Tamil novel – Jiteswari – Part 15/21

Amsterdam riverfront

ரமா கல்யாணம் நாளை. ஜித்து வீடியோ கால் செய்து ரமாவின் அலங்காரத்தை பார்த்து சந்தோஷமாக பேசி வெளியே கிளம்பினாள்.

அங்கே பாண்டியில் ரமாவுக்கு நல்லபடியாக திருமண முடிந்தது. வெளியாட்கள் பெரும்பாலானோர் கிளம்ப நெருங்கிய சொந்தங்கள் மட்டும் மண்டபத்தில் இருந்தது.

ராஜுவின் அக்கா கணவர் ரவீந்தர் தாதிபத்திரி சிமெண்ட் பேக்டரியில் என்ஜினீயராக இருக்கிறார். அவரின் பள்ளி நண்பரும் பாண்டியில் வங்கி மேனேஜராக இருக்கும் பாலாவும் உறவுக்கார சிறுவர் சிறுமிகளின் அருகே அமர்ந்து அரட்டையடித்துக் கொண்டிருந்தார்கள்.

சற்று நேரத்தில் ராஜும் அவரது தந்தையும் அங்கே வந்து அமர்ந்தார்கள். பேச்சுவாக்கில் சிறுவர்கள் எதிர்காலத்தில் என்ன படிப்பது என ரவியுடன் விவாதித்து கொண்டிருந்தார்கள்.

எல்லாவற்றையும் கேட்ட குமரேசன் “எல்லாரும் நல்லா படிச்சு நம்ம ராஜு மாதிரி நல்ல அரசாங்க வேலைக்கு போகணும்” என பெருமை தூக்கலாக சொன்னார். “ஆமா கவர்மெண்டு வேல தான் காலத்துக்கும் நல்லது” என பக்கத்தில் இருந்தவர் ஆமோதித்தார்.

“என்ன பெரிய கவர்மெண்டு வேல. பசங்களா, நல்லா படிச்சு நம்ம ஜித்து மாதிரி வேலைக்கு போகணும். நல்ல சம்பளம். வெளி நாட்டுக்கு போய் வேல பாக்கலாம். இங்க குண்டு சட்டியில குதிரை ஓட்ட வேணாம்” என சத்தமாக சொன்னார் ரவீந்தர்.

ராஜூவுக்கும் குமரேசனுக்கும் சங்கடமாக இருந்தது.

“உங்களுக்கு தெரியுமா ரவீந்தர்? இவங்க ஹவுசிங் லோன் எங்க பிரான்ச்ல தான் இருக்கு. ஜித்துவோட இன்கம்னால தான் நல்ல அமவுண்ட்டுக்கு லோன் சேங்க்ஷன் ஆச்சு. ஜித்து தான் மெயின் அப்ளிக்கன்ட். இவங்க ரெண்டு பேரும் கோ-அப்ளிக்கன்ட்ஸ்” என விலாவரியாய் சொன்னார் பாலா.

சிறுவர்கள் ஆர்வமாகி விசாரிக்க ரவீந்தரும் பாலாவும் மேற்கொண்டு விஷயங்களை ராஜு ஜித்து தம்பதிகளை உதாரணம் காட்டி விளக்க ஆரம்பித்தார்கள்.

குமரேசனுக்கு அந்த இடத்தில் இருக்க மனம் ஒப்பவில்லை. அவர் கிளம்ப ராஜுவும் அவரை தொடர்ந்து வெளியேறினான்.

அடுத்த அரை மணி நேரத்தில் மண்டபம் முழுவதும் இதுவே பேசு பொருளாக இருந்தது.

ரமாவின் மாமியார் வந்து காமாட்சியின் அருகே உட்கார்ந்து ஜித்துவை பற்றி விசாரிக்க ஆரம்பித்தார்கள். காமாட்சி எல்லா விஷயங்களையும் கெத்தாக சொல்ல அவர் ஆர்வமாக கேட்டு கொண்டிருந்தார்.

“ஜித்துக்கிட்ட பேசணும். நா போய் அவரை கூட்டிட்டு வரேன்” என சொல்லி எழுந்து போனார்.

அதுவரை காத்திருந்த குமரேசன் காமாட்சியை ரூமிற்குள் அழைத்து ஜித்துவை திட்டி தீர்த்தார். ஏன் சம்மந்தமில்லாமல் இங்கு இல்லாத ஒரு பெண்ணை திட்டுகிறார் என காமாட்சிக்கு விளங்கவில்லை. ராஜுவும் முகம் தெளிவில்லாமல் சுற்றிக் கொண்டிருந்ததை கவனித்தார்.

“ஏண்டா அப்பாவும் பையனும் ஒரு மாதிரி இருக்கீங்க?” என கேட்டார் காமாட்சி.

ஒன்றும் சொல்லாமல் ராஜு முறைத்துவிட்டு நகர, “கல்யாணாத்த வெச்சிக்கிட்டு ஊருக்கு போக வேணாம்னு சொன்னா கேட்டாளா? இப்ப பாரு இவன் அவமானபட்டு நிக்குறான். அடுத்த வாரம் போயிருந்தா காதும் காதும் வெச்ச மாதிரி நமக்குள்ளேயே இருந்திருக்கும். இப்ப இவன குண்டு சட்டினு கிண்டல் பண்றாங்க” என எகிறினார்.

ரவீந்தரை மனதில் கரித்துக்  கொட்டினாள் காமாட்சி.

“எல்லாம் நீ குடுக்குற எடம். குடும்ப கவுரவம் இப்ப காத்துல பறக்குது” என மனைவியையும் சேர்த்து திட்ட ஆரம்பித்தார்.

எப்படியோ புலம்புங்கள் என காமாட்சி அங்கேயிருந்து நகர்ந்தார்.

அன்று மாலை ரிசப்ஷன் ஆரம்பித்து அமர்க்களமாக நடந்து கொண்டிருந்தது. இரவு பத்தரை வாக்கில் ரமாவின் மாமனார் சற்று ஓய்வெடுக்க மேடையின் கீழே வந்து குமரேசன் அருகே உட்கார்ந்தார்.

“உங்க மருமக பாரின்ல இருக்காங்களா? என விசாரித்தார்.

“ஆமாம், ரெண்டு வாரம் ஒர்க்ஷாப். அதுக்கு போயிருக்கு” என இறுக்கமாய் சொன்னார்.

“வீடியோ கால் போடுங்க. ரமாவ பாத்து பேசட்டும். அப்படியே நாங்களும் பேசுறோம்” என சொல்லி சிரித்தார்.

வேறு வழியில்லாமல் குமரேசன் காமாட்சியை கூப்பிட்டு போன் போட சொன்னார்.

காமாட்சி போன் போட ஜித்து பதிலளிக்கவில்லை.  அப்போது ஜித்து ரேஷ்மியுடன் முதல் நாள் போட்டிங்க் போன இடத்துக்கு மீண்டும் தனியே போய் இருந்தாள். போன் பையில் சைலென்டில் இருந்தது.

நாலைந்து முறை காமாட்சி போன் போட்டு பார்த்தார்.

“எடுக்கலீங்க. ஏதாவது வேலையா இருப்பா. மிஸ்ட் கால் பாத்தா அவளே கூப்பிடுவா” என சொல்லி போனை பையில் போட்டு கொண்டார் காமாட்சி.

“என்ன பெரிய வேலை. பாரின் போனா குடி கூத்துனு கும்மாளம் போடுவாங்க. எங்க நெதானத்துல இருக்க போறாங்க போன எடுக்க” என ஒரு சொந்தகார மூதேவி சொன்னது.

காமாட்சி அந்த ஆளை திட்ட குமரேசன் விருட்டென்று அங்கிருந்து எழுந்து கிளம்பினார்.

வீட்டுக்கு போய் குமரேசன் பேயாட்டம் ஆடி தீர்த்தார். வாய்க்கு வந்த வார்த்தைகளை கொட்டினார். அந்த நேரம் பார்த்து ஜித்து போன் வந்தது.

காமாட்சி முழிக்க “எடுத்து பேசு” என அதட்டினார்.

காமாட்சி பேச ஆரம்பிக்க பின்னாலிருந்து குமரேசன் கத்த ஆரம்பித்தார்.

“இவ்ளோ நேரம் எங்க போனானு கேளு, எத்தனை முறை போட்டோம் ஏன் எடுக்கலைனு கேளு” என கத்தினார்.

“ஆன்ட்டி, நா போட்டிங் போயிருந்தேன். இப்ப தான் பார்த்தேன். ஏன் டென்ஷான இருக்காரு?” என கேட்டாள் ஜித்து.

அவளுக்கு பதில் சொல்வதற்கு முன் அவர் வாயை அடைப்பதற்காக “ஏங்க அவ போட்டிங் போயிருக்கா. இப்ப தான் போன பாத்து திரும்ப கூப்பிடுறா. சும்மா கத்தாதீங்க” என்றார் காமாட்சி.

“என்ன இங்க பாண்டில இல்லாத போட்டிங்கா? அங்க போய் புதுசா பாக்க. ஒரு போன் வந்தா எடுத்து பேச முடியாதா?” என மீண்டும் எகிறினார்.

தான் போனை எடுக்காததால் பயந்து போய் இருக்கிறார். அதனால் கோபப்படுகிறார் என நினைத்தாள் ஜித்து.

“ஏங்க போட்டிங் போனது ஒரு குற்றமா? விடுங்க” என்றார் காமாட்சி.

