Tamil short story – பீல் குட் மொமண்ட்ஸ்

A lovely couple enjoying happy retirement

“லக்ஷ்மி, அப்பா எங்கேன்னு பாரு” என ஹாலில் இருந்து சொன்னார் சங்கு புஷ்பம்.

“அவர் பாத்ரூம்ல இருக்காரும்மா” என்றாள் லக்ஷ்மி.

“கொஞ்சம் போய் பாரும்மா, அவர் உள்ள போய் ரொம்ப நேரமாச்சு” என்றார் சங்கு புஷ்பம்.

காலையில் சீக்கிரமே எழுந்து விடுவார் நேசப்பா. காபி போட்டு, காய் நறுக்கி, வாக்கிங் கிளம்ப வேண்டிய நேரம் இது! இன்னும் பாத்ரூமிலுருந்து வெளியே வரமால் என்ன செய்கிறார்? என யோசித்தார் சங்கு புஷ்பம்.

“மா, அவரு என்ன பண்ணிக்கிட்டு இருக்காரு தெரியுமா?” என சிரித்தபடியே வந்தாள் லக்ஷ்மி.

“சொல்லு!” என ஆர்வமாக கேட்டார் சங்கு புஷ்பம்.

“ஷேவ் பண்ணிக்கிட்டு இருக்காரும்மா? அதுவும் லெப்ட் ஹேண்ட்ல!” என்றாள் லக்ஷ்மி.

“வலது கைல ஏதாவது சுளுக்கா? இல்ல ஷோல்டர் வலியா? அவர் எதுவும் என்கிட்ட சொல்லலியேம்மா” என கவலையோடு சொன்னார் சங்கு புஷ்பம்.

“ஆமாம்மா, கொஞ்ச நாளா அவரு நார்மலா இல்ல. கொஞ்சம் வித்தியாசமா நடந்துக்குறார்” என யோசனையாக சொன்னாள் லக்ஷ்மி.

“வயசான காலத்துல இந்த ஆர்த்தோ, நியூரோ டாக்டருங்களுக்கு பீஸ் குடுத்தே மாள மாட்டேங்குது! இவரு வேற என்ன புது பைல போட வைக்க போறாருன்னு தெரியல” என புலம்ப ஆரம்பித்தார் சங்குபுஷ்பம்.

“மா, அதெல்லாம் எதுவும் சீரியஸா இருக்காது. நீ கவலைப்படாதே, நா வாக்கிங் போறேன்” என தேற்றினாள் லக்ஷ்மி.

கால் மணி நேரம் கழித்தது நெசப்பா காபி கப்போடு வந்தார்.

“இந்தாம்மா காபி” என மனைவியிடம் நீட்டினார்.

a husband serving coffee

“என்ன, வர வர மரியாதை கொறையுது? லெப்ட் ஹேண்ட்ல காபி தரீங்க?” என முறைத்தார் சங்குபுஷ்பம்.

“நீ தானே சொல்வ, மரியாதை மனசுல இருந்தா போதும்னு” என கண்ணடித்தபடியே சொன்னார் நேசப்பா.

“அப்ப மரியாதை இல்ல, அப்படி தானே?” என காபியை விட சூடாக கேட்டார் புஷ்பம்.

“காபி போட்டு கொண்டாந்து கைல குடுக்குற ஆள ஏண்டி ரோஸ்ட் பண்ற? என கூலாக கேட்டார் நேசப்பா.

“இது என்ன புது பழக்கம்? அந்த கையில ஏதாவது பிரச்சனையா? சிரிச்சி சிரிச்சி வலிய மறைக்குறீங்களா? அப்புறம் ஏதாவது பெரிய செலவா இழுத்து விடபோறீங்க? எதுவுமா இருந்தாலும் ஆரம்ப நிலையிலேயே வாய தொறந்து சொல்லுங்க! டாக்டரை பாத்து சரி பண்ணிக்கலாம்” என படபடப்பாக பேசினார் புஷ்பம்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா” என சிரித்தார் நேசப்பா.

“நாங்க உங்களை கவனிக்காம இல்லை! கொஞ்ச நாளாவே நீங்க இடது கையால தான் பல வேலைகளை செய்யுறீங்க” என கவலை குறையாமல் சொன்னார் புஷ்பம்.

a man doing household activities

“நீ ஏன் சின்ன விஷயத்துக்கு இவ்ளோ யோசிக்குற? நான் சில வேலைகளை இடது கையால செய்றது உண்மை தான். ஆனா அதுக்கு ஒரு காரணம் இருக்கு” என சிரிப்பை அடக்கிக்கொண்டு சொன்னார் நேசப்பா.

