
நேசிப்பாவிற்க்கு காஃபி குடிக்க வேண்டும் போல இருந்தது. இது இன்னும் எவ்வளவு நேரம் போகும் எனவும் தெரியவில்லை.
சங்கு சிஸ்டத்திலும் போனிலும் மாறி மாறி வேலை செய்து கொண்டிருந்தார். அவருக்கு பாவமாக இருந்தது. மிகவும் காயப்பட்டு போயிருக்கிறாள். அவள் இவ்வளவு நேரம் அமைதியாய் இருந்ததே கிடையாது. எப்பொழுதும் சிரிப்பும் பேச்சுமாக இருப்பவள்.
ரத்தினம் உள்ளே வந்ததிலிருந்து அவள் உடல் மொழி முழுதாய் மாறிப் போயிருக்கிறது. பெரும்பாலும் சிஸ்டத்தில் இருந்தாலும் நம் மீது ஒரு கண்ணும் காதும் வைத்திருக்கிறாள். எந்த சூழ்நிலையிலும் அவள் பின் வாங்கவே இல்லை என மனைவியை நினைத்து பூரித்துப் போனார் நேசப்பா.
சங்க மேட்டரை மண்டையில் ஊறப்போட்டு அலசி ஆராய்ந்து கொண்டிருந்தார் ரத்தினம். அவர் முன் இருந்த காலி கோப்பையை ஓரக் கண்ணால் பார்த்து நேசப்பாவிடம் சிக்னல் கொடுத்தார் சங்கு புஷ்பம்.
நாக்கை சுழட்டி கன்னத்தில் துருத்தியபடி முன் மண்டையை லேசாய் ஆட்டினார் நேசப்பா.
பிறகு சற்றே யோசித்தவராக “டூ பில்டர் காஃபி வித்தவுட் சுகர்” என கோபால் சாருக்கு செய்தியனுப்பினார் சங்கு புஷ்பம்.
“சார் பன்னெண்டு நாப்பது. இன்னும் உங்களுக்கு பத்து நிமிஷம் இருக்கு” என்றார் சங்குபுஷ்பம்.
இன்னொருமுறை அவமானப்பட ரத்தினம் தயாராக இல்லை. பேசாமல் கிளம்பி போய் விடலாம் என தோன்றியது.
இன்னும் பத்து நிமிஷம் இருக்கில்ல மேடம், சொல்றேன்” என சொன்னார் ரத்தினம்.
கறார் காட்டுகிறாராம் என மனதிற்குள் இடித்துக் கொண்டார் சங்கு புஷ்பம்.
அடுத்த செய்தியை தண்ணீர் கேன் குமரஜோதிக்கு போட்டார்.
“நேசமணி உங்க மனைவியா” என்று அனுப்பினார்.
ஆமாம் மேடம். என்ன விஷயம் என பதில் வந்தது உடனே.
“உங்க ஹெல்ப் வேணும். முக்கியமான விஷயம். நேசமணியோட அடையாள அட்டை நகலை என் போனுக்கு அனுப்புங்க. டூ ஹவர்ஸ்ல கால் பண்றேன்.
வீட்டுக்கு அவங்களோட வாங்க. மத்தத நேர்ல பேசிக்கலாம்” என்றார் சங்கு புஷ்பம்.
மேடம் கேட்டா சரியான விஷயமாத்தான் இருக்கும். ஏதாவது மகளிர் நலத் திட்டமா இல்லை மகளிர் லோன் விஷயமா இருக்குமா என யோசித்தார்.
ஓகே மேடம் என பதில் வந்தது.
இரண்டு நிமிடங்களில் கணவர் நேசமணி மற்றும் இல்லத்தரசி நேசமணியின் அடையாள அட்டை ப்ரிண்ட்டரில் வெளியே வந்தது“.
