மறு நாள் காலை டோர் பெல் அடித்தது. அதே தெருவில் மளிகை கடை வைத்திருக்கும் வள்ளியப்பன் வந்திருந்தார்.
“உள்ள வாங்க சார்” என வரவேற்றார் நேசமணி.
“வாங்க சார். எப்படி இருக்கீங்க” என்றபடியே உள்ளேயிருந்து வந்தார் சங்கு புஷ்பம்.
“நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க” என நலம் விசாரித்தார்.
அவரோடு நீண்டகால நட்பு இவர்களுக்கு. இன்றளவும் அவர் கடையில் தான் பொருட்களை வாங்குவார்கள்.
என்ன டிஸ்கவுண்ட் போட்டாலும் ஆன்லைனில் வாங்க மாட்டார்கள். ஒண்ணாம் தேதியானால் லிஸ்ட் போட்டு போனில் அனுப்பி விடுவார்கள். கடை பையன் கொண்டு வந்து கொடுத்து விடுவான்.
ஒரு ஸ்திரமான வாடிக்கையாளராக அவரின் தொழிலுக்கு ஆதரவு தந்து வருகிறார்கள். அதனால் இவர்கள் மீது சற்று அதிக மரியாதையும் பிரியமுமாய் இருப்பார் வள்ளியப்பன்.
“சாரி சார். காலங்காத்தால வந்துட்டேன்” என்றார்.
“இந்தாங்க பஞ்சாமிர்தம். பையன் கல்யாணத்துக்காக திருச்செந்தூர் முருகருக்கு வேண்டிக்கிட்டேன். போயிட்டு நேத்து நைட் தான் வந்தோம்” என்றபடியே ஒரு பாட்டிலை நீட்டினார்.
சங்கு புஷ்பம் நன்றி சொல்லி பய பக்தியாக பெற்றுக் கொண்டார்.
“நீ பேசிகிட்டு இரு அபர். நா போய் இவருக்கு என் ஸ்பெஷல் காபி போட்டு எடுத்துட்டு வரேன்” என உள்ளே போனார் நேசப்பா.
“சார் நெக்ஸ்ட் டைம் சின்னதா ஒரு கப்புல குடுங்க சார் போதும். ரெண்டு பேருக்கும் சுகர்” என்று சிரித்தார் சங்கு புஷ்பம்.
“நீங்க சாப்பிடுங்க மேடம். அப்புறம் வர்ற கெஸ்ட்டுக்கு எல்லாம் குடுங்க” என்றார் வள்ளியப்பன்.
“வீணாக்காமல் கெஸ்ட்டுக்கு தாராளமா தரலாம் சார். ஆனா நூறு குட்டி கப்பும் ஸ்பூனும் கழுவணும் இந்த பாட்டிலை முடிக்க” என நிஜத்தை சொன்னார் சங்கு புஷ்பம்.
“அது என்னவோ உண்மை தான்” என ஒப்புக் கொண்டார் வள்ளியப்பன்.
“சார், இன்னைக்கு லிஸ்ட் அனுப்பலாம்னு இருக்கோம். ப்ரீயா எள்ளு மிட்டாய், கடலை மிட்டாய் போடாதீங்க. ரெண்டு பார் டிஷ் வாஷ் சோப்பு போடுங்க” என ரெக்வஸ்ட்டை சொன்னார் சங்கு புஷ்பம்.
கொல்லென்று அடக்க முடியாமல் கண்ணில் நீர் வர சிரித்தார் வள்ளியப்பன்.
“இன்னைக்கு என் நாள் நல்லபடியா ஆரம்பமாகுது. இதை நெனச்சு சிரிச்சே இன்னைக்கு பொழுது போகும்” என்றார் வள்ளியப்பன்.
காபியோடு நேசமணி வந்து சிரிப்பில் கலந்து கொண்டார். அரை மணி நேரம் கா கலப்பாக போனது.
“சரிங்க சார். பார்க்கலாம்” என சொல்லி கிளம்பினார்.
ஆளுக்கு கொஞ்சம் எடுத்துக்கொண்டு பஞ்சாமிர்த பாட்டிலை சிஸ்டம் டேபிள் மேல் வைத்தார்கள்.
அடுத்து வரும் கெஸ்ட்டுக்கு மறக்காமல் கொடுக்க. அப்போது அவர்களுக்குத் தெரியாது அந்த கெஸ்டிடம் இருந்து கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று.
