
அன்று கோவிலில் தெப்போற்சவம். சாயந்திரம் விளக்கு வைத்ததும் இரண்டு மணி நேரம் இறைவனும் இறைவியும் திருக்குள தெப்பலில் பவனி வந்தார்கள். பக்தர்கள் வெள்ளம் திரளாக இருந்தது.
இந்த கோவில் இறைவிக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. சக்தி வாய்ந்த தெய்வமாக தென்னிந்தியாவில் போற்றப்படும் தலம்.
நாள் கிழமை முதற்கொண்டு ஆராதனைகள் வரை இறைவியை மையப்படுத்தியே இருக்கும். இறைவன் தனி சன்னதியில் சமர்த்தாக இருப்பார். கோவிலில் கிடைக்கும் படங்களில் பெரும்பாலும் இறைவி மட்டும் தான் இருப்பார். ஒரு சில படங்களில் மட்டுமே தம்பதி சமேதராக இருப்பர்.
இறைவனுக்கு பக்கத்து மாவட்டத்தில் புகழ் வாய்ந்த திருத்தலம் இருக்கிறது. அங்கு அவர் தான் எல்லாம். அங்கே இறைவி தனி சன்னதியில் சமர்த்தாக இருப்பார்.
தெப்போற்சவம் அமர்க்களமாக நடந்து முடிந்தது. இறைவி கோவிலுக்குள் திரும்ப மக்கள் அனைவரும் கலைந்து சென்றார்கள்.
“இன்னைக்கு என்ன நம்ம மீன் குட்டிங்க எல்லாம் சுரத்தே இல்லாம இருக்குங்க? கவனிச்சியா?” என்றார் இறைவன்.
“ஆமாங்க, நானும் பார்த்தேன். ஜனங்க, லைட்டு எல்லாத்தயும் பாத்து துள்ளி குதிச்சி வெளையாடுவாங்க. இன்னைக்கு என்னடான்னா ரொம்ப டல்லா இருக்காங்க” என பேசிக்கொண்டே கண்ணை மூடினார் இறைவி.
“நம்ம தங்கராஜ் மேல வருத்தமா இருக்காங்க, கேட்டு பூட்டுனது அவங்களுக்கு விருப்பமில்லை” என கண்டுபிடித்து பேசிக்கொண்டார்கள்.
“சரி ராத்திரி ஒரு எட்டு போய் அவங்ககிட்ட பேசிட்டு வரலாம்” என்றார் இறைவன்.
“ஆமா, இன்னும் ஒரு பூஜை இருக்கு. அது முடியட்டும். எல்லாரும் பூட்டிட்டு போனதும் கெளம்பலாம்” என்றார் இறைவி.
சிலமணி நேரம் முன்பு ஆயிரக்கணக்கானோர் வந்து சென்ற சுவடே இல்லாமல் அமைதியாக இருந்தது கோவில்.
பொழுதோடு போய் யசோதா பசு கோசாலையில் படுத்துவிட்டது.
கோவில் யானை கணேசன் பொழுதுக்கும் நின்ற கால் வலியில் முனகிக்கொண்டு இருந்தது. அடுத்த நாள் காலையில் ராஜ வீதியில் ஊர்வலம் இருக்கிறது. எப்படியும் ஏழு கிலோமீட்டர் நடக்க வேண்டியிருக்கும்.
சாயந்திரத்திலிருந்து கால் மாற்றி கால் மாற்றி நின்று சோர்ந்து போயிருந்தது. சற்று நேரத்தில் ஒரு போன் வர பாகன் பேச ஆரம்பித்து விட்டார். கணேசனுக்கு சாப்பாடே வேண்டாம் என தோன்றியது. பேசாமல் போய் புல்லின் மீது படுத்துக் கொண்டது. சற்று நேரம் கழித்து வந்த பாகன் கணேசனை தடவி சமாதானப்படுத்தினார்.
பேருக்கு கொஞ்சம் சாப்பிட்டு முடித்தது கணேசன். பாகன் தூங்க போக அங்கே வந்த மாருதியிடம் பேச ஆரம்பித்தது.