சங்கு புஷ்பத்திற்க்கு காண்டு ஏறியது.

அந்த நேரத்தில் நேசப்பா போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது.

“ஹர்ப்ரீத், இன்னைக்கு ஏழு மணி செஷனை ஏழரைக்கு மாத்தி இருக்காங்க. நா போய் காய் கட் பண்ணி வெச்சுட்டு கிளம்புறேன்” என நகர்ந்தார் நேசப்பா.

ஹர்ப்ரீத் பஞ்சாபி பெண்மணி. சுமார் ஐம்பது வயது இருக்கும். பிஸியோதெரபி டாக்டர். இவர்கள் அபார்ட்மெண்டில் சில மாதங்களுக்கு முன்பு குடியேறி இருக்கிறார். சொசைட்டி சீனியர்களுக்கு பீஸ் வாங்காத கன்சல்டன்ட். காலையில் வாக்கிங் போகும் மொத்த பெருசுகளுக்கும் நல்ல தோழியாகி விட்டார்.

பத்து நிமிஷத்தில் நேசப்பா ரெடியாகி வந்து ஷூ போட குனிந்தார்.

புஷ்பம் அவரையே உற்று நோக்க, ஷூவை போட்டபடியே “ரொம்ப கவலைப்படாதே! எல்லாத்துக்கும் புது கனெக்க்ஷன் தான் காரணம்” என சிரித்தபடியே பாதியிலேயே நிறுத்தினார் நேசப்பா.

“என்ன புது கனெக்க்ஷன்?” என முழித்தார் புஷ்பம்.

“இங்க பாரு, நாம எப்பவும் வலது கையால தான் பெரும்பாலான தினசரி வேலைகளை செய்வோம். அந்த பழக்கத்தை மாத்தி இடது கையால சின்ன சின்ன வேலைகளை செய்யும் போது நம்ம மூளைல புதுசா நரம்பு இணைப்புகள் உருவாகும். அது மறதி குறைய உதவும். கை மற்றும் கண் ஒருங்கிணைப்பு நன்றாகும். இதை Non-Dominant Hand Practise என சொல்வார்கள்” என விளக்கினார் நேசப்பா.

“அப்படியா, இதை மொதல்லயே சொல்ல வேண்டியது தானே?” என நிம்மதியாக சொல்லியபடியே கிச்சனுக்கு எழுந்து போனார் புஷ்பம்.

மெல்லிசாக விசிலடித்தபடியே கிளம்பி போனார் நேசப்பா.

வாக்கிங் முடித்து லக்ஷ்மி வந்தாள். புஷ்பம் நேசப்பாவின் Non-Dominant Hand Practise விஷயத்தை சொன்னார்.

“ஹ்ம்ம், புது விஷயமா தான் இருக்கு! நீயும் ட்ரை பண்ணுமா” என சொல்லிவிட்டு குளிக்க போனாள்.

இரண்டு நாட்கள் கழித்து புஷ்பம் கோவிலுக்கு போய்விட்டு வந்து, சொசைட்டி பார்க்கில் உட்கார்ந்து அவர் சகாக்களோடு பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது ஹர்ப்ரீத் வந்து அவர்களோடு சேர்ந்து கொண்டார்.

“நாளைக்கு நைட் என்னோட பர்த்டே பார்ட்டி பிளான் பண்ணி இருக்கேன். ஏழு மணிக்கு வீட்டுக்கு வந்துடுங்க” என அனைவருக்கும் அழைப்பு விடுத்து விட்டு கிளம்பினார்.

வீட்டுக்கு வந்ததும் நேசப்பாவிடம் சொன்னார் புஷ்பம்.

“ஆமா, எங்க ஆளுங்களையும் கூப்பிட்டு இருக்காங்க, எப்படியும் ஒரு இருபத்தஞ்சு பேரு வருவாங்கனு சொன்னாங்க. நீயும் லக்ஷ்மியும் போய் நாளைக்கு கிப்ட் வாங்கிட்டு வாங்க” என சொன்னார்.

“அதெல்லாம் வேணாம்னு அவங்க தெளிவா சொல்லிட்டாங்க” என்றார் புஷ்பம்.

அடுத்த நாள் ஏழு மணிக்கு எல்லோரும் ஹர்ப்ரீத் வீட்டில் ஆஜரானார்கள். நேசப்பாவின் கோஷ்டி ஹர்ப்ரீத் பட்டேலை ஏகத்துக்கும் கொண்டாடினார்கள்.

