
சங்கு புஷ்பம் முப்பது ஆண்டுகள் நர்சாக இருந்து ஓய்வு பெற்றவர். நேசப்பா தபால் துறையில் முப்பத்திமூன்று ஆண்டுகள் பணி நிறைவு செய்தவர். நாற்பது ஆண்டுகால திருமண வாழ்வில் பெரும்பாலான நாட்கள் வேலை நிமித்தம் வேறு வேறு ஊர்களில் பணியாற்றி ஓய்வுக்கு பிறகு ஒன்றாக வாழ்பவர்கள்.
இரண்டு மகனும் ஒரு மகளும் இருந்தாலும் தனி வீட்டில் தங்கள் போக்கில், தங்கள் வயதுக்கேற்ற வாழ்க்கை முறையை சுதந்திரமாக ரசிக்கிறவர்கள்.

பண்டிகை நாட்களிலும் வார இறுதிகளிலும் வரும் நேசப்பாவை சில மணி துளிகள் இருவரும் மனம் விட்டு பேச இயலாத பெரும் நெருக்கடியான கால கட்டம். கூட்டு குடும்பமும், புஷ்பத்தின் ஷிப்ட் நேரங்களும் அவர்களின் சந்திப்பு பொழுதுகளை சுருக்கியே வைத்திருந்தது.
நேசப்பாவின் கடிதங்களை கூட திருமணமான புதிதில் தனியாக பெற இயலாத சூழல். நேசப்பா அவருடைய பிரியங்களை கொட்டி மருத்துவமனை முகவரிக்கு தனியாக அனுப்பும் கடிதங்கள் தான் அவர்களை பல ஆண்டுகள் பிணைத்திருந்தது.
ஆக ஓய்வுக்கு பிறகு அவர்களின் கூட்டை அவர்கள் எப்போதோ தீர்மானித்தார்கள். ஒரு கூரையின் கீழ் ஒரு முழு பொழுது வாழாதவர்கள், பணி நிறைவு வரை தனி தனியாக ஓடியவர்கள், எல்லை கோடு கடந்து கீழே விழும்போது தங்களை தாங்களே தாங்கிக்கொள்ள முடிவெடுத்தார்கள்.
கணக்கில்லா நாட்களையும் முடிவில்லா பொழுதுகளையும் பெரும் பாரம் சுமக்க இழந்தவர்கள், மீதமிருக்கும் கணங்களை தங்களுக்காக மட்டும் பொத்தி வைக்கிறார்கள். பெற்றதையும் சுற்றத்தையும் மரத்தும் மறந்தும் தள்ளி நிற்கிறார்கள்.

பணிக்காலத்தில் நோயை வென்ற வாழக்கையையும், தூரத்து உறவுகளின் தகவலையே மருந்தாக மூன்று தசாப்தங்களாக சக மனிதர்களுக்கு பரிசளித்தவர்கள். நேசமும்,பாசமும், மனிதமும் ரத்த உறவில் மட்டும் காணாமல் எண்ணில்லா தருணங்களை சமூகத்தில் சுவைத்தவர்கள்.
இன்று நாற்பது ஏக்கரில் எண்ணூறு குடும்பங்கள் வசிக்கும் குடியிருப்பில் ஐந்து ஆண்டுகளாக குடியிருக்கிறார்கள். அனுசரணையும் ஆறுதலும் இடம், பொருள், மனிதர் உணர்ந்து அளிக்க தெரிந்தவர்கள். சுரண்டுபவரும் ஏய்ப்பவரும் யாராக இருந்தாலும் துறக்க துணிந்தவர்கள்.
