சிறப்பு குறுநாவல் – தாதிபத்ரியின் தங்கபுத்திரி – Part 6/11

A woman worried about her life

சாயந்திரம் கனகம்மா டீயும் பிஸ்கட்டும் கொண்டு வந்தார்.

“பாப்பாவ நா வச்சிக்குறேம்மா, பக்கத்துல பிள்ளையார் கோவில் இருக்கு. இன்னைக்கு விசேஷ பூஜை

பண்றாங்க. டீ குடிச்சிட்டு, நீ போய் சாமி கும்பிட்டுட்டு வாம்மா” என சொன்னார்.

சுதா உடை மாற்றிகொண்டு வரதாவிடம் போய் சொல்லி விட்டு கிளம்பினாள். கோவிலுக்கு போய் சாமி பார்த்து விட்டு மூன்று சுற்று சுற்றி விட்டு பிரகாரத்தில் போய் உட்கார்ந்தாள்.

பையிலிருந்து போனை எடுத்து பார்த்தால் ராஜுவின் மிஸ்ட் கால் இருந்தது. திரும்ப அழைத்தால் பதில் இல்லை.

சரி பிறகு போன் செய்வான் என கிளம்பி ரூமிற்க்கு சென்றாள்.

கனகம்மா பவாவை தூங்க வைத்திருந்தார். சுதா வந்ததும் அவர் கிளம்பி செல்ல, பவாவின் துணிகளை துவைக்க அவள் பாத்ரூமிற்குள் சென்றாள்.

பத்து நிமிடத்தில் துவைத்து முடித்து ரூம் பால்கனியில் காய போட போனாள்.

பின்னாலிருந்து “இங்க என்ன பண்ற குழந்தையை விட்டுட்டு, என்ன ஆகியிருக்கு பாரு?” என ராஜுவின் கத்தல் கேட்டது.

அதிர்ந்து அலறி சுதா உள்ளே போய் நின்றாள்.

ஆனால் அடுத்த நொடி அவள் கண்டகாட்சியில் நிலை தடுமாறி போனாள். குழந்தையின் காது பக்கம் லைன் போட்ட இடம் ஆப்பிள் சைசில் வீங்கி இருந்தது. முகமே பார்க்க படு பயங்கரமாக இருந்தது.

சுதாவிடம் பவாவை கொடுத்துவிட்டு வரதாவை கூப்பிட ஓடினான் ராஜு.

இவன் எப்போது வந்தான்? பவாவுக்கு திடீரென என்ன ஆயிற்று? என எதுவும் புரியாமல் திகைத்து நின்றாள் சுதா.

சற்று நேரத்தில் ஐஸ் பாக்கோடு வரதா வந்து தெளிவு படுத்தினார்.

லைனை நிறுத்தி விட்டு, ஒத்தடம் வைத்தார். “ஐவி போட்ட நீடில் விலகி இருக்கு, ரெண்டு மணி நேரத்தில் நார்மலாகி விடும்” என  சமாதானம் சொன்னார்.

“இவளை ஒழுங்கா பாக்குறத தவிர உனக்கு என்ன வேலை?” என எகிற ஆரம்பித்தான்.

“சார், இது சகஜம் தான் சார். கொஞ்ச நேரத்துல சரியாகிடும்” என்றார் வரதா.

சுதா ஏதோ சொல்ல வர, அதை கொஞ்சமும் கேட்காமல் அடுத்த ஐந்து நிமிடம் திட்டி தீர்த்தான்.

சத்தம் கேட்டு கனகம்மா ஓடி வந்தார். நிலைமையை புரிந்து கொண்டவர் “ஏம்பா, அந்த பொண்ணு இங்க வந்ததிலிருந்து ஒரு வேளை சோறு ஒழுங்கா சாப்பிடலை. கை மாத்த கூட ஆளில்லாம அல்லாடிகிட்டு இருக்கு, நீ என்ன சத்தம் போடுற? அதான் நர்ஸம்மா சொல்றாங்கள்ல இது சகஜம்னு. அப்படி அக்கறை இருக்க ஆள் இங்கயே இருந்து பாக்க வேண்டியதுதானே?” என பொரிந்து தள்ளினார்.

ராஜு அப்படியே அடங்கி போனான். சுதாவுக்கு அவமானமும் துக்கமும் போட்டி போட்டுக் கொண்டு ஏறியது.

டேபிள் மேல் இருந்த ஸ்வீட் பாக்ஸ் கண்ணில் பட்டது.

