சிறப்பு குறுநாவல் – தாதிபத்ரியின் தங்கபுத்திரி – Part 1/11

A mother comforting a sick child

“ராஜு சாயந்திரம் கொஞ்சம் நேரத்தோட வரியா? பவாணி குட்டிக்கு லூஸ் மோஷன் போகுது. ஆள் ரொம்ப சோர்ந்து போயிருக்கா. பீவர் மைல்டா தான் இருக்கு.  மெடிசின் ஒரு டோஸ் குடுத்துருக்கேன். ஆறாவது டோக்கன் நமக்கு. நீ ஒரு அஞ்சு மணிக்கு வந்தா போயிட்டு வந்திடலாம்.”

வாய்ஸ் மெசேஜ் போட்டு பக்கத்தில் தூங்கும் குழந்தையை பார்க்கும் போது ஆயாசமாக இருந்தது சுதாவுக்கு.

ராஜுவுக்கு தாதிபத்ரி சிமெண்ட் பேக்டரியில் வேலை. ஷிப்ட் நேரத்தில் போன் பேச முடியாது. டீ பிரேக்கில் போன் பார்த்து திரும்ப கூப்பிட்டால் மட்டுமே பேச முடியும். எப்படியும் நாலு மணிக்குள் பேசுவான் என்று எதிர்பார்த்தாள்.

பவா இன்னும் எப்படியும் ஒரு அரை மணி நேரம் தூங்குவாள். அதற்குள் எல்லா கை வேலைகளையும் முடிக்க வேண்டும். அவள் எழுந்ததும் என்ன கொடுக்கலாம் என்று யோசித்தாள். அரிசியை நைசாக அரைத்து கஞ்சி போட்டு வைக்கலாம். ஈஸியாக குடிக்க முடியம். டாக்டரை பார்த்து திரும்பும் வரை கொஞ்சம் பசி தாங்கும் என நினைத்து வேலையை ஆரம்பித்தாள்.

கஞ்சி போட்டு, துணி உலர்த்தி, வீடு சுத்தம் செய்து முடித்து உட்காரும்போதுதான் இன்னும் மத்தியான சாப்பாடு சாப்பிடவில்லை என உரைத்தது.

இரவு முழுக்க கண் விழித்ததால் கொஞ்சம் படுத்தால் போதும் என்று இருந்தது சுதாவுக்கு. குட்டி தூங்கும் போதே கொஞ்சம் தூங்கலாம் என்று கண் அயர்ந்தாள்.

சற்று நேரத்தில் போன் மணிஅடிக்க அலறி முழிப்பு வந்தது. எதேச்சையாக பக்கத்தில் பார்க்க, குழந்தை இன்னும் தூங்கி கொண்டிருந்தது.

போன் எடுத்து பேசும் முன் அழுகை வெடித்து வந்தது சுதாவுக்கு. அதன் மெல்லிய விரல்களை பற்றி கொண்டே கலங்கி அமர்திருந்தாள்.

ஏன்  சுதா போன் எடுக்கலை?  ஒரு வேளை குளிக்கிறாளா இல்லை குழந்தையோடு வேலையாக இருக்கிறாளா? ராஜுவுக்கு எல்லா எண்ணங்களும் சுற்றி அடித்தது.

அதற்குள் சுதாவே திரும்ப கூப்பிட்டாள்.

“ஏன் சுதா என்ன ஆச்சு? ஏன் போன் எடுக்கலை? எல்லாம் ஓகே வா?” என்றான்.

“ஓகே ராஜு. நீ போன் பண்ணும்போது நான் அலறி எழுந்துட்டேன். பவா குட்டி அப்டி தூங்குறா…என்னால முடியல ராஜு…ஸ்வீட்டுமாக்கு மட்டும் ஏன் இப்படி?” மேற்கொண்டு சொல்ல முடியாமல் சுதா தேம்ப ராஜு ஒரு நிமிடம் உறைந்து போனான்.

கடவுளே இவளை என்ன சொல்லி தேற்ற…”சுதாம்மா ப்ளீஸ்.பாத்துக்கலாம் விடு. சாப்டியா? ப்ளீஸ், கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணு, நீ ஆல்ரெடி ரெண்டு நாளா பவா கூட போராடிகிட்டு இருக்கே. நா சீக்கிரம் வரேன்” என ராஜு தேற்றினான்.

போனை வைத்த பிறகு ராஜு தெளிய ஐந்து நிமிடம் ஆனது. சுற்றிலும் பார்த்தால் யாரும் இல்லை. எல்லாரும் பிரேக் முடிந்து புளோருக்கு போய் விட்டார்கள். மணி  சாரிடம் சொல்லிட்டு சீக்கிரம் கிளம்ப வேண்டும். மனதில் ஏதேதோ ஓட ராஜு தளர்வாய் லிப்ட் நோக்கி நடந்தான்.

மணி சாரிடம் சொல்லி விட்டு கிளம்பியதும், பார்க்கிங் போகும் வழியில் ராஜுவுக்கு எண்ணம் அடுத்த நாளுக்கு தாவியது.

நாளையில்  இருந்து ஓரு வாரத்திற்கு ஒர்க்க்ஷாப். இன்னும் மூன்று மாதங்களில் லேட்டஸ்ட் கன்வேயர் சிஸ்டம் ஆஸ்திரேலியாவில் இருந்து வர போகிறது.

சிட்னியில் இருந்து என்ஜினீயர்ஸ் டீம் இன்று இரவு கெஸ்ட் ஹவுஸ் வந்து சேர்கிறார்கள். காலை ஒன்பது மணிக்கு செஷன் ஆரம்பிக்கிறது.