அமராவதி குடி வந்து ஒரு வாரம் ஆனது. வாசலில் உருளியில் பூ வைத்து கொண்டிருந்தார் புஷ்பம்.
வேலைக்கு கிளம்ப வெளியே வந்த அமராவதி புஷ்பத்திடம் ஏதோ சொல்ல வந்தபோது “அடடா, ஒரு புஷ்பமே பூ வைக்கிறதே” என்றபடி வாக்கிங் முடித்து வந்தார் நேசப்பா.
மூவரும் சேர்ந்து சிரிக்க, பிறகு என்ன விஷயம் என்றார் புஷ்பம்.
“ஆன்ட்டி இன்னைக்கு ஒரு டெலிவெரி எனக்கு வரும். கொஞ்சம் வாங்கி வைக்க முடியுமா” என்றாள் அமராவதி.
சரிம்மா என புஷ்பம் சொல்ல நன்றி சொல்லி கிளம்பினாள்.
நேசப்பா பேங்க் வேலை முடித்து வர ஒரு மணிஆனது. கதவை திறந்த கையோடு போய் பெட் ரூமில் ஏசி போட்டு வைத்தார் சங்கு புஷ்பம். மதியம் சாப்பிட்டு முடித்து ஆளுக்கு நாலு மாத்திரை போட்டு இரண்டு மணிக்கு படுத்தார்கள்.
நேசப்பாவிற்கு சிறு வெளிச்சம் இருந்தாலும் தூக்கம் வராது. அடர் நிற திரை போட்டு கதவு அடைத்து படுத்து விடுவார். ஹாலின் கிழக்கு பக்கம் லோ லையிங் சோபா சங்கு புஷ்பத்தின் இடம்.
மூன்று மணிக்கு லேண்ட் லைன் அடித்தது. மெயின் கேட் செக்யூரிட்டி செல்லகுமார்.
மெயின் கேட்டில் இருந்து ஜி பிளாக் வர ஐந்து நிமிடம் ஆகும். இதான் சௌத் விங்கில் லாஸ்ட் பிளாக். அரை மணி நேரம் ஆனது.
“என்ன செல்லகுமார், டெலிவரி எதுவும் வரலையே” என கேட்டார் சங்குபுஷ்பம்.
“அம்மா, அவர் மத்த ப்ளாக்ல குடுத்துட்டு வருவார்னு நெனைக்கிறேன்” என்றார் செல்ல குமார்.
சரி கொஞ்சம் படுக்கலாம் என போனார் சங்கு புஷ்பம். லேண்ட் லைன் அடித்தது. பாய்ந்து எடுத்தார் அவர். நேசப்பாவுக்கு கேட்டால் அவரும் எழுந்து விடுவார் என்று.
ஜி பிளாக் செக்யூரிட்டி பக்தவத்சலம். “அம்மா, பார்சல் வந்திருக்கு அமராவதி மேடம் வீட்டுக்கு. உங்க வீட்ல குடுக்க சொன்னாங்க. அனுப்பவா?” என்றார்.
சரி என சொல்லி கதவை திறந்து வைத்து உட்கார்ந்தார் சங்குபுஷ்பம். இரண்டு நிமிடம் கழித்து டெலிவரி வந்தது. பார்சலை வாங்கி வைத்து கதவை பூட்டி வந்து படுத்தார் சங்குபுஷ்பம்.
காலிங் பெல் அடித்தது. புஷ்பத்திற்கு மண்டை சுர்ரென்று ஆனது.
“அம்மா கையெழுத்து வாங்க மறந்துட்டேன்” என நின்றார் அவர். சரியென்று போட்டு கொடுத்து அனுப்பி மணி பார்த்தால் மூணு ஐம்பது.
யாரு புஷ்பம் என வந்தார் நேசப்பா. ஐந்து வரை தூங்குபவர் முன்கூட்டியே எழுந்து விட்டார். டெலிவரிங்க அமராவதிக்கு என்றார் சங்கு புஷ்பம்.
அதன் நீ அமராம சுத்திகிட்டு இருக்கியா என நக்கலடித்தார்.
