ஆஸ்பிடல் போய் சேர்ந்து, டாக்டரிடம் எல்லாவற்றையும் சொல்லி முடித்து என்ன சொல்லுவார் என உட்கார்ந்திருந்தாள்.
மருந்து கொடுத்து வீட்டுக்கு அனுப்பி விட்டால் பரவாயில்லை என இருந்தது. அட்மிஷன் போட்டால் சமாளிப்பது கஷ்டம். பவாவை தோளில் போட்டு தட்டியபடியே கடவுளை வேண்டி கொண்டாள்.
சற்று நேரத்தில் இன்னொரு டாக்டரும் வர, அட்மிஷன் போடுவது என முடிவு செய்தார்கள்.
அடுத்த கால் மணிநேரத்தில் இரண்டாவது மாடியில் ரூம் ஒதுக்கப்பட்டது.
ரூமில் பைகளை பைகளை வைத்து விட்டு ட்ரைவர் கிளம்பி செல்ல, பவாவை படுக்கையில் கிடத்தி விட்டு, பாத்ரூம் போய் விட்டு வந்தாள்.
ஜன்னலருகே போய் நின்றால் வெளியே பெண்ணா நதி அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது.
“லைன் போடணும், கொஞ்சம் வெளியே இருங்க” என்றார் சிஸ்டர்.
“சிஸ்டர், இவ நைட் பூரா தூங்கலை. இப்போ தான் அசந்து தூங்குறா. கொஞ்ச நேரம் தூங்கட்டும். அப்புறம் போடலாமா?” என கேட்டாள் சுதா.
“இல்லீங்க, இப்போவே போடணும். நீங்க வெளிய இருங்க. பாய்ஸ், நீங்க ரெண்டு கால புடிச்சிக்குங்க” என வேலையை ஆரம்பித்தார்.
சுதா வெளியே வந்ததும் அவர்கள் கதவை சாத்தினார்கள்.
அடுத்த நிமிடம் “வீர்ர்” என பவாவின் அழுகை குரல் கேட்டது. ஐந்து நிமிடம் கடந்ததும் அழுகை நின்றபாடில்லை.
சிஸ்டர் வெளியே வர சுதா உள்ளே ஓடினாள்.
இன்னும் லைன் போடவில்லை. “மேடம், நரம்பு கிடைக்கலை, சிஸ்டர் போய் லேப் டெக்னீஷியன அனுப்புவாங்க” என்றார் வார்டு பாய்.
சுதாவுக்கு கோபம் தலைக்கேறியது. பவா கெட்டியாக கட்டிக் கொண்டது அவளை.
சற்று நேரத்தில் ஹெட் நர்ஸ் வரதா வந்தார். “பவாவ குடு சுதா” என வாங்கி கொண்டார்.
“நீ ரூம்லயே இரு சுதா. நா இவளை லேபுக்கு தூக்கிட்டு போறேன். அங்க கொஞ்சம் டாய்ஸ் இருக்கும். நா பாத்துக்குறேன்” என சொல்லிவிட்டு கிளம்பினார்.
எல்லாரும் கிளம்ப, வரதா தோளில் துவண்டு போய் சாய்ந்திருந்தது பவா.
இன்னும் லேபில் போய் எப்படி அழப்போகிறாளோ என கவலையோடு இருந்தாள் சுதா.
ஹவுஸ்கீப்பிங் கனகம்மா சாப்பாடு கொண்டு வந்து வைத்து விட்டு விசாரித்தார்.
“என் பையன் ஜெகன் பேக்டரில பம்பு மெக்கானிக்கா இருக்கான். சாரு பொண்ணுக்கு முடியல, போய் பாத்துக்கணு வரதம்மா சிஸ்டர் சொன்னாங்க. நா இந்த மாடிலதான் இருப்பேன். எப்போ வேணா கூப்புடுமா” என சொன்னார்.
அவர் பேசியதில் பாதி கூட காதில் விழவில்லை சுதாவுக்கு.
கனகம்மாவுக்கு தேங்க்ஸ் சொல்லி அனுப்பி சேரில் போய் சாய்ந்து உட்கார்ந்து கண் மூடினாள்.
இருபது நிமிடம் ஆனது. காரிடாரில் பவாவின் சத்தம் கேட்டது. சுதா வெளியே வர, வரதா கையிலிருந்த பவா சுதாவிடம் தாவியது.
