
குளத்தின் நடுவே கல் மண்டபம் இருக்கிறது. அதன் அருகே நீரில் சில மீன்கள் கம்பி ஜன்னலருகே நெடு நேரமாக குழந்தைகள் நிற்பதை கவனித்தபடி நீந்தி கொண்டிருந்தன.
பூட்டிய கேட்டை பார்த்தபடியே குழந்தைகள் ஏமாற்றமாக நின்றது குட்டி மீனுக்கு வருத்தமாக இருந்தது.
“அம்மா, ஏன்மா இப்போ கேட் பூட்டி வெக்குறாங்க? அங்க பாரு குட்டி பசங்க சேடா இருக்காங்க” என கேட்டது குட்டி மீன்.
“எல்லாம் அந்த தங்கராஜு வேலை. வர்றவங்க குப்பை போடுறாங்க, லவ்வர்ஸ் வராங்கனு ஏதேதோ காரணம் சொல்லி பூட்டி வெச்சிருக்கான். பாவம் பசங்க, விளையாட முடியாம திரும்ப போறாங்க” என்றது அம்மா மீன்.
மண்டபத்தின் மேலே அமர்ந்திருந்த காகம் இவர்கள் பேசுவதை கேட்டு கொண்டிருந்தது. சின்னதாய் பறந்து வந்து தரையில் அமர்ந்தது.
“இப்ப கேட் தொறந்தா நீ என்ன வெளில கெளம்பி போக போறியா?” என நக்கலாக குட்டி மீனிடம் கேட்டது.
வயத்தில் மூத்த காகம் என அம்மா மீன் காதில் சொல்லி குட்டி மீனை அமைதிப்படுத்தியது.
பக்கத்து மரக் கிளையில் அமர்ந்திருந்த குரங்கு இந்த மீட்டிங்கில் வந்து சேர்ந்து கொண்டது. சற்று நேரத்தில் அதற்கு அங்கே என்ன பேச்சுவார்த்தை நடக்கிறது என புரிந்தது.
பதில் வராத காரணத்தால் மீண்டும் காகம் சீண்ட தொடங்கியது.
“உங்களுக்கு என்ன வெயில் மழை கஷ்டமா? சொகுசா தண்ணில இருப்பீங்க. இங்கயே பாசி பூச்சிய தின்னு காலத்த ஓட்டிடுவீங்க. என்ன மாதிரி கோபுரம் மேல வெயில்ல காஞ்சி மழைக்கு நனஞ்சா இருக்கீங்க? தண்ணி வத்துற மாதிரி இருந்தா தங்கராஜு டேங்கர்காரன தண்ணி புல் பண்ண சொல்லிடுவான். நா நாலு தெரு பறந்து போய் எங்க வெந்த சோறு கிடைக்கும்னு அல்லாடிக்கிட்டிருக்கேன்” என நீட்டி முழக்கி பேசியது.
தூணில் சாய்ந்து உட்கார்ந்தபடி காகம் சொல்வதை கேட்டு கொண்டிருந்தது குரங்கு.
குட்டி மீனுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. சொல்ல முடியாத சோகம் அதன் கண்ணில் கண்ணீராய் வழிந்தது. அம்மா மீனுக்கு தாளவில்லை.
“நீ தெக்கு கோபுரத்துல நல்ல கூடுல தானே இருக்க? என்னவோ வெந்த சோறு மட்டும்தான் சாப்புடுறேன்னு கதவுடுற. நல்லா வடை, சக்கரபொங்கல்னு வகை வகையா சாப்புடுற. எங்கள வந்து குறை சொல்லுற” என காகத்தை தாளித்தது அம்மா மீன்.
“இது காலைல மெனு. மத்தியானம் பஜார் பக்கம் போய் தள்ளு வண்டி கடை பக்கத்துல தான் ஐய்யாக்கு டியூட்டி. சிக்கன் ரைஸ், பிரைட் பிஷ்னு ஒரு ஒரு புடி புடிப்பார்” என்றது குரங்கு.
