Tamil novel – OTP – Part 7/20

Checking the newspaper for local political news to get some clue about the guest waiting at the security gate

காலை பத்து மணி வாக்கில் லேண்ட் லைன் அடித்தது. மெயின் கேட் செல்லகுமார்.

“சொல்லுங்க செல்லகுமார்” என்றார் சங்கு புஷ்பம்.

“மேடம், சார பாக்கணும்னு எக்ஸ் எம்எல்ஏ ஆபீசுலேர்ந்து ஒரு கட்சிக்காரர் வந்திருக்கார். அவர் பேரு ரத்தினம்னு சொன்னார். அனுப்பவா மேடம்” என்றார்.

சங்கு புஷ்பத்திற்க்கு ரத்தினம் என்ற பெயர் புதுசாய் இருந்தது. சற்று யோசித்தவர் “அவர் என்னை பாக்கணும்னு சொன்னாரா இல்ல சாரையா?” என்றார்.

“சார் தான் மேடம். நேசமணி மதிவாணன்னு முழு பேர் சொன்னார். ஆனா போன் நம்பர் தெரியாதுனு சொல்றார். ஆளும் பர்ஸ்ட் டைம் பாக்குற மாதிரி இருக்கு” என்றார் செல்லகுமார்.

“சரிப்பா. ஒரு பத்து நிமிஷம் அவரை விசிட்டர் ஹால்ல உக்கார வை. பேன் போட்டு விடுங்க. கொஞ்சம் தண்ணி குடுத்து பாத்துக்குங்க. நா அவர்கிட்ட பேசிட்டு உங்களுக்கு கால் பண்றேன். என்ன கரை வேட்டி அவரு?” என்றார் சங்கு புஷ்பம்.

செல்லகுமார் சொன்ன கட்சி பேரை குறித்துக்கொண்டார்.

“ஏங்க, கொஞ்சம் இங்க வாங்க” என நேசப்பாவை அழைத்தார்.

கிச்சனில் இருந்து வந்த நேசப்பா பக்கத்து இருக்கையில் உட்கார்ந்தார்.

“உங்களுக்கு இந்த கட்சிலேர்ந்து ரத்தினம்னு யாராவது தெரியுமாங்க? உங்கள பாக்கணும்னு வந்திருக்கார். விசிட்டர் ஹால்ல வெயிட் பண்ண சொல்லி செல்லகுமார்கிட்ட சொல்லி இருக்கேன்” என்றார் சங்கு புஷ்பம்.

“இல்லையேம்மா, ஆளு பேரு புதுசா இருக்கு. நமக்கும் கட்சிக்காரங்க யாரையும் தெரியாது. யாரா இருக்கும்” என யோசித்தார்.

லேண்ட் லைன் அடித்தது. “மேடம், அவர் போன்ல யார்கிட்டயோ பேசிகிட்டு இருக்கார். எலெக்சன் விஷயம். நேசமணின்னு பேரு அப்படின்னு சொல்லிக்கிட்டு இருக்கார்” என்றார் செல்லகுமார்.

“சரிப்பா, நா சாருகிட்ட சொல்லிடறேன். நீ வெயிட் பண்ணு” என சொல்லி போனை வைத்தார் சங்கு புஷ்பம்.

“எலெக்சன் விஷயம், நேசமணின்னு பேரு அப்படின்னு அவர் போன்ல யார்கிட்டயோ பேசிக்கிட்டு இருக்காராம். செல்லகுமார் சொல்றார்” என்றார் சங்கு புஷ்பம்.

“நம்ம செல்லம் எப்பவும் ஷார்ப்பு” என சிரித்தார் நேசப்பா.

“சரிங்க என்ன விஷயமா இருக்கும்? அதுவும் எலெக்க்ஷனை பத்தி” என குழம்பினார் சங்கு புஷ்பம். “வர சொல்லுவோமா” என கேட்டார் நேசப்பாவிடம்.

“கொஞ்ச நேரம் இரு” என சொல்லி கண் மூடி யோசித்தார்.

சில நிமிடத்திற்கு பிறகு “அங்க ஷெல்ப்புல நம்ம லோக்கல் நியூஸ் பேப்பர் இருக்கு பாரு. லாஸ்ட் நாலு நாள் பேப்பர் எடுத்துட்டு வா” என்றார்.

பத்து நிமிடம் ஆனது. “இங்க பாருங்க” என ஒரு செய்தியை காண்பித்தார் சங்கு புஷ்பம்.

Leave a comment