மண்டையில் பெரிய கட்டோடு வந்திருந்தது. சுதாவுக்கு பேச்சே வரவில்லை.
ராஜு மற்றும் சுதா இருவரின் பெற்றோர் சென்னையில் வசிக்கிறார்கள். இவர்கள் சென்னையிலிருந்து நானூறு கிலோமீட்டர் தொலைவில் தாதிபத்ரி என்கிற டவுனில் இருக்கிறார்கள்.
ஆந்திராவில் உள்ள அனந்தபூர் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது தாதிபத்ரி. ராஜூவும் சுதாவும் காலேஜில் ஒரே பிரிவில் படிக்கும்போது சந்தித்தார்கள். இருவரும் மெக்கானிக்கல் இன்ஜினியர்கள். ராஜு வேலைக்கு சேர்ந்ததும் திருமணம் நடக்க, இருவரும் ஒரு வருடம் குஜராத்தில் பணி செய்தார்கள். பவா பிறந்த பிறகு சுதா வேலையை விட்டு விட்டாள். பிறகு தாதிபத்ரி சிமெண்டு பேக்டரியில் ராஜுவுக்கு வேலை கிடைக்க இங்கே வந்து செட்டிலாகி விட்டார்கள்.
நேரம் ஆக ஆக பவாவின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை.
இன்றும் வீட்டில் வைத்து மருந்து கொடுப்பது வீண் என்று விடியற்காலை சுதாவுக்கு தோன்றியது.
எட்டு மணிக்குள் ஜுரம் குறையாவிட்டால் டவுன்ஷிப் ஹாஸ்பிடலுக்கு போவதுதான் சரி.
ராஜு இன்னும் கொஞ்ச நேரத்தில் கிளம்பி விடுவான்.
அவன் இருக்கும் போதே கொஞ்சம் பவாவுக்கு மட்டும் சமைத்து வைத்துக்கொள்ளலாம் என்று யோசித்தாள்.
இரவு முழுக்க விட்டு விட்டு தூங்கியது மண்டை வலி பிளந்தது.
காபி குடித்தால் தேவலாம் போலிருந்தது. காபி கலக்கும்போதே மனம் தானாக ஹாஸ்பிடலுக்கு என்ன பேக் செய்யலாம் என்று லிஸ்ட் போட்டது.
ஜன்னல் வழியே பேக்டரி விளக்குகள் இன்னும் மின்னிக்கொண்டே இருந்தன. சவுத் கேட் புகை போக்கி வெண்புகையை மெலிதாய் வானத்தில் நிரப்பிக்கொண்டிருந்தது.
இன்றைய பவாவின் மெனு சுதாவுக்கு ஒன்றும் புரிபடவில்லை. பேசாமல் எல்லாவற்றையும் செய்து பேக் பண்ணிவிடலாம் என்று நினைத்தாள்.
விடு விடுவென்று நாலு அடுப்பில் சமைக்க ஆரம்பித்தாள். கொஞ்சம் சாதம், பருப்பு, வேக வைத்த கேரட், இட்லி, கஞ்சி, சூப் என எல்லா ஐட்டம்களையும் டப்பாக்களில் போட்டு ஹாஸ்பிடலுக்கு எடுத்து வைத்து விட்டு மீதியை பிரிட்ஜ்ல் ஸ்டோர் செய்தாள்.
பவாவுக்கு உடம்பு துடைக்க வேண்டும். முதலில் கொஞ்சம் பால் கலக்கி வைத்துவிடலாம். துடைக்கும் போது எழுந்து சிணுங்குவாள். பால் குடித்தால் சற்று அமைதியவாள் என தோன்றியது.
ராஜு இன்னும் பாத்ரூமில் இருந்து வரவில்லை. பவாவுக்கு பால் கலக்கும் போதே, ராஜூவுக்கும் ஒரு டம்ளர் டீ வைத்தாள்.
சுதா கிச்சன் வேலைகளை முடித்தத பிறகு பவாவை துடைத்து டிரஸ் மாற்றி படுக்க வைத்துவிட்டு டயப்பரை எடுக்கும் போதுதான் கவனித்தாள் அது ரொம்ப இலேசாக இருந்ததை.
இரவு முழுக்க சரியாக யூரின் போகவில்லை பவா. இன்று எப்படியும் கொஞ்சம் லிக்விட் தொடர்ந்து கொடுக்க வேண்டும்.
