர்லினிலும், மூன்று பேர் டீம் சவுதியிலும் இருந்து வேலை பார்ப்பார்கள். இங்கே நெதர்லாந்தில் இருபது பேர் டீமில் இருப்பார்கள். இவர்கள் அனைவரும் கார்சனிடம் ரிப்போர்ட் செய்ய வேண்டும்.
முதல் இரண்டு நாட்கள் கிட்டத்தட்ட முப்பது பேரோடு செஷன் நடந்தது. பிரேக் டைமில் சிறு குழுக்களாக கூடி பேசி உணவருந்தினார்கள். பெரிதாக கார்சனிடம் பேச வேண்டிய சூழல் இல்லை. ஆனால் விநோதமாக கார்சன் அடிக்கடி ஜித்துவிடம் வந்து சகஜமாக பேசி விட்டு போனார்.
ஒரு முறை கையில் காலி தண்ணீர் பாட்டிலோடு ஜித்துவை கிராஸ் செய்து போனவர் திரும்ப வந்து அவள் பாட்டிலை கேட்டார்.
“நா பில் பண்ண போறேன். உனக்கும் சேத்து எடுத்துட்டு வரேன். உன் பாட்டிலை குடு” என உரிமையாய் கேட்டார்.
இது அவர் புடுங்க வேண்டிய ஆணியில்லை என தோன்றியது ஜித்துவுக்கு.
“தேங்க்ஸ் கார்சன். ஆனா எனக்கும் ஒரு ஷார்ட் வாக் போகணும். ரொம்ப நேரமா பிரேக் எடுக்கலை. நானே கொஞ்ச நேரம் கழிச்சு பான்ட்ரிக்கு போறேன்” என தவிர்த்தாள்.
தோளை குலுக்கியபடி லேசாய் கண் சிமிட்டி நகர்ந்தார் கார்சன்.
மூன்றாம் நாளில் இருந்து சிறு குழுக்களாக ஒவ்வொரு டீமோடு தனித்தனியாக மீட்டிங் நடந்தது. பெரும்பாலும் கார்சனை சந்திக்கும் சூழல் இல்லை.
மாலை ஆறு மணிக்கு கெஸ்ட் ஹவுஸுக்கு திரும்ப வந்தாள். இரவு எதுவும் பெரிதாய் வேலையில்லை. என்ன செய்யலாம் என யோசித்தாள். துவைக்க வேண்டிய துணி கொஞ்சம் இருந்தது.
லாண்டரி பேக்கை எடுத்துக்கொண்டு பேஸ்மென்டில் இருந்த வாஷிங்ரூமுக்கு போய் துணியை லோட் செய்தாள். இந்த வாஷிங் சைக்கிள் முடிய ஒரு மணி நேரம் ஆகும்.
அந்த அறைக்கு பக்கத்திலேயே ஒரு இன்டோர் கேம் ஏரியாவும், ரீடிங் ரூமும் இருந்தது. ஜித்து அங்கே போய் உட்கார்ந்து புத்தகம் படிக்க ஆரம்பித்தாள்.
சற்று நேரத்தில் “ஹலோ” என கார்சனின் குரல் கேட்டது.
எதிரில் இருந்த சோபாவில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தார்.
“என்ன போரடிக்குதா?கேன் வீ ஹாவ் சம் ஃபன்?” என சிறிது நிறுத்தி பிறகு “இன் கேம் ஏரியா” என தொடர்ந்தார்.
ஜித்துவுக்கு அவரிடம் பெரிதாய் பேச்சு கொடுக்க இஷ்டமில்லை.
இந்த மூன்று நாளில் பல முறை “கேன் வீ ஹாவ் சம் ஃபன்?” என தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார்.
அந்த நேரம் பார்த்து ரேஷ்மியின் போன் வந்தது. கார்சனிடம் சுருக்கமாக விடை பெற்று ரூமை விட்டு வெளியே வந்தாள் ஜித்து.
ரேஷ்மி ஜித்துவோடு இரண்டு வருடம் மும்பையில் பணி புரிந்தவள். பிறகு சில வருடங்கள் கழித்து நெதர்லாந்து வந்து செட்டிலாகி விட்டாள். ரேஷ்மி வேலை செய்யும் கம்பெனி ப்ராஜக்டுக்காக தான் ஜித்து தேர்ட் பார்ட்டி கன்சல்டன்சியில் இருந்து வந்திருக்கிறாள்.