இந்த ஒரு கேண்டிடேட்டுக்காக அஞ்சு எல் அண்ணன் ஓகே பண்ணிட்டார். இந்த அம்மா இன்னொரு ஆள ரெடி பண்ணலாம்னு சொல்லுது. இவர்களுக்கே நாலு எல் பேசியாச்சு. இந்த டீலிங்கில் தனக்கு என்ன மிஞ்சும் என கணக்குப் போட்டார் ரத்தினம்.
டாக்டர் நேசமணி வாங்க போறது முக்காவாசி படிச்சவங்க ஓட்டு. இந்த சொசைட்டிலயே ஆயிரத்து ஐநூறு ஒட்டு இருக்கும். இவரு ஒரு ஆயிரமாவது வாங்கிடுவாரு. அப்புறம் இன்னொரு நேசமணி எவ்வளவு ஓட்டு வாங்குறாரோ அது போனஸ்.
அந்த பக்கம் அண்ணன் கொஞ்சம் ஓட்டுக்கு செலவு பண்ணுவார். எப்படியும் ஒரு ஆயிரத்து இருநூறாவது ஓட்டாவது இந்த டீலிங்கால அண்ணிக்கு லாபம். அதுவும் ரெண்டு கேண்டிடேட்டு பிக்ஸ் பண்ணா தனக்கு ரொம்ப கெத்தா இருக்கும் என நினைத்தார்.
டோர் பெல் அடித்தது. கோபால் சார் வீட்டு பணிப்பெண்.
நேசப்பா போய் ட்ரேவை வாங்கிக்கொண்டு நன்றி சொல்லி அனுப்பினார்.
ரெண்டு காஃபி இருந்தது. மூவரும் சேர்ந்து ஒரு டிரிங்க்ஸ் பிரேக் எடுத்தார்கள்.
பிரேக் முடிந்து அடுத்த ரெண்டாயிரத்தை கொடுத்தார் ரத்தினம்.
சார் ஒண்ணு பத்து இப்போ. ரெண்டு பத்து வரை உங்க டைம்” என்றார் சங்கு புஷ்பம். எத்தனை கோடி சம்பாதித்தாலும் இந்த அம்மா திருந்தாது என நினைத்தார் ரத்தினம்.
“என்ன சார் சொல்றீங்க. இன்னொரு பார்ட்டி டீலிங் வேணுமா வேணாமா?” என ஆரம்பித்தார் சங்கு புஷ்பம்.
“கெடச்சா நல்லது மேடம். ஆனா உங்களுக்கு சொன்ன பட்ஜெட் அவங்களுக்கு தர முடியாது” என நிலைமையை சொன்னார் ரத்தினம்.
“எவ்வளவு முடியும்” என விசாரித்தார் சங்கு புஷ்பம்.
“ஒரு அம்பதாயிரம்” என நிறுத்தினார் ரத்தினம்.
“கஷ்டம் சார். படியாது” அதிகாரமாய் சொன்னார் சங்கு புஷ்பம்.
ரெண்டாவது நேசமணிய பிக்ஸ் பண்ணிட்டா தரமான சம்பவமா இருக்கும் கட்சில. ஒரு பய நம்ம கிட்ட வர முடியாது. ஆனால் பணம் கையை கடித்தது.
“உங்க அண்ணன்கிட்ட பேசுங்க சார். எங்க ஒருத்தருக்கு தான அமௌன்ட் சொல்லி இருப்பாரு. இப்போ ரெண்டாவது நேசமணிய பத்தி சொல்லி கன்வின்ஸ் பண்ணுங்க. நீங்களா போனா ரேட்டும் கூட, மடங்கவும் மாட்டாங்க” என தூபமிட்டார் சங்கு புஷ்பம்.
இந்த அம்மா என்ன பக்கத்துல இருந்து பாத்தா மாதிரி சொல்லுது.
“யாருங்க அவுங்க? உங்களுக்கு மட்டும் எப்படி ஒத்துப்பாங்க?” என கேட்ட கேள்வியையே திரும்ப கேட்டார் ரத்தினம்.
“சார் அதெல்லாம் எங்க தொழில் மேட்டர் சார். எல்லாத்தயும் வெளில சொல்ல முடியாது” என கண்டிப்பான குரலில் சொன்னார் சங்கு புஷ்பம்.