“வரதாக்கு கால் பண்ணி சொல்லிடு சுதா, அவங்க துணைக்கு இருப்பாங்க” என்றபடியே கிளம்பினான்.
வரதா மணி சாரின் மனைவி. டவுன்ஷிப் ஆஸ்பிடலில் நர்ஸாக இருக்கிறார்.
ஹெல்த் கார்டு, ஏடிம் கார்டு, டிரைவர் நம்பர் என எல்லா சடங்கையும் செவ்வனே செய்து ஆபீசுக்கு கிளம்பினான் ராஜு.
கதவை பூட்டி விட்டு சோபாவில் உட்கார்ந்த போது சுதாவுக்கு தோள் பட்டையோடு சேர்ந்து மனமும் சோர்ந்து போனது.
நாள்பட்ட குறைவான வார்த்தைகளால் கட்டமைக்கப்படும் வாழ்க்கை உளுத்துப்போக வைப்பது, உணர்வை மட்டுமல்ல உறவையும் என்று பலருக்கும் தெரிவதில்லை!
வார்த்தைகள் வறண்ட வாழ்க்கை, ஆணின் பொருளீட்டல் முன்னுரிமைக்காக, பெண்ணின் சூழலுக்கேற்ற தகவமைத்துக்கொள்ளும் முன்னெடுப்புகளாக முலாம் பூசப்பட்டு ஊருக்குள் உலா வருகிறது.
ட்ரைவர் வந்து பைகளை எடுத்து செல்ல, பவாவை தூக்கிக் கொண்டு டவுன்ஷிப் ஆஸ்பிடலுக்கு கிளம்பினாள் சுதா.
அம்மாவின் போன் வந்தது.
“எப்படி மா இருக்கா பவா”? என கவலையாக கேட்டாள்.
“மா, ரொம்ப டல்லா இருக்கா. அட்மிட் பண்ண சொல்லுவாங்கனு நெனைக்கிறேன். ஒரு பதினோரு மணிக்கு நானே கால் பண்றேன்” என சொல்லி போனை வைத்தாள் சுதா.
“ராஜு சாயந்திரம் கொஞ்சம் நேரத்தோட வரியா? பவாணி குட்டிக்கு லூஸ் மோஷன் போகுது. ஆள் ரொம்ப சோர்ந்து போயிருக்கா. பீவர் மைல்டா தான் இருக்கு. மெடிசின் ஒரு டோஸ் குடுத்துருக்கேன். ஆறாவது டோக்கன் நமக்கு. நீ ஒரு அஞ்சு மணிக்கு வந்தா போயிட்டு வந்திடலாம்.”
வாய்ஸ் மெசேஜ் போட்டு பக்கத்தில் தூங்கும் குழந்தையை பார்க்கும் போது ஆயாசமாக இருந்தது சுதாவுக்கு.
ராஜுவுக்கு தாதிபத்ரி சிமெண்ட் பேக்டரியில் வேலை. ஷிப்ட் நேரத்தில் போன் பேச முடியாது. டீ பிரேக்கில் போன் பார்த்து திரும்ப கூப்பிட்டால் மட்டுமே பேச முடியும். எப்படியும் நாலு மணிக்குள் பேசுவான் என்று எதிர்பார்த்தாள்.
பவா இன்னும் எப்படியும் ஒரு அரை மணி நேரம் தூங்குவாள். அதற்குள் எல்லா கை வேலைகளையும் முடிக்க வேண்டும். அவள் எழுந்ததும் என்ன கொடுக்கலாம் என்று யோசித்தாள். அரிசியை நைசாக அரைத்து கஞ்சி போட்டு வைக்கலாம். ஈஸியாக குடிக்க முடியம். டாக்டரை பார்த்து திரும்பும் வரை கொஞ்சம் பசி தாங்கும் என நினைத்து வேலையை ஆரம்பித்தாள்.
கஞ்சி போட்டு, துணி உலர்த்தி, வீடு சுத்தம் செய்து முடித்து உட்காரும்போதுதான் இன்னும் மத்தியான சாப்பாடு சாப்பிடவில்லை என உரைத்தது.
இரவு முழுக்க கண் விழித்ததால் கொஞ்சம் படுத்தால் போதும் என்று இருந்தது சுதாவுக்கு. குட்டி தூங்கும் போதே கொஞ்சம் தூங்கலாம் என்று கண் அயர்ந்தாள்.