“அப்புறம் ஐயா இப்போ தெக்கு கோபுரத்துல இல்ல. வடக்கு கோபுரத்துக்குப் போயிட்டார்” என எக்ஸ்ட்ரா டீடைலை சொன்னது மாருதி.
காகம் தொக்காக மாட்டிக்கொண்டது. என்ன பதில் சொல்வது என தெரியவில்லை.
“ஆமா, நா மட்டும் தான் சக்கர பொங்கல் சாப்பிடுறேனா? எனக்கே நாலு தொன்னை தள்ளி அஞ்சாவது தொன்னைல தான் கொஞ்சூண்டு கெடைக்குது. நம்ம கணேசன் அண்ணனை பாருங்க, வெல்லம், சோறு, புல்லுனு ராயலா இருக்காரு” என கோவில் யானையை கோர்த்து விட்டது.
தன் மீது ஒரு குறை சொன்னால் அடுத்தவரோடு கோர்த்துவிடும் மனித புத்தி காகத்துக்கும் தொற்றிக் கொண்டது.
“இப்போ என்ன, அந்த பையன் பொரி போட்டு விளையாடி இருப்பான். நீங்களும் வயறு முட்ட தின்னுட்டு ஆட்டம் போட்டு இருப்பீங்க. கேட்டு பூட்டி இருக்கவே உங்களுக்கு காண்டா இருக்கு. அதுக்கு ஏன் என்ன கழுவி ஊத்துறீங்க?” என பிளேட்டை திருப்பி போட்டது காகம்.
பாதிக்கப்பட்டவைர்களையே பழி போட்டு ஏளனப்படுத்தும் ஈனபுத்தியையும் தவறாமல் கற்றுக் கொண்டு இருக்கிறது என நினைத்தது குரங்கு.
காகத்தின் வார்த்தைகள் மீன்களின் தன்மானத்தை சீண்டியது.
“கொஞ்சம் நிறுத்தறியா” என்றபடி மீட்டிங்கில் சேர்ந்து கொண்டது பாட்டி மீன்.
“நீ ஏன் வடக்கு கோபுரத்துல போய் கூடு கட்டுன?” என காகத்திடம் கேட்டது.
இந்த கேள்வியை காகம் எதிர்பார்க்கவில்லை.
“அங்க ஒரே சத்தமா இருக்கு. அந்த பக்கம் ப்ளைஓவர் கட்டுறாங்க. டஸ்டும், லொட்டு லொட்டுனு சவுண்டும் நாராசமா இருக்கு. இன்னும் ரெண்டு வருஷம் ஆகுமாம் முடிக்க. அது வரை யார் அந்த எடத்துல இருக்குறது. அதான் வடக்கு கோபுரத்துக்கு போயிட்டேன்” என்றது காகம்.
“அது மட்டும் தான் காரணமா?” என கூர்மையாக கேட்டது பாட்டி மீன்.
குரங்குக்கு பாட்டி மீன் கேட்ட கேள்வியின் சூட்சுமம் புரிந்தது. அமைதியாக காகத்தின் பதிலுக்கு காத்திருந்து.
காகம் சில நொடிகள் மெளனமாக இருந்தது.
“இல்ல, தெக்கு கோபுரம் பக்கத்துல மொபைல் டவர் இருக்கு. இஎம்எப் ரேடியேஷன் அதிகமா இருக்கு. என் ஒய்ப்புக்கு கருமுட்டை பிரச்சினை வந்துடிச்சி. இந்த சாமிய வேண்டாத நாளில்லை ஒரு வாரிசை குடுக்க சொல்லி. எங்க அப்பா அம்மாக்கும் திசையறிஞ்சு பறக்குறதுல குறைபாடு வந்துடிச்சி. பக்கத்துல எங்க அக்கா ஊருக்கு போய் பார்த்துட்டு வரதுக்கு அவ்ளோ தடுமாறுறாங்க. ரேடியேஷனால அவங்க பறக்குற திறனும் பாதிக்கப்பட்டிருக்கு. ஒரு நாள் தள்ளு வண்டி பக்கத்துல உக்காந்து சாப்பிடும் போது எப் எம் ரேடியோல மொபைல் டவர் ரேடியேஷன் பத்தி சொன்னாங்க. அப்போ தான் எனக்கும் எங்க பிரச்சினைக்கு காரணம் புரிஞ்சுது. எங்க அம்மா கூட வாஸ்து சரி இல்ல, கூட்ட கொஞ்சம் மாத்தி கட்டுனு பொலம்பிகிட்டு இருந்தாங்க” என ஆதங்கத்தை கொட்டியது காகம்.
