Tami novel – OTP – Part 3/20

An aged lady sitting next to the phone

அமராவதி குடி வந்து ஒரு வாரம் ஆனது. வாசலில் உருளியில் பூ வைத்து கொண்டிருந்தார் புஷ்பம்.

வேலைக்கு கிளம்ப வெளியே வந்த அமராவதி புஷ்பத்திடம் ஏதோ சொல்ல வந்தபோது “அடடா, ஒரு புஷ்பமே பூ வைக்கிறதே” என்றபடி வாக்கிங் முடித்து வந்தார் நேசப்பா.

மூவரும் சேர்ந்து சிரிக்க, பிறகு என்ன விஷயம் என்றார் புஷ்பம்.

“ஆன்ட்டி இன்னைக்கு ஒரு டெலிவெரி எனக்கு வரும். கொஞ்சம் வாங்கி வைக்க முடியுமா” என்றாள் அமராவதி.

சரிம்மா என புஷ்பம் சொல்ல நன்றி சொல்லி கிளம்பினாள்.

நேசப்பா பேங்க் வேலை முடித்து வர ஒரு மணிஆனது. கதவை திறந்த கையோடு போய் பெட் ரூமில் ஏசி போட்டு வைத்தார் சங்கு புஷ்பம். மதியம் சாப்பிட்டு முடித்து ஆளுக்கு நாலு மாத்திரை போட்டு இரண்டு மணிக்கு படுத்தார்கள்.

நேசப்பாவிற்கு சிறு வெளிச்சம் இருந்தாலும் தூக்கம் வராது. அடர் நிற திரை போட்டு கதவு அடைத்து படுத்து விடுவார். ஹாலின் கிழக்கு பக்கம் லோ லையிங் சோபா சங்கு புஷ்பத்தின் இடம்.

மூன்று மணிக்கு லேண்ட் லைன் அடித்தது. மெயின் கேட் செக்யூரிட்டி செல்லகுமார்.

“அம்மா, பார்சல் வந்திருக்கு அமராவதி மேடம் வீட்டுக்கு. உங்க வீட்ல குடுக்க சொன்னாங்க. அனுப்பவா?” என்றார்.

சரி என சொல்லி வந்து உட்கார்ந்தார் சங்கு புஷ்பம்.

மெயின் கேட்டில் இருந்து ஜி பிளாக் வர ஐந்து நிமிடம் ஆகும். இதான் சௌத் விங்கில் லாஸ்ட் பிளாக். அரை மணி நேரம் ஆனது.

“என்ன செல்லகுமார், டெலிவரி எதுவும் வரலையே” என கேட்டார் சங்குபுஷ்பம்.

“அம்மா, அவர் மத்த ப்ளாக்ல குடுத்துட்டு வருவார்னு நெனைக்கிறேன்” என்றார் செல்ல குமார்.

சரி கொஞ்சம் படுக்கலாம் என போனார் சங்கு புஷ்பம். லேண்ட் லைன் அடித்தது. பாய்ந்து எடுத்தார் அவர். நேசப்பாவுக்கு கேட்டால் அவரும் எழுந்து விடுவார் என்று.

ஜி பிளாக் செக்யூரிட்டி பக்தவத்சலம். “அம்மா, பார்சல் வந்திருக்கு அமராவதி மேடம் வீட்டுக்கு. உங்க வீட்ல குடுக்க சொன்னாங்க. அனுப்பவா?” என்றார்.

சரி என சொல்லி கதவை திறந்து வைத்து உட்கார்ந்தார் சங்குபுஷ்பம். இரண்டு நிமிடம் கழித்து டெலிவரி வந்தது. பார்சலை வாங்கி வைத்து கதவை பூட்டி வந்து படுத்தார் சங்குபுஷ்பம்.

காலிங் பெல் அடித்தது. புஷ்பத்திற்கு மண்டை சுர்ரென்று ஆனது.

“அம்மா கையெழுத்து வாங்க மறந்துட்டேன்” என நின்றார் அவர். சரியென்று போட்டு கொடுத்து அனுப்பி மணி பார்த்தால் மூணு ஐம்பது.

யாரு புஷ்பம் என வந்தார் நேசப்பா. ஐந்து வரை தூங்குபவர் முன்கூட்டியே எழுந்து விட்டார். டெலிவரிங்க அமராவதிக்கு என்றார் சங்கு புஷ்பம்.

அதன் நீ அமராம சுத்திகிட்டு இருக்கியா என நக்கலடித்தார்.

Leave a comment