சற்று நேரத்தில் போன் மணிஅடிக்க அலறி முழிப்பு வந்தது. எதேச்சையாக பக்கத்தில் பார்க்க, குழந்தை இன்னும் தூங்கி கொண்டிருந்தது.
போன் எடுத்து பேசும் முன் அழுகை வெடித்து வந்தது சுதாவுக்கு. அதன் மெல்லிய விரல்களை பற்றி கொண்டே கலங்கி அமர்திருந்தாள்.
ஏன் சுதா போன் எடுக்கலை? ஒரு வேளை குளிக்கிறாளா இல்லை குழந்தையோடு வேலையாக இருக்கிறாளா? ராஜுவுக்கு எல்லா எண்ணங்களும் சுற்றி அடித்தது.
அதற்குள் சுதாவே திரும்ப கூப்பிட்டாள்.
“ஏன் சுதா என்ன ஆச்சு? ஏன் போன் எடுக்கலை? எல்லாம் ஓகே வா?” என்றான்.
“ஓகே ராஜு. நீ போன் பண்ணும்போது நான் அலறி எழுந்துட்டேன். பவா குட்டி அப்டி தூங்குறா…என்னால முடியல ராஜு…ஸ்வீட்டுமாக்கு மட்டும் ஏன் இப்படி?” மேற்கொண்டு சொல்ல முடியாமல் சுதா தேம்ப ராஜு ஒரு நிமிடம் உறைந்து போனான்.
கடவுளே இவளை என்ன சொல்லி தேற்ற…”சுதாம்மா ப்ளீஸ்.பாத்துக்கலாம் விடு. சாப்டியா? ப்ளீஸ், கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணு, நீ ஆல்ரெடி ரெண்டு நாளா பவா கூட போராடிகிட்டு இருக்கே. நா சீக்கிரம் வரேன்” என ராஜு தேற்றினான்.
போனை வைத்த பிறகு ராஜு தெளிய ஐந்து நிமிடம் ஆனது. சுற்றிலும் பார்த்தால் யாரும் இல்லை. எல்லாரும் பிரேக் முடிந்து புளோருக்கு போய் விட்டார்கள். மணி சாரிடம் சொல்லிட்டு சீக்கிரம் கிளம்ப வேண்டும். மனதில் ஏதேதோ ஓட ராஜு தளர்வாய் லிப்ட் நோக்கி நடந்தான்.
மணி சாரிடம் சொல்லி விட்டு கிளம்பியதும், பார்க்கிங் போகும் வழியில் ராஜுவுக்கு எண்ணம் அடுத்த நாளுக்கு தாவியது.
நாளையில் இருந்து ஓரு வாரத்திற்கு ஒர்க்க்ஷாப். இன்னும் மூன்று மாதங்களில் லேட்டஸ்ட் கன்வேயர் சிஸ்டம் ஆஸ்திரேலியாவில் இருந்து வர போகிறது.
சிட்னியில் இருந்து என்ஜினீயர்ஸ் டீம் இன்று இரவு கெஸ்ட் ஹவுஸ் வந்து சேர்கிறார்கள். காலை ஒன்பது மணிக்கு செஷன் ஆரம்பிக்கிறது.
சுதாவுக்கு இந்த அஜெண்டா ஏற்கெனவே தெரியும். ஆனால் பவாவை தனியாக சமாளிப்பது பெரும் சிரமம். இரவுக்குள் சரியாக கடவுளை வேண்டிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.
வீடே ஓய்ந்து கிடந்தது போல இருந்தது ராஜுவுக்கு. பெட் ரூம் கதவு சாத்தியிருக்க மெதுவாய் திறந்தால் சுதா பவாவை மடியில் கிடத்தி தட்டிக் கொண்டிருந்தாள்.
“டீ” என சைகையால் கேட்க சரி என தலை அசைத்தாள்.
நேராக சமையலறைக்கு சென்றால் சுதாவின் பாடு தெரிந்தது. சிங்க் நிறைய சின்ன சின்ன கோப்பைகளும் ஸ்பூன்களும் நிறைந்திருந்தது. சூப், பால், கஞ்சி என பவா எதையும் முழுதாய் குடிக்கவில்லை.
