Tamil novel – OTP – Part 12/20

TN politician enjoying his meal

பத்து நிமிடம் கழித்து ஹாலுக்கு வந்து சோபாவில் உட்கார்ந்தார் நேசமணி.

“ரத்தினம் சார், மணி இப்போ பத்து அம்பது. பதினொன்னு அம்பதுக்கு உங்க டைம் முடியும்” என்றார் சங்கு புஷ்பம்.

இந்த அம்மா சரியான எரிச்சல் டேங்கர் என கறுவினார் ரத்தினம்.

உதார் பேச்சு பேசியோ நைச்சியமாக பேசியோ ஆளுக்கேற்றார் போல் வளைந்து கொடுத்து போனவர். பல ஆண்டுகளாக வாங்கியே பழக்கப்பட்ட கைகள்.

கண்ணை கட்டி காட்டில் விட்டார் போல தன்னிடமிருந்தே பணம் வாங்கியதை அவர் மனம் ஏற்க மறுத்தது.

உங்க பேர் என்ன சார்? என்ன விஷயமா பாக்க வந்தீங்க? என்றார்.

“சார், என் பேரு ரத்தினமுத்துசேகர். நம்ம தொகுதி எக்ஸ் எம்எல்ஏ கட்சிலேர்ந்து வரேன். கார்ப்பொரேஷன் எலெக்க்ஷன் விஷயமா பேசணும்” என்றார்.

சேகரா இவரு. அவளை கைலயே புடிக்க முடியாது என மனதில் நினைத்துக்கொண்டார் நேசப்பா.

ரத்தினம் சுத்தி சுத்தி பார்வையை ஓட்டி ஹாலை நோட்டமிட்டார்.

சங்கு புஷ்பம் சிஸ்டத்தை ஆன் செய்து நோட்பேடை எடுத்து எழுத ஆரம்பித்தார்.

“சார், நீங்க ஜோசியம் இல்ல வாஸ்து அது மாதிரி ஏதாவது பாக்குறீங்களா?”

என்றார் ரத்தினம். “இல்லிங்க” என்றார் நேசப்பா.

“அப்போ, இந்த வெயிட் லாஸ், ஹீலிங் அந்த மாதிரியா? என்றார். “இல்லிங்க” என்றார் நேசப்பா.

“மேடம் கன்சல்டேஷன் சார்ஜ் கேட்டாங்க. அதான் எதுக்குன்னு தெரிஞ்சிக்கலாமுன்னு கேட்டேன்” என்றார் ரத்தினம்.

“ஏதோ ஒரு வேலையா தான என்ன பாக்க வந்தீங்க. அதுக்காக தான்”

என ரத்தினதினின் கண்களை ஊடுருவியபடியே சொன்னார் நேசப்பா.

“என்ன தேவைக்காக என்கிட்ட வந்தீங்கன்னு தெரியாது. ஆனா என் நேரத்தோட மதிப்பு எனக்கு தெரியும்” என்றார் நேசப்பா.

இந்த ரெண்டு பேரும் ஒரு மார்க்கமான டிசைனா இருக்காங்களே என உள்ளுக்குள் அரற்றினார் ரத்தினம்.

“கார்பொரேஷன் எலெக்க்ஷன்ல நீங்க சுயேச்சையா நிக்கணும் சார். அத பத்தி பேச தான் வந்தேன்” என்றார் ரத்தினம்.

“எலெக்க்ஷன் விஷயம்னு சொல்றீங்க. தனியா வந்துருக்கீங்க” என்றார் சங்கு புஷ்பம்.

“ஆமாங்க, கஷ்டப்பட்டு வியூகம் அமைச்சு செஞ்சா கூட வர்றவன் பேர வாங்கிட்டு போயிடுவான். அதான் நா மட்டும் வந்தேன்” என்றார் ரத்தினம்.

“சார் ரொம்ப ஸ்ட்ராங்கான பெர்சோனாலிடியா இருக்கீங்க. நல்லது சார். நா நேரா விஷயத்துக்கு வரேன்.

