Tamil novel – Jiteswari – Part 1/21

A retired woman enjoying the morning with coffee

அன்று வியாழக்கிழமை. காலையில் எழுந்து காபி குடித்துக்கொண்டே, பால்கனியில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் சங்குபுஷ்பம். நேசப்பா விடியற்காலையில் எழுந்து விடுவார். வெயிலுக்கு முன் கிச்சன் வேலைகளை முடிப்பது அவர்கள் வழக்கம். ஒன்பது மணிக்குள் சமைத்து முடித்து, பிறகு அன்றாட வேலைகளை கவனிப்பார்கள்.

உள்ளே மிக்சி சத்தம் கேட்டது. காலை டிபன் நேசப்பா ரெடி செய்துவிடுவார். கூடவே மதிய உணவுக்கான எல்லா காய்களையும் நறுக்கி வைத்து விடுவார். அரிசியும் பருப்பும் ஊற வைத்து, இஞ்சி பூண்டு உரித்து, கறிவேப்பிலையையும் தேவையான அளவு அலசி வைத்து விடுவார்.

சங்கு புஷ்பத்திற்கு காலையில் எழுவது சற்று சிரமமான காரியம். கால் நரம்பு வலியால் பல நாட்கள் இரவு சரியான தூக்கம் இருக்காது. விடியற்காலையில் சிறிது நேரம் அயர்ந்து தூங்கி விடுவார். எழுந்ததும் முழு மூச்சாக எந்த வேலையும் செய்ய முடியாது.

எட்டு மணிக்கு பிறகு தான் அவரால் சற்று நடக்க முடியும். எனவே நேசப்பா எல்லா ஏற்பாடுகளையும் தயார் செய்து விடுவார். சங்குபுஷ்பம் கிச்சன் உள்ளே போனால் அரை மணி நேரத்தில் மதிய உணவை செய்து முடித்து விடுவார்.

மணி ஏழேமுக்கால் ஆனது. போன் அடித்தது. ஜிதேஸ்வரியின் அழைப்பு.

a senior attending phone call

“சங்குமா, எழுந்துட்டீங்களா? நா டிஸ்டர்ப் பண்ணிட்டேனா” என்றாள்.

“இல்ல ஜித்து, சொல்லு, எப்ப வர?” என்றார் சங்குபுஷ்பம்.

“நைட் ப்ளயிட் இங்க. காலைல நாலு மணிக்கு நம்ம ஏர்போர்ட்டுக்கு வந்துடுவேன். நா பாண்டி போகல. வீட்டுக்கு தான் வரலாம்னு இருக்கேன்” என தயங்கியபடி சொன்னாள் ஜிதேஸ்வரி.

“வா வா” என சொன்னார் சங்குபுஷ்பம்.

“அப்புறம் ஒர்க்ஷாப்பு எப்படி போச்சு?” என விசாரித்தார். ஐந்து நிமிடம் பேசி முடித்து பிறகு கிச்சன் சேரில் போய் உட்கார்ந்தார். நேசப்பா போனில் பாட்டு கேட்டபடியே வேலையில் மும்முரமாய் இருந்தார்.

“ஏங்க நாளைக்கு காலைல ஜித்து வீட்டுக்கு வரேன்னு சொன்னா. ரெண்டு மூணு நாள் இங்க இருந்துட்டு அப்புறம் பாண்டிக்கு போறாளாம்” என சொன்னார் சங்குபுஷ்பம்.

“காலைல எத்தனை மணிக்கு ஏர்போர்ட் வருது? நா போய் கூட்டிட்டு வரேன்” என்றார் நேசப்பா.

“நாலு மணிக்கு வண்டி லேண்ட் ஆகுமாம்.வெளில வர நாலரை ஆகும்னு சொன்னா. உங்களை அனுப்புறேன்னு சொன்னேன். வேணாம், நானே டாக்சி புடிச்சி வரேன்னு சொல்றா” என்றார் சங்குபுஷ்பம்.

“அது அப்படி தான் சொல்லும். அதுக்காக நாம போகாம இருக்க முடியுமா? நா போறேன்” என்றார் நேசப்பா.

“சரிங்க, நீங்க போயிட்டு வாங்க. குமார காலைல மூணு மணிக்கு வர சொல்லிடுங்க. விடியற்காலைல நீங்க ஓட்ட வேணாம்” என்றார் சங்குபுஷ்பம்.

டிபன் சாப்பிட்டு முடித்து மாத்திரை போட்டு ஆளுக்கொரு புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தார்கள்.

லக்ஷ்மியின் போன் வந்தது. “மா, நா நாளைக்கு நைட்டு வீட்டுக்கு வரேன். ஜித்து பேசுனா காலைல. பசங்கள கூட்டிட்டு என்ன அங்க வர சொல்லிட்டா. நா சாயந்திரம் காலேஜ் முடிச்சிட்டு அப்டியே பசங்கள கூட்டிட்டு ஒரு ஆறு மணிக்கு கெளம்பிடுவேன்” என்றாள்.

“சரி, காமாட்சி ஆன்ட்டி கிட்ட சொல்லி பசங்க பேக ரெடி பண்ண சொல்லிட்டியா?” என்றார் சங்கு புஷ்பம். காமாட்சி ஜிதேஸ்வரியின் மாமியார். நல்ல குணமான பெண்மணி.

“அவங்க கிட்டயும், பசங்க கிட்டயும் காலைல ஸ்கூலுக்கு போறதுக்கு முன்னாடியே ஜித்து போன் பண்ணி சொல்லிட்டாளாம்” என்றாள் லக்ஷ்மி.

வரும் வாரம் திங்கள், செவ்வாய் இரண்டு நாட்களும் பொது விடுமுறை. அரிதாக நான்கு நாட்கள் தொடர்ந்து கிடைக்கிறது.

லக்ஷ்மி சங்குபுஷ்பத்தின் இளைய மகள். பாண்டியில் கல்லூரியில் ப்ரொபஸராக இருப்பவள். ஜித்தும் லக்ஷ்மியும் தோழிகள். சற்று ஏறக்குறைய ஒரே வயதுடையவர்கள்.

ஜிதேஸ்வரி சங்குபுஷ்பம் பெறாத மகள். அவருடன் நர்ஸாக பணிபுரிந்த கற்பகம் சிஸ்டரின் மகள். இருவரும் பணிக்காலம் முழுவதும் ஓரே இடத்தில் வேலை பார்த்தவர்கள்.

ஜிதேஸ்வரி பிறந்ததும் அவரை முதலில் கையில் ஏந்தியவர் சங்குபுஷ்பம். ஜிதேஸ்வரி மட்டுமில்லை. அவர்கள் குடும்பத்திலும், நட்பு வட்டாரத்திலும் பெரும்பாலான குழந்தைகளை முதலில் அணைத்துக் கொண்டவர்
சங்குபுஷ்பம். யார் தெரிந்தவர்கள் பிரசவத்திற்காக சேர்ந்தாலும், அவர் ஷிப்ட் முடிந்த பின்பும் காத்திருந்து, தாயையும் சேயையும் நல்லபடியாக பார்த்த பிறகு தான் வீட்டுக்குப் போவார்.

கற்பகம் சில வருடம் முன்பு நோய் தொற்றால் பாதிக்கப்பட்டார். அவரின் இறுதி நாட்களில் நேரில் போய் பார்க்க முடியாத சூழல்.

கற்பகத்திற்கு அவரின் உடல் நிலை புரிந்து விட்டது. அவர் கணவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஒரே மகன் ஒரிசாவில் இரும்பு கம்பெனியில் வேலை செய்கிறான்.

ஜிதேஸ்வரி திருமணமாகி பாண்டியில் குடும்பத்துடன் வசித்து வருகிறாள்.

கற்பகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் சங்கு புஷ்பத்திற்கு போன் பேசினார். நேசப்பாவும், அவரும் அந்த தம்பதிகளுக்கு ஆறுதலாக இருந்தார்கள்.

நேசப்பா சற்று தைரியசாலி, ஆனால் மென்மையான மனம் கொண்டவர்.

சங்கு புஷ்பம் எவ்வளோ சொல்லியும் கேட்காமல் சர்வ ஜாக்கிரதையாக பயணித்து அவர்களுக்கு தேவையான உணவையும் புத்தகங்களையும் கோவில் ப்ரசாதங்களையும் மருத்துவமனை வாசலில் கொண்டு சேர்த்து விடுவார்.

சங்குபுஷ்பம் வார்டு பாய் ஆனந்திடம் சொல்லி வைத்து விடுவார்.

