
“வண்ணமதிக்கு எப்போடா வரன் பாக்க ஆரம்பிக்க போற”? என கேட்டாள் பாட்டி.
“கடைசி பரீட்சை முடியட்டும்மா. நம்ம சாம்பமூர்த்தி தங்கமான புள்ளைன்னு ஒரு ஆபீசர் வரன் பத்தி சொல்லி இருக்கார். ஆவணி மாசம் பேசி முடிக்கலாம்” என்றார் அப்பா.
“வேலைக்கு போய் செட்டில் ஆகிட்டு கல்யாணம் பண்ணிக்குறேன் பாட்டி” என்றேன் நான்.
“நீ செட்டில் ஆகுற வரைக்கும் சிங்கிளா இருக்கவன், அங்கிள் வயசுல இருப்பான். அறுபது வயசு வரை வேலை செய்யலாம், ஆனா கல்யாணம் காலா காலத்துல பண்ணனும். புள்ளைங்கள பெத்து மட்டும் எங்க கிட்ட குடுத்துடு, நாங்க இத்தனை பேரு எதுக்கு இருக்கோம்? எங்க செல்லங்களை நாங்க பாத்துக்குறோம், நீ வேலைக்கு போ, யாரு தடுக்க போறா? என அக்காவுக்கு சொன்ன அதே ப்ளூ பிரிண்டை முகம் சிவக்க எனக்கும் சொன்னாள்.
பிறகு “அம்மனுக்கு அஞ்சு வாரம் தீபம் ஏத்தி வேண்டிக்க, நல்லது நடக்கும்!” என முடித்தாள்.
முதல் வாரம். கோவிலின் வெளி பிரகாரத்தில் இருந்த துர்கை சன்னதி முன் போய் நின்றேன்.
“என்ன வேண்டுதல்?” என்றார் அம்மன்.
“நல்லது நடக்க!” என்றேன்.
“பெற்றவர் கடமையை முடிக்கவா? உன் கனவுகள் சிறக்கவா? யாருக்கு நல்லது நடக்க?” என்றார்.
“நீங்க பாத்து எது நடத்தி குடுத்தாலும் சரி” என்றேன்.
“உங்கப்பாகிட்ட பேசுற மாதிரி பழம் மாதிரி என்கிட்ட பேசாதே. உனக்கு என்ன வேணும்னு தெளிவா சொல்லு” கிண்டலாய் சொன்னார் அம்மன்.
“யோசிச்சு சொல்றேன், இந்த கனிய குறுக்கில நறுக்கவா? இல்ல நெடுக்குல நறுக்கவா? எப்படி பிழிந்து தீபம் ஏற்றட்டும்? என சந்தேகம் கேட்டேன்.
“எப்படியாவது நறுக்கு. ஆனா இந்த குடும்பத்தை நல்லா தெரியும், இந்த வரன் கட்டி தங்கம்னு எவனாவது சொன்னா அவனை நறுக்கி தொரத்திடு! ஊர்ல இருக்க எல்லா வரனையும் சாம்பமூர்த்தி கட்டி தங்கம்னு தான் சொல்லுவான், உங்க ஆளுங்கள விட்டு நல்லா விசாரிக்க சொல்லு. அங்காளி பங்காளின்னு உங்க அம்மா வடிச்சு கொட்டுனாங்கல்ல, அந்த தீவட்டி தடியனுங்கள தீர விசாரிக்க சொல்லு. முடிஞ்சா நீயே பேசி பாரு.
சாம்பமூர்த்தி பேச்ச நம்புனவங்களுக்கு சம்பவம் காரண்ட்டி, சொல்லிட்டேன். உமன் எம்பவர்மெண்டு பத்தியெல்லாம் பேசி பரிசு வாங்கி இருக்க, நல்லா விசாரிச்சு, ஒடச்சி பேசி முடிவெடு.அப்புறம் வாரா வாரம் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ல லெமன வாங்கிட்டு வந்து என்கிட்ட சொல்யூஷன் கேட்காதே! என்றார் அம்மன்.
இரண்டாம் வாரம்.”திரி போட்டு எண்ணெய் ஊற்றவா? எண்ணெய் ஊற்றிவிட்டு திரி போடவா? என்றேன்.
“எப்படி வேண்டுமானாலும் போடு. ஆனால் வாழ்க்கை உன்னை புரட்டி போட்டாலும், உருட்டி போட்டாலும், மனச மட்டும் விட்டுடாதே. தாய் தகப்பன் தாங்காட்டாலும் சின்ன புள்ளைல இருந்து என்ன சுத்தி சுத்தி வந்த உன்னை நா விட்டு விடுவேனா?” என்றார்.
மூன்றாவது வாரம். “மூச்சு விடாமல் உன் போற்றி மாலையை சொல்லட்டுமா?” என்றேன்.
“எதுக்கு? ரிலாக்ஸ்டாவே சொல்லு. ஆனா எந்த உறவாவது மூச்சு முட்டுற மாதிரி இருந்தா ஊர் போற்றுதலுக்காக வாய் மூடி இருக்காதே” என்றார்.
நான்காம் வாரம். சாமிக்கு மட்டும் படையல், திருவிழா எல்லாம். உனக்கில்லயா? என்றேன்.
வாரா வாரம் உனக்கு ஏன் புத்தி சொல்றேன்னு இப்போ புரியுதா? என்றார்.
அஞ்சாம் வாரம். “காலம் முழுக்க எனக்கு வழி துணையா வரீங்களா? என்றேன்.
“காலமெல்லாம் வர முடியாது. வேணும்னா நீ ஹால் டிக்கெட் எடுத்துட்டு போகும்போதெல்லாம் எக்ஸாம் ஹால் வரைக்கும் துணையா வரேன். எப்படியாவது நல்லா படிச்சி, பாஸாகி, பொழச்சிக்க” என்கிறார்.
சில மாதங்கள் கழித்து அம்மன் முன் ஒரு கவரை வைத்து கும்பிட்டேன்.
“என்ன கல்யாண பத்திரிகையா? என கேட்டார் அம்மன்.
“இல்லை, என் அப்பாயின்மென்ட் ஆர்டர்”என்றேன். “நா பாஸாகிட்டேன்” என என்னை பார்த்து முதல் முறை சிரித்தார் அம்மன்.