அவர் அண்ணி வேட்பாளராக இருப்பதை சொன்னார்.

“அண்ணிய விட சித்தா டாக்டர் நேசமணி பவர்புல் இந்த வார்டுல. அதுனால அதே பேர்ல இருக்குறவங்கள கேண்டிடேட்டா சுயேச்சையா நிக்க வெக்க ஏற்பாடு பண்றேன். கொஞ்சம் ஓட்டு பிரியும். அது எங்களுக்கு சாதகமா இருக்கும்னு நம்புறன். அப்புறம் உங்களுக்கு என்ன பண்ணணுமோ அதையும் பண்ணிடுவோம் என்றார்” ரத்தினம்.

“என்ன பண்ணுவீங்க சார்” என்றார் நேசமணி.

“எல்லா செலவும் அண்ணன் பார்த்துப்பார் சார், நீங்க பேப்பர்ஸ் மட்டும் கரெக்ட்டா குடுத்தா போதும். பசங்கள வச்சி எல்லா வேலையும் பக்கவா நடக்கும் சார். உங்க நாமினேஷன் ஓகே ஆச்சுன்னா ஒரு அமௌன்ட் குடுத்துருவோம்” என்றார் ரத்தினம்.

“எவ்ளோ தருவீங்க” என்றார் நேசப்பா.

“ஒரு மூணு எல் தருவார் சார் அண்ணன்” என்றார் அவர்.

சந்தேகப்பட்ட விஷயம் தெளிவாகி விட்டது. இது காலை சுற்றிய பாம்பு என நினைத்தார் சங்கு புஷ்பம். சிஸ்டத்தில் அமர்ந்தபடியே லக்ஷ்மிக்கு போனில் செய்தி அனுப்பினார்.

“அரசியல் விஷயமா வந்து இருக்கீங்க, உங்களுக்கு எதுவும் சாப்பிட தர மறந்துட்டேன் பாருங்க. இதோ வரேன்” என உள்ளே போனார் நேசப்பா.

ரத்தினத்திற்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது. எப்படியும் படிந்து விடுவார் என தோன்றியது.

“இந்தாங்க சாப்பிடுங்க”, என ட்ரேவை வைத்தார் நேசப்பா.

ஒரு சின்ன பிளேட்டில் பிரியாணியும் ஒரு கிளாஸ் விஸ்கியும் இருந்தது.

அடி வயிற்றில் சரக்கென்று கத்தியால் குத்தியது போலிருந்தது ரத்தினத்திற்கு.

அவர் முகம் வெளிறிப்போனது

“இது இது” என ஏதோ சொல்ல வந்து தடுமாறினார்.

“சாப்பிடுங்க சார். எங்க ஆளுங்களை இத்தனை வருஷமா கூட்டிட்டு போய் கவனிச்சுக்கிட்டீங்க. ஒரு நாள் நாங்க செய்ய கூடாதா” என்றார் நேசப்பா.

எதிரியின் அடி வயிற்றில் கத்தியால் குத்தியும் வஞ்சம் தீராமல் அவன் கன்னத்தில் பளுக் பளுக்கென்று போட்டார் போல வந்து விழுந்தது அந்த வார்த்தைகள்.

“இது சரி இல்லீங்க. இப்ப வேணாம் சார்” என நாக்குழறினர் ரத்தினம்.

இது அவர் இதுவரை சந்திக்காத ஒரு நிகழ்வு. இந்த விதமான உபசரிப்பு அவரின் மொத்த தயாரிப்பையும் சீர்குலைத்தது. யாரை பார்க்க வந்தோம் என்ன பேச வந்தோம் என சில நிமிடம் எல்லாம் மறந்து தத்தளித்தார் ரத்தினம்.

“ஓ, பகல்ல சாப்பிடறதில்லையா, சரி காபி டீ சாப்பிட்டுக்கிட்டே பேசலாமா?” என வலையை விரித்தார் நேசப்பா.