இது ஏன் இப்போது? என கேள்வி எழுந்தது. என்ன காரணமாய் இருந்தாலும் எதையும் கேட்க சுதாவுக்கு விருப்பமில்லை.

வீக்கம் சற்று குறைய வரதாவும் கனகம்மாவும் அங்கேயிருந்து கிளம்பினார்கள்.

“சாரி” என்றான் ராஜூ.

பவாவின் மீதிருந்து அவள் கண்ணை எடுக்கவில்லை.

ஸ்வீட் பாக்ஸை நீட்டியபடியே “எனக்கு சிட்னில வேலை கிடைச்சிருக்கு” என்றான்.

“எனக்கு சிட்னில வேலை கிடைச்சிருக்கு, நாம அங்க போய் செட்டிலாக போறோம்னு சொல்ல உன்ன எது தடுக்குது?” என சுருக்கென கேட்டாள் சுதா.

பவாவின் மண்டை வீக்கத்திற்கு ஆடித் தீர்த்தவனின் மண்டை கணம் அந்த நேரம் அம்பலப்பட்டது.

விஷயத்தை சொல்லிய பிறகு, அதை லாவகமாக மடை மாற்ற, ராஜு சேர்த்து வைத்திருந்த மொத்த அலங்கார வார்த்தைகளுக்கும், சுதாவின் முதல் கேள்வியே மலர் வளையம் வைத்து விட்டது.

“நா மாசத்துல இருபது நாள் ட்ராவல் பண்ணுவேன் சுதா, நீங்க ரெண்டு பெரும் தெரியாத ஊர்ல எப்படி தனியா இருப்பீங்க? நீங்க தாம்பரத்துல இருங்க, நா வந்து வந்து பாத்துட்டு போறேன்” என பல நாட்கள் மனப்பாடம் செய்ததை ஒப்பித்தான்.

“சிட்னி என்ன தாம்பரத்துக்கு பக்கத்துல இருக்க கூடுவாஞ்சேரியா? நீ வந்து வந்து பாத்துட்டு போக? இத தான் ப்ளாண்ட்ல உட்காந்து ப்ளான்ட் பண்ணிட்டிருந்தியா?” என கேட்டாள் சுதா.

ராஜு போய் ஜன்னலருகே நின்று கொண்டான். அவனை ஜன்னலருகே பார்த்த நதி முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு நகர்ந்து சென்றது.

“ஏன் ஜெபா வந்ததை சொல்லலை?” என கேட்டாள் சுதா.

“அது வந்து, அது உனக்கு எப்படி தெரியும்?” என அதிர்ந்து போய் கேட்டான்.

“அவரு இந்த டீம்ல இருக்குறதையே ஏன் என்கிட்ட சொல்லலை?” என அழுத்தமாக கேட்டாள்.

“சுதா, அத விடு, நா ரொம்ப நாளா ட்ரை பண்ண ஜாப் எனக்கு கிடைச்சிருக்கு” என ஆரம்பித்தான்.

“இது ஜெபா ரெபரென்ஸ்ல உனக்கு கிடைச்சிருக்கு, கரெக்டா?. நீ இந்தியாலேர்ந்து கிளம்ப முடிவு பண்ணிட்டேன்னு எனக்கு தெரியும். ஆனா ஜெபா இங்க வர போறதை சொல்லாததும், கைல ஆபர் லெட்டர் வர வரை நீ அத பத்தி பேசாததும், நீ வாழுற டிராமா லைஃப்ல ஒரு ஓட்டைனு உனக்கு தெரியலையா ராஜு? என கேட்டாள் சுதா.

ராஜுவிடம் மௌனம் மட்டுமே பதிலாக இருந்து.

சுதா பவாவின் விரல்களை பிடிக்க, எங்கிருந்து வந்தது என தெரியாமால் அழுகை பொத்துக் கொண்டு வந்தது.

இரவு சாப்பாட்டை கொண்டு வந்த கனகம்மா, சூழ்நிலை சரியில்லை என புரிந்து கொண்டு உடனே கிளம்பி விட்டார்.

சற்று நிறத்தில் பவா தூங்கி விட, அவளை படுக்கையில் கிடத்தி விட்டு, செருப்பை மாட்டி கொண்டு ரூமை விட்டு கிளம்பினாள் சுதா.

“எங்க போற சுதா?” என்றான் ராஜு மெதுவாக.

“நா கேட்ட கேள்விக்கெல்லாம் பதிலை யோசிச்சு வை. வந்து சொல்றேன் எங்க போனேன்னு!” என்றபடி கிளம்பினாள் சுதா.

Leave a comment