“நாளைக்கு நாளைல ஊர்வலம் போறோம். ரோட்டோரம் ரோஸ்மில்க் குடிச்சிக்கிட்டு எங்கள வச்சி செல்பியா எடுத்து ஸ்டேட்டஸ் போடுவாங்க. எவன் இப்பலாம் பக்தியோட வரான்? ஸ்டேட்டஸ் போட நாலு போட்டா எடுக்க தான் வரானுங்க. இதுக்கு லோக்கல் ஹாலிடே வேற” என புலம்பியது கணேசன்.
“திருக்கோவில்ல இருக்குறக்குற கொளத்துக்குள்ள இருக்குறவங்களுக்கே இவ்ளோ மனக்குறை இருக்கு. இந்த அம்மா என்னடானா என் மேல ஏறி ஒக்காந்துக்கிட்டு ராஜ வீதி சுத்தி வந்து அருள கொட்டப்போகுது. அவங்க காலடியிலேயே கெடக்குற ஜீவன்களுக்கு வேற என்ன போக்கிடம் இருக்கு?” என மாய்ந்து போய் பேசிக்கொண்டிருந்தது கணேசன்.
“திரும்புற பக்கமெல்லாம் வித விதமான பிரச்சினையோட ஜனங்க மொச்சா கடவுளுங்க மட்டும் என்ன பண்ணுவாங்க? அந்த காலத்துல என்ன இவ்ளோ வெரைட்டி பிரச்சினைகளா இருந்துது? சாமி மழையை குடு, வெளச்சலை குடு, ஆடு மாடு கண்ணுகுட்டிய நோய் நொடி இல்லாம பாத்துக்க, குடும்பத்தை காப்பாத்துன்னு விரல் விட்டு சொல்லிடலாம். இன்னும் மிஞ்சி போனா குழந்தய குடு, நோயை தீரு, செல்வத்தை குடுன்னு கேப்பாங்க.
இப்போ என்னடான்னா ஆன்சைட் வேணும். அதுவும் நல்ல வெதர்ல ஷாட் டெர்மா வேணும். கூட நல்ல பிகரா ஏதாவது வரணும். மொக்க க்ளையண்டா இருக்கணும். சவுத் இந்தியன் சோறு கெடைக்கணும்.
லாங் டெர்முன்னா சாமி வீடு புக் பண்ணி குடுக்கணும். நல்ல காரு, அதுவும் அதுவாவே ஓடுற மாதிரி வாங்கி தரணும். அவங்க ஆன்சைட் போன நேரத்துல அவங்க அப்பா அம்மாவுக்கு நோய் நொடியில்லாம பாத்துக்கணும். கூட போற ஸ்பவுசும்கும் மவுஸான வேலை வாங்கி தரணும். இந்த காலத்து மனுஷங்களுக்கு கடவுளா இருக்குறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா?” என வக்காலத்து வாங்கியது மாருதி.
“நீயும் உன் கடவுளோட அசைன்மென்டுக்கு ஆன்சைட் போனவர்தானே? அவரை எப்படி விட்டு குடுப்ப” என கேலி செய்தது கணேசன்.
“ஆமா ஆன்சைட் போய் இவங்கள மாதிரி பன்னா பண்ணேன். என் வாலுல தீய வெச்சு புண்ணானது தான் மிச்சம்” என இடித்தது மாருதி.
“அரே பாபா, அந்த டீம்லயே நீதான் டாப் பர்பாமரு. உன் மேல இருக்குற ப்ரேமத்துல தான், சாமி எல்லா பேமிலி போட்டோ பிரேம்லயும் உன்னை வெச்சிருக்காரு” என கிண்டலடித்து கணேசன்.
மாருதியோடு பேசியதில் கொஞ்சம் ரிலாக்சானது கணேசன். “சரி நான் போய் படுக்கிறேன். நாளைக்கு காலைலயே எழுந்து ரெடியாகணும்? என
சொல்லி மாருதியை வழியனுப்பியது.