
நான்காம் நாள் காலை. இன்று பவா தெளிவாக இருந்தது. கனகம்மாவும் வரதாவும் வந்தவுடன் அவர்களிடம் தாவி ஓடியது. சுதா மதியம் பில் செட்டில் செய்து விட்டு, எல்லா பொருட்களையும் பேக் செய்ய ஆரம்பித்தாள்.
வீட்டிலிருந்து வந்த முதல் நாள் இந்த ஆஸ்பிடல் அவளுக்கு அந்நியமாய் இருந்தது. இன்று வீடு அந்நியமாய் இருக்கிறது. அன்பு, ஆதரவு, புரிதல், நட்பு என எல்லாம் எங்கே கிடைகிறதோ அங்கே மனம் நிம்மதியாய் இருப்பதை புரிந்து கொண்டாள்.
கனகம்மா சாப்பாடு கொண்டு வந்தார். “நீங்க சாப்டீங்களா?” என கேட்டாள் சுதா.
அவர் ஆம் என சொல்ல, “இன்னைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க. ரொம்ப தேங்க்ஸ், நீங்க இல்லேன்னா நா ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பேன்” என சொல்லி கொஞ்சம் காசு கொடுத்தாள்.
“இருக்கட்டும்மா, என் புள்ளைக்கு செய்ததா தான் நா நெனக்கிறேன். சாரு கொஞ்சம் டென்ஷன்காரரா இருக்காரு. இந்த புள்ளைய நீங்க நல்லா பாத்துக்குவீங்க. ஆனா உங்களையும் நீங்க கொஞ்சம் பாத்துக்குங்க.
வீட்ல ஏதாவது வேலையிருந்தா சொல்லுங்க, ஷிப்ட் முடிச்சிட்டு வந்து செய்யுறேன்” என சொல்லி விடை பெற்று சென்றார்.
சாப்பிட்டு முடிக்கும் போது டிஸ்சார்ஜ் சம்மரி ரெடி என போன் வந்தது. எல்லா பேப்பர்களையும் சரிபார்த்து, வரதாவுக்கு சொல்லிவிட்டு, பவாவை தூக்கிக் கொண்டு ஆட்டோவில் வீடு திரும்பினாள்.
வீட்டுக்கு வந்ததும் பவா அவள் பொம்மைகளை தேடி ஓடினாள். எல்லாவற்றையும் எடுத்து தரையில் போட்டு விளையாட ஆரம்பித்தது.
இன்று இரவு உணவுக்கு அவளுக்கு பிடித்த இடியாப்பம் செய்யலாம், கூடவே குருமாவும் கொஞ்சம் செய்தால் எல்லாருக்கும் சரியாக இருக்கும் என வேலையை ஆரம்பித்தாள். வாஷிங் மெஷின் போட்டு, மறு பக்கம் இட்லி மாவு அரைத்து, எல்லா வேலைகளையும் முடிக்க ஏழு மணி ஆனது.
டோர் பெல் அடித்தது. சுதா போய் கதவை திறந்தவுடன் “நான் தான் சாயந்திரம் வர்றேன்னு சொன்னேனே? அதுக்குள்ள எதுக்கு டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்கு வந்த சுதா?” என கோவமாக கேட்டான் ராஜு.
சுதா பதில் சொல்வதற்குள் ராஜுவுக்கு ஜெபாவின் போன் வந்தது.
ஜெபா எதற்கு அழைத்திருப்பார் என சுதாவுக்கு தெரியும்.
ஆஸ்பிடலில் ராஜு பவாவை தூக்கி தோளில் சாய்த்து தூங்க வைத்த போட்டோவை எடுத்து தன் இன்ஸ்டா அக்கவுண்டில் “அன்பு அப்பா” என கேப்ஷனை போட்டு ஆண்ட்ரியாவை டேக் செய்தது தான் சுதா செய்த வேலை.
மிச்சத்தை ஆண்ட்ரியா பார்த்துக் கொண்டாள்.
ஜெபாவுக்கு அடுத்த இரண்டு மணி நேரத்தில் விஷயம் தெரிய போன் போட்டு நேரடியாக பேசி விட்டார்.
