
தாரா அன்று அங்கன்வாடிக்கு சென்று சேரும்போது பெரும்பாலான குழந்தைகள் வந்திருந்தார்கள். உதவியாளர் வெண்மணி அவர்களை அமர வைத்துவிட்டு, தண்ணீர் குடம் கொண்டு வந்து வைத்தார்.
பொன்னி நர்ஸின் போன் வந்தது தாராவுக்கு. “நம்ம கல்பனாவுக்கு பொண்ணு பொறந்திருக்கு தாரா. நார்மல் டெலிவரி. உன்கிட்ட தலைவர் சொல்ல சொன்னார். அப்புறம் வந்து உன்கிட்ட நேர்ல பாத்து பேசுறேன்னார்” என சொல்லி போனை வைத்தார்.
கல்பனா ஊர் தலைவர் மகள். கர்ப்ப காலத்தில் ரெகுலராக அங்கன்வாடிக்கு வருவாள். பேச்சு வாக்கில் ஒரு நாள் சுக பிரசவத்துக்காக சில யோகா முறைகளை டாக்டர் செய்ய சொன்னதாகவும், அதை யாருடைய கண்காணிப்பும் இன்றி தனியே செய்ய பயமாக இருப்பதாகவும் சொன்னாள்.
தாரா யோகாவில் டிப்ளமோ பட்டம் முடித்திருந்தாள். “சரி கல்பனா, நீ கவலைப்படாதே. நா வீட்டுக்கு வந்து நேர்ல சொல்லி தரேன். நீ பயமில்லாம செய்” என சொல்லி ஊக்கப்படுத்தினாள்.
அடுத்த நான்கு மாதம் தாராவின் நேரடி மேற்பார்வையில், யோகா, தியான பயிற்சி மற்றும் ஊட்டசத்து குறிப்புகள் என கல்பனாவுக்கு சரியான வழிகாட்டுதல் கிடைத்தது. இன்று அவளுக்கு நல்லபடியாக குழந்தை பிறந்தது தாராவுக்கு சந்தோஷமாக இருந்தது. வெண்மணி அம்மாவை கூப்பிட்டு விஷயத்தை சொல்லி விட்டு வகுப்பறைக்கு சென்றாள்.
அன்றைய நாளுக்கான வேலைகளை தாரா யோசித்துக்கொண்டிரும்போது, தூரத்தில் ஷாருக்கின் அழுகுரல் கேட்டது.
“இன்னைக்கும் அழுவுறானா? இவனை எப்படி சமாளிக்க போறம்மா?” என்றார் வெண்மணி.
“வரட்டும், பாத்துக்கலாம்” என சொன்னாள் தாரா.
தேம்பி தேம்பி அழுதபடியே வந்த ஷாருக்கை வெண்மணி வாங்கிக் கொண்டு அவன் அம்மாவை அனுப்பி வைத்தார்.
“ஏன்டா அழுவுற?” என அதட்டலாக கேட்டாள் தாரா.
சற்று அழுகை நின்று, “அக்காக்கு மட்டும் ஜாமென்டரி பாக்ஸ் வாங்கி கொடுத்துட்டாங்க. நா கேட்டா அப்புறம் வாங்கி தரேன்னு சொல்றாங்க” என சொல்லி மீண்டும் அழுகையை ஆரம்பித்தான்.
தாரா யோசிக்க “அவுங்க அக்கா ஆறாம் க்ளாஸ் படிக்குறாங்க. இவனுக்கு எதுக்கு?” என அவனை அல்பமாக பார்த்துக் கொண்டே சொன்னது ஆஷாதேவி.
முக்திக்கு முன் நிலையில் இருப்பது போல இருந்தது ஆஷாதேவியின் உரை.
“சரி வாங்க, எல்லாரும் ரவுண்டா உக்காருங்க, உங்களுக்கு கதை சொல்ல போறேன்” என டாபிக்கை மாற்றினாள் தாரா.
ஷாருக் இன்னும் சமாதானம் ஆகவில்லை. ஜாமென்டரி பாக்ஸ் விஷயத்தில் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக எண்ணி உருண்டு உருண்டு அழுது கொண்டிருந்தான்.
இப்போது தான் எண்களில் நூறு வரை சொல்ல கற்று கொண்டிருக்கிறான். இவனுக்கு ஜாமென்டரி பாக்ஸ் தேவைப்பட இன்னும் சில ஆண்டுகள் இருக்கிறது. அக்காவுக்கு கிடைத்தது தனக்கும் கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் தவிர வேறொன்றுமில்லை.
“டேய் ஷாருக், வெண்மணி அம்மாவுக்கு கால் வலி இருக்குது. அவங்களால செடிக்கு தண்ணி ஊத்த முடியல. கொஞ்சம் போய் வராண்டால அழுவுடா, அதுங்களுக்காவது தண்ணி கிடைக்கும்” என ஆஷாதேவி பொறுமையிழந்து கத்தியது.
ஷாருக்கை இன்ப்ளுயன்சாராக கருதி ஷைலா டேமை திறந்தது.
“நீ ஏன் அழுவுற?” என தாரா கேட்க, “அம்மா வேணும்!” என மூக்கை சிந்தியது.
ஷைலா அங்கன்வாடிக்கு வர ஆரம்பித்து பத்து மாதங்களுக்கு மேலாகிறது!
இப்போது என்ன திடீர் அம்மா பாசம் என ஆஷாதேவிக்கு புரியவில்லை.
இதுங்களால் கதை நேரம் குறைவதை அதனால் ஏற்று கொள்ள முடியவில்லை.
ஷாருக்கை அம்போவென விட்டு விட்டு ஷைலாவை மியூட் செய்ய நகர்ந்தது.
தாரா எல்லோரையும் கவனித்தவாறே, பாயை விரித்து ஒவ்வொருவராய் உட்கார வைத்து, சாமிக்கு பூ வைத்து விட்டு, “எல்லாரும் கண் மூடி, கை கூப்புங்க” என சொன்னாள்.
“ஷாருக், வா இங்க வந்து உக்காரு. ஷைலா, நீ இந்த பக்கம் வா” என ரெண்டு பேரையும் தன்னருகே அமர்த்திக் கொண்டாள் தாரா.
“ஷாருக், உனக்கு என்ன அனிமல் புடிக்கும் சொல்லு?” என கேட்டாள்.
“சிங்கம்” என சிவந்த கண்களோடு வீரமாய் சொன்னான் ஷாருக்.
ஆஷாதேவி வேண்டுமென்றே களுக்கென சத்தமாக சிரிக்க, மற்ற வாண்டுகளும் சிரிக்க ஆரம்பித்தது.
தாராவுக்கே அவன் பதில் சொன்ன வேகம் காமெடியாக இருந்தது.
“சைலன்ஸ், ஷைலா உனக்கு யார் பிடிக்கும்?” என கேட்டாள்.
“யானை” என்றது ஷைலா.
“சூப்பர், இன்னைக்கு நம்ம கதைல சிங்கமும் யானையும் தான் வர போறாங்க” என தாரா சொல்ல, ரெண்டு பேரும் அடுத்த நொடியே உற்சாகமானார்கள். அவரவர் மனதில் அந்த கதைக்களம் விரிய ஆரம்பிக்க, அந்த பள்ளி வளாகம் ஒரு மாய காடாக மாறிக் கொண்டிருந்தது.