சங்கு புஷ்பம் முப்பது ஆண்டுகள் நர்சாக இருந்து ஓய்வு பெற்றவர். நேசப்பா தபால் துறையில் முப்பத்திமூன்று ஆண்டுகள் பணி நிறைவு செய்தவர். நாற்பது ஆண்டுகால திருமண வாழ்வில் பெரும்பாலான நாட்கள் வேலை நிமித்தம் வேறு வேறு ஊர்களில் பணியாற்றி ஓய்வுக்கு பிறகு ஒன்றாக வாழ்பவர்கள்.
இரண்டு மகனும் ஒரு மகளும் இருந்தாலும் தனி வீட்டில் தங்கள் போக்கில், தங்கள் வயதுக்கேற்ற வாழ்க்கை முறையை சுதந்திரமாக ரசிக்கிறவர்கள்.
பண்டிகை நாட்களிலும் வார இறுதிகளிலும் வரும் நேசப்பாவை சில மணி துளிகள் இருவரும் மனம் விட்டு பேச இயலாத பெரும் நெருக்கடியான கால கட்டம். கூட்டு குடும்பமும், புஷ்பத்தின் ஷிப்ட் நேரங்களும் அவர்களின் சந்திப்பு பொழுதுகளை சுருக்கியே வைத்திருந்தது.
நேசப்பாவின் கடிதங்களை கூட திருமணமான புதிதில் தனியாக பெற இயலாத சூழல். நேசப்பா அவருடைய பிரியங்களை கொட்டி மருத்துவமனை முகவரிக்கு தனியாக அனுப்பும் கடிதங்கள் தான் அவர்களை பல ஆண்டுகள் பிணைத்திருந்தது.
ஆக ஓய்வுக்கு பிறகு அவர்களின் கூட்டை அவர்கள் எப்போதோ தீர்மானித்தார்கள். ஒரு கூரையின் கீழ் ஒரு முழு பொழுது வாழாதவர்கள், பணி நிறைவு வரை தனி தனியாக ஓடியவர்கள், எல்லை கோடு கடந்து கீழே விழும்போது தங்களை தாங்களே தாங்கிக்கொள்ள முடிவெடுத்தார்கள்.
கணக்கில்லா நாட்களையும் முடிவில்லா பொழுதுகளையும் பெரும் பாரம் சுமக்க இழந்தவர்கள், மீதமிருக்கும் கணங்களை தங்களுக்காக மட்டும் பொத்தி வைக்கிறார்கள். பெற்றதையும் சுற்றத்தையும் மரத்தும் மறந்தும் தள்ளி நிற்கிறார்கள்.
பணிக்காலத்தில் நோயை வென்ற வாழக்கையையும், தூரத்து உறவுகளின் தகவலையே மருந்தாக மூன்று தசாப்தங்களாக சக மனிதர்களுக்கு பரிசளித்தவர்கள். நேசமும்,பாசமும், மனிதமும் ரத்த உறவில் மட்டும் காணாமல் எண்ணில்லா தருணங்களை சமூகத்தில் சுவைத்தவர்கள்.
இன்று நாற்பது ஏக்கரில் எண்ணூறு குடும்பங்கள் வசிக்கும் குடியிருப்பில் ஐந்து ஆண்டுகளாக குடியிருக்கிறார்கள். அனுசரணையும் ஆறுதலும் இடம், பொருள், மனிதர் உணர்ந்து அளிக்க தெரிந்தவர்கள். சுரண்டுபவரும் ஏய்ப்பவரும் யாராக இருந்தாலும் துறக்க துணிந்தவர்கள்.
டோர் பெல் அடித்தது. “சங்கு புஷ்பம் போய் பார்” என்றார் நேசமணி. வெரிகோஸ் கால் பட்டையை அட்ஜஸ்ட் செய்தபடியே எழுந்து போனார் சங்கு புஷ்பம்.
“ஆன்ட்டி நாங்க பக்கத்து பிளாட்டுக்கு புதுசா வந்திருக்கிறோம். ஹலோ சொல்லிட்டு போலாம்னு வந்தோம். என் பேரு அமராவதி. இவர் பேரு கார்த்தி” என்றாள் அந்தப் பெண்.
உள்ள வாங்கம்மா என்றார் சங்கு புஷ்பம்.
வடை போட்டு முடித்து கை துடைத்தபடியே வந்தார் நேசமணி. முப்பதுகளில் இருக்கும் இருவரும் சற்று யோசித்தபடியே உட்கார்ந்தார்கள்.