சற்று நேரத்தில் சாப்பாடு டெலிவரி வர எல்லோரும் சாப்பிட ஆரம்பித்தார்கள்.

நேசப்பாவும் புஷ்பமும் சாப்பிட ஆரம்பிக்க, அவர்கள் அருகில் வந்தார் ஹர்ப்ரீத்.

“நேஸ், நீங்களும் என்ன மாதிரி லெப்ட் ஹாண்ட் பர்ஸனா? ஸோ, ஸ்வீட்” என்றபடியே அவரை ஜென்டிலாக அணைத்துக் கொண்டார்.

a candid conversation at party

தட்டை டேபிள் மீது வைத்து விட்டு நேசப்பாவும் ஹர்ப்ரீத்தை மரியாதை நிமித்தமாக அணைத்துக் கொண்டார்!

“நீங்க லெப்ட் ஹாண்ட் பர்ஸனா?” என கேட்டார் நேசப்பா.

இது உலக மகா நடிப்புடா சாமி என தோன்றியது சங்கு புஷ்பத்திற்கு!

“ஆமா நேஸ்” என உற்சாகமாக சொன்னார் ஹர்ப்ரீத்.

“அப்பாடா, இன்னைக்கு எனக்கு டின்னர் டைம்ல “எல்போ க்ளாஷ்” ப்ராப்ளம் இருக்காதுன்னு நெனைக்கிறேன்” என்றார் நேசப்பா.

புஷ்பத்திற்கு இன்னைக்கு வீட்டில் க்ளாஷ் என்பது மட்டும் தெளிவாக புரிந்தது.

“எல்போ க்ளாஷ்னா என்ன?” என பொதுவாக கேட்டார் புஷ்பம்.

“சீ சங்குமா, இப்போ நா லெப்ட் ஹாண்ட். என் பக்கத்துல ரைட் ஹாண்ட் பர்ஸன் உட்கார்ந்து சாப்பிடும்போது, அந்த பர்சனோட கை, என் கைல இடிக்க சான்ஸ் இருக்கு. இது பொதுவா எங்களுக்கு நடக்கும். ஆனா நேஸ் மாதிரி லெப்ட் ஹாண்ட் பர்ஸன் பக்கத்துல உட்கார்ந்து சாப்பிடும்போது எங்களுக்கு இந்த பிரச்சினை இல்லை” என விளக்கினார் ஹர்ப்ரீத்.

“லவ்லி, ஸோ ஸ்வீட்” என சொல்லி சிரித்தார் புஷ்பம்.

“சரி நீங்க சாப்பிடுங்க. ” என நகர ஆரம்பிக்கும் போது, “நீயும் எங்க கூட சாப்பிடேன் சங்கு” என அழைத்தார் நேசப்பா.

“நா ரைட் ஹாண்ட் பர்ஸன் நேஸ்! உங்களுக்கு இடிக்கும்!!” என சீனியர் கேர்ள்ஸ் கோஷ்டி பக்கம் தட்டை எடுத்து கொண்டு போனார்.

நேசப்பா பாந்தமாக சப்பாத்தியை இடது கையால் பிய்த்து, அதை லேசாக க்ரேவியில் தோய்த்து உள்ளே தள்ளி கொண்டிருந்தார்.

கேக், குலாப் ஜாமூன் என லைனாக வந்த அனைத்தையும் கச்சிதமாக, சிந்தாமல் சிதறாமல், லெப்ட் ஹாண்டில் சாப்பிட்டு முடித்தார்.

பத்து மணிக்கு பார்ட்டி முடிந்து வீட்டுக்கு வந்து சேர்ந்ததும், சங்கு புஷ்பம் முதல் வேலையாக லக்ஷ்மியின் ரூமிற்க்கு சென்றார்.

புஷ்பம் சொல்ல சொல்ல, லக்ஷ்மி உன்னிப்பாக கேட்டு விட்டு, விழுந்து விழுந்து கண்ணில் நீர் வர சிரித்தாள்.

“மா, நா ஒண்ணு சொல்லுவேன், என்ன திட்டாதே!” என இழுத்தாள்.

“சொல்லு” என்கிறார் புஷ்பம்.

எதையோ அவள் சொல்ல ஆரம்பிக்க, மீண்டும் அடக்க முடியாமல் சிரிப்பை தொடர்ந்தாள்.

“சொல்லிட்டு சிரியேண்டி” என அதட்டினார் புஷ்பம்.

சற்று தன்னை நிதானப்படுத்திக் கொண்டு லக்ஷ்மி ஆரம்பித்தாள்.