“போட்டிங் போனாளா இல்ல பெட்டுக்கு போனாளா, யாருக்கு தெரியும்? இதுக்கு தான் பம்பாய்க்காரி வேணாம்னு படிச்சு படிச்சு சொன்னேன். அம்மாவும் பையனும் ஒத்த கால்ல நின்னீங்க. இப்ப பாரு இவன் தலை  குனிஞ்சு நிக்குறான்” என தேவையில்லாமல் வார்த்தையை விட்டார் குமரேசன்.

“என்ன பேச்சு பேசுறீங்க, நாக்கை அடக்குங்க” என கத்தினார் காமாட்சி.

ஜித்துவுக்கு தான் கேட்ட வார்த்தை எதையும் ஏற்று கொள்ள இயலவில்லை.

“ஏன்டா மரம் மாதிரி நிக்குற, நாலு கேள்வி நல்லா கேளு அவளை”என்றார் குமரேசன்.    

ராஜு அந்த இடத்தில் இருக்கிறான். அவன் முன்பு தான் இவ்வளவு பேச்சும் என தெரிந்து கொண்டாள்.

காமாட்சி சுதாரித்து போனை கட் செய்வதற்குள் “நா உங்க பேச்ச கேக்காதது தப்பு தான்ப்பா” என்றான் ராஜு.

 காமாட்சி போனை கட் செய்வதற்குள் ஜித்துவே போனை வைத்து விட்டாள்.

ஜித்துவுக்கு அது நிலவை நோக்கிய பயணமாக தோன்றியதால் மறுநாளும் அதே இடத்திற்கு வந்திருந்தாள். இப்போது இந்த பேச்சுகளை கேட்ட பிறகு இப்படியே பயணப்பட்டு இந்த பூமியை விட்டு எங்கோ தொலைதூரம் போய் விட்டால் நல்லது என தோன்றியது. முதல் நாள் ரசித்த நிலவை மீண்டும் பார்க்கும் விருப்பமில்லாமல் தரையை பார்த்தபடியே வெகு நேரம் அமர்ந்திருந்தாள்.

அந்த வார்த்தைகள் கொடுத்த வலி எவ்வளவு வீரியமானது என உணரவே அவளுக்கு சற்று நேரமானது.

மீண்டும் காமாட்சியின் போன் வந்தது.

ஜித்து எடுத்தவுடன் “இவங்களுக்கு நல்ல சாவே வராது. பொம்பளைங்கள தப்பா பேசுனவனுங்க நல்ல கதி காண மாட்டானுங்க. நீ எதுவும் மனசுல வெச்சுக்காதே. பத்திரமா ரூமுக்கு போயிட்டு எனக்கு போன் பண்ணு. இருக்குற கொஞ்ச நாள்ல அங்க இதையே நெனச்சுக்கிட்டு இருக்காதா. அவ்வளவு தூரம் தனியா போன பொண்ணு நல்லபடியா வந்து சேரணும்னு நா கடவுளை வேண்டிக்கிட்டு இருக்கேன். இந்த நாதாரி மனுஷன் புத்தி கெட்டு பேசுறார். எனக்காக மன்னிச்சுடுமா” என தயங்கியபடியே சொன்னார் காமாட்சி.

எதுவும் சொல்லும் மன நிலையில் அவள் இல்லை. சரியென்று சொல்லி போனை  வைத்தாள்.

நேரம் ஆக ஆக குளிர் அதிகமானது. ஜித்து எழுந்து கோட்டை மாட்டிக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.

மனைவியாக, அம்மாவாக, மருமகளாக அல்லாமல் ஜித்து என்ற தனி பிறவியை மட்டும் நோக்கி வீசப்பட்ட அம்புகள் அவை. அந்த வார்த்தைகளை கடப்பது அவ்வளவு எளிதல்ல என தோன்றியது அவளுக்கு.

ஒரு மணி நேரம் நடந்தவள் அப்பகுதியில் நதியின் கடைசி முனை வரை போய் சேர்ந்திருந்தாள். சற்று நேரம் முன்பு அவளை சந்தோஷமாக சுமந்த நதி இப்போது அவளையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தது.

அவள் நின்ற இடத்தின் அருகே அவளையே வாஞ்சையாய் பார்த்துக் கொண்டிருந்தது லிண்டன் மரம்.

“நீ ஒரு அருமையான மனைவி ஜித்து. ராஜு ஈஸ் கிப்ட்டட். ஸோ இந்த மரம் உன்ன ப்ளேஸ் பண்ணுதுனு நா நம்புறேன்” என ரேஷ்மி சொல்லிய வார்த்தைகள் அவளின் மனதை இன்னும் ரணமாக்கியது.

அங்கிருந்து பார்த்தால் ஒரு பெரிய டாய் ஹவுஸ் தெரிந்தது. மீண்டும் இந்த பக்கம் வருவாளா என தெரியாததால் அந்த கடைக்குள் நுழைந்தாள். வண்ண வண்ண பொம்மைகள் குவிந்து கிடந்தன. புஷ்கருக்கும் கல்யாணிக்கும் பிடித்த மாதிரியான பொம்மைகளை தேர்வு செய்து கொண்டு பணம் செலுத்த வரிசையில் போய் நின்றாள்.

“நா உன்னோட பில் பே பண்ணட்டுமா? என பின்பக்கமிருந்து ஒரு குரல் கேட்டது. வேறு யார் கார்சன் தான்.

அவள் அருகே குனிந்து “பியாண்ட் இமாஜினரி லேவிஷ் லைப்ஸ்டைல்” என முணுமுணுத்தார்.

நாம் ஏன் கார்சனை அடிக்கடி சந்திக்கிறோம் என ஜித்து நினைக்கையில் வரிசை நகர அவள் போய் பணம் செலுத்தி பொருட்களை கவரில் போட்டு எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

ஆட்டோமேட்டிக் டோர் தானாய் திறக்க கடையை விட்டு வெளியே வந்தாள். கார்சனும் பக்கத்தில் நடக்க ஆரம்பித்தார்.

“ஜித், நா உன்னை வேணும்னே பாலோ பண்ணலை. ஜஸ்ட் ஷாப்பிங் வந்த போது உன்னை பார்த்தேன். இப்ப அந்த ஆட்டோ டோர் தொறந்தது இல்ல, அது போல தான் உன்ன பார்த்தா என்னால ரியாக்ட் பண்ணாம இருக்க முடியல. ஐ அம் ஜஸ்ட் லைக் தட் சென்சார் அண்ட் ஆக்ட்ஸ் ஈவன் வித்தவுட் பிஸிக்கல் கான்டாக்ட்” என விஷமமாய் சொன்னார்.

இந்த ஆள் என்ன ஜென்மம் என நினைத்தபடியே போனை பார்க்க அவள் புக் செய்த டாக்ஸி அங்கே வந்தது. பேசாமல் ஏறி உட்கார்ந்து கதவை சார்த்த கார்சன் அவள் செல்வதையே பார்த்து கொண்டிருந்தார்.

Tamil novel – Jiteswari – Part 14/21

Amsterdam boat ride

செஷன் முடிந்ததும் விருட்டென்று கிளம்பி ரேஷ்மியின் ப்ளோருக்கு போனாள். இருவரும் கிளம்பி டாக்ஸி பிடித்து ஹோட்டலுக்கு சாப்பிட சென்றார்கள்.

இயல்பு நிலை என்பது இங்கிருந்து கிளம்பும் வரை சத்தியமாக இருக்காது என நினைத்தாள். திரும்ப ஆபீஸ் போகும் எண்ணமில்லை ஜித்துவுக்கு.

சாப்பிட்டு முடித்து ஒரு மணி நேரத்தில் ரேஷ்மிக்கு ஒரு முக்கியமான அழைப்பு வர அவள் வீட்டுக்கு கிளம்பினாள். ஜித்துவும் கெஸ்ட் ஹவுஸ் போய் உடையை மாற்றிக் கொண்டு தூங்க ஆரம்பித்தாள். மாலை ஐந்து மணிக்கு காபி குடித்துக் கொண்டே மெயில் செக் செய்தாள். தான் பதிலளிக்க வேண்டிய எந்த செய்தியும் இல்லை.

நிம்மதியாக ஆப் செய்து டேபிள் மீது வைத்து வெளியே கிளம்ப ரெடியானாள்.

ரஷ்மியின் போன் வந்தது. மதியம் பாதியிலேயே கிளம்பி விட்டதால் இப்போது கெஸ்ட் ஹவுஸ் வந்து கொண்டிருக்கிறாள். ஜித்துவை போட்டிங் அழைத்து சென்று பிறகு ஷாப்பிங் முடித்து இரவு திரும்புவதாக சொன்னாள்.

இருவரும் கிளம்பி பஸ் பிடித்து பிரின்சஸ் கேனல் வந்து சேர்ந்தார்கள்.

Amsterdam city walk

சூரியன் மறையும் மஞ்சள் மாலைப் பொழுது. 

அடர் பச்சை நிற நதியோடையின் இருகரையிலும் வெளிர் பச்சை மரங்கள் வரிசையாக நின்றன. கிட்டத்தட்ட ரெண்டு மைல் தூரம் ஒரே நேர்கோடாக ஓடுகிறது நதி.

ரேஷ்மி டிக்கட் வாங்கி வர இருவரும் படகில் ஏறி உட்கார்ந்தார்கள். இரண்டு மணி நேர படகு சவாரி நகரின் முக்கிய நதியோடைகள் வழியாக.

