
கதை நேரம் முடிந்து குழந்தைகள் வராண்டாவிற்கு செல்ல, ஊர் தலைவரும் கலாவதி டீச்சரும் வந்தார்கள்.
“லட்டு எடுத்துக்கம்மா, பசங்களுக்கும் குடுங்க” என பாக்ஸை நீட்டியவர் “நீ செஞ்சது பெரிய உதவிம்மா, நீ இல்லேன்னா நாங்க அடிக்கடி டவுனுக்கு போய் அலைய வேண்டியதா இருந்திருக்கும்” என சந்தோஷமாக நன்றி சொன்னார்.
கொஞ்ச நேரம் பேசி முடித்து விட்டு அவர் கிளம்ப, கலாவதி டீச்சர் மட்டும் இருந்தார்.
“தாரா, உக்காரு உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றார். அவர் சொன்னதின் சுருக்கம் இதுதான்.
பொன்னி நர்ஸ் மற்றும் தலைவர் மூலமாக, தாரா பற்றி ஆரம்ப சுகாதார நிலைய டாக்டருக்கு தெரிய வந்திருக்கிறது.
அவர் தாராவை பகுதி நேரமாக அந்த ஊர் பெண்களுக்கு யோகா சொல்லி தர நியமிக்க முடிவு செய்தார்.
அருகாமையில் இருந்த ஒரு ஷூ கம்பெனியின் CSR டீமிடம் பேசி, ஒரு குறிப்பிட்ட தொகையை தாராவுக்கு ஊதியமாக கொடுக்க ஏற்பாடும் ஆகி இருக்கிறது.
தாராவுக்கு இந்த வாய்ப்பு மகிழ்ச்சியாக இருந்தாலும், டிப்ளோமா மட்டும் படித்த தான் இதை பெறுப்பேற்று செய்ய முடியுமா என சந்தேகமாக இருந்தது.
மேலும் மாலை நேரத்தில் பிள்ளைகள் வீட்டில் இருக்கும் நேரத்தில் இந்த வேலையில் ஈடுபட்டால் எப்படி வீட்டை கவனிப்பது எனவும் குழப்பமாக இருந்தது.
“டிப்ளமோ மட்டும் தான் கைல இருக்கு டீச்சர். இன்னும் டிகிரி முடிக்கல. அதான் கொஞ்சம் யோசனையா இருக்கு, யோசிச்சு சொல்றேன் டீச்சர், ரொம்ப தேங்க்ஸ்” என்றாள் தாரா.
“ஷூ கம்பெனில இந்த ப்ரோக்ராம் அப்ரூவ் ஆக கொஞ்ச நாள் ஆகும், கவலைப்படாதே ” என சொல்லி கிளம்பி போனார் கலாவதி டீச்சர்.
அன்று இரவு உணவு நேரம். “இன்னைக்கு என்ன கதை சொன்னம்மா பசங்களுக்கு?” என கேட்டது சேனா.
“சூப்பரான யானை கதை. சீக்கிரம் சாப்பிட்டு வாங்க, சொல்றேன்” என்றாள் தாரா.
சற்று நேரத்தில் சாப்பிட்டு முடித்து வரிசையாக பாய் விரித்து தாரா படுக்க, இருவரும் வந்து ஆளுக்கொரு பக்கம் படுத்துக் கொண்டார்கள். மூடிய அவர்கள் கண்களுக்குள் காடு விரிய ஆரம்பித்தது.
கதை கேட்டபடியே மேகநாதன் கிச்சனை சுத்தம் செய்து முடித்தார். பிள்ளைகள் இருவரும் தூங்கிவிட “இங்க வாங்க ஒரு விஷயம் பேசணும்” என அழைத்தாள் தாரா.
டீச்சர் சொன்ன விஷயத்தை சொல்லி தன் குழப்பத்தை விளக்கினாள். பொறுமையாக கேட்ட மேகநாதன் “தாரா, ரங்குவ நெனச்சி பாரு, உன் கேள்விக்கு பதில் கிடைக்கும். இந்த வாய்ப்பு உனக்கு கெடச்சா, நாம ரெண்டாவது வண்டிய கடனில்லாம சீக்கிரம் வாங்கிடலாம்” என சொன்னார்.
அன்று இரவு தூக்கத்தில் பலவகையான பொறுப்புகள் வெவ்வேறு உருவங்களில் அவளை சுற்றி வருவது போல மங்கலாக ஒரு கனவு வந்தது.
அடுத்த வந்த நாட்கள் சாதாரணமாக இருந்தாலும் தாராவின் மண்டைக்குள் பல கேள்விகளை எழுப்பி கொண்டே இருந்தது.
ஒரு நாள் போல, இருபது சிறு குழந்தைகளை கவனித்துக் கொள்வது அசாதாரணமான வேலை. அவர்களுக்கு அமைதியான சூழலை அமைத்து கொடுப்பதே பெரும் பொறுப்பு.
ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் கவனித்து, பேசி, உணவு கொடுத்து தூங்க வைப்பது என அடிப்படை பராமரிப்பு பணிகள் ஏராளம்.
கூடவே அவர்களின் கற்றல் தேவைகளையும் பூர்த்தி செய்து, அந்த நாளின் முடிவில் அவர்கள் பெற்றோரிடம் நல்ல படியாக ஒப்படைப்பது வரை மறைமுகமான ஒரு அழுத்தம் அவள் மீது இருக்கிறது.
மறுபுறம் வீடு, குழந்தைகள், குடும்பத்தின் பொருளாதார சூழல் என அடுக்கடுக்காய் பல விஷயங்கள் அவள் மனதை ஆக்கிரமித்திருக்கிறது.
அந்த வாரம் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கலாவதி டீச்சரிடம் போய் பேசினாள். அவருடைய அனுபங்களை கேட்கும் போது, தான் மட்டும் இந்த சூழலில் இல்லை என்பது தாராவுக்கு புரிந்தது.