“அப்ப வாஸ்து பிரச்சினை இல்ல, டவர்ல இருந்து வர்ற வஸ்து தான் பிரச்சினை” என டிக்ளேர் செய்தது குரங்கு.
“ஆமா, வடக்கு கோபுரம் போனப்புறம் கொஞ்சம் எக்ஸ்போஷர் கம்மியா இருக்கு” என சொன்னது காகம்.
“இஎம்எப் ரேடியேஷன்னா என்ன?” என கேட்டது குட்டி மீன்.
“எலக்ட்ரோ மேக்னடிக் பீல்டு ரேடியேஷன்” என சொன்னது காகம்.
“அது தியரி. பாதிக்கப்பட்டவங்களுக்கு இஎம்எப் ரேடியேஷன்னா, “என்னா மயிருக்கு பிரீ ரேடியேஷன்னு” அர்த்தம். கார்போரேட்டுங்க லாபம் சம்பாதிக்க கால், மெசேஜ், இன்டர்நெட்டுனு பிரீயா குடுத்து மனுஷங்களையும்,பறவைங்களையும் கொல்லுறானுங்க. இந்த பைத்தியங்க பிரீ கால்னு பொழுதுக்கும் பேசி எல்லாரையும் ரேடியேஷனுக்கு எக்ஸ்போஸ் பண்ணுறாங்க” என கோபமாய் சொன்னது குரங்கு.
“எதுக்கு வடக்கு கோபுரம், பேசாம எங்கயாவது ஊர் பக்கம் போக வேண்டியது தான? அதான் அங்க இருந்து நெறய ஆளுங்க இங்க வந்துட்டாங்களே, அங்க டவர் நெறய இருக்காது, நீங்க அங்க போய் சேபா இருக்க வேண்டியது தானே?” என விடாமல் கேட்டது பாட்டி மீன்.
காகத்துக்கு தான் வாலண்டரியாய் வந்து வண்டியில் ஏறியது புரிந்தது.
“நீங்க என்னை ஊர விட்டே போகவா சொல்றீங்க?” என கான்டெக்ஸ்ட் புரிந்தும் வீம்பாய் கேட்டது.
“உசுருக்கே உத்தரவாதம் இல்ல, இதுல இந்த ஊர் தான் முக்கியமா?” என ஒரு போடு போட்டது பாட்டி மீன்.
கோபுரத்தில் கூடு கட்டுவது சாதாரண காரியமில்லை. பருந்து, வௌவால் என பெரிய கைககள் இருக்கும். இடம் கிடைப்பதே அரிது. காகத்துக்கு இங்கிருந்து போக மனமில்லை. உணவுக்கு பெரிதாய் அலட்டிக் கொள்ள வேண்டாம். பிரசாத பிளேட்டுகள், பொங்கல் வைப்பவர்கள் தருவது, அன்னதான கூடம் என முழு குடும்பமும் நோகாமல் வேலையை முடித்து விடும்.
ஊருக்கு போய் சேர்த்தால் ஏதாவது பழம் கொட்டை என தின்று தான் வாழ வேண்டும். பழைய கஞ்சியை கூட வீணாக்காமல் குடித்து சுத்தமாக புழக்கடையில் பாத்திரங்கள் இருக்கும். சோற்று பருக்கையை நல்ல நாளில் தான் பார்க்க முடியும்.
“சாவு எல்லாருக்கும் ஒரு நாள் வரத்தான் போகுது. ஏதோ நல்லதா நாலு வாய் தின்னுட்டு சாகணும். ஊர்ல போய் என்னத்த சாப்புட? அமாவாசைக்கு மட்டும் தான் சோறு போடுவாங்க. மத்த நாள் பூவாவுக்கு என்ன பண்றது”? என ஓபனாய் விஷயத்தை சொல்லியது.