அடர் நிற முன் பக்க கோபுர அமைப்பு கொண்ட பதினேழாம் நூற்றாண்டு கால கட்டிடங்களும், தேவாலயமும் நகரின் வரலாற்றையும் பண்பாட்டையும் பிரதிபலித்தன. மெதுவாய் ஊர்ந்த படகிலிருந்த ஜித்துவின் மீது கரையோரம் இருந்து லிண்டன் மரங்கள் சில ஹார்ட் ஷேப் இலைகளை தூவியது.

“ஜித்து, இந்த லிண்டன் மரங்களுக்கு ஒரு சிறப்பு இருக்கிறது” என அவள் தோளின் மீதிருந்த பூக்களையும் சில இலைகளையும் எடுத்து ஜித்துவிடம் கொடுத்தபடியே சொன்னாள்  ரேஷ்மி.

“என்ன ஸ்பெஷல் இந்த மரத்துக்கு?” என கேட்டாள் ஜித்து.

“லிண்டன் மரம் பெரேயா என்ற ஜெர்மானிய பெண் கடவுளோடு தொடர்புடையது. அன்பு, காதல், உண்மை மற்றும் பாதுகாப்பை குறிக்கும் கடவுளாக கருதப்படுகிறார். இந்த மரம் காதலர்களின் புனித மரம் என வணங்கி இதன் அருகில் திருமண நிகழ்வுகள் நடத்தியிருக்கிறார்கள். இந்த மரத்தடியில் மனிதர்கள் பொய் பேச மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் அந்த காலத்தில் இதன் அடியில் நீதி விசாரணைகள் நடத்துவார்களாம். கிரீக்கர்கள் லிண்டன் மரத்தை நல்ல திருமண பந்தத்துக்கும், அருமையான மனைவிக்குமான குறியீடாக நம்புகிறார்கள்” என விளக்கினாள்.

“இந்த ரெண்டு இலை, நாலு பூ என் மேல விழுந்ததுக்கு ஏண்டி மைத்தாலஜியெல்லாம் பேசுற” என சிரித்தாள் ஜித்து.

ஜித்து நீ என்ன கோ த்ரூ பண்றேன்னு எனக்கு தெரியும். நீ ஒரு அருமையான மனைவி. ராஜு ஈஸ் கிப்ட்டட். ஸோ இந்த மரம் உன்ன ப்ளேஸ் பண்ணுதுனு நா நம்புறேன்” என ஆதரவாய் சொன்னாள் ரேஷ்மி.

ரேஷ்மி சொல்வதை புன்னகையோடு கேட்டுக்கொண்டே அவள் மீது விழுந்த லிண்டன் இலையையும் பூக்களையும் பர்சில் பத்திரப்படுத்தினாள் ஜித்து.

சற்று நேரத்தில் இருள் சூழ கரு நீல நீரில் பக்கவாட்டு கட்டிடங்களின் தங்க நிற விளக்குகள் பட்டு ஒளி வீச அந்த குறுகலான நீரோடை மினுக்க ஆரம்பித்தது. படகின் நேரெதிராக வானத்தில் பௌர்ணமி நிலா கம்பீரமாக தோன்றியது. இரண்டு மைல் நீளத்திற்கு ஒரே நேர் கோடாக அந்த படகு பயணம் இருந்தது.

ஜித்துவுக்கு அது நிலவை நோக்கிய பயணமாக தோன்றியது.

இப்படியே பயணப்பட்டு நிலவில் போய் இறங்கும்படியான மனநிலை அவளுக்கு மிகுந்த பரவசத்தை தந்தது. அக்கம்பக்கம் சுற்றிப் பார்க்கும் விருப்பமில்லாமல் நிலவை மட்டும் பார்த்தபடியே அமர்ந்திருந்தாள்.

இரண்டு மணி நேரம் ரம்மியமாக இருந்தது. படகிலிருந்து வெளியேறி இரவு உணவு சாப்பிட்டு ரேஷ்மி நாளை ஆபீசில் சந்திக்கலாம் என சொல்லி விடை பெற்றுக்கொண்டு கிளம்பினாள்.

ஜித்து அந்த நதியோரம் இருந்த சிமெண்ட்டு பெஞ்சில் போய் உட்கார்ந்தாள். லிண்டன் மர நினைவு வர போனை எடுத்து அதைப் பற்றி தேடினாள். அது நம்ம ஊர் எலுமிச்சை மர வகை என தெரிந்ததும் லேசாய் புன்னகைத்தாள் கொண்டாள். அந்த மரத்தின் இன்னோர் சிறப்பம்சம் அது தீய சக்திகளிடமிருந்து பாதுகாக்கும் என இருந்தது. சடாரென கார்சனின் நினைவு வந்தது ஜித்துவுக்கு.

ரேஷ்மி சொன்னது சரிதான். இந்த லிண்டன் மரம் தன் பாதுகாப்பை உறுதி செய்வதாக மனதார நம்பினாள்.

இதன் மூலமாக குறியீடாக இயற்கை ஒரு விதமான மனவலிமையை அவளுக்கு கொடுத்தது. 

கார்சனின் அன்றைய செய்கை அநாகரீகத்தின் உச்சமாக இருந்தது. ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு அத்துமீறிய அவரின் நடத்தையோ சொல்லோ அவளின் முழு நாளையும் பாதித்தது. இன்னும் ஒரு வாரம் எப்படி ஓட்டுவது என ஒரு புறம் மேலோட்டமாய் கவலையாய் இருந்தாலும், ஆழ்மனம் கார்சனுக்கான எதிர்வினையை யோசிக்க ஆரம்பித்தது.

Tamil novel – Jiteswari – Part 13/21

A dinner party

அடுத்த நாள் காலையில் இருந்து மாலை வரை ஜித்து கார்சனை பார்க்க முடியவில்லை. டீமில் விசாரித்தபோது அவர் மற்றொரு யூனிட்டை பார்வையிட போயிருப்பதாக தகவல் வந்தது. நல்லது என நினைத்துக் கொண்டாள்.

ஐந்து மணிக்கு வேலை முடிய ஆபீசை விட்டு கெஸ்ட் ஹவுஸ் நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

அடுத்து வரும் நாட்களில் கார்சனை எப்படி எதிர்கொள்வது என கவலையடைந்தாள். அவர் பேச்சும் செய்கையும் அருவருப்பானதாக இருந்தது. சரியான இம்சை என நினைத்துக்கொண்டாள்.

இன்னும் இரவு உணவுக்கு நிறைய நேரம் இருக்கிறது. என்ன செய்யலாம் என யோசித்தபடியே ரிஸப்ஷனை கடந்து போனாள்.

“மேடம்” என ஒரு குரல் கேட்டது. ரிசெப்ஷன்பெண்மணி ஒரு கவரை நீட்டினார்.     

“ஐ நீட் யுவர் சார்ஜர் டுநைட் அட் டென். லெப்ட் மைன் அட் ஆபீஸ்” கார்சனிடம் இருந்து நோட் வந்திருந்தது. 

“இந்த ஆள் திருந்த மாட்டார் என புரிந்தது.

ரூமிற்க்கு போய் உடை மாற்றி காபி போட்டு சோபாவில் உட்கார்ந்து குடிக்க ஆரம்பித்தாள்.டேபிள் மீது இருந்த லேப்டாப் சார்ஜர் கார்சனை நினைவூட்டியது. கண் மூடி யோசிக்க ஆரம்பித்தாள்.

கால் மணி நேரம் ஆனது. ரூமை விட்டு வெளியே நடந்தால் கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கும் என நினைத்தாள்.

அரை கிலோமீட்டர் தூரத்தில் நதியை ஒட்டிய நார்த் கேட் இருக்கிறது. அந்த பக்கம் போகலாம் என முடிவெடுத்து மேப் பார்த்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.

ஒரு மணி நேரம் வாக்கிங் முடித்து ரூமுக்கு வந்து குளித்து உடை மாற்றி டின்னர் சாப்பிட டைனிங் ஹாலுக்கு போனாள்.

பெரும்பாலான டீம் மெம்பர்கள் ஏற்கெனவே வந்து சாப்பிட ஆரம்பித்திருந்தார்கள். ஜித்து போய் அவர்களோடு சேர்ந்து பேசிக்கொண்டே சாப்பிட ஆரம்பித்தாள்.

மெயின் கோர்ஸ் முடித்து சிறிது நேரம் வெளியே புல்வெளியில் அமர்ந்து போர்டு கேம்ஸ் விளையாடினார்கள். பணிப்பெண் வந்து டெசர்ட் டேபிளை ரெடி செய்ய எல்லோரும் அடுத்த ரவுண்டுக்கு தயாரானார்கள்.

ஜித்துவும் ஒரு பிளேட்டை எடுத்து கொண்டு டெசர்ட் டேபிள் இருந்த இடத்தை நோக்கி போனாள்.

“வாட் ஈஸ் ராஜூஸ் பேவரிட்? கேன் ஐ ட்ரை இட் டூ?” என மெலிதாக கார்சனின் குரல் கேட்டது.

‘லெஃப்ட் ஆர் ரைட்?” என டேபிளின் இடது மற்றும்  வலதுபுறம் கண்ணைக் காட்டி வழிந்தார்.

கட்டையில் போகிற வயதில் கழிசடை என்ன பேச்சு பேசுகிறது என வெறுத்துப் போனாள் ஜித்து.

தட்டை எடுத்துக் கொண்டு திரும்பியவர் “நீ ஸ்விம்மிங் பூல் பக்கம் வருவதில்லையா? யூ ஆர் மிஸ்ஸிங் அன் அமேசிங் வியூ” என்று சொல்லிக்கொண்டே புல்வெளி நோக்கி போனார்.

