
பவாவை இருக்க பற்றிக் கொண்டாள் சுதா. எல்லாரும் கிளம்ப, பெட்டில் படுக்க வைத்து விட்டு பக்கத்தில் உட்கார்ந்தாள். பவா ஏறி மடியில் படுத்துக் கொண்டது.
ஒரு மணி நேரம் கழித்து கனகம்மா வந்தார். சாப்பாடு ட்ரே அப்படியே இருந்தது.
“ஏம்மா இன்னும் சாப்பிடலியா, நீ கொழந்தயை என்கிட்ட குடுத்திட்டு சாப்பிடு” என்றார்.
“இல்லீங்க, சாப்பாடு வேணாம். எடுத்திட்டு போயிடுங்க” என்றாள் சுதா.
“ஆஸ்பத்திரின்னு வந்துட்டா மனசு சரி இருக்காதும்மா. அதுக்காக சாப்பிடாம இருக்கலாமா? சாரு வர ராத்திரியாகும்னு சிஸ்டர் சொன்னாங்க. பொழுதுக்கும் குழந்தய தூக்கி வச்சிருக்கீங்க, கொஞ்சமாவது சாப்பிட்டு தூங்குமா. நான் உக்காந்திருக்கேன்” என்றார்.
சுதா எழுந்து போய் முகம் கழுவிக்கொண்டு வந்தாள்.
“என் பெரிய பொண்ணுகூட நம்ம பாப்பா மாதிரிதான். நானும் இதே நெலமைல இருந்திருக்கேன். என் வீட்டுக்காரர் குவாரில கல் ஒடைக்க போயிட்டா, அங்கேயே ரெண்டு வாரம் இருப்பாரு. மாசத்துக்கு ஒரு நாள், இல்லேன்னா ரெண்டு நாள் வந்து போவாரு. தனியாத்தான் மூணு பசங்கள வளத்தேன். இப்ப என் பெரிய பொண்ணுக்கு கல்யாணமாகி அமலாபுரத்துல இருக்கா. இந்த வாரத்துல டெலிவரிக்கு டேட்டு குடுத்திருக்காங்க” என தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
“நீங்க டெலிவரிக்கு போகலியா?” என கேட்டாள் சுதா.
“இங்க அவங்க அப்பா முடியாம இருக்காரு. அதனால வர வேணாம்னு சொல்லிட்டா. டெலிவரி ஆனா ஒரு மாசம் கழிச்சு இங்கயே வந்துருவா” என்றார்.
டிரேவை எடுத்து மடியில் வைத்து சாப்பிட உட்கார, இன்டர்காம் அடித்தது.
“டாக்டர் வர சொல்றாரு, லேபு ரிசல்ட் வந்துருக்கு” என்றார்கள்.
சுதாவுக்கு கண்ணை இருட்டி கொண்டு வந்தது. என்னவாய் இருக்கும் என கிளம்பினாள்.
“ரெண்டு நிமிஷம் சாப்பிட்டு முடிச்சிட்டு போம்மா” என கனகம்மா சொல்லி கொண்டிருக்கும் போதே அவள் பாதி வழி போயிருந்தாள்.
“நீங்க மூணு நாலு நாள் இருக்க வேண்டி இருக்கும்” என்றார் டாக்டர். மனம் மரத்துப் போவதின் ஆரம்ப நிலையில் இருந்தாள் சுதா.
அடுத்த அரை நாளில் பவாவுக்கும் சுதாவுக்கும் ஆஸ்பிடல் பழகி விட்டது. ஊசி, மருந்து, அழுகை, வாந்தி, டயப்பர், ஜுரம் என லைன் கட்டி நடந்தது.
“டயபர் வெய்ட் நோட் பண்ணுங்க மேடம். நர்ஸ் ஸ்டேஷன் பக்கத்துல மெஷின் இருக்கு” என சொல்லி விட்டு போனார் வார்டு பாய்.
அன்றைய நாளில் நான்கு முறை டயபர் எடுத்துக் கொண்டு போய் வெய்ட் பார்த்து சொல்லி விட்டு வந்தாள்.
இரவு எட்டு மணி. இன்னும் ஜுரம் குறைந்த பாடில்லை. போனை எடுத்து பார்த்தாள். ஒரு மெசேஜ் கூட இல்லை.