நாம அப்படி என்ன தொழில் பண்றோம் என மனைவியை பார்த்து புருவம் உயர்த்தினார் நேசப்பா.
அந்த பார்வைக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை. சங்கு சிஸ்டத்தை விட்டு எங்கும் திரும்பவில்லை.
“உங்க டீல் மட்டும் சொல்லுங்க சார். அவங்கள நா பேசிக்குறேன்” என்றார் ரத்தினம் நேசப்பாவிடம்.
“ஒன்பது எட்டு ஒன்பது நாலு” என ஆரம்பித்து பத்து இலக்கத்தையும் சொல்லி முடித்தார் சங்கு புஷ்பம்.
“இதான உங்க நம்பர்” எனக் கேட்டார்.
ரத்தினத்தோடு சேர்ந்து நேசப்பாவும் திகிலானார்.
“உங்களுக்கு என் நம்பர் எப்படி மேடம் தெரியும்” என பீதியாக கேட்டார் ரத்தினம்.
“அதான் சொன்னேனே சார். எங்க தொழில்னு” பிடி கொடுக்காமல் சொன்னார் சங்கு புஷ்பம்.
சங்கு ஏன் யாரோ ஒருவருக்கு ஒற்றைக்காலில் நிற்கிறாள் என யோசித்தார் நேசப்பா.
“சரி சார். வேணாம்னா உங்க இஷ்டம். நீங்க அலைஞ்சு திரிஞ்சு கண்டு பிடிங்க. ஆனா அவங்க உங்களுக்கு ஒத்துக்க மாட்டாங்க. இப்ப பாருங்க, மேடம் உக்காந்த இடத்துலயே டீலிங்கை முடிச்சிட்டாங்க” என சங்கு புஷ்பத்தின் கொடியை உயர்த்தினார் நேசப்பா.
காபி இப்போது தான் வேலை செய்கிறது என் நினைத்துக் கொண்டார் சங்கு புஷ்பம்.
“அவங்க ஒத்துக்கிட்டாங்களா மேடம்” என வாயை பிளந்தார் ரத்தினம்.
“நா என்ன ஜோக் சொல்றேன்னு நெனைச்சீங்களா. அவங்க ஒத்துக்கிட்டு டாக்குமெண்ட் கூட அனுப்பிட்டாங்க. நீங்க நல்ல அமெளண்டா சொன்னீங்கன்னா முடிச்சிடலாம். இதுல எங்களுக்கு ஒரு நயா பைசா லாபம் கிடையாது.” என டேபிள் மேல் இருந்த பேப்பரை உயர்த்தி காண்பித்தார் சங்கு புஷ்பம்.
“நெஜமாவே இந்த அம்மா சூப்பரா வேல செய்யுது. உக்காந்த எடத்துல இருந்தே வாயக் கூட தொறக்காம ஆள மடக்கியிருக்கு. ஜெகஜ்ஜால கில்லாடியா இருக்கு.
நம்ம ரெண்டு மூணு நாள் தேடி, இங்க அரை நாள் உக்காந்து முட்டி மோதிக்கிட்டு இருக்கோம்” என பிரமித்துப்போனார் ரத்தினம்.
அந்த பிரமிப்பை அழகாய் ஸ்கேன் செய்தார் நேசப்பா.
“அண்ணன் கிட்ட பேசி டீல முடிங்க ரத்தினம். அப்புறம் பாருங்க கட்சில ஒரு பய உங்கள நெருங்க முடியாது. நீங்க வேற லெவெல்ல வருவீங்க” என பூஸ்ட் ஏற்றினார் நேசப்பா.
கடவுளுக்குத்தான் தெரியும் சங்கு என்ன செய்யப் போகிறாள் என்று நினைத்துக் கொண்டார்.
நேசப்பா அவர் வேலையை தொடர மீண்டும் ரிலே ரேஸில் ஓடத் தொடங்கினார் சங்கு புஷ்பம்.