டெசர்ட் சாப்பிடும் மூட் சுத்தமாக போனது ஜித்துவுக்கு.

ஒரு தண்ணீர் பாட்டில் மட்டும் எடுத்துக் கொண்டு ரூமிற்க்கு போனாள்.

மறுநாள் ரேஷ்மியோடு லஞ்சுக்கு போனால் குறைந்தது ரெண்டு மணி நேரம் ஆகும். சீக்கிரம் தூங்கினால் தான் அதிகாலையில் எழுந்து முன்கூட்டியே கொஞ்சம் வேலை பார்க்க முடியும்.

ரிசப்ஷனுக்கு போன் செய்து ரூம் பாயை வரவழைத்து கார்சனிடம் கொடுக்க சொல்லி சார்ஜ்ர் கொடுத்தனுப்பினாள்.

அலாரத்தை செட் செய்து படுக்கையை சரி செய்து படுத்தாள். அரை மணி நேரத்தில் தூக்கம் கண்ணை அழுத்தியது. ஜன்னல் வழியே பளீரென வந்த விளக்கு வெளிச்சம் கண்ணை கூசியது. எழுந்து போய் திரைசீலையை மூடி திரும்பினாள். கணப்பொழுதில் வெளியே ஸ்விம்மிங் பூலில் கண்ட காட்சி கன்றாவியாக இருந்தது. கார்சன் தண்ணீரில் மெதுவாக இறங்கி கொண்டிருந்தார். இதுதான் அவர் சொன்ன அமேசிங் வியூவா என தலையில் அடித்துக் கொண்டாள்.

அடுத்த நாள் காலை ஜித்துவிற்கு உற்சாகமாக இருந்தது. பல வருடங்கள் கழித்து ரேஷ்மியை சந்திப்பதில் மகிழ்ச்சியாக இருந்தாள். நினைத்ததை விட சற்று சுறுசுறுப்பாக பைலை எழுதி முடித்தாள்.

மணி ஏழு ஆனது. டோர் பெல் அடித்தது. ஹவுஸ் கீப்பிங் பெண்மணி வந்தார்.

ரூமை க்ளீன் செய்து பக்கவாட்டு கதவு வழியாக ஸ்விம்மிங் பூல் பக்கம் போனார். அங்கே இருந்த பாத்ரூமை சுத்தம் செய்து டவல்களை மாற்றி, டிஷ்யூ பேப்பர் ரோல் வைத்துவிட்டு கிளம்பினார்.

அந்த ப்ளாக்கில் மூன்று அறைகள் ப வடிவில் இருக்கும். எதிரெதிர் அறைகளில் கார்சனும் ஜித்துவும் தங்கியிருக்க நடுவில் இருந்த அறை காலியாக இருந்தது. அதன் நேரெதிர்புறம் பெரிய மதில் சுவர். இந்த மூன்று அறைகளுக்கும் சேர்த்து நடுவே ஸ்விம்மிங் பூல்.

அவரவர் அறையில் இருந்து காரிடார் ஆட்டோமேட்டிக் டோர் வழியே வெளியே வந்து ஸ்விம்மிங் பூல் பக்கம் வரமுடியும். அறையின் பின் கதவை பூட்டினால் காரிடார் கதவு வழியாக மற்ற அறை ஆட்கள் உள்ளே வர முடியாது.

ஹவுஸ் கீப்பிங் பெண்மணி தினமும் ஜித்துவின் அறைக்கு வந்து வேலையை முடித்துவிட்டு அவள் அறையின் பின் கதவு வழியாக ஸ்விம்மிங் பூல் பக்கம் போய் வருவதை வழக்கமாக வைத்திருந்தார்.

காலை உணவை ரூமிலேயே சாப்பிட்டு ஆபீசுக்கு கிளம்பினாள் ஜித்து.

Morning breakfast

சற்று நேரத்தில் கார்சனும் வந்து சேர்ந்தார். பெரிதாய் எதுவும் பேச்சு வார்த்தையில்லாமல் இருவரும் பிசியாக இருந்தார்கள். பதினோரு மணியளவில் கான்பரன்ஸ் ரூமில் மீட்டிங். திரையில் மற்ற டீம் மெம்பர்கள் இருக்க, ஜித்தும் கார்சனும் பக்கத்து பக்கத்து இருக்கையில் அமர்ந்து கவனிக்க ஆரம்பித்தார்கள்.

சற்று நேரத்தில் ஒரு ஸ்னாக்ஸ் டிராலியில் காபியும் பிஸ்கட்டுகளும் வந்தது. டேபிள் மீது அந்த நாளுக்கான டிஸ்ஷன் பேப்பர்கள் இருந்தது. ஒரு செஷன் முடிந்து இரண்டாவது ஆரம்பித்தது.

இயந்திரங்களின் லைப் சைக்கிள் பற்றிய ஆலோசனை கூட்டம். மும்முரமாக கவனித்துக்கொண்டிருந்த கார்சன், சட்டென மேஜை மேலிருந்த பேப்பரில் சைக்கிள் என்ற வார்த்தையின் கீழ் ஆட்காட்டி விரலை லேசாக ஆட்டி, “என்ன?” என்றார் போல் ஜித்துவை பார்த்தார்.

Office meeting room

சில நொடிகள் ஆயிற்று கார்சனின் செய்கை ஜித்துவிற்கு புரிவதற்கு.

சேரின் கைப்பிடியில் முட்டிக்கையை ஊன்றி இடக்கை விரல்களால் கன்னத்தை தாங்கி சற்று நேரம் தன் முக மாற்றம் கேமராவில் உறுத்தலாக தெரியாதவாறு மறைத்துக் கொண்டாள்.

கார்சன் மானிட்டர் பக்கம் திரும்பி அமர்ந்து கொண்டார். அந்த முதுகிலும் ஆயிரம் கண்கள் இருப்பதாக தோன்றியது ஜித்துவுக்கு.

Tamil novel – Jiteswari – Part 12/21

Amsterdam guest house

சென்னையிலிருந்து துபாய். பிறகு துபாயிலிருந்து சுமார் ஏழு மணி நேரம் பயணித்து இரண்டு வார பயணமாக ஜித்து ஆம்ஸ்டர்டாம் வந்து சேர்ந்தாள்.

ஏர்போர்ட்டில் இருந்து டாக்ஸி பிடித்து கம்பெனி கெஸ்ட் ஹவுஸ் வந்து சேர்ந்தாள். ஒர்க்ஷாப்புக்கு வரும் மொத்த டீமும் சேர்ந்து கெஸ்ட் ஹவுசில் தங்க ஏற்பாடாகி இருந்தது. ரிசப்ஷனில் சாவி வாங்கி கொண்டு மேப் அட்டையை கவுண்டரில் இருந்து எடுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.

இருபது ஏக்கரில் அழகான கேம்பஸ். கண்ணாடி கதவு தானாய் திறக்க வெளியே பேட்டரி கார் இருந்தது. லக்கேஜ் ஏற்றி பின் சீட்டில் அமர அடுத்த சில நிமிடங்களில் அவளுக்கு ஒதுக்கப்பட்ட அறை இருந்த பிளாக்கிற்கு முன் போய் நின்றது.

ரூம் பாய் லக்கேஜ் எடுத்து வைக்க “ஹலோ” என்றபடி வந்தார் கார்சன்.

கார்சன் ஜெர்மனியை சேர்ந்தவர். எழுபது வயதானவர். இந்த ப்ராஜெக்ட்டில் சீனியர் கன்சல்டன்ட்டாக இருப்பவர்.

இறைவனடி சேராமல் இருந்தால் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு இந்த டீமில் இருப்பார். ஜித்து பாண்டியிலும், கார்சன் பெர்லினிலும், மூன்று பேர் டீம் சவுதியிலும் இருந்து வேலை பார்ப்பார்கள். இங்கே நெதர்லாந்தில் இருபது பேர் டீமில் இருப்பார்கள். இவர்கள் அனைவரும் கார்சனிடம் ரிப்போர்ட் செய்ய வேண்டும்.

முதல் இரண்டு நாட்கள் கிட்டத்தட்ட முப்பது பேரோடு செஷன் நடந்தது. பிரேக் டைமில் சிறு குழுக்களாக கூடி பேசி உணவருந்தினார்கள். பெரிதாக கார்சனிடம் பேச வேண்டிய சூழல் இல்லை. ஆனால் விநோதமாக கார்சன் அடிக்கடி ஜித்துவிடம் வந்து சகஜமாக பேசி விட்டு போனார்.

ஒரு முறை கையில் காலி தண்ணீர் பாட்டிலோடு ஜித்துவை கிராஸ் செய்து போனவர் திரும்ப வந்து அவள் பாட்டிலை கேட்டார்.

“நா பில் பண்ண போறேன். உனக்கும் சேத்து எடுத்துட்டு வரேன். உன் பாட்டிலை குடு” என உரிமையாய் கேட்டார்.

இது அவர் புடுங்க வேண்டிய ஆணியில்லை என தோன்றியது ஜித்துவுக்கு.

“தேங்க்ஸ் கார்சன். ஆனா எனக்கும் ஒரு ஷார்ட் வாக் போகணும். ரொம்ப நேரமா பிரேக் எடுக்கலை. நானே கொஞ்ச நேரம் கழிச்சு பான்ட்ரிக்கு போறேன்” என தவிர்த்தாள்.