ரத்தினத்திற்கு ஒரு பிடிப்பு கிடைத்தார் போலிருந்தது. ஆனாலும் அந்த டிரே அவரை உறுத்திக்கொண்டே இருந்தது.

“ஏம்மா அபர், சாருக்கு காபியாவது குடும்மா என்றார் நேசப்பா.

ரத்தினத்திற்கு போன மூச்சு வந்தார் போலிருந்தது. பேச்சை இலகுவாக்க “மேடம் பேர் என்ன சார்” என்றார்.

“ஏங்க லிஸ்ட்ல இவர் பேர் பக்கத்துலயே என் பேரும் இருந்திருக்கும். வெறும் நேசமணி மட்டும் தான் நோட் பண்ணுவீங்களா” என கேட்டார் சங்கு புஷ்பம்.

“அவங்க எஸ் பி சார்” என்றார் நேசப்பா. ரத்தினத்திற்கு தூக்கி வாரி போட்டது.

“சங்கு புஷ்பம் சார்” என்றார் நேசப்பா சிரித்துக்கொண்டே.

முதல் பத்து நிமிடத்திலேயே கண்ணை கட்டியது ரத்தினத்திற்கு. பேசாம அரை மணிக்கு ஆயிரம் மட்டும் கொடுத்திருக்கலாம் என நினைத்தார்.

“காபில சர்க்கரை போடவாங்க?” என உள்ளிருந்து கேட்டார் சங்கு புஷ்பம்.

“வேணாம் சார்” என மெலிதான குரலில் சொன்னார் ரத்தினம்.

“பிபீ, சாருக்கு சர்க்கரை வேணாமாம்” என்றார் நேசப்பா நமுட்டு சிரிப்போடு.

“பிபீ இல்ல சார். நார்மல் தான். சுகர் மட்டுந்தான்” என்றார் ரத்தினம்.

“சங்கு புஷ்பத்தோட இன்னொரு பேரு பட்டர்பிளை பீ. அத தான் சுருக்கி என்ன பிபீனு கூப்பிடுவாரு” என சொல்லிய படியே காபி கொடுத்தார் சங்கு புஷ்பம்.

இடைப்பட்ட நேரத்தில் ரத்தினத்தின் பார்வை அடிக்கடி விஸ்க்கி கிளாஸ் மீது விழுந்து கொண்டே இருந்தது.

ஒரு கட்டத்திற்க்கு மேல் அதன் ஈர்ப்பு அவர் சுய கட்டுப்பாட்டை தகர்த்தது. அடி வயிற்றில் வாங்கிய கத்திக் குத்தின் ரணம் சிறு வடு கூட இல்லாமல் மறைந்து போனது. விஸ்க்கி கிளாஸ் வேலை செய்யும் என நேசப்பா நினைத்தது பொய்யாகவில்லை.

ஆனால் விஸ்க்கியை விட அந்த கிளாசை கட்சிக்காரர் அவ்வளவு நேசிப்பார் என நேசப்பாவே எதிர்பார்க்கவில்லை. எல்லாம் கோபால் சார் உபயம்.

ரத்தினம் ஆர்வம் தாளாமல் வாய் விட்டே கேட்டு விட்டார்.

“சார், இந்த கிளாஸ் சூப்பரா இருக்கு. எங்க சார் வாங்குனீங்க, எவ்ளோ விலை” என்றார்?

“அமெரிக்காவுல. ஜோடி பத்தாயிரம் நம்ம ஊர் வெலைல” கெத்தாக சொன்னார் நேசப்பா.

மூச்சடைத்துப் போவதற்கு முன் ஸ்டேஜில் இருந்தார் ரத்தினம்.

“அப்ப இந்த ஒரு கிளாஸ் மட்டும் அஞ்சாயிரமா சார்?” என வாயை பிளந்தார்.