“ஏன் மேடம் சார் வெளில வரார்? இங்க நெலமை ரொம்ப மோசமா இருக்கு. அவங்களுக்கு என்ன தரணும்னு சொல்லுங்க. நா ஏற்பாடு பண்ணுறேன்” என்றார் ஆனந்த்.

Tamil Joke – சாயா (Tea) சக்தி

A candid conversation about politics

கோல்கப்பா : நம்ம “ஸ்டார்ட் அப் கட்சி” மீட்டிங்க பாத்தியா டார்லிங்?

பூரி குமாரி : ஹிஹிஹி, சாரிங்க, நான் களத்துல இருந்தேன்! அதனால பாக்கலை, நீங்களே சொல்லுங்க!

கோல்கப்பா : ஹாஹாஹா, அவங்க கட்சில ஹயரிங் நடக்குதுன்னு தலைவரே சொல்லிட்டாரு. எனக்கென்னமோ நீ அப்ளை பண்ணா சேத்துக்குவாங்கன்னு நெனைக்குறேன்! என்ன சொல்ற?

பூரி குமாரி : எனக்கு என்ன தகுதி இருக்குன்னு நெனைக்குறீங்க கோல்?

கோல்கப்பா : உனக்கு தான் பத்து பொருத்தமும் பக்காவா இருக்கு அவங்க பார்ட்டில சேர..ஹிஹீஹீ ..

பூரி குமாரி : இதுக்கு நான் லைவே பாத்திருக்கலாம், புதிர் போடாம சொல்லுங்க கோல்.

டீ கடைக்காரர்: ஏன்மா ஒத்த ரோசா, மக்கள் எந்த மூட்ல இருந்தாலும் உன் கடைக்கு தான் வராங்க. சந்தோசமா இருந்தாலும் ஒரு பிளேட் பானி பூரி சாப்புடுறாங்க, மனசு நொந்து இருந்தாலும் ஒரு பிளேட் பானி பூரி சாப்புடுறாங்க! நீதான்மா மக்களோட சுக துக்கத்துல அவங்களோட நிக்குற!

கோல்கப்பா : ஹிஹிஹி. பாய்ண்டை புடுச்சிடீங்க மாஸ்டர்! நீதான்மா உண்மையா உணர்வுப்பூர்வமா மக்களோட நிக்குற! இந்த தகுதி ஒண்ணே போதும்!

டீ கடைக்காரர்: பானி பூரி சாப்பிடும்போது,பசங்க “ஒண்ணு, இன்னொன்னு” அப்படீன்னு ஆர்வமா சொல்றானுங்க..அந்த கோஷம் நேச்சுரலாவே உங்க வகையறாவுக்கு செட் ஆகிடும்!

கோல்கப்பா : அட அட அடடா, கலக்கிடீங்க மாஸ்டர். நெக்ஸ்ட் ப்ளீஸ்?

பூரி குமாரி : என்ன மோட்டிவேட் பண்றது இருக்கட்டும் மாஸ்டர். ஏதோ தீய சக்தி, தூய சக்தின்னு ஷார்ட்ஸ் வந்தது. நீங்கதான் “சாயா சக்தியாச்சே”, நீங்களும் அப்ளை பண்ணுங்க!

கோல்கப்பா : அடிப்பாவி, கலக்கியடியே. ஷார்ட்ஸ் பாத்தே இந்த கமெண்ட் அடிக்கிற? நீ அரை மணி நேரம் பேச்ச கேட்டிருந்தீன்னா ப்ளாஸ்ட்டு தான் போ!!

பூரி குமாரி : மாஸ்டர், நம்ம பசங்க அக்கா, தங்கச்சி, வைப் அப்புறம் ப்ரெண்ட்ஸ சில சமயம் “டீ” போட்டு கூப்பிடுவாங்க. “டீ”ன்னாலே ஒரு VIBE இருக்கும். “டீ”ன்னாலே ஒரு எனர்ஜி வருமே? அவங்க கட்சி பேருல கூட “டீ” இருக்கும். இதை சொல்லி அப்ளிகேஷன் போடுங்க மாஸ்டர்…ஹிஹிஹி..

கோல்கப்பா : ஹிஹிஹி…

டீ கடைக்காரர் : என் graphஅ எங்கயோ கொண்டு போய்ட்டேம்மா…நம்ம ரெண்டு பேருக்கும் ஏதோ சில பாயிண்ட்ஸ் இருக்கும்மா. நம்ம தலை கோல்கப்பாவை எப்படி பொசிஷன் பண்றது?

பூரி குமாரி : ஹிஹிஹி, இவர்தான் தலைமைக்கு சரியான ஆள்னு சொல்லலாம் மாஸ்டர்!

டீ கடைக்காரர் : எனக்கு புரியலம்மா??

கோல்கப்பா : வெஷம் , வெஷம்!! எனக்கு வயசாயிடுச்சி, தலைக்கு டை போடுறேன்னு நக்கலா சொல்றா மாஸ்டர்!

டீ கடைக்காரர் : ஹாஹாஹா, “தலைமை”க்கு தரமான டெபனிஷனா இருக்கே! அள்ளுறம்மா நீ!!

பூரி குமாரி : இவரு மாதிரி கல்லாபொட்டி எக்ஸ்பீரியன்ஸ் ஆளுங்களுக்கு அவங்க கட்சில வேகன்ஸி இருக்கு மாஸ்டர்!

கோல்கப்பா : அடியேய் உன்னை….(மாஸ்டர் பக்கம் திரும்பி) நா கவுண்டர் குடுக்குற ஆளுன்னு சொல்றா மாஸ்டர்!

டீ கடைக்காரர் : ரெண்டு சாம்பிள் சொல்லுமா, இவர் தேறுவாரான்னு பாக்கலாம்?

பூரி குமாரி : கோல், இப்போ நீங்க ஸ்டார்ட் அப் கட்சில ஒரு பொறுப்புல இருக்கீங்கன்னு நெனச்சுக்கோங்க! நா ஆளும் தரப்பு கீவேர்ட்ஸ் சொல்றேன். அதுக்கு ஒரு கவுண்டர் குடுங்க.

கோல்கப்பா : நீ வேணாம்! மாஸ்டர் நீங்க கேளுங்க..

டீ கடைக்காரர் : (யோசிக்கிறார்) கட்டுக்கோப்பு!

பூரி குமாரி : தெரியலேன்னா பாஸ் சொல்லிடுங்க கோல்! நா ரெடி (கையை உயர்த்துகிறார்)

கோல்கப்பா : கஜானா காலி. எந்த பைலும் மூவ் ஆகாம, அரசாங்கம் முடங்கி இருக்கு. “கட்டு” கோப்பு எல்லா துறை டேபிள்லயும் இருக்கு! எப்பூடி? ஹிஹிஹி….

பூரி குமாரி : வாவ், நச்சுனு சொல்லிடீங்க கோல்.

டீ கடைக்காரர் : தல, செம மேட்டர இருக்கே!! நெக்ஸ்ட் “உபி

கோல்கப்பா : “உபி” க்கள் எல்லோரும் ஜுனியர் தலீவர் பின்னாடி தான்!!!

பூரி குமாரி : மாஸான பிட்டு கோல்!!

டீ கடைக்காரர் : இந்த கட்சில ஒரு அட்வான்டேஜ் இருக்கு தல. நாம செலெக்ட்டிவா இருக்கலாம். நமக்கு வசதிப்பட்ட டாபிக்கை மட்டும் பேசலாம். திருப்பரங்குன்றத்துல விளக்கேத்துறது களப்பிரச்சினையில்லையா? வாயையே தொறக்கலை மனுசன்.

கோல்கப்பா : உன் மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்டுடிச்சி, நீயே சொல்லு டார்லிங்!

பூரி குமாரி : Thalaivar Vaaila Kozhukattai (தலைவர் வாயில கொழுக்கட்டை)! ஹிஹ்ஹிஹி !!

டீ கடைக்காரர் : முடிஞ்ச்…மக்களே இந்த போஸ்ட் உங்களுக்கு பிடிச்சிருந்தா, உங்க நண்பர்களோட பகிருங்கள். Bye!!

சிறப்பு சிறுகதை – அங்கன்வாடி அரிமாக்கள் – part 4/4

சில மாதங்கள் ஆனது. ஒரு நாள் பள்ளியிலிருந்து திரும்பிய சிவா கேட்டான் “என்னம்மா? இன்னைக்கு பச்சை கலர் கேசரி செஞ்சுருக்க, என்ன ஸ்பெஷல்?”

“அம்மா பாஸாயிட்டாங்கன்னா! அதான் ஜாலி மூடுல இருக்காங்க” என சொன்னது சின்ன வாண்டு தேவசேனா.