தோளை குலுக்கியபடி லேசாய் கண் சிமிட்டி நகர்ந்தார் கார்சன்.

மூன்றாம் நாளில் இருந்து சிறு குழுக்களாக ஒவ்வொரு டீமோடு தனித்தனியாக மீட்டிங் நடந்தது. பெரும்பாலும் கார்சனை சந்திக்கும் சூழல் இல்லை.

மாலை ஆறு மணிக்கு கெஸ்ட் ஹவுஸுக்கு திரும்ப வந்தாள். இரவு எதுவும் பெரிதாய் வேலையில்லை. என்ன செய்யலாம் என யோசித்தாள். துவைக்க வேண்டிய துணி கொஞ்சம் இருந்தது.

லாண்டரி பேக்கை எடுத்துக்கொண்டு பேஸ்மென்டில் இருந்த வாஷிங்ரூமுக்கு போய் துணியை லோட் செய்தாள். இந்த வாஷிங் சைக்கிள் முடிய ஒரு மணி நேரம் ஆகும்.

அந்த அறைக்கு பக்கத்திலேயே ஒரு இன்டோர் கேம் ஏரியாவும், ரீடிங் ரூமும் இருந்தது. ஜித்து அங்கே போய் உட்கார்ந்து புத்தகம் படிக்க ஆரம்பித்தாள்.

சற்று நேரத்தில் “ஹலோ” என கார்சனின் குரல் கேட்டது.

எதிரில் இருந்த சோபாவில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தார்.

“என்ன போரடிக்குதா?கேன் வீ ஹாவ் சம் ஃபன்?” என சிறிது நிறுத்தி பிறகு “இன் கேம் ஏரியா” என தொடர்ந்தார்.

ஜித்துவுக்கு அவரிடம் பெரிதாய் பேச்சு கொடுக்க இஷ்டமில்லை.

இந்த மூன்று நாளில் பல முறை “கேன் வீ ஹாவ் சம் ஃபன்?” என தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார்.    

அந்த நேரம் பார்த்து ரேஷ்மியின் போன் வந்தது. கார்சனிடம் சுருக்கமாக விடை பெற்று ரூமை விட்டு வெளியே வந்தாள் ஜித்து.

ரேஷ்மி ஜித்துவோடு இரண்டு வருடம் மும்பையில் பணி புரிந்தவள். பிறகு சில வருடங்கள் கழித்து நெதர்லாந்து வந்து செட்டிலாகி விட்டாள்.  ரேஷ்மி வேலை செய்யும் கம்பெனி ப்ராஜக்டுக்காக தான் ஜித்து தேர்ட் பார்ட்டி கன்சல்டன்சியில் இருந்து வந்திருக்கிறாள்.

“ஹாய் ஜித், சாரிப்பா, நா வெகேஷன் போயிட்டு இன்னைக்கு தான் வந்தேன். லாஸ்ட் வீக்லேர்ந்து லீவ்ல போய்ட்டேன். அதான் உன் மெசேஜை மிஸ் பண்ணிட்டேன். நாளைக்கு ஆபீஸ்ல மீட் பண்ணலாம் லன்ச் டைமில்” என்றாள் ரேஷ்மி.

சரியென்று சொல்லி பத்து நிமிடங்கள் பேசி முடித்து திரும்பி பார்த்தால் கார்சன் கண்ணாடி ஜன்னலுக்கு பின்னால் நின்று அவளையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தார்.

கார்சன் வெளியே வந்து “கேன் வீ ஹாவ் சம் ஃபன் டுநைட்?” என சிரித்தபடியே கேட்டார்.

ஆளரவமற்ற அந்த பேஸ்மென்டில் அசையாமல் ஒரு உருவம் நின்றது அவளுக்கு தூக்கி வாரிப் போட்டது. ராஷ்மியிடம் பேசியதில் கார்சன் உள்ளே ரூமில் இருந்ததையே அவள் மறந்து போனாள்.

ஜித்து ஏதோ யோசனையாக இருக்க அருகே வந்து “ஃபன் மீன்ஸ் ஃபுல் அன்ட்ரெஸ்ஸட் நைட்” என்றார் மெதுவாய்.

பளுக்கென்று ஒரு அறை விட வேண்டும் போல இருந்தது ஜித்துவுக்கு.

போனை பேண்டின் பின்பக்கம் சொருகியபடியே சில நொடிகள் அவர் சொன்னதை உள்வாங்கி “ஐ ஆம் ஆல்ஸோ எ ஃபன் லவ்விங் பர்சன்” என நிறுத்தி நிதானமாய் சொன்னவள், அந்த சில கணங்களை சுதாரிக்க எடுத்துக் கொண்டாள்.

“ஃபன் மீன்ஸ் பர்ம்லி அன்டர்மைனிங் நான்சென்ஸ்” என நறுக்கென்று சொன்னாள்.

கார்சன் அவள் பதிலை உள்வாங்கும்போதே “பாய் கார்சன். குட் நைட்” என சொல்லி நகர்ந்தவள் சில அடிகள் நடந்தபிறகு திரும்பி வந்தாள்.

“டூ யூ நோ வாட் குட் நைட் மீன்ஸ்? என கேட்டாள்,

கார்சன் முழிக்க “க்ராப் ஒன் ஓவர்நைட்  டயப்பர். நோ இன்அப்ரோப்ரியேட் கெஸ்சர் ஹராஸ்மென்ட் டாலரேட்டட்” என சொல்லி சிரித்தபடியே நகர்ந்தாள்.

A basement game room

கார்சனுக்கு அவமானத்தில் முகம் சிவந்தது.

டக்கென்று டயப்பர் வெளியே தெரிகிறதா என அவர் உடையை சரி பார்த்தார்.  அவரின் டயப்பர் வழக்கத்தை அவள் தெரிந்து கொண்டது அவருக்கு புதிராகவும் பங்கமாகவும் இருந்தது.

அங்கேயே படிக்கட்டில் உட்கார்ந்து யோசிக்க ஆரம்பித்தார்.

முதல் நாள் கெஸ்ட் ஹவுஸ் வந்த பிறகு பக்கத்தில் இருந்த சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்கி பில்லிங் செய்யும் போது ஜித்து ஹலோ சொல்லி அவரை கிராஸ் செய்து போனது ஞாபகம் வந்தது. கவுண்டரில் பையில் போட்டு பேக் செய்யும் போது டயப்பர் கவரை கவனித்திருக்கிறாள் என புரிந்து கொண்டார்.

ஆனாலும் இனி ஜென்மத்துக்கும் யார் குட் நைட் சொன்னாலும் இவள் சொன்ன அர்த்தம் மட்டும் அவருக்கு மறக்காது.

Tamil novel – Jiteswari – Part 11/21

A girl on mobile call

கல்யாணி பிறந்து சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு குமரேசனுக்கு ஒரு சாலை விபத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆறு மாத காலம் படுக்கையிலேயே இருக்க வேண்டிய நிலை. காமாட்சி பாண்டிக்கு வந்து அவரை கவனிக்க ஜித்து குழந்தைகளோடு சென்னையில் எப்போதும் போல தொடர்ந்தாள்.

ஆனால் கற்பகத்துக்கும் குமரேசனுக்கும் இந்த நிலை தொடர உடன்பாடில்லை.

“ஏண்டி, எவ்வளவு நடந்தாலும் அங்க போக மாட்டேன்னு இங்கயே இருக்க? அந்த அம்மா இத்தனை நாள் உனக்கு துணையா இருந்தாங்க இல்ல?இப்ப அவங்களுக்கு ஒரு பிரச்சினைனா நீ கூட இருக்க வேணாமா? அவங்க பசங்களுக்கு ஏங்க மாட்டாங்களா? உன்ன மட்டும் பத்தி மட்டும் தான் யோசிப்பியா நீ?” என ஆரம்பித்தார் கற்பகம்.

“மா, விஷயம் புரியாம பேசாத? மாமா இங்க வந்தா பெஸ்ட் ஆஸ்பிடல்ல பாக்கலாம்னு கூப்பிட்டேன். அவர் வர மாட்டேன்னு சொல்றார். எனக்கும் ராஜூவுக்கும் பேங்க் லோன் கமிட்மென்ட் இருக்கு. ராஜுவும் என்ன வரச்சொல்லி கூப்புடலை. நீ ஏன் என் மேல இப்ப கேஸ் எழுதுற?” என திருப்பி கேட்டாள் ஜித்து.

“யாரும் உன்ன வெத்திலை பாக்கு வெச்சு கூப்புட மாட்டாங்க. சூழ்நிலைக்கு ஏற்ப நீதான் புரிஞ்சி நடக்கணும். அங்க போய் ஏதாவது வேலை தேடிக்க. இப்படி ஒரு ஒட்டு உறவும் இல்லாம இருந்து எங்க மானத்த வாங்காத” என திட்ட ஆரம்பித்தார் கற்பகம்.

வினை வீட்டிலேயே இருக்க வீதியை பற்றி உள்ள வேண்டாம். அடுத்த சில மாதத்தில் ராஜுவும் காமாட்சியும் அவளை பாண்டிக்கு வர முயற்சிக்க சொன்னார்கள்.

ஜித்துவுக்கு இக்கட்டான சூழல். ஒரு புறம் வேலை, பேங்க் கடன் மற்றும் மறுபுறம் பாண்டியில் தகுந்த வேலை கிடைக்காத நிலை.

ஆனால் நீண்ட காலம் இந்த பிரச்சினையை அவள் இழுக்க விரும்பவில்லை. மாற்று ஏற்பாடு என்ன என்று யோசிக்க ஆரம்பித்தாள்.