“ஏன் கேட்டேன்னா, சோறு ஒரு மேட்டர் இல்ல. உனக்கு ஒரு ரிஸ்குன்னா உன் உசுரை காப்பாத்திக்க நீ இடம் மாறுற. தெக்கு கோபுரத்திலேர்ந்து டவர விட தூரமா இருக்குற வடக்கு கோபுரத்துக்கு போயிட்ட. ஆனா எங்க நெலமைய யோசிச்சு பாரு. கொளத்துல ஒரு பிரச்சினைன்னா நாங்க எங்க போறது. இங்கயே இருந்து சாக வேண்டியதுதான். ஆத்துலயோ கடல்லியோ இருந்தோ எங்கயாவது வேற இடத்துக்கு நீந்தி போய் பொழச்சிக்குவோம்” என நிதானமாய் சொன்னது பாட்டி மீன்.
“நீ எப் எம் கேட்டு விவரமா வீடு மாறிட்ட. எங்களுக்கு என்ன வாய்ப்பு இருக்கு? ஏதோ கோவிலுக்கு வர்றவங்க வந்து படித்தொரையில உக்காந்து கத பேசினா ஏதாவது விஷயம் தெரியும். இப்ப பாரு, பொழுதும் போகாம, நாட்டு நடப்பு எதுவும் தெரியாம மக்கு மாதிரி இருக்கோம்” என தொடர்ந்தது.
குளத்தின் நிலையை அறிந்த குரங்கு சுற்றி ஒரு பார்வையை ஓட விட்டது. பெருசு சொல்வது உண்மைதான் என்பது போல தலையாட்டியது.
“நீ நாலு இடத்துக்கு பறக்கிற. பொழுதுக்கும் எங்கயாவது ஏறி உக்காந்துகிட்டு பராக்கு பாக்குற. போதாக்கொறைக்கு இந்த ஜனங்க வேற கா கானு கூப்புட்டு உனக்கு சோறு போடுறாங்க. உனக்கு எங்க கஷ்டம் எப்படி புரியும்?” என பொரிந்து தள்ளியது அம்மா மீன்.
மாமியாரும் மருமகளும் செட்டு சேந்துட்டாங்க. இந்த இடத்தில் இருந்து காலி செய்ய வேண்டும் என எண்ணியது காகம்.
“லன்ச் டைம் ஆச்சு. இன்னைக்கு ஒரு தெவச வீட்டுக்கு போகணும். சாயங்காலம் வர்றேன்” என சொல்லி இடத்தை காலி செய்தது காகம்.
பிறகு குரங்கும் தண்ணீரில் குதித்து நீந்தியபடியே படித்துறை பக்கம் போனது.
‘என்னடி அந்த ஆம்பள காக்கா, கொரங்கு கூட ரொம்ப நேரமா பேசிக்கிட்டு இருக்க?” என்றபடி முறைத்தது கிழட்டு மீன்.
“உனக்கு நல்ல சாவு வரும்னு மட்டும் நினைக்காதே. ஏலம் எடுத்தவன் அடுத்த வாரம் வருவான். நீதான் மொதல்ல மாட்ட போற. உப்புகாரம் தடவி சூடா பொறிச்சி மொடாக்குடிகாரனுக்கு சைட் டிஷ்ஷா போக போற.
செத்தப்புறமும் ஆல்கஹால்ல மெதந்து ஜீரணம் ஆகாம வாந்தியா நாறி போக போற. பொம்பளைங்கள தப்பா பேசுனவனுங்க நல்ல கதி காண மாட்டானுங்க” என திட்டி தீர்த்தது பாட்டி மீன்.
சற்று நேரம் கழித்து கையில் ஒரு பொரி பாக்கெட்டோடு வந்த குரங்கு சரக்கென்று பிரித்து நீரில் கொட்டியது.

“குட்டிமா, வா வா வந்து சாப்புடு” என அழைத்தது.