“ஆமாடா, மத்தியானம் தான் ரிசல்ட் வந்தது. அம்மா டிகிரி வாங்கிட்டேன்!!” என உற்சாகமாக சொன்னாள் தாரா. தபால் வழியில் யோகா இளங்கலை முடித்து இன்று பட்டம் வாங்கியிருக்கிறாள்.

சிவா ஆறாம் வகுப்பு மாணவன். தேவசேனா ஒன்றாம் வகுப்பு. தாராவின் கணவர் மேகநாதன் ஆட்டோ ஓட்டுநர். பகுதி நேரமாக சுவர் பெயிண்டிங் வேலையும் செய்வார்.

“மல்லிகை மலர் பறிக்க, மான் போல துள்ளி வா!

அல்லி மலர் பறிக்க, அன்னநடை போட்டு வா!

டிகிரி நீயும் வாங்க, டைகராக படித்து வா!!  என சிவா குஷியாக பாட ஆரம்பித்தான்.

“அப்போ, அம்மா டைகரா?” என தேவசேனா புலி போல காலை மடக்கி நடந்து வந்து பயமுறுத்த, மூவரும் சேர்ந்து கொல்லென சிரித்தார்கள். சற்று நேரத்தில் மேகநாதனும் வர வீடு களை கட்டியது.

 நால்வரும் கிளம்பி கோவிலுக்கு போய் சாமி தரிசனம் செய்துவிட்டு கல் மண்டபத்தில் போய் உட்கார்ந்தார்கள்.

பால்காரர் குணவேந்தன் அந்த பக்கம் வந்தார்.

“என்ன மேகா, தாரா பாஸாயிடுச்சுனு எங்க வீட்டம்மா சொல்லுச்சு! நீ எப்போ படிக்க போற?” என்றார்.

மேகநாதன் தலையை திருப்பி கொள்ள, தாராவுக்கு சங்கடமாக இருந்தது.

“குணா மாமா, அத்தை குடிக்குறது இல்லை, நீங்க எப்போ குடியை விட போறீங்க?” என ஒரே போடாக கேட்டான் சிவா.

“அப்பா, அவர் வீட்டு செவத்துல போய் குடி குடியை கெடுக்கும்னு எழுதிட்டு வாப்பா” என்றது சேனா.

குணவேந்தன் குடிவேந்தனாக இருப்பதை குழந்தைகள் சொல்ல, மெதுவாக நகர்ந்தார் அவர்.

“அம்மா, நாங்க போய் யானையை பாத்துட்டு வரோம்” என சொல்லி குழந்தைகள் எழுந்து சென்றார்கள்.

“இன்னைக்கு நா டிகிரி பாஸ் பண்ணிட்டேன்னு கலாவதி டீச்சர் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. வெண்மணி அக்கா கிட்ட காசு குடுத்து கடைத்தெருவுக்கு அனுப்பி கேக் வாங்கிட்டு வர சொல்லி எல்லா டீச்சர்ஸுக்கும் என்னை குடுக்க சொன்னாங்க. நானே வாங்கியிருக்கணும், எனக்கு தோணலைங்க” என்றாள் தாரா.

“கரெக்ட்டு தான், இன்னொரு நாள் நீ எல்லாருக்கும் நம்ம சார்பா ஸ்வீட் குடுத்துடு” என்றார் மேகா.

“ஷூ கம்பெனிக்காரங்க சில டாக்குமெண்ட் கேட்டாங்கன்னு டீச்சர் சொன்னாங்க. நாளைக்கு முடிவு பண்ணி சொல்றேன்னு சொல்லி இருக்கேன். ஏதோ ஒரு பயம் மனசுல இருக்கு, ஆனா என்னன்னு சொல்ல தெரியல” என்றாள் தாரா.

“உன்னால முடியும் தாரா, இந்த வேலையில சேரும்போது எவ்வளவு யோசிச்ச? எப்படி இவ்ளோ சின்ன பசங்கள பாத்துகிறதுன்னு? ஆனா இந்த பத்து வருஷத்துல நீ எவ்ளோ இம்ப்ரூவ் ஆகி இருக்கே! இன்னைக்கு அந்த பயம் இருந்த இடம் தெரியாம போயிடுச்சி. அது போல தான் இப்பவும். ஒரு விஷயத்தை புதுசா ஆரம்பிக்கும் போது யாருமே அதுல எக்ஸ்பர்ட் கிடையாது. அதனால முடியும்னு நெனச்சி துணிஞ்சு இறங்கு” என ஊக்கம் கொடுத்தார் மேகா.

“சரிங்க, யோசிக்கிறேன்” என தாரா சொல்ல “வா கெளம்பலாம்” என்றார் மேகா.

அவர் ஆட்டோவை ஓட்ட, மற்ற மூவரும் பின் சீட்டில் உட்கார்ந்தார்கள்.

கோவிலை ஒட்டிய மெயின் ரோட்டில் கல்யாண ஊர்வலம் மெதுவாக போய் கொண்டிருந்தது.

ஆட்டோ டிராபிக்கில் நிற்க, “அம்மா, போன் குடு, எனக்கு போரடிக்குது” என கேட்டது சேனா.

“ஏன், உன்னால கொஞ்ச நேரம் சும்மா இருக்க முடியாதா?” என திட்டினான் சிவா.

சேனா கோபித்துக் கொண்டு மூஞ்சை திருப்பிக் கொண்டது.

தாரா என்ன செய்வது என யோசிக்கும் போது சேனா கையில் இருந்த வாட்டர் பாட்டில் ஒரு ஐடியாவை கொடுத்தது.

“சேனா, இந்த பாட்டிலை குடு, ஒரு கேம் சொல்லி தரேன்” என வாங்கி அதை அவர்கள் இருவரின் தொடைகளுக்கே நடுவே நிற்க வைத்தாள்.

playtime in Auto

“இதை கார் கியரா நெனச்சுக்கோ. அப்பா வேண்டிய நிறுத்தினா, நியூட்ரல்ல வை. மெதுவா ஸ்டார்ட் பண்ணா இடது பக்கம் போய், மேல் பக்கம் சாய்ச்சு வை. இன்னும் கொஞ்சம் ஸ்பீட் எடுத்தா செகண்ட் கியருக்கு அப்படியே பின்னாடி வா. ஒரே சீரா வண்டி ஓடுச்சுன்னா, கொஞ்சம் வலது பக்கம் வந்து முன்னாடி போ” என விளக்கினாள்.

சேனாவும் சிவாவும்  பயங்கர குஷியாகிவிட்டார்கள். அந்த டிராபிக் ஜாம் அவர்கள் பல முறை கியர் மாற்றி விளையாடுவதற்கு ஏதுவாக இருந்தது.

“அப்பா, என்கிட்ட சொல்லாமா ஏம்பா ஸ்பீடு எடுத்த? நான் இன்னும் பர்ஸ்ட் கியர்லயே இருக்கேன்” என அவரை செல்லமாக திட்டியபடியே அவசரமாக பாட்டிலை நகர்த்தினார்கள்.

மேகநாதனும் அவர்கள் விளையாட ஏதுவாக போக்கு காட்டி ஓட்டினார். அரை மணி நேரம் ஆனது வீடு வந்து சேர்வதற்க்கு.

“செம சேனா, அருமையா கார் ஓட்டி எங்களை எல்லாம் பத்திரமா வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டே!” என பாராட்டினான் சிவா.

“அந்த பார்மசி சந்துல நான் சரியா கியர் போடலண்ணா. நெக்ஸ்ட் டைம் கரெக்ட் பண்ணிக்கிறேன்” என தைரியமாக சொன்னது.

“பாத்தியா தாரா, இந்த சின்ன பொண்ணுக்கு இருக்குற நம்பிக்கையை? விளையாட்டா ஆரம்பிச்ச விஷயம், இப்போ அவளை ஒரு தேர்ந்த ட்ரைவரா உணர வெச்சிருக்கு. அவ கண்ணுல பயமோ, புது விஷயத்தை பழகுறோம் என்ற என்னமோ துளியும் இல்லை. தெரியலேன்னா வெளிப்படையா அத சொல்லி கத்துக்குறா. தெரியலேன்னு கூச்சப்படல” என மெதுவாக சொன்னார் மேகநாதன்.

தாராவுக்கு பொட்டில் அடித்தாற் போல தெளிவு ஏற்பட்டது.

“தேங்க்ஸுங்க, எனக்கு இப்போ புரிஞ்சிடிச்சு, நா ஹேண்டில் பண்ணிக்குறேன்” என சிரித்தாள் தாரா.

ஆறு மாதம் ஆனது. ஷூ கம்பெனி ப்ராஜெக்ட்டுக்காக, பயிற்சி வகுப்புகளை நேர்த்தியாக நடத்தி கொண்டிருந்தாள் தாரா.