“மா, நா நெனைக்கிறேன் NDHPனா “Non-Dominant Hand Practise” இல்லை! “Nesappa Dates Harpreet Patel”. கூட்டி கழிச்சி பாரு என் கணக்கு சரியா வரும்” என பன்ச் டயலாக்கை போட்டாள்.

“அடிப்பாவி, கதை அப்படி போகுதா? அந்த மனுஷன் புது கனெக்க்ஷன்னு பேசும் போதே நா யோசிச்சிருக்கணும்” என மெலிதாய் சிரித்தபடியே சொன்னார் சங்கு புஷ்பம்.

அம்மாவும் மகளும் அடுத்த இருபது நிமிடம் நேசப்பாவின் லெப்ட் ஹாண்ட் அட்ராசிட்டிகளை பேசி விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

feel good moment between mother and daughter

“மா, வயசான காலத்துல இதுவும் நல்லது தாம்மா! தான் கவனிக்கப்படலை, அட்ராக்ட்டிவா இல்லேன்னு நெனச்சி முடங்கிடாம, அவர் பிளேபுல்லா இருக்கிறது நல்ல விஷயம். நம்ம அப்பாவை பத்தி நமக்கு தெரியும். டீசண்டான மனுஷன். இந்த மாதிரி சின்ன சின்ன பீல் குட் மொமண்ட்ஸ் அவர் மைண்டை பிரெஷ்ஷா வெச்சிக்க ஹெல்ப் பண்ணும்” என சொன்னாள் லக்ஷ்மி.

“சின்ராசுக்கு இந்த வயசுல சின்ன சின்ன பீல் குட் மொமண்ட்ஸ் தேவைப்படுது!” என சொல்லியபடியே தூங்க போனார் சங்கு புஷ்பம்.

மாத்திரைகளை போட்டு கொண்டு, கிச்சனை க்ளீன் செய்துவிட்டு, சோபாவில் உட்கார்ந்து லக்ஷ்மி சொன்ன விஷயங்களை தேடி படித்து பார்த்தார். உண்மை தான் அவள் சொன்னது. தன்னை சமாதானபடுத்த அவள் எதுவும் பொய்யான விஷயங்களை சொல்லவில்லை.

ஹால் விளக்குகளை அணைத்து விட்டு “ஏங்க, ஆறு மணிக்கு அலாரம் வெச்சுடுங்க” என சொல்லிவிட்டு போய் கட்டிலில் படுத்துக் கொண்டார்.

“ஏண்டி ஆறு மணிக்கு எழுந்து என்னடி பண்ண போற?” என கேட்டார் நேசப்பா.

“திலீப் சார் “Deep Healing Synaptic Pathway” அப்படீன்னு சீனியர் சிட்டிசன்ஸுக்கு செஷன் எடுக்குறாராம் பார்க்குல. டின்னர்ல பேசிக்கிட்டுருக்கும் போது சொன்னார்” என்றார் புஷ்பம்.

“அந்த ஆர்மில இருந்து VRS வாங்குன டாக்டர்தானே?” என கேட்டார் நேசப்பா.

“ஆமாங்க” என்றார் புஷ்பம்.

“பாத்ரூம் போயிட்டு வரேன்” என சொல்லி விட்டு லக்ஷ்மி ரூமிற்க்கு போனார் நேசப்பா.

“என்ன, உங்க அம்மா Healing கிளாஸ் போக போறாளாமே? உன்கிட்ட சொன்னாளா?” என கேட்டார்.

“முழுசா சொல்லுப்பா! நானே பாதி தூக்கத்துல இருக்கேன். நீ வேற பிட்டு பிட்டா சொல்ற” என சலித்துக் கொண்டாள் லக்ஷ்மி.

நேசப்பா சொல்லி முடிக்க, “ஆமாப்பா, அம்மா சொன்னாங்க. “DHSP” இப்போ ரொம்ப பேமஸ். ஆனா இதுல ஒரு மேட்டர் இருக்கு கவனிச்சியா?” என கண்ணடித்தபடியே கேட்டாள் லக்ஷ்மி.

அவருக்கு கேக்கும், குலாப் ஜாமூனும் ரிவர்சில் வந்து தொண்டையை அடைத்தது.

“என்ன மேட்டர்” என தக்கி தக்கி கேட்டார்.

Dileep Heals Sangu Pushpam” என சொல்லி போர்வையை தலை வரை மூடி கொண்டு சிரித்தாள்.

மறுநாள் காலை சங்கு புஷ்பம் ஆறு மணிக்கு ரெடியாக, நேசப்பா காபி கொடுத்தார். வலது கையில்!

a husband serving coffee

முற்றும்

Leave a comment