ராஜு குமாரு சோபாவில் தலையை கவுந்த மொமெண்ட்டின் காரணம் இது தான்.
அவனை ஜெபா குருமா வைக்க, அந்த அவமானத்தில் வெந்து கொண்டிருக்கிறான்.
மணி சார் சொல்லி இருக்கலாம் ஜெபாவிடம் என நினைத்துக் கொண்டான் ராஜு.
தான் அநாவசியமாக சொன்ன ஒரு பொய்யாலும், தன்னுடைய முட்டாள்தனத்தாலும் சிட்னி கனவு இடியாப்ப சிக்கலாக மாறியிருப்பதை அவனால் ஏற்று கொள்ள முடியவில்லை.
பவாவுக்கு சாப்பாடு கொடுத்து விட்டு தூங்க வைத்துவிட்டு சுதா ஹாலுக்கு வந்தாள்.
ஜன்னலை முழுதாக திறந்து வைத்து விட்டு டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தாள். வழக்கத்தை விட அன்று அவள் செய்த இடியாப்பம் குருமா அருமையாக இருந்தது.
மெதுவாக ரசித்து சாப்பிட்டவள் தட்டை கழுவி வைத்து விட்டு பார்மஸிக்கு போன் போட்டாள்.
“சைஸ் 312 பேட்டரி வேணும்?ஸ்டாக் இருக்குங்களா?” என கேட்டாள்.
“மேடம், நா புதுசா வேலைக்கு வந்திருக்கேன். சார் கடைல இல்ல, சாப்பிட போயிருக்கார். நீங்க என்ன ப்ராண்டுனு போட்டோ அனுப்புனீங்கனா, நா இருக்கானு பாக்குறேன்” என்றான் கடை பையன்.
“அது நார்மல் பேட்டரி கிடையாதுப்பா, கொழந்தைங்களோட இயரிங் எயிடுக்கு போடுற பேட்டரி. நா ரெகுலரா உங்க கடைல தான் வாங்குவேன். பேட்டரி போட்டோவும் அட்ரசும் அனுப்புறேன். ஸ்டாக் இருந்தா நாளைக்கு காலைல அனுப்புங்க” என சொல்லி போனை வைத்தாள்.
ராஜு இன்னும் சோபாவில் இருந்து அசையவில்லை. அவன் செய்த குற்றத்திற்கான தண்டனையை குறைவில்லாமல் அனுபத்து கொண்டிருக்கிறான்.
கடை பையனுக்கு பேட்டரி போட்டோ அனுப்ப, வெறும் 312 என டைப் செய்து கூகிளில் தேடினாள். முதல் பக்கத்திலேயே சுருக்கென ஒரு விஷயம் கிடைத்தது சுதாவுக்கு.
Indian Penal Code 312 – Causing miscarriage.
முதல் வேலையாக பேட்டரி போட்டோவை அனுப்பிவிட்டு, மீண்டும் IPC 312ஐ படித்து பார்த்தாள்.
சட்டவிரோத கருக்கலைப்பு தடுப்பு சட்டம் அது.
அவள் மனம் ஒரு நிமிடம் நிதானிக்க சொன்னது.
மீண்டும் மீண்டும் படித்து பார்த்தாள்.
இந்த பூமிக்கு வராத ஒரு ஜீவனின் வாழும் உரிமையை நிலை நாட்டும் சட்டம் அது.
மருத்துவ ரீதியாக அந்த கருவுக்கோ அல்லது தாயின் உயிருக்கோ, ஏதோ ஒரு ஆபத்தான சூழ்நிலை என்றால் மட்டுமே சட்டம் கருகலைப்பை அனுமதிக்கும்.
சுதாவுக்கு இந்த விஷயத்தை உள் வாங்க சற்று நேரம் எடுத்தது.
அரை மணி நேரம் டைனிங் டேபிளில் உட்கார்ந்து யோசித்ததில் அவளுக்கு சில புரிதல்கள் ஏற்பட்டது.