மேகநாதன் இரண்டாவது வண்டி வாங்கி வீட்டின் முன் நிறுத்தினார்.

A new vehicle celebration

“ஹை, நம்ம வீட்டுக்கு குட்டி யானை வந்துடுச்சி!” என சிவா சந்தோஷமாக சொல்ல, “நா இதுக்கு பேரு வெச்சுட்டேன்!” என சொன்னது சேனா.

“என்ன பேருடி?” என ஆர்வமாக கேட்டான் சிவா.

“ரங்கு” என சொல்லி சிரித்தது சேனா. 

சிறப்பு சிறுகதை – அங்கன்வாடி அரிமாக்கள் – part 3/4

Family time

கதை நேரம் முடிந்து குழந்தைகள் வராண்டாவிற்கு செல்ல, ஊர் தலைவரும் கலாவதி டீச்சரும் வந்தார்கள்.

“லட்டு எடுத்துக்கம்மா, பசங்களுக்கும் குடுங்க” என பாக்ஸை நீட்டியவர் “நீ செஞ்சது பெரிய உதவிம்மா, நீ இல்லேன்னா நாங்க அடிக்கடி டவுனுக்கு போய் அலைய வேண்டியதா இருந்திருக்கும்” என சந்தோஷமாக நன்றி சொன்னார்.

கொஞ்ச நேரம் பேசி முடித்து விட்டு அவர் கிளம்ப, கலாவதி டீச்சர் மட்டும் இருந்தார்.

“தாரா, உக்காரு உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றார். அவர் சொன்னதின் சுருக்கம் இதுதான்.

பொன்னி நர்ஸ் மற்றும் தலைவர் மூலமாக, தாரா பற்றி ஆரம்ப சுகாதார நிலைய டாக்டருக்கு தெரிய வந்திருக்கிறது.

அவர் தாராவை பகுதி நேரமாக அந்த ஊர் பெண்களுக்கு யோகா சொல்லி தர நியமிக்க முடிவு செய்தார்.

அருகாமையில் இருந்த ஒரு ஷூ கம்பெனியின் CSR டீமிடம் பேசி, ஒரு குறிப்பிட்ட தொகையை தாராவுக்கு ஊதியமாக கொடுக்க ஏற்பாடும் ஆகி இருக்கிறது.

தாராவுக்கு இந்த வாய்ப்பு மகிழ்ச்சியாக இருந்தாலும், டிப்ளோமா மட்டும் படித்த தான் இதை பெறுப்பேற்று செய்ய முடியுமா என சந்தேகமாக இருந்தது.

மேலும் மாலை நேரத்தில் பிள்ளைகள் வீட்டில் இருக்கும் நேரத்தில் இந்த வேலையில் ஈடுபட்டால் எப்படி வீட்டை கவனிப்பது எனவும் குழப்பமாக இருந்தது.

“டிப்ளமோ மட்டும் தான் கைல இருக்கு டீச்சர். இன்னும் டிகிரி முடிக்கல. அதான் கொஞ்சம் யோசனையா இருக்கு, யோசிச்சு சொல்றேன் டீச்சர், ரொம்ப தேங்க்ஸ்” என்றாள் தாரா.

“ஷூ கம்பெனில இந்த ப்ரோக்ராம் அப்ரூவ் ஆக கொஞ்ச நாள் ஆகும், கவலைப்படாதே ” என சொல்லி கிளம்பி போனார் கலாவதி டீச்சர்.

அன்று இரவு உணவு நேரம். “இன்னைக்கு என்ன கதை சொன்னம்மா பசங்களுக்கு?” என கேட்டது சேனா.

“சூப்பரான யானை கதை. சீக்கிரம் சாப்பிட்டு வாங்க, சொல்றேன்” என்றாள் தாரா.

சற்று நேரத்தில் சாப்பிட்டு முடித்து வரிசையாக பாய் விரித்து தாரா படுக்க, இருவரும் வந்து ஆளுக்கொரு பக்கம் படுத்துக் கொண்டார்கள். மூடிய அவர்கள் கண்களுக்குள் காடு விரிய ஆரம்பித்தது.

கதை கேட்டபடியே மேகநாதன் கிச்சனை சுத்தம் செய்து முடித்தார். பிள்ளைகள் இருவரும் தூங்கிவிட “இங்க வாங்க ஒரு விஷயம் பேசணும்” என அழைத்தாள் தாரா.

டீச்சர் சொன்ன விஷயத்தை சொல்லி தன் குழப்பத்தை விளக்கினாள். பொறுமையாக கேட்ட மேகநாதன் “தாரா, ரங்குவ நெனச்சி பாரு, உன் கேள்விக்கு பதில் கிடைக்கும். இந்த வாய்ப்பு உனக்கு கெடச்சா, நாம ரெண்டாவது வண்டிய கடனில்லாம சீக்கிரம் வாங்கிடலாம்” என சொன்னார்.

அன்று இரவு தூக்கத்தில் பலவகையான பொறுப்புகள் வெவ்வேறு உருவங்களில் அவளை சுற்றி வருவது போல மங்கலாக ஒரு கனவு வந்தது.

அடுத்த வந்த நாட்கள் சாதாரணமாக இருந்தாலும் தாராவின் மண்டைக்குள் பல கேள்விகளை எழுப்பி கொண்டே இருந்தது.

ஒரு நாள் போல, இருபது சிறு குழந்தைகளை கவனித்துக் கொள்வது அசாதாரணமான வேலை. அவர்களுக்கு அமைதியான சூழலை அமைத்து கொடுப்பதே பெரும் பொறுப்பு.

ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் கவனித்து, பேசி, உணவு கொடுத்து தூங்க வைப்பது என அடிப்படை பராமரிப்பு பணிகள் ஏராளம்.

கூடவே அவர்களின் கற்றல் தேவைகளையும் பூர்த்தி செய்து, அந்த நாளின் முடிவில் அவர்கள் பெற்றோரிடம் நல்ல படியாக ஒப்படைப்பது வரை மறைமுகமான ஒரு அழுத்தம் அவள் மீது இருக்கிறது.

மறுபுறம் வீடு, குழந்தைகள், குடும்பத்தின் பொருளாதார சூழல் என அடுக்கடுக்காய் பல விஷயங்கள் அவள் மனதை ஆக்கிரமித்திருக்கிறது.

அந்த வாரம் நேரம் கிடைக்கும் போதெல்லாம்  கலாவதி டீச்சரிடம் போய் பேசினாள். அவருடைய அனுபங்களை கேட்கும் போது, தான் மட்டும் இந்த சூழலில் இல்லை என்பது தாராவுக்கு புரிந்தது.

சிறப்பு சிறுகதை – அங்கன்வாடி அரிமாக்கள் – part 2/4

Anganwaadi claaroom

ஒரு காட்டுல, ஒரு குட்டி யானை இருந்தது. அதோட பெரு ரங்கு.

அவங்க அம்மா, அப்பா ரெண்டு பேருக்கும் ரங்கு ரொம்ப செல்லம்.

ரங்கு கேட்ட எல்லாம் அதுக்கு கிடைக்கும். நல்ல நல்ல பழங்கள், கரும்பு, கிழங்கு வகைகள்னு அவங்க அப்பா அதுக்கு தேடி தேடி கொண்டு வந்து கொடுப்பாரு.

அவங்க அம்மா ரங்குவோட நல்லா வெளையாடுவாங்க. ரெண்டு பேரும் ஆத்துக்கு போய் தண்ணில ஆட்டம் போடுவாங்க. அப்புறம் அந்த ஆத்தங்கரைல படுத்து கதை பேசி பொழுது போக்குவாங்க.

ஒரு நாள் ரங்கு அவங்க அப்பா அம்மாவோட, காட்டுக்குள்ள ஒரு ட்ரிப் போச்சு.

மத்த அனிமல்ஸ மீட் பண்ணி பேசிகிட்டு இருந்தது. அப்போ அங்க சிங்க ராஜா வந்ததும் எல்லாரும் எழுந்து நின்னு அவருக்கு வணக்கம் சொன்னாங்க.

சிங்க ராஜாவும் தலையை ஆட்டிட்டு அவங்களை கடந்து போய்ட்டாரு. ரங்கு அவங்க அம்மாகிட்ட கேட்டுது “ஏம்மா இவரு மட்டும் ராஜாவா இருக்காரு?”

பார்ட்டி மோடில் இருந்த ரங்குவின் அம்மாவுக்கு இந்த நொய் நொய் கேள்விகள் எரிச்சலாக இருந்தது.

“சிங்கம் தாண்டா எப்பவும் காட்டுக்கு ராஜா, அவர்தான் பவர்புல்” என பொதுவாக சொல்லியது.