அவள் துறை சார்ந்த கம்பெனிகளில் வீட்டில் இருந்து வேலை செய்யும் வாய்ப்பை தேட ஆரம்பித்தாள்.

ராஜுவிடம் பேசி சில மாதங்கள் பொறுக்க சொன்னாள். 

மும்முரமாக நட்பு வட்டத்தில் தகவலை சொல்லி வேலை தேடியதில் அடுத்த ரெண்டு மாதத்தில் ஒரு வாய்ப்பு வந்தது.

எண்ணை நிறுவனங்களுக்கு பணி புரியும் ஒரு சிறிய கன்சல்டன்சியில் ரிமோட் ஜாப் ஒன்று வந்தது.

இது இரண்டு வருட கான்டராக்ட் வேலை. அவள் ஏற்கெனவே பார்த்த அதே வேலை, நல்ல சம்பளம் ஆனால் கம்பெனி மட்டும் மிக சிறியது. அது சுமார் ஐம்பது பேர் மட்டும் கொண்ட ஒரு நிறுவனம்.

ஜித்துவுக்கு கான்டராக்ட் வேலை இன்னும் ஒரு படி கீழ் நிலை. ஆனால் இப்போதிருக்கும் சூழ்நிலைக்கு இது சரியான தீர்வு. எனவே தனிப்பட்ட நலனை கருதாமல் அந்த நிறுவனத்தில் சேர முடிவெடுத்தாள்.

மும்பை வேலையை ராஜினாமா செய்து அடுத்த ரெண்டு மாதத்தில் கன்சல்டன்சி வேலைக்கு சேர்ந்தாள். குழந்தைகளோடு பாண்டிக்கு போய் செட்டிலாகி அவள் வேலையை தொடர்ந்தாள்.

குமரேசனுக்கு கர்வம் கூடியது. கை கால் உடைந்தாலும் அது ஒரு நன்மையில் அவருக்கு முடிந்ததற்கு கடவுளுக்கு நன்றி சொன்னார்.

காமாட்சிக்கு எரிச்சல் ஓங்கியது. ஏன் எப்படி அந்த பெண்ணை சத்தாய்க்க வேண்டும்? பேசாமல் சற்று அனுசரித்து சென்னை வந்து தங்கினால் அவளுக்கு எவ்வளவு உதவியாக இருக்கும்? கணவரின் வறட்டு பிடிவாதத்தால் ஜித்து சிறிதளவும் கீழ் நிலைக்கு போவதை காமாட்சி துளியும் விரும்பவில்லை.

ஆனால் ஜித்து கன்சல்டன்சி வேலையில் பெரிதாய் குறைபட்டுக் கொள்ளவில்லை. அவள் எப்போதும் சென்னையில் இருப்பதை போலவே அவள் தினசரி வேலைகளை பார்த்தாள்.

இப்படியே இரண்டு ஆண்டுகள் கழிய இப்போது ஜித்துவுக்கு ஒரு முக்கியமான கால கட்டம்.

இன்னும் சில மாதங்களில் அவள் கான்டராக்ட் முடிய போகிறது.

தற்போது அவள் பணிபுரியும் சவுதி கம்பெனி கிளையண்ட் அவர்களின்  அடுத்த கட்ட ஐந்து வருட கான்ட்ராக்ட்டை ஜித்துவின் கன்சல்டன்சிக்கே  மீண்டும் அளிப்பது என முடிவு செய்திருக்கிறது. 

ஆனால் இரண்டாம் கட்ட ப்ராஜெக்ட்டில் தொடர வேண்டுமென்றால் அவள் நெதர்லாந்து போய் இரண்டு வார ஒர்க்ஷாப்பில் நேரில் பங்கேற்க வேண்டும்.

ஜித்துவுக்கு இந்த ஒர்க்ஷாப் மிக முக்கியமானது.

இரண்டு வாரம் நெதர்லாந்து போய் நேரில் ஒர்க்ஷாப்பில் கலந்து கொண்டு ட்ரெயினிங் முடித்து விட்டு வந்தால் போதும். எல்லாம் சுமுகமாக முடிந்தால் அடுத்த ஐந்து வருடம் இப்போது போல பாண்டியில் இருந்தே வீட்டிலிருந்து பணி புரியலாம்.

“ராஜு, நா டூ வீக்ஸ்   நெதர்லாந்து போகணும். ஒர்க்ஷாப் இருக்கு. போயிட்டு வந்தா அஞ்சு வருஷம் இதே மாதிரி ஒர்க் ப்ரம் ஹோம் வேலை செய்யலாம் ” என சொன்னாள் ஜித்து.

“சரி, போயிட்டு வா” என சொல்லிவிட்டு உடனே அறையை விட்டு வெளியேறினான் ராஜு.

விஷயம் குடும்பத்துக்கு தெரிந்ததும் குமரேசன் கச்சேரியை ஆரம்பித்து விட்டார்.

“அந்த வாரம் தான் நம்ம ரமா கல்யாணம் வருது. அப்புறம் போக சொல்லு” என்றார் காமாட்சியிடம்.

ரமா குமரேசனின் தம்பி மகள். அவர் தம்பி வீட்டில் முதல் விசேஷம்.

இல்லேங்க, நம்ம சவுகர்யத்துக்கு கம்பெனில எப்படிங்க மாத்துவாங்க? நாம தான் எல்லாரும் போறோமே, ஜித்து ஒருத்தி வரலேன்னா என்ன?”என மெதுவாய் சொன்னார் காமாட்சி.

“நம்ம குடும்ப விசேஷம் எல்லாத்துக்கும் அவங்க எல்லாரும் ஒருத்தர் தவறாம வராங்க. அவங்க வீட்ல மொதல் விசேஷம். அதுக்கு வீட்டு மருமக இல்லாம போய் நிக்க சொல்றியா? காரு வீடு வேலை பணம்னு இருங்க. நாலு சொந்தம் வேணும்னு நெனைக்காதீங்க. அவன் தான் கவர்ன்மெண்டு வேலைக்கு போறானே? இன்னும் என்ன கொறை” என எகிறினார் குமரேசன்.

“நா ஒருத்தன் கத்தி என்ன ஆக போகுது? அம்மா புள்ள ரெண்டு பேரும் ஜடம் மாதிரி இருக்கீங்க. வாய தொறந்து நல்லது கெட்டது எடுத்து சொன்னா என்ன? அதுக்கு தான் இந்த சம்மந்தம் வரும்போதே சொன்னேன். இது சரிப்படாதுனு. யாரு எம் பேச்ச கேட்டீங்க? இப்ப எல்லார் முன்னாடியும் நா போய் தலையை குனிஞ்சு நிக்க போறேன். அவன் ஒத்த மரமா நிக்க போறான்” என வாய்க்கு வந்ததை பேசித் தீர்த்தார்.

பக்கத்து அறையில் இருந்த ஜித்துவுக்கு சுர்ரென்று ஆனது. இரண்டு வாரம் வேலை விஷயமாய் போய் வருவதற்கு இத்தனை வருடங்களுக்கு பிறகும் குழந்தைகள் பிறந்த பிறகும் வரன் பார்த்த கதையை இழுத்தது அடி முட்டாள்தனமாய் பட்டது.

போய் நறுக்கென்று நாலு வார்த்தை கேட்க வேண்டும் போல இருந்தது.

சில நிமிடங்கள் நிதானித்தவள் எதுவும் கேட்க வேண்டாம் என முடிவெடுத்தாள். தனக்கு கேட்க வேண்டும், எரிச்சலாகி விஷயம் சூடு பிடிக்க வேண்டும் என திட்டமிட்டு கொட்டப்படும் வார்த்தைகள்.

தான் சொல்லும் காரணத்தையோ பதிலையே துளி கூட மதிக்கப்போவதில்லை. செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கிறது.

வீணாய் பேசி உழட்டுவதில் எந்த பயனும் இல்லை.எவ்வளவு விரைவாக இதை மறக்கிறோமோ அவ்வளவு நல்லது என நினைத்துக்கொண்டாள்.

காமாட்சிக்கு சங்கடமாய் இருந்தது.

அந்த பெண் அலட்டாமல் சத்தமில்லாமல் உழைத்துக் கொட்டுகிறாள்.

சகல சௌகர்யங்களையும் செய்து கொடுத்திருக்கிறாள். அவர்கள் சொந்த பந்த வகையறாவில் எந்த மருமகளும் இவள் அளவிற்கு திறமைசாலி கிடையாது. நாம் செய்த புண்ணியம் இந்த மாதிரி ஒரு பொறுப்பான, தன்மையான பெண் குடும்பத்திற்கு அமைவது என பல நேரங்களில் கர்வமாய் இருந்திருக்கிறார்.

இந்த மனுஷனுக்கு மட்டும் புத்தி வேறு மாதிரி இருக்கிறது. கண்டிப்பாய் அவளுக்கு கேட்டிருக்கும். அவள் மனம் என்ன பாடுபடும் என கவலையில் ஆழ்ந்தார்.

சற்று நேரத்தில் டோர் பெல் அடித்தது. காமாட்சி போய் கதவை திறக்க பின்னாலேயே ஜித்துவும் வெளியே வந்தாள்.

சாப்பாடு டெலிவரி வந்திருக்கிறது. இருபத்து நான்கு வகையான பண்டங்களோடு மெகா தாலி.

“வாங்க அத்தை சாப்பிடுவோம்” என அழைத்தாள்.