“அஞ்சாயிரத்து சொச்சம் உள்ள இருக்க சரக்கு இல்லாம” என சொன்னார் சங்கு புஷ்பம்.

“கிளாஸ்ஸே அஞ்சாயிரம்னா சரக்கு எவ்ளோ இருக்கும்” என கணக்குப் போட்டார்.

ஆனாலும் சரக்கை விட அவரை சுண்டி இழுத்தது என்னவோ அந்த கிளாஸ் தான்.

ஒரு சைடில் இருந்து பார்க்க க்ளாஸுக்குள் கிளாஸ் போல் இருந்தது.

நீண்ட ஐங்கோண வடிவ வெளிப்புறமும் வைன் கிளாஸ் போன்ற உட்புறமும் மேலிருந்து உள்ளே பார்த்தால் சிறிய தங்க நிற சாண்ட்லியர் விளக்கு தரையில் பட்டு ஜொலிப்பதை போல விஸ்க்கி மிதந்து கொண்டிருந்தது.

ஐம்பது மில்லி கூட இல்லாத திரவம் முழு கோப்பையையும் வெளிற் மஞ்சள் நிறமாக்கியது.

சற்றே உட்புறம் குவிந்த வாய்ப்பகுதி தங்க வளையம் போல இருந்தது. கால் கோப்பைக்கும் கீழே இருந்தது விஸ்க்கி. மீதி இருந்த முக்கால் பகுதி காலி கோப்பையை ரசித்துக்கொண்டே இருந்தார் ரத்தினம்.

உயர் தர கண்ணாடியில் அருமையான வளைவுகளைக்கொண்டு பார்க்க கச்சிதமாக இருந்தது. மனதிற்குள் ஆருயிர் அண்ணனை நினைத்துக்கொண்டார் ரத்தினம்.

“பிச்சைக்கார பய. என்ன பதவி காசு இருந்து என்ன பிரயோஜனம். மாடு மாதிரி வேல செஞ்சாலும் ரெண்டு ரூபா பிளாஸ்டிக் கப்புல குடுக்குறான். அதுல ஊத்திக் குடிக்கவே என்னவோ வள்ளல் பிரபு மாதிரி பேசுறான்.

சார் தங்கம். நல்ல மனசுக்காரர். ஊரு பேரு தெரியாத எனக்கே அஞ்சாயிரம் ரூபா க்ளாஸ்ல அசால்ட்டா தர்றார்.

மனுஷன்னா இவர்தான்யா நல்ல மனுஷன். இந்த டீலிங் நல்ல படியா முடிஞ்சா அப்புறம் சாருகிட்ட டச்சுலேயே இருக்கணும் ” என யோசனை புல்லட்டை தாறுமாறாய் ஓட்டினார் ரத்தினம்.

“சார், பிரியாணி சாப்பிடலேன்னா பரவாயில்ல.போகும் போது பார்சல் பண்ணி தரேன். இதை குடிங்க சார்” என கிளாசை நீட்டினார் நேசப்பா.

ரத்தினம் அசடாய் நெளிய, “இது உங்களுக்கு, காபி எனக்கு” என்றார் நேசப்பா.

புறக் காரணிகளால் வரும் ஆர்வம், எரிச்சல், பதட்டம், குழப்பம், தடுமாற்றம் போன்ற எல்லா உணர்வுகளுக்கும் எளிதாய் இரையானார் ரத்தினம்.

சூழ்நிலைக்கேற்ப தன்னை தகவமைத்துக்கொள்ள அவர் எடுத்துக் கொள்ளும் காலம் அதிகம். அது இங்கே அவர் முன் இருக்கும் எதிராளிகளுக்கு யோசிக்க அதிக நேரத்தை அளித்தது.

சங்கு புஷ்பமும் நேசப்பாவும் சொல்லாலும் செயலாலும் அதை ஒருவர் மாற்றி ஒருவர் செய்து அவரை நெருக்கி கொண்டிருந்தார்கள்.

Leave a comment