ரங்குவுக்கு ஆர்வம் அடங்கவில்லை. அங்கே இருந்த குட்டி குரங்கு சைமனிடம் போய் விளக்கம் கேட்டது.

A candid conversation between animals

மரக் கிளையில் தலை கீழாக தொங்கிக்கொண்டிருந்த அது, ரங்குவுக்கு அற்புதமான ஒரு பதிலை சொன்னது.

“நம்ம தல செம பாஸ்ட்டா ஓடும். அவரை யாரும் பீட் பண்ண முடியாது” என ஊசலாடியபடியே சொன்னது.

ராஜாவாகும் கனவில் இருந்த ரங்குவுக்கு அது பேரிடியான பதில்.

தன்னால் எக்காலத்திலும் ராஜாவாக முடியாது என வருந்தியது. ட்ரிப்பில் இருந்து வாலண்டரியாக ட்ராப் ஆகி போய் மரத்தடியில் படுத்துக் கொண்டது.

சிங்க ராஜா மாதிரி ஓட என்ன வேண்டும் என யோசித்தது. தன்னுடைய எடை தான் முதல் தடை என எண்ணியது.

எப்படியாவது வெயிட் லாஸ் செய்து ஸ்லிம்மாகி வேகமாக ஓடி, காட்டுக்கே ராஜாவாகி காட்ட வேண்டும் என முடிவு செய்தது.

அன்றிலிருந்து அதன் உணவை பெருமளவு குறைக்க ஆரம்பித்தது. நீண்ட தூரம் நடந்தும், ஓடியும் பயிற்சி செய்தது. அதன் விளைவாக சில நாட்களில் அது அதீத பலவீனமாக உணர்ந்தது.

ரங்குவின் பெற்றோர் அதை கூப்பிட்டு பேசினார்கள்.

“இங்க பாரு ரங்கு, கடவுள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு மாதிரி படைச்சிருக்கார். சிங்க ராஜா ஓடுவார். ஆனா அவரால ஓரளவுக்கு மேல வெய்ட் தூக்க முடியாது. ஆனா நம்மால முடியும். அதனால நம்ம பிறவிகேத்த இயல்பிலிருந்து நம்ம மாற நெனச்சா, அது பலன் கொடுக்காது. நீ உன்னோட பலத்தை நம்பு, அதில் முன்னேற முயற்சி செய்” என்றார்கள்.

“அப்போ அது ராஜா கனவு கண்டது என்ன ஆச்சு?” என ஆஷாதேவி உஷாராக கேட்டது.

ரங்குவே சமாதானம் ஆனாலும் ஆஷாதேவி தேடி போய் கொளுத்தி போடும் மூடில் இருந்தது.

“இன்னும் இருக்கு கேளுங்க” என தொடர்ந்தாள் தாரா.

அப்பா சொன்ன பேச்சை கேட்டாலும், ரங்கு ஏமாற்றமாக உணர்ந்தது. அடுத்த நாள் ரங்குவின் அம்மா அதை கூட்டிக் கொண்டு தோட்டத்துப் பக்கம் நடந்தார். 

“இங்க பாரு தங்கப்பா, ராஜான்னு யாரும் தன்னை தானே சொல்லிக்க முடியாது. அதை மக்கள் சொல்லணும். மக்களுக்கு வேண்டியதை, அவங்க கஷ்டத்தை, அவங்க வாய் விட்டு சொல்லாமலேயே ஒரு மன்னன் தீர்க்கணும். இல்லேன்னா நம்ம சிங்க ராஜ மாதிரி நம்ம பாதுகாப்பை உறுதி செய்யணும். பலத்தை காட்டுறதோ, வேகமா ஓடுறதோ ராஜாவுக்கான தகுதி இல்லை” என மெதுவாக சொல்லி ரங்குவுக்கு புரிய வைத்தது.

“நீ இப்போ குட்டி பையன். நீ நல்ல குணங்களோட வளர்ந்து, இந்த காட்டுல இருக்குறவங்களுக்கு பொறுப்பா உதவி செய்தீன்னா, அவங்களே உன்னை உயர்வா நடத்துவாங்க” என சொன்னது.

“சரிம்மா, புரிஞ்சுக்கிட்டேன். என் பலத்தை எப்படி நான் மெருகேத்துறது?” என ஆர்வமாக கேட்டது.

“நா சொல்றபடி கேளு” என சொன்னது அம்மா.

அன்று சில புற்களை ஒன்று திரட்டி, அந்த புல்கட்டை ரங்குவின் தும்பிக்கையால் தூக்க வைத்தது.

பிறகு சிறு கட்டைகள். அதன் பிறகு கரும்பு கட்டு. தொடர்ந்து வாழை கட்டுகள்.

மறுபுறம் தினமும் நீச்சல் பயிற்சி. ரங்கு வயதிலும் திறனிலும் வளர்ந்து பெரிய மர கட்டைகளை அநாவசியமாக தூக்கும் அளவிற்கு முன்னேறியது.

வருடங்கள் ஆனது. சிங்க ராஜாவுக்கும் வயதானது. அவர் உடல் நிலை மோசமடைய ஆரம்பித்தது.

காட்டில் ஒரு கவலை கண்ணுக்கு தெரியாமல் படர ஆரம்பித்தது. அந்த வருடம் கடும் மழை. ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடிக் கொண்டிருந்தது. எல்லாரும் எப்படியாடுவது சிங்கத்தை காப்பாற்ற வேண்டும் என கடவுளை வேண்ட ஆரம்பித்தார்கள்.

ஆஷாதேவி கைகூப்பி முதல் ஆளாக கண் மூடி பிரார்த்தனையை ஆரம்பித்தது. லைனாக மற்றவர்களும் பிரேயர் மோடுக்கு போனார்கள்.

ரங்குவும் அதன் நண்பர்களும் எப்படியாவது சிங்க ராஜாவுக்கு வைத்தியம் செய்ய முடிவெடுத்தார்கள்.

ஒருநாள் சைமன் வந்து ரங்குவிடம் ஒரு விஷயத்தை சொன்னது.

“ப்ரோ, ஆத்துக்கு அந்த பக்கம் ஒரு வைத்தியர் இருக்காறாம். பச்சிலை வைத்தியத்துல பெரிய ஆளுன்னு அங்க ஆயா சொல்லுது. அதுவும் பழங்கட்டை. அது சொன்னா சரியாதான் இருக்கும். நீ உதவி செய்தா நாம முயற்சி பண்ணி பாக்கலாம்” என ஆர்வமாக சொன்னது.

“சரி வா, போய் சிங்க ராஜாகிட்ட சொல்லலாம்” என ரெண்டு பெரும் கிளம்பினார்கள்.

ராஜாவின் குகை அமைதியாக இருந்தது. ராணி சிங்கம் சோகத்தில் இருந்தார்.

“ராஜா, நா சைமன் வந்திருக்கேன். ரங்குவும் இருக்கான், கண்ண தொறங்க” என்றது குரங்கு.

ஆஷாதேவி கண்ணே வெளியே வரும் அளவுக்கு வாயை பிளந்து கேட்டு கொண்டிருந்தது.

“தொறந்துட்டாரா கண்ணை?” என ஆர்வமாக கேட்டது.  

 ஆஷாதேவி சிங்க ராஜாவின் பிரேயர் மீட்டிங்கை எப்போதோ மனதில் நடத்தி விட்டது.

“இரு சொல்றங்கள்ல” என்றது ஷைலா.

சிங்க ராணி வந்து உதவி செய்ய, ராஜா பெட்டில் சாய்ந்து உட்கார்ந்தார். குட்டி முயல் கொடுத்த வெந்நீரை வாங்கி மெதுவாய் பருகினார்.

சைமன் வைத்தியர் விஷயத்தை சொல்லி, “ராஜா, நீங்க மட்டும் சரின்னு சொல்லுங்க, நாங்க உங்களை வைத்தியர் கிட்ட கூட்டிட்டு போறோம்” என உறுதியாக சொன்னது.

“என் காலம் முடிஞ்சு போச்சு. நீங்க வாழ வேண்டிய பசங்க. எனக்காக எதுக்காக ரிஸ்க் எடுக்குறீங்க? என்னால எங்கயும் நகர முடியாது. இந்தம்மாவ நல்லா பாத்துக்குங்க” என உயில் மட்டும் எழுதாத குறையாக பேசினார் ராஜா.

“எங்க ஆயா கூட இப்படி தான். டாக்டர் வீட்டுக்கு கூப்பிட்டா ஒடனே வராது. அத ஆட்டோல ஏத்துறதே பெரிய கஷ்டம்” என சொந்த கதையை சொருகியது ஆஷாதேவி.