நாங்க ஜி 501 பிளாட்டுக்கு காலைல தான் வந்தோம். சொந்த ஊர் நெல்லூர் எங்களுக்கு. இங்க ரெண்டு வருஷம் ஹைவேஸ் ரோடு கான்ட்ராக்ட் இவருக்கு. நானும் ஐடி பார்க்ல ஒர்க் பண்றேன். அமராவதி பேசிக்கொண்டிருக்க கார்த்தி ஏதோ யோசனையாய் இருந்தார்.
“காபியா, டீயா? என்ன சாப்பிடுறீங்க?” என்றார் நேசமணி. “எதுவா இருந்தாலும் ஓகே சார்” என்றார்கள்.
“அபராஜிதா, இவங்களுக்கு உன் ஸ்பெஷல் பில்டர் காபி போட்டு கொடு என்றார் நேசமணி. சடாரென்று நிமிர்ந்து உட்கார்ந்து ஹாலை நோட்டமிட்டார் கார்த்தி. தீர்க்கமாய் நேசமணியை பார்த்தபடியே உள்ளே போனார் சங்கு புஷ்பம்.
இஸ்திரி, எலெக்ட்ரிசியன், பணிப்பெண் என எல்லா போன் நம்பர்களையும் பெற்றுக்கொண்டு காபி குடித்து முடித்து “மறக்காம சொசைட்டி குரூப்ல ஆட் பண்ணிடுங்க ஆன்ட்டி” என்று சொல்லி இருவரும் கிளம்பினார்கள்.
வழி அனுப்பி கதவை சாற்றி திரும்பும்போது டக்கென்று “யாரு ஆண்ட்டி அபராஜிதா?” என்றார் கார்த்தி.
“நான் தான்பா அது. என் பேரு சங்கு புஷ்பம். அங்கிள் நல்ல மூட்ல கூப்பிடறது அபராஜிதா” என லேசாக சிரித்தபடியே சொல்ல, அது அவளோட ஹிந்தி பேரு என சிரித்தார் நேசமணி.
ஒரு நிமிடம் தன் கணவரின் மேல் அமராவதியின் பார்வை தெறித்தது. கார்த்தி அதை தவற விட நேசப்பாவும், சங்கு புஷ்பமும் நமுட்டு சிரிப்போடு உள்ளே வந்தார்கள்.
“காவ்யா, எழுந்திரு, ஸ்கூலுக்கு ரெடியாகணும்” என எழுப்பினாள் யமுனா.
“மா, சூப்பரா ஒரு கனவுமா, என்ன எழுப்பிட்டியே” என்றபடி படுக்கையிலிருந்து எழுந்தாள் காவ்யா.
ஆறு வயது. ஒன்றாம் வகுப்பு முடிக்கப்போகிறாள்.
அப்படியே அவளை அள்ளி அணைத்து மீண்டும் படுக்கையில் சரித்து தானும் பக்கத்தில் படுத்தாள் யமுனா.
“வாவ், சொல்லு என்ன கனவு?” என கேட்டாள்.
“மா, நானும் ஒரு பிங்க் ஏஞ்சலும் கார்டன்ல கை கோர்த்து நடந்து போறோம்.
வைட் பட்டர்பிளை நம்ம பால்கனிக்கு வருமே அதுவும் வந்துது எங்களோட.
நாங்க பேசிட்டே கார்டன சுத்தி நடந்தோம்.ஏஞ்சல் என்கிட்டே என்ன வேணும்னு கேட்டாங்க? என் பிரெண்ட் அனுஷாவோட டாக் அவுஸ் ஒடஞ்சி போச்சி, அத பிக்ஸ் பண்ணி தர சொல்லி கேட்டோம்” என்றாள்.
“ஓ, அனுஷாவும் வந்தாளா ட்ரீம்ல?” என கேட்டேன்.
“ஆமாம்மா, அனுஷா அப்புறம் அவளோட பப்பி” என்றாள்.
“ஏஞ்சல் என்ன சொன்னாங்க?” என ஆர்வமாய் கேட்டேன்.
“அவங்க ஓகே சொல்லிட்டு பப்பியோட வீட்டை சரி பண்ணிட்டாங்க” என்றாள்.
“ஏண்டி வைட் பட்டர்பிளை, அனுஷா,பப்பி எல்லாரும் ஏஞ்சல மீட் பண்ணிருக்காங்க. ஆனா என்ன மட்டும் உன் கனவுல கூப்பிடலை?” என செல்லமாய் கோபித்து கொண்டேன்.