“ஹாய் ஜித், சாரிப்பா, நா வெகேஷன் போயிட்டு இன்னைக்கு தான் வந்தேன். லாஸ்ட் வீக்லேர்ந்து லீவ்ல போய்ட்டேன். அதான் உன் மெசேஜை மிஸ் பண்ணிட்டேன். நாளைக்கு ஆபீஸ்ல மீட் பண்ணலாம் லன்ச் டைமில்” என்றாள் ரேஷ்மி.
சரியென்று சொல்லி பத்து நிமிடங்கள் பேசி முடித்து திரும்பி பார்த்தால் கார்சன் கண்ணாடி ஜன்னலுக்கு பின்னால் நின்று அவளையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தார்.
கார்சன் வெளியே வந்து “கேன் வீ ஹாவ் சம் ஃபன் டுநைட்?” என சிரித்தபடியே கேட்டார்.
ஆளரவமற்ற அந்த பேஸ்மென்டில் அசையாமல் ஒரு உருவம் நின்றது அவளுக்கு தூக்கி வாரிப் போட்டது. ராஷ்மியிடம் பேசியதில் கார்சன் உள்ளே ரூமில் இருந்ததையே அவள் மறந்து போனாள்.
ஜித்து ஏதோ யோசனையாக இருக்க அருகே வந்து “ஃபன் மீன்ஸ் ஃபுல் அன்ட்ரெஸ்ஸட் நைட்” என்றார் மெதுவாய்.
பளுக்கென்று ஒரு அறை விட வேண்டும் போல இருந்தது ஜித்துவுக்கு.
போனை பேண்டின் பின்பக்கம் சொருகியபடியே சில நொடிகள் அவர் சொன்னதை உள்வாங்கி “ஐ ஆம் ஆல்ஸோ எ ஃபன் லவ்விங் பர்சன்” என நிறுத்தி நிதானமாய் சொன்னவள், அந்த சில கணங்களை சுதாரிக்க எடுத்துக் கொண்டாள்.
“ஃபன் மீன்ஸ் பர்ம்லி அன்டர்மைனிங் நான்சென்ஸ்” என நறுக்கென்று சொன்னாள்.
கார்சன் அவள் பதிலை உள்வாங்கும்போதே “பாய் கார்சன். குட் நைட்” என சொல்லி நகர்ந்தவள் சில அடிகள் நடந்தபிறகு திரும்பி வந்தாள்.
“டூ யூ நோ வாட் குட் நைட் மீன்ஸ்? என கேட்டாள்,
கார்சன் முழிக்க “க்ராப் ஒன் ஓவர்நைட் டயப்பர். நோ இன்அப்ரோப்ரியேட் கெஸ்சர் ஹராஸ்மென்ட் டாலரேட்டட்” என சொல்லி சிரித்தபடியே நகர்ந்தாள்.

கார்சனுக்கு அவமானத்தில் முகம் சிவந்தது.
டக்கென்று டயப்பர் வெளியே தெரிகிறதா என அவர் உடையை சரி பார்த்தார். அவரின் டயப்பர் வழக்கத்தை அவள் தெரிந்து கொண்டது அவருக்கு புதிராகவும் பங்கமாகவும் இருந்தது.
அங்கேயே படிக்கட்டில் உட்கார்ந்து யோசிக்க ஆரம்பித்தார்.
முதல் நாள் கெஸ்ட் ஹவுஸ் வந்த பிறகு பக்கத்தில் இருந்த சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்கி பில்லிங் செய்யும் போது ஜித்து ஹலோ சொல்லி அவரை கிராஸ் செய்து போனது ஞாபகம் வந்தது. கவுண்டரில் பையில் போட்டு பேக் செய்யும் போது டயப்பர் கவரை கவனித்திருக்கிறாள் என புரிந்து கொண்டார்.
ஆனாலும் இனி ஜென்மத்துக்கும் யார் குட் நைட் சொன்னாலும் இவள் சொன்ன அர்த்தம் மட்டும் அவருக்கு மறக்காது.