சுதாவுக்கு இந்த அஜெண்டா ஏற்கெனவே தெரியும். ஆனால் பவாவை தனியாக சமாளிப்பது பெரும் சிரமம். இரவுக்குள் சரியாக கடவுளை வேண்டிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.

வீடே ஓய்ந்து கிடந்தது போல இருந்தது ராஜுவுக்கு. பெட் ரூம் கதவு சாத்தியிருக்க மெதுவாய் திறந்தால் சுதா பவாவை மடியில் கிடத்தி தட்டிக் கொண்டிருந்தாள்.

“டீ” என சைகையால் கேட்க சரி என தலை அசைத்தாள்.

நேராக சமையலறைக்கு சென்றால் சுதாவின் பாடு தெரிந்தது. சிங்க் நிறைய சின்ன சின்ன கோப்பைகளும் ஸ்பூன்களும்  நிறைந்திருந்தது. சூப், பால், கஞ்சி என பவா எதையும் முழுதாய் குடிக்கவில்லை.

அடுப்பில் பாலை சிம்மில் வைத்து விட்டு எல்லா பாத்திரங்களையும் தேய்த்து முடித்தான். பத்து நிமிடத்தில் கிச்சன் சுத்தமாக, டீ கப்பை கொண்டு போய் சுதாவுக்கு கொடுத்தான்.

டீ குடித்து முடித்து சுதா ரெடியாக பவாவை தூக்கி கொண்டு ராஜுவும் கிளம்பினான்.

கிளினிக்கில் பெரிதாய் கூட்டமில்லை. டாக்டர்  இரண்டு நாளுக்கு மருந்து கொடுத்தார். இப்படியே இருந்தால் பிளட் டெஸ்டும்  செய்ய எழுதி கொடுத்தார்.

வீடு திரும்பும் போது வண்டியில் இருவரும் பேசும் நிலையில் இல்லை. வெளியே மழை காற்று பலமாக வீசிக்கொண்டிருந்தது. 

பார்மசி எதிரே ஓரம் கட்டிவிட்டு இறங்கும்போது “டின்னர்க்கு என்ன வாங்கட்டும்?” என ராஜு கேட்டான். “இது பார்மசி தானே?” என்றாள் சுதா.

“ஆமாம், ஆனால் பில் போட எப்படியும் பத்து நிமிஷம் ஆகும். என்ன வேணும்னு சொல்லு வெயிட் பண்ணும் போது ஆன்லைன்ல ஆர்டர் பண்றேன்” என்றான்.

“நீயே பண்ணு ராஜு. எனக்கு லைட்டா போதும்” என்றாள் சுதா.

மருந்து வாங்கி வீடு திரும்பியதும் பவாவின் ரியாக்க்ஷனை ராஜு கவனித்தான்.

“சுதா வேல பண்ணி இருக்கானு நெனைக்குறான். டயபர் செக் பண்ணி பாரு” என்றான்.

பச்சை பச்சையாக நுரைத்து போயிருந்தாள்.

“இன்னைக்கு இது சிக்ஸ்த் டைம் ராஜு” என்றாள்.

பவாவுக்கு கால் நடுங்கியது.தோள் பிடித்து நிற்கையில் அப்படியே சரிந்தாள்.

ராஜு ஒரு பக்கம் பிடிக்க, சுதா சுத்தம் செய்து டயப்பரும் ட்ரெஸ்ஸும் மாற்றி கிடத்தும் போது பவாவுக்கு கண்கள் சொறுகியது.

“சுதா நீ உக்காரு. இவ சீக்கிரம் தூங்கிடுவா போல. கொஞ்சம் ஏதாவது சாப்பிட வச்சிட்டா சிரப் கொடுக்கலாம்.

நா போய் இட்லி சூடு பண்ணி எடுத்துட்டு வரேன்” என்றான் ராஜு.

முக்கால் மணி நேரம் போராடி ஊட்டி முடித்து, மருந்து கொடுத்து, முதுகில் போட்டு தட்டி தூங்க வைத்து, பெட்டில் கிடத்தி நிமிரும் போது சுதாவுக்கு தெரிந்து விட்டது, நிம்மதியாக மூச்சு விட மூன்று நாளாவது ஆகும் என.

மங்கலான ரீடிங் ரூம் வெளிச்சம் சொல்லியது ராஜு பிஸி என்று.

துடைக்கப்பட்ட கிச்சன் டேபிளும், கழுவிய பாத்திரங்களும், இத்யாதிகளும், அன்றைய பகலுக்கும் அடுத்து வரும் பகல்களுக்குமான கருணை வெளிச்சத்தை வாரி இறைத்து கொண்டிருந்தன சுதாவின் மீது. 

ஜன்னல் வழியே தூரத்து சிமெண்ட் பேக்டரி விளக்குகள் வண்ணப்புள்ளி அணிவகுப்பாய் மின்னிக்கொண்டிருந்தது.

அடர்ந்த, அமைதியான அந்த இரவு, பேக்டரி புகை போக்கி தொடர்ந்து கக்கும் கரும் புகையை ஆரத்தழுவி தன்னுள் ஐக்கியமாக்கியது. கூடவே மனிதர்களின் முழுப்பகல் ஓட்டங்களையும், போராட்டங்களையும் தற்காலிகமாக கவ்விப் பிடித்து கொக்கரித்துக் கொண்டிருந்தது.

சில்லிடும் நொடிகளை கட்டவிழ்க்க காத்திருக்கும் அடுத்து வரப்போகும் மணித்துளிகள், அந்த இரவை வெறித்து பார்த்துக்கு கொண்டிருந்தன.

Leave a comment