“மா அதுக்குள்ள நீ என்ன எழுப்பிட்ட. சரி, நா திரும்ப தூங்குறேன், என் கனவுல வா” என நைஸாய் படுத்துக்கொண்டாள்.
“ஹா, இந்த கதையெல்லாம் வேணாம், எழுந்து வா, குளிக்கலாம்” என்றேன் சிரித்துக்கொண்டே.
“நேத்து நைட்டும் அப்பா வீட்டுக்கு வரலியாம்மா” என சுற்றி முற்றி பார்த்துக் கொண்டே கேட்டாள்.
விடிந்ததும் பேசி சிரித்தாலும் அவள் ஏங்குவது வலியை தந்தது. அவளிடம் எப்படி சொல்லி புரிய வைப்பது அவருக்கு ஒரு ஏஞ்சல் இருப்பதை.
“இல்லடா, வா வந்து ப்ரஷ் பண்ணு” என தூக்கி கொண்டு போய் பாத்ரூமில் நிற்க வைத்தேன்.
“நா குட் நைட் மெசேஜ் அனுப்பினேன்மா, அவர் ரிப்ளை கூட பண்ணல” என அலுத்துக் கொண்டாள்.
“அப்பா பிஸியா இருக்காரும்மா” என சொல்லி, வேறு ஏதோ கதைகளை பேசி அவளை சமாதானப்படுத்தினேன்.
“நீ பேக் ரெடி பண்ணு, நா உனக்கு தோசை ஊத்துறேன்” என சொல்லி கிச்சனுக்குள் போனேன்.
“ஏண்டி, உனக்கு பொறுமையே கிடையாதா? ஒரு பொண்ணு இருக்கா, மனசுல வச்சி நடந்துக்க” என அழுத்தமாக சொன்னாள்.
“எனக்கு ஒரு பொண்ணு இருக்கான்னு அமைதியா இருக்கணுமா? இல்ல நம்ம வீட்டுல ஒரு பொண்ணு கல்யாணத்துக்கு இருக்கானு வெயிட் பண்ணணுமா?” என கோபம் தெறிக்க கேட்டேன்.
“இன்னும் மூணு வருஷத்துல எல்லாம் சரிஆகிடும்னு நம்ம ஜோசியர் சொல்றார். அதுவரை கொஞ்சம் பொறுமையா இரும்மா” என்றாள்.
“இந்த லட்சணத்தை தான் அவர் சொன்னாரு நல்ல ஜாதகம்னு என் தலைல கட்டி வச்ச? காவ்யா சொல்ற விதத்துல சொன்னா புரிஞ்சிப்பா. நானும் அவளும் எங்க வாழ்க்கையை பாத்துக்குறோம். தயவு செஞ்சு அட்வைஸ் பண்ணாதே” என்றேன்.
வட்டமாய் ஒரு தோசை சுட்டு முடிப்பதற்குள் வாழ்க்கையை ஒரு சுற்று மனதிற்குள் ஓட்டி பார்த்து விட்டேன்.
திரும்ப வந்து “இந்தா” என சொல்லி ஒரு பேப்பரை நீட்டினாள்.
தினசரி காலண்டரில் தேதி கிழித்த பேப்பர்.
“என்ன” என கேட்டேன்.
“பிரிச்சு படி” என்றாள்.
“யூ ஆர் மை ஏஞ்சல்” என எழுதியிருந்தாள்.
“ஸ்வீட்ட்டு, தேங்க்ஸ். என்ன இந்த பேப்பர்ல எழுதி இருக்க?” என்றேன்.
“எங்க டீச்சர் சொன்னாங்கமா, இந்த மாதிரி வேஸ்ட் பேப்பர்ல ஏதாவது கிராப்ட் பண்ணுங்கன்னு. ஆனா டெய்லி கிராப்ட் பண்ண முடியாதுல. அதான் எழுதிட்டேன்” என்றாள் சிரித்தபடி.
“சூப்பர்” என சொல்லி பார்க்கிங் நோக்கி நடந்தோம்.
“மா, அனுஷாவோட பப்பிக்கு ஹவுஸ் சரியாகுமா” என திடீரென கேட்டாள்.
“அவங்க அம்மா கொஞ்சம் பிஸியா இருக்காங்கம்மா, இன்னும் ஒரு வாரத்துல சரி பண்றேன்னு சொல்லி இருக்காங்க. இன்னைக்கு வாக்கிங் வந்தா கேக்குறேன்” என சொல்லி வண்டியை கிளப்பினோம்.