அடுப்பில் பாலை சிம்மில் வைத்து விட்டு எல்லா பாத்திரங்களையும் தேய்த்து முடித்தான். பத்து நிமிடத்தில் கிச்சன் சுத்தமாக, டீ கப்பை கொண்டு போய் சுதாவுக்கு கொடுத்தான்.
டீ குடித்து முடித்து சுதா ரெடியாக பவாவை தூக்கி கொண்டு ராஜுவும் கிளம்பினான்.
கிளினிக்கில் பெரிதாய் கூட்டமில்லை. டாக்டர் இரண்டு நாளுக்கு மருந்து கொடுத்தார். இப்படியே இருந்தால் பிளட் டெஸ்டும் செய்ய எழுதி கொடுத்தார்.
வீடு திரும்பும் போது வண்டியில் இருவரும் பேசும் நிலையில் இல்லை. வெளியே மழை காற்று பலமாக வீசிக்கொண்டிருந்தது.
பார்மசி எதிரே ஓரம் கட்டிவிட்டு இறங்கும்போது “டின்னர்க்கு என்ன வாங்கட்டும்?” என ராஜு கேட்டான். “இது பார்மசி தானே?” என்றாள் சுதா.
“ஆமாம், ஆனால் பில் போட எப்படியும் பத்து நிமிஷம் ஆகும். என்ன வேணும்னு சொல்லு வெயிட் பண்ணும் போது ஆன்லைன்ல ஆர்டர் பண்றேன்” என்றான்.
“நீயே பண்ணு ராஜு. எனக்கு லைட்டா போதும்” என்றாள் சுதா.
மருந்து வாங்கி வீடு திரும்பியதும் பவாவின் ரியாக்க்ஷனை ராஜு கவனித்தான்.
“சுதா வேல பண்ணி இருக்கானு நெனைக்குறான். டயபர் செக் பண்ணி பாரு” என்றான்.
பச்சை பச்சையாக நுரைத்து போயிருந்தாள்.
“இன்னைக்கு இது சிக்ஸ்த் டைம் ராஜு” என்றாள்.
பவாவுக்கு கால் நடுங்கியது.தோள் பிடித்து நிற்கையில் அப்படியே சரிந்தாள்.
ராஜு ஒரு பக்கம் பிடிக்க, சுதா சுத்தம் செய்து டயப்பரும் ட்ரெஸ்ஸும் மாற்றி கிடத்தும் போது பவாவுக்கு கண்கள் சொறுகியது.
“சுதா நீ உக்காரு. இவ சீக்கிரம் தூங்கிடுவா போல. கொஞ்சம் ஏதாவது சாப்பிட வச்சிட்டா சிரப் கொடுக்கலாம்.
நா போய் இட்லி சூடு பண்ணி எடுத்துட்டு வரேன்” என்றான் ராஜு.
முக்கால் மணி நேரம் போராடி ஊட்டி முடித்து, மருந்து கொடுத்து, முதுகில் போட்டு தட்டி தூங்க வைத்து, பெட்டில் கிடத்தி நிமிரும் போது சுதாவுக்கு தெரிந்து விட்டது, நிம்மதியாக மூச்சு விட மூன்று நாளாவது ஆகும் என.
துடைக்கப்பட்ட கிச்சன் டேபிளும், கழுவிய பாத்திரங்களும், இத்யாதிகளும், அன்றைய பகலுக்கும் அடுத்து வரும் பகல்களுக்குமான கருணை வெளிச்சத்தை வாரி இறைத்து கொண்டிருந்தன சுதாவின் மீது.
ஜன்னல் வழியே தூரத்து சிமெண்ட் பேக்டரி விளக்குகள் வண்ணப்புள்ளி அணிவகுப்பாய் மின்னிக்கொண்டிருந்தது.
அடர்ந்த, அமைதியான அந்த இரவு, பேக்டரி புகை போக்கி தொடர்ந்து கக்கும் கரும் புகையை ஆரத்தழுவி தன்னுள் ஐக்கியமாக்கியது. கூடவே மனிதர்களின் முழுப்பகல் ஓட்டங்களையும், போராட்டங்களையும் தற்காலிகமாக கவ்விப் பிடித்து கொக்கரித்துக் கொண்டிருந்தது.
சில்லிடும் நொடிகளை கட்டவிழ்க்க காத்திருக்கும் அடுத்து வரப்போகும் மணித்துளிகள், அந்த இரவை வெறித்து பார்த்துக்கு கொண்டிருந்தன.