சிறப்பு குறுநாவல் – தாதிபத்ரியின் தங்கபுத்திரி – Part 5/11

A candid moment

ஏழு மணிக்கு கனகம்மா லட்டு பாக்ஸோடு வந்தார். பேத்தி பிறந்ததாக சொல்லி சந்தோஷப்பட்டார்.

போன் வர பேசிவிட்டு கண்ணீரை துடைத்துக் கொண்டே பவாவை வாங்கி மடியில் வைத்துக் கொண்டார்.

“பேத்தி என் ஜாடையா இருக்குனு சொல்றா!” என சொல்லி புன்னகைத்தார்.

அப்போதுதான் அவர் பட்டன் போனை சுதா கவனித்தாள்.

“நா போன் போடவா? குழந்தையை பாக்குறீங்களா?” என ஆர்வமாய் கேட்டாள் சுதா.

இல்லம்மா, இருக்கட்டும். வரதம்மா சிஸ்டர் பத்து மணிக்கு வந்துடுவாங்க. அவங்களுக்கும் என் பொண்ணு மேல ரொம்ப பிரியம். அவங்க போட்டு தருவாங்க” என சொல்லி கொண்டிருக்கும்போதே “நம்பர் குடுங்க, அது வரை ஏன் காத்திருக்கணும்?” என டயல் செய்தாள் சுதா.

மாப்பிள்ளை குழந்தையை காட்ட ஆசையாய் கொஞ்சியவர், சுதாவிடம் வந்து காட்டினார்.

நிஜம் தான். கனகம்மா ஜாடை தெரிந்தது. “அம்மா” என பக்கத்திலிருந்து குரல் வர, “மாப்பிள்ளை, அவளை காட்டுங்க” என கேட்டார் கனகம்மா.

கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்தபடியே காதின் பின்னாலிருந்த மெஷினை அட்ஜஸ்ட் செய்து கனகம்மாவை பார்த்து அவர் மகள் சிரிக்க, சுதாவுக்கு காட்டிவிட்டு பத்து நிமிடம் பேசிவிட்டு போனை வைத்தார் கனகம்மா.

“ரொம்ப தேங்க்ஸ் மா” என்றார்.

அன்றைய தினம் கனகம்மாவை அவ்வளவாக பார்க்க முடியவில்லை. ஆஸ்பிடல் நண்பர்கள் அவரை சூழ்ந்து கொள்ள அவரை கையிலேயே பிடிக்க முடியவில்லை.

அன்றைய தினம் பவா பெரும்பாலான நேரம் தூங்கிக் கொண்டிருந்தது.

சாயந்திரம் வரதா வந்தார். “இன்னைக்கு நைட் ஷிப்ட் சுதா. பத்து மணிக்கு வரேன்” என்றார்.

சுதா போனை எடுத்து பார்க்க ஒரு நொடி ஆடிப் போனாள்.

Linkedinல் சிமெண்டு கம்பெனியின் கான்பரன்ஸ் போட்டோ வந்திருந்தது. அந்த குரூப் போட்டோவில் இருந்தது ஜெபராஜ். ராஜுவின் காலேஜ் சீனியர்.

பல மாதங்களாக இந்த கான்பரன்ஸ் பற்றி அவளிடம் சொல்லிக் கொண்டிருக்கிறான். இவர் வருவதை பற்றி ராஜு ஒரு வார்த்தை சொல்லவில்லை. பிறகு தான் உறைத்தது இவரோடு அவன் பல நாட்களாக தொடர்பில் இருந்ததையே சொல்லவில்லை என்று.

ஜெபராஜ் சுதாவுக்கும் நன்கு தெரிந்தவர். இந்த வாரம் தான் பவாவுக்கு உடம்பு சரியில்லை. அதனால் அவரை  சந்திக்க முடியாது. ஆனால் அவரை பற்றிய பேச்சையே ராஜு இவ்வளவு நாள் எடுக்காதது அவளுக்கு உறுத்தலாகஇருந்தது. தான் நினைக்கும் காரணம் உண்மையாக இருக்க கூடாது என வேண்டிக் கொண்டாள்.

Leave a comment