“மா, ஒரு கேம். அனுஷாவோட பர்த்டே டென்த் ஆகஸ்ட். இப்போ நா ஸ்கூல் போறதுக்குள்ள அந்த நம்பரை பாத்துட்டேன்னா, அவ பப்பியோட அவுஸ் சரியாகிடும்” என வெளியே பார்த்துக் கொண்டே சொன்னாள்.
காரில் போகும் போது போன் பார்க்காமல் இருக்க ஒரு நாள் விளையாட்டாய் ஆரம்பித்தது, இன்று வரை தொடர்கிறது. தினம் ஒரு எண். தினம் ஒரு கேள்விக்கான பதில்.
“ஏன் ஜோசியரை அங்க வர சொல்லி இருக்கியா?” என கேட்டேன்.
பதிலேதும் சொல்லாமல் திரும்ப போய் விட்டாள்.
மூச்சு முட்டுவது போல இருந்தது யமுனாவிற்க்கு. வாழவும் வழியில்லாமல், அதிலிருந்து வெளியேறவும் வழியில்லாமல் திணறலாய் இருந்தது.
பேசாமல் கல்யாணம் பண்ணாமல் வீட்டிலேயே இருந்திருக்கலாம். இல்லை இவர்கள் பாரமாய் உணர்ந்தால் படிப்புக்கு ஏற்ற வேலையில் எங்காவது வேறு ஊரிலாவது வாழ்ந்திருக்கலாம்.”மா, நா ரெடி ஆகிட்டேன்” என காவ்யா வர, தான் இன்னும் தயாராகாமல் இருப்பது உரைத்தது.
“பத்து நிமிஷம், ரெடி ஆகிட்டு வரேன்’ என சொல்லி அனுப்பினேன்.
கோவிலுக்கு போய் சாமி பார்த்துவிட்டு கல் திண்ணையில் போய் உட்கார்ந்தோம். நல்ல மழை.
நினைத்த மாதிரியே ஜோசியரும் யாருடனோ பேசிக்கொண்டிருந்தவர், எங்களை பார்த்ததும் டவலை போர்த்திக் கொண்டு எங்களை நோக்கி வந்தார்.
சற்று நேரம் பொதுவாக பேசியவர், பிறகு என்னிடம் “யமுனா, அம்மா என்கிட்டே பேசுனாங்க. அவருக்கு ரெண்டாம் வீடு இப்போ கெட்டு போய் இருக்கு, கொஞ்ச நாள்ல சரி ஆகிடும்மா”, என தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
“அம்மா இவரு வீடு எல்லாம் பிக்ஸ் பண்ணுவாரா? அங்கிள், என் பிரெண்டோட வீடு ரிப்பேரா இருக்கு, சரி பண்ணி தரீங்களா?” என குறுக்கே வந்து கேட்டது காவ்யா.
அவர் முழிக்க எனக்கு சிரிப்பாய் வந்தது.
நாயின் வீடு கூட சரியாகும். ஆனால் நாய் புத்தி உள்ளவர்கள் என்றும் திருந்த போவதில்லை என நினைத்துக் கொண்டேன்.
காவ்யா மாதிரி க்ளையண்ட்டை எதிர்பாக்காதவர் உடனே கிளம்பி போய் விட்டார்.
மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது.
கால் வலி ஆரம்பிக்க, “வா காவ்யா அந்த ஓரம் போய் உட்காரலாம்” என அழைத்தேன்.
“மா, ரொம்ப போரடிக்குது” என சிணுங்கினாள்.
“அங்க தூண்ல ஒரு பை கட்டி இருக்கு பாரு, அதுல இருந்து ஒரு பேப்பர் எடுத்துட்டு வா, நா உனக்கு போட் செய்து தரேன்” என அம்மா சொல்ல “சரி பாட்டி” என ஓடியது காவ்யா.
அனுஷா அம்மாவிடம் இருந்து போன் வர பேசியதில் சில நிமிடங்கள் கழிந்தது.
“அம்மா இங்க பாரு சர்ப்ரைஸ்” என வந்தாள் காவ்யா.
“உன் பர்த்டே டேட் பாரு” என தினசரி காலண்டர் பேப்பரை காட்டி சிரித்தாள்.