சிங்க ராணி கண்ணீர் சிந்த, குட்டி முயல் மூக்கை சிந்த, அதை பார்த்த ராஜாவின் மனம் மாறியது.

“ஏதோ இவங்க திருப்திக்காக வரேன்” என ஒப்புக்கொண்டார்.

சைமனும் ரங்குவும் போர் கால அடிப்படையில் வேலையை ஆரம்பித்தார்கள். மழை பொத்துக்கொண்டு ஊத்தியது.

ராஜாவின் கிச்சனில் இருந்து பெரிய வாழை இலைகளை கொண்டு வந்து அவரை சுற்றி கட்டினார்கள்.

ஒரு சந்தன மர பலகையில் புல் கட்டுகளை அடுக்கி, அதன் மீது ராஜாவை தூக்கி உட்கார வைத்தார்கள். பிறகு கயறு போட்டு கட்டி அந்த பலகையை ரங்குவின் மீது தூக்கி வைத்தது சைமன். பிறகு அதுவும் ரங்குவின் மீது ஏறி ராஜாவுக்கு பாதுகாப்பாக உட்கார்ந்து கொண்டது.

எல்லோரும் வரிசையில் நின்று வழியனுப்ப, ரங்கு சுழன்று ஓடும் ஆற்றில் மெதுவாக இறங்கியது. காற்றும் மழையும் தீவிரமாக, அவர்களுக்கு கண் பார்வையும் மறைக்க ஆரம்பித்தது.

“ப்ரோ, நா இவரை புடிச்சிக்குறேன். நீ அட் அ டைம்ல ஒரு ஸ்டெப் மட்டும் எடுத்து வை” என அட்வைஸ் செய்தது சைமன்.

“நீ கவலைபடாதே, என் வேலையே இதான். நீ அவரை மட்டும் விட்டுராத, கெட்டியா புடிச்சிக்கோ” என சொல்லி எச்சரிக்கையாக நீந்தியது ரங்கு.

ஆற்றின் மறுகரை அடைய ஒரு மணி நேரம் ஆனது.

வைத்தியர் ஆற்றங்கரையில் காத்துக் கொண்டிருந்தார். ரங்குவும் சைமனும் அவரை வணங்கிவிட்டு அவர் குடிலுக்கு பின் தொடர்ந்தார்கள்.

குடிலில் ராஜாவை இறக்கி வைத்தியர் கண்காணிப்பில் விட்டு விட்டு இருவரும் வெளியே நின்றார்கள்.

சற்று நேரம் கழித்து வந்த வைத்தியர், “அவர் நெலமை சரி இல்லை. அதுனால அவர் பத்து நாள் இங்க இருக்கட்டும். என்னால முடிஞ்சதை செய்யுறேன்” என அனுப்பி வைத்தார். பத்து நாள் ஆனது. ராஜா நலமாக இருக்கிறார் என அவரிடம் இருந்து செய்தி வந்தது.

ரங்குவும் சைமனும் மீண்டும் அவரை போய் அழைத்து வந்தார்கள். சிங்கராஜா அவர்கள் இருவரின் பெற்றோருக்கும் கண்ணீரோடு நன்றி தெரிவித்தார்.

“ரங்கு, இனிமேல் நீதான் என்னையும், இந்த காட்டையும் பார்த்துக் கொள்ள வேண்டும்” என சொல்லி அதை ஆசீர்வதித்தார்.

ரங்கு அவரை வணங்கிவிட்டு, அதன் பெற்றோருக்கும் வணக்கம் வைத்தது.

சைமனும் அதன் மற்ற தோழர்களும் சந்தோஷமாய் கைதட்ட, அந்த காடே உற்சாகமாக இருந்தது. 

கதை முடிய, “இப்போ இந்த கதைல இருந்து நீங்க என்ன கத்துக்கிட்டீங்க?” என கேட்டாள் தாரா.

குழந்தைகள் ஆளாளுக்கு ஒரு மாரலை கண்டுபிடித்து சொன்னார்கள்.

முடிவாக தாரா சொன்னாள் “நீங்கள் யாராக இருந்தாலும், நீங்கள் தேர்ந்தெடுத்த பாதையில் தொடர்ந்து முயற்சி செய்து, நல்வழியில் நடந்தால், ஒரு நாள் வெற்றி உங்களை தேடி வரும்!”

சிறப்பு சிறுகதை – அங்கன்வாடி அரிமாக்கள் – part 1/4

anganwadi golden jubilee celebration

தாரா அன்று அங்கன்வாடிக்கு சென்று சேரும்போது பெரும்பாலான குழந்தைகள் வந்திருந்தார்கள். உதவியாளர் வெண்மணி அவர்களை அமர வைத்துவிட்டு, தண்ணீர் குடம் கொண்டு வந்து வைத்தார்.

பொன்னி நர்ஸின் போன் வந்தது தாராவுக்கு. “நம்ம கல்பனாவுக்கு பொண்ணு பொறந்திருக்கு தாரா. நார்மல் டெலிவரி. உன்கிட்ட தலைவர் சொல்ல சொன்னார். அப்புறம் வந்து உன்கிட்ட நேர்ல பாத்து பேசுறேன்னார்” என சொல்லி போனை வைத்தார்.

கல்பனா ஊர் தலைவர் மகள். கர்ப்ப காலத்தில் ரெகுலராக அங்கன்வாடிக்கு வருவாள். பேச்சு வாக்கில் ஒரு நாள் சுக பிரசவத்துக்காக சில யோகா முறைகளை டாக்டர் செய்ய சொன்னதாகவும், அதை யாருடைய கண்காணிப்பும் இன்றி தனியே செய்ய பயமாக இருப்பதாகவும் சொன்னாள்.

தாரா யோகாவில் டிப்ளமோ பட்டம் முடித்திருந்தாள். “சரி கல்பனா, நீ கவலைப்படாதே. நா வீட்டுக்கு வந்து நேர்ல சொல்லி தரேன். நீ பயமில்லாம செய்” என சொல்லி ஊக்கப்படுத்தினாள்.

அடுத்த நான்கு மாதம் தாராவின் நேரடி மேற்பார்வையில், யோகா, தியான பயிற்சி மற்றும் ஊட்டசத்து குறிப்புகள் என கல்பனாவுக்கு சரியான வழிகாட்டுதல் கிடைத்தது. இன்று அவளுக்கு நல்லபடியாக குழந்தை பிறந்தது தாராவுக்கு சந்தோஷமாக இருந்தது. வெண்மணி அம்மாவை கூப்பிட்டு விஷயத்தை சொல்லி விட்டு வகுப்பறைக்கு சென்றாள்.

அன்றைய நாளுக்கான வேலைகளை தாரா யோசித்துக்கொண்டிரும்போது, தூரத்தில் ஷாருக்கின் அழுகுரல் கேட்டது.

“இன்னைக்கும் அழுவுறானா? இவனை எப்படி சமாளிக்க போறம்மா?” என்றார் வெண்மணி.

“வரட்டும், பாத்துக்கலாம்” என சொன்னாள் தாரா.

தேம்பி தேம்பி அழுதபடியே வந்த ஷாருக்கை வெண்மணி வாங்கிக் கொண்டு அவன் அம்மாவை அனுப்பி வைத்தார்.

“ஏன்டா அழுவுற?” என அதட்டலாக கேட்டாள் தாரா.

சற்று அழுகை நின்று, “அக்காக்கு மட்டும் ஜாமென்டரி பாக்ஸ் வாங்கி கொடுத்துட்டாங்க. நா கேட்டா அப்புறம் வாங்கி தரேன்னு சொல்றாங்க” என சொல்லி மீண்டும் அழுகையை ஆரம்பித்தான்.

தாரா யோசிக்க “அவுங்க அக்கா ஆறாம் க்ளாஸ் படிக்குறாங்க. இவனுக்கு எதுக்கு?” என அவனை அல்பமாக பார்த்துக் கொண்டே சொன்னது ஆஷாதேவி.

முக்திக்கு முன் நிலையில் இருப்பது போல இருந்தது ஆஷாதேவியின் உரை.

“சரி வாங்க, எல்லாரும் ரவுண்டா உக்காருங்க, உங்களுக்கு கதை சொல்ல போறேன்” என டாபிக்கை மாற்றினாள் தாரா.

ஷாருக் இன்னும் சமாதானம் ஆகவில்லை. ஜாமென்டரி பாக்ஸ் விஷயத்தில் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக எண்ணி உருண்டு உருண்டு அழுது கொண்டிருந்தான்.