பெரிய சில்வர் தட்டுகளை கழுவி எடுத்து வந்து வைத்தாள். பொறுமையாக எல்லா டப்பாக்களையும் பிரித்து பாத்திரங்களில் மாற்றி தட்டு போட்டு மூடி வைத்தாள். பேக்கிங் பேப்பர் மற்றும் டேப்பு குப்பை என எல்லாவற்றையும் அள்ளி குப்பையில் போட்டு டேபிளை சுத்தம்  செய்தாள்.

டோர் பெல் அடித்தது. டவுனிலேயே பெஸ்ட் லஸ்ஸி நாலு பேக்.

வாங்கி வந்து கண்ணாடி கப்பை கழுவி ஊற்றி மூடி போட்டு வைத்தாள். 

குமரேசனுக்கு தாக்கு பிடிக்க முடியவில்லை.

எப்போது அழைப்பு வரும் என காத்துக் கொண்டிருந்தார்.

எல்லா அயிட்டங்களையும் மாற்றி ஊத்தும்போதே வாசனை வீட்டை நிரப்பி இல்லாத பசியையும் கிளறி விட்டது.

அரை மணி நேரம் ஆனது.

காமாட்சி “வாங்க சாப்பிட” என கூப்பிட்டு முடிப்பதிற்குள் போய் சேரில் உட்கார்ந்தார்.

அட்டகாசமான சாப்பாடு. அருமையான லஸ்ஸி. இருபது நிமிடம் ரசித்து ரசித்து சாப்பிட்டு முடித்தார் குமரேசன்.

Family lunch time

எதிரில் உட்கார்ந்து மெகா தாலியோடு குமரேசனின் ஈகோவையும் சேர்த்து மெதுவாக மென்று முழுங்கிக் கொண்டிருந்தாள் ஜித்து.

இந்த பெண் தனக்கு பிறந்திருக்க வேண்டியவள். ஒரு வார்த்தை பேசாமல்,முகம் சுழிக்காமல் ஆர்ப்பாட்டமில்லாமல் ஒரு தட்டு நல்ல சோறு போட்டு குமரேசனை தட்டி தூக்கியிருக்கிறாள்.

மற்ற குடும்பங்களில் நாராசமாக மாறும் சண்டை, இங்கே டைனிங் டேபிளில் அமர்க்களமாக பரிமாறப்பட்டு கொண்டிருக்கிறது.

நரம்பில்லாமல் பேசும் நாக்கு ஒரு மாற்றுக்காக நல்ல சுவையை அனுபவிக்கட்டும் என நினைத்திருக்கிறாள். அமிலமாக சுட்ட வார்த்தைகள் ஜீரணமாக ஆயிரம் ரெண்டாயிரம் போனால் பரவாயில்லை என நினைத்துக் கொண்டார் காமாட்சி.

ஒரு மெகா தாலியில் ரமா கல்யாண மேட்டர் சுபம் மங்களம் போட்டு முடிக்கப்பட்டது.

Tamil novel – Jiteswari – Part 10/21

Temple night

இறைவனும் இறைவியும் கிளம்பி வந்து குளத்தின் நடுவே இருந்த கல் மண்டபத்தில் உட்கார்ந்தார்கள்.

வடக்கு கோபுரத்திலிருந்து பார்த்த காகம் பறந்து போய் மாருதியிடம் விஷயத்தை சொல்லி எழுப்பியது.

இருவரும் போய் கல் மண்டபத்தின் ஓரத்தில் காதை தீட்டிக்கொண்டு உட்கார்ந்தார்கள்.

“என்ன மாருதி, சௌக்கியமா?” என்றார் இறைவன்.

மாருதி பணிவாய் வணக்கம் வைத்து விட்டு குளத்தின் மீது பார்வையை வீசியது.

“என்ன தாதா, நீங்க சௌக்கியமா?” என்றார் இறைவன் காகத்தை பார்த்து.

காகம் உள்ளுக்குள் நடுங்கியது. மெலிதாய் தலையசைத்து மௌனமாய் அமர்ந்திருந்தது.

“நீங்க ரெண்டு பெரும் தானே இவங்க லீகல் டீம்” என சிரித்தார் இறைவன்.

பேசிக்கொண்டிருக்கும் போதே மச்சிமா வந்து வணங்கினார். மற்ற மீன்களும் அவர் பின் சூழ்ந்து கொண்டு நின்றன.

இறைவி குட்டி மீனை பார்த்து “இங்கே வா” என்கிறார்.

“உனக்கு போரடிக்குதா இங்கே?” என வாஞ்சையாக கேட்டார்.

“ஆமாம்” என பயத்தோடு சொன்னது குட்டி மீன்.

“சரி, உன்னையும் உன் பேமிலியையும் பக்கத்துல இருக்குற ஆத்துக்கு அனுப்பவா? அங்க நீங்க ஜாலியா விளையாடலாம். நெறய ஜனங்க வருவாங்க” என கேட்டார் இறைவி. 

“வேண்டாம்” என சொல்ல வேண்டும் என வேண்டிக் கொண்டது காகம்.

“இல்ல, வேணாம்மா. நாங்க இங்கயே இருக்கோம்” என சொன்னது குட்டி மீன்.

“ஏன்?” என கேட்டார் இறைவி.

“நீ ஏன் அவங்க நோ சொல்லணும்னு வேண்டிக்கிட்ட?” என டக்கென்று அதே நேரத்தில் காகத்திடம் கேட்டார் இறைவன்.

தொக்காய் மாட்டியது காகம். அஜெண்டா அண்டாவில் தானாய் குதித்து மாட்டிக் கொண்டது.

டெம்பிள் ஓனர் கேட்கிறார். எந்த டெம்ப்ளேட்டில் பதில் சொல்வது என யோசித்தது.

“என்ன, ஓனர பத்தி என்ன யோசனை?” என அதை மீண்டும் சீண்டினார் இறைவன்.

இந்த கேள்வியில் டெம்ப்ளேட்டை முடிவு செய்தது காகம்.

“இல்ல சாமி, உங்களுக்கு தெரியாதது ஒண்ணுமில்ல. ஆத்து தண்ணி ரொம்ப மாசா இருக்கு. ஜனங்க குடிக்கவும் லாயக்கு இல்லை. மீனுங்க வாழவும் லாயக்கு இல்லை. அங்க போய் சாகுறதுக்கு இதுங்க இங்கயே பொழச்சி இருக்கலாம்” என விளக்க தீபத்தை ஏற்றியது காகம்.

“ஏன் மாசா இருக்கு? யாரு பண்ற வேலை இது” என கோபமாய் கேட்டார் இறைவி.

“உன் டெம்ப்ளேட் ஒர்க்அவுட் ஆயிடுச்சி. டீடைலா சொல்லு” என சிரித்தார் இறைவன்.

ரெண்டு பேருக்கும் நல்லா தெரியும். ஆனா நம்மள வெச்சி செய்றாங்க என நினைத்தது காகம்.

“அதான் எங்க டெம்ப்ளேட்” என சொன்னார் இறைவன்.

காகத்துக்கு கேம் புரிந்து விட்டது.

பேசாமல் தெரிந்ததை சொல்லி விடலாம் என ஆரம்பித்தது.

“எல்லாம் அந்த சிமெண்டு பேக்டரியால வந்து வினை. அவனுங்க கழிவையெல்லாம் ஆத்து தண்ணில கொட்டுறானுங்க. மாசு வாரியமும் கண்டுக்காம இருக்கு. ஜனங்க போராடி போராடி அலுத்துப் போய்ட்டாங்க. பேக்டரிகாரனுங்க ஊருக்கு தண்ணி சுத்திகரிக்குற மெஷினை போட்டு பிரச்சினையை அமுக்கிட்டாங்க. நல்ல தண்ணி கெடைக்குறதால ஜனங்களும் அந்த பிரச்சினையை அப்படியே விட்டுட்டாங்க. பாவம், இந்த மீனுங்க தான் கூண்டோடு அழியுதுங்க” என விவரித்தது காகம்.

மச்சிமாவும் மற்றும் சில மீன்களும் குனிந்து கண்ணீர் சிந்தின.

Fish family

அவர்கள் இனத்தின் அழிவை யாரோ ஒருவர் விவரிக்கும் போது தாங்கள் தப்பி பிழைத்ததற்கு சந்தோஷப்படுவதா அல்லது தங்கள் இனத்தின் அழிவிற்காக வேதனைப்படுவதா என புரியாமல் இருந்தன.

இறைவி கண் மூடி இந்த டாபிக்கை யோசித்தார்.

அந்த ஓனர் தன்னுடைய பரம பக்தர் என தெரிய வந்தது.

பேக்டரி லாபத்தில் கோவிலுக்கு ஒரு தொகையை உபயமாக கொடுத்திருக்கிறார்.

“அந்த ஓனர் உங்க டிவோடீ தான். நம்ம கோவிலுக்கு கூட நெறய காசு குடுத்து இருக்காரு. அந்த குஷில நீங்களும் அந்த ஆளு வேண்டுற காண்ட்ராக்டெல்லாம் முடிச்சு தரீங்க” என தைரியமாய் சொல்லி விட்டது காகம்.

“நெலம் நீரெல்லாம் பாழாக்கிட்டு, இந்த கொளுத்த காப்பாத்துறேன்னு சுத்து செவரு கட்ட, கேட்டு போடன்னு நிதி குடுத்திருக்கான். அதையும் போர்ட் போட்டு மாட்டி நல்லவன் பேரெடுக்குறான். இதே போர்ட ஆத்தோரம் வெப்பானா? நான்தான் இத நஞ்சாக்கிட்டேன்னு” என திட்டி தீர்த்தது மச்சிமா.  

