
காரிடார் ஓரத்தில் நின்று கனகம்மா வரதாவிடம் பேசிக் கொண்டிருந்தார்.
சுதா படிக்கட்டில் இறங்கி வெளியே வந்து, ஆஸ்பிடலை ஒட்டிய நடை பாதையில் நடக்க ஆரம்பித்தாள். அது பெண்ணா நதியின் கரையோரம் இரண்டு மைல் தூரம் போகும்.
ஏன் ஜெபா வருவதை ராஜு சொல்லவில்லை? என்ற கேள்வி அவள் மண்டையை குடைந்தது.
ஆண்ட்ரியாவுக்கு போன் போட்டு விஷயத்தை சுருக்கமாக சொன்னாள்.
“நீ நெனைக்குறத தான் நானும் நினைக்குறேன்! விசாரிச்சுட்டு வரேன்” என சொல்லி போனை வைத்தாள்.
ஆண்ட்ரியா சுதாவின் காலேஜ்மேட். ரெண்டு பேரும் ஹாஸ்டலில் ஒரே ரூமில் தங்கி படித்தவர்கள். அவளுக்கு ப்ரெண்ட்ஸ் நெட்ஒர்க் அதிகம். அதே பீல்டில் நல்ல வேலையில் இருப்பதால், எல்லா இடங்களிலும் ஆள் வைத்திருப்பாள். கால் மணி நேரம் கழித்து மீண்டும் போன் செய்தாள்.
“ராஜு பங்கமா பொய் சொல்லியிருக்கான் சுதா. நா ஜெபா வீட்டு லேண்ட் லைனுக்கு கூப்பிட்டேன். ரெபேக்கா கிட்ட ஜெபா மொபைல் ஏன் ரீச் ஆகலேன்னு கேட்டேன். அதுக்கு அவ ஜெபா இந்தியா போயிருக்கார், தாதிபத்ரி பேக்டரிக்குனு சொன்னா” என்றாள்.
“அப்புறம்” என்றாள் சுதா.
“நா கேஷுவலா சொல்லிட்டேன். அங்க தான் எங்க ராஜு பாய் பேமிலியோட இருக்கான்னு. அவகிட்ட ஜெபா பேசி இருப்பார் போல. நா சொன்னதும், ஆமாம் ஆண்ட்ரியா, அவர் ராஜூவை ஆபீஸ்ல மீட் பண்ணிட்டார். அவர் பேமிலி ஊருக்கு போய் இருக்காங்க, அதனால பாக்க முடியலேன்னு சொன்னார்” என்றாள்.
எல்லாவற்றையும் உள்வாங்க சுதாவுக்கு ரெண்டு நிமிஷம் ஆனது.
“ஹே கேர்ள், இப்போதான் நீ ஸ்ட்ராங்கா இருக்கணும், இவ்ளோ கேனத்தனமா நடந்துக்குறான்” என பொரிந்து தள்ளினாள்.
“சரி ஆண்ட்ரியா, நா இப்போதைக்கு இதை பெருசா யோசிக்க வேணாம்னு நினைக்குறேன். பவா சரியாகி வீட்டுக்கு போற வரை என்னால அஞ்சு நிமிஷம் கூட ஒரு விஷயத்தை முழுசா யோசிக்க முடியல. வீட்டுக்கு போய் செட்டில் ஆன பிறகு திரும்ப பேசுறேன்” என போனை வைத்தாள்.
உன் வீடு என நினைப்பதும், சொல்வதும் இதுவே கடைசி முறையாக இருக்கட்டும் என புத்தி சொல்லியது.
சட்டென்று வந்த புத்தியின் குரல் சுதாவை புரட்டி போட்டது.
நடை பாதை ஒரம் ஒரு மரக்கட்டை இருக்க அதன் மேல் போய் உட்கார்ந்தாள்.
ராஜு எப்போதோ என்னை இந்த மரக்கட்டை போல நடத்த ஆரம்பித்திருக்கிறான். இவ்வளவு தூரம் முடிவெடுக்கும் போதும் சாதாரணமாக நடந்து கொள்ள எப்படி அவனால் முடிந்தது?
குடும்பம் ஒரு ஆலமரம் என பெரியவர்கள் சொன்னதும், ராஜு சர்வ சாதாரணமாக அதை வெட்டி வீழ்த்தி இயல்பாக இருப்பதும் சுதாவுக்கு ஆயாசமாக இருந்தது.
அன்று பெண்ணா நதிக்கரையில் அவள் கழித்த அந்த ஒரு மணி நேரம் அவளுக்கு வாழ்நாள் பாடங்களை புரிய வைத்தது.
பக்கத்தில் இருந்த சிறு சிறு கற்களைஅவள் நதி நீரில் போட்டு முடிக்க, அந்த இடம் காலியானது. கைக்கெட்டிய தூரம் வரை எந்த கல்லும் இல்லை.
ஆறு ஏன் எப்போதும் கற்களை மட்டுமே வாங்கி கொள்ள வேண்டும்? ஒரு மாறுதலுக்காக, பர்ஸிலிருந்த ராஜுவின் ATM கார்டு, ஹெல்த் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு அட்டைகளை போட்டு விட்டு ஆஸ்பிடலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
சுதா ரூமுக்கு வந்ததும் “எங்க போயிட்டு வர?” என இழுத்தான் ராஜு.
“ஊர்ல இருந்து இப்பதான் வரேன்! என்று சுதா சொல்ல, தலை குனிந்தவாரே வீட்டுக்கு கிளம்பினான் ராஜு.