இப்போது தான் எண்களில் நூறு வரை சொல்ல கற்று கொண்டிருக்கிறான். இவனுக்கு ஜாமென்டரி பாக்ஸ் தேவைப்பட இன்னும் சில ஆண்டுகள் இருக்கிறது. அக்காவுக்கு கிடைத்தது தனக்கும் கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் தவிர வேறொன்றுமில்லை.

“டேய் ஷாருக், வெண்மணி அம்மாவுக்கு கால் வலி இருக்குது. அவங்களால செடிக்கு தண்ணி ஊத்த முடியல. கொஞ்சம் போய் வராண்டால அழுவுடா, அதுங்களுக்காவது தண்ணி கிடைக்கும்” என ஆஷாதேவி பொறுமையிழந்து கத்தியது.

ஷாருக்கை இன்ப்ளுயன்சாராக கருதி ஷைலா டேமை திறந்தது.

“நீ ஏன் அழுவுற?” என தாரா கேட்க, “அம்மா வேணும்!” என மூக்கை சிந்தியது.

ஷைலா அங்கன்வாடிக்கு வர ஆரம்பித்து பத்து மாதங்களுக்கு மேலாகிறது!

இப்போது என்ன திடீர் அம்மா பாசம் என ஆஷாதேவிக்கு புரியவில்லை.

இதுங்களால் கதை நேரம் குறைவதை அதனால் ஏற்று கொள்ள முடியவில்லை.

ஷாருக்கை அம்போவென விட்டு விட்டு ஷைலாவை மியூட் செய்ய நகர்ந்தது.

தாரா எல்லோரையும் கவனித்தவாறே, பாயை விரித்து ஒவ்வொருவராய் உட்கார வைத்து, சாமிக்கு பூ வைத்து விட்டு, “எல்லாரும் கண் மூடி, கை கூப்புங்க” என சொன்னாள்.

“ஷாருக், வா இங்க வந்து உக்காரு. ஷைலா, நீ இந்த பக்கம் வா” என ரெண்டு பேரையும் தன்னருகே அமர்த்திக் கொண்டாள் தாரா.

“ஷாருக், உனக்கு என்ன அனிமல் புடிக்கும் சொல்லு?” என கேட்டாள்.

“சிங்கம்” என சிவந்த கண்களோடு வீரமாய் சொன்னான் ஷாருக்.

 ஆஷாதேவி வேண்டுமென்றே களுக்கென சத்தமாக சிரிக்க, மற்ற வாண்டுகளும் சிரிக்க ஆரம்பித்தது.

தாராவுக்கே அவன் பதில் சொன்ன வேகம் காமெடியாக இருந்தது.

“சைலன்ஸ், ஷைலா உனக்கு யார் பிடிக்கும்?” என கேட்டாள்.

“யானை” என்றது ஷைலா.

“சூப்பர், இன்னைக்கு நம்ம கதைல சிங்கமும் யானையும் தான் வர போறாங்க” என தாரா சொல்ல, ரெண்டு பேரும் அடுத்த நொடியே உற்சாகமானார்கள். அவரவர் மனதில் அந்த கதைக்களம் விரிய ஆரம்பிக்க, அந்த பள்ளி வளாகம் ஒரு மாய காடாக மாறிக் கொண்டிருந்தது.

Political Parody Rhymes – 3

tamil rhymes

பூரி குமாரி : ஏங்க, இந்த வார ரைம்ஸ்க்கு என்ன தீமுங்க?

கோல்கப்பா : எனக்கு மண்டை வறண்டு கெடக்கு, நீயே யோசிச்சு சொல்லு!

பூரி குமாரி : ஊரே வெள்ள காடா இருக்கு, நீங்க என்ன மண்டை காஞ்சு இருக்கீங்க?

கோல்கப்பா : ஹா, ஐடியா! மழையை வெச்சி ரைம்ஸ் போடலாம்.

பூரி குமாரி : சும்மாவே ஜனங்க மாநகராட்சியை திட்டுவாங்க! இதுல திட்டவான்னு இந்த புயலுக்கு பேரு வச்சிருக்காங்க!!

கோல்கப்பா : ஹீஹீஹீ, அது திட்டவா இல்ல டார்லிங்! “டிட்வா“!!

பூரி குமாரி : ஹாஹாஹா, இது நீங்க கொள்கைப்பா ஆனா மாதிரி இருக்கு! எனக்கு என்னவோ புயலுக்கு பேரு வெச்சவங்க மேல சந்தேகமா இருக்கு!

கோல்கப்பா : பேருல இருக்க அக்கப்போரவிட, ஊருல ஜாஸ்தியா இருக்கு! மக்களே, இந்த ஒரிஜினல் ரைம்ஸ் கேட்டுட்டு, நம்ம வெர்ஷனை படிச்சி என்ஜாய் பண்ணுங்க!

பூரி குமாரி : நம்ம ரைம்ஸ் படிக்கறதுக்கு முன்னாடி இந்த படத்தை நல்லா பாத்துக்குங்க, மக்கள் படுற கஷ்டம் புரியும்!

chennai rain

பொட்டி
கண்ணம்மா!!

இப்போ மழை வந்தா
என்ன பண்றது?

எல்லாரும் சேர்ந்து
போட்டிங் போலாமா?

மொத்த கப்பம்
வாங்கி கொண்டேன்!

கால்வாய் தோண்டி
மூடாமல் விட்டேன்!

போ மழையே போ,
போ மழையே போ!!

மொத்த கப்பம்
வாங்கி கொண்டேன்!

கால்வாய் தோண்டி
மூடாமல் விட்டேன்!

போ மழையே போ,
போ மழையே போ!!

சின்ன தொகையை
விட்டு வைத்தேன்!

பம்பு மோட்டார்
எடுத்து வைத்தேன்!

போ மழையே போ,
போ மழையே போ!!

வீதி பக்கம்
வந்து பார்த்தேன்!

பேட்ச் ஒர்க்க
போட்டு வைத்தேன்!

போ மழையே போ,
போ மழையே போ!!

வெள்ள காடாய்
நகரம் மாறும்!

பாலம் எல்லாம்
பார்க்கிங் ஆகும்!

போ மழையே போ,
போ மழையே போ!!

ஏரி குளம்
விற்று விட்டோம்!

வயல் வெளியில்
கல்லு நட்டோம்!

போ மழையே போ,
போ மழையே போ!!

கள்வர் நாங்கள்
கொழிக்க வேண்டும்!

தொகை என் பையில்
கொட்ட வேண்டும்!

போ மழையே போ,
போ மழையே போ!!

வடிகால் நாங்கள்
போடவில்லை!

நீர் நிலைகள்
தூர் வாரவில்லை!

போ மழையே போ!


காட்டி கொடுக்காமல்,
போ மழையே போ!!

மொத்த கப்பம்
வாங்கி கொண்டேன்!

கால்வாய் தோண்டி
மூடாமல் விட்டேன்!

போ மழையே போ,
போ மழையே போ!!

மொத்த கப்பம்
வாங்கி கொண்டேன்!

கால்வாய் தோண்டி
மூடாமல் விட்டேன்!

போ மழையே போ,
போ மழையே போ!!

Tamil joke – கொள்கைப்பா Wanted!!

pani poori cheered by public

கோல்கப்பா: ஏம்மா, நம்ம வீட்டுக்கு வெளில ஏதோ சத்தம் கேக்குதே? போய் பாத்துட்டு வாம்மா.

(சில நிமிடங்களுக்கு பிறகு பதட்டத்தோடு ஓடி வருகிறார் பூரி குமாரி)

பூரி குமாரி: ஏங்க, உங்கள தேடி நெறய ஆளுங்க வந்திருக்காங்க, வாங்க வெளில வந்து பாருங்க.

கோல்கப்பா: என்ன தேடியா?

பூரி குமாரி: உங்களத்தாங்க! “கோல்கப்பா….கோல்கப்பான்னு” ஒரே கூச்சலா இருக்கு.

கோல்கப்பா: சரி வா, போய் பாக்கலாம்.

(இருவரும் வீட்டுக்கு வெளியில் வந்து ஆட்களை சந்திக்கிறார்கள். முன் வரிசையில் இருந்த ஒருவர் கோல்கப்பாவிடம் வந்து பேசுகிறார்)

முதல் மனிதர்: சார், நீங்க கொள்கைப்பா தானே? உங்களை தான் நாங்க தேடிகிட்டு இருக்கோம்.

(கோல்கப்பா புரியாமல் முழிக்கிறார்)

கோல்கப்பா: என்ன ஏம்பா தேடுறீங்க?