குட்டி மீன் அமைதியாக இருந்தது. “போய் சாப்பிடு” என்றது பாட்டி மீன்.
பிறகு குரங்கிடம் “இந்த பொரிக்காக தான் நாங்க ஏங்கி இருக்கோம்னு நீயும் நெனைக்குறியா மாருதி?” என மெதுவாக கேட்டது.
குரங்கு தலையை குனிந்து கொண்டது.
“உங்க கஷ்டம் எனக்கு தெரியும் மச்சிமா. என்னால உங்களுக்கு இதை தான் பண்ண முடியும். அந்த தங்கராஜு பய பூட்டு போட்டதுல இருந்து நீங்க அப்செட்டா இருக்கீங்க. பப்ளிக் யாரையும் பாக்க முடியல. டெய்லி அந்த அய்யறு மட்டும் வந்து முங்கிட்டு போறாரு. அவரு கோவணத்தையே எத்தனை நாளு தரிசிக்குறது?” என ஆறுதல் சொன்னது மாருதி.
“என்னை விடு மாருதி. நா வயசானவ. எல்லாத்தையும் பாத்துட்டேன். இந்த குட்டிங்க எல்லாம் லாக்டவுன் சமயத்துல பொறந்துதுங்க. கோவில்ல ஜன நடமாட்டமே ரெண்டு மூணு வருஷமா கெடயாது. இப்பதான் கொஞ்ச நாளா பெரியவங்க, குழந்தைங்க, புருசன் பொண்டாட்டி ஜோடிங்க எல்லாரும் வந்து படித்தொரையில உக்காந்து பேசிட்டு போறாங்க. புள்ளைங்களும் அவங்கள பாத்து விளையாடி சந்தோஷமா இருக்குங்க. இந்த தங்கராஜு கேட்ட பூட்டுனதுல இருந்து அதுங்க ரொம்ப வருத்தமா இருக்குங்க” என வேதனையை கொட்டியது பாட்டி மீன்.
“கரெக்ட்டு தான் மச்சிமா. நாங்களாவது நாலு இடம் சுத்துறோம். ஆளுங்கள பாக்குறோம். பொழுது போயிடுது. நீங்க பாவம், என்ன பண்ணுவீங்க? அந்த காக்கா வெவரம் புரியாம பேசுது. மனசுல எதுவும் வெச்சிக்காதீங்க” என பாசமாய் சொன்னது மாருதி.
“அந்த பய கையில பொரி வச்சிருந்தான் உங்களுக்கு குடுக்க. கேட்டு மூடி இருக்கவே போய்ட்டான். பாவம், நம்ம குட்டிமாவும் டல்லா இருந்துதா. அதான் வெளில போய் ஒரு பாக்கெட்டை தூக்கிட்டு வந்துட்டேன்” என விளக்கியது மாருதி.
“ஏன் மாருதி தூக்கிட்டு வந்த? தப்பில்லையா?’ என கேட்டது மச்சிமா.
“ஒரு தப்பும் இல்ல மச்சிமா, சாமி பேரையும் நம்ம கோவில் பேரையும் சொல்லி இவனுங்க எவ்வளவு கொள்ளையடிக்குறானுங்க. பாடாவதிப் பசங்க” என திட்டி தீர்த்தது மாருதி.
“ஏன் மாருதி, சாமி அவங்க கண்ணை குத்தாதா?” என கேட்டது குட்டி மீன்.
“கண்ணை குத்தி என்ன பிரயோஜனம்? அப்புறம் சாமி காப்பாத்துன்னு அவருகிட்ட தான் போய் நிப்பாங்க. அதனால அப்பப்ப கொஞ்சம் நல்ல புத்தி குடுப்பாரு. அப்புறம் குறைந்த பட்ச நியாயமா வேலை செய்வாங்க” என சொன்னது மாருதி.
“எப்போ இவங்களுக்கு நல்ல புத்தி குடுப்பாரு இந்த கொளுத்து கேட்ட தொறக்க?” என ஆர்வமாய் கேட்டது குட்டி மீன்.
“அது சாமிக்கு தான் தெரியும்” என முடித்தது மாருதி.