பவா செவி திறன் குறைபாட்டோடு பிறந்தது அவள் குற்றமில்லை. பெற்றோர்களாக தங்கள் குற்றமும் இல்லை.
இயற்கையாகவே அந்த குழந்தைக்கு அது நிகழ்ந்திருக்கிறது.
அவளை நல்லபடியாக வளர்த்து ஆளாக்கி, சிறப்பான முறையில் ஒரு வாழ்க்கையை அமைத்து தரும் பெரும் பொறுப்பு தங்கள் இருவருக்குமே சரிசமமாக இருக்கிறது. ஆனால் ராஜுவுக்கு நிஜத்தை எதிர் கொள்ளும் தைரியமும், மன உறுதியும் இல்லாததே இவ்வளவு குழப்பங்களுக்கும் காரணம் என அவளுக்கு தோன்றியது.
பொறுமை, திடமான மனம், உணர்வு முதிர்ச்சி என எதுவுமே இல்லாமல் ராஜு இருப்பது தான் இங்கு பிரச்சினை.
பவா மீது அவனுக்கு பாசம் இருந்தாலும், ஒரு இயல்பான வாழ்க்கை தனக்கு அமையாமல் போனது அவனுக்கு மிகுந்த மன உளைச்சலை தந்திருக்கிறது.
சுதாவின் மன போராட்டத்திற்கு அவ்வப்போது ஆறுதல் செல்பவன், அவன் மனதை பக்குவபடுத்தாமல் விலகி ஓடும் முடிவை எடுத்திருக்கிறான்.
எல்லா பொறுப்பையும் சுதாவிடம் விட்டு விட்டு, வெளிநாட்டில் வேலைக்கு போய் சேர்ந்து விட்டால், தன் தினசரி வேதனையிலிருந்து மீளலாம் என அவன் மனம் ஆழமாக நம்புவது சுதாவுக்கு நியாயமாக படவில்லை.
இந்த பூமிக்கு வராத ஒரு ஜீவனுக்கு நல்ல சட்ட பாதுகாப்பு இருக்கிறது.
ஆனால் பவாவுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது என்ற கேள்வி அவளுக்குள் எழுந்தது.
அதனால் இருவரும் ஒற்றுமையாக இருந்து, பவாவுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்து தருவதே, ஒரு பெற்றோராக தங்களின் முதல் கடமையாக இருக்க வேண்டும் என கருதினாள்.
இந்த இடத்தில் சுதா சற்று தீர்க்கமாக சில முடிவுகளை எடுத்தாள்.
இங்கு குறைபாட்டோடு இருப்பது பவா இல்லை, ராஜு தான். இவ்வளுவு வயதான பிறகும், சூழ்நிலையை எதிர் கொள்ள இயலாமல் ஓடி ஒளியும் மனப்பான்மையோடு இருப்பது அவன் தவறு. அதை அனுமதிப்பது அதை விட தான் செய்யும் பெரும் தவறு என உணர்ந்தாள்.
ராஜுவுக்கு புரிய வைக்க ஆயிரம் வழி இருக்கிறது.
இருவரும் நல்ல மன நல ஆலோசகரை சந்திக்கலாம். மன வள வாழ்க்கை முறைகளை கையாண்டு அவ்வப்போது ஏற்படும் மன உளைச்சல்களிலிருந்து மீண்டு வரலாம்.
ஆனால் எந்த முயற்சியும் செய்யாமல், அவரவர் வழியில் அவரவர் போவது பவாவுக்கு தாங்கள் நிகழ்த்தும் துரோகம் என முடிவுக்கு வந்தாள்.
கடந்த சில நாட்களாக நடந்த நிகழ்வுகள் அவள் மனதை ரணமாக்கியிருக்கிறது.
தன் காயத்தையும் ஆற விட்டு, எதிராளியையும் அரவணைத்து போக வேண்டிய மனநிலை அவளுக்கு சவாலாக இருந்தது.
எப்படி இந்த பிரச்சனையை கையாள வேண்டும் என்ற தெளிவு இல்லெயென்றாலும், எப்படி இதை கையாளக்கூடாது என்ற தெளிவோடு தூங்க போனாள்.