
ஆஸ்பிடல் போய் சேர்ந்து, டாக்டரிடம் எல்லாவற்றையும் சொல்லி முடித்து என்ன சொல்லுவார் என உட்கார்ந்திருந்தாள்.
மருந்து கொடுத்து வீட்டுக்கு அனுப்பி விட்டால் பரவாயில்லை என இருந்தது. அட்மிஷன் போட்டால் சமாளிப்பது கஷ்டம். பவாவை தோளில் போட்டு தட்டியபடியே கடவுளை வேண்டி கொண்டாள்.
சற்று நேரத்தில் இன்னொரு டாக்டரும் வர, அட்மிஷன் போடுவது என முடிவு செய்தார்கள்.
அடுத்த கால் மணிநேரத்தில் இரண்டாவது மாடியில் ரூம் ஒதுக்கப்பட்டது.
ரூமில் பைகளை பைகளை வைத்து விட்டு ட்ரைவர் கிளம்பி செல்ல, பவாவை படுக்கையில் கிடத்தி விட்டு, பாத்ரூம் போய் விட்டு வந்தாள்.
ஜன்னலருகே போய் நின்றால் வெளியே பெண்ணா நதி அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது.
“லைன் போடணும், கொஞ்சம் வெளியே இருங்க” என்றார் சிஸ்டர்.
“சிஸ்டர், இவ நைட் பூரா தூங்கலை. இப்போ தான் அசந்து தூங்குறா. கொஞ்ச நேரம் தூங்கட்டும். அப்புறம் போடலாமா?” என கேட்டாள் சுதா.
“இல்லீங்க, இப்போவே போடணும். நீங்க வெளிய இருங்க. பாய்ஸ், நீங்க ரெண்டு கால புடிச்சிக்குங்க” என வேலையை ஆரம்பித்தார்.
சுதா வெளியே வந்ததும் அவர்கள் கதவை சாத்தினார்கள்.
அடுத்த நிமிடம் “வீர்ர்” என பவாவின் அழுகை குரல் கேட்டது. ஐந்து நிமிடம் கடந்ததும் அழுகை நின்றபாடில்லை.
சிஸ்டர் வெளியே வர சுதா உள்ளே ஓடினாள்.
இன்னும் லைன் போடவில்லை. “மேடம், நரம்பு கிடைக்கலை, சிஸ்டர் போய் லேப் டெக்னீஷியன அனுப்புவாங்க” என்றார் வார்டு பாய்.
சுதாவுக்கு கோபம் தலைக்கேறியது. பவா கெட்டியாக கட்டிக் கொண்டது அவளை.
சற்று நேரத்தில் ஹெட் நர்ஸ் வரதா வந்தார். “பவாவ குடு சுதா” என வாங்கி கொண்டார்.
“நீ ரூம்லயே இரு சுதா. நா இவளை லேபுக்கு தூக்கிட்டு போறேன். அங்க கொஞ்சம் டாய்ஸ் இருக்கும். நா பாத்துக்குறேன்” என சொல்லிவிட்டு கிளம்பினார்.
எல்லாரும் கிளம்ப, வரதா தோளில் துவண்டு போய் சாய்ந்திருந்தது பவா.
இன்னும் லேபில் போய் எப்படி அழப்போகிறாளோ என கவலையோடு இருந்தாள் சுதா.
ஹவுஸ்கீப்பிங் கனகம்மா சாப்பாடு கொண்டு வந்து வைத்து விட்டு விசாரித்தார்.
“என் பையன் ஜெகன் பேக்டரில பம்பு மெக்கானிக்கா இருக்கான். சாரு பொண்ணுக்கு முடியல, போய் பாத்துக்கணு வரதம்மா சிஸ்டர் சொன்னாங்க. நா இந்த மாடிலதான் இருப்பேன். எப்போ வேணா கூப்புடுமா” என சொன்னார்.
அவர் பேசியதில் பாதி கூட காதில் விழவில்லை சுதாவுக்கு.
கனகம்மாவுக்கு தேங்க்ஸ் சொல்லி அனுப்பி சேரில் போய் சாய்ந்து உட்கார்ந்து கண் மூடினாள்.
இருபது நிமிடம் ஆனது. காரிடாரில் பவாவின் சத்தம் கேட்டது. சுதா வெளியே வர, வரதா கையிலிருந்த பவா சுதாவிடம் தாவியது.
மண்டையில் பெரிய கட்டோடு வந்திருந்தது. சுதாவுக்கு பேச்சே வரவில்லை.
“இது என்ன?” என கேட்டாள்.
“கைல லைன் கெடைக்கல, அதான் இங்க போட வேண்டியதா போச்சு” என்றார் வரதா.