பேசாமல் போய் ஜன்னலருகே நின்றாள். அங்கே இருக்கும் ஏதோ ஒரு பில்டிங்கில் இப்போது இரவு விருந்து நடந்து கொண்டிருக்கும். பேக்டரி சிம்னி தொடர்ந்து புகையை கக்கி கொண்டே இருந்தது.
இரவு பதினோரு மணிக்கு ராஜு வந்தான்.
“ஏதாவது சாப்பிட்டாளா? தண்ணி நல்லா குடுத்தியா நேத்து? இல்லேன்னா இந்தளவுக்கு ஆகாது” என சொன்னான்.
“தூக்கத்துல இருந்தினா பேசாம வீட்டுக்கு போய்டு” என காண்டாக சொன்னாள் சுதா.
“ஆமா, நாளைக்கும் காலைல சீக்கிரம் போகணும். நா ரெண்டு மணி வரைக்கும் இருக்கேன். நீ தூங்கு. அப்புறம் நா வீட்டுக்கு போறேன்” என்றபடி போய் சேரில் உட்கார்ந்தான்.

மருந்து வேலை செய்ய ஆரம்பித்து பவா தூங்க, சுதாவும் ரெஸ்ட் எடுக்கும் நேரத்தில் இங்கு இருந்து லேப்டாப்பில் சில வேலைகளை முடித்து கொண்டான்.
மூன்று மணி நேரம் கழித்து ராஜு சுதாவை எழுப்பி வீட்டுக்கு போவதாக சொல்லி கிளம்பினான்.
“இன்னைக்கு நைட் லேட்டாகும். பாதி நைட்ல வந்து உன்ன டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு நினைக்குறேன்” என மெதுவாய் இழுத்தான்.
சுதாவுக்கு கோபம் தலைக்கேறி பதிலேதும் சொல்ல விரும்பவில்லை. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இவன் இங்கிருந்து கிளம்பினால் நல்லது என மட்டும் தோன்றியது.
ஆபீஸ் முடித்து வீட்டுக்கு போய் கொஞ்ச நேரம் வேலை செய்து விட்டு தூங்குவதற்கு பதில், இங்கே வந்து வேலை செய்து விட்டு இப்போது வீட்டில் போய் தூங்க போகிறான்.
விடியும் வரை இருந்தால் காலையில் பவா இவனோடு விளையாடலாம். அந்த நேரத்தில் சுதா குளித்து சாப்பிட்டு ரெடியானால் பிறகு ஏழு மணி போல ராஜுவும் வீட்டுக்கு போய் ரெடியாகி ஆபீசுக்கு போகலாம்.
இன்னொரு ஆள் படுக்க படுக்கையும் இருக்கிறது. ஒர்க்ஷாப் சாக்கை எந்த இடத்தில் உபயோகிப்பது என விவஸ்தையில்லாமல் இருக்கிறான்.
முழு இரண்டு நாட்கள் பவா இவனை பார்க்கப்போவதில்லை என்பது தான் சுதாவுக்கு வருத்தமாக இருந்தது.
இங்கு இருப்பவர்கள் துணையுடன் சுதா நாட்களை கழித்தாலும் குழந்தை ஏங்குவது ராஜுவுக்கு ஒரு விஷயமாகவே படாதது அவளுக்கு உறுத்தலாக இருந்தது.
அந்த சிம்னியை போலவே சக மனுஷியின் வருத்தமும் வேதனையும் புரியாமல், ராஜு போன்றவர்கள் கசப்பையே உமிழ்கிறார்கள்.
தங்கள் கடமையை தட்டி கழித்து, அந்த பாரத்தை மற்றவர்கள் மீது ஏற்றி அடுத்தவர்களுக்கு எதிர் மறை உணர்வுகளை தூண்டுகிறார்கள்.
இறுக்கமான இந்த கண்ணாமூச்சி வாழ்க்கை பெண்களுக்கு மூச்சை முட்டுவது போல இருப்பது யாருக்கும் புரியாது.
துளியும் இணக்கமில்லாதவர்கள் ஒன்றாய் இருக்கும் போது, அந்த பெண்ணின் வானத்தில் மட்டும் தான் நிரந்தர கருமை இருக்கிறது.
ராஜு கிளம்பி சென்றதை ஒரு பொருட்டாக நினைத்து அந்த நாளை சோர்வாக ஆரம்பிக்க அவளுக்கு விருப்பமில்லை. மெலிதாக ஒரு பாடலை ஒலிக்கவிட்டு பவாவின் பக்கத்தில் போய் படுத்துக் கொண்டாள்.