முதல் நபர் : சார், எங்க கட்சிக்கு கொள்கை பிடிப்புள்ள ஆளுங்க வேணும். இந்த ஏரியால விசாரிச்சா உங்கள பத்தி சொன்னாங்க. நீங்க கொள்கைப்பாவாமே? நீங்க எங்க கட்சிக்கு வந்துட்டீங்கனா, எங்களை யாரும் கொள்கை இல்லாதவங்கன்னு சொல்ல முடியாது!!!

கோல்கப்பா: யோவ், நா கொள்கைப்பா இல்ல? கோல்கப்பா!!!

முதல் நபர் : சார், உங்க பேர ஸ்டைலா சொல்லி பாருங்க! நீங்க கொள்கைப்பான்னு நீங்களே நம்பிடுவீங்க!

இரண்டாம் நபர் : சார், நீங்க எங்க கட்சிக்கு வந்துட்டீங்கனா, எங்க கிட்டயும் கொள்கை இருக்குக்குனு நாங்களும் ஸ்டைலா சொல்லிக்குவோம்.

கோல்கப்பா: ஸ்ஸ்ஸ்ஸ்…ஸ்ஸுப்பா…யோவ் தமிழ ஒழுங்கா படிங்கைய்யா, நா கொள்கைப்பா இல்ல! கோல்கப்பா, கோல்கப்பா, கோல்கப்பா!!!

முதல் நபர் (சத்தமாக கத்துகிறார்) : தலைவர் கொள்கைப்பா வாழ்க! தலைவர் கொள்கைப்பா வாழ்க!

(கூடி இருக்கும் மக்களும் கோஷம் எழுப்புகிறார்கள். பூரி குமாரி அதிர்ச்சியில் இருந்து மீளாமல் நேசப்பா காதருகே போய் பேசுகிறார்)

பூரி குமாரி: ஏங்க, நம்மளே தள்ளு வண்டி கோஷ்டி! நம்மள தூக்கி வாலண்டரியா அவுங்க வண்டில ஏத்த பாக்குறாங்க?

கோல்கப்பா: இரு, எப்படியாவது பேசி இவுங்ககிட்டேயிருந்து தப்பிக்கலாம்.

முதல் நபர் : இப்பவே என்னோட வாங்க. நான் தான் எங்க கட்சி தலைவரோட மனசாட்சி! உங்கள பத்தி அவர்கிட்ட சொல்லி நல்ல போஸ்டிங் வாங்கி தரேன்!

பூரி குமாரி: கோல், இவன் சொல்றத நம்பாதீங்க! இவன் சரியான பிறழ்சாட்சி பார்ட்டி!

கோல்கப்பா: ஓஒ, அது எப்படி உனக்கு தெரியும்?

(பூரி குமாரி கடுப்பாகி முறைக்கிறார்)

இரண்டாம் நபர் : சார், நீங்க முப்பது வருஷ பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரர்னு கேள்விப்பட்டோம். நீங்க கண்டிப்பா எங்க கட்சில வந்து சேரணும் சார்!

கோல்கப்பா: யோவ், நா முப்பது வருஷ பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரன் இல்ல! பொதுமக்கள் வாய்க்கு சொந்தக்காரன்!! என்ன விட்டுருங்கய்யா.

(கூட்டத்தில் இருந்து ஒருவர் முன்னே வந்து ஆவேசமாக பேசுகிறார்)

மூன்றாம் நபர் : உண்மைத் தலைவன் ஒரு நாள் வீதிக்கு வந்தே தீருவார்! நீங்கள் மக்கள் பணிக்கு கண்டிப்பாக வர வேண்டும்.

(கோல்கப்பா சோர்வாகி விடுகிறார்)

கோல்கப்பா: யோவ்வ், வாயில நல்லா வருது எனக்கு! நான் இத்தனை வருஷமா வீதி ஓரமா தான்யா இருக்கேன். இப்போதான் உங்க கண்ணுக்கு தெரியுறேனா?

இரண்டாம் நபர் : நீங்க நல்லா வியூகம் அமைப்பீங்கன்னு பேசிக்குறாங்க, வாங்க சார் நம்ம கட்சிக்கு!

பூரி குமாரி : ஏங்க, சாயங்காலம் ஆறு மணிக்கு மேல இவருக்கே View கம்மிங்க!! இவரு எங்கங்க உங்களுக்கு வியூகம் அமைக்குறது?

மூன்றாம் நபர் : கொள்கைப்பா, rugged ஆனா ஆளுன்னு ஜனங்க சொல்றாங்க?

கோல்கப்பா: யோவ், நா ரகடா பூரிய்யா! என்ன உட்டுருங்கய்யா…

முதல் நபர் : எங்க கட்சில ரெண்டாம் கட்ட தலைவர்கள் இல்லன்னு குறை சொல்றாங்க. நீங்க தான் களப்பணி புலின்னு கேள்விப்பட்டோம். உங்கள கட்சில சேக்காம விடமாட்டோம்…வாங்க சார்.

பூரி குமாரி : ஏங்க, இவரு களப்பணி புலியெல்லாம் இல்லேங்க. இவரு புளித்தண்ணி கலக்குறவர்!!ஹீஹீஹ்ஹீ….

pani poori is upset

(கொல்லென்று சிரித்தபடியே பூரி குமாரி சொல்ல, கோல்கப்பா அவமானத்தில் முறைக்கிறார்)

பூரி குமாரி : நல்லா கேட்டுக்குங்க, கொஞ்சம் ஸ்வீட் பாணி, கொஞ்சம் ஹாட் பாணின்னு இவரே ஒரு ரெண்டுங்கெட்டான் ஆளு! இவரை போய் ரெண்டாம் கட்ட தலைவர் ரேஞ்சுக்கு சொல்றீங்க!

கோல்கப்பா: எவ்வளவு நாள் வஞ்சம்டி உனக்கு, என்ன இப்படி கழுவி ஊத்துற?

பூரி குமாரி : இவங்க கிட்டேருந்து நீங்க தப்பிக்கணும்னா இப்படி தாங்க சொல்லணும். இல்லேன்னா அப்புறம் ஊரே உங்கள கழுவி ஊத்தும். இப்போ எப்படி மடை மாத்துறேன்னு பாருங்க!

(பூரி குமாரி தொண்டையை செருமியபடியே கூட்டத்தை நோக்கி பேசுகிறார்)

பூரி குமாரி : இவரை கட்சில சேத்தீங்கன்னா, உங்க கட்சில பேரளவுலதான் கொள்கை இருக்குன்னு சொல்லுவாங்க.!! கொள்கைப்பான்னு ஒருத்தர் கட்சில இருக்குறதால வர போற இந்த கெட்ட பேர் உங்களுக்கு தேவையா? நல்லா யோசிங்க!!

கோல்கப்பா (ரகசியமாக): அடிப்பாவி, மண்டைய கழுவுறதுல நீ இவ்ளோ எக்ஸ்பர்ட்டா!!

முதல் நபர் (யோசிக்கிறார்): ஆமாம், அப்போ நாங்க கொள்கைக்கு என்ன பண்றது?

பூரி குமாரி : கொள்கைய தூக்கி கெடப்புல போடுங்க. நீங்க தான் உங்க பாக்கெட்ல மக்கள் சேவைன்னு ஒரு மேட்டர வச்சுருக்கீங்களே, அத பத்தி யோசிங்க!!

இரண்டாம் நபர் : இப்போவே நவம்பர் வந்துடுச்சி. அடுத்த ஏப்ரலுக்குள்ள சேவைய எங்க போய் நாங்க கண்டுபுடிக்குறது?

(கோல்கப்பா மண்டையில் பல்பு எரிகிறது)

Paani poori gat an idea

கோல்கப்பா: இவ தான் சேவ்பூரி. உங்களுக்கு தோதான ஆளு. “மக்கள் சேவையே மகேசன் சேவைன்னு” உருட்ட உங்களுக்கும் வசதியா இருக்கும்.

கோல்கப்பா: இதுல டாப்பா ஒரு விஷயம் இருக்கு! உங்க கிட்ட தத்தி இருக்கு, எங்க கிட்ட தஹி சேவ்பூரி இருக்குன்னும் நீங்க பீத்திக்கலாம்!!!

(“தங்கத் தலைவி, தானைத் தலைவி சேவ்பூரி வாழ்க” என கூட்டம் ஆர்ப்பரிக்கிறது)

முதல் நபர் :ஹாஹாஹா, சார் அட்டகாசமான மேட்டர் சார் இது. நீங்க Quote தலன்னு ப்ரூவ் பண்ணிட்டீங்க சார்!!!

கோல்கப்பா: உங்க கிட்ட மூணு அட்டகாசமான தலைங்க இருக்காங்க! என்ன ஆள விடுங்கடா சாமி!!

TVK leaders

கோல்கப்பா: மக்களே, இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி மகிழுங்கள்!! Bye!!