சிமெண்டு பாக்டரி ஓனர் கிழவன் சிக்கி சின்னா பின்னமானார்.

“ஏதோ உண்டில ஐஞ்சு பத்து போடுறவனை ஒண்ணும் செக் பண்ண வேண்டியதில்லை. லம்பா ஒரு தொகையை ஒருத்தன் குடுத்தா, டியூ டிலிஜன்ஸ் பாக்காம எப்புடி வாங்கலாம்?” என முதல் கேள்வியை கேட்டது மாருதி.

“இது கார்பொரேட் குரங்கு” என நினைத்துக் கொண்டார் இறைவி.

இறைவன் இறைவியை பார்த்தார். பிறகு மச்சிமாவிடம் பேச ஆரம்பித்தார்.

“நாங்க இந்த விஷயத்துக்கு ரொம்ப வருத்தப்படறோம். தப்பு செஞ்சவங்களுக்கு நாங்க தக்க தண்டனையை கொடுப்போம். இனிமே இந்த மாதிரி நடக்காம நாங்க பாத்துக்கறோம்” என்றார்.

“என்ன நீங்களும் ராஜா மாதிரியே பேசுறீங்க? அவரும் அப்டி தான். எங்க யார் செத்தாலும், ரேப்பு நடந்தாலும் ஒரு லெட்டரை எங்களுக்கு போட்டுட்டு அந்த விஷயத்தை கெடப்புல போட்டுடுவாரு” என காகம் ராஜாவை கோர்த்துவிட்டது.

முதலில் சிமெண்ட் கம்பெனி ஓனர் கிழவன். இப்போது ராஜா.

அடுத்து லிஸ்டில் இருப்பது தாங்கள் தான் என அப்போது அவர்களுக்கு தெரியவில்லை.

“சரி, அந்த ஓனர் பண்ண தப்புக்கு அவர் பதில் சொல்லியாகணும். அவர் அனுபவிப்பார். கேட்டு தொறக்க ஏற்பாடு பண்றோம்” என்றார் இறைவி.

“ஆத்து தண்ணிய சுத்தம் பண்ணி தருவீங்களா, ப்ளீஸ்” என்றது குட்டி மீன்.

“கண்டிப்பா, அந்த ஓனர இனிமே பொறுப்பா இருக்க சொல்றேன். நல்ல மழையை குடுத்து அந்த ஆற்றை வளமாக்குறேன்” என உத்திரவாதம் கொடுத்தார் இறைவி.

மச்சிம்மாவும் மீன்கள் கூட்டமும் சந்தோஷத்தில் ஆர்ப்பரித்தார்கள்.

சரியான மங்குனி கூட்டம் என மனதிற்குள் திட்டியது காகம். இன்னும் எவ்ளோ இருக்கு சரி பண்ண. இதுங்க என்னடான்னா இதுக்கே சந்தோசப்படுதுங்க. இதுங்களுக்கு சுய புத்தியே இல்ல என கருவியது.

“ஏங்க, நாமளும் வாட்டர் பவுண்டைன் போடலாமா கொளத்துல. அப்டியே கொஞ்சம் நல்ல லைட்டிங்கும் பண்ணா ஆம்பியன்ஸ் நல்லாயிருக்கும்” என கேட்டார் இறைவி.  

இரண்டு மாவட்டம் தாண்டி இறைவியின் சகோதரியின் திருத்தலம் இருக்கிறது. நீரூற்று வைத்த குளம் இருக்கிறது அங்கே.

“மந்திரி சம்மந்தி தான் அந்த கான்டராக்ட செய்யுறாரு. உங்க அக்கா கோவிலுக்கும் அவரு தான் பவுண்டைன் போட்டாரு. கூட கொஞ்சம் அமௌண்டையும் ஆட்டையை போட்டாரு அந்த டீலிங்க்ல” என சொல்லியது காகம்.

லிஸ்ட் நீண்டு கொண்டே போனது. இறைவன் அதையும் நோட் செய்து கொண்டார். காகத்தின் டெம்பிளேட் நன்றாக வேலை செய்தது.

“உனக்கு ஒண்ணும் பிராது இல்லியா? சௌகர்யமா இருக்கியா?” என டாபிக்கை காகத்தின் பக்கம் திருப்பினார் இறைவன்.

“ஏதோ உங்க புண்ணியத்தால சாப்பாட்டுக்கு கொறையில்லாம இருக்கேன். வேளா வேளைக்கு வயிறார சாப்புடறேன். வேற என்ன வேணும் ஒரு ஜீவனுக்கு?” என பவ்யமாய் பதில் சொன்னது காகம்.

தன்னிடம் வரும்போது காகம் சட்டென்று நியூட்ரல் கியருக்கு மாறியது மச்சிமாவுக்கு உறுத்தலாக இருந்தது.

நேத்து தான் ரேடியேஷனுக்கு பயந்து வீடு மாறின கதையை சொல்லுச்சு. இன்னிக்கு என்னடான்னா ஒண்ணும் பிரச்சினை இல்லேன்னு சொல்லுது” என மனதிற்குள் அலுத்துக் கொண்டது.

“ஆனா கொஞ்சம் கில்டியா பீல் பண்றேன்” என இழுத்தது காகம்.

மாருதிக்கு காகத்தின் அடுத்த அஜெண்டா புரிந்தது. ஆனாலும் பேசாமல் இருந்தது. தன்னிடம் கேட்டால் பதில் சொல்லலாம் என நினைத்தது.

“சொல்லு கேக்குறோம்” என்றார் இறைவன்.

“இல்ல, கணேசன் அண்ணனுக்கு நல்ல சாப்பாடு போடுறீங்க. நம்ம கோசாலைல இருக்குற யசோதாவுக்கும் ஒரு குறைவும் இல்ல. நானும் மாருதியும் அலைஞ்சு திரிஞ்சு கோவிலுக்குள்ள வயித்த நெறைச்சுக்கறோம். ஆனா இந்த மீனுங்களுக்கு தான் ஒரு வழியுமில்லை. இயற்கையாவே அதுங்களுக்கு கெடைக்குற புழு பூச்சி பாசிய தின்னு வாழுதுங்க. எல்லாருக்கும் படியளக்குற நீங்க அதுங்களுக்கு ஒரு வழி பண்ணலாமுல்ல? ஏதோ சில பக்தர்கள் புண்ணியத்துல அப்பப்போ கொஞ்சம் பொரி சாப்பிட்டுதுங்க. அதையும் அந்த தங்கராஜு பய பூட்டு போட்டு தடுத்துட்டான். அதுங்க மனசு எவ்வளவு வேதனையா இருக்கும்? நாங்க எல்லாம் உங்க படைப்பு தானே. உங்க வீட்ல இருக்கவுங்க, கோவிலுக்கு வர பக்தர்கள் எல்லாருக்கும் குறைவில்லாம உணவை குடுக்குற நீங்க, ஏன் இந்த மீன் குட்டிகளை மறந்தீங்க? நா வேளாவேளைக்கு சாப்பிடும் போது இதுங்க ஞாபகம் வருது, கூடவே தங்க ராஜு மேல கோவமும் வருது” என சொல்லி முடித்தது காகம்.

மாருதியும் மச்சிமாவும் வாயடைத்துப் போனார்கள். 

இறைவனும் இறைவியும் அதே நிலையில் தான் இருந்தார்கள்.

“உங்கள் காலடியிலேயே வாழும் இவர்களுக்கு என்ன கருணை காட்டினீர்கள் இதுவரை? உணவும் இல்லை. உற்சாகமும் இல்லை. இந்த மீன்கள் எல்லாம் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றன. ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் இந்த கோவிலில் எந்த மனித நடமாட்டமும் இல்லாமல் வெறுமையாக இருக்கின்றன. இது எவ்வளவு பெரிய கொடுமை தெரியுமா?” என பொரிந்து தள்ளியது காகம்.

மாருதிக்கு காகத்தின் மீது பெரும் மரியாதை ஏற்பட்டது. இனியும் தான் வாய் மூடி இருப்பது இழிவு என கருதியது.

“மன்னியுங்கள் மச்சிமா. இவ்வளவு நாள் இதை ஏன் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் எப்போதோ தீர்வு கண்டிருக்கலாமே?” என கேட்டார் இறைவி.

“படைத்த தாய்க்கு தெரியாதா பிள்ளைகளின் நிலை” என இருந்து விட்டோம் என அப்பாவியாய் சொன்னது மச்சிமா.

“என்னையும் மன்னித்துக் கொள்ளுங்கள் மச்சிமா. நாங்களும் எங்கள் அருகிலேயே வாழும் உங்களை கவனிக்கத் தவறிவிட்டோம்” என வருந்தினார் இறைவன்.

மச்சிமா பதறி விட்டது. இவ்வளவு தூரம் இவர்கள் பணிவாய் மன்னிப்பு கேட்பார்கள் என அது எதிர்பார்க்கவில்லை.

மாருதி காகத்தை பெருமையாய் பார்த்தது. மிகவும் நுட்பமான விஷயத்தை தைரியமாக வாதம் செய்து தீர்த்து வைத்திருக்கிறது. 

கடவுளின் காலடியிலேயே இருந்தாலும் எந்த பிரச்சினையாய் இருந்தாலும் வாய் திறந்து கேட்டால் தான் தீர்வு கிடைக்கும் என அவர்களுக்கு தெளிவாய் புரிந்தது.