சிறப்பு குறுநாவல் – தாதிபத்ரியின் தங்கபுத்திரி – Part 2/11

 mother cooking for unwell child

ராஜு மற்றும் சுதா இருவரின் பெற்றோர் சென்னையில் வசிக்கிறார்கள். இவர்கள் சென்னையிலிருந்து நானூறு கிலோமீட்டர் தொலைவில் தாதிபத்ரி என்கிற டவுனில் இருக்கிறார்கள். 

ஆந்திராவில் உள்ள அனந்தபூர் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது தாதிபத்ரி. ராஜூவும் சுதாவும் காலேஜில் ஒரே பிரிவில் படிக்கும்போது சந்தித்தார்கள். இருவரும் மெக்கானிக்கல் இன்ஜினியர்கள். ராஜு வேலைக்கு சேர்ந்ததும் திருமணம் நடக்க, இருவரும் ஒரு வருடம் குஜராத்தில் பணி செய்தார்கள். பவா பிறந்த பிறகு சுதா வேலையை விட்டு விட்டாள். பிறகு தாதிபத்ரி சிமெண்டு பேக்டரியில் ராஜுவுக்கு வேலை கிடைக்க இங்கே வந்து செட்டிலாகி விட்டார்கள்.

நேரம் ஆக ஆக பவாவின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை.

இன்றும் வீட்டில் வைத்து மருந்து கொடுப்பது வீண் என்று விடியற்காலை சுதாவுக்கு தோன்றியது.

எட்டு மணிக்குள் ஜுரம் குறையாவிட்டால் டவுன்ஷிப் ஹாஸ்பிடலுக்கு போவதுதான் சரி.

ராஜு இன்னும் கொஞ்ச நேரத்தில் கிளம்பி விடுவான்.

அவன் இருக்கும் போதே கொஞ்சம் பவாவுக்கு மட்டும் சமைத்து வைத்துக்கொள்ளலாம் என்று யோசித்தாள்.

இரவு முழுக்க விட்டு விட்டு தூங்கியது மண்டை வலி பிளந்தது.

காபி குடித்தால் தேவலாம் போலிருந்தது. காபி கலக்கும்போதே மனம் தானாக ஹாஸ்பிடலுக்கு என்ன பேக் செய்யலாம் என்று லிஸ்ட் போட்டது.

ஜன்னல் வழியே பேக்டரி விளக்குகள் இன்னும் மின்னிக்கொண்டே இருந்தன. சவுத் கேட் புகை போக்கி வெண்புகையை மெலிதாய் வானத்தில் நிரப்பிக்கொண்டிருந்தது.

இன்றைய பவாவின் மெனு சுதாவுக்கு ஒன்றும் புரிபடவில்லை. பேசாமல் எல்லாவற்றையும் செய்து பேக் பண்ணிவிடலாம் என்று நினைத்தாள்.

விடு விடுவென்று நாலு அடுப்பில் சமைக்க ஆரம்பித்தாள். கொஞ்சம் சாதம், பருப்பு, வேக வைத்த கேரட், இட்லி, கஞ்சி, சூப் என எல்லா ஐட்டம்களையும் டப்பாக்களில் போட்டு ஹாஸ்பிடலுக்கு எடுத்து வைத்து விட்டு மீதியை பிரிட்ஜ்ல் ஸ்டோர்  செய்தாள்.

பவாவுக்கு உடம்பு துடைக்க வேண்டும். முதலில் கொஞ்சம் பால் கலக்கி வைத்துவிடலாம். துடைக்கும் போது எழுந்து சிணுங்குவாள். பால் குடித்தால் சற்று அமைதியவாள் என தோன்றியது.

ராஜு இன்னும் பாத்ரூமில் இருந்து வரவில்லை. பவாவுக்கு பால் கலக்கும் போதே, ராஜூவுக்கும் ஒரு டம்ளர் டீ வைத்தாள்.

சுதா கிச்சன் வேலைகளை முடித்தத பிறகு பவாவை துடைத்து டிரஸ் மாற்றி படுக்க வைத்துவிட்டு டயப்பரை எடுக்கும் போதுதான் கவனித்தாள் அது ரொம்ப இலேசாக இருந்ததை.

இரவு முழுக்க சரியாக யூரின் போகவில்லை பவா. இன்று எப்படியும் கொஞ்சம் லிக்விட் தொடர்ந்து கொடுக்க வேண்டும்.

அப்போது சரியாக ராஜு வெளியே வர டயப்பரை கவனித்தான்.

“என்ன லைட்டா இருக்கு போல. நேத்து சரியா தண்ணி குடுத்தியா சுதா?” என்றான். சுதாவுக்கு பொழுது பளிச்சென்று விடிந்தது.

“வரதாக்கு கால் பண்ணி சொல்லிடு சுதா, அவங்க துணைக்கு இருப்பாங்க” என்றபடியே கிளம்பினான்.

வரதா மணி சாரின் மனைவி. டவுன்ஷிப் ஆஸ்பிடலில் நர்ஸாக இருக்கிறார்.

ஹெல்த் கார்டு, ஏடிம் கார்டு, டிரைவர் நம்பர் என எல்லா சடங்கையும் செவ்வனே செய்து ஆபீசுக்கு கிளம்பினான் ராஜு.

கதவை பூட்டி விட்டு சோபாவில் உட்கார்ந்த போது சுதாவுக்கு தோள் பட்டையோடு சேர்ந்து மனமும் சோர்ந்து போனது.  

நாள்பட்ட குறைவான வார்த்தைகளால் கட்டமைக்கப்படும் வாழ்க்கை உளுத்துப்போக வைப்பது, உணர்வை மட்டுமல்ல உறவையும் என்று பலருக்கும் தெரிவதில்லை!

வார்த்தைகள் வறண்ட வாழ்க்கை, ஆணின் பொருளீட்டல் முன்னுரிமைக்காக, பெண்ணின் சூழலுக்கேற்ற தகவமைத்துக்கொள்ளும் முன்னெடுப்புகளாக முலாம் பூசப்பட்டு ஊருக்குள் உலா வருகிறது.

ட்ரைவர் வந்து பைகளை எடுத்து செல்ல, பவாவை தூக்கிக் கொண்டு டவுன்ஷிப் ஆஸ்பிடலுக்கு கிளம்பினாள் சுதா.

அம்மாவின் போன் வந்தது.

“எப்படி மா இருக்கா பவா”? என கவலையாக கேட்டாள்.

“மா, ரொம்ப டல்லா இருக்கா. அட்மிட் பண்ண சொல்லுவாங்கனு நெனைக்கிறேன். ஒரு பதினோரு மணிக்கு நானே கால் பண்றேன்” என சொல்லி போனை வைத்தாள் சுதா.

Leave a comment