“உனக்கு இன்னிக்கு லக்கி டேமா” என சொல்லிவிட்டு என்னிடம் பேப்பரை நீட்டியது.
விபூதி பிரசாதம் மடிக்க தினசரி காலண்டர் பேப்பர் ஒரு பையில் வைக்கப்பட்டிருந்தது. அதில் கப்பல் செய்ய ஒரு பேப்பரை எடுக்க அது என் பிறந்த நாளாய் அமைந்தது.
அம்மா கப்பல் செய்து கொடுக்க, காவ்யா மழை நீரில் அதை விட்டது.
பெரும் மழை காற்றோடு வெளுத்து வாங்கி கொண்டிருந்தது.
கப்பல் ஆடி ஆடி பயணிக்க சற்று தூரம் காவ்யாவும் அதனுடன் நகர்ந்து சென்றாள்.
சற்று நேரம் கழித்து அதை நீரில் இருந்து எடுத்து மீண்டும் பிரித்து அந்த மண்டப தரையில் வைத்து விட்டாள்.
“ஆமா, ஏன் அந்த கப்பலை பிரிச்சுட்டே?” என கேட்டேன்.
“அது ரொம்ப சேடா இருந்துது மா” என்றாள் காவ்யா.
“கப்பலா?” என்றேன்.
“பேப்பர் மா!” என்றாள்.
“கரெக்ட், பேப்பர் தான், ஏன் சேடா இருந்துது? அது உன் கிட்ட என்ன சொல்லுச்சு?” என கேட்டேன்.
“நானும் ஒரு வீட்ல காலண்டர்ல சேபா இருந்தேன். என்ன ஏன் கப்பல் பண்ணி காத்து மழைல விட்டீங்க? என்ன ஏன் கஷ்டப்படுத்துறீங்கன்னு பீல் பண்ணுதும்மா” என சொன்னாள் காவ்யா.
கண்ணை கட்டியது எனக்கு.
நிஜம் தான். வேணாம்னா தூக்கி ஒரு ஓரமா வெச்சிருக்கலாம்.கொஞ்சம் புண்ணியம் கிடைக்கும்னு அதை கொண்டு வந்து இந்த பைல போட்டுட்டாங்க. சரி ஏதோ விபூதி பொட்டலம் மடிக்கவாவது மட்டும் உபயோகபடுத்தியிருக்கலாம். அத கப்பல் செஞ்சு வேடிக்கை பாக்குறோம்.
வெறும் காலி கப்பல், ஒரு பாரமும் சுமக்காமல் ஜாலியாக ஆடி ஆடி போய் கொண்டிருக்கிறது என நாம் நினைக்கிறோம். ஆனால் காற்று மழையில் பழக்கமில்லாத வகையில், திசையறியாமல் பயணிப்பதை விட வேறு எது பெரும் பாரமாய் இருக்க முடியும்” என மனதிற்குள் நினைத்து கொண்டேன்.
“உங்க வீட்டுல தாண்டி பேப்பர் பேசும், சைக்கிள் பேசும், நாய் குட்டி பேசும்” என முறைத்தாள் அம்மா.
“எல்லாம் பேசும்மா, நாம தான் கவனிக்கிறது இல்ல. அது சரி, பெத்த பொண்ணு, நா வாய தொறந்து என் கஷ்டத்த சொன்னாலே உன்னால புரிஞ்சிக்க முடியல” என்றேன்.
“இந்த கப்பல் மாதிரி தான்மா நானும். வாழ்க்கை என்ன எங்க கூட்டிட்டு போகுது, எதிர்காலம் எப்படினு தெரியாம தத்தளிக்குறேன். உங்களுக்கு கடமை முடியனும்னு கல்யாணத்த பண்ணிடுறீங்க. அப்புறம் சமூகத்துக்காக அமைதியா காலத்தை ஓட்ட சொல்றீங்க” என்றேன்.
சற்று நேரத்தில் மழை சற்று குறைய வீட்டுக்கு கிளம்ப எழுந்தோம்.
“அடுத்த முறை லாயர பாக்க போனீன்னா சொல்லு ,நானும் கூட வரேன்” என்றாள் அம்மா.
மழையும் விட மனசும் தெளிவாக இருந்தது.
“அம்மா அங்க பாரு, நா தேடுன நம்பர்” என காண்பித்தாள் காவ்யா.
போற்றி மாலையின் எண்ணிக்கை பளிச்சென கல்வெட்டில் இருந்தது.