
மறு நாள் காலை டோர் பெல் அடித்தது. அதே தெருவில் மளிகை கடை வைத்திருக்கும் வள்ளியப்பன் வந்திருந்தார்.
“உள்ள வாங்க சார்” என வரவேற்றார் நேசமணி.
“வாங்க சார். எப்படி இருக்கீங்க” என்றபடியே உள்ளேயிருந்து வந்தார் சங்கு புஷ்பம்.
“நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க” என நலம் விசாரித்தார்.
அவரோடு நீண்டகால நட்பு இவர்களுக்கு. இன்றளவும் அவர் கடையில் தான் பொருட்களை வாங்குவார்கள்.
என்ன டிஸ்கவுண்ட் போட்டாலும் ஆன்லைனில் வாங்க மாட்டார்கள். ஒண்ணாம் தேதியானால் லிஸ்ட் போட்டு போனில் அனுப்பி விடுவார்கள். கடை பையன் கொண்டு வந்து கொடுத்து விடுவான்.
ஒரு ஸ்திரமான வாடிக்கையாளராக அவரின் தொழிலுக்கு ஆதரவு தந்து வருகிறார்கள். அதனால் இவர்கள் மீது சற்று அதிக மரியாதையும் பிரியமுமாய் இருப்பார் வள்ளியப்பன்.
“சாரி சார். காலங்காத்தால வந்துட்டேன்” என்றார்.
“இந்தாங்க பஞ்சாமிர்தம். பையன் கல்யாணத்துக்காக திருச்செந்தூர் முருகருக்கு வேண்டிக்கிட்டேன். போயிட்டு நேத்து நைட் தான் வந்தோம்” என்றபடியே ஒரு பாட்டிலை நீட்டினார்.
சங்கு புஷ்பம் நன்றி சொல்லி பய பக்தியாக பெற்றுக் கொண்டார்.
“நீ பேசிகிட்டு இரு அபர். நா போய் இவருக்கு என் ஸ்பெஷல் காபி போட்டு எடுத்துட்டு வரேன்” என உள்ளே போனார் நேசப்பா.
“சார் நெக்ஸ்ட் டைம் சின்னதா ஒரு கப்புல குடுங்க சார் போதும். ரெண்டு பேருக்கும் சுகர்” என்று சிரித்தார் சங்கு புஷ்பம்.
“நீங்க சாப்பிடுங்க மேடம். அப்புறம் வர்ற கெஸ்ட்டுக்கு எல்லாம் குடுங்க” என்றார் வள்ளியப்பன்.
“வீணாக்காமல் கெஸ்ட்டுக்கு தாராளமா தரலாம் சார். ஆனா நூறு குட்டி கப்பும் ஸ்பூனும் கழுவணும் இந்த பாட்டிலை முடிக்க” என நிஜத்தை சொன்னார் சங்கு புஷ்பம்.
“அது என்னவோ உண்மை தான்” என ஒப்புக் கொண்டார் வள்ளியப்பன்.
“சார், இன்னைக்கு லிஸ்ட் அனுப்பலாம்னு இருக்கோம். ப்ரீயா எள்ளு மிட்டாய், கடலை மிட்டாய் போடாதீங்க. ரெண்டு பார் டிஷ் வாஷ் சோப்பு போடுங்க” என ரெக்வஸ்ட்டை சொன்னார் சங்கு புஷ்பம்.
கொல்லென்று அடக்க முடியாமல் கண்ணில் நீர் வர சிரித்தார் வள்ளியப்பன்.
“இன்னைக்கு என் நாள் நல்லபடியா ஆரம்பமாகுது. இதை நெனச்சு சிரிச்சே இன்னைக்கு பொழுது போகும்” என்றார் வள்ளியப்பன்.
காபியோடு நேசமணி வந்து சிரிப்பில் கலந்து கொண்டார். அரை மணி நேரம் கா கலப்பாக போனது.
“சரிங்க சார். பார்க்கலாம்” என சொல்லி கிளம்பினார்.
ஆளுக்கு கொஞ்சம் எடுத்துக்கொண்டு பஞ்சாமிர்த பாட்டிலை சிஸ்டம் டேபிள் மேல் வைத்தார்கள்.
அடுத்து வரும் கெஸ்ட்டுக்கு மறக்காமல் கொடுக்க. அப்போது அவர்களுக்குத் தெரியாது அந்த கெஸ்டிடம் இருந்து கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று.