லக்ஷ்மி இணையத்தில் இருந்து டாக்டர் நேசமணியின் நம்பரை எடுத்து அனுப்பினார் அம்மாவுக்கு. அம்மாவும் எங்கோ இருக்கும் பெண்ணும் காலை சுற்றிய இந்த பாம்பை அடித்துக் கொல்வது என தீயாய் வேலை பார்த்தார்கள்.
சங்கு புஷ்பம் அதை அவர் போனில் சேவ் செய்தார். பிறகு வாட்சப் போய் பார்த்தார். டிபி இல்லை. நேசமணி என பெயர் மட்டும் இருந்தது. லாஸ்ட் ஸீன் எஸ்டர்டே என இருந்தது. டயல் செய்து பார்த்தார். நாட் ரீச்சபிள். சரியான தருணம் என் முடிவு செய்தார்.
ரத்தினத்திற்கு அவர்களின் வேகம் ஆச்சர்யமாக இருந்தது. இதான் படிச்சவங்களுக்கு வித்தியாசம்.
அவரின் பாதி வேலை குறைந்தது போல உணர்ந்தார். இவ்வளவு தூரம் சொல்கிறார்கள். அண்ணனுக்குப் பேசி பார்க்கலாம் என போனை எடுத்தார் ரத்தினம்.
“ஒரு நிமிஷம். நீங்க பேசிட்டு அவரு ஒத்துக்கிட்டர்னா அவர் எங்களுக்கு கன்பார்ம் பண்ணனும். உங்கள மட்டும் நம்பி இந்த வேலைல எங்களால இறங்க முடியாது. அவர் எங்களுக்கு கோஆப்பரேட் பண்ணனும்” என வலையை விரித்தார் சங்கு புஷ்பம்.
“சொல்லுப்பா ரத்தினம்” என ஆரம்பித்தார் அண்ணன்.
“அண்ணே, நேசமணி சார பாத்துப் பேசிட்டேன். நல்ல படியா முடிஞ்சுது. அப்புறம் அண்ணே, இன்னொரு நேசமணி கேண்டிடேட்டு டீடைல் இருக்கு. அதுவும் பிக்ஸ் ஆகுற மாதிரி இருக்கு. ஆனா அவங்க பட்ஜெட் நீங்க தான் சொல்லணும்” என இழுத்தார் ரத்தினம்.
இவ்வளவு பெரிய வேலக்காரனா இருக்கான். இதெல்லாம் பத்து நாள் நடையாய் நடந்து அவர்களுக்கு புரிய வைத்து அவர்கள் வீட்டில் உள்ளவர்களையும் சரி கட்டி செய்வது. இவன் அரை நாளில் ரெண்டு பேரை பிக்ஸ் பண்ணியிருக்கான் என பூரித்துப் போனார் அண்ணன்.
“சபாஷ் ராஜா. இன்னும் மூணு எல். அதுக்கு மேல தாங்காது. அண்ணிகிட்ட உன்ன பத்தி சொல்லி வெக்குறேன். ராத்திரி சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வா” என தாங்கினார் அண்ணன்.
“ரொம்ப நன்றிங்கண்ணே. அவங்க உங்க சைடிலிருந்தும் கன்பார்ம் பண்ண சொல்லி கேட்டிருக்காங்க. டீல் முடிஞ்ச ஒடனே உங்கள திரும்ப கூப்புடுறேன்” என முடித்தார் ரத்தினம்.
“சரி சரி நீ என்ன சொன்னாலும் எனக்கு ஓகே” என்றார் அண்ணண்.
அவர் காதால் கேட்டதை அவரே நம்பவில்லை. நிலை கதவு தாண்டி யாரையும் அவர் அவ்வளவு சீக்கிரம் உள்ளே விடமாட்டார். இப்போ சாப்பாட்டுக்கு கூப்பிடுகிறார்” என அகமகிழ்ந்தார் ரத்தினம்.





































